10/05/2022

மனனஞ்சான்

குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து

மனனஞ்சான் ஆகல் இனிது.

பூதஞ்சேந்தனார் இயற்றிய நூல் இனியவை நாற்பது. சொல்வளத்தையும் கடந்து, ஒவ்வொரு வெண்பாவும் எளிதிற்புரியும் படியாகவும் சிறுகதையை உட்கொண்டது போலவும் கட்டப்பட்டு இருக்கும்.

பாடல்களில் சொல்லப்படும் நுண்ணிய கருத்துகள், போகின்ற போக்க்கில் சொல்ல்ப்படுகின்றவை ’சென்சிடிவ்’ உள்ளம் கொண்ட எவரையும் தூக்கிப் போடும்.  சின்னஞ்சிறு குழந்தைகள் தத்தக்காபித்தக்காயென நடை போடத் துவங்கும் அந்த முதற்கணங்கள் அழகு. [மனத்தில் அந்தக் காட்சி விரியும் போதேவும் மனமெல்லாம் பரவசமாகின்றது]. அப்படியான குழந்தைகள் புரிந்தும் புரியாத விநோத மொழியொன்றில் பகர்வது அமிழ்தினும் இனியது (can you recall such gibberish and rejoice?). தீவினை செய்பவர்கள் மனம் நோகுமேயென, மனம் அஞ்சுபவராக ஆகாதிருத்தல் இனிது.

Poet is striking a balance between good and bad here. எப்படியாகப்பட்ட பேரின்பத்துடன் ஒப்பிட்டு, மனம் அஞ்சாமல் இருப்பதும் அதைப் போன்றதொரு இனிது என்கின்றார் பாருங்கள். அமெரிக்கப் பண்பாட்டில் இது மிக முக்கியமானவொன்று. ஏன்?

கண்களுக்குப் புலப்படாத ஒரு கூறு. அந்தக் கூறு, உங்கள் கல்வி, திறமை, புகழ், ஆற்றல் என இருக்கும் எல்லாவற்றையும் பதம் பார்த்து விடும். Gracious Professionalism and Coopertition.  It is described as a comfortable blend of knowledge, competition, and empathy. Coopertition is “displaying unqualified kindness and respect in the face of fierce competition.” தாங்களோ, தங்கள் குழந்தையோ கூட்டியக்கமாக ஒரு பணியைச் செய்ய விழைகின்றது. மற்ற அணிகளைக் காட்டிலும், சிறப்பான பயனீடு. ஆனாலும் அணி தோற்றதாக அறிவிக்கப்படுகின்றது. ஏன்? செயற்பட்ட, பணியாற்றிய பாங்கு பிழையானதாக இருந்திருக்கக் கூடும். சக மாணவர், சக தோழர் எப்படிக் கையாளப்பட்டார் என்பதெல்லாமும் இலைமறை காயாகக் கவனிக்கப்படுவது இந்த முறைமையில் அடக்கம். நாம் நுண்ணுணர்வு கொள்ள வேண்டும். பயனீட்டில் சில புள்ளிகள் குறைவு, ஆனால் பயணப்பட்ட பாங்கு சிறப்பானது, சிறப்புப் பரிசாவது வழங்குவர். என்ன அடிப்படை? நாம் மனிதர்கள். ஒவ்வொரு மனிதனும் தம்மைப் பார்த்துக் கொண்டேவும் அடுத்த மனிதன்மீதும் அக்கறை கொள்ள வேண்டுமென்பதே அதன் அடிப்படை.

நியூயார்க் நகரில் எட்டரை மணிக்குப் பொதுக்குழு. 85 வயதுள்ள மூத்த உறுப்பினர்களெல்லாம் வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சாவதனமாக ஒரு மணி நேரம் காலத்தாழ்ச்சியோடு வந்திருந்து, எருமை மேல் மழை பெய்தது போன்ற உணர்வுடன் எதுவுமே நடந்திராதது போலக் கூட்டத்தைத் துவக்க முனைவதெற்கெல்லாம் எப்படியாகப்பட்ட மதிப்பெண்கள் கிடைக்குமென யோசித்துப் பாருங்கள். இப்படியாகப்பட்ட ஒழுங்கீனங்களைச் சுட்டிக் காட்டிப் பணியாற்றுகின்ற மனனஞ்சான் ஆகல்தான் இனிது எனச்சொல்கின்றார் பூதஞ்சேந்தனார். சும்மா இலக்கியக் கூட்டங்களைப் போட்டுப் பயனில்லை. இலக்கியத்தின் பேரில் ஒழுக முற்பட வேண்டும் நாம்!

No comments: