1/27/2022

தனிமனித விமர்சனம் Personal Attack

வன்மம் என்பது காயப்படுத்தக் கூடிய கூரிய ஆயுதங்கள், பொருட்கள், உடலின் மீதான தாக்குதல் என்பது மட்டுமேயல்ல. சொற்களாலும் நேரடித் தாக்குதலற்ற செயற்பாடுகளாலும் கூட இடம் பெறும். எடுத்துக்காட்டாக, மனமறிந்தே பொய்ச்செய்திகளைப் பரப்புவதும் உருவாக்குவதும் கூட வன்மம்தான். அதுபோன்றதுதான் நற்பெயருக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதும், தனிமனித வாழ்க்கைச் செயற்பாடுகள், அந்தரங்கம் குறித்தானதுமான பேச்சுகளும் வசைகளும். இது டிஜிட்டல் யுகம். எல்லாமும் உடனுக்குடனே பதிவுகளாக நிலைபெற்று விடுகின்றன. ஆகவே, ’என்ன மாதிரியான சொற்களைப் பாவிக்கின்றோம், விமர்சனம் தொடுக்கின்றபோது பேசுபொருளின்பாற்பட்டுத்தான் பேசுகின்றோமா?’ என்பதெல்லாம் அறிந்து செயற்படல் காலத்தின் தேவை. 

அவதூறும், உண்மைக்குப் புறம்பானதுமான செயல்களைச் செய்தோமேயானால், அது நம்மைத் துரத்திக் கொண்டேயிருக்கும்; என்றோவொருநாள் அவை நம்மைப் பதம் பார்க்கக் கூடும். Your digital footprints speak volumes than your CV.- Bernard Kelvin Clive.

எப்படி ஒருவர்மீது தனிமனித விமர்சனம் வைப்பதை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைக்கின்றோமோ, அதே அளவுக்கு, வைக்கப்படும் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்வதும் இன்றியமையாததாகும்.

ஒருவரை நோக்கி வசையோ, காழ்ப்போ, அவதூறோ நிகழ்கின்றது. தொடர்புடைய நபருக்கு எளிமையான முறையில் சுட்டிக் காண்பிக்கலாம். புரிந்து கொள்ளக் கூடிய மனநிலையில் அவர் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் சுட்டிப் பார்க்கலாம். பயனளிக்காத நிலையில், அத்தோடு விட்டுவிட வேண்டும். பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி. மனத்திலேற்றிக் கொண்டால், அது விடுக்கப்பட்டவருக்கான வெற்றியாக அமைந்துவிடும். கூடவே நம் மனநலத்தையும் பாதிக்கும்.

’அப்படியான விமர்சனம், தமது பண்பின் தன்மையல்ல; மாறாக விடுப்பவரின் உணர்வுக்கொந்தளிப்பு, உணர்வுத்தேவை, பேச்சுத்திறன் குறைபாடு’, என்பதாகப் பொருள்கொள்ளப் பழகுதல் நல்லது.

பாராட்டுகளும் நன்மதிப்பும் எல்லாரிடமும் பெறுதல் சாத்தியமற்றவொன்று. அப்படி எண்ணுவது, தன்னுமை (liberty)யுடன் வாழ்வதற்கு நேர் எதிரானது. தனக்குத் தானே இட்டுக்கொள்ளும் அடிமைத்தளை.

மனச்சாட்சிக்கும், குடும்பத்துக்கும், தாம் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும், சமூகத்துக்கும்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமேவொழிய, எதிர்கொள்ளக் கூடிய தனிமனித விமர்சகர்களுக்கல்ல எனும் மனப்பான்மை பெறுதல் பயனளிக்கும்.

இப்படியான தனிமனிதத் தாக்குதல்கள், தமக்குள் வினாக்களை விதைக்கும். கூனிக்குறுகக் கூடிய சூழ்நிலைகூட ஏற்படலாம். அவமானத்தால் புழுங்கக் கூடிய தருணம் வரும். அப்படியான தருணங்களைத் தனதாக்கிக் கொளல் அவசியம். பழிக்குப் பழி என்பதான இம்ப்பல்சிவ் ரியேக்சன் எனும் மனத்தூண்டலைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாக மேற்கொள்ளலாம். அப்படிச் செய்வதன்வழி மனநலம் மேம்படும்.

நியூயார்க் நகர மையம், சார்லட் நகர மையம் என்பதெல்லாம் மக்கள்திரள் வெகுவாக இருக்கக் கூடிய இடங்கள். ஸ்டாக் எக்சேஞ்ச், வங்கித் தலைமையகங்கள் இருக்கக் கூடிய இடங்கள். சென்று கொண்டிருக்கின்றோம். திடீரென கால்தடுக்கிக் கீழே விழுகின்றோம். ஏற்பட்ட தடங்கலின் வலி அல்லது காயத்தின் வலியைக் காட்டிலும், மனத்தில் ஏற்படும் எமோசனல் அட்டேக் என்பதன் வலி,  இத்தனை பேர் பார்க்கக் கீழே விழுந்து விட்டோமேயென்கின்ற உணர்வுவலியும் மனஅதிர்ச்சியால் ஏற்படும் உடம்பின் வேதிமாற்றங்களும் பலமடங்கு அதிகம். ஆனால், பார்ப்போரில் நிறையப் பேரின் கண்கள் மட்டுமே அதைக் கண்டிருக்கும். மனத்தில் பட்டிருக்காது. அப்படியே பட்டிருந்தாலும், அடுத்த சில நொடிகளில் அது அவர்களை விட்டுச் சென்றுவிடும். ஆனால் கீழே விழுந்தவருக்கான மனவலியடங்க சிலநாட்கள் கூட ஆகும். அப்படியான மனவலியைப் பெற வேண்டிய அவசியம் என்ன? அது போன்றதுதான், இப்படியான தனிமனித விமர்சனத்துக்கான வலியும்.

பேசுபொருளின் மீதான, இலக்கின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காகக் கூட நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இலக்கின் மீதான கவனத்தைச் சிதையா வண்ணம் தரித்தல் நன்றாம்.

இளைப்பாரலுக்கான வாய்ப்பாகவும் அதை கருதலாம். சிந்தனைக்கான வாய்ப்பாகவும் அமையும். டிபேட், உரையாடல், உரிமைகோரல் போன்ற தருணங்களில், இத்தகைய போக்கையே, கோரிக்கைக்கான சான்றாக, முகாந்திரமாக அமைத்துக் கொள்ளலாம்.

When they go low, we go high. - Michelle Obama

No comments: