6/22/2008

எள்ளுத்தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-2

நெஞ்சுச்சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

3 comments:

Mahesh said...

உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum of interest - தமிழ் சரியா?) ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... எப்பிடிங்க இதெல்லாம்?


//பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.//

அந்தக் காலத்துலயே ஆலிவ் எண்ண நமக்கு அறிமுகம் ஆயிடுச்சா?

பழமைபேசி said...

//Mahesh said...
உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum of interest - தமிழ் சரியா?) ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... எப்பிடிங்க இதெல்லாம்?

//
எங்க தாத்தா அவரு இருந்த வரையிலும் நம்மூர் மாரியம்மன் கோயில் தெருவுல இருந்த நாட்டு மருந்துக் கடையோட பிரதான வாடிக்கையாளர். நாட்டுச்செட்டியார் கடைன்னு சொல்லுவோம். இது அவோரோட தாத்தா எழுதி வெச்சது. 1880ல இருந்தே சீமைப் பண்டங்கள் வந்து இருக்கும்னு நெனைக்கிறேன். இந்தத் தொடர் இன்னும் முழுமை அடைல. எங்க மகேசு, கால அவகாசம் பத்த மாட்டேங்குதே?!

பழமைபேசி said...

//Mahesh said...
உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum of interest - தமிழ் சரியா?) ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... எப்பிடிங்க இதெல்லாம்?
//
ஆர்வ நிறப்பிரிகை -- பொழிப்புரை

ஆர்வத்தின்
ஊடாய் விளைந்த நிறப்பிரிகை போன்றதொரு வெளிப்பாடு -- பதவுரை

ஆர்வ வெளிப்பாடு -- கருத்துரை

அகலவுரைன்ற பேர்ல
இதுக்கு ஒரு கதைய சொல்லி உங்க நேரத்தை வீணடிக்கணுமா? பொழச்சிப் போங்க.....