1/17/2022

வாதம்புரிதல் (டிபேட்)

கோவிட் பணிகளை பைடன் நிர்வாகம் எப்படிக் கையாள்கின்றது என்பதனை ஆய்வு செய்ய, அமெரிக்க நாடாளுமன்ற மருத்துவக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நேரடி ஒளிபரப்பும் இடம் பெற்றது. மக்கள் முன்னிலையில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையான வினாக்களைத் தொடுக்க, கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ஆண்ட்டனி பவுச்சி தலைமையிலான குழு பதிலளித்துக் கொண்டிருந்தது. இடையே கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்துப் பேசாமல், நோய்த்தடுப்பு மையத்தின் தலைவர் ஆண்ட்டனி பவுச்சியின் வருமானம், அவரின் கேரக்டர் என்கின்ற வகையில் செனட்டர் ராண்ட் பால் விமர்சனங்களை முன் வைத்தார். அந்தச் செய்கையைக் கண்ட திரு பவுச்சி அவர்கள், ’அட் ஹாமினம்; எனும் சொல்லாடலைப் பயன்படுத்திக் கடுமையான அளவில் எதிர்வினை ஆற்றினார். நெறியாளரும் அப்படியான தனிமனித விமர்சனத்துக்குக் கடிவாளமிட்டார். https://youtu.be/HH_-g0JxBTs?t=56

சரி, அட் ஹாமினெம் என்றால் என்ன?

வாதம் புரிவதில் படிநிலைகள் உள்ளன. முதல் மூன்று நிலைகளும் ஆய்வுக்குப் பயனளிக்கக் கூடியவை. இன்னபிற யாவும் நேரத்தை வீணடிக்கக் கூடியவை, பொய் புரட்டுக்கு வழிகோலுபவை, ஆய்வினைத் திசை திருப்பக் கூடியவை. அவையாவன கீழேவருமாறு:

1. வெளிப்படையாக மையக் கருத்தினை லாஜிக்/ரீசன் கொண்டு மறுப்பது

2. வாதத்தில் இருக்கும் பிழைகளைச் சுட்டிப் பேசுவது

3. உரிய ஆதாரங்களுடன் மாற்றுவழியை நிரூபித்துப் பேசுவது

4. குறைந்த, அல்லது உரிய தரவுகளின்றி மறுத்துப் பேசுவது

5. பேசுபொருளை விடுத்து, எதிராளியின் குரல், ஸ்டைல் போன்றவற்றைக் குறைசொல்லிப் பேசுவது

6. பேசுபொருளை விடுத்து, வாதம் செய்பவரைக் குறைத்துப் பேசுவது அல்லது குறைகூறிப் பேசுவது (அட் ஹாமினம்) https://youtu.be/FD50OTR3arY

7. திட்டுவது, புறங்கூறுவது (name calling)

எடுத்துக்காட்டு:

விநாயகன்: கதிரவன் தோன்றுவது கிழக்கு திசையில். (மையக்கருத்து)

முருகன்:  சில நேரங்களில் தென்கிழக்காகவும் வடகிழக்காகவும் தோன்றும். துருவங்களில் உதிக்காமலேவும் இருக்கும். துருவத்தில் இருக்கும் ஒரே திசை தெற்குமட்டுமே #1

விநாயகன்: உனக்கு இடக்கு முடக்காகப் பேசுவதே வேலை ( #5)

முருகன்: நீ சொல்வது உண்மையானால், உத்திராயணம், தட்சிணாயணம் ஆகிய சொற்களுக்கே வேலை இருக்காது. #1

விநாயகன்: சூரியன் உதிப்பது கிழக்கு என்பது பொய்யா? மரபை இழிவுபடுத்துகின்றாய், உனக்கு எல்லாம் தெரிந்தவனென்ற திமிர் (#6 & 7)

முருகன்: இடத்துக்கிடம் தோன்றும் திசையில் மாற்றம் உண்டு என்கின்றேன். சரி, இல்லை, ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டால் முடிந்தது பிரச்சினை. ஏன் திட்டுகின்றாய்? #4

விநாயகன்: மயிலேறிப் பல இடங்களுக்கும் போய் வருபவன் என்பதைப் பீற்றிக் கொள்கின்றாய். #6


No comments: