நவீன தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மாந்தனின் வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கின்றதோ, அந்த அளவுக்குச் சிக்கலாக்கியும் இருக்கின்றது. சுயமுரண் கொண்டதாக இருக்கின்றதேயென நீங்கள் யோசிக்கலாம். ஆனால் முரணுடையது அல்ல. பயன்பாட்டில் மேன்மையைக் கொடுத்திருக்கின்றது. ஆனால் பயன்பாட்டுக்கான நோக்கத்தில் நச்சுப்பிறழ்வுக்கும் வீரியத்தைக் கொடுத்திருக்கின்றது.
பணம் பண்ணுவதற்காக நைச்சியமாக அறிவியற்கூறுகளோடு நம்பிக்கையெனும் உணர்வு யுக்தியைக் கலந்து புதுப்புது வடிவங்களில் ஏமாற்று வழிகளைக் கையாள்வது; அதையே ஆங்கிலத்தில், போலி அறிவியல்/Pseudoscience என்பர்.
பெர்முடா டிரையேங்கிள்
குறிப்பிட்ட முக்கோண வடிவிலான வானவெளி, கடல்வெளியான பரப்பளவு. அதில் 1900ஆம் ஆண்டிலிருந்து இன்னின்ன விமானங்கள், இன்னின்ன கடற்போக்குவரத்துக்கலங்கள் காணாமற்போயின. விபத்துக்குள்ளாகின. புள்ளி விபரம் தரப்படும். அனைத்தும் உண்மைதான். இதை வைத்து, ஒரு கதை. வடிக்கப்படும் கதையின் போக்கு, சாமான்யனை நம்பிக்கைக்குள் ஆழ்த்தும். அந்த நம்பிக்கையானது காலங்காலமாகக் கடத்தப்பட்டு வரும் போது, உண்மையென்பதாகவே நிலை பெற்றுவிடுகின்றது.
ஓர் ஊரில் ஆயிரம் பேர் இருக்கின்றனரென வைத்துக் கொள்ளுங்கள். 200 பேர் இதை நம்புகின்றனர். 750 பேர் இதுகுறித்துப் பேசவோ கேள்விப்படுவதற்கோ கால அவகாசமில்லை. வாய்ப்பில்லை. எதிர்கொள்ளவில்லை. ஒரு ஐம்பது பேர் மாற்றுக்கருத்து வைக்கின்றனர் அல்லது எதிர்வினையாற்றுகின்றனர். என்ன நடக்கும்? அந்த 200 பேரும் சேர்ந்து 50 தனிப்பட்ட நபர்களை நோக்கி கேள்விக்கணைகள், கேலி, நையாண்டி, திசை திருப்பல், புரட்டு, இன்னபிற வாதவிவாதக் கூறுகள் கொண்டு எதிர்கொள்ளும் போது, 50 பேர் குழு ஆள் மாற்றி ஆளுடன் சமர் செய்யத் தலைப்பட்டு ஓய்ந்து விடுவர்; நிலைகுலைந்து போவர். பார்ப்போருக்கு 200 பேர்க்குழு சொல்வதே உண்மையெனத் தோன்றும். அந்த 200 பேர், 500 பேராக மாறக் கூட வாய்ப்புண்டு. அதுதான் எதார்த்தத்தில் நடக்கின்றது.
பெர்முடா பரப்பளவில் இன்றளவும் போக்குவரத்து முனைப்பாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதிகமான கப்பற்போக்குவரத்து நிகழக்கூடிய இடங்களில் இதுவுமொன்று. அதிகமான கப்பற்போக்குவரத்துவிபத்து நிகழக்கூடிய முதற்பத்து இடங்களில் இது இல்லை. ஒரு நம்பிக்கையின் பேரில், இந்தக் கதை இன்றளவும் இடம் பெற்று வருகின்றது. இதற்கான சான்றுகளாக, போக்குவரத்து விபரங்களைக் காண்பிக்கக்கூடிய flightradar, பல்கலைக்கழக ஆய்வேடுகள் முதலானவற்றைக் காண்பித்தால், மலேசிய விமானம் காணாமற்போனதை அறிவியலால் கண்டுபிடிக்க முடிந்ததா? இப்படியாக எதிர்கேள்விகளைக் கேட்டு, அறிவியல் நிறுவனங்களின் இருப்பையே கேலிக்கூத்தாக்கிவிடுவர் இத்தகைய அவ-அறிவியலாளர்களும் நம்பிக்கையாளர்களும்.
ஊடகங்களைப் பாருங்கள். ஒருபக்கம் அச்சுறுத்தும் விதமாக நெகடிவ் செய்திகள் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருக்கும். இன்னொரு பக்கம், அச்சுறுத்தல்களை வெல்லக்கூடிய சக்தி இதுவென்பதான வியந்தோதல்கள் (ரொமாண்டிசைசிங்/குளோரிபையிங்) நடந்து கொண்டிருக்கும். பணம் பண்ணலாம். அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் கத்தரிக்காய் விளைவித்து பலகோடிகளுக்கு அதிபதியான கதைகள். அதே இதழில், விவசாயிகள் தற்கொலை என்பதான செய்திகளும் இருக்கும். இத்தனையையும் கடந்து, உலகம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. சராசரி ஆயுள் கூடி இருக்கின்றது, வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கின்றது, மக்களாட்சி மலர்ந்திருக்கின்றது, ஏழை பணக்காரன் வித்தியாசம் குறைந்திருக்கின்றதென சொல்லிக் கொண்டே போகலாம். எப்படி? அதுதான் அறிவியல். சகிப்பையும் பொறுமையையும் கடமையுணர்வையும் உள்வாங்கிக் கொண்டேவும், அந்த அவ அறிவியலாளர்களுக்குமான சேவைகளையும் ஆற்றி வருவதுதான் காரணம்.
https://plato.stanford.edu/entries/pseudo-science/
Pseudoscience is like a virus. At low levels, it's no big deal, but when it reaches a certain threshold it becomes sickening. - Phil Plait
If 50 million believe in a fallacy, it is still a fallacy. - Prof. Samuel Warren Carey
No comments:
Post a Comment