12/28/2022

மாயக்கணக்குகள்

”தினத்தந்தி"யில் சிந்துபாத் கதையைப் படித்துவிட்டு பள்ளிக்கு ஓடிய தலைமுறையைச் சேர்ந்தவன் யான். தொலைக்காட்சி வந்த புதிதில் தூர்தர்ஷனில் ஷோபனா ரவி வாசிக்கும் செய்திக்காக காத்திருக்க வேண்டிய தலைவிதியும் எமக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிறகு, சன் தொலைக்காட்சி அந்த இடத்தை ஆக்கிரமித்தது. அந்த ஆக்கிரமிப்பு, பல பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகள் உருவானதும் உடைந்தது. பிறகு, பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகளின் இடத்தை பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்தன. அண்மையில், அவ்விடத்தை இணையத்தில் வெளியாகும் யூடியூப் செய்தி சானல்கள், வாட்ஸ் அப் குழுக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அப்போதிருந்து இப்போதுவரை, செய்திகளை வாசித்து நாட்டு நடப்பையும் உலகையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் ஒருவருக்கு, உலகம் ஏதோவொரு பதட்டத்தில், அழிவின் விளிம்பில் எப்போதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்ற விவரிப்பே கிடைக்கும்.

ஆனால் பாருங்கள், எங்கள் தெருவில் இருக்கும் மூன்று முஸ்லிம் கடைக்காரர்கள் எவரும் தமிழ்நாட்டு "ஷாஹின் பாக்"கிற்காகக் கடையை அடைத்துவிட்டு போகவில்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் தலித் மக்கள் நேற்று தொடங்கி என்னவென்றே தெரியாத மாரியம்மன் பூசைக்காக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஸ்பீக்கர்களை அலரவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினம் பல சினிமா/அரசியல் கிசுகிசுக்களும், வாரத்திற்கு ஒரு தமிழ் சினிமாக் குப்பையும், வருடத்திற்கு இரண்டு மூன்று ஹீரோக்களின் கழிவும், வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. முகநூல் பக்கத்தையும், வாட்ஸ் அப்பையும் திறந்தாலோ, எங்கும் போராட்டம், எதிலும் போராட்டம் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகை எப்படிப் புரிந்துகொள்வது? ப்ச்செ!”

வளர்மதி என்பார் பிப்ரவரி 22ஆம் நாளன்று இப்படியாகத் தன் நிலைத்தகவலைத் தம் முகநூல் கணக்கின் வழியாக வெளியிட்டு இருக்கின்றார். நமக்கும் அதே காலகட்டப் பின்னணிதான். புலம்பெயர் மண்ணில் வாழ்கின்றோம். பன்னாட்டுப் பண்பாடுகள், கூடவே நமக்கான அனுபவம் என்பதைக் கொண்டு பார்க்கின்றோம். புலப்படுகின்றது. நம் ஐம்புலன்களின், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என இவற்றின் உள்ளீடுகள் அவை எவையாகினும், அவற்றை இருவகையாகப் பிரித்து விடலாம். ஆமாம். உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது, உள்நோக்கமெதுவுமற்றது என்பதாகப் பகுத்து விடலாம்.

பார்க்கின்றோம். வாசித்தல், காட்சிகளைக் காணுதல் என்பனவாக. செவிகளால் ஒலிகளை உள்வாங்குகின்றோம். பேச்சு, பாட்டு, இசை, சமிக்கையொலி இப்படியாக. சுவைக்கின்றோம். இயற்கையின்பாற்பட்ட பொருள், சமைக்கப்பட்ட பொருள், சுவையூட்டப்பட்ட பொருள் எனப் பலதரப்பட்டதையும் சுவைக்கின்றோம். மணக்கின்றது. இயற்கையின்பாற்பட்ட மணம், செயற்கையின்பாற்பட்ட மணம், மறைக்கப்பட்ட மணம், உருவாக்கப்பட்ட மணம் எனப் பலவாக. துடுவுணர்வு, அகவுணர்வு, அது எதுவாகினும் அதிலும் சுயம்புவாக ஏற்படுவது, ஊக்கியால் ஏற்படுவதெனப் பார்க்கலாம். இத்தனையிலும்தான் இருக்கின்றது, உள்நோக்கம் கொண்டதும், உள்நோக்கமில்லாததும்.

வாட்சாப்பில் நண்பர் ஒருவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். தமிழ்ச்சூழலின் மிகப் பெரிய பேச்சாளர். பேசுகின்றார். ”மருத்துவரிடம் வருகின்றவர்களுள் 60+% எந்த நோயுமில்லாமல், சும்மாவேனும் ஏதோ குற்றங்குறைகளைச் சொல்பவர்கள். மருத்துவர் மருந்தும் கொடுக்கின்றார். ஆனாலும் நோயாளிக்குக் குணமாவதில்லை. எப்படி ஆகும்? அவருக்குத்தான் எந்த நோயும் இல்லையே?”, என்றெல்லாம் பேசி, கேட்பவர்களை இலயிக்கச் செய்து கைதட்டல் வாங்கிச் சென்று விடுகின்றார். நமக்குப் பார்த்தவுடன் நகைப்புத்தான் மேலிட்டது. காரணம், அவருக்கு அவருக்கான ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. பேச்சு சிறக்க வேண்டும். வந்திருந்தோரிடம் பாராட்டுப் பெற வேண்டும். பேச்சுக்கலை மேலோங்க வேண்டுமென்பதெல்லாம் அவருக்கான உள்நோக்கம். உள்வாங்குகின்ற நமக்கு அப்படியான உள்நோக்கம் என்ன இருந்து விடப் போகின்றது? அறிதலும், கற்றுணர்தலும் என்பதைத் தவிர.

குழுவில் மறுமொழியிட்டேன். “ஒருவேளை, நோயே இல்லாமல் அறிகுறிகளாகப் பலதைச் சொல்லி, ஒருவர் தொடர்ந்து மருத்துவம் கோருவாரேயாகின், அந்த மருத்துவர், அந்த நபரை உளவியல் மருத்துவரிடம் அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் ஒரு நோய்தான்”. வாசித்த மற்றொரு நண்பர், பகடியாக, உன்னைத்தான் உளவியல் மருத்துவரிடம் அனுப்பி வைக்க வேண்டுமெனச் சொன்னார். அதற்கும் நான் மறுமொழிந்தேன், “அம்மணாண்டிக லோகத்துல கோவணம் கட்டினவன் கோமாளி -பழமொழி”.

சரி, பேச்சாளர் குறிப்பிட்டது உண்மைச் செய்தியா? உண்மை கலந்த வளைக்கப்பட்ட செய்தி என்பதாகக் கொள்ளலாம். நோயே இல்லாமல் தமக்கு நோய் இருப்பதாகக் கருதி சோகையில் ஆழ்ந்து போவோர் உண்டுதாம். ஆனால் அது மூவரில் இருவருக்கு அந்த நிலை என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்டது. உலகின் நடத்தையை எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? ஏதோ ஒரு இடத்தில் பத்துப் பேரை ஆய்ந்து விட்டுச் சொன்னால், அது சேம்ப்ளிங் எர்ரர்(கணக்கீட்டுத் தவறு) என்பதாகத்தான் இருக்கும். உண்மையாகவே இருந்தாலும், அது மனநோய் என்றுமாகி விடுகின்றது. 

மேற்கூறப்பட்டது ஓர் எடுத்துக்காட்டுக்கான நிகழ்வுதாம். இப்படி, காலையில் விழிக்கப்பெற்று மீண்டும் கண்ணயரும் வரையிலான எல்லாவற்றிலும் உள்நோக்கமுடையன, இல்லாதன என்பது உண்டு. இவற்றை எதிர்கொள்ளப் பழகிவிட்டால், ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்க்கப்பெற்ற இன்புடை நாளாகவே அமையும். வருத்தமே ஏற்பட்டாலும் கூட, அது, நியாயமான வருத்தமாக, சோகமாக, துயராக இருக்கும். இல்லாதவொன்றுக்கு வீணாய்ப் பறிகொடுக்கும் பொழுதாக இராது.

தானியம் எனும் எமன், வேட்டையாடி புலால் உண்ணுவதே மனிதர்களின் வாடிக்கை என்றெல்லாம் சொல்லி ஒரு கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் தலைவர் நல்லகண்ணு அவர்களோடு இருநாட்கள் இருக்கும் வாய்ப்புக் கிட்டியது. பேச்சுவாக்கில், அவருடைய உணவுப்பழக்கம் குறித்து வினவலானேன். அவர் சொன்னதிலிருந்து, “புலால் உண்ணுவதில்லை. கூடுமான வரையிலும் வேக வைக்கப்பட்ட பண்டங்கள், இட்லி, சோறு என்பதைக் காய்கறிகளோடு உண்கின்றேன்”. புலால் உண்பதில்லையா என எதிர்வினாவும் விடுத்தேன். ஐம்பதுகளின் மத்தியில் விட்டு விட்டதாகச் சொன்னதாக, என் நினைவு. முதல்வர் கருணாநிதி அவர்களும் இறைச்சியைத் தவிர்த்து, மீன், மஞ்சள்க்கரு தவிர்த்த முட்டை மட்டும் உட்கொள்பவராக இருந்தார் என எங்கோ படித்த நினைவு. இவர்களெல்லாம் உடற்பேணுதலுக்கான நம் வழிகாட்டிகள். நம் உடலுக்கேற்ற உணவு என்பதை, நம் உடலின் தன்மையைக் கவனித்து அமைத்துக் கொள்ள வேண்டியது நம்மால் மட்டுமே முடியும் என்பதுதான் உள்நோக்கமற்ற தகவலாக இருக்க முடியும்.

உள்நோக்கமற்ற செய்திகளுக்காகவும் அறிதலுக்காகவும் நவீன ஊடகங்களைப் பயன்படுத்தத்தான் வேண்டி இருக்கின்றது. நாம்தாம், உள்நோக்கமுடை மாயக்கணக்குகளையும் மெய்க்கணக்குகளையும் புரிந்துகொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். பழகிக் கொண்டால், உலகில் கொள்ள வேண்டிய இன்பங்கள் கோடானுகோடி!No comments: