1/06/2022

காழ்ப்பினை, அவலத்தை(troll)ச் சமாளிக்க ஐந்து வழிகள்

வெறுப்பு, காழ்ப்பு, அருவருப்பு முதலானவை சமூக ஊடகங்களில் ஏன் நிகழ்கின்றது?

1. தன்னுடைய இருப்பின் மீதான நம்பிக்கையின்மை. தன்னுடைய இருப்பைக் காண்பித்துக் கொள்ள, தக்கவைத்துக்கொள்ள, பகடி, கேலி, எள்ளல், ஃபேக்நியூஸ் போன்றவற்றின் மூலம், சார்புநிலை கொள்ளும் போது, சார்புடையவர்களின் ஆதரவு கிட்டும். அப்படிக் கிட்டும் போது ஜனத்திரளில் நாமும் இருப்பதாக உணர்ந்து மனம் ஆசுவாசம் கொள்கின்றது. திருப்தி ஏற்படுகின்றது.

2. நட்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்கோர் எளிய வழி. ஏதோவொன்றின்பால் விருப்பம் கொண்டு, அதன் நிமித்தம் கூட்டுச்சேர்வதைக் காட்டிலும், ஏதோவொன்றின்பால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன்நிமித்தம் கூட்டுச்சேர்வதன் பிணைப்பு மிகவும் இறுக்கமானதாக அமைகின்றது. ஒன்றும் இரண்டும் சேர்ந்து கொள்ள, பலிகடாவாக மூன்றாவதாக ஏதோவொன்று தேவைப்படுகின்றது. அதன்நிமித்தம் அவ்வப்போது அந்த மூன்றாவதைக் குறிவைத்துக் கொள்வது நேர்கின்றது.

3. மேற்கூறிய இரண்டையும் தனதாக்கிக் கொள்ளும் அரசியல், வணிக சக்திகள், இடையறாது அதற்கான உள்ளீடுகளை உருவாக்கி இவர்களுக்கான தீனியாகக் கொடுத்துக் கொண்டேயிருப்பதன்வழி, அவை தனக்கான பயனை ஈட்டிக் கொள்கின்றன.

வெறுப்புப்பதிவுகளில் இருந்து எப்படித் தற்காத்துக் கொள்வது?

1. அப்படியான பதிவுகளை இனம் கண்டுகொள்வது முதற்தேவை. அவற்றை உருவாக்கியவர் யார்? எழுதியவர் யார்? எந்த ஊர்? சோர்ஸ் என்ன? இப்படியான எதுவுமே அப்படியான பதிவுகளில் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது இனம் தெரியாத நிறுவனப் பெயராக இருக்கும். அப்படியானவை புறக்கணிக்கப்பட வேண்டியவை, புறம்தள்ளப்பட வேண்டியவை.

2. வெறுப்பென உணர்ந்ததும் ஒதுக்கப்பட வேண்டும். நிராகரிக்கப்பட வேண்டும். நுகர்தல் மட்டுப்பட வேண்டும். இயலுமாயின், ரிப்போர்ட் அடிக்கப்பட வேண்டும்.

3. சிலநேரங்களில் இப்படியானவற்றைப் பகிர்வது, எழுதுவது, நம் நண்பர்களாகவோ உற்றார் உறவினராகவோகூட இருக்கக் கூடும். அப்படியான நேரங்களில், அவற்றுக்கு உகந்தமுறையில் மறுமொழிதல் வேண்டும். அவையாவன கீழேவருமாறு,

  1. பேசுபொருள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். மாறாக, தனிமனிதர்மேல் பாயக்கூடாது. ஒருபோதும் பெர்சனல் ஸ்கோர் செட்லிங் என்பதாக இருந்துவிடக் கூடாது.
  2. உரிய காரணம், ஏரணம், தரவுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
  3. வெறுப்பின், போலித்தன்மையின் இடங்கள் கோடிட்டுக் காண்பிக்கப்படுதல் வேண்டும். மாற்றுப்பார்வையைப் பொதுவில் வைக்க வேண்டும்.
  4. சொற்களில் நாகரிகம் கடைபிடிக்க வேண்டும். தகிப்பு, சூடு, வேகம் முதலானவை மட்டுப்படுதல் நன்று.
  5. இம்ப்பல்சிவாக, உடனுக்குடனேயெனும் போக்கினைக் கைவிட்டு, இடைவெளியிட்டுக் கருத்துரைத்தல் நன்று.
  6. வசைக்கு இனிய சொல்லைப் பதிலாக்கிவிட வேண்டும்.
  7. சிரிப்பால் வெறுப்பின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்தல் நன்று.

4. வெறுப்பும் சினமும், கூட்டங்களில், குழுமங்களில் மட்டுமே கொப்பளிக்கக் கூடியன பெரும்பாலும். மந்தையாட்டு மனோபாவம் என்பது மாந்தனுக்கும் பொதுவானதுதான். துவண்டு போகத் தேவையில்லை. பதற்றம் கொள்ளத் தேவையில்லை. தன் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு முதன்மை. அதற்கடுத்து, எளிய முறையில் பின்வாங்கிக் கொள்தல் நலம். இணையத்தினூடாக எனும் போது, அமைதியுடன் இருந்து, தனக்கான வாய்ப்பு வரும் போது தரவுகளைச் சுட்டிக் காட்டித் தன்னைப் பணிவுடன் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். தனிமனிதர்களுக்கிடையேயானது என்பதனின்று, பேசுபொருள் குறித்த கருத்துகளுக்கிடையேயானது என்பதாகக் கட்டமைத்தல் நலம்.

5. தற்காப்பு மிக அவசியம். நாம் பேசியதினின்று ஒருபகுதியை மட்டும் சுட்டிக் காட்டி வில்லனாக்க முயலவும் செய்வார்கள். நண்பர்கள்தாம். ஆனால் அவர்கள் வெறுப்புணர்வுக்கு இரையாகிப் போன அபலைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படியான நேரத்தில், எதிர்வினை இல்லாமல் இருப்பது நலம். எல்லாம் தணிந்தபின், பேசலாம். சுட்டிக் காண்பிக்கலாம்.

வெறுப்புணர்வைச் சமாளிப்பது எவ்வளவு முக்கியமோ, அதற்குச் சற்றும் குறையாதது வெறுப்புணர்வுக்கு, ஃபேக்நிவூசுகளுக்கு ஆட்படாமல் இருப்பதும். நமக்கு இருப்பது ஓர் உடல், ஓர் உயிர். மற்றவர்க்கு ஒப்புக் கொடுப்பதற்கல்ல அவை. நம் வாழ்க்கை நம்வசமாகட்டும்! சியர்ஸ்!!

No comments: