10/23/2022

செயலாளர்

அமெரிக்காவில் ஏராளமான தமிழ் அமைப்புகள் உள்ளன. அவற்றின் வயது 50, 60 என்பதாகக் கூட இருக்கின்றது. நேற்று கூட, கலிஃபோர்னியா தமிழ்மன்றத்தின் செயலாளர் குறிப்பிட்டதாவது, “நாம 41 ஆண்டுகள் ஆனாலும், நாற்பத்து ஒரு, ஒரு ஆண்டு அனுபவத்தைத்தான் கொண்டிருக்கின்றோம்”. இதே போலத்தான் பெரும்பாலான அமைப்புகளும்.

நான் கரொலைனா தமிழ்ச்சங்கம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், சார்லட் பெருநகரத் தமிழ் அமைப்பு, சார்லட் தமிழ்ச்சங்கம், தென்மத்தியத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ் மையம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முதலானவற்றில் ஈடுபட்டுப் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். 2015ஆம் ஆண்டுகள் வரையிலும் தற்போது இருக்கும் பிணக்குகள் பரவலாக இல்லை, isolated incidents were there ofcourse. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர்தாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பரவலான ஒரு போக்கினைக் காண முடிகின்றது; வணிகம் ஊடுருவியதும் ஒரு காரணம். நாடளாவிய அமைப்பின் செயற்பாட்டு வீழ்ச்சியும் முக்கியமானதொரு காரணம். எல்லாரும் எல்லா ஊர்த் தமிழ்ச்சங்கங்களின் போக்கினையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், நாடளாவிய அமைப்பின் போக்கு எல்லாருக்கும் கவனிக்கப்படுவதாக இருக்கும்.

பல அமைப்புகளில், பல செயற்குழுக்களைக் காலங்காலமாகப் பார்த்து வருகின்றோம். வருவார்கள். தமக்குத் தெரிந்த மட்டிலும் வேலை செய்வார்கள். களைப்பாக உணரும் போது, போதுமென்கின்ற மனநிலையில் ஓய்வுக்கு ஆட்பட்டு விடுவார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அப்படி இல்லை. பொறுப்புகளுக்கு வருபவர்கள் அதிகார தோரணை, மமதை, தம் தரப்பு சொல்வது மட்டுமே சரி என்கின்ற தொனியில் செயற்படுகின்றனர். இவர்களுக்கு இப்படியான உணர்வு ஊட்டப்படுகின்றது.

பேரவையில் பொறுப்பில் இல்லாதிருந்த வேளையிலேயே, தன்னார்வலர்களைக் கையாள்வது எப்படியெனக் கையேடு எழுதுவதில் முனைப்புக் கொண்டு, எழுதி, அதைப் பயன்படுத்தியும் வந்தோம். இப்படியான operating manual for each role என்பதைக் கட்டமைத்து, தன் அமைப்பு எப்படியெல்லாம் அமெரிக்க விழுமியத்தைப் பரவலாக்குகின்றது என்பதுதான் நாடளாவிய அமைப்பின் வேலையாக இருக்க முடியும். ஆனால் அப்படியான அமைப்பே கேலிக்குரியதாக இருக்கின்றது. வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

மன்றச் செயலாளர் சொல்வது போல, ஒரு மின்னஞ்சல் வருகின்றது. இணை பெறுநர்களாக 50 பேர் இருக்கின்றனர். பார்த்ததும் சினம் கொள்ளக் கூடாது. அது அவர்களின் உரிமை. என்ன செய்யலாம்?

1. உடனே அதே உணர்வுடன் பதில் அளிப்பதும், அல்லது பதில் அளிக்காமல் நிராகரிப்பதும் மிக மிகத் தவறு. அறப்பணிக்குக் களங்கம் அது. மாறாக, ’கிடைக்கப் பெற்றேன்’, ‘செயற்குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்கின்றேன்’ எனும் பெறுகைமடலோடு நிறுத்திக் கொண்டு, கால அவகாசம் எடுத்துக் கொண்டபின் பதில் அளிக்க வேண்டும். தேவைப்படின், செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு பதில் கொடுக்கப்பட வேண்டும்.

2. மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு தணிந்த குரலில் பதில் அமைய வேண்டும்.  Focus again on coming out of the situation as the better communicator, and as a professional who refuses to engage in unnecessarily negative correspondence.

3.பேசுபொருள் குறித்து மட்டுமே பதில் அமைய வேண்டும்.

4. பதில் சுருக்கமாக அமைய வேண்டும்.

5. தவறுகளை ஒப்புக் கொள்வதில் தயக்கம் கூடாது. ’தங்கள் ஆலோசனைகளை, சுட்டிக்காட்டுதலைச் செயற்குழு கருத்தில் கொள்கின்றது, இனிவரும் காலங்களில் செயற்படுத்த முனைவோம்’ என்பதாக அமைத்துக் கொள்ளலாம்.

பேரவையைப் பொறுத்த மட்டிலும் இப்படியான மரபுதான் இருந்து கொண்டிருந்தது. தற்போதெல்லாம் மடல்களைக் கையாள்வதில் பெரும் வீழ்ச்சி.  இந்த அண்ணன்களின் மரபே தம்பிகளின் மரபாகவும், ஆங்காங்கே இருக்கும் தமிழ் அமைப்புகளின் மரபாகவும் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை! அவமானம்!!

reference: https://youtu.be/TVcFaLlcvdk


No comments: