கோயிலோட கொடி மரத்துக்கு, அழகான சிற்பக் கூடத்தை வடிவமைச்சு, அதுக்கு மேலதான் தீபம் ஏத்துறது. ஊரே கூடும், அந்த பதினாலு நாளும் வெகு விமரிசையா இருக்கும். கடைசி நாள் அன்னைக்கு தாங்க, வெடிகளும், சூந்தும், சொக்குப்பனையும் களை கட்டும். வெடிய வெடிய சிறப்பா இருக்கும். நாம பாட்டெல்லாம் பதிஞ்சிட்டு வர்றம் இல்லீங்களா, அப்ப சூந்து ஞாவகம் வர, சூர்யா அவிங்ககிட்ட அதுக்கான பாட்டைக் கேக்க, அவரு தெரியாதுன்னு சொல்லிப் புட்டாருங்க. சரிங்க, எனக்குத் தெரிஞ்ச மேலதிக விபரங்களைப் பாக்கலாம் இப்ப.
தீபம் வெச்சி, அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, ஆம்புளைப் பசங்க அவிங்க ஆட்டத்தை ஆரம்பிச்சிருவாங்க. அதுக்குத் தேவையான சூந்தை முன்னாடியே தயார் பண்ணி வெச்சிருப்பாங்க. திறவக்கொடி(பிரிமனை), இல்லீன்னா வட்டமா இருக்குற எதனா ஒன்னை துணியால சுத்தி, அதை தீபத்துக்கு வாங்கி வெச்சு இருக்குற எண்ணையில ஊற வெச்சிடுவாங்க. அந்த வட்டமா இருக்குறத, நாய்ச் சங்கிலி, இல்லீன்னா உறி தொங்க உடுற சங்கிலியோட ஒரு கொணை(முனை)யில கோத்து விட்டுடுவாங்க. மறு கொணைய கையில வாகாப் புடிச்சுக்குற மாதர ஒரு குச்சியோட கட்டி வெச்சிருப்பாங்க. இதைத்தாங்க சூந்துன்னு சொல்லுறது. சூந்துன்னா கொடும்பாவி எரிக்கிறதுன்னும் ஒரு அர்த்தம் இருக்கு.
தீபம் வெச்சி அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, இதைத் தீயில பத்த வெச்சி, லாவகமா சுழட்டி சுழட்டி வெளையாடுவாங்க. காலுக்குள்ள உட்டு சுத்துவோம். தலைமேல சர் சர்ன்னு சுத்துவோம். இப்பிடி அவனவன் அவனவன் திறமையக் காமிப்போம். சும்மா சுத்துனா, ஆட்டம் வாட்டம் அவ்வளவு நல்லா இருக்காது. சுத்தி இருக்குறவிங்க, அதுக்குன்னு இருக்குற பாட்டுகளைப் பாடுவாங்க. பாடப் பாட, சுதியும் ஏறும். ஆனா, அந்தப் பாட்டுகெல்லாம் கொச்சையாவும், பாமரத்தனமாவுந்தான் இருக்கு. கொஞ்சமா நல்லவிதமான பாட்டுகளும் இருக்கு. இஃகிஃகி! எனக்கு ஞாவகம் இருக்குறதெல்லாம், மோசமான பாட்டுகதேன்.
படலைச் சாத்தி இருக்கையிலே
............................... (தணிக்கை, இஃகிஃகி)
.....................................................
சூந்தோ சூந்து!
மேக்கால ஊட்டு மாரியப்பனுக்கு
தும்மல் வந்துச்சாம்
செவுட்டுச் சிவகாமிக்கு
ஒடனே மாரு வலிச்சதாம்
மாரு வலிக்குதுன்னு
மாரியப்பன் ஓடி வந்தானாம்
ஓடி வந்த மாரியப்பனுக்கும்
செவுட்டுச் சிவகாமிக்கும்
சூந்தோ சூந்து!
சொக்கப் பனை/ சொக்கப் பானை எரிக்குற வழக்கமும் இருக்கு. அதாவது, சொக்கர் வந்து காமனை அழிச்சதை ஞாவகப் படுத்துற விதமா, பனையோலைல குச்சு கட்டி, அதையும் கார்த்திகைத் திருநாள் அன்னைக்கு எரிப்பாங்க. அந்த சூந்துப் பாட்டுக தெரிஞ்சா, எனக்கு சொல்லுங்க. அப்புறம், அடுத்த கார்த்திகைக்கு நீங்களும் சூந்து வெளயாடுங்க... இஃகிஃகி!