1/26/2022

ஊட்டமிகுதல்

நம் திருமேனி 70% வரையிலும் நீராலானது. எஞ்சியது மட்டுமே திண்மத்தால் ஆனது. அதுபோன்றே நம் வாழ்வின் ஊட்டமும் தொன்னூறு விழுக்காடு வரையிலும் உணர்வுகளால் ஆனது. எஞ்சிய பத்து விழுக்காடுதான் புறவயப்பட்ட பொருட்களால் ஆனது. எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?

வாழ்ந்த வாழ்க்கையும் வாசித்த நூல்கள் கொண்டும் எண்ணமுடிகின்றது. எப்படி? ஊரகத்தில் பிறந்து வளர்ந்த வேளாண்மைச்சூழல். அடுத்து, வாழ்ந்திருந்த பன்னாட்டுச் சமயங்களும் நாடுகளும்(இந்தியா-இந்து, மலேசியா-இசுலாம், சிங்கப்பூர்-பெளத்தம், கனடா/அமெரிக்கா-கிறித்துவம், சைப்ரசு/இசுரேல்-எகுதா,யூதம்) . பணிபுரிந்திருந்த பன்னாட்டுப் பெருநிறுவனங்கள். கூடவே வாசித்த நூல்கள்.

வேளாண்மை செய்ய வேண்டும், பொருட்கள் உற்பத்தி பெருக வேண்டும், மேம்பாட்டுக்கு என்ன அடிப்படை? செய்நுட்பமும் கருவிகளும் அடிப்படை. எண்ணிப் பாருங்கள். ஆணி அடிக்க வேண்டும். ஒரு பெரிய கல்லையோ அல்லது தடிமனான இரும்புக்கனத்தையோ கொண்டு அடித்தால் ஆணி இறங்கி விடும். ஆனால் அந்த கனத்தைச் செல்லுமிடமில்லாம் தூக்கித் திரிய வேண்டும். நேரவிரயமும், ஆற்றல்விரயமும் ஏற்படும். பத்து ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆணிதான் அடித்திருக்க முடியும். உற்பத்தித்திறன் குறைவு. சிறு எடையுடன் கூடிய கனத்திற்கு வால்போன்ற கைப்பிடி, அதைக் கொண்டு அடிக்குங்கால் சுலபமாக அடித்திறக்க முடிகின்றது. அதன் எடையும் குறைவு. இப்படித்தான் சுத்தியல் பிறந்திருக்க முடியும். ஆக, ஒரு எளிய கருவி, உற்பத்தியை, செய்நுட்பத்தை மேம்படுத்துகின்றது. We shape our tools, and afterwards our tools shape us. உணர்வால் கட்டுண்ட மாந்தனுக்கும், செய்நுட்பத்தை மேம்படுத்த சிலபல கருவிகள், உளவியற்கருவிகள் தேவையாய் இருக்கின்றன. அவற்றைக் கண்டு பாவிக்கப்பழகிவிட்டால் ஊட்டமிகு வாழ்வுதான் நம் எல்லாருக்கும்.

நாட்டுப்புற வேளாண் வாழ்வுக்கும் சரி, இந்து, இசுலாம், புத்தம், பெளத்தம், யூத எகுதா, கிறித்துவம், சமயப்பற்றில்லா வாழ்வுமுறைக்கும் சரி, பெருநிறுவன இயக்கத்துக்கும் சரி, பொதுவானது இந்த ஒன்றே ஒன்றுதான். எது? சரடொன்றில் எட்டுவிதமான பூக்கள் கொண்டு கோக்கப்பட்ட மலர்க்கொடிதான் இவற்றுக்குப் பொதுவான ஒன்று. அஃதென்ன அந்த எட்டுவிதமான மலர்கள்?

களைந்துவிடல்/மன்னித்தல்: ஒரு வங்கியில் சிலபல வாராக்கடன்கள் உள்ளன. நிறுவனத்தில் சிலபல காலாவதியான பொருட்கள் உள்ளன. ஸ்டாக்மார்க்கட் ஃபோர்ட்ஃபோலியோவில் சோபிக்காத சிலபல ஸ்டாக்குகள் உள்ளன. காலம்முழுமைக்கும் அதைக் கட்டிக்கொண்டு திரிவார்களா? மாட்டார்கள். அவ்வப்போது கணக்கில் இருந்து கழட்டிவிடுதல் நன்றாம். ஈகோவுக்காக வைத்திருத்தல், வீண்சுமையாகி செலவீனத்துக்கு வழிவகுக்கும். அதுபோன்றதுதான், ஒருவரின்பால், ஒன்றான்பால் வெறுப்போ, மனத்தாங்கலோ இருப்பின் அவ்வப்போது களைந்துவிடல் நன்றாம். அல்லாவிடில் அது மனப்பாரமாகும். கனம் கூடும். கவலைக்கும் மன அழுத்தத்துக்கும், சோகைக்கும் இட்டுச் சென்று வாழ்வின் தரத்தைச் சீர்குலைக்கும். ஆக மன்னித்தல், விட்டொழித்தல் என்பதுவோர் உளவியற்கருவி.

ஊக்கமுறுதல்: மோட்டிவேசன் என்கின்ற பெயராலே, கூட்டியக்கம் என்கின்ற பெயராலே, கதைகள் கொண்டும் கலை, இசை,பாடல்கள்கொண்டும், சொற்பொழிவுகள் கொண்டும் நல்லதொரு ஊக்கமிகு சூழலைப் பெருவணிகநிறுவன எக்ஸ்பர்ட்டுகள்/சமயப்பெரியோரின் பேச்சுகளும் ஆக்கங்களும் இலக்கியங்களும், மாந்தனுக்கு ஊக்கத்தையூட்டிக் கொண்டே இருப்பன. ஆக, ஊக்கமுறுதல் என்பதோர் உளவியற்கருவி.

நோக்கமுறுதல்: இன்னின்ன விளைச்சலால் பணமீட்டி இன்னின்ன காரியங்களைச் செய்தாக வேண்டும், இன்னின்ன செயற்பாடுகளால் இன்னின்னவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும், நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு விற்பனை இன்னதாக இருக்க வேண்டுமென்பதெல்லாம் இலக்குத்தரித்தல் என்பதாகும். ஆக, நோக்கமுறுதல் ஓர் உளவியற்கருவி.

கொண்டாடுதல்: அந்தந்த நேரத்தில் மனமூக்கம் பெறுவதற்காகவும், பாராட்டுதலைத் தெரிவித்து மேம்பட்டுக் கொள்வதற்காகவும், சமயத்திலே, பெருநிறுவனத்திலே, ஊருக்குள்ளே, சமூகத்திலே பலவிழாக்கள் இடம் பெறும். அல்லது, நாமாகவே ஏற்பாடுகள் செய்து கொள்வதன்வழி மனம் புத்துணர்வு கொண்டு புதுப்பாய்ச்சல் பெறுகின்றது. ஆக, கொண்டாடுதல் ஓர் உளவியற்கருவி.

பொறுப்பேற்றல்: இன்ன வேலை என்றில்லை, உயிர்த்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோவொன்றின்பால் உழைக்கப் படைக்கப்பட்டவன். அதன்நிமித்தம் இன்னது செய்துவிடலெனும் பொறுப்பேற்றுக் கொள்தல், மனநிறைவை அவனுக்கு ஈட்டித்தரும். உழைப்பைத் தவிர வேறெதுவுமே மனநிறைவுக்கு இட்டுச் செல்லாது. மனநிறைவு இல்லாதோன் மனப்போதாமைக்கு ஆட்பட்டு அல்லலுறுவான். ஆகவே பொறுப்பேற்றல் என்பதோர் உளவியற்கருவி.

ஈதல்: எல்லா நேரத்திலும் எல்லாரும் அவரவருக்கானவற்றைச் செய்துவிட முடியாது. இளம்பிராயம், மூப்பு, நோய்ப்பு, சுற்றுச்சூழல் போன்றவற்றின் நிமித்தம் அடுத்தவர் உதவியைப் பெற்றே தீர வேண்டும். ஆக, நம்மால் இயன்ற உதவியை நல்குங்கால், நமக்கான உதவியும் எதன்புலத்திலிருந்தோ கிட்டும். அப்படியான ஈதலின் பொருட்டும் மனச்செழிப்பு உண்டாகும். ஆக, ஈதல் என்பதோர் உளவியற்கருவி.

உயிர்நலம்: சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய இயலும். படகு இருந்தால்தான் பயணிக்க முடியும். ஆகவே, உடலும் மனமும் சேர்ந்த உயிர்நலப் பேணல் இன்றியமையாதது. ஆக, உயிர்நலம் என்பதோர் உளவியற்கருவி.

போற்றல்: மாந்தன் கூட்டமாக, இயைந்து இணக்கத்துடன் வாழப்பழக்கப்பட்டவன், படைக்கப்பட்டவன். கூட்டம் கூட்டமாக ஊர்ந்து சென்று சேர்ந்ததாலேதான் அது ஊர். அப்படியான கூட்டத்தில், அடுத்தவரின் திறமைகள், தனித்துவங்கள், ஆக்கங்கள் காணத்தலைப்பட்டால் தயங்காது போற்றலும், கண்டுணர்ந்து உடைத்தாவதும் இணக்கத்தை பாதுகாப்புவுணர்வைக் கட்டமைக்கும். ஆக, போற்றல் என்பதோர் உளவியற்கருவி.

சமயம், நிறுவனம், ஊர், காடு, அது எதுவானாலும் சரி, சரடில் கோக்கப்பட்ட மன்னித்தல், ஊக்கமுறுதல், நோக்கமுறுதல், கொண்டாடுதல், பொறுப்பேற்றல், ஈதல், உயிர்நலம், போற்றல் ஆகிய எட்டுவகை மலர்களாலே ஒருவன் தன் வாழ்வை ஊட்டமிக்கதாக ஆக்கிக்கொள்ளலாம். இவற்றுள் ஒன்று மிகுந்து இன்னொன்று மட்டுப்படும் போது அல்லல் பிறக்கின்றது. மனிதன் உணர்வால் கட்டுண்டவன். மனவுணர்வுப்பொறிகளால் மட்டுமே மேன்மை பிறக்கும்.

Fulfillment result when you feel that you are becoming everything that you are capable of becoming.

No comments: