12/03/2008

சொம்புத் தண்ணி!

வாங்க கண்ணுகளா, எல்லாம் நல்ல சொகந்தான?! நீங்க இருக்குற பக்கமும் குளுரா சாமி? இங்க நாங்க இருக்குற பக்கம் செரியான குளுரு... நாள் முச்சூடும் ஊட்டுக்கு உள்ளயேதேன்! கெரகம், வெளில போயி நடுங்கி சாகுறதுக்கு நான் என்ன கேனயனாக்கும்?! இப்பத்திக்கி எனக்கு ஒரு அம்மினிதேன், நாலு வயிசு ஆகுது. அது மட்டும் பள்ளிக்கூடம் போயிட்டு வரும். அவிங்க அம்மாக்காரி பாத்துகுவா, எனக்கு வெளில போக வேண்டிய சோலியே இல்ல.

ஆமாங் கண்ணு, எனக்கு வீட்ல இருந்துதேன் வேலை. பாரு கண்ணு, ரெண்டு நாளா ஊர்ப் பழமைகளுக்கெல்லாம் விளக்கஞ் சொல்லிட்டு வந்தமல்லோ, அதுல ஒரு மாத்தம். வித்தியாசமா இருக்கட்டுமுன்னு, நம்மூர்ப் பெரியவரு சொன்ன விளக்கத்தைப் பாக்கலாஞ் செரியா? சரி, மேல படிங்க அப்ப.

கண்ணு, பொள்ளாச்சிக்கு பக்கத்துல, புரவி பாளையம் தெரியுமல்லோ? பெரிய ஊரு. ஜமீன் இருந்த ஊரு. அங்க ஜமீனுக்கு அரண்மனை எல்லாம் இருக்கு. காடு கரைகளுக்குப் போயிட்டு சனங்க நெம்ப சந்தோசமா இருப்பாங்க அந்த ஊர்ல. எங்க பாத்தாலும் பச்சைப் பசேல்னு ஒரே செழிப்புதேன். அங்க பாரு கண்ணு, சென்னியப்பன் சென்னியப்பன்னு ஒரு குடியானவன் இருந்தான். அட, ஒரு சென்னியப்பந்தேன். இப்பிடி எல்லாம் குறுக்கு கேள்வி கேட்டா, நாங் கதை எப்பிடி சொல்லுறது?

சரி, குறுக்க பேசாம வெவரமா கதையக் கேளு. சென்னியப்பனுக்கு எட்டு ஏக்கரா செங்காடும், ஒரு வள்ளம் எரங்காடும் இருக்கு. நல்லா, "ஊம்" போட்டுக் கேக்கோனும். அவனுக்கு நல்ல வெள்ளாமை, அவனும் சும்மா சொல்லக் கூடாது, நல்லாப் பாடு படுவான். ஆனா, அவன் பொஞ்சாதிக்கும் அவனுக்குந்தான் சேர்றதே இல்லெ. எப்பப் பாத்தாலும் அவ இவனை வெய்யுறதும், இவன் அவளுக்கு ஈடு குடுக்கறதும், ஒரே அக்கப்போரு. சொல்ல மறந்துட்டம்பாரு, அவன் பொண்டாட்டி பேரு தெய்வாத்தா!


புரவி பாளையத்துக்கு மேக்கால, நாட்ராயன் கோயிலுக்குப் பின்னாடி இருக்குறது ரெட்டைப் புளியாமரம். அதைத் தொட்டா மாதரயே இருக்குறதுதான் கோனத் தோட்டம். அந்த தோட்டத்துல இருக்குது கண்ணு, பன்னெண்டு அங்கணச் சாலை. அதுலதான் அப்பார் அய்யன் இருக்குறது. ஊர்ல இருக்குறவிங்க எல்லாம் கல்யாணம் காச்சின்னா ஏடு பாக்குறதுக்கும், நல்ல விசேசத்துக்கு குறிப்பு பாக்குறதுக்கும்னு பலதுக்கும் அப்பார் அய்யங் கிட்டத்தான் போறது. அப்பப்ப அய்யன் மந்திரிச்சு துண்ணூறு அல்லாங்கூட வெச்சு விடும். எந்த பிரச்சினை இருந்தாலும், ஒருக்கா அய்யன் கிட்டப் போய்ட்டு வந்தா, இருக்குற செரமம் ஒடனே நீங்கீரும். ஊரு சனங்களுக்கும் அய்யன் மேல அப்பிடி ஒரு நம்பிக்கை.

செரின்ட்டு, சென்னியப்பன் பொஞ்சாதி தெய்வாத்தாவும் அய்யன்கிட்ட ஒரு எட்டு போய்ட்டு வரலாம்ன்னு போகுது. போயி அய்யன் கிட்ட, இந்த மாதர ஊட்ல பொழுதன்னைக்கும் நாயமாவே கெடக்குதுன்னு சொல்லி அழுவுது. அய்யனும் பொறுமையாக் கேட்டுட்டு, "சரி தெய்வாத்தா, ஒன்னும் ஆவாது புள்ள!. சென்னியப்பன் எப்ப உங்கூட ஓரியாட்டத்துக்கு வந்தாலும், இந்த செம்புல இருக்குற தண்ணியில ஒரு மொடக்கு, வாயில ஊத்தி வெச்சிட்டு, அவன் கோவந் தீந்த பொறகு முழுங்கீரு!" ன்னு சொல்லி ஒரு சொம்பு தண்ணிய மந்திரிச்சு குடுத்தாரு.

தெய்வாத்தாவும், சென்னியப்பன் கோவத்துல ரெண்டு பேச்சு பேசுறப்ப வெல்லாம், அப்பிடியே அய்யஞ் சொன்ன மாதரயே செய்யுது. இப்பிடியே போச்சு மாசம் மூணு. ஊட்ல ஒரு பிரச்சனையும் இல்ல. தெய்வாத்தா இப்ப ரெண்டு மாசம் முழுகாம இருக்கா. இப்பப் பாருங்க, அய்யன் குடுத்த சொம்புத் தண்ணி தீந்து போச்சு. இவளுக்கா ஒரே பயம். மறுக்கா, கோனத்தோட்டத்துக்கு அய்யனப் பாக்கப் போறா புள்ளத்தாச்சி, மறுபடியும் ஒரு சொம்பு தண்ணி வாங்க.

ஆனா, அய்யன் இந்தத் தடவை தண்ணி தரலை. ஏன்னு கேக்க அய்யஞ் சொன்னாரு, "அடிப் போடீ இவளே! அவன் கோவம் வரும்போது நீ கூடா கூடாப் பேசுவ போல இருக்கு. இத்தினி நாளும் வாயில தண்ணி இருக்குறதனால, நீ அந்த நேரத்துல பேச முடியலை! ஊட்ல சண்டையும் இல்ல!! ச்சும்மா சொன்னா நீ கேட்டு நடக்க மாட்ட, அதான் தண்ணிச் சொம்பு குடுத்தேன். ஒருத்தருக்கு கோவம் வரும்போது, அடுத்த ஆள் அமைதியா இருக்கோனும், கூடக் கூடப் பேசுனா, ஓரியாட்டந்தான! போ, போயி சென்னியப்பனையும் வரச் சொல்லு! அவனுக்கும் சொல்லி அனுப்பறேன்!!". அதுக்கப்புறம் பாருங்க‌ அவிங்களுக்குள்ள ஓரியாட்டமே இல்லியாமுங்க. ஒன்னும் ஒன்னுமா நொம்ப சந்தோசமா இருக்காங்க.


இதுல இருந்து நாம தெரிஞ்சுகிட்டது என்ன? நீங்க தங்கமணியா, அப்ப ரங்கமணிக்கு கோவம் வரும்போது பொறுமையா இருங்க. நீங்க ரங்கமணியா? அப்ப‌, தங்கமணிக்கு கோவம் வரும் போது பொறுமையா இருங்க. என்ன கண்ணு, உனக்கு இன்னமும் கண்ணாலமே ஆகலையா? அப்ப இப்பவே, பேசுறதெல்லாம் பேசிக்கோ! என்னயக் கேக்குறீங்களா? எனக்கு பேச்சுப் போயி, இப்ப நாலு வயசுல‌ குழந்தை ஒன்னுங்க. போனது போனதுதான்! தங்கமணிகோட கோவப்படுறதுக்கு, போன பேச்சு இனி திரும்பி வரவா போகுது??

யாரால் கேடு? வாயால் கேடு!


கொங்கு தமிழ் அகராதி
முச்சூடும்: முழுதும்
அம்மணி( அம்மினி): இளம் பெண்
சோலி: காரிய‌ம்
பழமை: பேச்சு, அர‌ட்டை
மாத்தம்: மாற்ற‌ம்
வள்ளம்: நான்கு அல‌குக‌ள்
வெய்யுறது: ஏசுத‌ல்
ஈடு குடுக்கறது: அடிப்ப‌து
அங்கணம்: ப‌ண்டைய‌ அள‌வீடு
ஏடு பாக்குறது: ஜோசியம் பார்ப்பது
துண்ணூறு: திருநீறு
ஓரியாட்டம்: ச‌ண்டை/ச‌ச்ச‌ர‌வு

59 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

நசரேயன் said...

/*ரங்கமணிக்கு கோவம் வரும்போது பொறுமையா இருங்க. நீங்க ரங்கமணியா? அப்ப‌, தங்கமணிக்கு கோவம் வரும் போது பொறுமையா இருங்க*/
பழமைபேசி யாருக்கு நட்சத்திர வார அடி பலமா விழுந்திருக்கு போல

குடுகுடுப்பை said...

நல்ல கதை தலீவா. சும்னாங்காட்டியும் திட்டி பின்னூட்டம் போடாட்டுமா? ஒரு காண்டுல இருக்கேன். நிம்மல் தான் திருப்பி பேச மாட்டீர். சரியா?

குடுகுடுப்பை said...

பழமைபேசி யாருக்கு நட்சத்திர வார அடி பலமா விழுந்திருக்கு போல//

:)))))))))))))))))))))

ILA (a) இளா said...

நல்லாதான் எழுதுறீங்க.

சும்மா ஒரு எட்டு வந்து பார்த்துபுட்டு போங்க

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நல்ல கதை தலீவா. சும்னாங்காட்டியும் திட்டி பின்னூட்டம் போடாட்டுமா? ஒரு காண்டுல இருக்கேன். நிம்மல் தான் திருப்பி பேச மாட்டீர். சரியா?
//


நீங்கதான, சொல்லுங்கண்ணே! யாராவது ஒருத்தர் உள்வாங்கித்தான ஆவணும்!!

நசரேயன் said...

/* ஒரு காண்டுல இருக்கேன்*/
தமிழா? இங்கிலிபிசா?

Anonymous said...

பின்னிப்பெடல் எடுத்திட்டீங்க போங்க

துளசி கோபால் said...

தெரிஞ்ச கதேதான். அதான் நம்மூட்டு ரங்கமணிக்கு தனியா ஒரு குழாயே போட்டுக் கொடுத்துட்டேன்.


கதையைச் சொன்ன நடை பிரமாதமா இருக்கு.

அதுக்கே ஒரு சிறப்புப் பாராட்டு.

பெருசு said...

அது சேரி,நம்மூரு அம்மிணிங்ககிட்ட வாயைத்தொறக்க முடியுமா.

டங்குவாரு அந்து போகுமெல்லோ.

வாயத்தொறக்காம இருந்தாலும், வரும்பாருங்க ராக்கெட்டு.
நாங் கேட்டுகிட்டேயிருக்கேன். புள்ளையாராட்டம் குத்த வெச்சிகிட்டிருக்கறப்பாரு. கொழுக்கட்டையா அமுக்கீரிக்கீங்க அப்படிம்மபாங்க.

வாயைத்தொறந்து ஏதாவது கேட்டுப்பாருங்க,
ஆமா,.............

அதுக்கெல்லாம் ஒரு குடுப்பின வேணுமே.

கபீஷ் said...

அந்த சாமியார் எப்படி ரங்கமணிய தண்ணி குடிக்க சொல்லாம தங்கமணி கிட்ட சொல்லியிருக்காரு. கதைய மாத்தி எழுதுங்க. இது ஆணாதிக்க கதை என்று மென்மையாக கண்டிக்கறேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
பழமைபேசியாருக்கு நட்சத்திர வார அடி பலமா விழுந்திருக்கு போல
//

நாந்தான் ஒப்புதல் வாக்கு மூலமே குடுத்து இருக்கனே....அது போயி அஞ்சு வருசம் ஆச்சு

பழமைபேசி said...

//ILA said...
நல்லாதான் எழுதுறீங்க.
//

நன்றிங்க.... வர்றேன்!

பழமைபேசி said...

//நசரேயன் said...
/* ஒரு காண்டுல இருக்கேன்*/
தமிழா? இங்கிலிபிசா?
//

இதுக்கொரு பதிவு வரும்!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
பின்னிப்பெடல் எடுத்திட்டீங்க போங்க
//

நன்றி! விளக்கம் போட்ட பொறகும் பெடலை விடுலையே நீங்க?! :-o)

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
தெரிஞ்ச கதேதான். அதான் நம்மூட்டு ரங்கமணிக்கு தனியா ஒரு குழாயே போட்டுக் கொடுத்துட்டேன்.


கதையைச் சொன்ன நடை பிரமாதமா இருக்கு.

அதுக்கே ஒரு சிறப்புப் பாராட்டு.
//

நொம்ப நன்றிங்க‌!

பழமைபேசி said...

//பெருசு said...

அதுக்கெல்லாம் ஒரு குடுப்பின வேணுமே.
//

நொம்பச் சரியா சொன்னீங்க!

பழமைபேசி said...

//கபீஷ் said...
அந்த சாமியார் எப்படி ரங்கமணிய தண்ணி குடிக்க சொல்லாம தங்கமணி கிட்ட சொல்லியிருக்காரு. கதைய மாத்தி எழுதுங்க. இது ஆணாதிக்க கதை என்று மென்மையாக கண்டிக்கறேன்
//

எப்பவும் கற்பூரம் மாதிரி இருக்குற நீங்க இன்னைக்கு பிழைச்சிட்டீங்களே?

சென்னியப்பன் சாமியாரை பாத்த நாள்ல இருந்து, இந்த பின்னூட்டம் போடுற வரையிலும் தண்ணி முழுங்கிட்டு இருக்கானே? கதைய மாத்தவா?? ஆசிரியை துளசி அவிங்க பின்னூட்டத்தையும் படிச்சுப் பாருங்க!

தங்ஸ் said...

மாசி வந்தா வருசமாச்சு என்ர பேச்சு போயி:-)

பழமைபேசி said...

//தங்ஸ் said...
மாசி வந்தா வருசமாச்சு என்ர பேச்சு போயி:-)
//

அஃகா! அஃகா!! :-o)

Natty said...

தல, ஹவாய் ஒரு ரவுண்டு வாங்க...
தும் தக்கா... எப்பவும் 20 - 25 டிகிரி...

அஃகா அஃகா வா? தெய்வமே .... எங்கேயோ போயிட்டீங்க..... சிரிப்புக்கு தனியா நீங்க கையகராதி போடலாம் ;)

பழமைபேசி said...

//Natty said...
தல, ஹவாய் ஒரு ரவுண்டு வாங்க...
தும் தக்கா... எப்பவும் 20 - 25 டிகிரி... //

நீங்கள்லாம் புண்ணியம் செஞ்ச மகராசரு!

//அஃக அஃகா வா? தெய்வமே .... எங்கேயோ போயிட்டீங்க..... சிரிப்புக்கு தனியா நீங்க கையகராதி போடலாம் ;)
//

நல்ல யோசனை சொன்னீங்க.... ரொம்ப நன்றிங்க!!

Mahesh said...

//நல்லா "ஊம்" போட்டு கேக்கோனும் //

பழமைபேசி "கதைசொல்ல்லி" ஆயிட்டாரு...

கி.ரா. கரிசல் காட்டுக்கதைகள் மாதிரி இருக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஊர் வழக்கு ரொம்ப அருமைங்க..\\ இந்த மாதர ஊட்ல// :)

பழமைபேசி said...

//Mahesh said...
//நல்லா "ஊம்" போட்டு கேக்கோனும் //

பழமைபேசி "கதைசொல்ல்லி" ஆயிட்டாரு...

கி.ரா. கரிசல் காட்டுக்கதைகள் மாதிரி இருக்கு..
//

நம்ம ஊரு மகேசு,

அப்பிடியெல்லாஞ் சொல்லாதீங்கோ...நாம எதோ பொழுது போக்கிக!

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஊர் வழக்கு ரொம்ப அருமைங்க..\\ இந்த மாதர ஊட்ல// :)
//

நன்றிங்க... அப்பக் கதை திருப்தியா இல்லீங்ளா? :-o)

Anonymous said...

எம்படது -> என்னுடையது
உம்படது -> உன்னுடையது

இதையும் சேத்துக்கோங்க மணி

Viji said...

நல்லா இருக்குங்க. கதை சொன்ன விதம் அருமை.

கூடுதுறை said...

தமிழ்மணம் நட்சத்திரமாக ஆனதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... said...

இப்படித்தான் பேசுவிங்களா நீங்க...?

வல்லிசிம்ஹன் said...

பிள்ளைங்க ஓரியாட்டம் கேள்விப்பட்டிருக்கேன். இந்தத் தம்பதிகளின் ஓரியாட்டமும் நல்லாத்தான் முடிஞ்சிருக்கு.
நல்ல சாமியார்.

Anonymous said...

நட்சத்திர பதிவாளர் ஆனதற்கு வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

//ஒருத்தருக்கு கோவம் வரும்போது, அடுத்த ஆள் அமைதியா இருக்கோனும், கூடக் கூடப் பேசுனா, ஓரியாட்டந்தான!//

இதுலயெல்லாம் ஐயா ரொம்ப சமத்து.தங்ஸ் வாயத் திறந்தா நான் பொட்டிப் பாம்புதான்:)

பழமைபேசி said...

//Sriram said...
எம்படது -> என்னுடையது
உம்படது -> உன்னுடையது

இதையும் சேத்துக்கோங்க மணி
//

வாங்க ஐயா! கண்டிப்பாங்க...

பழமைபேசி said...

//Viji said...
நல்லா இருக்குங்க. கதை சொன்ன விதம் அருமை.
//

நன்றிங்க!

பழமைபேசி said...

//கூடுதுறை said...
தமிழ்மணம் நட்சத்திரமாக ஆனதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
//

ஐயா வாங்க! நன்றி!! எங்க ஆளை ரொம்ப நாளாக் காணோம்?

பழமைபேசி said...

//தமிழன்-கறுப்பி... said...
இப்படித்தான் பேசுவிங்களா நீங்க...?
//

ஆமாங்!

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
பிள்ளைங்க ஓரியாட்டம் கேள்விப்பட்டிருக்கேன். இந்தத் தம்பதிகளின் ஓரியாட்டமும் நல்லாத்தான் முடிஞ்சிருக்கு.
நல்ல சாமியார்.
//

ஆமாங்க அம்மா! நன்றிங்க!!

பழமைபேசி said...

//pathivu said...
நட்சத்திர பதிவாளர் ஆனதற்கு வாழ்த்துகள்.
//
நன்றிங்க!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...

இதுலயெல்லாம் ஐயா ரொம்ப சமத்து.தங்ஸ் வாயத் திறந்தா நான் பொட்டிப் பாம்புதான்:)
//

பாத்துங்கோய்! சில சமயம் பேசலைன்னாலும், இடி விழும், "வாயிலென்ன கொழக்கட்டையா இருக்கு?"ன்னு! க்ஃகிஃ!!

சரண் said...

ரொம்ப அட்டகாசமா எழுதியிருக்கிறீங்கோவ்!!!

என்ற ஆத்தாவுக்கும் படிச்சுக்காட்டி.. ஊட்ல ஒரே சிரிப்புதான் போங்க...

ரொம்ப சந்தோசமுங்க.. நெறய எழுதுங்கோ...

Anonymous said...

நீங்க குளிரளதான கஷ்டபடறீங்க.. இங்க வந்து பாருங்க.. ஹர்மட்டான் சொல்லுவாங்க.. ஒரே புழுதி காத்து... நானாவது பரவாயில்லை.. உருப்பிடாதது நிலைமை இன்னும் மோசம்.. எக்கசக்கமா ஊரை சுத்தி சுத்தி வரணும்... குளிருக்கு ஸ்வெட்டர், சட்டை அப்படின்னு போடு சமாளிச்சுடலாம் (எனக்கு சீனாவில் -1 டிகிரியில் அனுபவம் உண்டு). இந்த புழுதி காத்தை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.

பழமைபேசி said...

//சூர்யா said...
ரொம்ப அட்டகாசமா எழுதியிருக்கிறீங்கோவ்!!!

என்ற ஆத்தாவுக்கும் படிச்சுக்காட்டி.. ஊட்ல ஒரே சிரிப்புதான் போங்க...

ரொம்ப சந்தோசமுங்க.. நெறய எழுதுங்கோ...
//

யாரு, மேவரத்துக்கரை சூர்யாத் தம்பியா? கண்ணு, நல்ல சேமந்தானோ? என்ன நொம்ப நாளா நம்ம ஊட்டுத் திண்ணைக்கே வல்லியே?

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
நீங்க குளிரளதான கஷ்டபடறீங்க.. இங்க வந்து பாருங்க.. ஹர்மட்டான் சொல்லுவாங்க.. ஒரே புழுதி காத்து... நானாவது பரவாயில்லை.. உருப்பிடாதது நிலைமை இன்னும் மோசம்.. எக்கசக்கமா ஊரை சுத்தி சுத்தி வரணும்... குளிருக்கு ஸ்வெட்டர், சட்டை அப்படின்னு போடு சமாளிச்சுடலாம் (எனக்கு சீனாவில் -1 டிகிரியில் அனுபவம் உண்டு). இந்த புழுதி காத்தை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.
//

வாங்க இராகவன் ஐயா! ஐயோ நொம்பக் குளிருங்க, நீங்க சொல்லுறதும் சரிதான். ஆமா, திருச்சிக்காரப் பயலைக் காணங்களே?

பழமைபேசி said...

// தமிழன்-கறுப்பி... said...
:)
//

தமிழ் இராசா,

நல்ல சுகம்தானே? ஐ சே, நான் கொழும்புல கனகாலம் நிண்ட நான் என்ன? பொடியன்களோட ஓடித் திரிஞ்சதென்ன? விட்ட பகிடிகளென்ன? அதுவெல்லாம் சொல்லி மாளாதென்ன... அந்தப் பாணும் சம்பலும், இடியாப்பௌம் இறைச்சிக் கறியும்.... கூடவே சப்பட்டை ஒன்டும் இருந்தால், எப்பிடி இருக்கும் என்டு நீரே நினைச்சிப் பாரு ஐ சே!

Machi said...

இதன்ன அக்கப்போரா போச்சுன்னு சலிச்சுக்காம கொங்கு தமிழ் அகராதில அக்கப்போருக்கும் பொருள் போடுங்கோ. அப்பதான் மத்தவங்களுக்கு புரியும்.

பழமைபேசி said...

//குறும்பன் said...
இதன்ன அக்கப்போரா போச்சுன்னு சலிச்சுக்காம கொங்கு தமிழ் அகராதில அக்கப்போருக்கும் பொருள் போடுங்கோ. அப்பதான் மத்தவங்களுக்கு புரியும்.
//


நன்றிங்க.... போடுறேன்!

sukan said...

//சரி, குறுக்க பேசாம வெவரமா கதையக் கேளு. சென்னியப்பனுக்கு எட்டு ஏக்கரா செங்காடும், ஒரு வள்ளம் எரங்காடும் இருக்கு. நல்லா, "ஊம்" போட்டுக் கேக்கோனும். //

அருமையாக எழுதுகின்றீர்கள். இதில செங்காடு, எரங்காடு என்றால் என்ன? வளவுக்காணி வயல்காணி அப்படியா?

பழமைபேசி said...

//அருமையாக எழுதுகின்றீர்கள். இதில செங்காடு, எரங்காடு என்றால் என்ன? வளவுக்காணி வயல்காணி அப்படியா?//

கிட்டத்தட்ட அந்த மாதிரிதான்... மண்ணின் நிறமும் கூட....செம்மண்ணாக இருந்தால் செங்காடு, கருப்பும், சிவப்பும் கலந்தது போல இருந்தால் எரங்காடு, கருப்பாக இருந்தால் கரிசல் காடு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட்ரா சக்கைன்னானாம்

ஏ பின்னிட்டீங்கப்பு.

ஊட்ல இருக்குற சின்ன அம்மிணி கேட்டதா சொல்லிப்போடுங்க.

பொறவா வாரேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க ஊட்ல ஓரியாட்டம் வந்தா நீங்க கொடம் தண்ணி குடிப்பீங்களாமே.

அப்பிடியா.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
அட்ரா சக்கைன்னானாம்

ஏ பின்னிட்டீங்கப்பு.

ஊட்ல இருக்குற சின்ன அம்மிணி கேட்டதா சொல்லிப்போடுங்க.

பொறவா வாரேன்.

//

அப்பிடிப் போடுங்க! உங்களுக்கும் கோயமுத்தூர்ப் பழம நல்லா வருதுங்கோய்!!

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்க ஊட்ல ஓரியாட்டம் வந்தா நீங்க கொடம் தண்ணி குடிப்பீங்களாமே.

அப்பிடியா.
//

நல்லாச் சொன்னீங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல விடயம் மிக ரசிக்க கூறியுள்ளீர்கள்.
எங்க பக்கம் "குரைக்கிற நாய்க்கு கோல் கொடுக்காக் கூடாது "என்பார்கள்

பழமைபேசி said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நல்ல விடயம் மிக ரசிக்க கூறியுள்ளீர்கள்.
எங்க பக்கம் "குரைக்கிற நாய்க்கு கோல் கொடுக்காக் கூடாது "என்பார்கள்
//


வருகைக்கும், பாராட்டுதலுக்கும், மேலதிகத் தகவலுக்கும் நன்றிங்க! அடிக்கடி வந்து போங்க!! ஓம், எனக்கும் தெல்லிப்பளை, தாவடி, புத்தூர், உடுப்பிட்டி எல்லாம் பரிச்சம்தான்.

குமரன் (Kumaran) said...

நல்லா கதை சொல்றீங்க. ரொம்ப நல்லா இருந்துச்சு.

பழமைபேசி said...

//குமரன் (Kumaran) said...
நல்லா கதை சொல்றீங்க. ரொம்ப நல்லா இருந்துச்சு
//

வாங்க‌, வ‌ண‌க்க‌ம்! ந‌ன்றிங்க‌!!

சரண் said...

//யாரு, மேவரத்துக்கரை சூர்யாத் தம்பியா? கண்ணு, நல்ல சேமந்தானோ? என்ன நொம்ப நாளா நம்ம ஊட்டுத் திண்ணைக்கே வல்லியே?
//

இல்லீங்.. நானு லிங்கோனவலசு கடக்கார்ரு பேரனுன்ங்..

எல்லாஞ் சேமந்தானுங்..எல்லா நம்ம பவுதியாத்தா புண்ணியத்துல வண்டியோடுதுங்..

தெனிக்கும் பொழுதோட வந்து கொஞ்ச நேரம் உங்க திண்ணைல காத்தாட உக்கறனும்னு ஆசதானுங்.. ஆனா வேல வெட்டி முறிக்குதுங்களே.. என்ன பண்ணறது..

நேரங்கெடைக்கும் போது சித்த நேரம் உங்கக்கிட்ட பேசிட்டுப் போறது மனசுக்கு சந்தோசமா இருக்கறதென்னவொ நெசந்தான் போங்க..

பழமைபேசி said...

//சூர்யா said...
//யாரு, மேவரத்துக்கரை சூர்யாத் தம்பியா? கண்ணு, நல்ல சேமந்தானோ? என்ன நொம்ப நாளா நம்ம ஊட்டுத் திண்ணைக்கே வல்லியே?
//

இல்லீங்.. நானு லிங்கோனவலசு கடக்கார்ரு பேரனுன்ங்..

எல்லாஞ் சேமந்தானுங்..எல்லா நம்ம பவுதியாத்தா புண்ணியத்துல வண்டியோடுதுங்..

தெனிக்கும் பொழுதோட வந்து கொஞ்ச நேரம் உங்க திண்ணைல காத்தாட உக்கறனும்னு ஆசதானுங்.. ஆனா வேல வெட்டி முறிக்குதுங்களே.. என்ன பண்ணறது..

நேரங்கெடைக்கும் போது சித்த நேரம் உங்கக்கிட்ட பேசிட்டுப் போறது மனசுக்கு சந்தோசமா இருக்கறதென்னவொ நெசந்தான் போங்க..
//

நன்றிங்கோ...