3/10/2023

டைரி - அருள்மொழி

இலக்கியப் படைப்பின் அடிப்படை என்ன? பேசாப் பொருளைப் பேசுவதும், பொதுப்பார்வைக்குப் புலப்படாதவற்றை பொதுவுக்குக் கொண்டு செல்வதும்தான் அடிப்படை. அதுதான் விழுமியமார்ந்த ஓர் எழுத்தாளரின் செயலாக இருக்க முடியும்.

பொதுவாக, வணிகமய உலகில், வெற்றிக்கான வழிகளென அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டு, அதற்காக ஓட்டத்தில் ஈடுபட்டுப் பொருள் தேடிக் கொள்வது வாடிக்கை. அதில் இலக்கியம் விதிவிலக்கன்று. நிறைய வாசகர்களைச் சென்று சேர வேண்டும், புகழெய்த வேண்டும், பாராட்டுகள் பெற வேண்டும், ஒளிவட்டத்தில் நிற்க வேண்டும், இப்படியான பல ஆசைகளின்பாற்பட்டு, நாங்களும் எழுதுகின்றோமென வரிசை கட்டி நிற்போர் ஏராளம். அதில் சிறுகதை எழுத்தாளர்களும் அடக்கம்.

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக, படிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்வதற்காக, சொல்லிக் கொண்டே போய் திருப்பமென்கின்ற வகையில் களிப்பூட்டுவதற்காகயெனக் கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுக்கு இலக்கிய மதிப்பீடு என்பது எதுவுமில்லை.

’டைரி’ எனும் நூலின் ஆசிரியர் இவற்றினின்று முற்றிலும் மாறுபட்டவராகத் தெரிகின்றார். அவரது கதைகள் வழமையான பாதையில் பயணித்திருக்கவில்லை. புனைவுக்கதைகளெனக் கருதினாலும்கூட, உண்மைக்கு மிக நெருக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாகக் காட்சிகளை அடுக்கிக் கொண்டே போய் விசுக்கென எதிர்பாராத ஒன்றைச் சொல்லிப் பரவசம் ஊட்டுவதற்காக உற்பத்தி செய்யப்பட்ட கதைகள் போல இல்லை இவை. சமூகத்தில், சொல்லப்படாத திசையிலிருந்து சொல்லப்படுகின்ற கோணங்களும் உணர்வுகளுமாகப் பயணிக்கின்றன இந்தப் பதினான்கு கதைகளும்.

கடைசியில் முடிச்சவிழ்த்துத் திகில் ஊட்டுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கவில்லை இந்தக் கதைகள். நம்மில், நம் வீட்டில் நிகழ்கின்றவற்றை, ஆரவாரமும் கொந்தளிப்பும் கூச்சலுமுமில்லாமல், கடைமடையில் பயணிக்கின்ற ஆற்றைப் போல, தணிந்த குரலில் படர்ந்து கடலினூடே கலப்பதைப் போல மனத்துள் கலந்து போகின்றன கதைகள்; எண்ணற்ற சிந்தனைப் புடைப்புகளோடு. 

புடைத்திருப்பது காளானாகவும் அமையலாம். பெருமரமாகவும் ஓங்கி வளரலாம். அது அவரவர் மனப்போக்கைப் பொறுத்தது. காளான்களாக, புடைத்த மறுகணமே இருக்குமிடமில்லாமற்போகுமேயானால், வாசகருக்காக உழைக்க வேண்டியது இன்னமும் இருக்கின்றதெனப் பொருள். மாறாகச் சிந்தனைத் தாக்கம் எழுந்திருக்கின்றதென்றால், படைப்பின் நோக்கம் கைகூடி இருக்கின்றதெனக் கொள்ளலாம். அப்படியான கதைகள்தாம் இவை.

“எதையும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. அவள் கை, தானாக இரசத்துக்குப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது”.

இப்படித்தான் நூலின் கடைசி வரி அமைந்திருக்கின்றது. பிரச்சார நெடியற்ற கதைகள். மெல்லிய கதைகள். விளம்பரத்துக்காய் அலைமோதும் பரபரப்பான உலகில், பரபரப்பற்றதும் சக மனிதரின்பாற்பட்ட மனிதமார்ந்த பொழுதுகளாகவும் இருக்க வேண்டிய பண்பாட்டுக்காகப் பூத்திருக்கும் கதைகள்!


No comments: