12/07/2008

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழு!

அன்னைதந்த பால் ஒழுகும் குழந்தைவாய் தேன் ஒழுக அம்மா என்று
சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்த தான
பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி னோடு
மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் தமிழே யன்றோ!

--பாவேந்தர் பாரதிதாசன்

வணக்கம். மாந்தனின் வாழ்வில், எதற்கும் முடிவு ஒன்று உண்டு என்பது நிதர்சனம். அந்த வகையிலே, தமிழ் மணம் வீசித் திகழும் தமிழ்மணம், இந்த வார நட்சத்திரப் பதிவராக்கி, எமக்கும் ஒரு வாய்ப்பளித்தது. அந்த நல்ல வாய்ப்பு முடிவுக்கு வந்து விட்டதான படியால், உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

தமிழ்மணம் நல்கிய நல்லதொரு வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, இயன்றளவு இடுகைகளை இட்டதில், அவையாவும் வாசித்த வாசகர்களுக்கும், இனி வாசிக்கப் போகிற வாசகர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் யாமொரு சாமன்யன் என்ற வகையிலே, அவற்றுள் மேம்பாடு காணக்கூடிய கூறுகள் மலிந்து கிடக்கும் என்பதிலும் ஐயமெதுவும் இல்லை. ஆகவே, தாங்கள் அது குறித்து, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் பட்சத்தில், எதிர்வரும் காலத்தில் அவற்றைக் களைந்து, பதிவுகளை மேம்படுத்திக் கொள்ள முயல்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

எங்க‌ள் ம‌ண்ணின் மைந்தன், அன்புத் தோழ‌ன் ப‌ரிச‌ல்கார‌ன் அவ‌ர்கள், எம்மை வ‌லைச்ச‌ர‌ம் வாயிலாக‌ அறிமுகப் ப‌டுத்திய‌ பொழுது நினைவு கூர்ந்ததையே, இன்றும் நினைவு கூற‌ விரும்புகின்றேன். எட்டாம் வ‌குப்பு ப‌யின்று கொண்டிருந்த‌ நேர‌த்தில், த‌லைமை ஆசிரிய‌ர் அவ‌ர்க‌ள் எம்மை அழைத்து, இனி நீதான் பிரார்த்த‌னைக் கூட்ட‌த்தை வ‌ழி ந‌டாத்திச் செல்ல‌ வேண்டுமென‌ச் சொல்ல‌வே, எம் ம‌ன‌து ஆன‌ந்த‌ச் சிற‌க‌டித்துப் ப‌ற‌ந்த‌து. வ‌ழ‌மையாக‌, ப‌த்தாம் வ‌குப்பில் உள்ள சிறந்த‌ மாண‌வ‌ன்தான் கூட்ட‌த்தை வ‌ழி ந‌ட‌த்திச் செல்வ‌து. அந்த‌ வாய்ப்பு எம‌க்குக் கிட்டிய‌தை எண்ணிப் பெருமையும்! ம‌கிழ்வும்!!

அன்று மாலை, எம் வீட்டுக்க‌ருகில் வ‌சிக்கும் ஆசிரிய‌ர் வ‌ருகிறார், "டேய், நீ ந‌ல்ல‌ பைய‌ன்கிற‌தால‌ இந்த‌ வேலைய‌ உன‌க்குக் குடுத்து இருக்குறோம். இப்ப‌த்துல‌ இருந்து ப‌த்தாம் வ‌குப்பு முடிய‌ற‌ வ‌ரைக்கும், ப‌ள்ளிக்கூட‌த்துக்கு முன்கூட்டியே வ‌ந்திட‌ணும். துணி ம‌ணி எல்லாம் ந‌ல்லாப் போட்டு சுத்த‌ வ‌த்த‌மா இருக்க‌ணும். புரியுதா?" என்று சொல்கிறார். ம‌ன‌தில் இருந்த‌ அந்த‌ ம‌கிழ்வும், அந்த‌ இட‌த்தை அடைந்து விட்டேன் என்ற‌ உண‌ர்வும் ப‌ஞ்சாய்ப் ப‌ற‌ந்து, பொறுப்பு என்னும் க‌வ‌லை தொற்றிக் கொண்ட‌து. அதே உண‌ர்வுதான் மீண்டும் இந்நாளில் என‌க்கு. இயன்றவரை த‌னித்த‌மிழ், ந‌ம‌க்கென்று ஒரு எழுத்து ந‌டை என்றாகிவிட்ட‌ பிற‌கு, கால‌ம் முழுமைக்கும் அம்முகத்தைக் காப்பாற்ற வேண்டிய‌ பொறுப்பில் கால‌டி எடுத்து வைக்கிறேன். இய‌ன்ற‌வ‌ரை அத‌ற்குப் போராடுவேன் என்றும் உளமார‌ உறுதி கொள்கிறேன்.

விடைபெறும் முன்பாக‌, வ‌ட‌க்குக் க‌ரோலைனா, சார்ல‌ட் ந‌வ‌ச‌க்தி ப‌ண்பாட்டுக் குழு, மேலும் அத‌ன் செய‌லாக்க‌ம் குறித்த விப‌ர‌ங்களை உஙளுடன் பகிர்ந்து கொள்வதில், குழுவின் உறுப்பின‌ர் என்ற‌ முறையில் ம‌கிழ்ச்சி கொள்கிறேன். புல‌ம் பெய‌ர்ந்த‌ ம‌ண்ணிலே, த‌மிழ்ப் ப‌ண்பாடு பேண‌வும், அயல் மண்ணில் பிறந்த அடுத்த‌ தலை முறையின‌ர்க்கு த‌மிழை எடுத்துச் செல்வ‌துவுமே இத‌ன் ப‌ணி. அந்த‌ வ‌கையிலே குழும‌ம் ஒரு வார‌ம் விட்டு ஒரு வார‌ம், ஒவ்வொரு உறுப்பின‌ரின் இல்ல‌த்திலும் வ‌ரிச‌யாகக் கூடும். அப்போது, யோகா, த‌மிழ், ச‌மூக‌ம் குறித்த‌ பாட‌ங்க‌ள் க‌ற்பிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. மேலும், விழாக் கால‌ங்க‌ளில் ந‌டைபெறும் நிக‌ழ்ச்சிக‌ளில் குழ‌ந்தைக‌ள் ப‌ங்கு பெறும் வ‌ண்ண‌ம், த‌மிழ்க் க‌லாசார‌ம் சார்ந்த‌ நாட‌க‌, நாட்டிய‌ங்க‌ளும் நடாத்துவதில் குழும‌ம் ப‌ங்கு பெற்று வ‌ருகிற‌து.

என்னாலும் எழுத‌ இய‌லும் என்று தெரியாம‌ல் இருந்த‌ என்னை, தெரிந்த‌ த‌மிழில் எழுத‌ வைத்த‌தில், பிள்ளையார் சுழி இட்ட‌ ந‌வ‌ச‌க்தி குழும‌த்திற்கும், செந்தாம‌ரை பிர‌பாக‌ர‌ன் ம‌ற்றும் ஜெய் சுப்ர‌ம‌ணிய‌ன் ஆகியோருக்கும் ந‌ன்றி கூறிக் கொள்கிறேன். குழும‌த்தின் மின்ன‌ஞ்ச‌ல் ப‌க்க‌த்தில் ஏற்ப‌ட்ட பார‌ம‌ரிப்புச் சிர‌ம‌ங்க‌ளின் கார‌ண‌மாக, எமக்கென்று வ‌லைப்பூ என்றாகி விட்ட‌ பிற‌கு, ப‌திவுக‌ளுக்கு ம‌றுமொழி இட்டும், ப‌திவில் நிக‌ழும் த‌வ‌றுக‌ளைச் சுட்டிக் காட்டியும் ஊக்க‌ம் அளித்து வ‌ரும் ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும், வாச‌க‌ர்க‌ளுக்கும், மீண்டுமொருமுறை த‌மிழ‌ம‌ண‌ம் நிர்வாக‌த்திற்கும் ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!


25 comments:

கபீஷ் said...

அடடா! ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா அதுக்குள்ளாடி. ரொம்ப நல்லா எழுதினீங்க, வழக்கம்போல.

Anonymous said...

நீங்க எழுதறதப்பாத்து முடிஞ்சவரைய்க்கும் தமிழ்லயே எழுதணும்னு எல்லாருக்கும் தோண்றதில அதிசயம் இல்லை.
நட்சத்திர வாரம் நல்லா இருந்துது.

vetri said...

மணி வாசகனாரென்ற பழமை பேசியாரே,

நன்றி நவிலலுக்கு நன்றிகள்!!

வெள்ளியது வேளை வந்தால்
தெள்ளத் தெரியும் முகங்காட்டி

முள்ளினூடே கிடக்கினினும்
எள்ளியே ஈர்ந்திழுக்கும் இனிய ரோஜா

தள்ளிஆழ் கடலினூடே தவமிருக்கும் முத்தாம் உங்களது இந்த அர்ப்பணிப்புக்கு நாமும் ஒரு சிறு கருவி என்பதை அறிகையில் மிகப் பெருமை பெற்றோம்!!

பழமைப் பேச்சு பன்னெடுங்காலம் தொடர வாழ்த்துக்கள்!!

வெற்றி

பழமைபேசி said...

//கபீஷ் said...
அடடா! ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா அதுக்குள்ளாடி. ரொம்ப நல்லா எழுதினீங்க, வழக்கம்போல.
//

வாங்க, வணக்கம்! அனுதினமும் வந்து, பதிவுகளைப் படிச்சிட்டு, ஒரு ஊக்கம் குடுத்தீங்க....ஆகவே, உங்களுக்கும் இந்த முயற்சில பங்கு உண்டு. நன்றி!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
நீங்க எழுதறதப்பாத்து முடிஞ்சவரைய்க்கும் தமிழ்லயே எழுதணும்னு எல்லாருக்கும் தோண்றதில அதிசயம் இல்லை.
நட்சத்திர வாரம் நல்லா இருந்துது.
//

வாங்க, வணக்கம்! நம்ம ஊர்ப் பழமைகளுக்கெல்லாம் நல்லா எஅசப் பாட்டுப் பாடி ஒரு ஊக்கங் குடுத்தீங்க....நொம்ப நன்றிங்க!!!

பழமைபேசி said...

// vetri said...
மணிவாசகனாரென்ற பழமை பேசியாரே,

பழமைப் பேச்சு பன்னெடுங்காலம் தொடர வாழ்த்துக்கள்!!

வெற்றி
//

வாங்க ஜெய்! வணக்கம்!! கவிதைல கலக்குறீங்க!!!

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

தமிழன்-கறுப்பி... said...

நன்றி...

குடுகுடுப்பை said...

நிரம்ப நன்றி புதுமைபேசி.

தமிழ் said...

வாழ்த்துகள்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒரு வாரமும் சும்மா 20:20கிரிக்கெட் பாத்த மாதிரி இருந்தது ..

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே வாழ்த்துக்கள்
மற்றும் பாராட்டுக்கள்

♥ விஜி ♥ viji♥ said...

ஒரு வாரம் கலக்கிட்டீங்க. வாரக்கடசீல ஊருக்குப் போய்ட்டேன், இப்பதான் நீங்க வெள்ளிகிழமைக்கு அப்புறமா எழுதினதெல்லாம் படிச்சிப் பார்த்தேன், எல்லாமே நல்லா இருந்தது. தட்டுல ரெண்டு வடை மிச்சம் வெச்சி, அப்புறம் உங்க அண்ணன் சொன்ன அறிவுறை பத்தி எதியிருந்தீங்களே அது அருமை. நட்சதிர வாரத்தில் உங்க பதிவுகள் எல்லாம் நல்லா இருந்தது. பாராட்டுக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமை :))))))))))))

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பரே..
உங்கள் பணி மேன் மேலும் தொடர, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. எனபதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது, உங்கள் பதிவுகள்.

வாழ்க வளமுடன்.

பழமைபேசி said...

//தமிழன்-கறுப்பி... said...
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
//

மிக்க நன்றிங்க, மிக்க நன்றி!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நிரம்ப நன்றி புதுமைபேசி.
//

எல்லாம் உங்க ஆதரவாலதான்! இஃகி!ஃகி!!

பழமைபேசி said...

//திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்
//

வாங்க நம்மூர்த்தம்பி!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
அண்ணே வாழ்த்துக்கள்
மற்றும் பாராட்டுக்கள்
//

நன்றிங்க மலைக்கோட்டையார்!

பழமைபேசி said...

// viji said...
ஒரு வாரம் கலக்கிட்டீங்க. வாரக்கடசீல ஊருக்குப் போய்ட்டேன், இப்பதான் நீங்க வெள்ளிகிழமைக்கு அப்புறமா எழுதினதெல்லாம் படிச்சிப் பார்த்தேன், எல்லாமே நல்லா இருந்தது. தட்டுல ரெண்டு வடை மிச்சம் வெச்சி, அப்புறம் உங்க அண்ணன் சொன்ன அறிவுறை பத்தி எதியிருந்தீங்களே அது அருமை. நட்சதிர வாரத்தில் உங்க பதிவுகள் எல்லாம் நல்லா இருந்தது. பாராட்டுக்கள்
//

வாங்க விஜி! எல்லாப் பதிவும் படிச்சுப் பாத்த ஊக்கங் குடுத்த உங்களுக்கு நாந்தான் நன்றி சொல்லோனும்!

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
அருமை :))))))))))))
//

வாங்க, வணக்கம்! நன்றிங்க!!

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
வாழ்த்துக்கள் நண்பரே..
உங்கள் பணி மேன் மேலும் தொடர, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. எனபதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது, உங்கள் பதிவுகள்.

வாழ்க வளமுடன்.
//

ஐயா, நன்றிங்க! நன்றிங்க!!

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

நசரேயன் said...

நட்சத்திரம் மறைந்தாலும் நீங்கள் யாராலும் மறக்கு முடியாத நட்சத்திரம்

பழமைபேசி said...

//நசரேயன் said...
நட்சத்திரம் மறைந்தாலும் நீங்கள் யாராலும் மறக்கு முடியாத நட்சத்திரம்
//

ஐயோ தளபதி.... நொம்பக் கூசுதுங்க....