ரொம்ப நாட்களாக, அமெரிக்கக் கதை ஒன்றை எழுதியாக வேண்டுமென்கின்ற ஆசையானது படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. தூக்கம் வந்தபாடில்லை. ’கதை என்பது ஒவ்வொருவர் சொல்லும் போதும் அது அவருடைய கதையாக தனித்துவம் அடைந்து விடுகின்றது. அதிலே அமெரிக்கக் கதையென்றால் எப்படி இருக்க வேண்டும்? அமெரிக்க மண்ணிலே இருந்து கொண்டு எழுதினால் அமெரிக்கக் கதை ஆகிவிடுமா? அமெரிக்க மண்ணின் தனித்துவத்தை, அமெரிக்க மண்ணுக்கேவுரிய ஏதோவொன்றைக் கதைப்பதாக இருந்தால் அது அமெரிக்கக் கதை’, இப்படியெல்லாம் பலவாக்கில் தான்தோன்றித்தனமாகச் சுற்றிக் கொண்டிருந்தது சிந்தை.
கதவுக்கு வெளியில் இருந்து வந்த ஓசை தாக்கியது, “காலையில ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சிரோணும். குளிரடிக்கிதுன்னெல்லாம் என்னியத் திட்டக் கூடாது. வர்றேன்னு சொல்லி பதிஞ்சு வுட்டது உங்க விருப்பத்தின் பேரில்!”
புதிய ஊரான இந்த ஊருக்கு வந்து சேர்ந்ததும் தேடியலைந்தது வயலின் பயிற்றுநருக்குத்தான். எங்குமே சரியாக அமையவில்லை. மணி நேரத்துக்கு நூறு வெள்ளி கூடக் கொடுத்துப் பார்த்துவிட்டோம். அலுப்பாய் இருந்தது. காற்றுவழிச் சேதிகளுக்கு இல்லாத வலு வேறெதற்கும் இருக்க முடியாது. ’இந்த வட்டாரத்துலேயே இன்னார்தாம் நெம்பர் ஒன்’ என்பதாக யாரோ ஒருவர் சொல்ல, அன்னாரிடம் நமக்கு வாய்க்குமா? மனத்தடை. ஒருநாள் போய்த்தான் பார்ப்போமேயென்று அண்டை மாநிலத்தில் இருக்கும் அவருடைய வீட்டிற்கே சென்றாயிற்று.
“யார் நீங்க?”
“இவங்க என் மகர். வயலின் கற்க ஆசை. வாலண்டீரிங் செய்யப் போன இடத்துல இருந்தவங்க உங்ககிட்டப் போகச் சொன்னாங்க!”
“என்ன வாலண்டீரிங்? எவ்ளோ காலமாச் செய்றீங்க?”, இப்படியாக தன்னார்வப் பணி குறித்த கருத்தரங்கமாக அந்த வீடு உருமாறிக் கொண்டிருந்தது.
“வாய்ப்பே இல்லை. புது ஆட்களுக்கு என்னிடம் வாய்ப்பே இல்லை. யாராவது கடைசி நேரத்துல வர முடியாமற்போனால், அந்த நேரத்திற்காக அழைப்பேன். நீங்க வரலாம், உங்களுக்கு விருப்பமிருந்தால்”
மனைவியாருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. “மகிழ்ச்சி. எப்ப, எந்த நாள், நேரம்னாலும் சரி. அழையுங்க. வேலைக்கு விடுப்பு எடுத்துகிட்டாவது அழைச்சிட்டு வந்திருவன்”
ஓரிரு ஒரு மணிநேர வகுப்புகள் கிடைத்தன. டிசம்பர் மாதம் வந்து விட்டது. வயலின் டீச்சரின் குழு, ஆங்காங்கே இருக்கும் மூத்தோர் இல்லங்கள், மருத்துவமனைகள், சர்ச்சுகள், நகரமன்றங்கள் முதலானவற்றுக்குத் தன்னார்வத் தொண்டுப்பணியாக விழாக்கால வயலின் இசைநிகழ்ச்சிகள் வாசிக்கச் செல்வர். நாங்களும் வருகின்றோமெனச் சொல்லவே, உங்கள் குழந்தைக்கு அந்த அளவு வாசிப்புத்திறம் இல்லையேயென்பதாகச் சொல்ல, உடனிருந்து மற்ற மற்ற உதவிகள் செய்ய வருகின்றோமெனச் சொல்லி ஆயிற்று. அருகிலிருந்த அம்மையாரின் கணவரும், “ஆமாம், நானே எல்லாக் கருவிகள், ஒலிபெருக்கிகள் எல்லாவற்றையும் பொருத்திக் கொண்டிருக்க முடியாது! உடன் வந்தால் உதவியாய் இருக்கும்!!”.
டிசம்பர் மாதம் முழுதும் தன்னார்வப் பணிகள். அதிற்கிடைத்த பழகுதருணங்களின் கொடையாக, ஜனவரியிலிருந்து வாராவாரம் ஒரு ஒருமணிநேர வகுப்பு என்றாகிப் போனது மகருக்கு.
டீச்சரம்மா சீனாவுக்குப் பயணம். வீட்டில் இரு பிள்ளைகள், அவரது கணவர். இரு பிள்ளைகளென்றால் அவரது பிள்ளைகளே அல்லர். பெற்றோரில்லாக் குழந்தைகளுக்கு மாகாண அரசாங்கம்தாம் அம்மா அப்பா. அரசாங்கத்திடம் இருந்து இப்பிள்ளைகளை வளர்த்துப் போற்றும் பொறுப்பை பொறுப்பான தன்னார்வலர்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படியான பிள்ளைகள்தாம் இவர்கள். இவர்களுக்குச் சரியான நேரத்தில் சப்பாடு போக்குவரத்து இல்லாமற்போய் விடுமோயென்கின்ற கவலை அம்மையாருக்கு. நம்மாள் நேரம் பார்த்துப் போட்டுவிட்டார் ஒரு போடு, “திருமிகு லில்லி, மூன்று வாரங்கள்தானே? அன்றாடமும் எங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு போகும், நீங்கள் சென்று வாருங்கள்!”.
அடுத்த இரு மகர்களுக்கும் கூடச் சேர்த்து வயலின் வகுப்புகள் துவங்கி விட்டன. மூத்தவர், உள்ளூர், வட்டாரம், மேற்குச்சரகம், மாகாண அளவிலான போட்டிகளிலெல்லாம் பங்குகொண்டு பரிசுகள் பெறும் நிலைக்கு வந்துவிட்டார். இளையவர்கள் லில்லியின் போக்கில் கரைந்து விட்டிருந்தனர். அவர்களுடைய அந்தநாள்ப் பொழுதில் நாமும் கலந்து கொள்வதென ஆகிவிட்டது. நம்மைத்தான் துரத்திக் கொண்டிருக்கின்றதே இந்த அமெரிக்கக் கதையாசை?
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆசுதிரேலியா, நியூசிலாந்து எனப் பல நாடுகளுக்கும் பொதுப் பண்பாடுதாம் என்றாலும் அமெரிக்காவுக்கெனத் தனித்துவம் உண்டு. அது ஒரு நிறுவனப்படுத்தப்பட்டதும் அன்றாட வாழ்வியலில் இரண்டறக் கலந்ததுமாகும். அதுதான் உணவுக்கொடைக் கூடங்கள். ‘ஃபூட்பேங்க்’ என்பது எங்கும் இருக்கும். இல்லாத நகரங்களில்லை. ஒன்றிய அரசின் கட்டிப்பாட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க வேளாண்துறையின் நேரடிக் கண்காணிப்பில் இவையங்கும். அவற்றுக்கென முறைசார் நெறிமுறைகள், சட்டதிட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றது. இவற்றினூடாக யாரும் பணம் பண்ணக்கூடாது. அரசியல் தலையீடு அறவே இருக்கக் கூடாது. தரமற்ற உணவுகள் இடம் பிடிக்கக் கூடாது. சார்புத்தன்மை, ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அனைத்தும் உடனுக்குடனே ஆவணப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எவருக்கும் வினாவெழுப்ப உரிமை உண்டு.
வளவுகளிலே வசிக்கின்ற எவரும் உணவுப் பொருட்களைக் கொடையாக வழங்கலாம். கடைகளிலே, பேரங்காடிகளிலே இருந்து வண்டி வண்டியாகப் பொருட்கள் கொடையாக வந்து சேரும். வேளாண்பெருமக்கள் விளைபொருட்களை அனுப்பி வைப்பர். பெருநிறுவனங்களிலே மிஞ்சிய எஞ்சிய பொருட்களை வீணாக்காதபடிக்குச் சென்று மீட்புப் பணிகள் இடம் பெறும். இப்படியெல்லாம் சேகரம் செய்யப்பட்ட பொருட்கள் கொடைக்களஞ்சியம் வந்து சேரும். ஒருவளாகத்துக்குச் சராசரியாக ஐந்து டன் முதற்கொண்டு பத்து டன்களுக்கும் மேலாகக் கூட பொருட்கள் வந்து சேரும். வந்து சேர்ந்த பொருட்கள், பிரித்தெடுக்கப்பட்டு வகைமைப்படுத்தும்(sorting) பணிகளுக்கு உள்ளாகும். அந்தந்தப் பொருட்கள் அந்தந்தத் தட்பவெப்பத்தில் சேமிக்கப்பட்டு இருத்தலும் வேண்டும். வகைமைப்படுத்தப்பட்ட பொருட்கள் அடுத்தநாள் பொட்டிகட்டலுக்கு(packing) உட்படுத்தப்படும்.
ஆளுயரப் பொதிகளில் பெட்டிகள் அடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் என்ன பொருள் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நயம்பார்த்து, காலாவதிநாள் பார்த்து, தரச்சான்று பார்த்து, பொட்டணவுறுதி பார்த்து, அந்தப் பொருளுக்கான வகைமைப் பெட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும். இதுதான் வகைமைப்படுத்தும் பணி என்பதாகும். இப்படியான வகைமைப் பெட்டிகள் அடுத்தநாள் எடுத்துச்செலுத்திகள் (கன்வேயர் பெல்ட்) பின்பாக நிறுத்தப்படும். ஒவ்வொரு அணியிலும் பத்து பேர், பதினைந்து பேர் வரிசையாக நிறுத்தப்படுவர். முன்னே எடுத்துச்செலுத்தியில், ஒருவர் அட்டைப்பெட்டியை வைப்பார். நகர்ந்து கொண்டிருக்கும் பெட்டியில் ஒருவர் முதற்பொருளை வைப்பார். அடுத்தவர் அடுத்த பொருளை வைப்பார். இப்படியாக அந்த அட்டைப் பெட்டியில் கொடையாகக் கொடுக்கப்பட வேண்டிய பொருட்கள் இடம் பெறும். கடைசியின் தானியமக்காம அந்தப் பெட்டி பூட்டப்பட்டு இறுக்கமாக ஒட்டப்பட்டுவிடும். இப்படியான பெட்டிகள் உடனுக்குடனே வண்டியிலேற்றப்பட்டு, ஊரகப்பகுதிகளிலே இருக்கும் மூத்தகுடிமக்கள், ஏழை எளியோர், பள்ளிகள் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஓரிரு மணி நேரத்துக்குள்ளாக விநியோகிக்கப்பட்டு விடும்.
“அப்பா, do you know all the rules & regulations about sorting? You better learn before We leave!"
"ஞே ஞே”
ஆவணக் கோப்பு ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் மகர். விற்பனைநாள், உகந்த பயனாக்கநாள், பயனாக்கநாள், கெடுநாள் இவற்றுக்கான வேறுபாடுகளை அறிந்து கொண்டேன். விற்பனைநாள்(sell by) என்பது இந்த நாளுக்குள் வணிகர் பொருளை விற்றாக வேண்டும். அதற்குப் பின் அங்காடியில் வைத்திருத்தலாகாது. உகந்த பயனாக்கநாள் (best if used by) என்பது இந்த நாளுக்குள் பயன்படுத்தப்பட்டால் பொருளின் விழுமியம் மேம்பட்டதாக இருக்கும். பயனாக்கநாள் (use by) என்பது உற்பத்தியாளரால் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாள், கெட்டுவிடும் என்பதாகக் கருத முடியாது. கெடுநாள் (expiry date) என்பது, இந்த நாளுக்குப் பின் பொருள் கெட்டுப் போகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதைக் குறிக்கின்ற நாள்.
”கண்ணூ, இதெல்லாம்தான் ஏற்கனவே நமக்குத் தெரியுமே?”
“பேசாமப் படிங்க அப்பா. தெரிஞ்சதுனால படிக்கக் கூடாதுங்றது எப்பயுமே இல்லை. மறுபடியும் படிக்கும் போது, புதுப்புரிதல் ஏற்படலாம். நினைவடுக்குகளின் மேலடுக்குகளுக்கு எடுத்து வருவதாக அமையலாம். ஏதோவொன்று காலாவதியாகி புதுத்தகவல் நடைமுறைக்கு வந்திருக்கலாம். படிச்சிட்டு வரச் சொல்றாங்க, படிச்சிட்டுத்தான் போகணும். நாமாக எல்லாம் நமக்குத் தெரியும்னு நினைக்கிறதுதான் அறியாமையின் முதல் அறிகுறி. பேசாமப் படிங்க”, பல்பு வாங்கிக் கொண்டு மீண்டும் ஊன்றிப் படிக்கலானேன்.
ஒவ்வொரு பொருளின் தரப்பிரிப்புகள் எப்படியெல்லாம் இடம் பெற வேண்டுமென விவரிப்புகள் இடம் பெற்றிருந்தன. மூடி வளைந்திருந்தால் குப்பையில் போட்டு விட வேண்டும். வெளிப்புறத்தில் ஒடுக்குகள் இருந்தால் குப்பையில் போட்டு விட வேண்டும். ஏன்? ஒடுக்குள் நேர்கின்ற நேரத்திலே உட்புறம் அழுத்தம் கூடியதால் விளிம்புகளில் நுண்ணிய அளவில் இடைவெளிகள் ஏற்பட்டிருக்கலாம். அதன் நிமித்தம் நுண்கிருமிகள் உட்புக வாய்ப்பிருக்கின்றது. எனவே அதைக் குப்பையில் போட்டுவிட வேண்டும். பொட்டலங்கள் கிழிந்திருந்தால் குப்பையில் போட்டுவிட வேண்டும். ஒட்டுநறுக்குகளில் தேதிகள், சத்துவிவரப்பட்டியல் போன்றவை இல்லாவிட்டாலும் குப்பை. புதிதாய்த் தெரியும். வீணாகின்றதேயென அகங்கலாய்ப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் குப்பையாக்கத்தான் வேண்டும். இப்படியான பொருளைக் கொடுத்து ஒருவர் நலம் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் கொடுக்காமல் இருப்பதே நன்றாம். கடுமையான சட்டதிட்டங்கள்.
களஞ்சிய வளாகம் சென்று சேர்ந்து விட்டோம். குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர் எல்லாரும். சிலநாட்கள், நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டவர்கள் தன்னார்வப் பணிகளுக்காய் வருவர். சிலநாட்களில் வயதுக்கு வந்தோர் மட்டும் வருவர். ஒரு சில நாட்களில் மட்டும்தான் சின்னஞ்சிறு பிள்ளைகள் முதற்கொண்டு குடும்பத்தினர் வரலாம். அப்படியானநாள்தாம் இன்று.
“அப்பா, வாங்க நாம அந்த ரெண்டாவது டேபிள் எடுத்துக்கலாம். அம்மாமாரி வேகவேகமாச் செய்யாதீங்க. அது தவறு”
“யேய், என்னியப்பத்திப் பேசறியா? நான் மெதுவாப் பார்த்துப் பார்த்துத்தான் செய்யுறன்"
வேலையை விரைவாகச் செய்வதென்றால் எல்லாராலும் எளிதாகச் செய்து விட முடியும். ஆனால், மெதுவாக, நிதானமாகச் செய்வது மிகவும் கடினம். வேலையே செய்யாமல் இருப்பதோ, குறைவான வேகத்திலோ செய்வதல்ல மெதுவாகச் செய்வதென்பது. விரைவைக் கைவிட்டு விட்டு, முழுக்கவனத்துடன் மனம் ஊன்றி ஒன்றியவாக்கில் செய்தாக வேண்டும். பொதிகளுக்குள் எல்லாப் பொருட்களும் இருக்கும். விலை கூடிய உயர்ரகப் பொருட்களாக இருக்கும். அவற்றைக் குப்பையாக்க மனம் ஒப்பாது. ஆனால் நாம் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செய்தாக வேண்டும். தேதி பார்த்து, ஒடுக்கம் பார்த்து, விளிம்புகள் பார்த்து, கிழிசல் பார்த்து, பொருளின் பெயர் பார்த்து, நூற்றுக்கு நூறு எல்லாமும் உகந்தபடிக்கு மேம்பட்ட வகையில் இருந்தால்தான் அந்தப் பொருள் அடுத்த கட்ட வகைமைப் பெட்டிக்குச் சென்று சேரலாம். ஆகவே விரைந்து வேலை செய்யத் தலைப்படக் கூடாது. இது ஒரு வேள்விப்பணி.
ஒரு தன்னார்வலர் மூன்று மணி நேரம்தான் இந்த வகைமைப்படுத்தும் பணியை(sorting)ச் செய்யலாம். அனுபவத்தின் பேரில் அப்படியானதொரு வரையறை. அதற்கும் மேல் ஒருவர் பணிக்கப்பட்டால், மூளை களைத்துப் போய் ஏனோதானோவென வேலை பார்க்கத் தலைப்பட்டு விடுவர். அதனாலே உணவுப் பொருள் பாதுகாப்பு, தரம் என்பவற்றுக்குக் குந்தகம் நேரிடலாம். ஆகவே மூன்று மணி நேர வரையறை. எல்லா உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, கவனம், அக்கறை, பொறுப்பு, கடமை முதலான உணர்வுகள் மட்டுமே கொண்டு குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொண்டு கடக்கும் அந்த மூன்று மணி நேரம் என்பது எத்தகையவரையும் நிர்வாணப்படுத்தியே தீரும். கட்டுக்கடங்காத எந்த மனமும் கட்டுக்குள் வந்தே தீரும்.
“என்னங்க, எவ்ளோ பொருள் வீணாகுது? மலையாக் குமிஞ்சு கிடந்தது பார்த்தீங்கல்ல?”, வணிக அங்காடிகளில் பொருள் வாங்கிக் குவிப்பதென்பது ஒரு போதை. நம்மவர் அப்படி அல்லதான், என்றாலும் கூப்பான்கள் அசைத்து விடுகின்றனவே? அப்படியானவர் சொல்கின்றார்.
”ஆமா ஆமா. இந்த டிசம்பர் விடுப்புக்காலத்துல நம்ம வூட்லயும் எல்லாத்தையும் ஓர்சல் பண்ணுனாக்கூட நல்லாத்தா இருக்கும்”
“ஆமாங்க, நோ மோர் ஷாப்பிங். நிறைய டொனேசன்ல போடக் கிடக்கு. செரி, மூத்தவளை பத்து மணிக்கு எழுப்பி விட்ருங்க. இட்லியும், நிலக்கடலைச் சட்னியும் காஃபி டேபிள்ல வெச்சிருக்கு. டே, நடங்கடா. கொஞ்ச லேட்டானாலும் லில்லி திட்டும்”
“அம்மா, மிஸ் லில்லிக்கு?”
“எடுத்தாச்சு எடுத்தாச்சு, மிஸ் லில்லிக்கும் இட்லி, பீநட் சட்னி எடுத்தாச்சு”
நினைவுக்கு வந்தது. லைன்மேன் மகன் மணிமாறனை நாடகத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க வைத்தார்கள் பிச்சுமணி வாத்தியாரும் கைத்தொழில் மாஸ்டரும். மெய்நிகர் வாழ்க்கையிலும் அவன் அதுவாகவே ஆகிவிட்டான்.