1/22/2022

கிறுக்கலும் நன்றே

நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்வின் பயனைக் கூட்டும். கடந்து காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் திமிறிச் செல்லும் மனத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவர எத்தனையோ வழிகள் உண்டு. உடற்பயிற்சி, நீச்சல், பாடுதல், இசைப்பயிற்சி, கூட்டுக்கேளிக்கை, விளையாட்டு, இப்படியானவற்றுள் ஒன்றுதாம் எழுதுவதும். மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டேவும் சிவாயநம சொல்வதும், தாளில் ஆயிரத்தெட்டு முறை சிவாயநம எழுதுவதும் ஒன்றுதான். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, அப்படி எழுதுவதும் கூட அனிச்சைச்செயலாக அல்லது மெக்கானிக்கலாக மாறிவிடக் கூடும். அதாவது உடல் இயங்கிக் கொண்டும், மனம் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். ஆக, அதனின்று தற்சிந்தனையுடன் ஏதாகிலும் ஒன்றினை எழுதினால் மனத்துக்கு இன்னும் அது சிறப்புச் சேர்க்கும்.

தற்சிந்தனையென்றால்? சாக்ரடீஸ் உரையாடலின் வழி அறிதலைக் கட்டமைக்கலாமென்றார். தொடர்ந்து வந்த பிளேட்டோ, உரையாடலின் வழி எல்லாராலும் அறிந்திருத்தல் எதார்த்தமாக இராது. ஆகவே அறிந்தோரில் சிறந்தோரைக் கொண்டு மட்டுமே ஆட்சியை, நெறியாள்கையைக் கட்டமைக்க வேண்டுமென்றார். ஆனால் அது எல்லாநிலை மக்களின் குரலையும் கொண்டு வந்து சேர்க்காதென வாதிட்டனர் மற்றோர். இப்படித்தான் படிப்படியாக மக்களாட்சி, மக்கள்குரல், ஜனநாயகம் என்பது நடைமுறைக்கு வந்தது. சரி, நல்லதுதானே? நல்லதுதான். ஆனால், பிளேட்டோ சொல்லிச் சென்றதும் சரியோயெனும் எண்ணமும் வந்து போகின்றது.

எடுத்துக்காட்டாக, யுடியூபை எடுத்துக் கொள்வோம். எதை வேண்டுமானாலும் தரவேற்றலாம். பார்ப்போர் எண்ணிக்கை, பயனர்களுக்கு எந்த வீடியோவை முதலில் காண்பிக்க வேண்டுமென்பதை (டிரெண்டிங்) முடிவு செய்யும். அதுவே இன்னும் கூடுதலாக நிறையப் பேரைச் சென்று சேரும். தரம், உண்மை என்பதெல்லாம் இந்த அல்கோரிதத்தில் இல்லை. மதிப்புக் கொண்ட பதிவுகள் புதைந்து விடுகின்றன. மக்களுக்கு விருப்பமானவை வெல்லும். மக்களின் மனமோ, சார்புத்தன்மைக்கு சொம்படிக்கக் கூடியதை விரும்பக் கூடியது. பிளாட்பார்ம் புரவைடருக்கு, வணிகம் செழிக்க வேண்டும். பொருளின் தரம், நயம், நேர்மை என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த இடத்தில்தான், பிளேட்டோ சொன்னது நினைவுக்கு வருகின்றது.

அறிந்தோரில் சிறந்தோர்? அதையெப்படி வகுத்தெடுப்பது? சிக்கல் நீள்கின்றது. தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்ற நிறுவனங்களெல்லாம், நுட்பத்திற்கும் திறமைக்கும் முன்னுரிமை கொடுக்கின்றன. மக்களைச் சார்ந்தியங்கும் மருத்துவம், உணவு, போக்குவரத்து போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பண்புக்கும் அனுபவத்திற்கும் முன்னுரிமை கொடுக்கின்றன.

தகவற்தொழில்நுட்பம் வழங்கப்படுவது நுட்பத்திறமையானவர்களாலே. தானியக்கமாகச் சேவை வழங்குவதன் பொருட்டு, அவை அப்படித்தான் இருக்கும். தரமானவற்றை நுகர வேண்டுமாயின், நாம்தாம், நேர்மை, வெளிப்படைத்தன்மை, சார்பின்மை முதலான பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டும். பின் அத்தகைய பண்புகளைக் கொண்டேவும், தேவையான எல்லாவற்றையும் மதிப்புணர்ந்து நுகரத்தலைப்பட்டாக வேண்டும். அல்லாவிடில், ஏமாற்றப்படுவோம், ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோமென்பதே மெய்.

சரி, இப்படியான தற்சிந்தனையின்பாற்பட்டு எழுதுதலின் நன்மை? 1. நம் அகம்/புறம் செம்மைப்படுத்திக் கொள்தல் 2. சிந்தனையை வார்த்தெடுத்தல் 3. சொல்லாற்றலை மேம்படுத்திக் கொள்தல் 4. பிறரின் பார்வையை பார்க்கப் பழகுதல் 5. நாடலையும் தேடலையும் விதைத்தல் 6. மக்களொடு பிணைப்புக் கொள்தல் 7. சமூகப்பங்களிப்புச் செய்தல், முதலானவற்றை ஈட்டிக் கொடுக்கும்.

கிறுக்கலும், மனக்கிறுக்கலும் நன்றே! We write to taste life twice, in the moment and in retrospect!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

No comments: