நஞ்சென்பது உணவிலோ மூச்சுக்காற்றிலோ மட்டுமேயில்லை. அது நாம் உள்வாங்கும் ஐம்புலன்களினூடாக உட்புகுந்து உணர்வாகவும் நம்முள் குடிகொண்டிருக்கும். உள்ளிருந்து கொண்டேவும், அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அரித்துக் கொண்டிருக்கும். நமக்குள் வெறுப்புணர்வு இருக்கின்றதாயென்பதை எப்படி அறிந்து கொள்வது?
வெறுப்புணர்வு என்பது புற்றுநோயைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளக் கூடியது. நம் ஊக்கத்தை, உள்ளத்தை, ஆன்மாவை அரித்துக் கொண்டேவும் நம்மை அண்டியிருக்கின்ற அம்மா, அப்பா, குழந்தைகள், மனைவி, உற்றார், உறவினர், சக நண்பர்களென அனைவரையும் பதம்பார்க்கக் கூடியவொன்று. வெறுப்புள்ளம் கொண்டவர் மனம் தகித்துக் கொண்டேயிருக்கும். அடங்குவதற்கு நேரம் பிடிக்கும். சதா சர்வகாலமும், தனக்கான தீனியைத் தேடிக்கொண்டேவும் இருக்கும். மீம்கள், வீடியோக்கள், சக நண்பர்களின் அவதூறுப் பேச்சுகள் எனத் தீனிகளில் பலவகை. மனமெல்லாம் அதுவே நிறைந்திருக்கும். ஒரு சொல் போதும், வெறுப்புணர்வு கொப்பளிக்கக் கொப்பளிக்க அடுத்தவரைச் சென்று சேரும். அதிலும் நண்பர் அல்லது குடும்பத்தினரின் சொல்லாக இருக்கும்பட்சத்தின் அதன் வீரியம் பன்மடங்கு அதிகம்.
வெறுப்பென்பது எதன்மீதும் பாயலாம். விலங்குகள், சப்பாடு, வேலை, கலைப்படைப்புகள் என் எதன்மீதும் வெறுப்புணர்வு பாயக்கூடும். விருப்பமின்மை என்பது நாட்டம் கொள்ளாமலிருப்பது. வெறுப்பென்பது தொடர்பில் இருந்து கொண்டேவும் உள்மனத்தகிப்புக் கொள்வது.
நாம் நம்மிடத்தே இவ்வகையான வினாக்களைத் தொடுத்துக் கொள்ளலாம். என்னுள் வெறுப்பு குடிகொண்டிருக்கின்றதா? எரிச்சலுணர்வு, பாராமை, சகிப்பின்மை, சினம், எள்ளல் முதலான உணர்வுகள் இன்று காலையிலிருந்து எப்போதெல்லாம் மேலிட்டது? அடுத்தவருக்கு முகமன்(ஹாய், வணக்கம்) சொல்ல மனம் கோணியதா? இவையெல்லாமும் குறித்து வைத்துக் கொண்டு, அதன் காரணங்களை ஆராயத்தலைப்பட்டால் வெறுப்பின் இருப்பிடம் அறியவரும்.
சில தருணங்களில் வெறுப்பின் சீற்றம் வெளிப்படுகின்ற பேச்சிலே, செயலிலே தெறித்து வெடிக்கும் (explosion). அதன்நிமித்தம் புறத்தாக்கம் தீங்குக்கு இட்டுச் செல்லும். நிறைய நேரங்களிலே உள்ளத்துள் (implosion) வெடித்துக் கொண்டிருக்கும். அப்படியான பொழுதுகளில், நிகழும் வேதிவினைகள் ஏராளம். உடலே ஒரு வேதிக்கூடம்தான். அந்த வேதிக்கூடத்தின் கெமிக்கல் பேலன்ஸ் தவறும் போது, சொந்த செலவிலே சூன்யம்தான். இதனைக் கவனிக்காமல் விடுவோமேயானால், ஊக்கத்தினைக் காலியாக்கும்; கவனக்குவியம் பழுதாகிப் போகும்; நாட்கள் இருண்டு போகும்.
பிறர்மீது ஒவ்வாமை கொள்வதும் வெறுப்புக் கொள்வதும் மாண்பைக் குறைக்கும்; மாந்த அழகைக் கெடுக்கும். வன்மம் குடிகொண்டால் ஏதோவொன்று எங்கோ நாசமாகிக் கொண்டிருக்கின்றதென்பதே பொருள்.
அலுவலகங்களிலே, ஆலைகளிலே, பணியிடங்களிலே பணிகளில் தொய்வு, தடை ஏற்படுகின்றது. அதன் செயல்முறை, செயலாக்கம், தொழில்நுட்பம், கருவிகள், சுற்றுச்சூழல், பணியாளின் திறம்(skill) போன்றவற்றை ஆராயமுற்படுமுன் ஏதொவொரு பலியாட்டினைத் தேடுகின்றதா மனம்? வெறுப்பு குடிகொண்டிருக்கின்றதென்பதே பொருள். யாரோமீதெறிய எரிதழலைக் கையில் வைத்திருக்கின்றோம்; அது தன்கையையே பெரிதும் பதம் பார்க்குமென்கின்றார் புத்தர்.
பழங்குடியினப் பேரன் தாத்தாவிடம் கேட்கின்றான், “அன்பு, இணக்கம், கருணை கொண்ட ஓநாயும், வெறுப்புக்கொண்ட ஓநாயும் என்னுள்ளே இருக்கின்றன, எது வெற்றி பெறும் தாத்தா?”. “எதற்கு உணவூட்டி வளர்க்கின்றாயோ அது வெற்றி பெறுமடா பேராண்டி!”.
விமானநிலைய வளாகத்தில் சென்று கொண்டிருக்கின்றீர்கள்; முன்னால் செல்பவரை இடித்து விட்டீர்கள் அல்லது அவரது காலை மிதித்து விட்டீர்கள். அவர் திரும்பிச் சொல்வார், “ஐயாம் சாரி”. இதுபோன்ற சிற்சிறு தருணங்களைக்கூட மென்மையாக்க வல்லது அப்படியான ’சாரி’களும் மன்னிப்புக் கோரல்களும். ஈகோ பார்க்கத் தேவையில்லை. வெறுப்பைக் களைய இதைவிட எளியவழி வேறேதுமிருக்க முடியாது.
பொதுவாக வெறுப்பின் தோற்றுவாய் நான்கே நான்குதாம்:
1. பிடித்தமானதாக ஆக்கிக்கொள்ள இயலாத பிடித்தமற்றவொன்று
2. பிடித்தமானதாக ஆக்கிக்கொள்ளத் துணிவற்றவொன்று
3. மனவலியை ஏற்படுத்தக்கூடியது
4. நல்லது, சரியென நம்புவதற்கு எதிரானது
இத்தகைய தோற்றுவாயின் அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும், அதனைக் களைவதற்கான வழி பிறந்து விடும். தனதாக்கிக் கொள்ள இயலாதாயின், உலகில் இருக்கும் எத்தனையோ கோடி மாற்றுகளில் இதுவுமொன்றனக் கருதிவிடலாம். துணிவில்லையாயின், உதவிகளைப் பெறலாம். மனவலியாயின், தொடர்புடைய நபரிடம் பேசலாம் அல்லது பொருளைக் களைந்து விடலாம். மாற்று நம்பிக்கையின் அடிப்படையைப் புரிந்து கொள்வதும் சகித்துக் கொள்ள பயிற்சி மேற்கொள்வதும் பயனளிக்கும்.
படிப்பதற்கு போதனை(preaching) போல் இருக்கின்றது. இயல்பில் இது சாத்தியம்தானா?எல்லாமும் மனப்பழக்கம்தான்.முடியுமென்றால் முடியும்.
Let's try together. We can only learn to love by loving.
No comments:
Post a Comment