3/23/2023

அமெரிக்கத் தமிழ்ச்சூழல்

ஊடகத்தில் பணியாற்றக் கூடியவர்கள், அதே துறையில் பணியாற்றக் கூடியவர்களுடன் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுகின்றனர். அப்படியான கலந்துரையாடல்களில் இடம் பெறுகின்ற தகவல்கள், காட்சிகள் எல்லாமும் அவர்களின் கவனத்துக்குட்படாமல் திரட்டப்பட்டிருக்க, பின்னொருநாளில் அவை வெளியாகின்றன. அந்தரங்கமான தகவல்கள் பொதுவெளியில் பகிரங்கமாகும் போது, தொடர்புடையவர்களுக்கு நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அவர்களின் பேரிலான நன்மதிப்பும் குறையத்தான் செய்யும்.

இப்படியானவற்றில் சிக்குண்ட ஒருவர் மன்னிப்புக் கோரி ஒரு காணொலியை வெளியிடுகின்றார். பார்ப்போர் மனம் கலங்குகின்றனர். இதெல்லாம் நாடகம் என்பதாக விமர்சிப்பவர்களும் விமர்சிக்கின்றனர். இந்த நேரத்தில்தாம், அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகளில் இடம் பெறுகின்ற போக்கும் நினைவுக்கு வருகின்றது.

தமிழ்மொழி, தமிழ்ச்சமூகம், தமிழ்க்கல்வி முதலானவற்றின் பேரில்தான் முக்காலே மூன்று வீசம் பேரும் தன்னார்வத் தொண்டு புரிய வருகின்றனர். குடும்பத்துக்கான, குழந்தைகளுக்கான, தனக்கான நேரத்தைத் தமிழுக்காக ஒதுக்கித்தான் வருகின்றனர். ஏதோ சிலர் வேண்டுமானால், வணிகநோக்குடன் வருபவர்களாக இருக்கலாம். இப்படி வந்தவர்களுள், சாதி, சமயம், அரசியல், விருப்புவெறுப்பு ரீதியாக அணி சேர்ந்து கொண்டு அக்கப்போர் செய்வது ஒரு பாதி. வணிகநோக்கர்களின் சூட்சுமத்துக்கு இரையாவது தெரியாமலே சோரம் போய்க் கொண்டிருப்பது மறுபாதி. இவற்றுக்கிடையேதான் நற்செயல்களும் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.

மேற்கூறிய மன்னிப்புக் கோரல் காணொலிக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சூழலுக்கும் என்ன தொடர்பு? இருக்கின்றது. அணி என்பதற்காகவே சார்புடன் செயற்படுவதும், குழுவாதத்துடன் செயற்படுவதுமாகப் பெரும்பாலான தன்னார்வலர்கள் இருக்கின்றனர். தன்னாட்சி, தன்பொறுப்பு, தன்னுமை என்பன அடிபட்டுப் போகின்றன. எடுத்துக் கொண்ட தமிழ்ப்பணியைக் காட்டிலும், எதிர்-உளவியலில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர். கூட்டுக் குறுங்குழுவாதத்தின் பொருட்டு ஒருவருக்கொருவர் மற்றவர்களின் பேரிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவையெல்லாம் ஆங்காங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறித்த நினைவில்லாமலேவும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அணிகள் மாறலாம். இணைந்து இருப்போருக்குள்ளும் முரண்பாடுகள் எழலாம். அப்போது இப்படியான தனிப்பட்ட உரையாடல்களின் பதிவுகள் வெளியாகக் கூடும்; வெளியாவதும் வழமை. இப்படித்தான் தமிழ்ச்சூழல் என்பது, நச்சுச்சூழலாக(toxic) மாறிப் போகின்றது. அவர்களுக்குத் தாம் அகப்பட்டுக் கொண்டிருப்பது புலப்படாது. புலப்பட்டிருக்குமாயின், ’அப்படியான எதிர் மனோநிலையே முதன்மை’ என இருக்கமாட்டார்கள்தானே? என்னதான் தீர்வு?

அறம்சார் அமைப்பில், அறமும் சகமனிதனின் பேரிலான அக்கறையுமே முன்னுரிமை கொண்டதாக இருத்தல் வேண்டும். குழுவில் பெரும்பான்மையெனும் தோற்றத்தில் கூட்டுணர்வு ஊக்கம் கொண்டு செயற்படும் போது, தவறானவற்றில் அது நம்மை ஆழ்த்திவிடும். பின்னாளில் பூசல்கள் மேலிடுகின்ற போது, உடனிருந்தவர்களே மோதுகின்ற சூழலும் ஏற்படும். அப்போது அவர்கள் முந்தைய அந்தரங்கத் தகவல்களை பகிரங்கப்படுத்தக் கூடும். சார்புத்தன்மை தவிர்த்து, தம் கொள்கை, கோட்பாடு, அமைப்பின்நலமென இருந்து விட்டால் என்றும் நலம். தலைநிமிர்ந்து காலகாலத்துக்கும் பீடுநடை இடலாம். Volunteerism isn't beautiful and easy, or a bunch of people getting together and working; it's a lot more than that. Why do I say this? "Writing is also a form of activism". -Angie Thomas

நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை [தேவாரம்]

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை!!

o0o0o0o0o

//படிக்கச் கூட கசக்கும்.//

மிகவும் நேரிடையானதும் உண்மையானதுமான கருத்து. மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

எதிர்மறையானவற்றைப் பேசுவது ஆகாதவொன்று. புறம்பானவொன்று. பின்னடைவைத் தரக்கூடிய ஒன்று என்கின்ற அருவருப்பு(stigma) தமிழ்ப்பண்பாட்டில் உண்டு. குறிப்பாக அமெரிக்கத் தமிழ் அமைப்புகளில்.

பேசினால், அது பாராட்டாக, புகழக்கூடியதாக, வாழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும்.  அல்லாவிடில், பேசாமாலே இருந்து விட வேண்டும். ஆனால், மூத்தகுடி, தொன்மை, தொடர்ச்சி என்றெல்லாம் சொல்லி நெஞ்சை நக்கிக் கொள்கின்றோம்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். (ஒளவை)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு (குறள்)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (குறள்)

ஒளவையாரும் திருவள்ளுவரும் சொல்வதென்ன? எண்ணுவதும் எழுத்தைப் (வாசிப்பது, எழுதுவது) போற்றுவதும் கண்களெனச் சொல்கின்றனர். இந்தக் குழுமத்திலேயே கூட முன்பொருமுறை சொல்லப்பட்டது. நேர்மறையான கருத்துகளையே பகிர்வோமென. கசப்பு என்பதற்காக, மருந்தினை உட்கொள்ளாமல் இருக்க முடியுமா?  எழுத்தில் உண்மையும் அறமும் இருக்கின்றதா என்பதுதான் பார்க்கப்பட வேண்டியது.

தத்துவஞானி சாக்ரடீஸ், உரையாடல் என்பது மட்டுமே மனிதனை முழுமையாக்கும் என்றார். ஆனால், உரையாடத் தயக்கம், தடை, அச்சம் என்பதான போக்குடையவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். என்ன காரணம்? நம்முடைய கருத்தினால், மற்றவரின் ஒவ்வாமைக்கு நாம் ஆளாக நேரிடுமோ என்கின்ற அச்சம் அல்லது தன் புகழ், பொறுப்பு போன்ற தன்னலம். இப்படியானவர்களின் தன்னார்வத் தொண்டினால் ஒரு பயனுமில்லை. கூடிக் கலைவதற்கும் களிப்புக் கொள்வதற்கும்தான் பயன்படுமேவொழிய, மேன்மையை ஈட்டித் தராது.

No comments: