அப்படியானால் தன்னாட்சி(independence), தன்னுமை (liberty), விடுதலை(freedom) என்பவற்றுக்கான வேறுபாடு என்ன?
அந்நிய அடிமைத்தனத்தினின்று விடுபட்டுக் கொள்வது விடுதலை. தனக்கான ஆட்சிமையைத் தானே நிறுவிக் கொள்வது தன்னாட்சி. தன்னுடைய இயல்பைத் தன்னுள்ளே செயற்படுத்திக் கொள்வது தன்னுமை. உரிமைப் போர்களினூடாக விடுதலை பெற்றுக் கொள்கின்றோம். சட்டதிட்டங்களைக் கட்டமைத்து நெறிப்படுத்திக் கொள்வதன் வாயிலாக தன்னாட்சியை அமைத்துக் கொள்கின்றோம். தன்னுமையை எப்படிச் செயற்படுத்திக் கொள்வது?
தனக்கான உரிமைகளை, ஆசைகளைச் சமூகத்துக்குப் பங்கம் நேராத வகையில், தன்னியல்போடு செயற்படுத்தி முழுமுற்றாகத் தன் போக்கில் வாழத்தலைப்படுவதே தன்னுமையின் இலக்கணமாய் இருக்கும். பொதுச்சமூகத்துக்குக் கேடு நேராதவரையில், அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோயெனக் கவலை கொள்ளத் தேவையில்லை. சுருங்கக் கூறின் அடுத்தவரின் அபிலாசைகளுக்காக நாம் வாழ்தல், நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பானதேயாகும். எப்படி? அவர் தவறாக எண்ணுவார், இவர் தவறாக எண்ணுவாரென்றோ, அல்லது அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும், இவரிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென்றோ வாழத்தலைப்படும் போது நாம் நம் வாழ்க்கையை வாழவில்லை, தன்னுமையை இழந்து விட்டோமென்றே பொருள்.
மார்கஸ் எரேலியஸ் சொல்லியதினின்று. ஒரு விடுதியில் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர்.
“அடுத்தவரின் எண்ணங்களுக்குட்பட்டு இருந்தால், உனக்கான எதையும் உன்னால் செய்து கொள்ள முடியாது”
“என்ன சொல்கின்றாய்?”
“நீ, நீயாக இருக்கும் போதுதான் நீ தன்னுமையுள்ள மனிதன். அந்த மரத்தைப் பார். அது, அதுவாக இருக்கின்றது. அதன் வெளிப்பாடாக, பழங்களும் ஆக்சிஜனும் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன. அதுபோலவே, நீ, நீயாக இருக்கும் போதும் ஏதோவொன்று சமூகத்துக்கு உதவிகரமாய் அமையும்.”
“அப்படியானால், நான் நானாக இல்லையா இப்போது?”
“அப்படியல்ல. மரத்துக்கும் சவால்கள் உள்ளன. நீர் இல்லாமற்போகலாம். சூரிய ஒளி கிட்டாமற்போகலாம். சூழல் மாசுபட்டுப் போகலாம். நோய்நொடிகள் வரக்கூடும். அத்தனையையும் சமாளித்து வரும் போது, பழங்களும் ஆக்சிஜனும் அவுட்புட். அதுபோலத்தான், அடுத்தவரது எண்ணங்கள் எனும் இடர்ப்பாட்டிலிருந்து சமாளித்து வரும் போது உன்னிலிருந்தும் இன்னும் மேம்பட்டவை சமூகத்துக்குக் கிடைக்கும்”
”ஆமாம். நிறைய நேரங்களில் நான் என்னை மற்றவருக்காக ஒப்புக் கொடுத்துவிடுகின்றேன்தான். என்ன செய்வது?”
“எல்லாரும், எல்லா நேரமும் நம்மை விரும்ப வேண்டுமென்கின்ற எண்ணத்தைக் கைவிடல் நன்று. தயக்கமின்றி நம் கருத்தைச் சொல்லத் தலைப்பட வேண்டும். உயர்வு தாழ்வில்லை. அடுத்தவரினின்று அறிந்து கொள்வது வேறு; அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வது வேறு. நம்மில் பலரும் அடுத்தவரின் பார்வைக்குக் கட்டுப்பட்டோ, அறிவுறுத்தலுக்கிணங்கவோ வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுமையற்றவர்களாகவே இருக்கின்றோம். Let's be cognizant about propaganda and hidden agenda nonsense.”
Life without liberty is like a body without spirit. -Khalil Gibran
No comments:
Post a Comment