மாந்தராகப் பிறந்த எல்லாருக்குள்ளும் பகுத்தறிவு இயற்கையிலேயே அமைந்துள்ளது. அதன் பயன்பாட்டில்தான் ஆளுக்காள் வித்தியாசம். எந்தவொரு மனிதனும் தோராயமாகக் குறைந்தபட்சம் அறுபது விழுக்காட்டு அளவுக்குப் பகுத்தறிவைப் பாவிக்கின்றான். எஞ்சியதில்தான் ஆளுக்காள் வேறுபாடுகள்.
பகுத்தறிவுச் சிந்தனைக்கு முந்தைய நிலைதாம் உய்நிலைச் சிந்தனை (critical thinking) என்பதும், துய்நிலைச் சிந்தனை (passive thinking) என்பதுமாகும். துய்நிலைச் சிந்தனையானது பகுத்தறிதலுக்கு இட்டுச் செல்லாது. ஏன்?
ஒரு பற்றியம்(subject) கிடைக்கின்றது. சிந்தனை வயப்படுகின்றோம். இருவிதமாக அது எதிர்கொள்ளப்படுகின்றது. பார்த்தவுடனே, கடந்தகால அனுபவம், நம்பிக்கை, விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஒரு முடிவினை மேற்கொள்வது துய்நிலைச் சிந்தனை. காரணம்(reason), ஏரணம் (logic), சான்றுகள்(evidence), தரவு(fact) முதலானவற்றைத் தேடவும் நாடவும் தலைப்படுவது உய்நிலைச் சிந்தனை. உய்வது, தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. துய்வது, இருப்பில் இருப்பதை அனுபவிப்பது. உய்வுற்றபின்னர், காரண ஏரணம், தரவுகள், சான்றுகளைக் கொண்டும் கலந்துரையாடியும் ஒரு முடிவுக்காட்படுவது பகுத்தறிதல். கலந்துரையாடலுக்கான தேவையென்ன?
காலை 10 மணி: அலெக்சாண்டர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “உழைத்துப் பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஏமாறுவோர், ஏமாற்றுவோர் இருக்கும் உலகில் நாம் ஏமாறுவோனாக இருத்தலாகாது. இவருக்கு நாம் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? கூடாது.”
காலை 10 மணி: பீட்டர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “ஏன் இந்தப் பெரியவருக்கு இப்படியானதொரு நிலை? இந்த உலகம் இன்னும் சிறப்பாக இருக்கலாம். மனிதனை மனிதன் அரவணைத்து எல்லாரும் நல்லபடியாக இருந்தால்தான் என்ன? இப்படியான இழிநிலைக்கு ஒருவிதத்தில் நானும் காரணம். ஒரு பத்து டாலர் கொடுப்போம்!.”
தெருவோரம் கையேந்தி நிற்கும் மனிதர் ஒருவர்தான். ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் இருவிதமான யோசனைகள். ஏன்? அது, அவர்களின் கடந்தகாலம், கல்வி, பின்புலம் இப்படிப் பலவற்றையும் கருத்திற்கொண்டு அமைந்தவை. ஆனால் இருவரது சிந்தனையுமே துய்நிலைச் சிந்தனைதான்.
காலை 10 மணி 10 நிமிடங்கள்: கெவின் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “ஏன் இந்தப் பெரியவருக்கு இப்படியானதொரு நிலை? பேசிப் பார்க்கலாம்”. “என்ன ஐயா பிரச்சினை?” “தன்னிடம் நூறு டாலர் பெறுமானமுள்ள பிட்காயின் இருக்கின்றது. யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கின்றார்கள். ஊர் திரும்ப நாற்பது டாலர் வேண்டும். முப்பது டாலர் திரட்டி விட்டேன், இன்னும் பத்து டாலருக்காக நிற்கின்றேன்”. 25 டாலர் பெறுமானமுள்ள பிட்காயினுக்கு உரிய பணம் கொடுத்துவிட்டு, அந்த பிட்காயினை வாங்கிச் சட்டைப் பையில் இட்டுக் கொண்டு கிளம்புகின்றான் கெவின். கெவின் பேசநினைத்தது உய்நிலை. அதன் பின் தீர்வு கண்டமை பகுத்தறிதலின் பொருட்டு. ஒருவேளை அவர் யாசகம் கேட்டிருப்பாராயின், இவன் கொடுக்காமற்சென்றிருக்கக் கூடும்.
இப்படியான மாறுபட்ட பின்புலத்தை, காரண ஏரணங்களை, சான்றுகளை அறிந்து கொள்ளக் கலந்துரையாடல் அவசியம்.
பொதுவாக எல்லாருக்குள்ளும் இலக்குகள் இருக்கும். அந்த இலக்குகளை அடைய சில நேரங்களில் துய்நிலை, சிலநேரங்களில் உய்நிலை என்பதாக ஒரு சீர்நிலை(பேலன்ஸ்) இருத்தல் நன்றாம். ஒவ்வொன்றுக்கும் மெனக்கெட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆகவே நிபுணர்களின் உதவியோடு இலக்குகளை அடையலாம். சிலநேரங்களில் உய்நிலை கொண்டாக வேண்டும். அல்லாவிடில் காலம்முழுமைக்கும் அடுத்தவரின் உதவியை நாட வேண்டி, அல்லது அடுத்தவரின் தயவில் பிழைக்க வேண்டியதாகி விடும். In Life, everything is balance of acting. அலெக்சாண்டர், பீட்டர், கெவின் எல்லாருமே சரிதான்; சில இடங்களில் மட்டும். இஃகிஃகி!! பகுத்தறிவைக் கேலி செய்பவன் இவர்கள் மூவரிலும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
No comments:
Post a Comment