கட்டுத்தறியில் சாணம் அகற்றி, அண்ணன் சீதனமாய் அனுப்பி இருக்கும்
கனகவள்ளியை இடம் மாற்றிக் கட்டிக் கொண்டிருந்தாள் சம்பங்கி. விருகல்பட்டிக்கு வாழ்க்கைப்பட்டு
பதினைந்து ஆண்டுகளானாலும், ஆறுக்குட்டி அண்ணன் தனக்காக இப்போது அனுப்பி வைத்திருக்கும்
கனகவள்ளியைப் பார்த்து சம்பங்கிக்குக் கடலளவு மகிழ்ச்சி. கனகவள்ளி காலடி எடுத்து வைத்த
இந்த ஆவணி மாதம் முழுதும் அவள் புறக்கொல்லையில்தான் அதிகம் வசிக்கிறாள்.
”இந்தா பெரீவளே பொற்கொடி! கெழக்க வெளுத்துத் திண்ணைக்கு வெயில்
சித்தங்கூரத்துல வரப் போகுது புள்ளை, எந்திரீங்க வெள்ளண்ண!!”, சம்பங்கியின் மாமியார்
தன் பெயர்த்திகளை விரட்டத் துவங்கினாள்.
“ஆத்தா, எனக்கு இன்னுந் தூக்கம் முறியலை ஆத்தா!”
“பெரியவ நீயே இப்பிடி விளங்காமக் கொள்ளாமத் தூங்குறியே? எளையவ
பூங்கொடி, எந்திரின்னா எந்திரிக்கவா போறா? ரெண்டும் பொட்டைகளாப் பெத்துப் போட்டுட்டு
உங்கம்மா எங்க போய்த் தொலைஞ்சாளோ? ஒரு வாய்க் காப்பித் தண்ணி கூட நாந்தாம் போட்டுக்
குடிக்கோணுமாட்ட இருக்கூ?”, அன்றைய புலம்பல் நல்லபடியாகவே துவங்கியது.
தன் மாமியாரின் குரல் கேட்டதும் அடுக்களைக்குத் திரும்பினாள்
சம்பங்கி. அடுப்பில் உலை காய்ந்து அரிசி வெந்து சோறு மகிழ்ந்து வந்து கொண்டிருந்தது.
துடுப்பால் கிளறி விட்டுத் துடுப்பில் ஒட்டியிருந்த ஓரிரு பருக்கைகளை எடுத்து வாயில்
போட்டுச் சுவைத்தாள்.
“இன்னும் பாதி வேக்காடு வேகணுமாட்ட இருக்கு?!” என நினைத்தவாறே
எரிந்து கொண்டிருந்த விறகுகளை ஒன்று கூட்டி உள்ளே நகர்த்தினாள். கண்ணடுப்பில் காய்ந்து
கொண்டிருந்த காப்பித் தண்ணியைக் கிண்ணத்தில் சற்று ஊற்றி, கருப்பட்டித் தூளையும் சேர்த்து
விளாவிக் கொண்டே தன் பார்வையை மேற்புறமாகக் கிடத்தினாள்.
மாலகோயில் மூலையில் தொங்கவிடப்பட்டிருக்கும் உறி ஒய்யாரமாய்
ஊசலாடிக் கொண்டிருந்தது அதிலிருந்த பால்க் குண்டாவை பதனமாய்க் கீழிறக்கினாள். பிறகு
காப்பித் தண்ணியோடு சிறுகப் பாலையும் சேர்த்தபின்னர், “இந்தாங்க அத்தை! காபி சூடாக்
கொண்டாந்து இருக்குறேன்!!” எனக் கூறியபடியே காப்பிக் கிண்ணத்தையும் குவளையையும் கொண்டுத்
போய் தன் மாமியாரின் அருகில் வைத்தாள் சம்பங்கி.
”ம்ம்… பெத்துப் போட்டிருக்குறது ரெண்டும் பொட்டைப் புள்ளைகளாப்
பெத்துப் போட்டுருக்குறா. விளங்குற கூறு அதிலிருந்தே விளங்குதே? எப்பப் பார்த்தாலும்
அந்தச் செனை மாட்டைச் சுத்தியே வந்தா, ஊட்டு வேலையெல்லாம் நேரத்துக்கு ஆரு பாப்பாங்களோ?
ஊட்டுக்குள்ள பொட்டைக்கன்னுகளாப் பெத்துப் போட்டுருக்குறா. அவ கொண்டாந்த மாடு என்னத்தை
ஈனப்போகுதோ? பொட்டைக் கன்னாவே ஈனுமா? நல்ல காளைக் கன்னாத்தான் போடப் போகுது அது! அதுக்குப்
போயி இந்த சீரும், சிறப்புமு??” தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள் மாமியார்க்காரியான
காட்டம்பட்டி தெய்வாத்தாள்.
காட்டம்பட்டி தெய்வாத்தாள் மிகவும் கண்டிப்பானவள், கெட்டிக்காரி,
வேளாண் தொழிலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்தவளெனப் பட்டி தொட்டியெல்லாம் பேசுமளவுக்குப்
பெயர் எடுத்தவள். தன் ஒரே மகனான மந்திரியப்பனுக்கு இரண்டு பேறும் பெண் மகவாக அமைந்து
விட்டதே எனும் அகங்கலாய்ப்பு அவளைத் தொடர்ந்து ஆட்\கொண்டிருந்ததன் ஒரு முகம்தான் அவளது
இப்போதைய புலம்பல்.
தெய்வாத்தாளின் மருமகளும் மந்திரியப்பனின் மனைவியுமான சம்பங்கி,
தெய்வாத்தாளை விட மிகவும் திறமைசாலி. விருகல்பட்டி கிராமத்தில், நெகமத்துப் பள்ளிக்குச்
சென்று மேல்நிலைப் பள்ளிப் பாடம் கற்ற ஒரே பெண்மணி இவள்தான். எதையும் பொறுமையாக எதிர்கொள்பவள்.
ஏழ்மை கண்டு துவழ்ந்து போகாதவள்.
”பொற்கொடி, பூங்கொடி, எந்திரிங்க கண்ணுகளா! எந்திரிச்சி பல்
துலக்கித் தண்ணி வாத்துட்டு வாங்க. எங்கூடத் தோட்டத்துக்கு வருவீங்களாமா? உங்கப்பா
அங்க பசியோட காத்திட்டு இருப்பாரு. எந்திரிங்க கண்ணுகளா!”, பிள்ளைகளை எழுப்பினாள் சம்பங்கி.
”அம்மா, நம்ம கனகவள்ளிய தோட்டத்துக்கு நாந்தான் ஓட்டியாருவேன்!”,
எந்நேரத்திலும் கன்று ஈன்றெடுக்கும் நிலையிலுள்ள சினை மாடான கனகவள்ளியைத் தானே ஓட்டி
வருவேன் எனச் செல்லமாய் உரிமை கொண்டாடுகிறாள் சம்பங்கியின் இளையமகள் பூங்கொடி.
வானம் பொய்த்து விளைச்சலும் பொய்த்தது. உப்பாற்று அணைக்கட்டுக்காகத்
தன் தோட்டத்துக்கு அண்மையில் ஓடிக்கொண்டிருந்த அரசூர் ஓடையிலும் முன்பு போலத் தண்ணீர்
பெருக்கெடுப்பது இல்லை. ஏன் என்று கேட்டால் அரசியல் என்கிறார்கள். இயற்கையாக ஏற்பட்டிருக்கும்
ஓடையில் தண்ணீர் வரத்து இல்லை. மாறாகச் செயற்கையாய் கால்வாய்கள் உண்டு செய்யப்பட்டு
மேலானவர்கள் எனக்கருதப்படும் பலர் இருக்குமிடங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு
விட்டது.
ஆண்டுக்கு மூன்று போகம் விளைச்சல் கண்டவன் மந்திரியப்பன். இன்று
ஒரு போக விளைச்சலுக்கே அல்லாடுகிறான். விபரமறிந்த மச்சான் மருதாசலம் தன் தங்கையின்
வீடு சிறப்பாக இருக்க வேண்டுமென, தன்னிடத்தில் இருக்கும் ஒரே சினைமாடான கனகவள்ளியைச்
சம்பங்கிக்குச் சீதனமாய் அனுப்பி வைத்திருக்கிறான்.
”கனகவள்ளி ஈன வேண்டும். அது கொடுக்கப் போகும் பாலை உள்ளூர் கூட்டுறவுச்
சங்கத்தில் ஊற்றிக் குடும்பச் செலவைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்” என்பதே
சம்பங்கியின் ஆசை. பெண் மகவாக, கிடாரிக் கன்றாக ஈன்றெடுத்தால் இன்னும் சிறப்பு.
சினைமாட்டை ஓட்டியபடி இளையவள் பூங்கொடி முன்பக்கமாய்ச் சென்று கொண்டிருக்க. சோத்துப்
போசியும் கம்பங்கூழ்க் கலயமும் வாகாய் வைக்கப்பட்ட பொட்டிக்கூடையைச் சும்மாட்டுடன்
தலையில் வைத்துப் பூங்கொடிக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தாள் சம்பங்கி. இவர்களுடன், பெரியவளான பொற்கொடி திருகணிச் சொம்பில் தன் தந்தைக்கான காப்பித் தண்ணியோடு என அனைவரும்
சென்று கொண்டிருந்தனர்.
கிராமத்தில் சொல்லப்படும் சொலவடையை நினைத்துப் புன்னகைத்தாள்
சம்பங்கி. அழகும் அன்புமாய்த் தனக்கு இரு பெண் பிள்ளைகள். ஊரே கேலி பேசுகிறது. ஆனால்
மாட்டுக்கான சொலவடை, “ஈனுறது கிடாரின்னா பட்டி பெருகிக் குடும்பம் தழைக்கும்!”.
சட்டென இறுகியது சம்பங்கியின் முகம். தன் அத்தை போடும் கூப்பாட்டுக்கு
ஏற்றாற்போல, “காளைக்கன்றுதான் கனகவள்ளி ஈன்றெடுப்பாளோ? அவ்வளவுதான், தன்கதி அதோகதி
ஆகிவிடுமே? ஆசை பொய்த்துப் போவது மட்டுமல்லாது, குடும்பம் விரிசல் கண்டு வாழ்க்கை இன்னுஞ்
சீரழியுமே??”, கவலை தோய்ந்து பெரும் இறுக்கத்துக்கு ஆளானாள் சம்பங்கி.
மனைவி மக்களைக் கண்டதும் முகில் விலகிய நிலாப் போல ஒளிர்ந்த
மந்திரியப்பன், “கண்ணுகளா வாங்கடா வாங்கடா… காலையில சோறுண்டீங்களாடா?”.
“ஆச்சுங்ப்பா… நீங்க சாப்புடுங்ப்பா, வயித்துப் பசியோட இருக்காதீங்க”,
பொற்கொடி குழைந்தாள்.
பசியாறிய பின்னர் மந்திரியப்பன் கடப்பாரையால் அருகு தோண்ட, தோண்டப்பட்ட
மண்ணை மண்வெட்டியால் வாங்கி, மண்ணில் ஊன்றியிருக்கும் அருகு வேர்களைக் கையால் களைந்தெடுத்துக்
கொண்டிருந்தாள் சம்பங்கி.
அருகில் இருக்கும் மேய்ச்சல் நிலத்தில் கனகவள்ளி மேய்ந்து கொண்டிருக்க,
பொற்கொடியும் பூங்கொடியும் வெங்கச்சாங்கல் பொறுக்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென மந்திரியப்பன் பெருங்குரலெடுத்து இரைந்தான். “சம்பங்கி,
போ, ஒடனே போயி கோம்பக்காட்டு மாறனைக் கூட்டியா போ!”.
அண்மையில் இருக்கும் பிறிதொரு தோட்டத்துச் சாளையை நோக்கி ஓடினாள்
சம்பங்கி.
இடக்கைப் பழக்கமுள்ள மந்திரியப்பன், தன் இடக்கையின் நடு விரலையும்
பெருவிரலையும் வளையமாக்கித் தன் வாயில் வைத்துச் சீட்டியடித்து அண்மையிலிருக்கும் ஆட்களை
வரவழைத்தான்.
நடப்பதையெல்லாம் பொற்கொடியும் பூங்கொடியும் விக்கித்துப் போய்ப்
பார்த்துக் கொண்டிருந்தனர்.
கனகவள்ளி இங்குமங்குமாய் அலைமோதினாள். முதலில் தலை வெளிப்படத்
தோன்றியது. கனகவள்ளியின் உடலனைத்தும் குறுகக்குறுக வெண்பனிக்குடத்தின் மேலாடையுடன்
தலை வெளிப்பட்டு, முன்னங்கால்கள் வெளிப்பட்டு, கடைசியாய்க் கீழே ”தொப்”பென
விழுந்து மண்ணை முத்தமிட்டது கன்று.
வெண்பனிக் குடத்தின் நீரும் மண்ணுமாக அப்பித் தரையில் கிடந்தது
இளங்கன்று. கனகவள்ளி தலையை மறுபக்கம் திருப்பித் தானீன்ற சேயைத் தன் நாவால் நக்கத்
துவங்கினாள். மெதுவாகக் கன்று தத்தித்தத்தி எழுந்தது. தன் பால்மடி நாடப்படுவதை உணர்ந்த
கனகவள்ளி, வாகாய் நகர்ந்து நின்றாள். தாயின் மடி முட்டிக் குடித்தது கன்று. அன்பொழுகத்
தன் மகவை இன்னும் நக்கிக் கொண்டிருக்கிறாள் கனகவள்ளி.
கணங்கள் பல கழிந்தன. கோம்பக்காட்டு மாறனின் தந்தையார் குரல்
கொடுத்தார். “முதல்ல பாலைக் கறக்கறது ஆரு? மந்திரீப்பா நீயே கறந்துரு!”,
“வேண்டாம்! வேண்டாங் மாமா, சம்பங்கிக்குனு அவிக அண்ணங் குடுத்ததுங்க.
சம்பங்கியே கறக்கட்டுமுங்க!!”, வாஞ்சையாய்த் தன் மனைவியை ஏறிட்டான் மந்திரியப்பன்.
கணவனுக்குச் சோறு கொண்டு வந்த சோத்துப் போசியில், கடும்பால் எனப்படுகிற சீம்பாலைக் கறந்தாள் சம்பங்கி. தோட்டத்துச் சாளையில் வைத்தே அடுப்பு கூட்டிச் சீம்பால் திரட்டும் தயாரானது.
கணவனுக்குச் சோறு கொண்டு வந்த சோத்துப் போசியில், கடும்பால் எனப்படுகிற சீம்பாலைக் கறந்தாள் சம்பங்கி. தோட்டத்துச் சாளையில் வைத்தே அடுப்பு கூட்டிச் சீம்பால் திரட்டும் தயாரானது.
காப்பிக்காகக் கொண்டுவரப்பட்ட கருப்பட்டித் தூளைச் சிறிதாகச்
சீம்பால்த் திரட்டின் மீது தூவி, அதைக் கலயத்தில் இட்டாள் சம்பங்கி. கலயத்தைத் தூக்கிக்
கொண்டு வீட்டை நோக்கி எழுச்சியோடு ஓடினாள் மூத்த மகள் பொற்கொடி.
”ஆத்தா, மாடு கன்னுப் போட்டுருச்சி! ஆத்தா மாடு கன்னுப் போட்டுருச்சி!”
“அடப் பெரியவளே மொல்ல வாடா! அடப் பாத்து மொல்ல வாடா!! ஆமா, என்ன
கன்னுப் போட்டுருக்குது?”
“நம்ம கனகவள்ளி கிடாரிக் கன்னுதாம் போட்டுருக்குது ஆத்தா. செவலையா
நல்லா இருக்குது. அவபேரு செவ்வந்தி!!”
குறிப்பு: வல்லமை இதழின் செப்டம்பர் மாத முதல் பரிசு பெற்ற கதை இது!! http://www.vallamai.com/literature/articles/26935/
குறிப்பு: வல்லமை இதழின் செப்டம்பர் மாத முதல் பரிசு பெற்ற கதை இது!! http://www.vallamai.com/literature/articles/26935/
4 comments:
கிராமத்துக்கவிதை..
ஊருக்கு போயிட்டு வந்தமாதிரி இருந்துசுன்கண்ணா...
Nanri namba
Sevanthi. en vettu ponnu..
Post a Comment