அலுவலகக் கூட்டங்களின் போது கவனிக்கலாம். ஏதோவொரு பேசுபொருளின்பாற்பட்டு முன்வைக்கப்படும் கருத்துகளில் இழுபறி ஏற்படும். கூட்டத்தை நடத்துபவர், இது குறித்த தகவல்களை ஆய்வு செய்து விட்டு அடுத்த கூட்டத்தில் மேற்கொண்டு பேசிக் கொள்ளலாமெனக் கூட்டத்தைக் கடத்திச் செல்வார் அல்லது அதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளின் பொருட்டு இன்னார் வேலை செய்யப் பணிக்கின்றேனெனக் கடத்திக் கொண்டு போவார். பேச்சுகளை வளர்ப்பதில்லை. இழுபறிப் பேச்சு என்பது நேரத்தை வீணாக்கவே செய்யும் பெரும்பாலான நேரங்களில். ஆகவே தகவலின் அப்போதைய நிலையறிந்து செயற்பட வேண்டியதாயிருக்கின்றது.
மகள்கள் மருத்துவமனை ஒன்றுக்குத் தன்னார்வப் பணிக்குச் செல்வது வழக்கம். அப்படியாக அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகையில் அவர்களின் அலைபேசியில் வழித்தடத்துக்கான செயலியை முடுக்கிவிடக் கோரினேன். “அப்பா, எத்தினிநாளாகப் போய்வருகின்றோம். இன்னமும் டைரக்சன் போடணுமா?”. ஆமாம், போட்டுத்தான் ஆக வேண்டுமென்றேன். காரணம், இம்மாதிரியான செயலிகள் அந்த நேரத்துக்கான தகவலின் அடிப்படையில் செயற்படுபவை. செல்ல வேண்டிய தடம் மாறியும் வரலாம். ஏதோவொரு பாதையில் சாலைப்பராமரிப்பு இடம் பெற்றிருக்கலாம். விபத்து நேர்ந்திருக்கலாம். நிகழ்வு காரணம் முற்றிலுமாக அடைபட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. செயலிகள் அவ்வப்போதைய தகவலின் அடிப்படையில் தடத்தைச் சொல்லக் கூடியவை. ஏனவே பாவித்துத்தான் ஆக வேண்டி இருக்கின்றதென்றேன். “that makes sense" என்பது மறுமொழியாக அமைந்தது.
அம்மாவின் உடன்பிறந்தோர் மொத்தம் 20 பேர் (மூன்று குடும்பத்துப் பிள்ளைகள்). அவர்களுள் மாமா ஒருவரை மட்டும் பார்த்திருக்கவில்லை. எப்படியாவது பார்த்தாக வேண்டுமென முயன்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் அப்படியே குலதெய்வக் கோயிலுக்கும் செல்ல வேண்டுமெனச் சொன்னார். அவரது விருப்பத்தைத் தட்டிக்கழிப்பானேன்? காலையில் வண்டி கிளம்பியானதும், சரிம்மா, கோயிலுக்கு எந்த வழியில் செல்ல வேண்டுமெனக் கேட்டேன். ஏன், உனக்கு நம் குலதெய்வக் கோயில் எங்கிருக்கின்றதெனத் தெரியாதா என விட்டேற்றியாகக் கேட்டார்.
அதற்கல்லம்மா, போகின்ற வழியில் அண்ணியாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமா? வேறு எவரையாவது பார்க்க வேண்டுமா? அதற்கேற்ப செல்கின்ற வழியும் மாறும்தானே, அதற்காகக் கேட்டேனெனச் சொன்னேன். இல்லை, அண்ணியார் கலக்டர் அலுவலகம் செல்கின்றார், தோட்டம் சென்று துணிமணிகளை எடுத்துக் கொண்டு நேராகக் கோயிலுக்குத்தான் என்றார். சரி, தோட்டத்திற்கு வருகின்றோமெனச் சொல்லுங்கள் என்றேன். தோட்டத்தில் இருக்கும் அண்ணனை அழைத்தால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அலைபேசியில் அண்ணியாரை அழைத்தார். ”கலக்டர் அலுவலகம் செல்லத் தேவையில்லை, தோட்டத்திலும் யாருமில்லை, ஆகவே நான் இருக்குமிடத்துக்கு வாருங்கள், நானும் வருகின்றேன்”. ”இதற்குத்தானம்மா நான் கேட்டது, இப்போது பார்த்தாய்தானே?”. அம்மா சிரித்துக் கொண்டார்.
தகவல் என்பது நொடிக்கு நொடி இயங்குநிலையின்பாற்பட்டு இருக்கின்றது. அலைபேசி, இணையம் உள்ளிட்ட தகவற்தொழில்நுட்ப வளர்ச்சியின் நிமித்தம் அதன் இயங்குவேகம் பன்மடங்கு பெருகி இருக்கின்றது. ஆகவே பேச்சுகளில் அக்கப்போர் இடம்பெறுவதென்பதும் பலமடங்கு பெருகியிருக்கின்றது.
வயது மூப்பு, அடுத்தடுத்த மரணங்கள் காரணம், மனம் பணிந்து போய்க் கிடக்கின்றது. தற்போதெல்லாம் எவர் என்ன சொன்னாலும் எதிர்வினைவேகம் கொள்வதில்லை. மாறாக, முன்வைக்கப்படும் தகவலின் தன்மையைத் தெரிந்து கொள்ளவே இயன்றவரை முற்படுகின்றேன். நமக்கு நன்கு அறிந்த தகவல், தற்போது அதன் தன்மையை மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். ஆகவே காலாவதியான தகவலை அடிப்படையாகக் கொண்டு முட்டி மோதிக் கொள்வதில் பயனில்லை.
No comments:
Post a Comment