9/06/2012

நாய்மை


மாநகரத்தில் இருந்து
உள்ளோங்கிய சிற்றூராம்
எம் தாய்மண்ணுக்குச் சென்றிருந்தேன்
தாயையும் தாய்மண்ணையும் கண்டுவர!

ஒன்றுக்கு நான்குமுறை
சொல்லிச் சொல்லியே
அழைத்திருந்தாள் அம்மா!
பொதுப் போக்குவரத்து வண்டியில் 
வர வேண்டாமென;
அமெரிக்கவாசியான நான்
அல்லலுற்றுப் போவேனாம்!!

நல்ல தண்மியுள்ள சொகுசுந்தில் 
சென்று சேர்கையில் சுகமாய்த்தான்
இருந்தது பயணம்!
அன்பு அம்மாவின் 
சோறு தின்னப்போன 
ஆவலது காரணமாகவும் இருந்திருக்கலாம்!!

மாலை நேரத்தில்
தாயை முத்தமிட்டேன்;
தாய்மண்ணைப் பிடியெடுத்து
முகர்ந்து பார்த்து
நெற்றிப் பொட்டுமாயும்
இட்டுக் கொண்டேன்!!

திரும்பவும்
மாநகர் நோக்கிய பயணம்!
அந்தியூர் துவக்கம்
கொங்கல்நகரம், இலுப்பநகரம்,
செஞ்சேரிமலை, செலக்கரிச்சல்
சூலூர், சிங்காநல்லூர்
வழியெங்கும் தார்ச்சாலையில்
உறங்கியும் உறங்காமலுமிருந்தன 
நாய்கள்!!

ஒவ்வொருமுறையும் 
அதனருகே சென்றதும் 
வேகம் குறைத்து 
நிறுத்தி ஒதுங்கி வளைத்து 
முடுக்கியை முடுக்குவதும்
மற்றொரு நாய்கண்டு
வேகம் குறைப்பதுமாயும் வந்ததில் 
இடுப்பு நொடிந்து நொந்து போனது!! 

முன்னமெல்லாம் 
கண்டதுமே
வாகனத்தை அதன் வேகத்தில் 
ஓடித்துரத்தித் துரத்தித்
தன் வீரியத்தை 
முழுவீச்சில் காட்டிக் காட்டி
பெருமை கொள்ளுமிந்த நாய்கள்!!

வலிக்கிறது இன்னமும்;
நொடிந்து போன
இடுப்பினால் அல்ல!
வலிக்கிறது இன்னமும்!
கொங்குநாட்டில்
நாய்மை
பறிபோனதேயென!!!


1 comment:

வருண் said...

***கொங்குநாட்டில்
நாய்மை
பறிபோனதேயென!!!***

ஏனாம்? ஆளாளுக்கு தத்தெடுத்து, ஆத்துக்கு ஒரு நாயினு சண்டை போட்டு வச்சுகிறாளா?

நாயில்லாத ஊரில் நரி அம்பலம் பண்ணுமாமே?

கொங்கு நாட்டில் நரிகள் நடமாட்டம் எப்படி?னு சொல்லவே இல்லையே!