காலையில் நினைவுக்கு ஆட்படுவதிலிருந்து மீண்டும் நினைவிலிருந்து விடுபட்டு உறங்கிப் போவது வரையிலும் என்னவெல்லாமோ நடக்கின்றன. எதிர்பாராத ஒன்று, வெற்றி, வருமானம், இப்படி ஏதாகிலுமொன்று இடம் பெறுமேயானால் அந்தநாள் இனியநாள் என்பது பொதுப்புத்தி, வாடிக்கை. ஆனால் அது அப்படியன்று.
தலைவலி, நெஞ்செரிச்சல், கால்நோவு, பல்குடைச்சல், ஈறு வீக்கம், விரற்கண் குடைச்சல் , மனவுளைச்சல், தோல் அரிப்பு, தும்மல், இருமல், இப்படி ஏதோவொன்று இருந்து அந்த நாளின் தரத்தைக் குறைக்கும். அதன் வீச்சு அவ்வப்போது, சிற்சிறு பிசிறுகளாக சன்னமாக இருந்து இருந்து மனவெழுச்சியை மட்டுப்படுத்தக் கூடும். பெரும்பாலும் நாம் அதற்கொரு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம். ஆனால் அதனால் மட்டுப்படும் நாளின் தரம் பெரிதாகவே இருக்கும். இப்படியான எதுவுமற்ற ஒவ்வொருநாளும் இனியநாளே.
இப்படியான தொல்லைகள் ஏற்படும் போதெல்லாம் வலிமாத்திரைகளைப் போட்டு அந்தக் கணத்திலிருந்து முன்னேறிச் செல்கின்றோம். அதன் தோற்றுவாய் என்னவென அறிந்து கொள்வதற்கு முனைப்புக் கொள்வதில் நாட்டமிருப்பதில்லை.
சிற்சிறு தும்மல், மூக்கில் நீர்வடிதல், நெஞ்செரிச்சல் தொடர்ந்து இருப்பது போன்ற ஒரு கவனிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தது. மருத்துவர், நண்பர்கள், அம்மா எனப் பலருடனும் பேசி இருக்கின்றேன். விடுபடவேயில்லை. பெரும்பாலும் நானே சமைத்து உண்பதுதான் வாடிக்கை. ஆகவே தொடர்ந்து மாற்றங்களைச் செய்து செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியானதில் அறிந்து கொண்டதுதான் இது.
காஃபி என்பது மட்டும் வீட்டில் அம்மையார் கைவண்ணத்தில்தான். அருமையாக இருக்கும். நெஞ்செரிச்சலின் நிமித்தம் எரிச்சலாக இருந்தேன். பால் இல்லாமல் வரக்காப்பி கொடு, போதுமென எரிச்சலாகச் சொன்னேன். இஃகிஃகி, அவரும் வரக்காப்பி கொடுத்தார். ஒரு நாள், ரெண்டுநாள், மூன்றுநாள், வாரேவா... பொதுவாக மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். ஆனால் அன்றுமுதல் இரவில் எவ்வித அல்லலுமின்றி உறங்கிப் போனேன். நீர்வடியக் காணோம். நெஞ்செரிச்சலையும் எதிர்கொள்ளவில்லை. நிற்க.
ஊரில் எத்தனையோ காஃபிகள். யாவித அழற்சிக்கும் ஆளாகவில்லை. சுகமாய் இருந்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து வந்திருக்கின்றேன். வான் அயர்ச்சி(jet lag) காரணம், ஒருமாதிரியான மனநிலை. உடல்நிலை. கொடுத்த காஃபியை கவனத்துக்கிடங்கொடாத மனநிலையில் குடித்து வந்தேன்.
நேற்றெல்லாம் அவ்வப்போது நெஞ்செரிச்சல். இன்று காலையில், ”காஃபி எப்படிப் போட்டாய்?” “பாதி பாலு, பாதி தண்ணி”. "சாரி, நாலே சொட்டுப் பாலோட வேற காப்பி போட்டுக் கொடுக்கலாமே?”
இன்றுமுதல் இனியநாள் is back again.❤️😍
-பழமைபேசி, 07/18/2023.
1 comment:
நெஞ்செரிச்சல் நிற்க டீ க்கு மாறிவிடுங்கள். மதியம் தயிர்சாதம் 41 நாட்கள் மாறினால் உணவுக்குழாயில் acid reflex -னால் ஏற்ப்ட்ட inflammation எல்லாம் நீங்கிப் போய்விடும்.
Post a Comment