10/06/2022

அருநவை

பாவமும் ஏனைப் பழியும் படவருவ 
சாயினும் சான்றவர் செய்கலார்;  சாதல் 
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் 
அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று. [நாலடியார் 295]

Yes, the road to freedom will be filled with inconveniences and sacrifices, but the rewards that lie ahead are still worth fighting for.

பள்ளிநாட்களிலேயே இதழ்களுக்கு எழுதி அனுப்புவதும் ஆவணப்படுத்தும் சிற்சிறு வேலைகளிலும் ஈடுபட்டு வந்த நமக்கு, இணையவாசல் என்பது இன்னமும் கூடுதல் வசதியாகிப் போனது. இணையத்திலும் 2005 துவக்கம் முனைப்பாக எழுதி வருகின்றோம். எழுதுகின்ற எழுத்தில் உண்மை இருக்க வேண்டும்; பொய், புரட்டு, திரிபுகளற்ற கருத்துகளே நம் கருவியாக இருத்தல் வேண்டும். சிற்றறிவுக்கு அப்பாற்பட்டுப் பிழைகள் நேர்ந்து சுட்டிக் காண்பிக்கின்ற தருவாயில் அவற்றைத் திருத்திக் கொள்ளும் மனப்பாங்கும் வேண்டும். அந்த நிலைப்பாட்டில்தாம் இயங்கி வருகின்றோம்.  

எழுத்துப்பணியென்பது ஒரு வேள்வி. எல்லா நேரமும் நம் எழுத்து வாசிக்கப்படுமெனச் சொல்லிவிட முடியாது. எல்லாருக்கும் பிடித்தமானதாக இருக்குமென்றும் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தொடர்ந்து தமக்கான விருப்பின்படி அறத்தோடும் கற்றுச்செயற்படுகின்ற தகவோடும் செயற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் பேரின்பம். ஏனென்றால், அறத்துடன் கூடிய எழுத்து சாகாவரம் பெற்றது. மொழி என்பது பெருமை பேசிக்கொள்ளவும் பணம் பண்ணுவதற்குமான ஒரு கருவி மட்டுமே அன்று. அது ஒரு இனத்தின் வரலாற்றைக் கட்டமைக்கவல்லது.

மேற்கூறப்பட்ட நாலடியாருக்கு வருவோம். பாவமும் ஏனைப்பழியும்கூடிய செயலை, சாவே வரினும் மனதறிந்து செய்யமாட்டார் சான்றோர். ஏனென்றால், காலமெல்லாம் நின்று இகழ்வைத் தரக்கூடிய பழிபாவத்தைப் போல அல்லாது, சாதல் என்பது ஒரே ஒருநாள் செயலே.

எழுத்து என்பதும் பொதுப்பணிதாம். நெஞ்சறிந்து, பொய், புரட்டு அல்லாமல் இருந்து விட்டால் பழிபாவத்தைச் சுமக்கத் தேவையில்லை. அறம்சார் பணிகளுக்கும் அது பொருந்தும். வேள்வியென்பதே மனம் தளராமல் இடம்பெறும் தொடரியக்கம்தான். போதுமான கவனம், ஈட்டு, புகழ்வெளிச்சம், விமர்சனம், அவதூறு முதலானவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. நேர்மையானதைத் தங்கு தடையின்றிச் சொல்லிக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும், நம்மை நம் மரணம் தழுவுகின்ற வரையிலும்.

எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம். 2022, ஏப்ரல் ஏழாம் நாள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைச் செயலருக்கு மடல் எழுதினேன். விழா வேலைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, இன்னின்ன வேலைகள் சிறப்பாக இல்லை எனச் சொல்லி எழுதியிருந்தேன். சில பலரை இணைபெறுநராகவும் சேர்த்திருந்தேன். அதில் ஒருவர் அழைத்துப் பேசினார். 2006ஆம் ஆண்டு சொதப்பியதைப் போலவே, இந்த ஆண்டும் சொதப்பத்தான் போகின்றார்களெனக் குறிப்பிட்டார். என்ன, இவர், இப்படிச் சொல்கின்றாரெயென நினைத்துக் கொண்டு கூகுளில் துழாவத் தலைப்பட்டேன். அப்போது கிடைக்கப் பெற்றதுதான் இந்தப் பதிவு. http://siragugal.blogspot.com/2006/07/2006.html இப்படித்தான் எழுத்துகள் காலத்தின் சாட்சியாக என்றென்றும் நிலைபெற்றிருக்கும். அவர் சொன்னதேதான் நிகழ்ந்ததென்பதும் நாமறிந்த ஒன்று.

எழுத்தில் தூய்மையும் பணியில் அறமும் ஓங்கச் சாவே வரினும் கவலைப்படோம்!

No comments: