நாகரிகம், பண்பாடு, வாழ்வுமுறை என்பனவற்றை, உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்பு, உலகப் பொருளாதாரமயமாக்கலுக்குப் பின்பு என நாம் பகுக்கலாம். என்ன காரணம்? பல காரணங்கள். முக்கியமாக, நகரமயமாதல், தொழில்மயமாதல், உலகளாவிய தகவற்தொழில்நுட்பத்தின் காரணம் மனிதனுக்கான தன்னார்ந்த வேலைப்பாடுகள் என்பவற்றைச் சொல்லலாம்.
வேளாண்மை, இயற்கைசார் தொழில்களான மீன்பிடி, வேட்டையாடல், குடிசைத்தொழில்கள் போன்றவையெல்லாம் கணிசமாகக் கைவிடப்பட்டு மக்கள் தொழிற்சாலைகளுக்குச் செல்வது தேவையாகிப் போனது. அதன்நிமித்தம் ஊரகங்களிலிருந்து நகரங்களை நோக்கி, அடுக்ககங்களை நோக்கிப் பயணிக்கப்பட்டனர். செல்போன் என்பது, கணினி, டிவி, தந்தி, தபால், சினிமா, நாடகம், விளையாட்டு எனப் பலவற்றையும் தன்னகத்தே இழுத்துக் கொண்டது. பிழைப்புக்கொரு வேலை, வேலை தவிர்த்த பொழுதில் செல்ஃபோன் என்றாகிவிட்டது. இதனாலே வாழ்வுமுறையில் பெருத்த தாக்கம். மனிதனை மனிதன் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றாகிவிட்டது. உலகின் மக்கள்தொகை சரியும் என்பது கணிப்பாக இருக்கின்றது. சில பல நாடுகளிலே ஏற்கனவே மக்கள்தொகை குறையத் துவங்கி விட்டது. தாம்பத்திய வாழ்க்கையைக் கூட தகவற்தொழில்நுட்பம் விழுங்கிக் கொண்டது. இனப்பெருக்கத்துக்கு ஊட்டத்தொகை அறிவிக்கப்படுகின்றது. பையன்களை ஆண்மைமிகு பையன்களாகப் பள்ளிகள் ஆக்கித்தர வேண்டுமென சீனநாட்டுக் கல்வித்துறை அறைகூவல் விடுக்கின்றது.
உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்பு(உ.பொ.மு) மக்கள் பழைய வாழ்வுமுறையின் பண்புகளை அறிந்தவர்கள். உ.பொ.பி மக்களுக்கோ அவற்றை அறிந்த கொள்ள நாட்டம் இல்லை. அல்லது உ.பொ.முவினர் சொன்னாலும் புரிவதில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, உ.பொ.மு மக்கட்தொகை வேகமாகக் கரைந்து வருகின்றது. எஞ்சி இருக்கும் உ.பொ.முவும் பழையனவற்றைக் கடாசிவிட்டு(இயலாமைதான்) உ.பொ.பி வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். அதன்விளைவாகப் பல மேம்பாடுகள், கூடவே பல பின்னடைவுகள். உலகமயமாக்கலின் பொருட்டு, மேலைநாட்டுப் பழக்கங்களும் இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன. தவறில்லை. ஆனால் நல்லபலவற்றையெல்லாம் மக்கள் கண்டுகொள்வதில்லை. அந்நிய நாட்டில் வாழும் நம்மவர்கள் சொன்னாலும், ‘இவன் அங்கிருப்பதால் நமக்குப் பாடமெடுத்துப் பகட்டுப் பசப்புக் காட்டுகின்றான்’ எனும் மனம் மேலிடுகின்றது. இதில் முக்கியமானவொன்றுதான், சாவு, சாவினை எதிர்கொள்தல், துயரில் பங்குபெறலுக்கான முறைமைகள் என்பதும்.
கிராமத்திலே சாவு நேர்ப்பட்டால், ஊருக்கே அது துக்ககாலம். ஊர்வாயிலில் இருக்கும் தோரணங்கள் அவிழ்க்கப்படும். கோலங்கள் போடப்படாது. வாசல்கள் தெளிக்கப்படாது. நல்லடக்கம் முடிந்தபின்னர்தாம், எல்லா வீட்டு வாசல்களிலும் வாசற்தெளிப்பு இடம் பெறும். ஊருக்குள்ளே நல்லகாரியங்கள் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படும். இப்படியெல்லாம் மரபுகள் இருந்தன. தற்போது அப்படியில்லை. அதைத் தவறென நாம் கருதலாகாது. ஆனால் அதே வேளையில், அதற்கான நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்தானே? ஊரே சேர்ந்து, அவரவரது அன்றாடப் பணிகளைக் கைவிட்டுவிட்டு துக்கம் கடைபிடிக்க வேண்டுமென்பதல்ல. ஆகக் குறைந்தபட்சம், உற்றார், உறவினர், நண்பர்கள் துயராற்றப்படுகையில் கலந்து கொண்டாக வேண்டும். மேலைநாடுகளிலே அதற்கான நெறிமுறைகள் உண்டு. பணிபுரிகின்ற அலுவலகம் துயராற்றுப்படுகையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தொடர்புடைய சமயம்சார் அமைப்புகள் நேரடியாகக் களத்தில் இறங்குகின்றன. சட்டதிட்டங்களிலே அவற்றுக்கான காப்பீடுகள், முறைமைகள், துயர்காலப்பயனீடுகள் எனப்பலவற்றுக்கும் இடமளிக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றையெல்லாம் மக்கள் பேசித்தான் கடக்க வேண்டும். தனிப்பட்ட உள்ளக்கிளர்ச்சிகளுக்காக அடுத்தவரது மனத்தை நோகடிக்கச் செய்யும் மீம்களையும், ஃபேக்வீடியோக்களையும் பகிர்ந்து சுய இன்பம் கொள்வதிலே இல்லை மேம்பாடு. அவையெல்லாம் அவரவர் மனத்தின் கோணல்களாகப் மனப்பதிவில் நிலைபெற்று, மன அழுத்தம், சோகை, வாட்டம் போன்றவற்றுக்குத்தான் வழிவகுக்கும்.
ஒரு நண்பனாக, துயர்காவியிருப்பவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்?
நேராகச் சென்று சந்தித்துக் கைகளைக் கோர்த்துக் கொண்டாலே போதும். துயரில் ஆழ்ந்திருப்பவருக்கு பேராதரவுச் சமிக்கைகள் தொடுவுணர்வு வழியாகப் பாய்ச்சலெடுக்கும். செல்லவில்லை. என்ன நடக்கும்? அன்பார்ந்தவரின் மரணம், வெற்றிடம் என்பது ஒரு வலியென்றால், இப்படியானவர் வரவில்லையே என்பது பெருவலியாக உருவெடுக்கும். அனாதை போல அவர் உணருவார். அதனாலே நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை போன்ற சிக்கலகள் உருவெடுக்கும். மரணத்தின் காரணம் ஏற்பட்ட வெற்றிடத்தைக் காட்டிலும், ஏதற்றதன் பெருவலி உளைச்சலைப் பன்மடங்காக்கும்.
துயராற்றுதலின் பரிமாணங்களைத் தெரிந்து வைத்துக் கொள்தல் அவசியம். இழப்புக்குள்ளானவரது உடல்நலம், மனநலம் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத் தேவைகள், அன்றாடத் தேவைகளில் நாட்டம் குறையக் கூடும். அப்படியான நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஏதுவாக இருந்து தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். அவையாவற்றுக்குமான பணச்சூழ்நிலை தேவைப்படாமல் இருந்தாலும் கூட, அவர்களின் பணிகளில் தொய்வேற்படலாம். அதனைக் கண்டு உதவுவது தேவையானது.
அவர்களைப் பேசவிட வேண்டும். அழவிட வேண்டும். அவர்கள் பேச, நாம் பொறுமையாகச் சொல்வதைச் சகிப்போடு கேட்டுப்பழகுதல் நன்றாம். ஒரே விசயத்தை, இழந்தவரின் நினைவுகளை, இப்படிப் பலதையும் அவர்கள் கொட்டித்தீர்க்க இடமளிக்க வேண்டும். அப்போதுதான் மனத்தின் பாரம் குறைந்து அது சமநிலைக்கு ஆட்படும். சமநிலையை எட்டினால்தான் அவர்களின் சாமான்யவாழ்க்கை நடைமுறைக்கு வரும்.
குற்றேவற்பணிகளைச் செய்து கொடுக்கலாம். வீட்டுப் பராமரிப்பு வேலைகளில் பங்கெடுக்கலாம். உணவுக்கான தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்கலாம். குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, கவனிப்புகளிலே பங்கெடுக்கலாம். மின்மயானம் சென்றோம் வந்தோமென இருந்தகாலும் போய், அலைபேசியில் சடங்காகப்பேசும் காலம் வந்தாகிவிட்டது. இழந்தவர் எரியூட்டப்பட்டநாள் மாலைநேரத்து வீட்டை எண்ணிப் பாருங்கள். வெறுமையாகிக் கிடக்கும் வீட்டிலே சிலர், குறிப்பாக நண்பர்கள் சிலர் இருக்குங்கால் அதைவிடச் சிறந்த தொண்டு வேறெதுவும் இருக்க முடியாது. சாதல் என்பது விடுதலை. வலியில்லை. ஆனால் சாதலின் பொருட்டு இழப்பை நேர்கொள்ளும் அந்த முதற்சிலநாட்களின் வெறுமைதான் மரணவலி என்பதாகும். ஆகவே அப்படியான பொழுதில் உடனிருத்தல்தான் மனிதனின் தலையாயக் கடமை.
துயரை, துக்கத்தை, மடைமாற்றிப் பொழுதினைக் கழித்தல் எதிர்விளைவுகளையே பெருக்கும். ஆமாம். துணை இல்லாப் பொழுதுகளில், வெறுமையும் இழப்பும் காவிக்கொள்ளும் அபாயம் உண்டு. ஆகவே துயரை, துக்கத்தைப் பங்குபோடத் தலைப்பட வேண்டும்.
கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லவில்லையாயினும் துயராற்றுப் பொழுதுகளுக்குச் சென்றே தீர வேண்டும். அதன்வழி, அவரவர் மனத்துக்கும் நலம் பயக்கும். இழந்தவரின் கோபதாபங்களுக்கு ஆட்பட்டிருக்கலாம். அல்லது, அவரது ஆசைகளை நிறைவேற்றித் தராமல் இருந்திருக்கலாம். அவையெல்லாம் குற்றவுணர்வுகளாக மாறி நம்மைத் துரத்தத் துவங்கலாம். துயராற்றில் கலந்துகொள்வதின்வழி, வடுக்கள்நீங்க வழி பிறக்கும். You can’t truly heal from a loss until you allow yourself to really feel the loss. The pain passes, but the beauty remains. Let's reach out to our near and dear as and when it is warranted.
Grieving doesn’t make you imperfect. It makes you human. -Sarah Dessen
No comments:
Post a Comment