7/14/2023

உறவாடல்அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். தனித்தனியாக உங்கள் ஒவ்வொருவருடனும் உரையாட ஆசைதான். ஒரேநாளில் இயலாதுதானே?

இரண்டு மாதங்கள் தாயகத்தில் இருந்தேன். பேரின்பம். உற்றார் உறவினர் நண்பர்களெனக் கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேலானவர்களை நேரில் சென்று சந்தித்து உரையாடினேன். திருமணங்கள், உறவினர் மறைவு முதலானவற்றிலும் பங்கு கொண்டேன்.

அணுக்கமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி எனும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இழப்புகளை உணர முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, அப்பா, சித்தப்பா, மாமனார் என்பதான இழப்புகள் என்றிருந்த நிலையில், தற்போது சம வயதுடையோரும் விடைபெறுவது இடம் பெற்று வருகின்றது. திரண்டிருந்த ஊரகத்திண்ணைகளும் சத்திரத்து மாடங்களும் பயிர்ப்பற்ற தரிசுகளாய்க் கிடக்கின்றன. வீடுகளுக்குள் இருந்தாலும் கூட்டத்துள் கூட்டமாய் இருக்கின்ற மனோபாவத்தில் நேரப்போதாமையுடன் முசுவாய்த்தான் இருக்கின்றனர் மக்கள்.

வாசிங்டன் வானூர்தி முனையத்தில் இறங்கிய அரை மணி நேரத்திலெல்லாம் குடிவரவு முறைமைகள் முடிக்கப் பெற்று, சரக்குப் பெட்டிகளைப் பெற்ற கையோடு அடுத்த வானூர்திக்காக திரும்பக் கொடுத்தும் ஆயிற்று. சார்லட் வந்தடைந்து காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரைந்தன. கடைசியில் பெட்டி வரவேயில்லை என்பதால், முறையிட்டு, அதற்கான பதிவுத்தாள் பெற்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. நல்ல உறக்கம்.

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் குறுஞ்செய்தி. சார்லட் வரும் விமானத்தில் பெட்டி ஏற்றப்பட்டு ஆகிவிட்டது. மகிழ்ச்சி. மீண்டும் உறங்கிப் போனேன். மீண்டும் குறுஞ்செய்தி. சார்லட்டில் பெட்டி இறக்கப்பட்டு ஆகிற்று. எழுந்து பல்துலக்கி கொடுக்கப்பெற்ற காஃபியைக் குடித்துக் கொண்டு இருக்கையில் மீண்டும் குறுஞ்செய்தி.

மாலை நான்கு மணிக்குள் பெட்டி வீட்டுக்கே வந்து சேருமென்பது தகவல். மறந்து விட்டிருந்தேன். நண்பகல் வாக்கில் அம்மாவுக்கு அழைத்துப் பேசினேன். கொடுத்தனுப்பிய பொருட்கள் குறித்து வினவினார். கொடுக்கப்பட்ட பதிவெண்ணைக் கொண்டு இணையத்தில் போய்ப் பார்த்தேன். காலை 9.42மணிக்கெல்லாம் பெட்டியைப் பெற்றுக் கொண்ட வண்டி புறப்பட்டாகி விட்டது என்பது நிலைத்தகவல்.

வீட்டுக்கு வண்டி வரவேயில்லை. மாலை ஏழு மணிவாக்கில் மீண்டும் இணையத்தில் சென்று பார்த்தேன். புதுத்தகவல் ஒன்றும் இல்லை. சரி, அழைத்துப் பேசலாமெனக் கருதி, தொடர்பு எண்ணைத் துழாவினேன். wheresmysuitcase எனும் நிறுவனத்துக்குத் தொடர்பு எண்ணே இல்லை. மாறாக மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுக்கப்பட்டு இருந்தது. விபரம் கேட்டு மடல் அனுப்பினேன். ஒரு பதிலும் இல்லை. நள்ளிரவில் விழிப்புக் கண்டு விட்டேன். சென்று பார்த்தேன். மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. நிலைத்தகவற்தொடரிலும் புதுத்தகவல் எதுவுமில்லை.

ஐந்து நாட்களுக்குப் பின்னர்தாம் பெட்டி தொலைந்து விட்டதற்கான இழப்பீட்டு விண்ணப்பம் பதிய முடியும். $1700 வரையிலும் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். பெட்டியில் இருக்கும் பொருட்களின் சந்தைமதிப்பு எப்படிப் பார்த்தாலும் $250 கூடத் தாங்காது. ஆனாலும் அதற்கான விழுமிய மதிப்பு என்பது இருக்கின்றதுதானே? பேத்திகளுக்காய், ஆசையாசையாய் செய்து கொடுக்கப்பட்ட நிலக்கடலையுருண்டை, எள்ளுருண்டை, ஓலை முறுக்கு, மாவடு முதலானவற்றுக்கு ஈடு இணை ஏது? மனம் சோர்வு கண்டது. ஊருக்கு அழைக்க மனம் வரவில்லை. அழைத்தால் கேட்பார்களே??

காலை பத்து மணி இருக்கும், மின்னஞ்சலொன்று வந்தது, “ஓட்டுநர் லசோனியா என்பார்வசம் பெட்டி ஒப்படைக்கப் பெற்று இருக்கின்றது. எந்நேரத்திலும் பெட்டி வீடு வந்து சேரலாம்”. நேற்று காலை 9.42க்கு ஏற்றப்பட்ட பெட்டி, 20 மைல் தொலைவில் இருக்கும் வீட்டுக்கு இன்னுமா வந்து கொண்டிருக்கின்றது? அவ்வப்போது வாசலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். 24 மணி நேரத்தில் வந்து சேருமென்றார்கள். 48 மணி நேரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. மீண்டும் ஒரு குறுஞ்செய்தி. ”நேற்று மாலை நான்கு மணிக்கு கொடுக்கப்பட வேண்டிய பெட்டி, கொடுக்கப்படுவதற்காக வண்டி வந்து கொண்டிருக்கின்றது”.

மனம் அலுத்துப் போய் விட்டது உடம்போடு சேர்த்து. உறங்கிப் போனேன். எங்கோ ஏதோ நடப்பது போன்ற உணர்வு. விறுக்கென எழுந்து சாளரத்துவழி வெளியே பார்த்தேன். வண்டியொன்று நின்று கொண்டிருந்தது. ஓடிப் போனேன். இதுதாம் என் பெட்டியென அடையாளம் காட்டினேன்.

அலைபேசி என்பது கையிலிருப்பதால் எப்படியெல்லாம் அது நம்மைப் படுத்துகின்றது? இப்படித்தான் ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்குள்ளும். நிமிடத்துக்கு நிமிடம் மாந்தனின் எண்ண அலைகள் மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. எல்லாரும் பரபரத்துக் கொண்டே இருக்கின்றனர். நாம் சென்று சந்தித்தால், பேசுகின்றனர். பேசிக் கொண்டே இருக்கின்றனர். மீண்டும் வருமாறு அழைக்கின்றனர். அவ்வளவு நல்லவனா நான்? பரபரப்பில் இருந்து விடுதலையான உணர்வு, அவர்களை அப்படியான குதூகலத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. நேர்கொண்டு பேசித் திளைத்திருப்போம்.

No comments: