4/28/2023

எப்படிணே?



இளவல் ஒருவர் அழைத்திருந்தார். “அண்ணா”. “சொல்லுங் தம்பி”. “எப்படினா எப்பயுமே மகிழ்வா, துள்ளலா இருக்கீங்க?”

“அப்படியெல்லா ஒன்னுமில்லீங் தம்பி. எனக்கும் கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், சினம்னு வருவதும் போவதுமாத்தான் இருக்கும்”

பேச்சு அதனைக் கடந்து சென்று விட்டது. ஆனால் சிந்தித்துப் பார்க்குங்கால், மகிழ்ச்சி, உவப்பு, இன்பம், களிப்பு முதலானவை எல்லாம் வேறு வேறானவை. ஒவ்வொரு மனிதனும் முக்காலே மூணுவீச நேரமும் இன்புற்றிருக்கவே ஆட்பட்டவர்கள். எப்படி?

மகிழ்ச்சி: மகிழ்தல் என்றால் பொங்கி வருதல். மனம், இருக்கும் நிலையில் இருந்து குதூகலநிலைக்கு மாறிய ஓர் உணர்வு. அது தற்காலிகமானது.

உவப்பு: ஏதோவொரு செயலின் ஈடு(result) மனநிறைவைக் கொடுத்தல். உவப்பும் கசப்பும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை.

களிப்பு: கேளிக்கை நிமித்தம் மனம் மற்றெதனின்றும் ஒன்றியிராமல் ஏதோவொன்றின்பால் மட்டும் பற்றியிருக்கும் போது ஏற்படும் விடு உணர்வு.

இன்பம்: வலியற்று இருக்கும் நிலை.

நடப்பில் நாம் இவை அத்தனையையும் மகிழ்ச்சி என்றே கருதிக் கொள்கின்றோம். நுண்ணிய வேறுபாடுகளுக்கு இடம் கொடுப்பதில்லை. இங்கே இளவல் அவர்களின் வினாயென்பது இன்பம் குறித்தானதே. ஆகவே நாம் இன்பம் என்பதை எப்படிக் கட்டமைத்துக் கொள்வது, தக்கவைத்துக் கொள்வது என்பதைப் பார்த்தாக வேண்டும்.

இன்பம் என்பது எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டது அன்று. காக்கை குருவிகளும் குழந்தைகளும் வலியுடனேவா இருக்கின்றன? எண்ணிப்பாருங்கள். இளவயதில் மனம் கொப்பளிக்கக் கொப்பளிக்க இருந்திருப்பீர்கள். நாட்கள் செல்லச் செல்ல அந்த நிலை அருகி வந்திருக்கக் கூடும். ஏன்? நாம் நம்மை நிபந்தனைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டதுதான். இது கிடைத்தால் வெற்றி, அல்லாவிடில் தோல்வி. தோற்று விட்டோமோயென்கின்ற வலி. அது அடைய உழைக்க வேண்டும். தோற்றுவிடுமோயென்கின்ற அச்சம், வலி. புது கார், அந்தா அவர் வைத்திருப்பதை நாமும் பெற்றுவிட்டால் இன்பம், அல்லாவிடில் அதனை அடையும் வரை வலி. ஆக, அப்படியான நிபந்தனைகளுக்கு மசியாமல் இருந்தால் வலியும் இல்லை. அதற்காக அதனை அடைய வேண்டுமெனும் குறிக்கோள் கொண்டிருக்கக் கூடாதென்பதுமில்லை. Consciously break free from such conditions.

இன்பம் என்பது அவரவர் தெரிவு. ஏமாற்றங்களும், தோல்விகளும், இழப்புகளும் வரும்தான். அழலாம். அடுத்தவருடன் பேசலாம். தனிமையில் இருக்கலாம். ஆனால் அவை எல்லாமே நம் கவனத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு சிந்தனையும் இல்லாமல் மனத்தை வெறுமைக்குப் பறிகொடுக்கும் போதுதான் அதிலிருந்து மீள முடியாமற்போய் விடுகின்றோம். சமூகத்தில் கேள்வி கேட்கும் பழக்கம் இருக்க வேண்டும். அது இல்லாத இடத்தில், தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் பழக்கமும் அருகிப் போய் விடும். அதனாலே இன்பத்தைப் பறிகொடுப்பதும் நேர்ந்து விடுகின்றது.

தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அறிதலும் பழகுதலுமாக. நம்முள் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களே தொடர்ந்து மனத்தைப் புத்துணர்வுடன் இருக்க வழிவகுக்கும். நடப்பில் நிகழ்வனவற்றுக்கொப்ப தகவமைத்துக் கொள்வதும் மாற்றம்தானே? நம்முள் மாற்றங்களே நிகழ்ந்திராத போது, உயிர்த்திருத்தலுக்கு ஒரு பொருளுமில்லை. வலிதான் மிஞ்சும். ஆகவே நிபந்தனைகளுக்கு ஆட்படாமல் இருப்பதும், தெரிந்து செயற்படுவதும் இன்புற்றிருத்தலுக்கே இட்டுச் செல்லும்.

Happiness depends upon ourselves. -Aristotle



No comments: