ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை. [இன்னா நாற்பது 7]
சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர். அப்படியாகப்பட்ட காலத்தை முதற்சங்ககாலம், இடைச்சங்ககாலம், கடைச்சங்ககாலம் என்கின்றோம். அதற்குப் பிறகான காலம், சங்கம் மருவிய காலம் எனப்படுகின்றது. அப்படியாகப்பட்ட காலத்திலே, வாழ்வியற்கணக்குகளுக்காக 18 தனிப்பட்ட நூல்கள், வெவ்வேறு புலவர்களாலே கட்டமைக்கப்பட்டன. அதிலே அடங்கும் இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. அதைப் போன்றே இன்னா நாற்பது என்பதை இயற்றியவர் கபிலர். அதில் வரும்பாடல்தான் இது.
வலிமையில்லாதவன் கையிற்பிடித்த கருவி இனியதாய் இராது. மணமில்லாத மலரின் அழகு இனியதாய் இராது. தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை இனியதாய் இராது. அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் இன்பத்தைத் தராது.
words matter. சொற்களில் அறம் உள்ளது. சைவம்/அசைவம் என்கின்றோம். ஆக புலால் உண்போர் பின்னை என்றாகின்றது. புலால்/அபுலால் அல்லது கறி/அகறி என்று வைத்துக் கொள்ளலாம்தானே? இப்படி நுண்மையானதும் நுட்பமானதுமான உட்பொதிகள் சிறுகச்சிறுக ஏதோவொன்றைக் கட்டமைத்துவிடும்.
https://youtu.be/naCqfHDEAqE?t=3658
இந்தக் காணொலியைக் கண்டேன். இலக்கியக் கூட்டம், சிறுகதை எழுத்தாளர்கள் அறிமுகமும் நூலறிமுகமும் என்பது தெரியப்படுத்தப்பட்ட தலைப்பு. மகிழ்ச்சி. வரவேற்கத்தக்கது.
ஆனால் இடம் பெற்றதென்னவோ இலாவணிக்கூட்டம். எப்படி? சூம் வாயிலாக 23 பேர். யுடியூபில் 5 பேர் என மொத்தம் 28 பேர் நேரலையில் கலந்து கொண்டிருந்தனர். அந்த 28 பேரில் என்னுடைய உள்நுழைவு தலா ஒன்று. அது போக செயற்குழுவினர், எழுத்தாளர்கள் என்பதாக.
பேசப்பட்ட நிறைய கருத்துகள் எனக்குத் தூக்கிவாரிப் போட்டன. இரண்டே இரண்டை மட்டும் சுட்டிக்காண்பிக்க விழைகின்றேன்.
பழைய தலைவர்கள் பெண்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்கப்படுவதில்லையென ஒரு பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் அப்படியான பெண்டிரே, விழா மேடையிலும் சரி, இப்படியான கூட்டங்களிலும் சரி, ’அண்ணா, அண்ணா’ எனக் குழைவது சகிக்கவில்லை. உங்களிடையே பாசபந்தங்கள் இருப்பின் மகிழ்ச்சியே. ஆனால், முறையான விழா, கூட்டம் போன்றவற்றில் ’பழமைபேசி அவர்களைப் பேச அழைக்கின்றேன்’ எனச் சொன்னால் போதாதா? இது உங்களது தனிப்பட்ட நிகழ்வன்று. அமெரிக்கத் தமிழினத்தின் பிரதிநிதியாகப் பேசிக் கொண்டுள்ளீர்கள். பெண்டிரின் ஒட்டுமொத்த தன்மானத்தையே அடகு வைக்கின்றீர்கள். இப்படியான கூழைக்கும்பிடுப் பண்பாட்டைப் பரவலாக்கம் செய்வதற்குத் துணை போகின்றீர்கள்.
அடுத்தது நண்பர் பேசுகின்றார். ’முன்பெல்லாம் தலைவர்களுக்கு வேண்டியவ்ர்கள் மட்டும்தான் கமிட்டிகளில் இருப்பார்கள். இவர் வந்துதான் தமிழ்ச்சங்கத்தினரும் கமிட்டிகளில்...’ என இலாவணி பாடுகின்றார். சார்லட் தமிழ்ச்சங்கத்தில் இருந்து இரு பேராளர்கள். இருவருக்குமே எவரையும் தெரியாது. பார்வையாளராகத்தான் அட்லாண்டா விழாவுக்குச் சென்றோம். ஒருவர் செயலர் ஆகின்றார். இன்னொருவர் பல பொறுப்புகளும் பெற்றுத் தலைவராகவே ஆகியதும் வரலாறு. இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு? இலக்கியம் என்பதே, கொந்தளிப்புகள் அற்றதும் பண்படுத்தப்படுவதுமான கலைதானே? இலாவணி பாடுவதென்றால், உங்களுக்கான தளங்களில் பாடிக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. 33 ஆண்டுகாலமாக உழைத்த தன்னார்வலர்களைக் கொச்சைப்படுத்த, அமைப்பின் கூட்டங்களையே பயன்படுத்திக் கொள்வீர்களா? இதுதான் இலக்கியமா? சட்டமன்றத்தில் அந்தந்த எம்.எல்.ஏக்கள் அவரவர் கட்சித் தலைவர்களைப் புகழ்வது போலே அமெரிக்காவிலும்?!
No comments:
Post a Comment