Showing posts with label சூடு. Show all posts
Showing posts with label சூடு. Show all posts

6/06/2009

வெறுமை ஒழிக!

மாந்தனுடைய வாழ்க்கையில் அடிக்கடி தென்படுவது மனவெறுமை (boredom); அதனால் அவனுக்கு அவதி! மனம் தவிக்கிறது, இருந்த இடத்தில் இருக்கப் பிடிக்கவில்லை, உடன் இருப்போரைக் கண்டால் பிடிக்கவில்லை, எதைச் செய்யவும் சலிப்பு மேலிடுகிறது, இதை ஒருவழிக்குக் கொண்டு வர வேறேதோ ஒன்றை நாடுகிற சூழ்நிலை.

திரைப்படம் பார்க்கிறான், சலிப்பாக இருக்கிறது. கதை கட்டுரை படிக்கிறான், அதில் மனம் ஒன்றவில்லை. ஏன்? அவனது மனம் இது வரையிலும் கண்டிராத எதோ ஒன்றுக்கு இட்டுச் செல்கிற தூண்டுதல் (stimulation) அதில் இருந்திருக்கவில்லை(lack of variety). மனமானது மாற்றங்களுக்கும் மாற்றான உணர்வுகளுக்கும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதையறிந்து, மாந்தனை வேறொரு எண்ணச் சூழலுக்கு இட்டுச் செல்கிற வகையில் படைப்புகள் தருவதில்தான், படைப்பாளியின் வெற்றி அடங்கியுள்ளது.

இந்திய சமூகத்தில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன? மாற்றங்களைக் கொணர்கிறோம், இரசிப்புத் தன்மையை மெருகேற்றி சுவராசியத்தைக் கூட்டுகிறோம் (variance in variety) என்று சொல்லி, தனிமனிதனின் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து, அதன்மூலம் இலாபம் ஈட்டப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இங்கே நீங்கள் கையாளப்படுகிற வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். சுவராசியம் என்பார்கள். சுவராசியம் என்றால் என்ன? சுவை + இராசியம்! இராசியம் என்றால் ஏதோ ஒன்றை மறைபொருளாக வைத்துச் செயல்படுதல். நாங்கள் இராசி ஆகிவிட்டோம் என்று சொன்னால், எங்களுக்குள் நட்பு எனும் மறைபொருள் துளிர்த்து விட்டது என்று பொருள்.

அப்படியாக சுவராசியம் என்பது, சுவையான பாங்கில் மறைபொருள் ஒன்றை வெளிப்படுத்தும் செயல். ஆனால், நடப்புச் சூழலில் அது எப்படிக் கையாளப் படுகிறது? பெரும்பாலான படைப்புகளில், தனிமனிதத் தாக்குதல், உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து மனத்தை ஆட்கொள்தல், குறை சொல்லிச் சுட்டுதல், புறம் பேசுதல், ஆதிக்கம் செலுத்துதல் முதலான, மாந்தனுக்கு எதிரானவற்றை லாவகமாகக் கையாளும் போக்கு சுவராசியம் என்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு காணொளிக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். நாயகன், வில்லன் ஆகிய இருவரும் சொல்லவொண்ணா அவலங்கள் செய்வர், நாயகியையும் அவர் சார்ந்தோரையும் அவலநிலைக்கு ஆளாக்குவர்(domestic violence), அல்லது பாலியல் ரீதியான கொடுமைகள் (sexual harassment), அதனை எதிர்கொண்டு நாயகன் வெல்வதுதான் கதை. பெரும்பாலான படைப்புகளில், இந்த அடிப்படையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அப்படியானால் மேலே குறிப்பிட்டபடி varience in variety, சுவ்ராசியம் மற்றும் புதுமையான சூழலை உண்டு செய்து படைப்பில் வெற்றி பெறுவது எப்படி?

அங்கேதான், இன்றைய சூழலைப் பொறுத்த மட்டில், நமது சமுதாயம் படைப்பில் வெற்றி பெற்று, அதே நேரத்தில் மனிததர்மத்தில் (ethic) தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி?

பெரும்பாலான படைப்பாளிகள், புறநிலையில் வெகுவாக மாற்றத்தைக் கொணர்ந்து, மனிதனின் எண்ண மாறுதலுக்கான ஏக்கத்துக்குத் தீனி இட்டு வருகிறார்கள். அது என்ன புறநிலை? வில்லன் நாயகியைக் கொடுமைப் படுத்துவதில் புதிய யுக்திகள். நாயகனைச் சிறுமைப் படுத்துவதில் புதிய நேர்த்தி. பின்னர் வில்லனை வெற்றி காண்பதில் புதிய வழிமுறை. இப்படியானவற்றில் சமுதாயம் சோரம் போனதுதான் வேதனையான ஒன்று!

பின் எப்படியான மாற்றங்கள் மாந்தனுடைய எண்ண மாறுதலுக்கு உகந்ததாக இருக்கும்? அகநிலை மாற்றங்கள்! படைப்பின் கருவில் மாற்றம் இருக்க வேண்டும். அவன் கடந்த முறை கண்டது காதல் கதை என்றால், அடுத்த முறை அது வேறொன்றாக இருக்க வேண்டும். அந்தக் களம், மனிதனின் மனதைக் கொள்ளை கொள்ள வேண்டும்.
Iyer the Great, வரவேழ்ப்பு, வந்தனம், New Delhi, வைசாலி என்று தொடர்ந்து ஒன்றுக்கொன்று மாறுபட்ட கோணத்தில் படைப்புகள் வர, தமிழ் வணிகசக்தி ஆடிப் போய், அவை தமிழகத்தில் வெளிவரத் தடை வந்தமை இதற்குத் தகுந்த உதாரணமாகச் சொல்லலாம்.

மனவெறுமையைத் துடைத்தெறிந்து மகிழ்வு கொள்வதில், தனிப்பட்ட மனிதனுக்கும் உரிய கடமைகள் உண்டு. அவன் அவனது மனதை எளிமையாக, ஏழ்மையாக வைத்திருத்தல் மிக அவசியமானது. ஒருவனுடைய வாழ்வுக்கு உண்டானது 100 பெட்டி மகிழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 100 பெட்டிகளையும் முதல் 25 ஆண்டுகளிலேயே செலவழித்து விட்டான் என்கிறபோது, எஞ்சிய நாட்களுக்கு அவன் மேலதிக மகிழ்ச்சியைத் தேடித்தான் திரிய வேண்டும். அந்த காலகட்டத்தில் மனநிம்மதியை அவன் இழப்பது தவிர்க்க இயலாதது ஆகிவிடுகிறது.

இன்றைய நிலையில், மனமகிழ்ச்சி என்பது மற்றவர்களின் வணிகரீதியான வெற்றிக்காக, விரைவில் செல்விடப் படுகிறது. மேல்நாட்டவன் ஒற்றைத் தூண்டில் கொண்டு மீன்பிடிப்பதை நாட்கணக்கில் இரசித்து மகிழ்கிறான். நமது சமுதாயம், அதை அந்த அளவில் வைத்திருக்கிறதா? இல்லை. காரணம், நமது மனது சிறுவயதிலேயே உச்சம் எய்தி விட்டதுதான் நிதர்சனம். அந்த மனதுக்கு இது போன்ற சிறு சிறு செயல்களில் மகிழ்ச்சி ஏற்படாது. உணர்ச்சிகள் என்ற கடப்பாரை கொண்டு, நெஞ்சினுள் நச் நச்சென்று இடிக்க வேண்டிய அளவுக்கு அது முதிர்ச்சியாகி விட்டதென்பதே உண்மை.

ஆகவே வெகுளித் (Innocence) தன்மை கொண்டு, மனதை ஏழ்மையாக வைத்திருத்தல் அவசியம். அதை வளர்த்தெடுக்க, குழந்தைகளோடு பெற்றவர்கள் நிறைய நேரம் செலவிட வேண்டும். வக்கிரங்கள் கொண்ட படைப்புகளைத் தவிர்த்திடுவதால், மகிழ்ச்சியானது விரைவாகவும் மலிவாகவும் செலவிடப்படுவது தடைபடும்.

வக்கிரப்படுதலை ஊக்குவித்து, நாட்டத்தை உண்டுபண்ணி, உங்களது நீண்ட நாளைய மகிழ்ச்சியை குறுகிய நேரத்தில் செலவிடச் செய்து படைப்பை வெற்றி பெறச்செய்வது என்பது, ஒரு பொருளீட்டும் மாயை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், விளையாட்டு, குழந்தைகளுடன்கூடிய தொடர்பை மேலும் வலுப்படுத்துதல், கலை இலக்கியங்கள், சமூகப் பங்களிப்பு, ஆன்மீகம், உடற்பயிற்சி போன்றவை மனதுக்கு மகிழ்வளித்து, கூடவே மனவெறுமையையும் வென்றொழிக்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை!

“The good things of life are not earned, but obtained with little or no effort!”

6/03/2009

உப்பைக் குறைச்சிக்கலாம்!

உடுக்க உடை! உண்ண உணவு!! உறங்க உறைவிடம்!!! வாழ்வாதாரங்களான இந்த அடிப்படை வசதிகளைத் தராத ஆட்சி, ஒரு ஆட்சியா? இவர்களுக்கு ஓட்டு ஒரு கேடா?? இவைகளுக்கு உத்தரவாதம் தராத தலைவன், ஒரு தலைவனா???

மேலே கூறியது போல வெகு காரசாரமாக உணர்ச்சி உரைகளைப் பொழிவார்கள்! ”ஆகா, என்ன உரை? என்ன உரை??” என்றெல்லாம் பொங்கி, சீட்டி அடித்து, கனகச்சிதமாகக் கை கொட்டி ஆர்ப்பரிப்போம். இது இன்று, நேற்றல்ல, கி.பி 400ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது என்கிறது வரலாறு. எப்படி?

ஆம். அன்றிலிருந்து எந்த மன்னனும் சரி, மக்களாட்சி செய்தவர்களும் சரி, தன்னுடைய மக்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டுக்கு சரியானதொரு பாதுகாப்பைத் தரத் தவறியதைக் காணலாம்! மக்களும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதும் இல்லை.

உணவு, உடை, உறையுள் இருக்கட்டும், எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் என்று எப்போதாவது, யாராவது கேட்டதுண்டா? உயிருக்குத்தானே உணவு, உடை, உறையுள்? ஆனால், நாம் அதை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. காரணம், நாம் மேலே சொன்ன உரையில் நம்மை நாமே இழந்ததுதான்.

இந்த வரிசையில் இந்திராவும், சஞ்சய் காந்தி மட்டும் விதிவிலக்கு. அண்டை நாடான சீனா, இந்தியா சீனா பாயி பாயி என்று சொல்லி நட்பு நாடகம் ஆடி, நேருவின் முதுகில் குத்தியதின் விளைவாய், அவர் தீராத வேதனையுடன் உயிர் நீத்ததின் தாக்கம்தான் அதற்குக் காரணம். இந்திராவின் மறைவுக்குப் பின் எந்தத் தலைவருக்கும் நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை.


தேர்தல் வரும். ஒருவரை ஒருவர் புழுதி வாரித் தூற்றுவார்கள். நாமும் நம் பங்குக்கு அந்த ஆட்டத்தில் வெகு மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறோம். இதனால் நாட்டின் பாதுகாப்பு கேலிக்குரியதாகி, பின்னர் அதுவே மாநிலத்தின் பாதுகாப்பு அல்லது உரிமைகள் என்ற அளவுக்கு கீழிறங்கி, தற்போது அது இன்னும் ஒருபடி கீழிறங்கி, சமுதாயம் என்கிற மக்கள்த் திரள் சிதறத் துவங்கி இருக்கிறது.

எப்படி அதைத் தீர்மானிக்கிறோம்? இது அவநம்பிக்கை(pessimism) ஆகாதா என்றெல்லாம் வினவலாம்?? இது அவநம்பிக்கை அல்ல. ஒருவனுக்கு தன்னுடைய உள்ளார்ந்த நிலை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் தனது குறைகளைக் களைய ஏதுவாக இருக்கும்.


மாறாக அதை மறைக்க முற்பட்டு மழுப்புவதால் மேலும் பின்னடைவே ஏற்படும்; ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஈழத்தின்பால் மனிதாபக் குரல் கூட எழுப்ப முடியாமல் போனதும் இதன் காரணமாகத்தான். அது காவிரிக்கும் தொடரும், பெரியார் அணை தாவாவுக்கும் தொடரும், எதற்கும் தொடரும் என்ற நிலையில்தானே நாம்?!

தமிழனின் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? உணர்ச்சி வசப்படுவது, அதனால் திட்டமிட்ட போலிப் பரப்புரைகளுக்கு இரையாவது என்பதுதானே? அறிவியல் என்ன சொல்கிறது? உப்பும், புளிப்பும், காரமும் அளவுக்கு அதிகமானால், அது மாறுபட்ட விளைவுகளைத் தூண்டுகிறது என்பதுதான்.

தெலுங்கனுக்குத் தலைவலி அவன் உண்ணுகிற காரத்தைத் தரவல்ல மிளகாயில் என்றால், தமிழனுக்குத் தலைவலி அவன் உண்ணும் உப்பில்தான்! இதில் பெருமையாக உசுப்பல், என்னவென்று? நீயெல்லாம் உப்புப் போட்டுத் தின்கிற தமிழனா? சூடு சொரணை என்கிற பெயரில், இனியும் எத்தனை நாட்களுக்கு நம் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கப் போகிறோம்??

உப்பு என்பது உடலுக்குத் தேவை, ஆனால் அது தேவையான அளவில்! உப்பே உணவாக உட்கொண்டால்? உணர்ச்சி வசப்படுவோம், இருதய நோய் வரலாம், வாதநோய் வரலாம், மன உளைச்சல் நேரிடும், இரத்த அழுத்தம் மேலோங்கும், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

தேவையான உப்பு என்பது, உணவின் மூலப் பொருள்களிலேயே அடங்கி உள்ளது, அதாவது காய்கறிகளில், பதனிட்ட உணவுகளில் என்று. அமெரிக்க மருத்துவக் கழகம் சொல்கிறது, தினமும் ஒரு கிராம் உப்பைக் குறைத்துக் கொள்வதின் மூலம், அமெரிக்காவில் மாத்திரமே பத்தாண்டுகளில் 2 லட்சம் பேரின் இழப்பைத் தவிர்க்கலாம் என்று.

ஆகவே உட்கொள்ளும் உப்பு, கூடவே காரம் மற்றும் புளிப்பைக் குறைத்து வாழ்வில் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்துவோம். அதோடு தனிநபரின் உயிருக்கு உத்தரவாதம், சமூகத்தின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிமை கோருவோம்!

6/01/2009

அமெரிக்காவுக்கு பதிலடி! பெண்டிர் வளர்ச்சிக்கு முதல்படி!!

சமீபத்தில் அமெரிக்காவின் உச்ச நீதிபதியாக ஒரு சிறுபான்மை இனத்தைச் சார்ந்த, அதுவும் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணியை அந்நாட்டு அதிபர் நியமனம் செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அது போலவே இந்தியாவிலும் வரலாற்றில் முதல் முறையாக, மக்கள் சபைத் தலைவர் பதவிக்கு தலித் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியை நியமிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பதை நாம் அறிகிறோம்.

எம்மைப் பொறுத்த மட்டிலும், மாநில முதல்வர், இந்தியாவின் பிரதமர், ஏன் அமெரிக்காவின் அதிபர் பதவியைக் காட்டிலும் சவாலான பதவி இந்த இந்திய பாராளுமன்ற சபாநாயகர் பதவி என்பது. 545 உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி அவையை நடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அதைக் கையாளும் பொறுப்பு, இப்போதுதான் ஒரு பெண்மணிக்கு கிடைக்க இருக்கிறது என்பதும் தாமதமான ஒன்றுதான்.

இவரது தலைமையில் நடக்கப் போகும், இந்த 15வது மக்கள் சபையின் காலத்திலேயே, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுமானால், அதைவிட அளப்பரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது.


பெண்களின் வளர்ச்சி துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த வளர்ச்சிக்குத் தேவையானது, நாம் முன்னரே உரைத்தது போல பாரிய அளவிலான உளவியல்ப் புரட்சியாக மட்டுமே இருக்க முடியும்.

முதற்கட்டமாக, பெண்ணடிமை, ஆணாதிக்கம், பெண் விடுதலை போன்ற சொற்களை அறவே ஒழித்தாக வேண்டும். ஏன்? இவையெல்லாம் எதிர்மறைப் (negative approach) பார்வையோடு, துயரச் சிந்தனை(pessimism)யோடு சமூகத்தை நாடும் சொற்கள். அவற்றைக் கையாளுவதால், மறைமுகமாக (indirect) பெண் அடிமையானவள், ஆண்களின் ஆதிக்கத்தில் தாழ்ந்து போனவர்கள், விடுதலையற்றுக் கிடப்பவர்கள் போன்ற உணர்வைச் சமூகத்தில் நாமே விதைக்கும் காரியத்திற்கு துணை போகிறோம்.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? மங்கயர்தாழ் நிலையை, தாழ்ந்த நிலையில் இருந்து மேன்மை நிலைக்குக் கொண்டு செல்லும் முகமாக, பெண் வளர்ச்சி, மங்கையர் மறுமலர்ச்சி போன்ற மேன்மைச் சிந்தனை(Optimism)யுள்ள சொற்கள் கொண்டு சமூகத்தை அணுக வேண்டும்.

சொற்களை மாற்றிக் கையாளுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா? இங்கே சொற்கள் என்பது முக்கியமல்ல. சிந்தனையும் மாறுபடுகிறது! இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தின் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவே அடிப்படை. சமூகத்தில், தெரிந்தோ தெரியாமலோ அவநம்பிக்கையுள்ள(pessimism) சிந்தனை வேரோடிப் போயிருக்கிறது. சமூகத்தின் லெளகீக வாழ்வில் நிகழும் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் மனைவி, “ஏங்க, வேலைக்குப் போகலையா?”. அதற்கு கணவன், “நீ இன்னும் காபி போடலையா? காபி போடாம என்ன செய்யுற??”.

அதுவே பக்கத்து வீட்டில், “வேலைக்குப் போறீங்கதானே? நேரம் ஆகுது அதான்!”. உடனே கணவன், “காபி போட்டுட்டியா, இதோ வர்றேன்!”.

இந்த இரு வீடுகளிலும் என்ன வேறுபாடு? முந்தைய வீட்டில், எதிர்மறைச் சிந்தனை தாண்டவமாடுவதை உணரலாம். அதுவே பக்கத்து வீட்டில், இன்பமயச் சிந்தனை வழிந்தோடுகிறது என்பதுதான்.

இரு நண்பர்கள், அவர்களுக்கு வயது 8. முதலாமவன் மாட்டு வண்டியில் இருந்து வீசப்படும் திரைப்பட அறிவிப்புத் துண்டுகளைப் பெறச் செல்கிறான். திரும்பி வருபவனைப் பார்த்து, “டே குமாரு, நோட்டீசு கெடச்சுதாடா?”. அதே நண்பர்கள், வயது 18, உடுமலை லதாங்கி திரையகம் முன்பு, “என்றா, டிக்கெட் கெடைக்கலையா?”. “கெடச்சது, வா போலாம்!”. ஆக இடைப்பட்ட இந்த பத்துவருட காலத்தில், அவர்களுக்குள் இந்த எதிர்மறைச் சிந்தனையை ஊட்டியது யார்? சமூகம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன், மணமகள் வீட்டார் ஏதோ குறித்து மறைவாகப் பேசிக் கொண்டு உள்ளனர். அதையறிந்த மூன்றாம் நபரான இவர், “என்ன, கல்யாணத்துல ஏதும் பிரச்சினையா?” என்று கேட்கிறார். கல்யாண வேலை எல்லாம் நன்றாக நடக்கிறதாயென ஏன் இவர் கேட்கக் கூடாது?? அவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே எதிர்மறைச் சிந்தனையோடு கேட்பது கிடையாது. இயல்பாகவே அப்படித்தான் பேச்சு வருகிறது சமூகத்தில். இதில் அந்த தனிப்பட்ட நபரைக் குறை சொல்வது சரி ஆகாது.

இப்படி உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால், pessimism என்கிற அவநம்பிக்கை எங்கும் வியாபித்திருப்பதைக் காணலாம். கடை இன்னும் திறக்கலையா? பஸ் போயிருச்சா? பள்ளிக்கூடத்துல இடம் கிடைக்கலையா? அரிசி தீர்ந்து போச்சா? இப்படி நிறைய! சரி, இனி இவற்றின் மூலம் மற்றும் விளைவுகளைப் பார்ப்போம்.

மூலம் என்று பார்த்தால், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்கள். பேச்சாளர்கள் என்பவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். பெரும்பாலும் பரப்புரையாளர்கள்தானே?! ஊடகங்களிலும் எதிர் மறையான காட்சிகள் கொண்டு வெகுவாக துயரத்தைக் காண்பித்து, எதிர்மறையை விதைத்து வளர்த்து விடுகிற நிலையை நீங்கள் சுலபமாக உணரலாம்.

நான் 1990களிலே பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, பெரும்பாலும் 1980களுக்கு முன் வந்த நாவல்கள், நூல்களை வாசிப்பது உண்டு. அவற்றிலெல்லாம் நல்ல சிந்தனைக்குரிய, வெற்றியை அடிப்படையாகக் கொண்ட நேர்மறைக் காட்சிகள் வெகுவாக வர்ணிக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கோ வதைபடுவதை இரசிக்க சாரை சாரையாய் மக்கள் கூட்டம். இரசனையே மாற்றப்பட்டு விட்டதுதானே காரணம்?!

இன்றைய உலகில் அறிவியல் சாதனம் கொண்டு, ஒருவர் எந்த மாதிரியான உணர்வுடன் இருந்தார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. எப்படி? அவன் உணர்வுகள் மூளையில் அதற்கான சுவடுகளைப் பதிக்கிறது. அதைப் படம் எடுப்பதின் மூலம், மருத்துவர்கள் பதிந்த உணர்வுகளைக் கணக்கிடுகிறார்கள் என்பதே!

ஆக, வெந்தசாமியோ நொந்தசாமியோ, யாரோ ஒருவர் தெருமுனையில் நின்று கொண்டு பரப்புரையாற்றும் போது கேட்கப்படும் வக்கிரங்கள், அவனுள்ளும் அவளுள்ளும் சுவடுகளாய் விதைக்கப் படுகிறது. அது போன்றதுதான் காணொளிக் காட்சிகளும்.


அச்சுவடுகள், குரோமோசோம்கள் வழியாகச் சென்று பிறக்கும் குழந்தையினுள்ளும் தங்குகிறது. சமூகத்தில், வெளிச் சக்திகளால் விதைக்கப்படுகிற வக்கிரங்கள் நம்முள் செல்வதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, கர்ப்பம் தரித்த பின் அமைதியாய்ப் பாடல்கள் கேட்பதின் மூலம், குழந்தையினுள் பதிந்த சுவடுகள் அழிந்து விடுமா?

நன்னம்பிக்கையோடு பிரச்சினையை அணுக வேண்டும், எனவேதான் முன்னாள் குடியரசுத் தலைவர் நல்ல கனவு காணுங்கள் என்றார். அதையும் கனவு காணச் சொல்கிறார் என்று பொத்தாம் பொதுவாகக் கூறி, சிந்தனையை மழுங்கடித்து விட்டோம்.


மனநல மருத்துவர் ருத்திரன் ஐயா அவர்களைப் போன்று, ஆயிரமாயிரம் ருத்திரன்கள் வர வேண்டும். அவர்கள் எல்லாம், கலை, இலக்கியம், பத்திரிகை, ஊடகங்கள் என எங்கும் வியாபித்து உளவியல்ப் புரட்சியைக் கொண்டு வரவேண்டும்.

அவ்வாறு உளவியல் ரீதியாக, பெண்களின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வுகள் சமூகத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நல்ல நம்பிக்கையை ஊட்டி, பெண்களுக்கு சமூகத்தில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.


மக்கள் சபைத் தலைவராக பதவி ஏற்கும்பட்சத்தில், வேளாண்மைத் துறையில் புரட்சிகளைக் கொணர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களைப் போலவே, அவரது புதல்வி மீரா குமார் அவர்களும் புரட்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு,

பழமைபேசி.

5/28/2009

ஒன்றுக்கும் உதவாத உணர்ச்சிகர உரைகள், நிகழ்ச்சிகள்!

புரட்சிகரமான உரை, புரட்சிகரமான பேச்சு, புரட்சிகரமான எழுத்து, உணர்ச்சிகரப் பேச்சு, உணர்ச்சியுரை என்றெல்லாம் பல விதமாகக் குறிப்பிடப்பட்டு கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, புத்தகங்கள் விற்பது, ஒரே இரவில் தனிநபர் தலைவர் ஆவது, புகழ்ந்து பேசி மனதைக் கவர்வது போன்றனவும், தமிழகமும், உயிரும் மெய்யும் போன்றது.

புரட்சிகரமான பேச்சு, புரட்சிகரமான உரை என்பதை காது கொடுத்துக் கேட்டுப் பார்த்தால், பெரும்பாலான நேரங்களில் அது உணர்ச்சிகர உரையாக இருக்கும். மேலும், மக்களைக் கவர்ந்திழுக்கிற உரைகளையும் உணர்ச்சிகரப் பேச்சு என்றே குறிப்பிடுவதும் உண்டு. மனம் நெகிழ்ந்து, கேட்பவரை அழ வைக்கக் கூடிய உரையை உருக்கமான பேச்சு என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால், சமூகத்தில் வெற்றி பெறுகிற உரைகளை எவரும் சரியான அர்த்ததில் பெரும்பான்மையான நேரங்களில் குறிப்பிடுவதே இல்லை. எப்படி ஊடகங்களில் வரும் கட்டுரை மற்றும் செய்திகளை, கருத்து(opinion), கூற்று(fact), நிகழ்வு(incident) என்றெல்லாம் பிரித்துப் பார்த்து, அதற்கேற்ப புரிந்துணர்வு(perception) கொள்வது யதார்த்தத்தைப் பிரதிபலிக்க உதவுமோ அதைப் போல, நாம் கேட்கும் உரைகளையும் இனங்கண்டு அதற்கேற்ப ஆட்படுத்திக் கொள்வது, கேட்பவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல மனநிலைக்கும் மிக அவசியம்.

1990களில் நடைபெற்ற திராவிடர் கழகம், தி.மு.க முதலிய கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் மாநாடுகளில் முக்கியப் பேச்சாளர்கள் பெரும்பாலும் அற்புத(Rhetoric) உரையாற்றுவார்கள். அந்த காலகட்டங்களில், அதைக் கேட்டுத்தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு தமிழ் மொழியின்பால் ஒரு ஈர்ப்பு வந்தது என்று சொல்லலாம்.

அது என்ன அற்புதவுரை? அதாவது, ஏற்ற இறக்கம், உவமை, உருவகம், எதுகை, மோனை, சொலவடை, இலக்கியச் சான்றுகள் முதலியவற்றை உள்ளடக்கிய மொழி வளத்தின் அடிப்படையிலாலானது. சமீபத்தில் நடந்த அமெரிக்கத் தேர்தலில் கூட, ஒபாமா அவ்ர்களுடைய பேச்சு வெறும் Rhetoric என்றும், பேச்சில் எந்த விதமான உள்ளீடு(substance) இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தமிழகத்திலும் அதே நிலைதான்!

இத்தகைய அற்புதமான உரையினுள் வெளிப்படுத்த வேண்டிய கருப்பொருளையும் உள்ளடக்கி, தேவையான இடத்தில் மட்டும் உணர்வுகளைக் கொட்டி, கேட்போரை உரையின் துவக்கம் முதல் இறுதி வரையிலும் உடன் கொண்டு செல்லக் கூடிய உரைதான் நேர்த்தியான உரை (perfect speech). முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியில் நேர்த்தியான உரை நிகழ்த்தக்கூடிய விற்பன்னர். இந்தி மொழி தெரியாதவர்களே கூட, அவரது உரையில் மெய் மறந்து ஒன்றிப் போவதும் உண்டு.

இயல்பான உரையாக, எழுதி வைத்துப் படிக்கும்/ குறிப்பைப் பார்த்துப் பேசும் பேச்சாளர்களே பெரும்பாலும் உள்ளனர். இதே வகையில், உரக்கப் பேசாமல் சொல்ல வந்ததை கேட்போருடைய தன்மைக்கு ஏற்பப் பேசுவது எளிமைப் பேச்சு. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், இத்தகைய உரையில் வெகு சிறப்பாகப் பேசுவார்.

இறுதியாக வருவதுதான் உணர்ச்சியுரை(emotional speech). உணவுக்கு சேர்க்கும் ஊறுகாய் போல, உணர்வுகளைக் கொட்டினால் அது சிறப்பாக அமையும். ஆனால் இத்தகைய பேச்சுகள், அதிகப்படியாக உணர்வுகளை வைத்தே இருக்கும். என்னென்ன உணர்வுகள்?

மகிழ்ச்சி, வருத்தம், ஊக்குவிப்பு, கோபம், விரக்தி, பதட்டம் என்பன முக்கியமானவை. நகைச் சுவையாகவே பேசி கேட்போரைக் கவர்வது. முழு உரையும் நகைச்சுவையாக இருப்பின், அது உரை அன்று! பெரும்பாலும் கோபம், விரக்தி, ஊக்குவிப்பு, பதட்டம் இவற்றைக் கலந்து உரக்கப் பேசி, கேட்போரைக் கட்டிப் போட்டு விடுவார்கள் இவ்வகையான பேச்சாளர்கள். உரத்த குரல் இல்லாதோருக்கு, இவ்வகைப் பேச்சு அமையாது என்பதும் குறிப்பிடத் தக்கது ஆகும்.

இவ்வகைப் பேச்சைக் கேட்ட உடனேயே, உள்ளம் கிளர்ந்து எழும். உடலுக்குள்ளும் ஒருவித இரசாயன மாற்றம் நிகழத் துவங்கும். அறிவியல்ப் பதம் பாவித்துச் சொல்ல வேண்டுமாயின், நரம்புச் செல்களும் நாளச் சுரப்பிகளும் முழு வேகத்தில் தட்டி எழுப்பப்படும். ஒருவர் உணர்வுகளுக்கு முழுகதியில் ஆட்பட்டு இருக்கிறாரா என்பதை, அவரது தேகம், அவரது எழுத்து அல்லது அவர் படைக்கும் படைப்பு மற்றும் செய்கை முதலானவற்றைப் பார்த்துக் கூற முடியும்.

கோபம், அச்சம், பதட்டம் போன்ற ஒரு சில உணர்வுகள் மேலோங்கும் போது, சிந்தனை ஆற்றல் நின்று போகும். பேசுபவருக்கும், கேட்பவருக்கும் உணர்வுகள் மட்டுமே பரிமாறப் படுகிறது. மனநிலையை பேசுபவர் எடுத்துக் கொள்வார். அவர் இடும் கட்டளை எதுவாயினும், அடிபணியக் காத்திருக்கும் கேட்பவரின் மனம்! அரசியல் நிகழ்வுகளின் போது, வன்முறைகள் மற்றும் விரும்பத் தகாத நிகழ்வுகள் நிகழ்வதும் இதனாலேதான்!!

இவ்வகை உணர்வுப் பேச்சுகளை உண்டு செய்பவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது, கேட்பவரும் ஒருவிதமான மனநிலை இறுக்கத்துக்கு ஆட்படுவர். இரவில் விறுவிறுப்பான பேச்சைக் கேட்டுவிட்டு வந்தவன், நித்திரை கொள்ள முடியாமல் தவிப்பான். பேசியவர் என்ன பேசினார் என்பதை விட, அந்த உணர்வுகளே மேலிடும். அடங்க நீண்ட நேரம் பிடிக்கும். மீண்டும் அதைக் கேட்க மனம் அலைபாயும். கிட்டத்தட்ட போதையின் ஒரு பகுதிதான் இதுவும்.

உணர்வுப் பேச்சுகள் தோல்வி அடைவதும் இதனாலேதான்! உணர்வுக்கு ஆட்பட்டவன், வெளிப்படுத்திய கருப்பொருளை உள்வாங்கி இருக்க மாட்டான். மற்றவருக்கு உணர்வுகளை உள்வாங்கியபடி பரிமாறவும் முடியாது. அடுத்தவருடன் பரிமாற முயற்சிக்கும் போது, வார்த்தைகள் பிறழும் (Emotional gobbledygook), கூடவே தடித்த சொற்கள், முறையற்ற அங்க அசைவுகள் என பலவும் வெளிப்படும்.


இத்தகைய பேச்சை வெளிப்படுத்துவதன் மூலம், அந்த பேச்சாளர் பிரபலம் ஆகலாமே ஒழிய, மற்ற உரைகளைப் போல் பேச்சு சிறப்படைவது இல்லை! தமிழ்நாட்டில், உணர்வுகளைத் தட்டி எழுப்பி, போதை உண்டுபண்ணுவது நாளுக்கு நாள் மிகையாவது கவலைக்கு உரியது. சமூகம் விழித்தெழுமா?


இன உணர்வு கொள்வதில் தவறில்லை.
சினமுறச் செய்யப்படுவது நன்றன்று!

தன்மான உணர்வு கொள்வதில் தவறில்லை;
வெறியுணர்வு கொள்ளப்படுவது சரியன்று.!

விடுதலையுணர்வு கொள்வதில் தவறில்லை;
விசருணர்வு கொள்ளப்படுவது சரியன்று!

முன்னது Consciousness(உணர்தல்);
பின்னது Emotion (மனோசலனம்)!

ஒரு பேச்சாளனின் கடமை புரிய வைப்பது;
மனக்கிலேசத்தை உண்டாக்குவது அல்ல!

புரட்சிக்கு வித்திடு;
ஒழுங்கீனத்திற்கு வித்திடாதே!


Yes, you have full rights to have revolution; not for disorder!

5/27/2009

இனவெறியர்களுக்கு அமெரிக்காவின் மேலுமொரு பரிசில்!

ஏகாதிபத்தியம் என்றோம். முதலாளித்துவ ஏதேச்சதிகாரம் என்றோம். பெரியண்ணனாய் பிரம்பு எடுத்து சட்டாம்பிள்ளை வேலை பாக்கும் பெரியதனம் என்றோம். ஆனால் இன்று தலைகுனிந்து, வாய் பொத்தி நிற்கிறோம். தமிழன் கேள்வி கேட்பாரற்று கொல்லப்பட்டும், அல்லல்பட்டுக் கொண்டும் இருக்கிறான். நாம் ஏசிய அவனுக்குத்தானே, மனம் இளகியது?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், அலபாமாக் கொடுமைகள் நடந்த மண்ணில், மகோன்னதம் நிகழ்கிறது. அலபாமாக் கொடுமைகளில் சிக்கிச் சீரழிந்தவன் பிள்ளை, தேசத்துக்கே அதிபர் ஆகிறான் அந்த மண்ணில் இன்று!


அடுத்த சிறுபான்மை இனத்துள் பூத்த இசுபானியப் பூவை, தேசத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆக்கப்பட்டு அழகு பார்க்கும் தேசம்!! அடுத்த அதிபருக்கான போட்டியில், பிழைக்க வந்த இந்தியப் பிள்ளையை நிறுத்தத் தயாராகிறது இந்த அழகான அமெரிக்க தேசம். உலகெங்கும் இருக்கிற மகிந்த போன்ற இனவெறியர்களுக்கு இதமான இன்னொரு பரிசல் இது!




பொதுவுடமை என்றோம். ஏழைப் பங்காளன் என்றோம். தமிழனுக்கு உற்ற நண்பன் என்றோம். ஐயகோ! மனிதர்களை துவம்சம் செய்த இலங்கை அரசு, இல்லை, இல்லை, இனவெறி பிடித்த தனிநபர்கள் மகிந்தவுக்கும் அவரது கைத்தடிகளுக்கும் வால் பிடிக்கும் பொதுவுடமைகள், இரசியாவும், சீனாவும், க்யூபாவும்! இவர்களுக்குத் துணையாய் இன்னும் சிலர்.

1995, ஏப்ரல் பத்தொன்பதாம் நாள், ஒக்லகோமாவில் குண்டு வெடிப்பு. அப்பாவி மக்கள் 168 பேர் பலி. மனித அவலம்! உணர்ச்சி வசப்பட்டோம். கடிதம் சமர்ப்பிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஊறு நேர்கையில், இது போன்ற அவலங்கள் ஏற்படுவது இயற்கை என்றது அது. நயவஞ்சக தமிழக ஊடகம், கடிதம் கொடுத்தமையை வீரம் என்று போற்றியது.

வெந்த புண்ணில் வேலன்றோ? நிலைமைகள் எந்த கணமும் மாறிடலாம். உணர்ச்சி வயப்படல் பின்னாளில் நமக்கே வேதனை அளிக்கக்கூடும் என்பதற்குச் சான்றுதானே இது? அதன் விளைவாய் நமக்கு நாமே வேண்டாதன தேடிக் கொண்டோம். இன்று, அவனுக்குத்தானே நீதியின்பால் அக்கறை? இன்றும் அதே ஊடகம் கபட நாடகம் ஆடுகிறது. விளைவுகள்??

அன்று உணர்ச்சி வயப்பட்டோம்; அரக்கி என்றோம்; இராட்சசி என்றோம்; சூர்ப்பனகை என்றோம்! எறும்பு ஊறக் கல்லும் தேயுமன்றோ? இன்றைக்கு ஈழத்தாய் என்கிறோம்.

அன்று தமிழ் இனத் தலைவர் என்றோம்; முத்தமிழ் அறிஞர் என்றோம்; காலத்தின் கோலம்! இன்றும் உணர்ச்சி வயப்படுகிறோம்! கொலைஞர் என்கிறோம்; துரோகி என்கிறோம்; சப்பாணிக் கழுதை என்கிறோம்; தமிழ் ஈனத் தமிழன் என்கிறோம்.

மதுவுக்கு மயங்கும் வண்டாய், இசைக்கு மயங்கும் அசுணமாப் பறவையாய், நெருப்பின் ஒளிக்கு மயங்கும் விட்டில் பூச்சியாய், தூண்டில் புழுவுக்கு மயங்கும் மீனாய், ஊடகத்தின் உசுப்பலுக்கு மயங்கும் தமிழா, அமெரிக்காவைப் பார்! இன்று போர்க் குற்றம் புரிந்த அசுரனுக்கு பாடம் புகட்ட விழையும் அவனைப் பார் தமிழா, நேற்று நாம் இகழ்ந்த அவனைப் பார்!!



5/26/2009

உளவியலும், தி.மு.கழகத்தின் பொருளாதாரத் தேசியப் பற்றும்!

இந்தியாவைப் பொறுத்த வரையில், குறிப்பாகத் தமிழகத்தில் உளவியல் ரீதியான புரட்சி உடனடியாகத் தேவைப்படுகிறது. காரணம் என்ன? கடந்து வந்த திராவிட அரசியல்ப் பாதையும், இன்றைய பொருளாதார தேசியமும் ஒன்றிணைந்து வருகிற கால கட்டத்தில், அது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்று சேராததுதான்.

அரசியல் கட்சிகளுக்கே கூட, எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு உண்டான அடிப்படைக் காரணம் தெரிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் விளைவாய், ஏதோ ஒன்றைச் சொல்லி மக்களை அப்போதைக்கு சமாளிப்பது என்றாகிவிட்டது.

விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதற்கு முன் பெரிய அளவில் உளவியல் ரீதியான சிந்தனை மாற்றம் வந்தாக வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு விவாதம் நடை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். உடனே, கருத்தடிப்படையில் கேள்விகளை பெரும்பாலான நேரங்களில் வைப்பதில்லை. Negative Attack என்று சொல்லப்படுகிற, எதிர்மறையான விமர்சனங்களை உணர்வுகளின் அடிப்படையில் வைத்து, கருத்தை முன் மொழிபவரின் வாயை அடைப்பது.

இங்கே குழந்தைகள் கூட வெகு அழகாகச் சொல்வார்கள். Hey, you are picking on me! அதாவது ஒருவர் ஒன்றைக் கூறும் போது, அவர் வேறொரு சூழ்நிலையில் கூறிய ஒன்றை வைத்து மறித்துப் பேசுவது, அல்லது குற்றஞ் சாட்டுவது. இதனாலாயே அறிவார்ந்த பெரியவர்களும், சித்தாந்த, கொள்கை ரீதியான கோட்பாடுகளை முன் வைத்துப் பேசுவது இல்லை. மாறாக, சாமி கண்ணைக் குத்தி விடும், காத்து கறுப்பு அண்டி விடும் என்கிற போக்கில் பேசுவதை நடைமுறைக்கு கொண்டு வந்து, அந்த பழக்கத்திலேயே ஊறிவிட்டது சமூகம்.

தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மனோபாவத்தை மாற்றி அமைக்க, மனோதத்துவ முறையிலேதான் தீர்வு கண்டாக வேண்டும். இந்த உளவியல் ரீதியான பரப்புரை வலுவான ஆயுதம் என்பதை, கடந்த அமெரிக்கத் தேர்தலிலும் கண்டோம். ஒரு எளிய குடியில், ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒபாமா செய்தது என்ன?

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, அமெரிக்க பிரச்சினைகள், மனநிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றாற் போல பிரசாரத்தைக் கையாண்டதுதான். இலாரி கிளிண்டனும், யான் மெக்கெயினும் எதிர்மறைத்(offence) தாக்குதல் நடத்துகிறார்கள். இவர் என்ன செய்ய வேண்டும்? அதைத் தடுத்தாட்கொள்ள(defence) வேண்டும். இவர் இந்த இரண்டையும் பாவிக்காமல், மூன்றாவதாக உளவியல் (psychological motivation) ஊக்குவிப்பைப் பொழிகிறார்.

நம்பிக்கை, நாம் மீள்வோம், History is just started happening! Are you taking part of it, or just watching it by sitting on side lines? வரலாறு படைக்கப் பிறந்தீர்களா? அல்லது வரலாறு நிகழ்வதை வேடிக்கை காணப் போகிறீர்களா?? இப்படி மக்களைப் பார்த்து வினவுகிறார். கூடவே, திட்டங்கள், வாழ்வின் யதார்த்தங்கள் போன்ற அம்சங்களையும் அதனூடாகப் பாய்ச்சுகிறார்.

மக்கள் சிந்தனைக்கு ஆட்பட, வரலாறும் நிகழ்ந்தது. இத்தகைய வல்லமை படைத்ததுதான் உளவியல்க் கோட்பாடு. இதுகாறும், அவை கைதேர்ந்த நிபுணர்களால் எதிர்மறைக்கு பாவிக்கப்பட்டு வந்தது. இனி, சமூக மாற்றத்திற்கும் பாவிக்கப்பட வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

எதற்காகப் பாவிக்கப்பட வேண்டும்? பொருளாதார தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் இனங்காண, இனங்கண்டு அதன் அத்தியாவசியத்தை வெகுசன மக்களுக்குக் கொண்டு செல்வதில் பாவிக்கப்பட வேண்டும்.

அது என்ன பொருளாதார தேசியம்? தேசியம் என்றால், ஒன்றிணைக்க வல்ல எதோ ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்ட பரந்த மக்கள்த் தொகுப்பு. அந்த மூலம், மொழியாக இருக்கலாம், மதமாக இருக்கலாம், பூகோள ரீதியினாலான நிலப்பரப்பாக இருக்கலாம், மனிதத்தோற்றமாக இருக்கலாம், அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்தியாவுக்கு எது மூலம்? மொழியா என்றால், இல்லை. மதமா என்றால் இல்லை. வேறு என்ன?? இன்றைய சூழலில், காசுமீரம் முதல் குமரி வரையிலும் இருக்கும் மக்களை இணைப்பது ஒன்றே ஒன்றுதான். உலகமே வியக்கும் அந்த பொருளாதாரக் கட்டமைப்புதான் அந்த மூலம். பஞ்சாப்பும், தமிழகமும், ஆந்திரமும், பீகாரும் இன்னபிற பிரதேசங்களும் ஒன்றுக்கொன்று பொருளாதார ரீதியில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பொருளாதாரக் கட்டமைப்பின் வாயிலாகப் பிணைக்கப்பட்டதால் இந்தியா ஒரு பொருளாதாரத் தேசியம்.

இந்தியா எப்போது இந்த புதிய பரிமாணத்தைப் பெற்றது? உலகின் மற்ற பக்கங்களில், பொருளாதாரமயம் ஆக்கலும், உலகமயம் ஆக்கலும் துளிர்த்த அதே வேளையில் இந்த புதிய பரிமாணம் உருப் பெற்றது. அதே நேரத்தில்தான், தமிழ்நாட்டிலே இருந்த தமிழ்த் தேசியவாதிகள் இந்திய பொருளாதார தேசியத்தின்பால் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றத் துவங்கினார்கள். திமுகவில் இதற்கு வித்திட்டவர் முரசொலி மாறன்!

ஏன் அவ்வாறு செய்யத் துவங்கினார்கள்? உலகமயமாக்கலின் தாக்கம்! தனிப்பட்ட முறையிலே வளர வேண்டும் என்றாலும் சரி, கட்சி வளர வேண்டுமானாலும் சரி, தமிழ்நாடு வளர வேண்டுமானாலும் சரி, பொருளாதார தேசியத்தின் பங்களிப்பு தமிழகத்திற்கு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது.

தான் வளர வேண்டுமானால், கட்சி வளர வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு மக்கள் வேண்டும். மக்களுக்கு திட்டங்கள் வேண்டும். அதைப் புரிந்து கொண்டதாலேயே தேசியத்தில் பங்கு கொண்டார்கள், அதன் பயனாலேயே இலவசத் திட்டங்களும், ரூபாய் அரிசித் திட்டமும் சாத்தியமாயிற்று.

அப்படியானால், இவர்களின் தமிழ்த் தேசியம் இனி அவ்வளவுதானா? கிடையாது. இவர்களிடம் உள்ள பொருளாதாரத் தேசியமும் தமிழ்த் தேசியமும், உடலும் உயிரும் போன்றது. எது ஒன்றைக் கைவிட்டாலும், அதோ கதிதான்! உடல் என்பது தமிழ்த் தேசியம். உடலுக்கு தாங்கக் கூடிய ஊறு நேரலாம். ஆனால், உயிர் இல்லையேல் எதுவும் இல்லையன்றோ? உயிருக்கு இடையூறு என்றால், கையையோ காலையோ வெட்டி எடுக்கவும் செய்வர். அதே நேரத்தில், உடலைப் பேணி காப்பதுவும் இன்றியமையாதது.

இந்த நிலை திமுகவுக்கு மட்டுந்தானா? கிடையாது! ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் உண்டு. அதையும் மீறி, உலகெங்கும் உள்ள தேசியங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். 50% வாக்குகள் பெற்ற ப்ளாக் க்யூபெக் கட்சி, தனிநாடு கோருவதைக் கைவிட்டு பொருளாதார தேசியத்துக்கு திரும்பியது. இவர்களால் பொருளாதார தேசியத்தின் பலன்களை முழுதாகப் பெற்றுத் தர இயலாது என மக்கள் எண்ணியதால், க்யூபெக்கில் 38% ஆக அவர்கள் பலம் குறைந்தது.

அவ்வளவு ஏன்? தனிநபர்கள் குறுக்கீடு இன்றி பங்களா தேசிலும், சிங்கள மக்களிடமும், பாகிசுதானிலும் தேர்தல் நடத்தினால், அவர்கள் இந்தியாவுடன் இணையத் தயார் என்றுதானே சொல்வார்கள்?

இதனைப் புரிந்து கொள்ளாவிடில் மக்களிடத்தே குழப்பமே மிஞ்சும். திமுகவைப் பொறுத்த மட்டிலும், இந்த காரண காரியங்களை கட்சியினருக்கும், மக்களுக்கும் புரிய வைக்காமல் போனதும் முரசொலி மாறன் அவர்களையே சாரும். ஆனால், உளவியல் ரீதியாக கருத்துகளை நல்வழியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு நல்ல பேச்சாளர்கள் வேண்டும்; நல்ல எழுத்தாளர்கள் வேண்டும். அந்த சமூகப் பொறுப்பு, இந்தக் கட்டுரை எழுதுபவனுக்கு உண்டு; வாசகர்களுக்கு உண்டு; சமூக ஆர்வலர்களுக்கு உண்டு; கல்வியாளர்களுக்கு உண்டு; அனைவருக்கும் உண்டு. ஆனால், இது சாத்தியம்தானா?

5/25/2009

செய்திகளின் இலட்சணம் இதுதான்!

நாம் இடும் இடுகையை மருத்துவர் ருத்திரன், முனைவர் நா.கணேசன், அண்ணன் துக்ளக் மகேசு போன்றவர்கள் எல்லாம் வந்து வாசிக்கிறார்கள் என்று தெரிந்ததும் மனம் மகிழ்ச்சியை அடைகிறது, ஆனாலும் ஒரு சில மணித்துளிகள் கூட அது நீடிப்பதில்லை. என்ன காரணம்?

நாம் ஏதாவது அபத்தமாக எழுதி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எதற்கும் இட்ட இடுகையை போய் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம், இப்படியெல்லாம் ஒரு பதற்றம் ஏற்படுகிறது, அச்ச உணர்வு மேலோங்குகிறது. உண்மையில் சொல்லப் போனால், இதற்கு அச்சப்பட்டே நாம் சமூகம் பற்றிய இடுகைகளை முடிந்த வரை தவிர்த்தே வந்திருக்கிறோம்.

எனினும் சமூகத்தில் உள்ள ஊடகங்களைப் பார்க்கிற போது நமக்கு ஒரு நிம்மதி. ஊடகத்தில் வருகிற, சொல்லப்படுகிற பாங்குடன் ஒப்பிடும் போது, நாம் அவ்வாறெல்லாம் சொல்லி இருக்க மாட்டோம் என்ற நிம்மதி பிறக்கிறது.

உதாரணத்திற்கு, சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியத் தேர்தலைக் கவனத்தில் கொள்வோம். வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. ஒரு பக்கம் பார்த்தால், அந்தக்கட்சி முன்னணி! மறுபக்கம் பார்த்தால் இந்தக்கட்சி முன்னணி!! எப்படி, ஒரே நேரத்தில் மாறுபட்ட செய்திகள்? நாம் சென்னையிலுள்ள பத்திரிகை நண்பர் பிரகாசு அவர்களைத் தொடர்பு கொள்கிறோம். அவர் கூறியதிலிருந்து:

ஒரு தொகுதிக்கு நூற்றுக்கணக்கான இயந்திரங்கள். எண்ணும் இடத்தில், அவை பல பிரிவுகளாக வைக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணுகிறார்கள். எண்ணிய வாக்குகளின் கூட்டுத் தொகையை வைத்து ஒரு ஊடகம் சொல்கிறது, அந்தக்கட்சி முன்னணி!

முதல் சுற்றில், எடுத்துக் கொள்ளப்பட்ட பிரிவு / இயந்திரங்களில் பெரும்பாலானவற்றில் இந்தக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆகவே, அந்தத் தொகுதியில் இந்தக்கட்சி முன்னணி!!

இவற்றை நம்பி வாக்குவாதத்தில் இறங்கி, காரசாரமாகப் பேசி, பின்னர் கைகலப்பு வரை போகிறார்கள் நம் மக்கள். பாருங்கள், நான் இந்த இடுகை இட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு செய்தி, ‘பற்றி எரிகிறது பஞ்சாப்!’. அது என்ன, பஞ்சா பற்றி எரிய? அப்படியே பற்றி எரிந்தாலும், சமூக நலன் கருதி, செய்தியை உரிய வாக்கில் தரும் கடமை ஊடகங்களுக்கு இல்லையா என்ன? இவையெல்லாம் ஒரு உதாரணத்திற்குத்தான். இதனைப் பற்றி மேலும் விவரிக்காமல், இடுகையின் கருவுக்குச் செல்வோம் வாருங்கள்.

ஊடகத்தில், கட்டுரை, செய்தி, விவாதம், சொல்லாடல் என்று பல பரிமாணங்களில் பற்றியங்களை (விசயங்களை) மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். அவற்றின் தன்மை பற்றி, ஒவ்வொரு நுகர்வோரும் அறிந்து கொள்ள வேண்டியது ஊடகத்தின் பிடியில் சிக்கியுள்ள இன்றைய உலகில் மிக அவசியம்.

சமூகத்தில் தெரிந்த பற்றியங்கள், தெரிந்தே இருக்கிறது. தெரிந்தே, தெரியாதனவும் இருக்கிறது. அதாவது, நமக்குத் தெரிந்தே பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. தெரியாத தெரிந்தனவும் வானளாவக் கிடக்கிறது. அதே வேளையில், நமக்குத் தெரியாத தெரியாதனவும் உள்ளது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, சொல்ல வருவதைத் தம் வசதிக்கேற்ப ஏற்றியும், மாற்றியும், சுற்றியும், குற்றியும் சொல்லப்படுவன இன்றைய எண்ணப் பரிவர்த்தனைகள்.

இந்த பரிவர்த்தனையில் பல கூறுகள் உள்ளன. அவற்றில், ஒரு சிலவற்றை நாம் சொன்னதைச் சொல்லியபடியே எடுத்துக் கொள்ளலாம், நம்பலாம். ஆகவே, அந்தக் கூறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது இங்கு.

நிகழ்வு/கூற்று(truth): இவை பெரும்பாலும் நடந்த உண்மை நிகழ்ச்சிகள். நடக்காத ஒன்றை, நடந்ததாகக் கூறி, சட்டச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள துணிவது பெரும்பாலும் இல்லை. இந்த அம்சத்தின் கீழ் கூற்றுக்களும் வரும். இந்தியாவுக்கு வடக்கே இமயமலை என்பது கூற்று, இதனையும் ஒருவர் மாற்றிச் சொல்வாராயின், அவர் சமூக விரோதியே! தவறுதலாகச் சொல்வது என்பது வேறு, ஆனால் வேண்டுமென்றே சொல்வாராயின், சட்டப்படி அது குற்றம்.

தகவு (fact): இவை பெரும்பாலும் சுவராசியத்தைக் கூட்ட, உள்ளபடியாகவோ, அல்லது இட்டுக்கட்டியோ சொல்லப்படுவன. ஆகவே, 100% உத்திரவாதம் தர இயலாது. மன்மோகன் சிங் பதவி ஏற்றார் என்கிற நிகழ்வோடு, சோனியாவைப் பார்த்துப் பவ்யமாகக் கை கூப்பியபடி சென்றார் என்று சொல்லப்படுகிற தகமைக்கு உத்திரவாதம் தர இயலாது.

புரிந்துணர்வு (perception): பதவி ஏற்கும் போது, கை கூப்பியபடி சென்ற காட்சி காணொளியில் ஓடுகிறது. முதலாம் நபருக்கு அது பவ்யமாகச் செல்வது போன்ற புரிதல் ஏற்படுகிறது. அதுவே அடுத்த செய்தியாளருக்கு, சோனியாவைப் பார்க்கக் கூடாது என்பதற்காக தலையைக் குனிந்து கொண்டு செல்வது மாதிரியான புரிதல் ஏற்படுகிறது. ஆகவே, புரிந்துணர்வின் அடிப்படையில் வருவனவும் கேள்விக்குரியதே!

கருத்து (opinion): நிகழ்ச்சியில், கட்டுரையில் சொல்லப்பட்டு இருப்பது, கருத்தடிப்படையில் சொல்லப்பட்டதா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். மன்மோகன் சிங் அவர்கள், கம்பீரமாக நடந்து செல்லவில்லை என்று சொன்னால், அது கருத்து. அதற்கு நீங்கள் உடன்படலாம், உடன்படாமலும் போகலாம். ஆகவே இதைக் கேட்டுவிட்டு, உங்கள் நண்பனிடம் போய் மன்மோகன் சிங் கம்பீரமில்லாத பிரதமர் என்று சொல்வது நலம் பயக்காது.

தரவு(data): ஆய்வு, புள்ளியியல், கணக்கெடுப்பு முதலானவற்றின் அடிப்படையிலான எண்ணப் பரிமாற்றம். இதிலும், ஏற்ற இறக்கம் எல்லாம் பங்கு கொள்ள வாய்ப்பு உள்ளது.

சான்று(evidence): சான்றுகளின் அடிப்படையில், அல்லது அதிகாரப்பூர்வமான ஒன்றின் வழி வரும் செய்திகள் பெரும்பாலும் நம்பத் தகுந்தவையே. இதிலும் கூட விதி விளையாட ஆரம்பித்து விட்டதுவோ?

இவைதான் ஊடகங்களின் மூல அம்சங்கள். இவற்றின் அடிப்படையில் மேலும் பல்வேறு கூறுகள் இருப்பினும், இவற்றைப் பகுத்தறிந்து, அதனடிப்படையில் செயல்படுவோமேயானால் ஊடகங்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது எம் கருத்து.

அதற்கு மேற்பட்டு, அய்யன் திருவள்ளுவரின் குறளே நமக்கு வழிகாட்டி:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!

4/30/2009

குண்டக்கமண்டக்க செயலாற்றும் பஞ்சமாபாதகன்!

எங்கு நோக்கிடினும் எளிதாய்ச் சொற்கள் பரிவர்த்தனை. அன்பும் பண்பும் மனிதநேயமும் மலினப்பட்டுப் போனதில், இன்றைய நாளில் மலிவாய்க் கிடைப்பவை துரோகி, கயவன், கபடன், எதிரி, சோரன், மாயன், வக்கிரன், வஞ்சகன், வேடதாரி என்று எத்துனை எத்துனை சொற்கள் கொண்டு பட்டங்கள் சூடுவதும், எள்ளி நகையாடுவதும்? அவற்றுகெல்லாம் உண்டான பொருளறிய எவர் தலைப்பட்டார்? ஆயினும், புழங்குவதற்கு ஏது தயக்கம்?! தமிழாட்சி, தூற்றுவதில் கோலோச்சும் காலமன்றோ?!

வாய்ச்சாடலில் ஒருவர் அறைகிறார், பஞ்சமாபாதகன், இனத்தைக் கெடுக்க வந்த கயவன் என்றெல்லாம்.... உமது தூற்றலில் எதிரி குளிர் காய்கிறானே? அதை நினைந்து, நமக்கு ஆவதென்ன அன்பர்காள்? வாருங்கள் பஞ்சமா பாதகத்தின் பொருளறிவோம்!

வரும் மாசுகள் கொண்டவன் பஞ்சமாபாதகன் என்றறிவார்: கொலை, காமம், களவு, பொய், குருநிந்தை. வடவர் கூற்றுப்படி, அகங்காரம், உலோபம் (ஈயாமை), காமம், பகை, போசனவேட்கை, சினம், சோம்பல் உடையோர் நவகயவன் ஆவர்.

குண்டக்கமண்டக்க செயலாற்றுபவர் என்கிறார் ஒருவர். அதற்கும் ஆயிரமாயிரம் கரங்களின் பின்னொலியில் ஆமோதகம். பொருளறியாமல், தலைவனின் உச்ச குரலுக்கு மயங்கும் தகைமை உடைத்தெறிந்து, குடிகளுக்கென பிறப்பவர் இனி உண்டோ? காலமே விடை தருக! சரி, அது என்ன குண்டக்கமண்டக்க?

குண்டக்க என்றால், சாய்ந்தும், வளைந்தும், நெளிந்தும் ஒரு சீரில்லாமல் இருக்கும், கிடக்கும் எதுவும். மண்டக்கம் என்றால், ஆழ்நீர்நிலையில் இருப்பவரைக் கட்டி இழுக்கும் கயிறு. இழுபடுதல் ஆனபின்னர், சுருட்டிச் சீர்பட எடுத்து வைக்காமல் எறிந்து கிடப்பது குண்டக்கமண்டக்கம். தெளிவில்லாமல், அங்குமிங்குமாய் தான்தோன்றியாய் இருப்பவன் குண்டக்கமண்டக்கன். எந்தத் தலைவரும் குண்டக்கமண்டக்க செயலாற்றும்படியாய் இல்லை, ஆனால் அவர்கள் பின்னால் செல்லும் அபிமானிகள்?!

4/29/2009

360 பாகையில்!

வணக்கம் அன்பர்காள்! வாழ்க்கையில் பணிச்சுமை கூடுவதும் குறைவதும் இயல்புதானே? அதற்காக சளைத்து விட முடியுமா என்ன?!

யோகாசனப் பயிற்சியில் அந்த 95 வயதுப் பெரியவர் வெகு சிரத்தையாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அந்த வழியாக சென்ற ஒரு இளைஞன்,

“தாத்தா, எதுக்கு இந்த வயசுல முடிஞ்சும் முடியாம இதெல்லாம் செய்துட்டு இருக்கீங்க?”

“எனக்காகதாம்ப்பா செய்துட்டு இருக்கேன்!”

“?!?!”

அதே போல, நேற்றைக்கு இங்கு Buffalo, NYல் அலுவலகத்தில் இருக்கும்போது, சக அமெரிக்க நண்பரான Don Russell, வேறொரு இந்திய நண்பரைப் பார்த்து,

“Hey Sunil, in which room are we suppossed to meet?"

"One thousand thirty five!"

"wwwwwhat?"

"One Thousand... Thirty Five!"

உரத்த குரலில் "wwwwhat??"


எனக்கா சிரிப்புத்தாங்க முடியவில்லை, அதே வேளையில் இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த Mike Tirone என்பவர் சொல்கிறார்,

“See Don, this is Globalization age, we should think in 360 degrees man.... he means Ten Thirty Five, you know?!"

பின் உரையாடல் இது குறித்துத் தொடரவே, இறுதியில் “Knowledge doesn't matter anymore, it is just that one should have ability to think in 360 degrees and adopt to the circumstance!" என்ற கருத்தோடு நிறைவுற்றது.

அபிமானத் தலைவன் சொல்வது வேதவாக்கு, பிடித்த எழுத்தாளர் எழுதுவதே எழுத்து என்று இருந்தால், "நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?" என்று எனக்குள் யோசிக்க முயலுகிறேன்....