10/03/2022

நன்னெறி

நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது சரி பிழை ஆகிய கருத்துருக்களை முறைப்படுத்தி, பேணி, அவற்றைக் கைக்கொள்ளும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்வது. நன்னெறியின் முக்கியமான பண்பு "நல்வாழ்வு" என்பதாகும். பயனுள்ளதும், நிறைவு அளிப்பதுமான வாழ்வே நமக்குத் தேவையானதென்பதே பல மெய்யியலாளரது கருத்தாகும். மெய்யியலில், நெறிமுறையானது அழகியலின் நிரப்புக்கூறாகக் கருதப்படுகிறது. நெறிமுறை, மனிதர்களது நன்னடத்தை தொடர்பாகவும், ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது குறித்தும் ஆய்வு செய்கிறது. நெறிமுறை தொடர்பான ஆய்வுப் பரப்பை நான்காக வகுப்பர்.

மீநெறிமுறை

கடப்பாட்டு நெறிமுறை

பயன்பாட்டு நெறிமுறை

விளக்க நெறிமுறை

மனித ஒழுக்கம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் காண முயல்கின்றன இவை. நல்லது - தீயது, சரி - பிழை, நல்லொழுக்கம் - தீயொழுக்கம், அறம்-வழு ஆகிய கருத்துருக்களுக்கான விளக்கங்களைக் காண்பது இதன் நோக்கம். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம் இப்படியான நிறைய தமிழ் நூல்கள் நம் பண்பாட்டுச் சொத்தாக முக்காலத்துக்கும் இருந்து கொண்டிருக்கின்றன. சங்கங்களிலே இரு சாரார் உண்டு. இவற்றை எல்லாம் புகழ்ந்தோதி, உணர்வூட்டி உணர்வூட்டியே, சக தமிழர்களைக் குதூகலத்தில் வைத்திருந்து, அந்த மகிழ்வையே மூலதனமாக்கி, அவர்களின் உழைப்பையும் உடைமையையும் சுரண்டிக் கொள்வதென ஒருசாரார். செயற்பாட்டில் இப்படியான நன்னெறிகளெல்லாம் ஒழுகப்படுகின்றனவாயென வினவி வினவியே வில்லன்களாகச் சோரம் போவதென ஒருசாரார். அவதூறுதானேயென வினவுவதற்கு இடம் உண்டுதான். எனவே சற்றுப் பின் திரும்பிப் பார்ப்போம்.

தமிழ் இனம், மொழி, பண்பாடு, புலம்பெயர் மண்ணில் அடையாளத்தின் பொருட்டுப் பாதுகாப்பு முதலானவற்றுக்காக ஓர் அமைப்பு இன்றியமையாதது. ஆகவே அதற்கு வலுவூட்ட வேண்டுமென உணர்வு கொண்டு பணியாற்ற விழைவர் இளையோர். எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி, குடும்பத்துக்கான நேரத்தையும் கூட தன்னார்வப் பணிகளுக்காய்ச் செலவிட்டு உழைப்பர்தாம். இடும் பணிகளைச் செய்வதாகத் தம் பங்களிப்பைத் துவக்குவர். காலம் செல்லச் செல்லக் கொஞ்சம் கொஞ்சமாய் மேம்பாடு, பரவலாக்கம் என்பதாகத் தம் கருத்துகளையும் சொல்ல வெளிக்கிடுவர். அவற்றுள் சிலவற்றுக்குக் காது கொடுக்கப்படும். பலவற்றுக்குக் காதுகள் பாராமல் இருந்துவிடும்.

பாராமல் விடப்பட்ட கருத்துகளுக்காய் தலைநிமிரும் அந்த நொடியில்தான் எங்கிருந்தோ தீண்டிக் கொண்டிருந்த கோல்கள் தலையில் குட்டும். அந்த நொடியில்தான், இத்தனை நாளும் இந்தத் தீண்டியகோல்களுக்குத்தான் குற்றேவல் புரிந்து கொண்டிருந்தோமாயெனச் சிந்தை வசப்படுவர். அந்தநொடியில், இந்தப் பணியாளருக்கு மாற்றாக பல பணியாளர் ஆங்காங்கே இருப்பதுமென்பதும் தோன்றி விடும். பட்டியிலிருக்கும் இந்த ஆடுகள் விடுவிக்கப்பட்டு, புதுப்பாய்ச்சலுக்கான அடுத்த பட்டி ஆடுகள் பணிக்கப்பட்டிருக்கும். இத்தகு போக்கினை நீங்கள் எங்கும் காணலாம். கவனித்திருக்கவில்லையெனில், இனி நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

திரும்பிப் பாருங்களேன். ஏதோவொரு பட்டி. அந்தப் பட்டியில் இருந்த எத்தனை ஆடுகள், இன்னமும் அந்தப் பட்டியில் பணிபார்த்துக் கொண்டிருக்கின்றன? எதிர்வினா வினவுவதோ, இல்லையென ஓட்டுப்போடுவதோ செய்து பாருங்கள். புகழ்ந்த வாய்கள் மெளனிக்கும். மெளனித்த வாய்கள், ‘ஒதுக்கி வெச்சிருக்கோம்’ என்பது போன்றும் வினையாற்றும். கண்களுக்குப் புலப்படாச் சக்திகள், ஆங்காங்கே கண்காணித்துக் கொண்டுமிருக்கும். 

கருத்துகள் குறித்துப் பேசுங்களென சகதமிழர் இங்கே சொல்கின்றார். சகதமிழர் அவர்கள், பேசமாட்டார்கள். இப்படித்தான் மாமாங்கங்கள் பலவாகத் தமிழர்களின் வாய்கள் பூட்டப்பட்டிருக்கின்றன இங்கே! மார்ட்டின் லூதர் கிங், ஆப்பிரகாம் லிங்கனுக்குக் கூட புகழ்மாலை மட்டுமே நாங்கள் பாடலாம், பேசமாட்டோமென்பது அவர்களின் தலையெழுத்து. ஆனால் தலையெல்லாம் தமிழ்காக்கும் செருக்கு!

If the freedom of speech is taken away then dumb and silent we may be led, like sheep to the slaughter.-George Washington

-பேராசிரியர், முனைவர் பழமைபேசி.

[free stuff is available in USA]

No comments: