11/23/2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது.

இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும்.

பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம்.

11/21/2013

எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??

வட்ட மேசை!!
அனைவருக்குமான
பொதுப்புரிதல் வேண்டி
யாராவது பேசுபொருள் குறித்து
சுருக்கமாய்ச் சொல்லுங்கள்!!
ஒருமனதாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டது
ஏதுமறியாமல் வந்துவிட்ட
அலுவலக அம்மணியின் சமாளிபிகேசன்!!

சுகந்தம்
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்ளவில்லை!
கைகோத்தபடி
இருவருமாய்
ஒரு முறை சுற்றி வந்தார்கள்!
இதழ் பதித்து
தனித்தனி
கார்களில் புறப்பட்டுப் போனார்கள்!!
வெறுமையாகிப் போன
குளக்கரையெங்கும்
சிநேகித வாசம்!!


வாய் திறவாமல்...
சீக்கிரம்
வாய மூடிட்டு
சாப்பிடு!
மறுபக்கம் திரும்பி
மெளனமாய் வீசப்படும்
அந்தப் பார்வைக்குப் பொருள்
எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??


நேற்று நான்...
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்ன சொன்னாலும்
புரியப் போவதில்லை மனையாளுக்கு!
எனவேதான்
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
பற்றற்று இரு
உலகம் உய்விக்கும்
என்றான் புத்தன்!
பற்றுக் கொள்
சகல உயிரினங்களும்
உவப்பினுள் உய்விக்கும்
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்றோ வாழ்ந்த புத்தனுக்கு
தெரிந்திருக்க வேண்டுமென்பதில்
எந்தவொரு நியாயமுமில்லை
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!


தற்காப்பு
அடுக்களையில்
இலாகவமாய் ஒரு பேச்சு
அம்மா
இன்னிக்கி யாரையும்
திட்டக்கூடாது சரியா??


பிணக்கு
வரைபலகையும்
வண்ணக்கோல்களும்
கொடுத்துவிட்டால்
எதையாவது வரைந்து
வாழ்ந்து கொண்டிருப்பர்
வீட்டுக் குழந்தைகள்!
அப்படியான வாழ்வில்
இப்படியானதொரு பிணக்கு!!
நான் வரைஞ்ச வீட்டுல
அவ வந்து போறதுக்கு
கதவு திறந்து வெச்சிருந்தேன்!
அவ வரைஞ்ச வீட்டுல
கதவு மூடியே இருந்துச்சுன்னு
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!

11/03/2013

மாமழைமூத்தவள்
இரண்டாமவள்
கடைச்செல்லம்
கூட நானும்!
மெளனத்தை உடைத்து
சொற்சோழி பரப்பியவள்
அந்த துடுக்கு மூன்றாமத்துதான்!!

எல்லாரும் ஒவ்வொரு விரலா
எல்லா விரலையும் நீட்டுங்க
தலைக்கு மேல தூக்குங்க
வீடெல்லாம் மரம் முளைச்சாச்சு
ஆட்டுங்க ஆட்டுங்க வேகமா
இப்ப எல்லா மரமும் ஆடுது
வாங்க வெளியில ஓடிடலாம்!
பெருசா மழை வரப்போகுது
வாங்க வெளியில ஓடிடலாம்!!
பேசாம இருக்க மாட்டீங்க?
மழை வருதாம் மழை?!
சும்மா வீட்டுக்குள்ள ஓடிகிட்டு?!
கூப்பாட்டு அம்மாவையும் மீறி
கதவுகள் திறபட்டுக் கிளம்பின
நாலிரு கழல்களும் விருட்டென!
அய்ய்ய் மழை! அய்ய்ய் மழை!!
அம்மா நெசமாலுமே மழைம்மா!!
அடித்த சாரலில் சட்டெனப் பூத்தது
அம்மாவின் முகத்தில் வெட்கப்பூ!!

நன்றி: தென்றல் மாத இதழ்

11/02/2013

விதி

மனசஞ்சலம் தலையெடுத்து
முடிவெடுக்கவியலாத் தருணமெல்லாம்
நாடுவதென்பது அவர்களுள் ஒருவரைத்தான்!
செய்யலாமா? வேண்டாமா??
இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்.
அதன்வழியே பயணிப்பேன் நான்
விளைவுகளைப் பற்றிய கவலையின்றி!
இதன் பின்னணியில் இன்றொரு சம்பவம்!!
செய்ய நினைத்த செயலின் தலைவிதி
தீர்மானிக்கப்பட்டது பூங்காவின் நிமித்தம் கொண்டு!!
செய்யலாமா? வேண்டாமா??
பார்க்குக்கு விளையாடப் போறேன்னு
சொல்லியும் வேண்டாம்ன்னு சொன்ன நீங்க
என்ன ஏதுன்னு ஒன்னுமே சொல்லாம
செய்யலாமா, வேண்டாமான்னு கேட்கிறீங்களே?
போங்க, வேண்டாம்தான் என்னோட பதில்!!10/13/2013

ஏளனக்குருவி

Tennessee Mockingbird

ஞாயிற்றுக் கிழமை
காலை ஏழுமணி
தெருவில் யாருமே இல்லை
கடைக்கோடி மரங்கள் கூட அசையவில்லை
எப்போதும் கீச்சிடும் அந்த
சில்வண்டுகள் எங்கு போயின?
கிழ் வானத்து வெளுப்பு
கதிரவன் ஆகும் வித்தை இன்னும்
கொஞ்ச நேரத்தில் நிகழப் போகிறது!
பனித்துளிகள் வெடிப்பதைக் கூட
யாரோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
அப்படியானதொரு மெளனம் ஏகாந்தம்!
சகவுயிரினங்கள் சொப்பனந்தரித்திருக்க
அந்த ஒற்றை ஏளனக்குருவி மட்டும்
கிடைகொள்ளாமல் இங்குமங்குமாய்
இப்பேரமைதியில் விருப்பின்றி
அல்லாடிக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே!!


10/10/2013

மலர் வணக்கம்


7/02/2009 அன்று எழுதப்பட்ட கதையில்:

"பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்!". ஆனா, அந்தப் பாம்புகூட தாமோதரசாமி அய்யாவைக் கண்டா வணக்கம் போடுமாம். அந்த அளவுக்கு அவர் பண்பானவர். நொம்ப நல்லவர். அப்பேர்ப்பட்ட நல்லவரை பெத்த ஊர்தான் வேலூர்.

http://maniyinpakkam.blogspot.com/2008/09/blog-post_03.html

8/09/2013

சிரிப்புதிர் கணம்

வாழ்க்கை என்பதற்கு எல்லைகள் உண்டா? நான்கு சுவர்களுக்குள், வேண்டாம், அந்த ஊர், நகரம், மாநகரம், நாடு என்பனவற்றுக்குள் கட்டுண்டு போனதா வாழ்க்கை?? விண்ணுக்கும் மண்ணுக்கும், மண்ணுக்கும் கடலடி ஆழத்துக்குமென ஆழ அகலங்களுக்குள்ளும் நீள உயரங்களுக்குள்ளும் கட்டுப்படாமல் திமிர்ந்து தாண்டவமாடுவதுதானே வாழ்க்கை?? திருமலை மனிதக்கடல், சென்னைக் குப்பத்து வீதிகள், கோயமுத்தூர் சந்திப்புக் கொந்தளிப்புகள், ஆளற்ற திம்பம் காடுகளென எங்கும் நடையோடிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. அப்படியான ஓட்டத்தின் ஒரு கணத்தில் நிகழ்ந்து பரிணமித்துக் கரைகிறது வாழ்க்கையின் இத்துளி.

“அண்ணா, ப்ளூ மவுண்ட்டன் பர்ஸ்ட் க்ளாஸ் ஏசி எங்க நிக்கும்னு தெரியுமா? இந்த பெட்டிகளைக் கொண்டாந்து ஏத்திவிட எவ்ளோ ஆகும்?”

“சார், மொதல்ல பெட்டிகளை எறக்கி வெக்கிலாம் உடுங்க. எறக்கி வெச்சிட்டு எவ்ளோன்னு பேசி எடுத்துட்டுப் போலாம். ஏய், அதுகளை எறக்குப்பா!”

“சரி, இப்ப சொல்லுங்க. எவ்ளோ ஆகும்?”

”அறுநூறு ரூபா சார்!”

”சரிங்ணா அப்ப. நாங்களே எடுத்துக்குறோம்!”

“சார், ஒன்னாம் நெம்பர் ப்ளாட்பார்ம்க்கு படிக்கட்டுல தூக்கிட்டுப் போகணும் சார். இப்படி சொன்னா எப்படி?”

“இல்லங்ணா. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. நாலு பொட்டிகதானே, நானே மொள்ள இழுத்திட்டுப் போயிடுவனுங்க!”

“ஏன் சார், நாங்களும் தொழில் செய்ய வேண்டாமா? இப்பிடிக் கோவிச்சுக்குறீங்களே??”

“நியாயமா நீங்களே ஒரு ரேட் சொல்வீங்கன்னு பார்த்தேன். நீங்க நெம்ப எச்சா சொல்றீங்ணா!”

“ஏ, நீ ரெண்டு எடுத்துக்க. நான் ரெண்டு எடுத்துக்குறேன். நடங்க போலாம்!”

“வேண்டாம்ங்ணா. எவ்ளோ சொல்லுங்க. அப்புறம் எடுத்துக்கலாம்!”

“ஆளுக்கு நூறு; இரநூறு ரூபா குடுத்துருங்க. வண்டி வர்ற வரைக்கும் இருந்து ஏத்தி விட்டுடுறம்!”

“சரி, நீங்க எடுத்துங்க. நான் இவங்க கூடப் போறன். நீங்க எல்லாம் கைப்பைக எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திருங்க. டிரைவர் அண்ணனைப் போகச்சொல்லிடுங்க!”

மேட்டுப்பாளையத்திலிருந்து நான்கைந்து பெட்டிகள் வந்து, ஏற்கனவே நிலைகொண்டிருந்த மற்ற பெட்டிகளுடன் இணைந்து கொண்டன. சீட்டுகளில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இருக்கை எண்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் எதற்கு இந்த முண்டித்தல்?? வடவன் தென்னவனின் இது போன்ற செயல்களைப் பார்த்து முண்டி என்றானா? கல்லுளிமங்கன் என்பதற்கு ஈடான முண்டியெனும் சொல்லுக்கும், கல்லுளிமங்கன்களின் இச்செயலுக்கும் என்ன தொடர்பு?? என்னவோவாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் முண்டிக்க விரும்பவில்லை.

“சார், எல்லாம் இருக்கா பார்த்துகுங்க சார்!”

“எல்லாம் இருக்குங்ணா. இந்தாங்க!!”

“சார், ஒரு நோட்டு எச்சா இருக்கு சார்!”

“பரவாயில்ல; வெச்சுகுங்க!”

“இல்ல சார். வேண்டாம், இந்தாங்க!!”

“என்னங்க இது? மொதல்ல அறுநூறு கேட்டீங்க... இப்ப நூறு சேர்த்தி குடுத்தா வேண்டாம்ங்கிறீங்க?? ம்ம்... சரி, கொண்டாங்க!!”

உடனிருந்தவர்களிடமிருந்து ஒரு குரல். “பேசினபடிக்கு இருநூறைக் குடுத்திட்டுப் போக வேண்டியதுதானே? இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை??”.

நாலுதப்படி முன்னேறின அந்த சிவப்பு சட்டை இரண்டு தப்படி சறுக்கி வந்து சொல்லியது, “அந்த நூறு ரூபாய வாங்கினா சாருக்குத் திட்டு விழும்னுதான் நான் வாங்கலை. அப்பிடியிருந்தும் திட்றீங்களேம்மா??”.

இனிமையான குரல் ஒலித்தது, “பயணிகளின் கனிவான கவனத்திற்கு! வழித்தடம் எண் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம்- சென்னை, நீலகிரி எக்சுபிரசு சென்னைக்குப் புறப்படத் தயாராக உள்ளது!!”. மஞ்சள் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த கோவை மாநகரம் உதறித் தள்ளப்பட, வீடுகளும் தெருக்களும் பின்னோக்கிப் போய் விழுந்தன. சாளரத்தில் இருந்த கண்களைக் கடன் வாங்கி இப்போதுதான் எதிர் இருக்கையைப் பார்க்கிறேன். அசடு வழியச் சிரிப்பொன்று உதிர்கிறது. “இஃகிஃகி!”.

8/08/2013

பூத்துக் கிடக்கு

அந்த வீட்டுக்காரனுக்கும் இந்த வீட்டுக்காரனுக்கும் வாய்க்காவரப்பு. பஞ்சாயத்து. அக்கப்போரு. நீங்க நினைக்கிறாப் போல பொம்பளை விவகாரம் அல்ல. ஆனால் அதைப் போன்ற ஒரு அத்துமீறல்தான் தகராறுக்குக் காரணம். ஆமாம். இப்ப நீங்க நினைக்கிறது சரிதான். இவங்க வீட்டு வேம்பு மரத்தின் இரண்டு கிளைகள் அவங்க வீட்டு எறவாரத்தின் மேல் நீட்டிக் கொண்டு வளர்வதுதான் காரணம். 

அ+அவசியமாக, அதாவது அனாவசியமாகத் தன் வீட்டுப் பெண்களின் ஒழுக்கம், நடத்தையெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை விரும்பாத ஜெகநாதன், தன் வீட்டு வேம்பினை அடியோடு வெட்டிவிடுவதான முடிவுக்கு வந்து விட்டான். அந்த இரயில்வேப் பாதை மருங்கில் இருக்கும் குடியிருப்புக்குச் சென்று மரம் வெட்டுவதற்கு 1200 ரூபாய் வெட்டுதொகையும் பேசி, மாறன், சுகுமார், இரண்டு வெட்டாட்களும் வந்து ஆயிற்று வீட்டுக்கு.

இந்த இருவரில் சுகுமார் என்பவன் ஒரு தண்ணிவண்டிதான் என்றாலும், அவன் ஒரு படைப்பாளி. எழுத்துகளை வாசிப்பதும், எழுதுவதுமாக இருப்பதின் நிமித்தம் சிரைக்கப்படாத தாடி மீசையுடன் தான்தோன்றித்தனமான வாழ்க்கையைத் தனதாக்கிக் கொண்டிருந்தான். வேம்பு மரத்தில் இருக்கும் எதோவொரு நான்கு வாதுகளை மட்டும் வெட்டிவிட்டு, இன்றைக்கு இது போதும் என நிறுத்திக் கொண்டான். ஜெகநாதனுக்கு இந்தத் தாடிக்காரனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் போல இருக்கிறது. ஏனென்றால் பேசுகிற பேச்சு அப்படி. தொழிலாளர் ஒற்றுமை, மேட்டிமை, அதிகாரவர்க்கம், முதலாளித்துவம் முதலானவற்றை யாரோ கக்க, அவற்றை நக்கி நக்கிப் பழக்கப்பட்டவன் மாறன். சும்மா இருப்பானா? சுகுமாரன் சொன்னது சொன்னதுதான் என்று உறுதிமொழி எடுத்தான்.

அண்டை வீட்டுக்காரனைச் சமாளிப்பது எப்படியெனும் தலைவலி இடித்தது ஜெகநாதனுக்கு. நானே சென்று பரிகாரம் வைத்து விட்டு வருகிறேனென்று சொன்னான் சுகுமாரன். அதன்படியே அண்டைவீட்டு வையாபுரியிடம் சென்று சொன்னான்.

“சார், நாந்தான் மரவெட்ட வந்தேன். உள்வாது நாலு வெட்டியுட்ருக்கேன் சார். மத்த வாதுகளை இன்னும் பத்து நாள் கழிச்சி நானே வந்து அரக்கியுட்டுர்றேன் சார். இதுல உங்களுக்கொன்னும் சங்கட்டம் இல்லீங்களே? ஏன்னாப் பாருங்க, மரம் பூராவும் பூச்சி, புழுவுக, குருவி, குஞ்சுகன்னு நாலும் பூத்துக் கிடக்கு சார். வெட்டியுட்டதைப் பார்த்ததும் அதுக வேற எடம் குடிபோகக் கொஞ்சம் அவகாசம் குடுத்துப் பார்க்கலாம் சார்!!”

”தம்பி, நான் மரத்தை வெட்டவே சொல்லலியே? நானும் புள்ளை குட்டிக்காரந்தான். அது பாட்டுக்கு அது இருந்திட்டுப் போகட்டும். நீங்க போங்க. நானே ஜெகநாதங்கிட்டப் பேசிக்கிறன்!”

8/07/2013

ஆப்பு

அம்மா பயித்தம் பருப்பு(பாசிப் பயறு) காயப் போட்டுக் கொண்டிருந்தார். ”அம்மா, பயறுக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருக்கு? பூச்சிகள் அண்டி உளுத்துப் போனதாட்டம் தெரியலையே??” என்றேன். “பூச்சி அண்டினாத்தான் காயப் போடணும்ங்றது இல்ல. நல்லா வெயில் அடிக்குது. சும்மா இருக்குற நேரங்கள்ல இதுகளைக் காயப் போட்டு வெச்சிகிட்டா நெம்ப நாளைக்கு நின்னு புடிக்கும்” என்று சொல்லிக் கொண்டே மொட்டை மாடியிலிருந்து கர்ம சிரத்தையாய் அடுத்த வேலைக்காக இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்குப் பலியாகாத அம்மா என் அம்மா என்கிற திமிர் எனக்கு. அந்த நேரம் பார்த்து ஒரே ஒரு குருவி மாத்திரம் தரையிலிருந்து வெடித்து வெடித்து குந்திக் கொண்டிருந்தது. அது வெடிக்கும் போது இறக்கைகள் சிதறுவது போல இருந்தன. இது ஏன் சும்மா சும்மா வெடித்துக் கொண்டிருக்கிறது என நினைத்த நான், அந்த பயித்தம் பயிறிலிருந்து சில மணிகளைக் கையிலெடுத்து அதை நோக்கி வீசினேன். இரண்டு மூன்று முறை தரைகுத்திப் பொறுக்கிய அது விருட்டெனப் பறந்து போனது.

என்னை அங்கு நிலைநிறுத்திய அதுவும் போய் விட்ட சூழ்நிலையில் அம்மாவிடமே போகலாம் எனக் கீழிறங்க நினைத்த மாத்திரத்தில் நான்கைந்து குருவிகள் வந்து குந்தின. அந்த ஒற்றைக்குருவி போய் மற்றனவற்றைக் கொண்டு கூட்டியாந்திருக்கிறது என நினைத்த நான், இன்னும் சில பயறுமணிகளை எடுத்து வீசினேன். குதித்துக் குந்திய அவை தரை குத்தத் துவங்கின. அவற்றுள் ஒரு குருவி மாத்திரம் எழும்பிப் போனது. போயிக் கொஞ்ச நேரத்தில் இன்னும் மூன்று குருவிகள் வந்து சேர்ந்து கொண்டன. மணிகள் வீசப்பட வீசப்பட குருவிகளின் சேகரம் பெருக்கிறதே என்று நினைத்த நான் இன்னும் கொஞ்சம் மணிகளை அள்ளி வீசினேன். விருட்டென எல்லாமும் ஒரு சேரப் பறந்து போய்விட்டன. நின்று பார்த்தேன். நின்று பார்த்தேன். அவை வரவேயில்லை. குரல் மட்டுந்தான் கேட்டது. “பாட்டி, இங்க வந்து பாருங்க. சித்தப்பா எல்லாத்தையும் எடுத்து கீழ வீசிட்டு இருக்காங்க பாட்டி!!”.

7/10/2013

பசுங்கொழுந்து

பழுப்பிலைக்கு உயிரூட்டி
அதை உன் மகளாக்கி
கொஞ்சி மகிழ்ந்தவளே!
நீ வாரிக் கொஞ்சுகையில்
கொஞ்சமாயது கசங்கிவிட
நர்சுக்கு போனைப் போடு
சொல்லி அழுதவளே!!
பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா,
என் பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா
பாதகர் வந்து வெட்ட வேணும்
அந்த ரோட்டோர பூவரசனை?!


7/09/2013

இணையகூலம்

என்ன சொல்லித் திட்டினாலும்
பேசாமல் போவதன் நிமித்தம்
இணையத்தின் மீது பொருமல்!
இன்ட்டர்நெட்ல கெடந்து கெடந்து
உங்கப்பனுக்கு சொரணையே
இல்லாமப் போச்சு பாரு!!


7/07/2013

மையல்

கதிரவன் மேல்வாக்கில் கீழே விழுந்து போய்க் கொண்டிருந்தான். போனவன் சும்மா போகவில்லை. தலையைப் பின்பக்கமாய்த் திருப்பி வெளியில் வியாபித்திருந்த வெளிச்சத்தைத் தன் வாயால் உறிஞ்சிக் குடித்தபடியே போய்க் கொண்டிருந்தான். வெளிச்சத்தின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போன வேளையது. எனக்கு மிகவும் பிடித்த பொழுதும் அதுதான். அந்த வேளையில்தான் அது தனித்து இருக்கும். லெளகீகம் சொல்லிக் கொடுக்க பிரயாசைப்பட்டுக் கிடக்கும் அது. நான் போனதும் என் கண்களுக்கு மட்டுமே தெரிகிறாற் போல நாணிச் சிரிக்கும். நீளாக் கைகளை விட்டு என்னைத் துழாவும். நான் மருங்கில் ஓடி கடுக்கா கொடுக்கும் போது பொய்யாய்ச் சினந்து விடுவித்துக் கொள்ளும். எங்களுக்கிடையே எவ்விதமான குழூஉக்குறிகளும் இடம் பெற்றிருக்கவில்லை. 

எங்களுக்கே எங்களுக்கான பரிபாடங்கள், எங்களுக்கு மட்டுமே உரித்தானது. அதை நாங்கள் மட்டுமே அறிவோம். இதைக் கண்டு கடந்து போகிற முகில்களுக்கு ஏனிந்தப் பொறாமை எங்கள் மீது?? புதர் வந்தடையும் டிப்பர்களும் கார்டினல்களும் ஒளிந்திருந்து பார்த்திருக்கும். சிக்காடீக்கள் மட்டும் எமைக் கிட்டடியில் வந்து பார்த்து விட்டுப் போகும். இந்த அன்பூடு பொழுதில்தான் முயல் தன் குட்டிகளை வெளியே அனுப்புகிறது. பிறந்த குட்டிகளுக்கு என்ன தெரியும்? எங்களுக்குள்ளான அந்த முயக்கம் அதுகளுக்கு ஒரு வேடிக்கை. இந்நேரம் முக்கிலி போட்டு நீச்சலடித்துக் கொண்டிருந்த கூழைக்கடாக்கள் கரைக்கு வந்து தன் மண்டையை உடலுக்குள் குத்திக் கொண்டன. நேரம் பார்த்துத் தன் நிர்வாணத்தைக் காண்பிக்கத் துவங்கியது அது. பார்க்கப் பார்க்க கொள்ளையழகு. இன்னமும் இங்கேயிருந்தால் என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடும். திரும்பிக்கூடப் பார்க்காமல் வந்து விட்டேன். 

எங்கே போய்விடப் போகிறது? அது அங்குதான் இருக்கும் என்மீதான பாயத்துடன் இன்னும் கொஞ்சம் அழகு பெருக்கி அது அங்குதான் இருக்கும். தாவளம் வந்து சேர்ந்துவிட்டதாலேயே தடாகக் காதல் பொல்லுக்காதல் ஆகிவிடுமா என்ன?? அந்த மாரீசனே வந்தாலும் மடையனாக்கி விட்டு எமக்காய் அங்கேதான் என்மீதான மையலுடன் மையங் கொண்டிருக்குமந்தத் தடாகம்!!

7/06/2013

FeTNA 2013 Flash mob

புவியைக் காப்பாற்றும் பொருட்டு...

எழுந்து
காலைக்கடன் முடித்து
மின்னஞ்சல் பார்த்து
தட்சுடமில் பார்த்து
சிஎன்என் பார்த்து
தினமலர் பார்த்து
பிபிசி கண்ணுற்று
நக்கீரன் பார்த்து
புதியதலைமுறை பார்த்து
தமிழ்மணம் பார்த்து
பேசுபுக் மேலிருந்து கீழாக இறக்கியபின்
கூகுள்+க்குச் சென்று பார்த்து
குழுமப் பக்கங்களுக்குச் சென்று கண்டு
இவையாவினின்று கிளைத்த பக்கங்களுக்கு
போய் அவையாவும் படித்தறிந்து
எதைக் கையிலெடுப்பது என
தீர்மானிப்பதற்குள் நண்பகல் வந்துவிடுகிறது!
பசித்ததற்கேற்ப புசித்தான பின்
மீண்டும் முதலிலிருந்தே துவங்க 
வேண்டி இருக்கிறது எல்லாமும்!!
இப்படியாய் அனைத்தும் அறிந்து
சிக்கலுக்குத் தீர்வு இது என நினைக்கும் போதே
இருள் சூழ்ந்து உறக்கம் வந்து கவ்வி விடுகிறது!
எனக்கு எப்போது உகந்த நேரம் கிடைக்கும்?
இந்த உலகம் எப்போது சுபிட்சமடையும்??


7/04/2013

திரும்பிய பருவம்நன்றி: தென்றல் மாத இதழ்


7/03/2013

இராவெல்லாம்!!

இராவெல்லாம்!!

நேற்றைய மாலையின்
தெருச்சந்தையில்
சகாய விலைக்கு
படப்பிடிப்பான் ஒன்று
வாங்கி வந்தேன்!
அங்கிங்கெனாது சுற்றி வந்து
இடையறா இராவெல்லாம் 
எடுத்துத் தள்ளினேன்!
அந்த பூத்தடாகத்தில்
குளித்துக் கொண்டிருந்த
கானகத்து மங்கை!
இதழ்கள் நொந்துவிடாதபடிக்கு
அனுசரணையாய் அமர்ந்து
உண்டு மகிழ்ந்த பட்டாம்பூச்சி!
இந்த மலரின் மகரந்தம்
அந்த மலரின் சூலில்
துளிர்க்கும் அந்த மரவட்டை!
மூக்கும் மூக்கும் உரசி
மாமன் மகன்
அத்தை மகள்
விளையாட்டு விளையாடிய
அந்த இளந்தாரிச் சிட்டுகள் இரண்டு!!
விடிந்ததும் போய்
ஆவற்கண்களில் பார்க்கிறேன் 
அதில் ஒன்றுமேயில்லை!!


7/02/2013

வயிறேகும் பேராறு!!கரைகரைந்த பெருவெள்ளம்
நங்கூரம் பாய்ச்சிவிட
வாரம் அறுபது டாலர்
பேசி முடிவானது
மெம்ஃபிசு வழித்தங்கல்!
கூதற்கால வெள்ளத்தினால்
வயிறேகி வீதி வருகிறாள்
சுட்டெரிக்கும் கோடையில்!!
அடுத்த கூதலுக்கும்
தப்பாமல் அமைந்து வரும்
மற்றுமொரு வீடுதன்னில்
வழித்தங்கலும் வயிறுதங்கலும்!
இந்த அப்பனறியாப் பிள்ளைகளும்
தாவளம் போட்டுக்கொள்ள
நாள் ஓட்டி நாளையும்
ஓடிக்கொண்டுதான் இருக்கும்
சீற்றமிகு மிசிசிப்பி பேராறு!!


6/29/2013

கண்ணாடி வளையல்என்றோ ஒரு நாள்!
க.மு இரண்டாம் ஆண்டு
எனக்குப் பிடித்தது
கண்ணாடி வளையலும்
தாவணியும்தானென்று
நான் உன்னிடத்தில் சொன்னதை
நினைவில் வைத்திருந்து
நோகடிக்க வேண்டுமென்பதற்காகவே
அந்த பச்சை வண்ண வளையல்களை
கண்ணில் தெரிகிறாற் போல
வைத்துச் சென்றிருக்கிறாய்!!
தொடக்கூட பயமாயிருக்கிறது
ஏமாந்து விழுந்து உடைந்து விட்டால்
அன்புக் குடம் குறைகுடமானதோ?
கேட்டுச் சுளுக்கு எடுப்பாய்
கண்ணுக்குப் புலப்படாப் பிரம்பும் நீளும்!
தொடாமலும் இருக்க முடியவில்லை!!
தொட்டுப் பார்ப்பதா வேண்டாமா?
கொஞ்சமாய் ஒசந்து
ஒசந்த வேகத்திலேயே தாழ்ந்து
மீண்டும் ஒசறப் பார்க்கும் எண்ணவூசலில்
மெல்ல நகர்கின்றன நத்தை நாட்கள்!!


6/26/2013

நொன்னை நையாண்டி

நொன்னை நையாண்டி

ஓடிக் கடக்கும் அவளது காலடி
கீழே கிடந்த இறகின் மீது 
கொஞ்சமே கொஞ்சமாய்த்தான்
உரசிச் செல்கையில்
நீர்த்தரையை நான் பார்க்க, 
தனக்கே தனக்குத்தான்
நொன்னை நையாண்டியுடன்
மொண்ணை மூக்குக் கெக்கலிப்பு
தீண்டப்பட்டுச் சொக்குண்ட
அந்த குள்ளமணி வாத்துக்கு!!


வாய்த்தமை

நாந்தான் 
காய்கறிக்கார அம்மா!
நீதான்
காய்கறி வாங்க வர்றவங்க!
அப்பா,
நீங்க அவ பின்னாடி வாங்க!
கூடை தூக்கிட்டு வர்ற அப்பா நீங்க!!
குழந்தைகள் உலகிலும்
எனக்கு வாய்த்தது அதேதான்!!

6/24/2013

பேசுபுக் தமிழன், டாசுமேக் தமிழன்

பேசுபுக் தமிழன்

பேசுபுக்கில் இருப்பதே
சிறப்பென்று பலர்!
பேசுபுக்கில் இருப்பவரெலாம்
காவாலிகளெனப் பலர்!!
வேற்றுக்கிரக விசா கேட்டு
இரண்டுக்குமிடையில் நான்!!

0o0o0o

டாசுமேக் தமிழன்

எள்ளுன்னா? 
எண்ணெயா இருப்பேன்!
எண்ணெய்ன்னா?
தீயா இருப்பேன்!
தீயின்னா?
தண்ணியா இருப்பேன்!
தண்ணின்னா?
மட்டையாயிருப்பேன்!!
மட்டைன்னா?
மல்லாந்து கிடப்பேன்!!

0o0o0o