1/16/2022

உண்டு எனக்கொரு கனவு

மனித உரிமைகளுக்காக, சமத்துவத்திற்காக, இணக்கத்திற்காக, அறிவுப்புலத்திற்காக, தத்துவார்த்த அரசியலுக்காக, புத்தாக்கத்திற்காக, அன்புக்காக நாட்டம் கொண்டு தன் இறுதி மூச்சு வரையிலும் உழைத்துத் தன் உயிரை உரமாக்கியவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள். அவருடைய பேச்சின் சாரங்களை நினைவுகூர்ந்துவிட்டுத் தொடர்வது உசிதமாய் இருக்குமென எண்ணுகின்றேன்.

1. கருத்தாளனை அடக்கிவிட்டாலும், அவனுள் இருக்கும் கருத்து சாவதில்லை.

2. இருள்கொண்டு இருளை அகற்றிவிட முடியாது; ஒளிக்கீற்றினால் மட்டுமே அது சாத்தியம். வெறுப்பினை வெறுப்பால் தோற்கடித்துவிட இயலாது; நேசத்தினால் மட்டுமே அது முடியும்.

3. மன்னிப்பது என்பது எப்போதாகிலுமென்பதன்று; அது நிரந்தரமானது.

4. அன்பென்பது இலகுவாக்கிக் கொண்டேயிருப்பது; வெறுப்பெனும் பாரத்தைத் தூக்கித் திரிவது கனத்தையே கூட்டும்.

5. எதார்த்தம் என்பது முதற்படி; மேற்படிகள் கண்களுக்குத் தெரியாதபட்சத்திலும்!

6. அண்டியிருப்பவர்க்கு நாமென்ன செய்கின்றோமென்பதுதான் வாழ்க்கை.

7. கசப்புகளுக்கு ஆசைப்படுதல் கசப்புகளுக்கே வழிகோலும்.

8. தேவைக்கிடமான பேச்சை மட்டுப்படுத்துவது மரணத்துக்கீடானது.

9. வேறு வேறான கப்பல்களாக இருந்திடினும் வாழ்க்கைப் பயணத்தில் நாமனைவரும் சகபயணிகளே!

10. அடுத்தவரை வெறுக்கும்படி யாரும் உன்னைக் கீழிறக்கி விடாமற்பார்த்துக் கொள்க.

11. அறிவும் பண்பும் கூடியதே கல்வி.

12. எல்லா நேரமும் சரியான நேரம்தான், நல்லதைச் செய்ய.

13. அமைதி என்பது பேச்சுமூச்சற்றுப் பதற்றம் இல்லாமலிருப்பதன்று; அறம் தழைத்தோங்குவதே அமைதி.

14. பழிவாங்கலும் வெறுப்பும் துணிவின் அடையாளமன்று.

15. ஆயுளின் நீளம் அன்று, தரமே வாழ்தலின் அளவீடு.

காந்தியின் கொள்கைகளாகச் சொல்லப்பட்ட பலவற்றினாலும் ஈர்க்கப்பட்டவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர். அவருடைய, புகழ்பெற்ற, “உண்டு எனக்கொரு கனவு” எனும் உரையிலிருந்து:

உண்டு எனக்கொரு கனவு. இன்றல்ல, நாளைக்கும் கூட நாம் இன்னல்களையே எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை இருந்தபோதும். அது அமெரிக்காவின் கனவு.

உண்டு எனக்கொரு கனவு. நாடு ஆர்ப்பரித்தெழும், நாமனைவரும் சமமானவர்களெனும் உண்மை வெளிப்பட்டே தீரும்.

உண்டு எனக்கொரு கனவு. அடிமையாயிருந்தோரின் வழித்தோன்றல் பிள்ளைகளும், அடிமைப்படுத்தியோரின் பிள்ளைகளும் சகோதரசகோதரிகளாய் ஒன்றே அமர்ந்திருப்பர்.

உண்டு எனக்கொரு கனவு. அடிமைப்பாங்கின் வெறுப்பும் அநீதியும் நீங்கி, விடுதலையும் அறமும் எங்கும் வியாபித்திருக்கும்.

உண்டு எனக்கொரு கனவு. என் பிள்ளைகளை நிறத்தால் அடையாளப்படுத்தப்படாமல், பண்பால் அடையாளப்படுத்தப்படும் நாள் வந்தே தீரும்.

உண்டு எனக்கொரு கனவு. இன்று, உண்டு எனக்கொரு கனவு.

உண்டு எனக்கொரு கனவு. வெறுத்தொதுக்கலும் வீண்பழிசுமத்தலும் இட்டுக்கட்டுவதினின்றும் விடுபட்டு எல்லாப் பிள்ளைகளும் கரம்கோர்ப்பது உறுதி.

உண்டு எனக்கொரு கனவு. இன்று, உண்டு எனக்கொரு கனவு.

1963, ஆகஸ்டு 28ஆம் நாள், வாஷிங்டன் டிசியில் கிங் அவர்கள் உரையாற்றியதன் சாரம்தான் இது. இன்றளவும் நமக்குப் பாடமாக, துணையாக இருந்து கொண்டிருக்கின்றது. சோசியல் மீடியா என்பது மட்டுமல்ல. சமூகமும் வெறுப்பால் சூழப்பட்டுக் கிடக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஃபேக்நியூசுகள். இட்டுக்கட்டிய வெறுப்புணர்வுப் பரப்புரைகள். அதற்கு இரையாகிக் கிடப்பது நம் அண்ணனாக இருக்கலாம். தம்பியாக இருக்கலாம். அம்மாவாக இருக்கலாம். யாராகவும் இருக்கலாம். வெறுப்பைக் கொண்டு வெறுப்பை அகற்றிவிட முடியுமா? முடியாது.

“ஏண்ட்டை இந்து, ஏண்ட்டை அமெரிக்கன், ஏண்ட்டை இந்தியன், இந்துவெறியன், தமிழின விரோதி, வந்தேறி, சாதிவெறியன், சமத்துவ எதிரி, ஆதிக்கசாதியன், மீடியாக்கர், பகூத்தறிவுப் பிண்டம், அறிவுஜீவி, வெஸ்டர்ன்ஸ்லேவ், மேலைநாட்டுத்துதிபாடி, பழைமைபேசிப் பஞ்சாங்கம்”, இவையெல்லாம் எதிர்கொண்ட, அதுவும் நண்பர்களாலேயே சூட்டப்பட்ட நாமகரணங்கள். இவற்றின் அடிப்படை என்ன? வெறுப்பு, சகிப்பின்மை, ஒவ்வாமை. இந்த வெறுப்பு அவர்களிடமிருந்தே பிறந்தவையா? இல்லை. அவர்களுக்கு ஊட்டப்பட்ட வெறுப்பு. இவர்கள் அதைச் சுமந்து திரியும் அபலைகள். எதற்காக ஊட்டப்படுகின்றது? அரசியல், வணிக, சமய சக்திகளின், polarize & consolidate, emotionally persuade & convince முதலிய பிரித்தாளும் சூட்சுமங்களுக்கு இரையாகிப் போனவர்கள் இவர்கள். இவர்களுடைய ஓட்டும் வணிகமும் ஆன்மீகக் காணிக்கைகளும், அரசியல், வணிக சக்திகளுக்கான அறுவடை. எப்படி உறுதிபடச் சொல்லமுடியும்? சூட்டப்பட்ட, ஏவிய சொற்களுக்குள்ளே இருக்கும் முரண்பாடுகளே அதற்கு சாட்சி.

அமெரிக்காவின் சில கிறித்துவக் கூடங்களிலே தடுப்பூசிக்கெதிரான மூளைச்சலவை நடக்கின்றதெனச் சொன்ன மாத்திரத்தில், இந்துவெறியன் நாமகரணம் சூட்டப்பட்டது. பகிரப்பட்ட ஒரு ஃபேக்நியூசைச் சுட்டிக் காண்பித்ததும், இந்துவிரோதி சூட்டப்பட்டது. சூலூர் தொகுதியில் வாக்குகள் இப்படி இப்படிப் பதிவாவது வழமையென்றதுமே, சாதிவெறியன் சூட்டப்பட்டது. இப்படித்தான் எத்தனை எத்தனை?? இவர்களிடத்திலே, பேசுபொருளுக்கான சான்று, ஆதாரம், சோர்ஸ் கேட்டுப்பாருங்கள், கிடைக்காது. மாறாக, தனிமனித விமர்சனத்தைப் பொத்தாம் பொதுவாக ஏவுவார்கள். இங்கேதான், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்.

“I have decided to stick with love. Hate is too great a burden to bear.” அன்பாய், அடக்கமாய், பொறுமையாய் இருக்க வேண்டியது அவசியம். சொற்களை விட்டுவிடக் கூடாது. நமக்கு நம் சகோதரர்கள் முக்கியம். உற்றார், உறவினர் முக்கியம். நண்பர்கள் இன்றியமையாதவர்கள். சகமனிதர்களே நம் வாழ்வு. Let's practice motivation and love, not discrimination and hate.

மார்ட்டின் லூதர் கிங் நாளைச் செழுமையுடன் எதிர்கொள்வோம். Love you all.

No comments: