10/04/2022

நாளொரு பா

இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா

தும்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின்

நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்

மான முடையார் மதிப்பு.

வணக்கம். நாளொரு திருக்குறளோ, நாலடியாரில் ஒன்றோ வாசித்து வருங்கால், தமிழ்ச்சொற்களை அணிமையில்(quick reach out) வைத்திருக்கலாம். எல்லாமுமே புழக்கம்தானே? புழங்கப் புழங்க, சொற்கள் நினைவுகளின் மேலடுக்கில் இருந்து வரக் கிடைக்கும். சிந்தைப் பயிற்சியாகவும் அமையும். திருக்குறளில் பெரும்பாலும் முரண்கள் இருக்கப் பார்க்க மாட்டோம். ஆனால் நாலடியாரில் முரண்களை ஒப்பீட்டளவில் கூடுதலாகக் காணலாம். காரணம், சமணம் சார்ந்த சிந்தையைக் கொண்ட நூல். சொற்களின் தேவை கருதி வாசிப்பது நமக்கு இன்றியமையாததாகின்றது.

பொருள் கொள்வதற்கு முன் அடிகளை வரிசைப்படுத்திக் கொள்வது நலம் பயக்கும், இப்படியாக:

செம்மையின் நானம் கமழுங் கதுப்பினாய்

நல்ல பயத்தலால் இம்மையும் நன்றாம்

இயல்நெறியுங் கைவிடாதும்மையும் 

நன்றேகாண் மானமுடையார் மதிப்பு.

நல்ல நறுமணம் கொண்ட கூந்தற்பெண்ணே, நல்ல பழக்கங்களால் இப்பிறவியும் நன்றாகும். அப்படியான இயல்பானது மறுபிறவியிலும் உம்மைக் கைவிட்டு விடாது; நன்று காண்பதே அப்படியான மானமுடையாரின் மதிப்பு. தளை பிறழாமலிருக்க சொற்களைக் கட்டுவதால் பெண்ணுக்குச் சொல்வதாக அமைந்திருக்கின்றதேவொழிய, அனைவருக்குமானதுதான் நாலடியார். இதை வாசிக்கும் போது, தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளே நினைவுக்கு வருகின்றன.

அமெரிக்காவில் இயங்கும் பெரும்பாலான தமிழ் அமைப்புகள், தமிழ் வேட்கை, தன்னார்வம் முதலானவற்றால் இயங்குவன. அமெரிக்க விழுமியங்கள், சட்டதிட்டங்களின் மேல் செயற்படுவன அல்ல. அவ்வப்போது பொறுப்புகளில் இருக்கும் ஆர்வலர்களின் செயற்பாடுகளைப் பொறுத்து பயன்கள் அமையும். முரண்கள் அவ்வப்போது வந்து போகும். அவரவர் அடையாளம், நம்பிக்கை, விருப்பு வெறுப்பு முதலானவற்றின் பேரில் அணிகளாகச் செயற்படுவதும் இடம் பெற்றுவிடும். இங்குதான் தன்னார்வலர்கள் கவனமாக இருந்து விட வேண்டும்.

எழுகின்ற கருத்து வேறுபாடு (தாறுமாறு அல்லது பிரச்சினை) என்னவோ அதன் அடிப்படியில், தம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எது சரியெனப்படுகின்றதோ அதன் அடிப்படையில் கருத்துச் சொல்பவராக இருப்பது தொலைநோக்கில் நலம் பயக்கக் கூடியதாக இருக்கும். அணிகளின் ஒத்திசைவுக்கு ஒப்ப செயற்படுவது, நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடும். ஏனெனில் அணிகளின் தன்மை காலந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும். மின்னஞ்சல்களும், மின்னெழுத்துப் பதிவுகளும் காலாகாலத்துக்கும் சான்றுகளாக இருக்கும். உடன் இருந்து இயங்குபவரே நாளை எதிர்முகாமில் இருந்து கொண்டு அந்தரங்கங்களைப் பகிர்பவராக மாறக்கூடும். ஆகவே இந்த நாலடியார் பாடல் நமக்குக் கைக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. நல்ல பயத்தலால் இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடாதும்மையும் நன்றேகாண் மானமுடையார் மதிப்பு.


No comments: