விரைவுச் சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். பின்னால் வரும் வண்டி நம்மையொட்டி வருவது போன்ற உணர்வு ஏற்படுமாயின், அந்த வண்டி முன்னேறிச் செல்வதற்கான தடத்தை விட்டுவிடுதல் நன்றாம். அந்த இடத்தில் ஈகோ தலையெடுக்குமாயின், நாம் இன்னும் விரைவாகச் செல்ல வேண்டும் அல்லது விபத்து நேரிடுவதற்கான வாய்ப்புகளுக்கு நாமே இடம் கொடுத்தாக வேண்டும். எனவேதான், எல்லார்க்கும் நன்றாம் பணிதல்.
ஒவ்வொன்றுக்கும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. விட்டுக் கொடுத்தலைப் பழகிக் கொள்வது ஆழ்மன அமைதியின் ஆணிவேர். வலுவற்ற மனத்தின் அறிகுறி பழிவாங்கல். திடமான மனத்தின் அறிகுறி பொறுத்துக்கொளல். அறிவுப்புலத்தின் அறிகுறி விட்டுப்பழகுதல். நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அல்லது விட்டுக்கொடுக்க முடியவில்லை, ஏன்? அப்படியாயின்,
1. நாம் மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வுமனம் கொள்கின்றோம்.
2. காழ்ப்புடையவராய் இருக்கின்றோம்.
3. அடுத்தவரின் இலக்கை நம்முடையதாக ஆக்க முனைகின்றோம்.
4. பேசாப்பொருளை பேசுவதன்பால் ஒவ்வாமை கொள்கின்றோம்.
5. சமூகத்தின் தாக்கம், peer pressure
6. கடந்தகால நினைவுகளில் திளைத்து நிகழ்காலத்தன்மைக்கு ஆட்படாமலிருப்பது
7. இன்பகரம் மட்டுப்படுவதை உணராமலிருப்பது
இவற்றுள் ஏதோவொன்று, தேவையில்லாததை விட்டுக்கொடுக்க, பொறுத்திருக்க, மனமடங்கத் தடையாய் இருக்கின்றதென்பதாகக் கருதலாம். இதனைத்தான் அகந்தை(ஈகோ) என்கின்றோம். இது நம் வாழ்க்கை. இன்பம், மகிழ்ச்சி என்பது நம்முள்ளேயே உறைந்திருக்கின்றது. அதனைநாடி, தேடி, நாம் எங்கும் செல்லத் தேவையில்லை. எல்லாமும் மனப்பழக்கம்தான். மனப்பழக்கத்தை வடிகட்டிக் கொள்ள, நம் நோக்கத்தை உணர்ந்து செயற்படல் வேண்டும்; செய்யும் செயலின் மதிப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். பண்பில் எளிமை கொள்ளல் வேண்டும். மனச்சோகை, மன அலைகளைக் கவனித்துச் செயற்பட வேண்டும். எளிய பயற்சிதான். எல்லாருக்கும் கைகூடக் கூடியதுதான்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து!
1 comment:
அழகாய் அருமையாய் எடுத்துக்கூறி உள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்தும் , இடைவெளியின்றி வருடந்தோறும் வலைப்பக்க ஆக்கங்களை தரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். எனது பெயர் நினைவிருக்கலாம். ஆரம்பகாலங்களில் என் நட்பு வட்ட்த்தில் உங்கள் பெயர் இருந்தது காலப்போக்கில் சில காரணங்களுக்காக என் வலைத்தளம் பக்கம் நான் வருவதில்லை.. உங்கள் தொடர் முயற்சிக்குபாராட்டுக்கள்.
Post a Comment