நண்பர் ஸ்ரீ அவர்களிடம், தாவர வேலிகளில் இருக்கும் நாட்டுப்புறப் பழங்களான காரைப்பழம், சூரிப்பழம், கோவைப்பழம், சங்கம்பழம், பூலாம்பழம், கிளுவம்பழம், கள்ளிப்பழம், உண்ணிப்பழம், சுக்கிட்டிப்பழம், ஆலம்பழம், தணக்கம்பழம், பிரண்டைப் பழம், முழுமுசுக்கப்பழம் முதலான பழங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.
பாட்டி ஊரான லெட்சுமாபுரமும் அதற்குத் தென்பகுதியும் மலையும் மலைசார்ந்த பகுதியான குறிஞ்சி நிலமாகும். முட்தாவரங்கள் நிறைய இருக்கும். அதாவது என் குழந்தைப் பருவத்தில். தற்போதெல்லாம் தென்னையும் தார் சாலைகளும் கம்பி வேலிகளுமாக அப்பகுதி மாறிவிட்டது.
இருந்தாலும், மலையோர வனங்களில் இலந்தை, களாக்காய், கொடுக்காப்புளி, காரை, சூரை, வில்வம், சப்பாத்திக்கள்ளி, கிளுவை, சூடாங்கள்ளி, பெருங்கள்ளி, சிறுகள்ளி, பரம்பைமுள், கருவேல், குடைவேல், செவிட்டுவேலன், காக்காமுள், சங்கமுள், யானைக்கற்றாழை எனப் பலதரப்பட்ட குறிஞ்சிநிலத் தாவரங்களைக்(tropical) காணலாம். அவற்றுக்கிடையேதான் மேற்கூறப்பட்ட பழங்களும் தின்னக் கிடைக்கும்.
இடையூடாக வண்டுருண்டாம் பழம் தெரியுமாவெனக் கேட்டார். தெரியுமெனச் சொன்னேன். சாணத்தை உருட்டிக் கொண்டு போகும் வண்டுகள். ஆனால் அவருக்கு நண்டுருண்டாம் பழம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சலவநாயக்கன் பட்டிப் புதூர்ப் பகுதியில் உப்பாற்றங்கரையில்தாம் மாடு மேய்த்துக் கொண்டிருப்போம். கரையில் அவ்வப்போது ஏராளமான மண்ணுருண்டைகள் காணக்கிடைக்கும். என்னவென ஆயத் தலைப்பட்டபோது உடனிருந்த சக ஆடுமேய்ப்பர்கள் சொன்னது, நண்டு தின்று போட்ட விட்டைகளென. வியப்பாக இருந்தது.
ஆமாம். நண்டுக்குப் பசி தாளமுடியாது போது, அடிவயிற்றினூடாக மண்ணைத் தின்னத் துவங்கும். மண்ணென்றால், மண்ணையே தின்னாது, அலையடிப்பில் வந்து சேர்ந்த நீரில் இருக்கும் நுண்சத்துகளை உறிஞ்சிவிட்டு, தின்ற மண்ணை உருண்டைகளாகத் துப்பி விடும். இப்படியான நண்டுருண்டாம் பழங்களைக் கண்டால் பழமைபேசியின் நினைவு உங்களுக்கு வந்து போகும்தானே? இஃகிஃகி!
No comments:
Post a Comment