9/13/2012

மொளகாப் பத்து

எத்தனை நாள்தான்
கடத்திக் கொண்டிருப்பது?
இன்றைக்கு முடித்து
விட வேண்டியதுதான்!
முந்தைய நாள் இரவே
கடைசி வண்டி பிடித்து
ஆனைமலை போயாயிற்று
காசு வெட்டிப் போட்டு
மிளகாய் அரைத்துப் போடத்தான்!!

சினமடங்க

வெறி தீர
காசு வெட்டி
தன் கையாலாயே
மாசாணியம்மனுக்கு
மிளகாய் அரைத்துப் பூசி
வீடு வந்து சேர்ந்தாயிற்று!!

வள்ளீம்மக்கா

அல்லாரும்
தோட்டங்காட்டைப்
பாக்காம எங்க போய்ட்டீங்க?
உங்க கொழுந்தனாருமு
கொழுந்தனார் பொஞ்சாதியுமு
ஈரப்பதவலு எதுமு பாக்காம
உங்க கெணத்துக்குள்ள எறங்கி
மோட்டார் எடுத்துடாம இருந்துருந்தா
இராத்திரி பேஞ்ச மழைக்கு
பெட்டுக்கு தண்ணி வந்து
அல்லாம் நாசமாப் போயிருந்துக்குமக்கா!!

அட?

அதுவாட்டுக்கு மூலையில
கெடந்தது கெடந்தமாரியிருந்த
மொளகாவத்தலு
மூணு இராத்தலு
வீணாப் போனதுமில்லாம
இந்தக் கையிக ரெண்டுமு
என்னா எரி எரியுது?

No comments: