10/31/2022

வாழ்க்கைத் தரம்

பிறந்த அந்த நொடிலிருந்தே துவங்குகின்றது சாவுக்கான பயணம் என்றார் கண்ணதாசன். ஆக, அப்படியான பயணம் எந்த அளவுக்குத் தரமாக இருக்கின்றதென்பதை அளவிடும் அளவுகோல்தான் இந்த வாழ்க்கைத்தரம் எனும் பதம். சரி, வாழ்க்கைத்தரத்தை எது கொண்டு, எப்படியாக அளவிடுவது? பலமுறைகள் இருக்கின்றன. அதில் தலையாயது ஈடுபாட்டுமுறை(engaged theory). அமெரிக்கா 15ஆவது இடத்திலும் இந்தியா அறுபதாவது இடத்திலும் உள்ளன.

ஈடுபாட்டுமுறையின் கூறுகளாக இருப்பது Beliefs and ideas, Creativity and recreation, Enquiry and learning, Gender and generations, Identity and engagement, Memory and projection, Well-being and health ஆகியனவாகும்.

இவற்றுள் படைப்பாற்றலும் கேளிக்கையும், தேடலும் கற்றலும், அடையாளமும் ஈடுபாடும், நடத்தையும் உயிர்நலமும் முதலான கூறுகள் பண்பாட்டு அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எப்படி? எப்படியான கலைகள், படைப்புகளில் நாம் ஈடுபடுகின்றோம்? புதுப்புது சிந்தனைகள், அனுபவங்களுக்கான வாய்ப்புகள் கற்கப் பெறுகின்றனவா? தமிழ் என்பது நம் அடையாளம். அந்த அடையாளத்தின் பொருட்டு நமக்குப் பாதுகாப்புணர்வு மேலிடுகின்றதா? மனநலமும் மெய்நலமும் பொருந்தியதுதான் உயிர்நலம். அப்படியான மனநலம் மேம்படுகின்றதா? இத்தகு வினாக்களுக்கு அமையும் விடைகளைப் பொறுத்து அமைப்புகளின் செயற்பாடுகளை அளவிடலாம், விமர்சிக்கலாம், மேம்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அமைப்பு என்பதால்தான் அமெரிக்க அரசு வரிவிலக்குப் பெறும் நிறுவனமாக ஒப்புதல் அளித்திருக்கின்றது. மனநலம் குன்றக்கூடிய, சிந்தனை மட்டுப்படுத்தக் கூடிய, இருக்கும் தரத்தையும் சிதையச் செய்யக் கூடியதாக இருக்கும் போது அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் அறிவுப்புலத்தின் கடமை.

எடுத்துக்காட்டுகளுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். முழுப்பொறுப்புக்காலமான இரண்டு ஆண்டுகளும் இன்னார் தொடர்ந்து பொறுப்பில் இருந்திருக்கவில்லை எனும் பொய்யான தகவல் விதைக்கப்படுகின்றது. பொய்யான தகவல் என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது? அமைப்பின் செயற்குழுக் கூட்ட ஆவணங்களைப் பார்த்தால் தெரிந்து விடப் போகின்றது. இப்படிப் பொய்யான தகவல் விதைப்பவர் மனநலம் குன்றியவர், அல்லது அடுத்தவரின் மனநலக் கேட்டுக்கு வழிவகுக்கின்றார் என்றாகின்றது. ‘நாங்க அவரை அமைப்பிலிருந்து ஒதுக்கி வெச்சிருக்கோம்’ போன்ற சொல்லாடல்கள் நம் அடையாளத்துக்கும் பாதுகாப்புணர்வுக்கும் மிகப் பெரும் கேட்டினை விளைவிக்கக் கூடியவை. தரத்தை உயர்த்துவதற்கு மாறாக, பாழ்படுத்தக் கூடியன.

இந்திய மொழிவழி மக்களுக்கான நாடளாவிய அமைப்புகள் அமெரிக்காவில் 1960 துவக்கம் நிறையப் பிறந்தன. பிறந்த வேகத்திலேயே அவை செங்குத்துப் பிளவாக உடைந்தும் போயின. மலையாள அமைப்பில் பிளவு. தெலுகு அமைப்பில் பிளவுகள். கன்னட அமைப்பில் பிளவு. வங்காள அமைப்பில் பல பிளவுகள். இப்படி நிறைய. தமிழ் தனிப்பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கின்றது. காரணம், வழிவந்த தன்னலமற்ற தலைவர்களும் தன்முனைப்பற்ற தன்னார்வத் தொண்டர்களும்! அத்தகு தனிச்சிறப்பைப் பேண வேண்டியது நம் பொறுப்பு. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதாம். பொய்யுரைகளையும் அவதூறுகளையும் இனம் கண்டு களைவதேயாகும்!

10/29/2022

விமர்சனம்

விமர்சனம் என்பது வடமொழிச் சொல். அதற்கு நிகராகத் தமிழில் திறனாய்வு. Criticism is the construction of a judgement about the negative qualities of someone or something. திறனாய்வு அற்ற சமூகத்தின் மேம்பாட்டு வேகம் மட்டுப்படும். திறனாய்வே வெட்டிவேலை / அவதூறு என்பதாகக் கருதும் சமூகம் பிற்போக்குச் சமூகமாக உருவெடுக்கும். அப்படியெனில் திறனாய்வுக்கும் அவதூறுக்கும் என்ன வேறுபாடு?

நேரிடையாக பிழை, வழு, விடுபட்டுப் போனது, மரபுச்சிதைவு, பண்பாட்டுச் சிதைவு முதலானவற்றைக் குறிப்பிட்டுச் சாடுவது திறனாய்வு. அவற்றைக் காரணம் காட்டி இடம் பெறும் பகடிகள்,  கேலி/எள்ளல் என்பதாகக் கொள்ளலாம். உண்மைக்குப் புறம்பாகக் காரணமே இல்லாமல் இடம் பெறும் பகடிகள், சாடல்கள் அவதூறு.

அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெறவேண்டுமானால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளைப் பொதுமக்களின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுவில் முன்வைக்கின்ற குற்றம் குறைகளை எதிர்கொண்டு ஆய்வினை நிலைநாட்டியாக வேண்டும் (Public Defense).

”பக்கம் பக்மாக வெளியில் நின்று விமர்சித்து எழுதுவது சுலபம் . அதனால் பேரவைக்கு என்ன பயன்?”

இப்படியான வினா எங்கிருந்து பிறக்கின்றது? அறியாமை, காழ்ப்பு, சகிப்பின்மை, ஒவ்வாமை, பொறாமை முதலானவற்றில் இருந்து தோன்றுகின்றது. அதிலும் விமர்சித்து எழுதுவது சுலபம் என்கின்ற கருத்தோடு. கல்வி கற்றும், வாசிப்பின்மை காரணமாக இப்படியான கருத்துகள் இடம் பெறுகின்றன. இப்படியானவர்கள் தலைவர்களாகவும் இருக்கின்ற போது அந்த அமைப்பின் விழுமியம் பாழ்பட்டுத்தான் போகும். நல்ல தலைவர்கள், திறனாய்விலிருந்து கற்றுக் கொள்ளவே முனைவர். எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பார்ப்போம். 

1. “ரோல்கால் எடுக்கப்பட வேண்டும். ஒரேதளத்தில் உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்”

இது விமர்சனமாக முன்வைக்கப்படுகின்றது. ஏன்? வருகையாளர்கள் யார் யார் என்பது அமைப்பில் இருக்கின்ற ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பங்கு கொண்ட அனைவருக்கும் தெரியத்தானே வேண்டும்? வெளிப்படைத்தன்மை என்பது அதுதானே? ஒரேதளத்தில் இருக்கும் போது, மற்றவர்களின் சமிக்கை, உடல்மொழி என்பன எல்லாமும் ஏதோவொரு தகவலைச் சொல்லும்தானே? மேலும், ’சமத்துவம்’, ’பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள்’ என்பதெல்லாமும் அதிலிருந்துதானே நிலைநாட்டப்பட வேண்டும். இதுதானே அமெரிக்க நடைமுறை? ஆக, அமெரிக்க நடைமுறை குறித்தான அறிவுப்புலம், உகந்த சிந்தனை இருந்தால்தான் இதைச் சுட்டவே முடியும். அறியாதோர் டெம்ப்ளேட் கருத்துகளைத்தான் கொடுப்பர்.

2. “நாங்கெல்லாம் அவரை அமைப்பிலிருந்து ஒதுக்கி வெச்சிருக்கோம். பாத்து நடந்துக்குங்க”

இப்படியான கருத்து வெளிப்படுமேயானால், அது சட்டப்படிக் குற்றம். வெளிப்படுத்துபவர் மேலாதிக்கத்துடன் இருக்கின்றார் என்பது பொருள். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய இடத்திலே இடம் பெறும் பெரும் கேடு என்பது பொருள். ஏனென்றால், மனிதர் எல்லோரும் வாழப்பிறந்தவர்கள். தவறே செய்திருந்தாலும், திருத்தப்பட்டு அரவணைக்கப்பட வேண்டியது சக மனிதனின் கடமை.

இவற்றையெல்லாம் பொது வெளியில் எழுதும் போது என்ன நடக்கும்? வாசிப்புத்தன்மை கொண்டோர் சிந்தைவயப்படுவர். எழுதப்பட்டிருப்பதில் குற்றம் குறை இருப்பின் சுட்டிக்காட்டுவர். தேவைப்படுகின்ற இடத்திலே பயன்படுத்திக் கொள்வர். திருத்திக் கொள்வர். வாசிப்பற்றோர் காழ்ப்புக் கொண்டு போலிகளாக வலம் வருவர்.

10/28/2022

பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-3

21. 85 பேர் ஈடுபட்டுக் கொடுத்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டக் கோரிக்கை விண்ணப்பம் ஏன் எடுத்துக் கொள்ளப்படவில்லை? பெண் துணைத்தலைவர் ஒருவர் இருந்தாரே அவரை நியமித்திருக்கலாம்தானே? ஏன் பொதுக்குழுக் கூட்டம் தனிக்குழுக் கூட்டம் போல நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது? செயற்குழுவினரைக் கூட காண முடியவில்லையே? இந்த வினாக்கள் விடுக்கப்பட்டன.

22. விண்ணப்பத்தில் இருந்தவர்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் கடப்பாடுகள் எட்டப்படும்படி இல்லை என்பதாகச் செயலாளர் விடையளித்தார். பின்னர் தலைவரும் இதுகுறித்துக் கூடுதல் பணிகள் செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

23. தாம் முன்னாள்தலைவரைத் தொடர்பு கொண்டு, பெண் துணைத்தலைவரை அந்த இடத்துக்கு நியமிக்கலாம்தானேயெனக் கேட்டதாகவும், அதற்கு அவர் தொடர்பு கொள்ள முயன்று, 10, 15 நாட்கள் ஆகியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் துணைத்தலைவரைக் கண்ட போது, மலையேற்றம் தொடர்பாகச் சென்றிருப்பதாகச் சொல்ல, முன்னாள் தலைவர் சொன்னது சரிதான் என்பதாக நினைத்துக் கொண்டதாகத் தலைவர் தெரிவித்தார். [இங்குதான் உண்மை அம்பலம் ஏறும் சம்பவம், இஃகிஃகி]

24. மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக, துணைத்தலைவர் அவர்கள் பேச விழைந்தார். ‘ஆமாம், அழைத்தார். என்னுடைய இடத்தில் இருந்து பணியாற்ற விருப்பமா என்று கேட்டார். நான் அதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்னேன். ஆனால் திடீரென விழாவில் புதிய செயற்குழுவை அறிவிக்கும் போது மாற்றுப் பெயரை அறிவித்தார். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.’. [மொத்தக் கூட்டமும் ஞே... ]

25. விழாக்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள் இடம் பெற அனுமதிக்கலாமா என்பது கேள்வி. அது அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்பதாகத் தலைவர் பதில் அளித்தார்.

கடைசியாகக் கூர்நோக்கர்கள் என்பதாக இருவர் தத்தம் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். அவை வழக்கம் போல, பொறுப்புச் சக்திக்கு ஏதுவான டெம்ப்ளேட் கருத்துகள். இஃகிஃகி. நாம் நம் கருத்துகளைச் சொல்லிக் கொள்வோமாக!

1. வினா விடை நேரத்தில் செயற்குழுவில் இருக்கும் மற்றவர்கள் பேசவே இல்லை. தலைவர், செயலர் மட்டும்தான் செயற்குழுவா? அல்லது, மற்றவர்கள் மட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனரா?

2. சகலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும், ஒதுக்கப்பட்ட நேரத்திலாவது அளவளாவ வேண்டும், அல்லது அனைவரும் பொதுத்தளத்தில் இருக்க வேண்டும். ரோல் கால் இடம் பெற வேண்டும். ராபர்ட் விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

3.கொடுக்கப்படும் வினாக்களை அப்படியப்படியே வாசிப்பதால் காலவிரயம். மேலாகப் பார்த்து புரிந்து கொண்டு, வினாவைத் தம் மொழியில் விடுக்க வேண்டும். இளையோர் நிகழ்வின் நெறியாளர் செய்தமையைப் போலே!

4.வினா விடை நேரத்தை செயற்குழுவுக்கு வெளியே இருக்கும்  பக்கச்சார்பற்றவர் நெறிப்படுத்த வேண்டும். ஆர்வலர்கள் எவராயினும் தங்கு தடையின்றிப் பார்வையாளராக இருக்கும்படி இருத்தல் வேண்டும்.

5. எவ்வளவு நேரமானாலும் உறுப்பினர்களின் வினாக்களை முடித்துத்தான் ஆக வேண்டும். கவுண்ட்டியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களையே அப்படித்தான் எதிர்கொள்கின்றனர்.

6. கடைசி வரைக்கும் அந்த மீட்டிங் மினிட்ஸ், பணம் திரும்பக் கணக்குக்கு வந்த தேதி உள்ளிட்ட சில முக்கியமான வினாக்களுக்கு சரியான விடை கொடுக்கப்படவே இல்லை. திசைதிருப்பு முகமாகத் தனிமனிதத் தாக்குதல் என்கின்ற அறதப்பழைய டெக்னிக்கையே கையாண்டார் முன்னாள் தலைவர். அல்லது, இந்நாள் தலைவரின் பொத்தாம் பொதுவான சமாளிப்புகளே இடம் பெற்றன.

(முற்றும்)







பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-2


11. 'கேள்வி கேட்கலாமா? ஒரு மில்லியன் டாலர் குடுத்திட்டுத்தான் கேக்கணுமா??’ எனும் முன்னொட்டுக் கேள்வியோடு ஒரு பொதுக்குழு உறுப்பினர் தமக்கான நேரத்துக்குள் நுழைந்தார்.  இன்றைய பொதுக்குழுவின் ஆகச்சிறந்த வினாவாக நான் இதைக் கருதுகின்றேன்.  அமெரிக்க நாட்டின் விடுதலைப் பிரகடன வாசகம் என்ன தெரியுமா?  ”all men are created equal”. முன்னாள் தலைவரின் அடிமுட்டாள்த்தனமான, பேரவையின் மாண்புக்கே வேட்டு வைக்கக் கூடிய ஈனச்செயல்தான் இந்த வினாவுக்கான தேவையை விதைத்திருக்கின்றது. 

12. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டுமானால் இன்னமும் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. எலக்ட்ரானிக் ஃபார்ம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

13. முன்னாள் தலைவர், என் இடத்துக்கு இவர்தாம் என்பதை செயற்குழு உறுப்பினர்களிடத்தில் உறுதி வாங்கிக் கொண்டபிறகுதாம் விலகிக் கொண்டார் என்பது சரியாகப்படவில்லை எனத் தன் கருத்தாகப் பதிவு செய்து கொண்டார் உறுப்பினர்.

14. முன்னாள் தலைவர் எனும் இடத்தில் துணைத்தலைவராக இருந்தவர்களிலும் ஒரு பெண்மணி இருந்தாரே, அவரை அந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம்தானே என வினவப்பட்டது.

15. இளையோரைச் செயற்குழுவில் சேர்க்கப்பட்டது சிறப்பு. இன்னும் பத்தாண்டுகளில், வட அமெரிக்காவில் பிறந்தவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டது. [அது ஈடேற வேண்டுமானால், சுயவிளம்பரத்தன்மை இல்லாமல் வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும்].

16. சங்கங்களின் உழைப்பு, பணத்தைக் கொண்டு விபரீத முதலீட்டு விளையாட்டுகளில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் தனிமனிதர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனும் கருத்து பதிவு செய்யப்பட்டது. முன்னாள் தலைவரின் ஏகபோகப் பேச்சு, தனிமனிதத் தாக்குதல் போன்றவை முறையிடப்பட்டது.  தமக்கு அப்படியான எண்ணம் எதுவுமில்லையென முன்னாள் தலைவர் தன் கருத்தாகப் பதிவு செய்தார்.

17. பணத்தை முன்னிறுத்தாமல், தன்னார்வலர்களின் உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தண்மை போற்றப்பட வேண்டும். ஏகபோகப் பேச்சுக்கு கண்டனம் என்பதாகப் பதிவு செய்து, செயற்குழுவில் இருக்கும் இளையோர் நடத்தைக்குப் பங்கம் நேராத வகையில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டது.

18. தமிழ்ச்சங்கங்களைப் புறந்தள்ளி விட்டு, பேரவையே பொதுமக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் போக்கு கைவிடப்பட வேண்டும். தமிழ்ச்சங்கங்களுக்கு பைலா அமைத்துக் கொடுப்பது முறைப்படுத்த வேண்டும். ஃபெட்னா மேடையில் தலைவரே ஏகபோகமாக நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பன பதிவு செய்யப்பட்டது.

19. நியூயார்க் விழாவில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் தலைவர், தாமதமாக வந்ததாகவும் பேரவை முன்னோடிகளை அவமதித்ததாகவும் தகாத உடல்மொழியுடன் செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது 1 மில்லியன் டாலர் கொடுத்த கொடையாளரைப் பற்றிச் சொல்ல முடியாத நிலை இருந்ததாகவும் அதற்கான காரணத்தையும் தலைவர் பதிவு செய்தார்.

20.வாழ்நாள் உறுப்பினர்தாம் சட்டப்பணிகளுக்கு அமைப்பை இட்டுச் சென்றிருக்கின்றார் என்பது தவறு. முதன்முதலில், செயற்குழுதாம் சட்ட வல்லுநரின் கருத்துரைப்படி என்பதாக எல்லாப் பேராளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியது என்பது பதிவு செய்யப்பட்டது.

(தொடரும்)


பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-1

1.திருவாசகத்தின் மீது கைவைத்துப் பேசுவதாக நினைத்துக் கொள்ளவும். பொய், புரட்டு பேசுவதால் எனக்குக் கிடைக்கப் போவது எதுவுமில்லை.

2. கூட்டத்தில் அறநெறிக் கோப்பு காண்பிக்கப்பட்டு, நாகரிகமாக, பண்பாட்டுடன் செயற்பட அறிவுறுத்தப்பட்டது.

3. செயற்குழுவால் பணிக்கப்பட்ட முன்னாள் தலைவர் பேசியது, சுயவிளம்பரம், பொய், புரட்டு, தனிமனிதத்தாக்குதல், வன்மம் மிக்கது. அனுமதித்த செயற்குழுவின் செயல், ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள்கோவில்’ என்பதாக இருந்தது. 

4. காப்பீட்டுடன் பணம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது அமைப்புவிதி. சுட்டிக்காட்டியவுடன், தலைவர் சொன்னது, “fdic insured எனப் பார்த்தமாரி எனக்குத் தெரியலை.”. by-law: The bank or the trust company in which the Federation’s account is opened and maintained must be an insured one. வினா எழுப்பிய முன்னாள் தலைவர் FDIC Insured எனக்குறிப்பிட்டார். சொல்ல வந்தது காப்பீடு குறித்து, சிறுகுழப்பம்.

5. ”பைலால எங்க இருக்குங்ணா” ”பணம் கொண்டு வந்தவங்களுக்கும் கொண்டு வராவதுங்களுக்கும்... பணம் கொண்டு வந்ததைப் பாராட்ட ஆட்கள் இல்லை. ஆனா கேள்வி கேட்க வந்துட்டாங்க. கேள்வி கேட்கும் நீங்கள், எவ்வளவு பணம் திரட்டினீங்கன்னு யோசிச்சுப் பாருங்க. நீங்கதா நிதிதிரட்டும் குழுவில் இருந்தீங்க”, முன்னாள் தலைவரின் பேச்சு. இவர் என்ன சொல்ல வருகின்றார்? கொண்டு வந்த பணத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேள்வி கேட்கக் கூடாது என்கின்றாரா? தொடர்ந்து தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட முனைவதின் நோக்கம் என்னவோ?  ’மணி லாண்டரிங்’ என்பதன் அடிப்படை அறிந்தோர் எவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. அமைப்புக்குத் தொடர்பே இல்லாத வரிசெலுத்துநருக்கும் கூட.

6. ”ஒப்புதல் வாங்கிட்டு செய்யுங்க என்பதுதான் எங்கள் கருத்து. பைலா எங்க இருக்குன்னு நீங்க போயிப் பாருங்க. பார்க்காமலே செய்துட்டு, அதை நீங்க எங்ககிட்டக் கேட்காதீங்க”, வினா விடுத்த முன்னாள் தலைவர்.

7. மின்னஞ்சல்கள் அத்துமீறிப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுடன் கூடிய கேள்வி. சைபர் செக்யூரிட்டிக்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. இரண்டையும் ஏன் முடிச்சுப் போடுகின்றனர் எனத் தெரியவில்லை. பொது அமைப்பு என வந்து விட்டால், விபரங்களும் பொதுதான். நான் வாக்காளன் என்கின்றபடியாலே, என் வீட்டு முகவரி உட்படப் பலதும் அரசாங்கமே பொது வெளியில்தான் போட்டு வைத்திருக்கின்றது. அமைப்பின் பல்வேறு குழுக்களில் பணியாற்றியதன் நிமித்தம் 3000+ மின்னஞ்சல்கள் என்னிடம் உள்ளன. இஃகிஃகி, அவற்றிலிருந்து எப்படியும் ஒரு 500+ தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை நான் சேகரம் செய்யலாம். சின்னப்புள்ளத்தனமான கேள்வி. why don't you open up the same groupid to all delegates? Dare to be democratic and transparent.

8. பொது அமைப்புகள், பணி என வந்து விட்டால் காட்டமான, கேலிக்குரிய மின்னஞ்சல்கள் வரத்தான் செய்யும். குடியரசுத் தலைவருக்கு நடுவிரல் காட்டிய நாடு அமெரிக்கா. அதற்காக, பொதுப்பணியில் இருப்போரும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதுமில்லை. அது கண்டு வெகுண்டெழவும் தேவையில்லை.

9. ’புதுசா வர்றவங்களை அச்சுறுத்தும் விதமா கேசு போட்டு ஏன் பிரச்சினை செய்யுறீங்க?’ என்பது கேள்வி. சின்னப்புள்ளத்தனமான கேள்வி. கேசு போடுவது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அவருக்கு அமைப்பின் மேல் அக்கறை இல்லைன்னு நீங்க எப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? Just go, learn what fiduciary duty and whistleblower is. ஏன் கேசு போட்ற அளவுக்கு செயற்குழு நடந்துக்குதுன்னு கேட்கலாமே?!

10. ’பொதுக்குழுக் கூட்டமா அல்லது அரசியற்கூட்டமா இது? ஒரே சுயவிளம்பரமா இருக்குது? இன்சூரன்சுன்னாலே FDICங்றதுதானே? நாங்களும் எங்க நேரத்தை, பணத்தைச் செலவுதான் கடந்த 35 ஆண்டுகளாக அமைப்பை நடத்திட்டு வர்றம்.’, நிறுவனத்தலைவரின் கருத்து.

தொடரும்...


மரபுகள்

தமிழ்க்கணிமைத் துறையில் ஓர் ஆசிரியர் வேண்டுமானால், நான் உயர்திரு மணி மணிவண்ணன் அவர்களையே கோருவேன். அவருடனான நட்பு, மதிப்பு என்பது 2008ஆம் ஆண்டு துவக்கம் உருவானது. இணைய வெளியில் என் எழுத்துகளைப் படித்து விட்டு, தவறுகள் இருப்பின் மிக உரிமையோடு வந்து திருத்துபவர். மிக அணுக்கமானவர். ஒருமுறை கூட நேரில் பார்த்ததுமில்லை; பேசிக் கொண்டதுமில்லை. நேற்று ஒரு மின்னஞ்சல். வழமையான தொனியில் இருந்து, சற்று மாறுபட்டதாக இருந்தது. எனக்குப் புரிந்து விட்டது. அவருடைய மாறுபட்ட பாங்கிற்கு என்ன காரணமெனப் புரிந்து விட்டது. ’மன்னிக்க வேண்டும்; பொறுத்தாற்றவும்’ எனப் பதில் எழுதினேன். பின்னர் அலைபேசியில் அழைத்துப் பேசவும் செய்தேன்(முதன்முதலாக).

அண்ணனும் தம்பியும் பேசிக் கொள்வது போன்ற உணர்வு. ’புரிகின்றது. ஆனால் அடுத்தவர் வேறுவிதமாக எடுத்துக் கொள்வர்’ எனச் சொல்லி, நுணுக்கமான பல தகவல்களையும் அக்கறையோடு பகிர்ந்து கொண்டார். பேரவைப் பொதுக்குழு துவங்கி விட்டதென்கின்ற காரணத்தினாலே, ‘அண்ணன், எனக்குக் கூட்டம் இருக்கின்றது’ எனச் சொல்லி அழைப்பை முடித்துக் கொண்டேன். அவர் பகிர்ந்ததிலிருந்து:

”இந்தியாவில் சட்டக் கோப்புகள் ஏராளமான முறை திருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சட்ட சாசனத்தின் தோற்றுவாய் என்பதான பிரிட்டிசு சட்டக் கோப்புகளாகட்டும், அமெரிக்கச் சட்டங்களாகட்டும் குறைவான முறையே திருத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. என்ன காரணம் தெரியுமா?”

”சொல்லுங்க அண்ணன்”.

”அவர்களெல்லாம் மரபு/அறம் எனும் பண்பாட்டுக் கட்டமைப்பின் மீது, சட்டங்களை வைத்துச் செயற்படுபவர்கள். மரபு அறம் பிறழும்போது, அதையும் தவறாகவே கருதும் பழக்கம் அவர்களுக்கு இருக்கின்றது. நம்மிடையே அது இல்லை. ஆகவே ஒவ்வொரு சிக்கலைக் களையும் பொருட்டும், கோப்பினைத் திருத்தி, திருத்தி, திருத்தி, திருத்திக் கொண்டே இருக்கின்றோம்”

எனக்கு முகத்தில் அறைந்தாற்போல இருந்தது.  நுண்ணுணர்வுகள் இருந்தால்தான் இதன் வீச்சு, ஆழம், ஒருவருக்குப் புரியும். பொதுக்குழுவில் முன்னாள் தலைவர் மார்தட்டி, மார்தட்டி, மார்தட்டிப் பேசினார். மேட்டிமையும், சுயவிளம்பரமும் பொய்பித்தலாட்டமும், தனிமனிதத்தாக்குதலும் கலந்துதான். இவர் போன்ற பேர்வழிகள் அமைப்புகளிலே தலைவர்களாகும் போது, மேலே அண்ணன் சொன்ன மரபுகள், நுண்ணுணர்வுகள் பாழ்பட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை சமூகத்திற்கு.


10/24/2022

பொதுக்குழுத் தொடர்ச்சி

அண்மையில் நடந்த தமிழ்ச்சங்கத் தேர்தல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒன்று புரியும். பெரும்பாலான இடங்களில் 55 : 45 என்பதாக வாக்குகள் பிரிந்திருக்கும். என்ன காரணம்? ஒருவேளை ஒரு தரப்புக்கு 60+%க்கும் மேல் ஆதரவு இருக்குமேயானால் தேர்தலே வந்திருக்காது. இரு அணிகளும் கிட்டத்தட்ட வெற்றிக் கோட்டுக்கு அருகில் இருப்பதால்தான் தேர்தலே வருகின்றது.

வென்று பொறுப்புக்கு வரும் அணி இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். எல்லாத் துணைக்குழுக்களிலும் மாற்று அணிக்கும் வாய்ப்பளித்து ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டும். தலைவர்களுக்கு பரந்த மனம் இருந்தால்தான் இது சாத்தியம். ஆனால் நம்மவர்களுக்கு அது கொஞ்சம் பற்றாக்குறை. இஃகிஃகி.

பொறுப்பாளர்களின் தீண்டாமை, புறக்கணிப்பு, மேட்டிமைத்தனம் என்பது மாற்று அணியினரைக் கிளர்ச்சிக்குள் ஆழ்த்தி விடுகின்றது. என்ன கிடைக்கும் போட்டுச் சாத்தலாமென்பதும் நிலைபெற்று விடுகின்றது. ஒரு நல்ல தலைவர் என்ன செய்யலாம்?

கிளர்ச்சியாளர்களின் கொந்தளிப்பைத் தணிக்கும் முகமாக, அவர்கள் எழுப்பக் கூடிய பிரச்சினைகளை ஆய்ந்து, பேசி, பொதுத்தீர்வினைக் கண்டடைவதற்காக சாய்மனம் இல்லாதவர்களைக் கொண்ட குழுவை நியமித்து, அவர்களின் பொறுப்பில் விட்டு விடலாம். அவர்கள் முன்வைக்கின்ற தீர்வினை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டியதுதான். அதுதான் நல்ல தலைமைக்கு அழகு. ஆனால் இவர்கள், எவராயினும், they love only yes-manship. 

நாம் பெரும்பாலும் anti-establishmentதாம். ஏனென்றால் ஆதரவாக, நேர்மறை எண்ணங்களை மட்டுமே பேசுவதற்கு எத்தனை எத்தனையோ பேர். எதிர்க்குரல் எழுப்பச் சமூகத்தில் ஆட்கள் இராது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதுதான் நம் பணி என்பதாகக் கருதுகின்றோம். எடுத்துக்காட்டாக, 2016, 2018, 2020இலும் தமிழ் அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடந்தன. அதிகார வர்க்கத்தை விமர்சித்தே பங்காற்றினோம். எதிரணியாகக் களம் கண்டவர்கள் பாராட்டினர். சில பலர் வெற்றியும் கண்டனர். இன்று அவர்கள் அதிகார வர்க்கம். நம் இன்றைய பங்களிப்பானது அவர்களுக்குக் கசப்பானதாகத்தான் இருக்கும். இஃகிஃகி.

அமெரிக்காவில் இருக்கின்றோம். அமெரிக்க ஆட்சியமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கவனித்தாலே போதும். நம் அமைப்புகளும் வாழ்வும் செழிக்கத் துவங்கி விடும்.

10/23/2022

செயலாளர்

அமெரிக்காவில் ஏராளமான தமிழ் அமைப்புகள் உள்ளன. அவற்றின் வயது 50, 60 என்பதாகக் கூட இருக்கின்றது. நேற்று கூட, கலிஃபோர்னியா தமிழ்மன்றத்தின் செயலாளர் குறிப்பிட்டதாவது, “நாம 41 ஆண்டுகள் ஆனாலும், நாற்பத்து ஒரு, ஒரு ஆண்டு அனுபவத்தைத்தான் கொண்டிருக்கின்றோம்”. இதே போலத்தான் பெரும்பாலான அமைப்புகளும்.

நான் கரொலைனா தமிழ்ச்சங்கம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், சார்லட் பெருநகரத் தமிழ் அமைப்பு, சார்லட் தமிழ்ச்சங்கம், தென்மத்தியத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ் மையம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முதலானவற்றில் ஈடுபட்டுப் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். 2015ஆம் ஆண்டுகள் வரையிலும் தற்போது இருக்கும் பிணக்குகள் பரவலாக இல்லை, isolated incidents were there ofcourse. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர்தாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பரவலான ஒரு போக்கினைக் காண முடிகின்றது; வணிகம் ஊடுருவியதும் ஒரு காரணம். நாடளாவிய அமைப்பின் செயற்பாட்டு வீழ்ச்சியும் முக்கியமானதொரு காரணம். எல்லாரும் எல்லா ஊர்த் தமிழ்ச்சங்கங்களின் போக்கினையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், நாடளாவிய அமைப்பின் போக்கு எல்லாருக்கும் கவனிக்கப்படுவதாக இருக்கும்.

பல அமைப்புகளில், பல செயற்குழுக்களைக் காலங்காலமாகப் பார்த்து வருகின்றோம். வருவார்கள். தமக்குத் தெரிந்த மட்டிலும் வேலை செய்வார்கள். களைப்பாக உணரும் போது, போதுமென்கின்ற மனநிலையில் ஓய்வுக்கு ஆட்பட்டு விடுவார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அப்படி இல்லை. பொறுப்புகளுக்கு வருபவர்கள் அதிகார தோரணை, மமதை, தம் தரப்பு சொல்வது மட்டுமே சரி என்கின்ற தொனியில் செயற்படுகின்றனர். இவர்களுக்கு இப்படியான உணர்வு ஊட்டப்படுகின்றது.

பேரவையில் பொறுப்பில் இல்லாதிருந்த வேளையிலேயே, தன்னார்வலர்களைக் கையாள்வது எப்படியெனக் கையேடு எழுதுவதில் முனைப்புக் கொண்டு, எழுதி, அதைப் பயன்படுத்தியும் வந்தோம். இப்படியான operating manual for each role என்பதைக் கட்டமைத்து, தன் அமைப்பு எப்படியெல்லாம் அமெரிக்க விழுமியத்தைப் பரவலாக்குகின்றது என்பதுதான் நாடளாவிய அமைப்பின் வேலையாக இருக்க முடியும். ஆனால் அப்படியான அமைப்பே கேலிக்குரியதாக இருக்கின்றது. வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

மன்றச் செயலாளர் சொல்வது போல, ஒரு மின்னஞ்சல் வருகின்றது. இணை பெறுநர்களாக 50 பேர் இருக்கின்றனர். பார்த்ததும் சினம் கொள்ளக் கூடாது. அது அவர்களின் உரிமை. என்ன செய்யலாம்?

1. உடனே அதே உணர்வுடன் பதில் அளிப்பதும், அல்லது பதில் அளிக்காமல் நிராகரிப்பதும் மிக மிகத் தவறு. அறப்பணிக்குக் களங்கம் அது. மாறாக, ’கிடைக்கப் பெற்றேன்’, ‘செயற்குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்கின்றேன்’ எனும் பெறுகைமடலோடு நிறுத்திக் கொண்டு, கால அவகாசம் எடுத்துக் கொண்டபின் பதில் அளிக்க வேண்டும். தேவைப்படின், செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு பதில் கொடுக்கப்பட வேண்டும்.

2. மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு தணிந்த குரலில் பதில் அமைய வேண்டும்.  Focus again on coming out of the situation as the better communicator, and as a professional who refuses to engage in unnecessarily negative correspondence.

3.பேசுபொருள் குறித்து மட்டுமே பதில் அமைய வேண்டும்.

4. பதில் சுருக்கமாக அமைய வேண்டும்.

5. தவறுகளை ஒப்புக் கொள்வதில் தயக்கம் கூடாது. ’தங்கள் ஆலோசனைகளை, சுட்டிக்காட்டுதலைச் செயற்குழு கருத்தில் கொள்கின்றது, இனிவரும் காலங்களில் செயற்படுத்த முனைவோம்’ என்பதாக அமைத்துக் கொள்ளலாம்.

பேரவையைப் பொறுத்த மட்டிலும் இப்படியான மரபுதான் இருந்து கொண்டிருந்தது. தற்போதெல்லாம் மடல்களைக் கையாள்வதில் பெரும் வீழ்ச்சி.  இந்த அண்ணன்களின் மரபே தம்பிகளின் மரபாகவும், ஆங்காங்கே இருக்கும் தமிழ் அமைப்புகளின் மரபாகவும் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை! அவமானம்!!

reference: https://youtu.be/TVcFaLlcvdk


10/21/2022

வாசிப்பின் பயன்

தகவற்தொடர்புச் சாதனங்களால் சூழப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நொடியும் உங்களை அவை வந்தடைந்து கொண்டே இருக்கும். கணினி, செல்ஃபோன், டிவி, செய்தித்தாள், புத்தகம், விளம்பரப்பலகை, இசை, கலை இப்படிப் பல உருக்களில் ஏதோவொன்றை உங்களுக்குள் புகுத்த அவை படைக்கப்பட்டிருக்கின்றன. அதனை நாம் உள்வாங்குகின்றோம். புரிந்து கொள்ளப்படுகின்றது.

புரிதலில் மூன்று வகையான புரிதல்கள் உண்டு. நேரடிப்புரிதல் (literal), இடைவெட்டுப்புரிதல்(inferential), அறுதிப்புரிதல்(propositional) என்பனவாக.

நேரடிப்புரிதல்: சொற்கள், காட்சிகளைக் கொண்டு, யார், என்ன, எப்போது என்பதாகப் புரிந்து கொண்டு அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்வது. மேல்நிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.

இடைவெட்டுப்புரிதல்:  சொற்கள் நமக்குக் கடத்தும் உணர்வு, சொற்தேர்வு முதலானவை, சொல்லப்படாத ஒரு தகவலையும் உட்கொண்டிருக்கும். ஏன், எப்படி போன்ற வினாக்களுக்கான விடைகளைக் கொண்டு புரிந்து கொள்வது. இடைநிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.

அறுதிப்புரிதல்: ஏற்பட்ட மேல்நிலைப் புரிதலையும் இடைநிலைப் புரிதலையும் கொண்டு, தமக்குள் இருக்கும் அனுபவம், கூடுதல் தகவற்தேடல் முதலானவற்றைக் கொண்டு தெளிவான ஒரு முடிவுக்கு வருதல். இது தேடலுக்கும் நாடலுக்கும் வழி வகுக்கும்.

துவக்கப்பள்ளியில் நீங்கள் பார்க்கலாம். ரீடிங் லெவல் எனக் குறிப்பிடுவர். புரிதலின் கூறுகளைக் கொண்டு இவை தரம் பிரிக்கப்பட்டு இருக்கும். தற்போது ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம். நண்பர் ஒருவர் தகவற்துணுக்கு ஒன்றினைப் பகிர்ந்திருந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பெட்ரோல் விலை என்பது இன்னின்ன விழுக்காடு உயர்வு என்பதாகச் சொல்லி, கடைசி பத்தாண்டு காலத்தில் முன்னை விடக் குறைவாக 30% உயர்வுதாம் என்பதாக இருக்கும் அது. இதைக்கொண்டு புரிதலின் தன்மைகளை அறிந்து கொள்வோமாக.

கொடுக்கப்பட்ட சொற்களில் பொய், தவறு உள்ளதா? இல்லை. உள்ளதை உள்ளபடியே வாங்கிக் கொண்டால், அதுதான் தகவல். குறிப்பிட்டதன்படி கடைசி காலகட்டத்தில் 30% உயர்வுதாம். முன்னைவிடக் குறைவுதான். மேல்நிலைப்புரிதல்.

இந்தத் தகவற்துணுக்கு ஏன் பகிரப்படுகின்றது? எப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது, இந்தத் தகவலில் உள்நோக்கம் இருக்கலாம். ஆகவே இதை விட்டுத்தள்ளுவோமென்கின்ற புரிதல் ஏற்படுமாயின், அது இடைவெட்டுப் புரிதல்.

பெட்ரோல் என்பது எதிலிருந்து கிடைக்கின்றது? கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கின்றது. கச்சா எண்ணெயின் விலை என்னவாக இருந்தது?  2013ஆம் ஆண்டு பீப்பாய் ஒன்றுக்கு 98 டாலர் என்பதாக இருந்து, படிப்படியாக 2020ஆம் ஆண்டு 40 டாலருக்கு வந்து, தற்போது மீண்டும் அதே 98 டாலருக்கு வந்திருக்கின்றது. ஆக, தோராயமாக 50% விலை குறைக்கப்பட்டு, மீண்டும் 2013ஆம் ஆண்டு விலைக்கே வந்திருக்க வேண்டும். எனவே 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறைப்புக்கான 50%, உயர்வுக்கான 30%, என ஏறக்குறைய 80% விழுக்காடு உயர்வுக்கு ஆளாகி இருக்கின்றது பெட்ரோல் என்பது அறுதிப்புரிதலாக ஒருவர் கொள்ளலாம். இது ஆழ்நிலைப் புரிதல்.

Books were written to change the reader on some level.  Thinking about texts at various levels deepens the understanding of the text and aids in the reader understanding and growing from what they have read. வாசிப்பின் பயனை நாம் ஓரளவுக்கு அறிந்து கொண்டோம். நம் லெளகீக வாழ்வில், எந்த அளவுக்கு பாப்கார்ன் செய்திகளுக்கு ஆட்பட்டு ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

10/20/2022

நேர்மை

தமிழில் வாய்மை, நேர்மை, உண்மை, மெய் போன்று பல சொற்கள் உள்ளன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கின்றது தொல்காப்பியம். அதே வேளையில் ஒரு சொல் ஒரு பொருள் என்பதுதாம் மொழியின் அடிப்படை. ஆகவே நாம் சொல்லுக்கும் சொல்லுக்குமான நுண்ணிய வேறுபாட்டை அறிந்து செயற்பட வேண்டும். அல்லாவிடில் பொருள்மயக்கம், பொருட்சிதைவு என்பன தோன்றி, பொய், பித்தலாட்டம், புரட்டு, திரிபுகளுக்கு ஆட்பட்டு வாழ்வியலே அப்படியானதாக ஆகிவிடும்.

வாய்மை, வாய்ப்புக்கு இடமளிப்பதை மட்டுமே சொல்லுதல். நேர்மை, சொல்லவந்ததை ஒளிவு மறைவின்றி நேரிடையாகச் சொல்லுதல். மெய், நடந்ததை, இடம் பெற்றதை மட்டுமே சொல்லுதல். பொய், நடந்திராததை, இடம் பெறாததைச் சொல்லுதல். உண்மை, நடப்பில் உள்ளதை மட்டுமே குறிப்பிடுதல். இன்மை, நடப்பில் இல்லாததைக் குறிப்பிடுதல். வழக்கில், பொருட்களை இடம் மாற்றிப் புழங்குகின்றோம். அது, மொழிச்சிதைவுக்கே வித்திடும்.

தன் மனத்துக்கு அறிந்ததை ஒளிவு மறைவின்றி உகந்த மொழியில் சுற்றி வளைக்காமல் நேரிடையாகச் சொல்லுதலால் ஒருவர் பலரின் மனத்தாங்கலுக்கு உட்பட நேரிடலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். தொலைநோக்குப் பார்வையில் நேர்மையே ஒருவருக்குச் சிறப்பைத் தர வல்லது.

1.It shows a lot about your character

2.It makes your life easier

3.It makes you more reliable

4.It shows respect

5.It strengthens relationships

6.Your opinion earns value

7.It provides authenticity

8.It's an admirable trait

9.It may hurt other's feelings; but you end up doing more good than harm

10.It shows courage

11.It provides consistency

அறம்சார் அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை என்பது மிக அவசியம். அந்த வெளிப்படைத்தன்மைக்கு வித்தாக இருக்க வேண்டியது நேர்மை. இவை இல்லாதவிடத்து, தீங்கு நடந்தே தீரும். Murphy law states, "Anything that can go wrong will go wrong". நமக்கான பொறுப்புக்காலம் முடிந்து விட்டாலும், நாம் விட்டுச் சென்ற பழக்கங்களால் அமைப்புக்கோ அமைப்பின் பொறுப்பாளர்களுக்கோ தீங்கு நேரிடலாம். 

எடுத்துக்காட்டாக, செயற்குழு. செயற்குழு உறுப்பினர்களே நேரிடையாக ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்க முடியாது. அடுத்தடுத்த அணிகள், குழுக்களை நம்பித்தான் ஆக வேண்டும். ஆனாலும், ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், அதற்குச் செயற்குழுவே முழுப்பொறுப்பு. ஆக, ஒவ்வொரு செயற்குழு உறுப்பினரும் அமைப்பின் செயல்களில் நாட்டம் கொண்டு, மேலாண்மைப் பாங்குடன் தன்னிச்சையாகச் செயற்பட்டாக வேண்டும். குரூப்பிசம் கொண்டு செயற்படும் போது, கண்கள் மறைக்கப்பட்டு விடும். இது அமெரிக்கா. கோர்ட்டில் வந்து தூக்கிவிட அண்ணன்களால் இயலவே இயலாது!

10/15/2022

குழுவாதம்

பிரச்சினைகளின், முன்னெடுப்புகளின் அடிப்படையில் திரள்வது அணி(team). தனிமனித விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையிலோ, பணம், புகழ், முன்னுரிமை போன்ற ஊக்குவிப்புகளின் அடிப்படையிலோ சேகரம் செய்யப்படுவது குழு.

நுண்ணிய வேறுபாடுதான். அந்த நுண்ணுணர்வுதான் மனிதனுக்கு அவசியமானது. அதை வார்த்தெடுப்பதுதான் இலக்கியத்தின் வேலை. அது குறித்துப் பேச வெளிக்கிட்டால் விடிந்து விடும். ஆகவே பேசுபொருளுக்குள் வந்து விடுவோம்.

கடந்த வாரத்தில் சில பலருடன் பேசினோம். நண்பர் ஆவேசமாகப் பேசினார். பழைய ஆட்கள், ஆய், ஊய் என்றெல்லாம் கொந்தளித்தார். இது ஸ்டீரீயோடைப்பிங், டிஸ்கிரிமினேசன் அல்லவாயென்றேன். ’இல்லவே இல்லை’ என்றார். ’சராசரியை விட உயரம் குறைவானவர்தானே?’ ‘ஆமாம், இப்ப அதுக்கென்ன?’ ‘அப்ப, கூழ குடியக் கெடுக்கும்; குட்டைக்கலப்ப உழவக் கெடுக்கும் என்பதுவும் சரியா?’ ’நீங்கள் பர்சனலாக அட்டேக்’ என்றார். நான் ஒன்றுமே பேசவில்லை. ஒரு இடைவெளி நேர பேச்சின்மைக்குப் பிறகு, ‘சாரி, பழமை’ என்றார்.

யாரொருவர் பொத்தாம் பொதுவாகப் பேசுகின்றாரோ, அவர் குழுவாதத்தில் அகப்பட்டு சுயமிழந்தவர். யாரொருவர் பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசுகின்றாரோ அவர் அணிவாதி, தன்னிலையில் கோலோச்சுபவர்.

10/14/2022

எதிர்க்குரல்

அறிவார்ந்த சமூகம் எப்போதும் எதிர்க்குரல்களை வரவேற்றே வந்துள்ளது. $75 பெற்றுக் கொண்டு, வந்தோருக்கு உட்கார்ந்து உணவு உண்ணக்கூடிய வசதிகளைக் கொண்டிருத்தல், இணையரங்குகள் நடத்தப் போதுமான இடம் கொண்டிருத்தல்,  இப்படியான இடத்தில் விழா நடத்துவதென்பது அமைப்பின் கொள்கையாக இருந்து வந்த நிலையில், $5 மட்டுமே கட்டணமென அறிவிக்கப்பட்டது. 2018. இது அநீதி என்றோம். ஏன்? அடுத்த ஊர்க்காரர்களால் இப்படியான கட்டணத்தில் விழா நடத்த முடியுமா? இன்னின்ன வசதிகள் இருக்குமிடத்தில்தான் விழா நடத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்ட ஊர்க்காரர்கள் இளப்பமா? எல்லா ஊர்களுக்கும் பொதுவான அமைப்பு என்பது, எல்லாருக்கும் பொதுவாக ஒரே கொள்கையைத்தானே கொண்டிருக்க வேண்டுமென்பதெல்லாம் நம் குமுறல்கள். பதிவைப் படித்தோர் சிலர் சென்று முறையிடவே, $25 என்பதாக ஆக்கப்பட்டது. ஆனாலும் மேற்படி வசதிகள் அற்றுத்தான் விழா நடந்து முடிந்தது. நட்டத்திற்கும் ஆட்பட்டது.

அதிகார வர்க்கத்தில் இருப்போரின் எதேச்சதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் சமூகத் தொண்டுதான். Studies show that blowing the whistle poses a risk for the person disclosing the information due to the psychological prejudice people have towards whistleblowers. மக்களின் ஒவ்வாத பார்வைக்கு ஆட்படுவர்தாம். ஆனாலும் அதை அவர்கள் செய்துதான் ஆக வேண்டும். இந்த உலகம் சீரான நிலையில் இயங்க வேண்டுமாயின், செக் & பேலன்ஸ் என்பது அவசியம். அப்படியான சீர்நிலையின் அச்சாணிதாம் எதிர்க்குரல்கள்.  Be the same person privately, publically and personally.

A whistleblower is a person who reveals information about activity within a private or public organization that is deemed illegal, immoral, illicit, unsafe or fraudulent. 

What is a Whistleblower Policy?

A whistleblower policy protects individuals who risk their careers to report unethical or unlawful practices within an organization.

Such a policy improves governance and accountability by giving the organization’s management and board of directors opportunities to learn of unethical or unlawful practices directly from their employees and volunteers and to respond with prompt corrective action.

Every tax-exempt organization should strongly consider establishing a written whistleblower policy for at least three reasons.

1 Establishing a whistleblower policy is a proactive response to the IRS’s increased interest in good governance policies.

2. Protecting whistleblowers is an essential component of an ethical and open work environment.

3. A written whistleblower policy that is vigorously enforced sends a message to the organization's board members, managers, employees and volunteers as well as to the IRS and the public that the organization will not tolerate misconduct. source: https://www.lawhelp.org/files/7C92C43F-9283-A7E0-5931-E57134E903FB/attachments/B2D746C6-B926-A6C3-DC91-9D2D7233A7AA/whistleblower-policy-alert-2017-update-final.pdf

10/09/2022

செயற்குழு/பொதுக்குழு உரிமைப்பாடுகள்

1. தீர்மான எடுப்பு - இடைமறிப்புக்கு இடமில்லை - பெரும்பான்மை ஓட்டு

2. பேச்சை இடைமறித்து தொடர்பான தகவல் கேட்பது - தனி உறுப்பினர் உரிமை (point of information)

3.பேச்சை இடைமறித்து விதிமுறை மீறலைச் சுட்டிக் காண்பிப்பது - தனி உறுப்பினர் உரிமை (point of order)

4. குரல் ஓட்டுகளின் எண்ணிக்கை மெய்ப்பிப்பு கோருவது - தனி உறுப்பினர் உரிமை (call for division)

5. பேச்சை இடைமறித்து, இரைச்சல், ஒலி மந்தம் முதலான வசதியின்மையைச் சுட்டுவது - தனி உறுப்பினர் உரிமை (point of privilege)

6. தீர்மானத்தை இடை வெட்டுவது/நிராகரிப்பது - தலைவர் உரிமை (procedure objection)

7.தலைவர் நடவடிக்கையை செயலிழப்புச் செய்தல் (overrule the chair's ruling) - பெரும்பான்மை ஓட்டு

8. கூடுதல் நேரம் நீட்டிப்பு (extend the allotted time) - 2/3 ஓட்டு

9. விவகாரமான ஒன்று குறித்த இடைவெட்டுத் தீர்மானம் (point of objection) - 2/3 ஓட்டு

10. இன்னபிறவற்றுக்கு (other actions) - பெரும்பான்மை ஓட்டு

[தமிழ் அமைப்புகளின் கூட்டங்களில் இந்த நெறியை நிலைநாட்டுவது யார்? அவரவர் அறம், மனச்சாட்சிதான். குறிப்பாக தலைவரின் அறம். ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்துக்கா சென்று கொண்டிருக்க முடியும்? இஃகிஃகி!]

https://www.boardeffect.com/blog/roberts-rules-of-order-cheat-sheet/


10/08/2022

கொடை

1. பெருத்த கொடையைப் பெற்றுக் கொடுத்தவர், அவர் எவராயினும் பெருத்த பாராட்டுதலுக்கு உரியவராகின்றார்.

2. பெரும்பணம் வந்த இடம், சென்ற இடம், இவையிரண்டும் முக்கியமானவை. ஏனென்றால் தத்தம் அமைப்பு layering cake என்பதாக இருந்துவிடக் கூடாது. https://alessa.com/blog/3-stages-of-money-laundering/ ஆகவே அவை அவ்வப்போது முறையாகத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். செயற்குழு தவறிவிட்டது.

3. பொதுக்குழு கோரமின்மை, காலத்தாழ்ச்சி, விடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையின்மை, தனியார் அமைப்பில் முதலீடு என்பதெல்லாம் குழப்பத்தை, ஐயத்தை மேலும் கூடுதலாக்கி விட்டது.

4. சில வாழ்நாள் உறுப்பினர்கள், குறிப்பாகச் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்கும் மூத்த வாழ்நாள் உறுப்பினர் அவர்கள் சட்டவிதிகளை மேற்கோள் காட்டி, செயற்குழுவின் செயல் விதிமீறல், பிறழ்வு எனச் சொல்லி, செயற்குழுவைச் சரியான பாதையில் திருப்பி விட்டமை பெருத்த நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகின்றது. Mail Dated: July 5, 2022.

5. சில வாழ்நாள் உறுப்பினர்களின் அறப்போர் நிமித்தம், பணம் மீண்டும் அமைப்பின் கணக்குக்கே திரும்பக் கொண்டு வரப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அவர்களின் சளைக்காத செயல் பாராட்டுக்குரியது. நல்லது, மகிழ்ச்சி.

6. இனியாவது, நேரம் தவறாமை, வெளிப்படைத்தன்மை முதலானவற்றை செயற்குழு கடைபிடிக்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களும் அமைப்பின்பால் பற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். 

10/07/2022

மேலடுக்கு உணர்வுநிலை

 காத்திரமான கருத்துகளை முன்வைக்கும் போது அதற்கான எதிர்வினைகள் வருவது இயல்பு. மாற்றுக் கருத்து வைக்கப்படலாம். தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடை அளிக்க முற்படலாம். தொடுக்கப்பட்ட வினாவின் உண்மைத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கலாம். ஆனால்? இஃகிஃகி. பழமைபேசி என்பவன் யார்? எழுத்துலக ஜாம்பவான்களான ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், அகிலன் போன்றவர்களையே விமர்சித்து எழுதி, விமர்சகப்பிதாமகன் என வர்ணிக்கப்படும் வெங்கட் சாமிநாதன் அவர்களாலேயே, ‘பழமைபேசிக்கென்று ஒரு சமூக அக்கறை இருக்கின்றது; ஒரு பார்வை இருக்கின்றது’ என்று பாராட்டுப் பெற்றவன். https://madhavan-elango.blogspot.com/2015/02/34.html பேரவைச் செயற்குழுவுக்கான நம் கேள்வி இதுதான்.

தமிழ் இலக்கிய வட்டம் எனும் பெயரில் வாசிங்டன் டி.சி பகுதியிலிருந்து மாதமிருமுறை கூட்டம் நடக்கும். அதுவே பின்னாளில் பேரவையிடம், இலக்கியக்குழு எனும் பெயரில் கையளிக்கப்பட்டது. அப்படியான குழுவுக்குத் தலைவராக, ஆலோசகர்களாக சரியானவர்களைத்தான் பணித்திருக்கின்றீர்களா என்பதுதான். ஏனென்றால், அப்படியான பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு, சகிப்பும் நிதானமும் மிக மிக அவசியம். மேலடுக்கு உணர்வுநிலை(impulsive) கொண்டவர்களாக இருத்தல் ஆகாது.



10/06/2022

மாற்றம் அறியான் உரை

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;

தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,

மாற்றம் அறியான் உரை. [இன்னா நாற்பது 7]

சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர். அப்படியாகப்பட்ட காலத்தை முதற்சங்ககாலம், இடைச்சங்ககாலம், கடைச்சங்ககாலம் என்கின்றோம். அதற்குப் பிறகான காலம், சங்கம் மருவிய காலம் எனப்படுகின்றது. அப்படியாகப்பட்ட காலத்திலே, வாழ்வியற்கணக்குகளுக்காக 18 தனிப்பட்ட நூல்கள், வெவ்வேறு புலவர்களாலே கட்டமைக்கப்பட்டன. அதிலே அடங்கும் இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. அதைப் போன்றே இன்னா நாற்பது என்பதை இயற்றியவர் கபிலர். அதில் வரும்பாடல்தான் இது.

வலிமையில்லாதவன் கையிற்பிடித்த கருவி இனியதாய் இராது. மணமில்லாத மலரின் அழகு இனியதாய் இராது. தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை இனியதாய் இராது. அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் இன்பத்தைத் தராது.

words matter. சொற்களில் அறம் உள்ளது. சைவம்/அசைவம் என்கின்றோம்.  ஆக புலால் உண்போர் பின்னை என்றாகின்றது. புலால்/அபுலால் அல்லது கறி/அகறி என்று வைத்துக் கொள்ளலாம்தானே? இப்படி நுண்மையானதும் நுட்பமானதுமான உட்பொதிகள் சிறுகச்சிறுக ஏதோவொன்றைக் கட்டமைத்துவிடும்.

https://youtu.be/naCqfHDEAqE?t=3658

இந்தக் காணொலியைக் கண்டேன். இலக்கியக் கூட்டம், சிறுகதை எழுத்தாளர்கள் அறிமுகமும் நூலறிமுகமும் என்பது தெரியப்படுத்தப்பட்ட தலைப்பு. மகிழ்ச்சி. வரவேற்கத்தக்கது.

ஆனால் இடம் பெற்றதென்னவோ இலாவணிக்கூட்டம். எப்படி? சூம் வாயிலாக 23 பேர். யுடியூபில்  5 பேர் என மொத்தம் 28 பேர் நேரலையில் கலந்து கொண்டிருந்தனர். அந்த 28 பேரில் என்னுடைய உள்நுழைவு தலா ஒன்று. அது போக செயற்குழுவினர், எழுத்தாளர்கள் என்பதாக. 

பேசப்பட்ட நிறைய கருத்துகள் எனக்குத் தூக்கிவாரிப் போட்டன. இரண்டே இரண்டை மட்டும் சுட்டிக்காண்பிக்க விழைகின்றேன்.

பழைய தலைவர்கள் பெண்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்கப்படுவதில்லையென ஒரு பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் அப்படியான பெண்டிரே, விழா மேடையிலும் சரி, இப்படியான கூட்டங்களிலும் சரி, ’அண்ணா, அண்ணா’ எனக் குழைவது சகிக்கவில்லை. உங்களிடையே பாசபந்தங்கள் இருப்பின் மகிழ்ச்சியே. ஆனால், முறையான விழா, கூட்டம் போன்றவற்றில் ’பழமைபேசி அவர்களைப் பேச அழைக்கின்றேன்’ எனச் சொன்னால் போதாதா? இது உங்களது தனிப்பட்ட நிகழ்வன்று. அமெரிக்கத் தமிழினத்தின் பிரதிநிதியாகப் பேசிக் கொண்டுள்ளீர்கள். பெண்டிரின் ஒட்டுமொத்த தன்மானத்தையே அடகு வைக்கின்றீர்கள். இப்படியான கூழைக்கும்பிடுப் பண்பாட்டைப் பரவலாக்கம் செய்வதற்குத் துணை போகின்றீர்கள்.

அடுத்தது நண்பர் பேசுகின்றார். ’முன்பெல்லாம் தலைவர்களுக்கு வேண்டியவ்ர்கள் மட்டும்தான் கமிட்டிகளில் இருப்பார்கள். இவர் வந்துதான் தமிழ்ச்சங்கத்தினரும் கமிட்டிகளில்...’ என இலாவணி பாடுகின்றார். சார்லட் தமிழ்ச்சங்கத்தில் இருந்து இரு பேராளர்கள். இருவருக்குமே எவரையும் தெரியாது. பார்வையாளராகத்தான் அட்லாண்டா விழாவுக்குச் சென்றோம். ஒருவர் செயலர் ஆகின்றார். இன்னொருவர் பல பொறுப்புகளும் பெற்றுத் தலைவராகவே ஆகியதும் வரலாறு. இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு? இலக்கியம் என்பதே, கொந்தளிப்புகள் அற்றதும் பண்படுத்தப்படுவதுமான கலைதானே? இலாவணி பாடுவதென்றால், உங்களுக்கான தளங்களில் பாடிக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. 33 ஆண்டுகாலமாக உழைத்த தன்னார்வலர்களைக் கொச்சைப்படுத்த, அமைப்பின் கூட்டங்களையே பயன்படுத்திக் கொள்வீர்களா? இதுதான் இலக்கியமா? சட்டமன்றத்தில் அந்தந்த எம்.எல்.ஏக்கள் அவரவர் கட்சித் தலைவர்களைப் புகழ்வது போலே அமெரிக்காவிலும்?!

அருநவை

பாவமும் ஏனைப் பழியும் படவருவ 
சாயினும் சான்றவர் செய்கலார்;  சாதல் 
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் 
அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று. [நாலடியார் 295]

Yes, the road to freedom will be filled with inconveniences and sacrifices, but the rewards that lie ahead are still worth fighting for.

பள்ளிநாட்களிலேயே இதழ்களுக்கு எழுதி அனுப்புவதும் ஆவணப்படுத்தும் சிற்சிறு வேலைகளிலும் ஈடுபட்டு வந்த நமக்கு, இணையவாசல் என்பது இன்னமும் கூடுதல் வசதியாகிப் போனது. இணையத்திலும் 2005 துவக்கம் முனைப்பாக எழுதி வருகின்றோம். எழுதுகின்ற எழுத்தில் உண்மை இருக்க வேண்டும்; பொய், புரட்டு, திரிபுகளற்ற கருத்துகளே நம் கருவியாக இருத்தல் வேண்டும். சிற்றறிவுக்கு அப்பாற்பட்டுப் பிழைகள் நேர்ந்து சுட்டிக் காண்பிக்கின்ற தருவாயில் அவற்றைத் திருத்திக் கொள்ளும் மனப்பாங்கும் வேண்டும். அந்த நிலைப்பாட்டில்தாம் இயங்கி வருகின்றோம்.  

எழுத்துப்பணியென்பது ஒரு வேள்வி. எல்லா நேரமும் நம் எழுத்து வாசிக்கப்படுமெனச் சொல்லிவிட முடியாது. எல்லாருக்கும் பிடித்தமானதாக இருக்குமென்றும் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தொடர்ந்து தமக்கான விருப்பின்படி அறத்தோடும் கற்றுச்செயற்படுகின்ற தகவோடும் செயற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் பேரின்பம். ஏனென்றால், அறத்துடன் கூடிய எழுத்து சாகாவரம் பெற்றது. மொழி என்பது பெருமை பேசிக்கொள்ளவும் பணம் பண்ணுவதற்குமான ஒரு கருவி மட்டுமே அன்று. அது ஒரு இனத்தின் வரலாற்றைக் கட்டமைக்கவல்லது.

மேற்கூறப்பட்ட நாலடியாருக்கு வருவோம். பாவமும் ஏனைப்பழியும்கூடிய செயலை, சாவே வரினும் மனதறிந்து செய்யமாட்டார் சான்றோர். ஏனென்றால், காலமெல்லாம் நின்று இகழ்வைத் தரக்கூடிய பழிபாவத்தைப் போல அல்லாது, சாதல் என்பது ஒரே ஒருநாள் செயலே.

எழுத்து என்பதும் பொதுப்பணிதாம். நெஞ்சறிந்து, பொய், புரட்டு அல்லாமல் இருந்து விட்டால் பழிபாவத்தைச் சுமக்கத் தேவையில்லை. அறம்சார் பணிகளுக்கும் அது பொருந்தும். வேள்வியென்பதே மனம் தளராமல் இடம்பெறும் தொடரியக்கம்தான். போதுமான கவனம், ஈட்டு, புகழ்வெளிச்சம், விமர்சனம், அவதூறு முதலானவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. நேர்மையானதைத் தங்கு தடையின்றிச் சொல்லிக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும், நம்மை நம் மரணம் தழுவுகின்ற வரையிலும்.

எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம். 2022, ஏப்ரல் ஏழாம் நாள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைச் செயலருக்கு மடல் எழுதினேன். விழா வேலைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, இன்னின்ன வேலைகள் சிறப்பாக இல்லை எனச் சொல்லி எழுதியிருந்தேன். சில பலரை இணைபெறுநராகவும் சேர்த்திருந்தேன். அதில் ஒருவர் அழைத்துப் பேசினார். 2006ஆம் ஆண்டு சொதப்பியதைப் போலவே, இந்த ஆண்டும் சொதப்பத்தான் போகின்றார்களெனக் குறிப்பிட்டார். என்ன, இவர், இப்படிச் சொல்கின்றாரெயென நினைத்துக் கொண்டு கூகுளில் துழாவத் தலைப்பட்டேன். அப்போது கிடைக்கப் பெற்றதுதான் இந்தப் பதிவு. http://siragugal.blogspot.com/2006/07/2006.html இப்படித்தான் எழுத்துகள் காலத்தின் சாட்சியாக என்றென்றும் நிலைபெற்றிருக்கும். அவர் சொன்னதேதான் நிகழ்ந்ததென்பதும் நாமறிந்த ஒன்று.

எழுத்தில் தூய்மையும் பணியில் அறமும் ஓங்கச் சாவே வரினும் கவலைப்படோம்!

10/05/2022

மனனஞ்சான்

குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து

மனனஞ்சான் ஆகல் இனிது.

பூதஞ்சேந்தனார் இயற்றிய நூல் இனியவை நாற்பது. சொல்வளத்தையும் கடந்து, ஒவ்வொரு வெண்பாவும் எளிதிற்புரியும் படியாகவும் சிறுகதையை உட்கொண்டது போலவும் கட்டப்பட்டு இருக்கும்.

பாடல்களில் சொல்லப்படும் நுண்ணிய கருத்துகள், போகின்ற போக்க்கில் சொல்ல்ப்படுகின்றவை ’சென்சிடிவ்’ உள்ளம் கொண்ட எவரையும் தூக்கிப் போடும்.  சின்னஞ்சிறு குழந்தைகள் தத்தக்காபித்தக்காயென நடை போடத் துவங்கும் அந்த முதற்கணங்கள் அழகு. [மனத்தில் அந்தக் காட்சி விரியும் போதேவும் மனமெல்லாம் பரவசமாகின்றது]. அப்படியான குழந்தைகள் புரிந்தும் புரியாத விநோத மொழியொன்றில் பகர்வது அமிழ்தினும் இனியது (can you recall such gibberish and rejoice?). தீவினை செய்பவர்கள் மனம் நோகுமேயென, மனம் அஞ்சுபவராக ஆகாதிருத்தல் இனிது.

Poet is striking a balance between good and bad here. எப்படியாகப்பட்ட பேரின்பத்துடன் ஒப்பிட்டு, மனம் அஞ்சாமல் இருப்பதும் அதைப் போன்றதொரு இனிது என்கின்றார் பாருங்கள். அமெரிக்கப் பண்பாட்டில் இது மிக முக்கியமானவொன்று. ஏன்?

கண்களுக்குப் புலப்படாத ஒரு கூறு. அந்தக் கூறு, உங்கள் கல்வி, திறமை, புகழ், ஆற்றல் என இருக்கும் எல்லாவற்றையும் பதம் பார்த்து விடும். Gracious Professionalism and Coopertition.  It is described as a comfortable blend of knowledge, competition, and empathy. Coopertition is “displaying unqualified kindness and respect in the face of fierce competition.” தாங்களோ, தங்கள் குழந்தையோ கூட்டியக்கமாக ஒரு பணியைச் செய்ய விழைகின்றது. மற்ற அணிகளைக் காட்டிலும், சிறப்பான பயனீடு. ஆனாலும் அணி தோற்றதாக அறிவிக்கப்படுகின்றது. ஏன்? செயற்பட்ட, பணியாற்றிய பாங்கு பிழையானதாக இருந்திருக்கக் கூடும். சக மாணவர், சக தோழர் எப்படிக் கையாளப்பட்டார் என்பதெல்லாமும் இலைமறை காயாகக் கவனிக்கப்படுவது இந்த முறைமையில் அடக்கம். நாம் நுண்ணுணர்வு கொள்ள வேண்டும். பயனீட்டில் சில புள்ளிகள் குறைவு, ஆனால் பயணப்பட்ட பாங்கு சிறப்பானது, சிறப்புப் பரிசாவது வழங்குவர். என்ன அடிப்படை? நாம் மனிதர்கள். ஒவ்வொரு மனிதனும் தம்மைப் பார்த்துக் கொண்டேவும் அடுத்த மனிதன்மீதும் அக்கறை கொள்ள வேண்டுமென்பதே அதன் அடிப்படை.

நியூயார்க் நகரில் எட்டரை மணிக்குப் பொதுக்குழு. 85 வயதுள்ள மூத்த உறுப்பினர்களெல்லாம் வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சாவதனமாக ஒரு மணி நேரம் காலத்தாழ்ச்சியோடு வந்திருந்து, எருமை மேல் மழை பெய்தது போன்ற உணர்வுடன் எதுவுமே நடந்திராதது போலக் கூட்டத்தைத் துவக்க முனைவதெற்கெல்லாம் எப்படியாகப்பட்ட மதிப்பெண்கள் கிடைக்குமென யோசித்துப் பாருங்கள். இப்படியாகப்பட்ட ஒழுங்கீனங்களைச் சுட்டிக் காட்டிப் பணியாற்றுகின்ற மனனஞ்சான் ஆகல்தான் இனிது எனச்சொல்கின்றார் பூதஞ்சேந்தனார். சும்மா இலக்கியக் கூட்டங்களைப் போட்டுப் பயனில்லை. இலக்கியத்தின் பேரில் ஒழுக முற்பட வேண்டும் நாம்!

10/04/2022

நாளொரு பா

இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா

தும்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின்

நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்

மான முடையார் மதிப்பு.

வணக்கம். நாளொரு திருக்குறளோ, நாலடியாரில் ஒன்றோ வாசித்து வருங்கால், தமிழ்ச்சொற்களை அணிமையில்(quick reach out) வைத்திருக்கலாம். எல்லாமுமே புழக்கம்தானே? புழங்கப் புழங்க, சொற்கள் நினைவுகளின் மேலடுக்கில் இருந்து வரக் கிடைக்கும். சிந்தைப் பயிற்சியாகவும் அமையும். திருக்குறளில் பெரும்பாலும் முரண்கள் இருக்கப் பார்க்க மாட்டோம். ஆனால் நாலடியாரில் முரண்களை ஒப்பீட்டளவில் கூடுதலாகக் காணலாம். காரணம், சமணம் சார்ந்த சிந்தையைக் கொண்ட நூல். சொற்களின் தேவை கருதி வாசிப்பது நமக்கு இன்றியமையாததாகின்றது.

பொருள் கொள்வதற்கு முன் அடிகளை வரிசைப்படுத்திக் கொள்வது நலம் பயக்கும், இப்படியாக:

செம்மையின் நானம் கமழுங் கதுப்பினாய்

நல்ல பயத்தலால் இம்மையும் நன்றாம்

இயல்நெறியுங் கைவிடாதும்மையும் 

நன்றேகாண் மானமுடையார் மதிப்பு.

நல்ல நறுமணம் கொண்ட கூந்தற்பெண்ணே, நல்ல பழக்கங்களால் இப்பிறவியும் நன்றாகும். அப்படியான இயல்பானது மறுபிறவியிலும் உம்மைக் கைவிட்டு விடாது; நன்று காண்பதே அப்படியான மானமுடையாரின் மதிப்பு. தளை பிறழாமலிருக்க சொற்களைக் கட்டுவதால் பெண்ணுக்குச் சொல்வதாக அமைந்திருக்கின்றதேவொழிய, அனைவருக்குமானதுதான் நாலடியார். இதை வாசிக்கும் போது, தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளே நினைவுக்கு வருகின்றன.

அமெரிக்காவில் இயங்கும் பெரும்பாலான தமிழ் அமைப்புகள், தமிழ் வேட்கை, தன்னார்வம் முதலானவற்றால் இயங்குவன. அமெரிக்க விழுமியங்கள், சட்டதிட்டங்களின் மேல் செயற்படுவன அல்ல. அவ்வப்போது பொறுப்புகளில் இருக்கும் ஆர்வலர்களின் செயற்பாடுகளைப் பொறுத்து பயன்கள் அமையும். முரண்கள் அவ்வப்போது வந்து போகும். அவரவர் அடையாளம், நம்பிக்கை, விருப்பு வெறுப்பு முதலானவற்றின் பேரில் அணிகளாகச் செயற்படுவதும் இடம் பெற்றுவிடும். இங்குதான் தன்னார்வலர்கள் கவனமாக இருந்து விட வேண்டும்.

எழுகின்ற கருத்து வேறுபாடு (தாறுமாறு அல்லது பிரச்சினை) என்னவோ அதன் அடிப்படியில், தம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எது சரியெனப்படுகின்றதோ அதன் அடிப்படையில் கருத்துச் சொல்பவராக இருப்பது தொலைநோக்கில் நலம் பயக்கக் கூடியதாக இருக்கும். அணிகளின் ஒத்திசைவுக்கு ஒப்ப செயற்படுவது, நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடும். ஏனெனில் அணிகளின் தன்மை காலந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும். மின்னஞ்சல்களும், மின்னெழுத்துப் பதிவுகளும் காலாகாலத்துக்கும் சான்றுகளாக இருக்கும். உடன் இருந்து இயங்குபவரே நாளை எதிர்முகாமில் இருந்து கொண்டு அந்தரங்கங்களைப் பகிர்பவராக மாறக்கூடும். ஆகவே இந்த நாலடியார் பாடல் நமக்குக் கைக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. நல்ல பயத்தலால் இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடாதும்மையும் நன்றேகாண் மானமுடையார் மதிப்பு.


10/03/2022

நன்னெறி

நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது சரி பிழை ஆகிய கருத்துருக்களை முறைப்படுத்தி, பேணி, அவற்றைக் கைக்கொள்ளும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்வது. நன்னெறியின் முக்கியமான பண்பு "நல்வாழ்வு" என்பதாகும். பயனுள்ளதும், நிறைவு அளிப்பதுமான வாழ்வே நமக்குத் தேவையானதென்பதே பல மெய்யியலாளரது கருத்தாகும். மெய்யியலில், நெறிமுறையானது அழகியலின் நிரப்புக்கூறாகக் கருதப்படுகிறது. நெறிமுறை, மனிதர்களது நன்னடத்தை தொடர்பாகவும், ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது குறித்தும் ஆய்வு செய்கிறது. நெறிமுறை தொடர்பான ஆய்வுப் பரப்பை நான்காக வகுப்பர்.

மீநெறிமுறை

கடப்பாட்டு நெறிமுறை

பயன்பாட்டு நெறிமுறை

விளக்க நெறிமுறை

மனித ஒழுக்கம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் காண முயல்கின்றன இவை. நல்லது - தீயது, சரி - பிழை, நல்லொழுக்கம் - தீயொழுக்கம், அறம்-வழு ஆகிய கருத்துருக்களுக்கான விளக்கங்களைக் காண்பது இதன் நோக்கம். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம் இப்படியான நிறைய தமிழ் நூல்கள் நம் பண்பாட்டுச் சொத்தாக முக்காலத்துக்கும் இருந்து கொண்டிருக்கின்றன. சங்கங்களிலே இரு சாரார் உண்டு. இவற்றை எல்லாம் புகழ்ந்தோதி, உணர்வூட்டி உணர்வூட்டியே, சக தமிழர்களைக் குதூகலத்தில் வைத்திருந்து, அந்த மகிழ்வையே மூலதனமாக்கி, அவர்களின் உழைப்பையும் உடைமையையும் சுரண்டிக் கொள்வதென ஒருசாரார். செயற்பாட்டில் இப்படியான நன்னெறிகளெல்லாம் ஒழுகப்படுகின்றனவாயென வினவி வினவியே வில்லன்களாகச் சோரம் போவதென ஒருசாரார். அவதூறுதானேயென வினவுவதற்கு இடம் உண்டுதான். எனவே சற்றுப் பின் திரும்பிப் பார்ப்போம்.

தமிழ் இனம், மொழி, பண்பாடு, புலம்பெயர் மண்ணில் அடையாளத்தின் பொருட்டுப் பாதுகாப்பு முதலானவற்றுக்காக ஓர் அமைப்பு இன்றியமையாதது. ஆகவே அதற்கு வலுவூட்ட வேண்டுமென உணர்வு கொண்டு பணியாற்ற விழைவர் இளையோர். எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி, குடும்பத்துக்கான நேரத்தையும் கூட தன்னார்வப் பணிகளுக்காய்ச் செலவிட்டு உழைப்பர்தாம். இடும் பணிகளைச் செய்வதாகத் தம் பங்களிப்பைத் துவக்குவர். காலம் செல்லச் செல்லக் கொஞ்சம் கொஞ்சமாய் மேம்பாடு, பரவலாக்கம் என்பதாகத் தம் கருத்துகளையும் சொல்ல வெளிக்கிடுவர். அவற்றுள் சிலவற்றுக்குக் காது கொடுக்கப்படும். பலவற்றுக்குக் காதுகள் பாராமல் இருந்துவிடும்.

பாராமல் விடப்பட்ட கருத்துகளுக்காய் தலைநிமிரும் அந்த நொடியில்தான் எங்கிருந்தோ தீண்டிக் கொண்டிருந்த கோல்கள் தலையில் குட்டும். அந்த நொடியில்தான், இத்தனை நாளும் இந்தத் தீண்டியகோல்களுக்குத்தான் குற்றேவல் புரிந்து கொண்டிருந்தோமாயெனச் சிந்தை வசப்படுவர். அந்தநொடியில், இந்தப் பணியாளருக்கு மாற்றாக பல பணியாளர் ஆங்காங்கே இருப்பதுமென்பதும் தோன்றி விடும். பட்டியிலிருக்கும் இந்த ஆடுகள் விடுவிக்கப்பட்டு, புதுப்பாய்ச்சலுக்கான அடுத்த பட்டி ஆடுகள் பணிக்கப்பட்டிருக்கும். இத்தகு போக்கினை நீங்கள் எங்கும் காணலாம். கவனித்திருக்கவில்லையெனில், இனி நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

திரும்பிப் பாருங்களேன். ஏதோவொரு பட்டி. அந்தப் பட்டியில் இருந்த எத்தனை ஆடுகள், இன்னமும் அந்தப் பட்டியில் பணிபார்த்துக் கொண்டிருக்கின்றன? எதிர்வினா வினவுவதோ, இல்லையென ஓட்டுப்போடுவதோ செய்து பாருங்கள். புகழ்ந்த வாய்கள் மெளனிக்கும். மெளனித்த வாய்கள், ‘ஒதுக்கி வெச்சிருக்கோம்’ என்பது போன்றும் வினையாற்றும். கண்களுக்குப் புலப்படாச் சக்திகள், ஆங்காங்கே கண்காணித்துக் கொண்டுமிருக்கும். 

கருத்துகள் குறித்துப் பேசுங்களென சகதமிழர் இங்கே சொல்கின்றார். சகதமிழர் அவர்கள், பேசமாட்டார்கள். இப்படித்தான் மாமாங்கங்கள் பலவாகத் தமிழர்களின் வாய்கள் பூட்டப்பட்டிருக்கின்றன இங்கே! மார்ட்டின் லூதர் கிங், ஆப்பிரகாம் லிங்கனுக்குக் கூட புகழ்மாலை மட்டுமே நாங்கள் பாடலாம், பேசமாட்டோமென்பது அவர்களின் தலையெழுத்து. ஆனால் தலையெல்லாம் தமிழ்காக்கும் செருக்கு!

If the freedom of speech is taken away then dumb and silent we may be led, like sheep to the slaughter.-George Washington

-பேராசிரியர், முனைவர் பழமைபேசி.

[free stuff is available in USA]