12/23/2020

ராஜா

எப்படியாவது அந்த ஹம்ப்பாவ் கவரில்(gift envelop) என்ன இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் தன் விடாமுயற்சியை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார் இராஜா. ஆமாம். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத இராஜா மீண்டும் அந்தக் குடிலுக்குச் சென்று கதவைத் தட்டினார். எதற்காகத் தட்டுகின்றார் எனத் தெரிந்து கொள்ள ஆவலாகத்தான் இருக்கும் உங்களுக்கு. கடைசி வரை வாசித்தால்தான் அது புரிய வரும். தொடர்ந்து வாசியுங்கள்.

நமது சமூகத்தில் ஒருவரை மிகவும் இழிவாக, திட்டுவதற்குக் கழுதையை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் கழுதை பொது மக்களின் தினசரி வாழ்வில் மிகவும் உபயோகமான கால்நடை மிருகம். மிகவும் கேவலமான முறையில் பார்க்கப்படுவது வருத்தத்திற்குரியது. ஆனால் எனக்கு கழுதை மீது எப்போதும் ஒரு அன்பு உண்டு. நம் இளமைக் காலத்தில் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென பாடலில் கச்சிதமாக கழுதைக் குரலை பயன்படுத்தியிருப்பார்கள். சிரிப்பை வரவழைக்கும். பஞ்சகல்யாணி படத்தில் கழுதை மிகப் புகழ் பெற்றது. கழுதைக்காகவே படம் ஓடியது.பஞ்ச கல்யாணி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ”அழுதபிள்ளை சிரிச்சதாம், கழுதைப் பாலை குடிச்சதாம்” என்றுகூடச் சொல்வார்கள். அதாவது கழுதைப் பாலைக் குடித்தால் குழந்தைகள் நோய் நீங்கச் சிரிக்கத் துவங்கும். அப்படியாப்பட்ட கழுதைகள் கைவிடப்படலாயின. ஊர்வழிகளில் தடங்களில் கவனிப்பின்றித் திரிந்து கொண்டிருந்தன. அப்படியான கழுதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தார் நம் இராஜா.

கோட்டைமேடு சிக்னலில் இருந்த டிராஃபிக்போலீசுகாரர் வேகமாக ஓடிச்சென்று அந்த மெட்டாடர் வேனை இடைமறித்துச் சத்தம் போட்டார். ஆமாம். வேனின் பின்புறம் முழுக்க கழுதைகள் நின்று கொண்டிருந்தன.

“ஏம்ப்பா, என்ன இது? இப்படிக் கழுதைகளை ஏத்திகிட்டுப் போறியே?”

“வீட்ல வெச்சிட்டு என்ன சார் பண்றது? அதான் ஏத்திகிட்டுப் போறன்!”

“வீட்ல வெச்சிட்டு என்ன செய்றதா? இந்தவாட்டி உனக்கு மாப்புக் குடுக்குறன். வேணுமின்னா ஜூ(மிருகக்காட்சிசாலை)வுக்கு கொண்ட்ட்டுப் போயேன்!”

“நல்ல ஐடியா சார், அப்டியே செய்றன்”, சொல்லிவிட்டு அந்த திறந்தவெளி வேனைக்கிளப்பிக் கொண்டு பறந்தார் நம் ராஜா.

அடுத்த நாள். அதேநேரம். அதேசிக்னல். அதே போலீசுகாரர். கோபம் தலைக்கேறியது. பிக்-அப் வேன் முழுக்கக் கழுதைகள், கண்ணுக்கு கண்ணாடிகள் அணிந்திருந்தவண்ணம்.

“யோவ், நீயென்ன லூசா? கழுதைகளுக்குக் கண்ணாடி, மறுக்காவும் ஏத்திகிட்டு, அதுவும் ஓப்பன் வேன்ல?”

“இதுகளை வீட்ல வெச்சிட்டு என்ன சார் பண்றது? அதான், மதுக்கரை, பாலக்காடு வழியா கேரளா பீச்சுக்குப் போலாம்னு போய்கிட்டு இருக்கன்”

போலீசுக்காரருக்கு சினமெல்லாம் வடிந்து ராஜாமீது அளவுகடந்த பாசம் பொங்கியது. இப்படியொரு மனிதனா? அந்த போலீசுகாரரும் பஞ்சகல்யாணி படம் பார்த்துக் கிரங்கியவர். ”பஞ்சகல்யாணி இராசா, உன்னியமாரி ஆளுக இந்த லோகத்துல இருக்கிறதாலத்தான் நாட்டுல ஏதோ நாலுதுளி மழ பெய்யுது”, கையெடுத்துக் கும்பிடு போட்டு அனுப்பிவைத்தார். ”பஞ்சகல்யாணிராசா” என்று கோயமுத்தூர் கொள்ளேகால் கொழிஞ்சாம்பாறை வரையிலும் பிரபலமாகிப் போனார் நம் ராஜா. பின்னாளில் ராசா படிப்பெல்லாம் முடித்து வாழ்க்கையில் செட்டிலாகியிருந்த தருணம். இந்த விசியத்தைக் கேள்விப்பட்ட ராசாவின் மாமனார், சமூகத்தில் அலைக்கழிக்கப்படும் முதியோர்களுக்கான காப்பகம் நடத்துவதற்கு நம் மாப்பிள்ளைதான் சரியான ஆளென நினைத்தார். அதன்படியே முதியோர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகின்றார் இராஜா.

பூப்போன்ற மனசுக்கேற்றார்போல இராஜாவுக்கு நிறைய நண்பர்கள். சரி, இன்றைக்கு நம் வளாகத்துக்கு(கேம்ப்பஸ்) வந்துவிடுங்களெனச் சொல்லவே அன்று மாலை எல்லாரும் இராஜாவின் இடத்தில் கூடிவிட்டனர். இராத்திரி 11 மணிக்கெல்லாம் வந்தோர் கிளம்பிப் போய்விட்டனர், ஒரிருவரைத் தவிர. நித்திரை கொண்டு காலையில் எழுந்ததும், ‘காலை வெயில் கழுதைக்கு நல்லது. மாலை வெயில் மனிதனுக்கு நல்லது. காலைவெயிலில் நடந்து பழகிவிட்டேன். வாக்கிங் போலாம் வாங்க”, எனச் சொல்லி நண்பர்களைக் கிளப்பினார் ராஜா. அந்தநேரம் பார்த்து பணியாளொருவர், ‘அது இல்லை, இது இல்லை’ என அனத்திக் கொண்டு வரவே, ’நீங்கள் போய்க்கொண்டு இருங்கள். நான் வந்து சேர்ந்து கொள்கின்றேன்’ எனச் சொல்லி அனுப்பினார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தனர். அந்தக் குடிலின் முன்பாக மூன்று பெண்கள், அம்புஜம், பங்கஜம், சிந்துஜா ஆகியோர் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்ததும் கைகாண்பித்து அழைத்தார் ஒரு பெண்மணி. ‘நானா?’ என்றார் ஆனந்த். ’அல்ல, அடுத்த ஆள்’ என்பதாக இருந்தது அந்தப் பெண்களின் சைகை. ‘அப்ப, நானா?’ என்றார் வேணு. ‘இல்லய்யா, அடுத்து’ என்பதாக இருந்தது அவர்களின் குறிப்புமொழி. ‘அப்ப, நானா?’ என்றார் பீளமேட்டார்.

”ஆமாம், உங்க வயசு என்ன, பிறந்ததேதி என்னங்றதெல்லாம் எங்களாலக் கரக்ட்டா சொல்லமுடியும்”

“அதெப்பிடி? அதெப்பிடி??”, இரைந்தனர் மூவருமே.

“நீங்க உங்க பேண்டை இடுப்புக்குக்கீழ நழுவவிடுங்க, அட, அந்த கோவணத்தையும் கழத்துங்க சொல்றம்”

இடுப்புக்குக்கீழே நழுவவிட்ட நிலையில், அவை கணுக்கால்களில் போய் நின்றுகொண்டன. நிலைமையை உணர்ந்த ஆனந்த்தும் வேணுவும் பத்துத்தப்படிகள் கடந்து போய் நின்றுகொண்டனர்.

“சும்மா நின்னுட்டு இருந்தா எப்டி? ரெண்டு சுத்து சுத்திவாப்பா, பார்த்துச் சொல்றம் உன்ற வயசு என்னான்னு”, அவசரப்படுத்தின பெருசுகள். இரண்டு சுத்துச் சுத்தினார் பீளமேட்டார்.

”மேலகீழ ரெண்டு வாட்டிக் குதிப்பா பார்க்கலாம்”, குதித்தார் பீளமேட்டார்.

”இம்... உம்மோட வயசு நேத்தோட நாப்பத்தி ஆறு”

“எப்டிங்மா கரெக்ட்டா சொல்றீங்க?”, வியந்து போயினர் மூவருமே.

“மூதேவிகளா, தூங்க விட்டீங்ளாடா நீங்க? அதான் உனக்கு ஃபோர்ட்டிசிக்ஸ்த் பர்த்டேன்னு கூத்தும் கும்மாளமுமா இருந்தீங்களே நேத்து இராத்திரி. அதைத்தான் நாங்க அல்லாரும் பார்த்தமே? செரி போச்சாது, இங்க வா நீயி!”

அம்மணகோலத்தைக் கலைத்துக் கொண்டு பேண்ட் பெல்ட்டை இறுக்கியபடியே அருகில் போனார் பீளமேட்டார். உள்ளே சென்று வந்த பங்ஜம்பாட்டி, தன்னுடைய சிங்கப்பூர் பேரன் கொடுத்த சீன ஹம்ப்பாவ்கவர் ஒன்றைக் கொடுத்தார். அதில் எவ்வளவு சிங்கப்பூர் டாலர்கள் இருந்ததென்பதை இன்றளவும் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை பீளமேடு.

இவற்றையெல்லாம் அறிய நேர்ந்த ராஜாவுக்கு இன்றளவும் அந்த ஹம்ப்பாவ்கவருக்கு விடை கிடைத்தபாடில்லை. தாமும் பேண்ட் கழட்டப் போகலாமென்றால் அதற்கான தருணமே வாய்க்கப் பெறவில்லை. அந்தக் குடிலையே சுத்திச் சுத்தி வந்து கொண்டிருக்கின்றார். குடிலுக்கு இன்றும் சென்றிருந்தார். அங்கிருந்த பாட்டியொன்று ஓடி வந்து, “கோழி ஒண்ணுக்கு ஊத்துமா? ஊத்தாதா??” என்றது. மலங்க மலங்க விழித்தபடி, “தெரியலையே” என்றார். இந்த பதிலால் திருப்தி கொள்ளாத பாட்டி, கதவைப் படாரெனச் சாத்திக் கொண்டது. பாவம் இராஜா.

-பழமைபேசி.

12/08/2020

தட்டியெழுப்புவன கதைகள்

கதைகள் சொல்வதையும் கதைகள் எழுதுவதையும் கிண்டல் செய்து கொண்டிருந்தார் நண்பர். சமூகப் பணிகளில் ஈடுபாடு கொள்ளாது, கதபொக் ஆட்கள் பணம் பண்ணக் கிளம்புவது வாடிக்கைதானே என்பது அவரது அகங்கலாய்ப்பு. அவரது கலாய்ப்பில் உண்மை இருந்தாலும் கூட, கதைகளுக்கான தேவையின் அடிப்படையில் அவரது வாதம் முற்றிலும் புறந்தள்ளப்பட வேண்டியதே.

ஹரியத் பீச்சர் ஸ்டோவ், லைமேன் பீச்சர் – ரோக்ஸ்னா தம்பதியினருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் ஏழாவது குழந்தை. குடும்பம் வசதியான குடும்பமெனச் சொல்லிவிட முடியாது. பெண்கள் படிப்பதற்குச் சமூகத்தில் இடமில்லை. பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. அப்படியானதொரு காலகட்டத்தில், அதாவது 1811ஆம் ஆண்டு பிறந்தவர்தாம் ஹரியத் பீச்சர். சமூகநிலை அப்படியாக இருந்தாலும். தன் மகள்களுக்கும் கல்வி புகட்டினார் லைமேன் பீச்சர். ஹரியத் பீச்சருக்கு வயது ஐந்துதாம், அம்மா ரோக்ஸ்னா மரணமடைய நேரிடுகின்றது. லைமேன் பீச்சரின் மூத்தமகள், தன் இளையோர் பன்னிருவருக்கும் தாயாக மாறுகின்றார். அக்காவின் வளர்ப்பில் வளர்ந்த ஹரியத் தம் குடும்பத்துக்கு நேர்ந்துவிட்ட அடிமைகளிடம் கதைகள் புசித்து அன்பில் தோய்ந்து வளர்கின்றார். 1836 – 1841, பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு கறுப்பின மக்களின் மீது கழிவிரக்கம் கொள்வோர் பலர் கொல்லப்பட்டனர். அதனால், இனபேதம் குறித்துப் பேசவோ நினைக்கவோ மக்கள் அஞ்சினர்.

கறுப்பினமக்கள் அடிமைகளாய் இருப்பதைச் சகிக்காது புழுங்கித் தவித்த நிலையில் கால்வின் எலிஸ் ஸ்டோவ் என்பவரைச் சந்திக்க நேரிடுகின்றது. கால்வின் எலிஸ் மனைவியின் மரணத்தில் சோர்ந்து போயிருந்தார். அவருக்கும் சகமனிதர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு சகிக்கவில்லை. ஒத்தமனத்தைக் கண்டு காதல்கொண்டு கால்வினையே மணம் புரிந்து கொள்கின்றார் ஹரியத். அடிமைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு தம் வீட்டில் இடமளித்து உதவிகள் பலவும் செய்து கொண்டிருந்தவருக்கு அவ்வப்போது எழுதவும் வாய்ப்புக் கிடைத்தது. 1850ஆம் ஆண்டுவாக்கில், சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது நாளிதழ் ஒன்றில் எழுதி வந்தார் ஹரியத். அவற்றைச் சீர்படுத்தி 1951ஆம் ஆண்டில் தொடர்களைத் தொடுத்தார் ஹரியத். உருக்கமாக இருந்தன அவை.

அச்சம் கொண்டனர் பதிப்பாளர்கள். ஆனாலும், 1952ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் நாள், அங்க்கிள் டாம்ஸ் கேபின் எனும் நாவல் ஐயாயிரம் பிரதிகளோடு வெளியானது. படித்தோர் மருண்டு போயினர். மக்கள் மறைவாக வாங்கிப் படிக்கத் தலைப்பட்டனர். அமெரிக்காவில் மட்டும் மூன்று இலட்சம் பிரதிகள் விற்றன. பிரிட்டனில் பத்து இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. வாரத்தில் ஏழு நாட்களும், இரவுபகல் பாராமல் இருபத்தி நான்குமணி நேரமும் மின்விசை அச்சுகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. 1855ஆம் ஆண்டு, அந்த நூற்றாண்டிலேயே அதிகம் வாசிக்கப்பட்டதும் விற்பனையானதுமான நூலாக உருவெடுத்தது அங்க்கிள் டாம்ஸ் கேபின்.

மக்கள் மனத்தில் சொல்லவொண்ணாத் துயரத்தைக் கொடுத்தது அந்த நூல். உடனடியாகத் தத்தம் வசம் அடிமைப்பட்டுக் கிடந்தோரை விடுவிக்கத் துவங்கினர் மக்கள். இதன்நிமித்தம் ஆங்காங்கே போர் வெடித்தது. வட மாகாணங்களைச் சார்ந்த மக்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கனும் ஆதரவளிக்க, தென்பகுதியில் இருந்தோர் அத்தகைய போக்குக்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து ஐக்கிய அமெரிக்க மாகாணங்களில் இருந்து தத்தம் மகாணங்களை விடுவித்துக் கொள்வதாக அறிவித்துக் கொண்டனர். அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் வெடித்தது. ஆசிரியர் ஹரியத் ஸ்டோவைச் சந்தித்த ஆப்ரகாம் லிங்கன், “இந்த உள்நாட்டுப் போரைத் துவக்கி வைத்த பெண்மணி இவர்தானா?” என வினவி வரவேற்றுக் கொண்டார். இந்த நாவலானது, ’டாம் மாமாவின் குடிசை’ எனும் தலைப்பில் தமிழ்மொழியிலும் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாவலின் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயரான, ‘இவா’ எனும் பெயரை தத்தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் மக்கள்.

’ரூபி பிரிட்ஜஸ் பள்ளிக்குப் போகின்றாள்’ எனும் நூல் பள்ளிச் சிறார்களிடையே மிகவும் பிரபலமான கதைப்புத்தகம். அங்க்கிள் டாம்ஸ் கேபின் வெளியாகி நூறாண்டுகள் ஆகியிருந்த காலமது, 1954 செப்டம்பர் எட்டாம் நாள், லூசைல் – அபான் பிரிட்ஜஸ் தம்பதியினரின் ஐந்து குழந்தைகளுள் முதலாவதாகப் பிறந்த குழந்தையின் பிறந்தநாள் இது. அம்மா அப்பா இருவரும் மிசிசிப்பியில் இருந்த பண்ணையொன்றில் விவசாய வேலை. குழந்தைகளின் வளர்ப்புக்காக நல்லதொரு வேலை தேடி லூசியானாவின் நியூ ஆர்லியனுக்குக் குடிபெயர்ந்தனர் ரூபி பிரிட்ஜஸ் பெற்றோர்.

கறுப்பினக் குழந்தைகளுக்குத் தனிப்பள்ளி, வெள்ளையின மக்களுக்குத் தனிப்பள்ளியென இருந்த காலம். அப்போதுதான் அமெரிக்க உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புவொன்றினைக் கொடுத்திருந்தது. தனித்தனிப் பள்ளிகளாக இருப்பது முடிவுக்கு வரவேண்டுமெனச் சொன்னது தீர்ப்பு. ஆனாலும், வெள்ளையினக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நுழைவுத் தேர்வு எனும் விதியைப் புகுத்தியபடியினாலே, கறுப்பினக் குழந்தைகளெல்லாம் தனிப்பள்ளியிலேயே படித்தாக வேண்டிய நிலை. தென்மாகாணங்களில் கடும் எதிர்ப்பும் நிலவியது.

ரூபியின் அம்மாவுக்குத் தன் பிள்ளையைப் பொதுப்பள்ளியில் படிக்கவைத்து ஆளாக்க வேண்டுமென்கின்ற ஆசை. அந்தப் பகுதியிலிருந்த மற்ற குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு தன் மகளையும் நுழைவுத் தேர்வு எழுத அனுப்பினார். மொத்தம் ஐந்து குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற்றனர். எனவே ஐவரும் பொதுப்பள்ளியின் சேர்க்கைக்குச் சென்றனர். பெரும் கொந்தளிப்பும் போராட்டமும் வெடித்தன.

ரூபியைத் தவிர மற்ற நால்வரும் தாங்கள் தற்போது படிக்கும் பள்ளியிலேயே படித்துக் கொள்வதாகச் சொல்லிப் பின்வாங்கினர். ரூபியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடும் மன அழுத்தம் ஏற்பட்டது. வேலையிலிருந்து நீக்கப்பட்டார் ரூபியின் அப்பா. இதனால் குடும்பத்தில் குழப்பம், மணமுறிவு பெற்றுக் கொண்டு விடை பெற்றுச் சென்றுவிட்டார் ரூபியின் அப்பா. ஆனாலும் ரூபியோ, ரூபியின் அம்மாவோ மனம் தளரவில்லை.

ரூபிக்குப் பாடல் சொல்லிக் கொடுக்க மறுத்து விலகினர் ஆசிரியர்கள். ஒரே ஒரு பெண் ஆசிரியர் மட்டும் துணிந்து முன்வந்தார். வகுப்பில் இருந்த மாணவர்கள் வேறு வகுப்புகள், பள்ளிகளுக்கு மாற்றலாகிப் போயினர். அந்த பெண் ஆசிரியருக்கும் ரூபியின் குடும்பத்துக்கும் கடுமையான மிரட்டல்கள் வந்து சேர்ந்தன. கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். பள்ளிக்குச் சென்று வரும் வழியெல்லாம் மக்கள் சாரைசாரையாக வந்து நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர். சிதைபெட்டியில் கறுப்பினக்குழந்தை இருப்பதைப் போன்று உருவாரங்கள் செய்து காண்பித்து போராட்டங்களை மேற்கொண்டனர். மனம் சோராமல் வந்து போய்க்கொண்டிருந்தனர் ஆசிரியரும் மாணவியும். வீட்டிலிருந்து வகுப்புக்கு வந்து செல்ல, ரூபியின் பாதுகாப்புக்கு நான்கு மார்ஷல்கள் நியமிக்கப்பட்டனர்.

மதிய உணவு இடைவேளையின் போது தன் ஆசிரியரான அந்த ஒற்றை வெள்ளையினப் பெண்மணியோடு மட்டுமே விளையாடியது குழந்தை ரூபி.

காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தைகளும் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். தன் கூடப் பிறந்தவர்களும் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தது கண்டு மகிழ்ந்தாள் குழந்தை ரூபி. 1964ஆம் ஆண்டு அதே பள்ளியில் தன் உயர்நிலைப்பள்ளி டிப்ளமோ படிப்பை முடித்தார் ரூபி. வெள்ளை மாளிகையில் சென்று சந்தித்தபோது, ”நீங்களும் உங்கள் அம்மாவைப் போன்றோரும் இட்ட பாதையினால்தான் என்னால் இன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் எனும் பொறுப்பில் நான் இருக்கிறேன்” என்று அகமகிழ்ந்தார் ஒபாமா. ”என்னை வளர்த்து ஆளாக்கியதும் வெள்ளைப் பெண்மணிதான். ஹென்ரி என் தோழி. இனபேதம் இங்குமிருக்கக் கூடாது, அங்குமிருக்கக் கூடாது” உருகிச் சொன்னார் ரூபி. மனத்தை உருக்கிக் கரைக்கக் கூடியவை கதைகள்.

-பழமைபேசி.

8/26/2020

அமெரிக்கா அரசியலில் ஆணாதிக்கம்

பழைய வாழ்வு, கதை, கவிதை, அனுபவம், சமையல், பகடின்னு போயிட்டம்னா கிட்னிக்கு நல்லது. அதையும் மீறி, ஏதாகிலும் எழுதணும்னா கொஞ்சமாச்சிம் களப்பணி(homework) செய்யணும். செய்ய உழைப்பும் நேரமும் தேவை. அத்தனையும் செய்து எழுதினாலும், பட்டம் கட்டிவிடுதல்(லேபிளிங்) நடக்கும். அது நமக்குத் தேவையா? மேற்கூறிய தளங்களில் எழுத எதுவும் கிடைக்கலன்னா இருக்கவே இருக்கு, நாம் புழங்கிய, நமக்கான அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள், ஏதாகிலும் எழுதலாம். உண்மைக்கு நெருக்கமாக எழுதின ஒரு மனநிறைவும் கிடைக்கும். இஃகிஃகி.

நம்மைப் பொறுத்தமட்டிலும், அமெரிக்காவில் உட்கார்ந்திட்டு இந்திய அரசியலைக் கீரை ஆயுறமாரி ஆய்வதும் சரியன்று. அதேபோல, ஆட்டையாம்பட்டியில உட்கார்ந்திட்டு அமெரிக்க அரசியலைப் பொளந்து கட்டுவதும் சரியன்று. பண்பாடு, உள்ளூர் ஊடகம், தாம் வாழும் இடத்தின் தாக்கம் இதெல்லாமுமின்றிப் பொளந்து கட்டுவது ஒருவிதமான மாயை என்பதுதாம் நம் நிலைப்பாடு.

அமெரிக்கநாடு ஆணாதிக்க நாடாம். சொல்வது யார்? இஃகிஃகி, பெற்ற அம்மாவையே இரண்டாம்குடியாகப் பார்க்கின்ற ஒரு நாட்டிலிருந்து கொண்டு. கருத்துரிமை. சொல்லிட்டுப் போகட்டு. ஆனால், 'ஏந்தங்கம் அப்படி சொல்லிட்டீங்க?'ன்னு கேட்டால், இலாரி கிளிண்டனைத் தோற்கடித்து விட்டார்களாம். எப்போதைக்கும் ஒரு பெண் அமெரிக்காவை ஆளமுடியாதாம். உண்மையில் நடந்தது என்ன?

இலாரி கிளிண்டன் தோராயமாக 30 இலட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். மாநிலத்தின் தன்னாட்சி/மண்ணாட்சிப் பங்களிப்பு அடிப்படையில் டிரம்ப் வெற்றி பெற்றார். அதாவது, ஆட்டையாம்பட்டியில் இந்த தன்னாட்சி/மண்ணாட்சி அறவே கிடையாது. அதைப்பற்றிக் கவலை இல்லை. இருக்கின்ற கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. நமக்கு சல்லிக்கட்டும், சல்லிக்கட்டின் பெயரால் சில பல ஆளுமைகள் கல்லாக் கட்டிக் கொள்வதும்தானே முக்கியம்? போராட்டம் வெற்றி(?) பெற்ற பிறகு நாட்டுமாடுகளின் வளர்ச்சியென்ன, உயிர்ப்பலிகளின் எண்ணிக்கையென்ன?? நமக்கு அதுபற்றிச் சிந்திக்க நேரமில்லை. அமெரிக்கா ஆணாதிக்கநாடு, பிரகடனப்படுத்தியாக வேண்டும். கொரோனாச் சோதனைக்கு (இலவசமாக இருந்தாலும்) அமெரிக்காவில் மூன்று இலட்சம் கொள்ளையென‌ வாட்சாப்புகள் அனுப்பியாக வேண்டும். சரி, மண்ணாட்சிப்படியாகவே இருந்தாலும், டிரம்ப் வெற்றி பெற்றது வெறுமனே 80 ஆயிரம் ஓட்டுகளால் மட்டுமே. The most important states, were Michigan, Pennsylvania and Wisconsin. Trump won those states by 0.2, 0.7 and 0.8 percentage points, respectively — and by 10,704, 46,765 and 22,177 votes. Those three wins gave him 46 electoral votes; if Clinton had done one point better in each state, she'd have won the electoral vote, too.

பொதுவாக தேர்தல் வெற்றி என்பது இருவகைப்படும். முதலாவது, தனக்கான வாக்குகளைப் பெருமளவில் வாங்குவதால் அடைவது. அடுத்தது, எதிராளிக்கு ஓட்டுகள் விழாமற்போவதால் கிடைப்பது. டிரம்புக்குக் கிடைத்த வெற்றியும் அப்படித்தான். லிபரல்கள் சாவடிக்குச் சென்று தமக்கான ஓட்டுகளைப் போட்டிருக்கவில்லை. தகுதியுள்ள வாக்காளர்களில், கிட்டத்தட்ட 44 இலட்சம் லிபரல் ஓட்டுகள் பதிவாகவே இல்லை. எடுத்துக்காட்டாக, மிச்சிகனில் ஒபாமா 350,000 ஓட்டுகள் அதிகம் பெற்று வெல்கின்றார். கிளிண்டன் 10,000 ஓட்டுகள் குறைவாகப் பெற்று தோற்கின்றார். ஆனால், டிரம்ப் ஒபாமாவுக்கு எதிரான தன் கட்சி வேட்பாளரான இராம்னியைக் காட்டிலும் 10,000 ஓட்டுகளே அதிகம் பெற்றார். ஆக, இடைப்பட்ட 340,000 பேர், ஒபாமாவுக்கு ஓட்டளித்தோர் இம்முறை வாக்களிக்கவில்லை. Wisconsin tells the same numbers story, even more dramatically. Trump got no new votes. He received exactly the same number of votes in America’s Dairyland as Romney did in 2012. Both received 1,409,000 votes. But Clinton again could not spark many Obama voters to turn out for her. இது பெண்ணுக்கு எதிரான தோல்வி எனச் சொல்லிவிட முடியாது. தலைவர்/துணைத்தலைவர் வேட்பாளர்களுள் சிறுபான்மையினர் களத்தில் இல்லை என்பதற்கான சோர்வு என்பதே பொருள். அதைச்சரி செய்யவே, இம்முறை அந்தச் சோர்வும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஒவ்வோர் நாடும் தனித்தன்மை கொண்டது. அததற்கான விழுமியங்கள் உண்டுதாம். அதற்காக, கொஞ்சம் கூடக் கூச்சமேயில்லாமல் ஆணாதிக்க வெறியர்கள், பெண் தலைமையை ஏற்கமாட்டார்கள் என்றெல்லாம் சொல்வது நகைப்புக்குரியது.

அடுத்து, அமெரிக்காவில் இந்தியக் குடியுரிமை வாங்கியோர், இரண்டாம் தலைமுறையினர், வாங்கியிராதவர்களை இரண்டாம்தரமாக நடத்துகின்றனர் என்பதாகப் பேச்சு. எப்படி இப்படிப் போகின்ற போக்கில் பொதுமைப்படுத்த முடிகின்றது இவர்களால்?

முதற்தலைமுறையினரைச் சொல்லுங்கள். ஓரளவுக்கு அதில் நியாயம் இருக்கின்றது. 'ஃப்ளோட்டிங் கிரவுடு', 'H1Bயா?' போன்ற சொல்லாடல்களைத் தமிழ்ச்சங்க வளாகங்களில் கேட்கலாம். ஒப்புக் கொள்கின்றேன். தமிழ்ச்சங்கங்களே அமெரிக்கத் தமிழ்ச்சமூகம் ஆகிவிடாது. காகம் கருமைதான். அதற்காக, கருப்பாக இருப்பதெல்லாமும் காகங்கள் அல்ல. அதைப் போல, முறையற்றுப் பேசும் சில‌ சங்கப்பண்ணைகள் இந்திய வம்சாவளிகள்தாம். அதற்காக இந்திய வம்சாவளிகள் எல்லாருமே பண்ணைகளன்று. அதிலும், இரண்டாம் தலைமுறையினர், பாவம். மையநீரோட்டத்துக்கும் ஈடு கொடுத்து, முதல்தலைமுறை குடிவரவாளர்களுக்கும் ஈடுகொடுத்து, பேலன்சு செய்து செய்தே கடக்கின்றனர். அன்பு கூர்ந்து அவர்களை விமர்சிக்கும் தகுதி எதுவும் நமக்கில்லை என்பதைப் புரிந்து கொள்வோம். 'ஏபிசிடி' என்றெல்லாம் நாம் அவர்களைச் சொல்லிச் சிரித்துக் கொள்வதில்லையா?. நமக்குள் இருக்கின்றது அத்தனை பின்னடைவு. கற்றுத் தெளிதல், நமக்கு மதிப்பீட்டும்.

அடுத்து, வேலையிடத்தில் இருக்கும் குடியுரிமை பெற்ற சில இந்திய வம்சாவளிகள் மற்றவரை வித்தியாசமாகப் பார்ப்பர். ஒப்புக்கொள்கின்றேன். அதன் காரணம், இரண்டாம்தரமாக நடத்த வேண்டுமென்பதல்ல. அதற்கான காரணமே வேறு. பண்பாட்டு வித்தியாசம்தான் காரணம். முகச்சவரம் சரிவர செய்யாமல் வருவது, தாய்மொழியில் பேசுவது, மீட்டிங் அறையில் ஏப்பம் விடுவது, இப்படியான சிற்சிறு காரணிகள். அதைநாம் பேசித்தான் கடக்க வேண்டும்.

எடுத்த எடுப்பில் குடியுரிமை பெற்றவனை மட்டையடிக்காமல், பேசித்தான் கடக்க வேண்டியிருக்கின்றது. அன்பும் சகிப்பும் பொறையுமே நமக்கான வழிகாட்டி. புலம்பெயர் மண்ணுக்கான பண்பாட்டுக் கூறுகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் அமைப்புகளில் அவற்றைப் புகுத்த முயலவேண்டும். அதுதான் தாய்மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். அல்லாவிடில், 'அந்நியனாகப் பார்க்கும் பழக்கத்தை நாமே வார்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம்' என்பதே மெய், மெய், மெய். All politics is local.

பழமைபேசி.

8/06/2020

தலைசிலிர்த்தல்

எந்த சமூகம், பொதுவெளியில் பேசவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்காது அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொள்கின்றதோ, அந்த சமூகம் அதிகார வர்க்கத்தின் உச்சபட்ச வெறியில் இருக்கின்றதென்பதே பொருள். தன் மீது வீசப்படுகின்ற எத்தகைய கருத்துகளையும் தனக்கான விழுமுதல் ஆக்கிச் செம்மையுறுகின்றதோ அந்தச் சமூகம் தழைக்கும். அப்படியான அரசியல் சாசனத்தைத்தான் அமெரிக்க முன்னோர் வடித்தெடுத்து இருக்கின்றனர். கருத்துரிமை, பேச்சுரிமையின் மீது கட்டியெழுப்பப்பட்ட நாடு அமெரிக்கா.

பொதுவாழ்க்கையென வந்துவிட்டால், கேள்விக்கணைகளுக்கும் கருத்துப்பொழிவுகளுக்கும் இடையில் நீந்திப் போய்தான் கரை சேர்ந்தாக வேண்டும். 'எதிரி வருகிறான், புயல் வருகின்றது' எல்லாமும் உண்மையாகவே இருந்தாலும், முதலில் கவனம் செலுத்தப்பட வேண்டியது, தன் வசம் இருப்பவை, "ஓடக்கூடிய குதிரையா? நொண்டிக்குதிரையா?? கரை சேர்க்கக்கூடிய தோணியா? ஓட்டைத்தோணியா??" போன்றவைதாம். 

குதிரை நொண்டி, ஓட்டைத்தோணி எனச் சுட்டிக்காட்டுகின்ற மாத்திரத்திலேயே சினம் கொண்டெழுந்தால், வெள்ளாமை வீடு வந்து சேரவே சேராது. சமூகம் வெகுவாகப் பின்தங்கியே போகும்.

குடியரசுத்தலைவர், செனட்டர், காங்கிரசுமேன் போன்றோரையே எள்ளிநகையாடி, வசைபாடி கருத்தாடுகின்றனரே ஏன், எப்படி??

தனிமனிதனைக் காட்டிலும், பொதுவாழ்க்கை என வந்து விட்டால், அவர்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டு எல்லாவிதமான கருத்துகளாலும் சூழப்பட்டுப் போய்விடும் அளவுக்கு நேர்மையாகவும், ஊழல் அற்றவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதே அதன் அடிப்படை.

எப்படிக் கருத்துரிமை நிலைநாட்டப்படுகின்றது?

முதலாவதாகக் கருத்து என்பது வேறு, கூற்று என்பது வேறு. 'அவன் திருடியிருக்கலாமென நான் நினைக்கின்றேன்' என்பது கருத்து. 'அவன் திருடிவிட்டான்', கூற்று. முதலாவது ஒருவனின் பிறப்புரிமை. இரண்டாவது, சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்பட்டது. ஆனாலும், அதிலும் ஒரு ஆணியைச் செருகி வைத்தனர் பெரியோர். எப்படி? 'அவன் திருடிவிட்டான்' எனச் சொன்ன மாத்திரத்திலேயே சொன்னவன் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது. அந்த 'அவன்' என்பவர் எவரோ, அவர் தான் திருடியிருக்கவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி நிறுவியாக வேண்டும். இங்கேதான் இன்னும் சுவையைக் கூட்டினர் பெரியோர். எப்படி?? தன் கூற்றினை மெய்ப்படுத்த வெளிக்கிடப் போய், சொன்ன கூற்று உண்மை எனத் தெரிந்து விட்டால், பொதுவாழ்க்கைக்கு உரியவரின் கதி அதோகதியாகிப் போய்விடும். இப்படியெல்லாம்தான், கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் தன்னாட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா.

The First Amendment protects false statements of fact (although it does allow for people who make false statements of fact that damage others’ reputations to be sued for defamation). Thanks to: https://www.freedomforuminstitute.org/first-amendment-center/primers/free-expression-on-social-media/

ஃபேக்நிவீசு எவ்வளவு கொடியதோ, அதனினும் கொடியது பேச்சுகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பது. அதனால்தான், பொய்ச்செய்தி எனும் கொடியவன் இருந்தாலும், பேச்சுரிமை எனும் மானுடனைக் கொண்டு வென்றெடுப்போம் மாந்தம் என்கின்றது அமெரிக்கா.

நோக்கம் நல்ல நோக்கமாக இருக்க வேண்டும். அது இருக்கும்வரையிலும் பேசிக் கொண்டேயிருப்போம்!! உழைப்பைச் சுரண்டும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் பேசுவதைக் காட்டிலும் தலையாய பொதுப்பணி வேறெதுவுமில்லை.

"If the freedom of speech is taken away then dumb and silent we may be led, like sheep to the slaughter." -George Washington. தலைசிலிர்த்தல் ஆட்டின் உரிமை.

பழமைபேசி.

7/20/2020

தேர்தல்


அந்த மலையை ஏறினால், மறுபடியும் சிறிதும் பெரிதுமாக இரு மலைத்தொடர்கள் வரும். அவற்றைக் கடந்த பின் சமநிலத்தில் நான்குகாத தொலைவு சென்றால் போதும், அத்தைமகள் தனலட்சுமியைப் பார்த்து விடலாம். நேரடியாகச் சொல்லிவிட்டால் நம் கவுரதை என்ன ஆவது?

"அம்மா, மாமன் வந்து எவ்ளோ நாளாச்சு? குளுரு காலம்னா எளப்பு வந்துரும்னு சொல்லுவியே? அதுல கிதுல??", பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, உருமாலைக்கட்டுத் துணியைத் தலையிலிருந்து பிடுங்கி தாழ்வாய்க் கட்டைக்கு முட்டுக் கொடுத்து வாயைப் பொத்திக் கொண்டான் தங்கவேலு.

ஒன்னுகாளியாத்தாவுக்கு பொசுக்கெனக் கப்பிக்கொண்டது மனம்.

காளியம்மாவின் அம்மாவுக்கு வெகுநாட்கள் குழந்தை பிறக்கவேயில்லை. சூரைப்பழக் காளியம்மன் கோயிலுக்கு பூவோடு எடுப்பதாய்ச் சபதம் மேற்கொண்டதன் விளைவாய் அடுத்தடுத்து ஐந்து பெண்குழந்தைகளே பிறந்தன. ஐந்து குழந்தைகளுக்கும் காளியாம்மாள் என்றே பெயர் சூட்டினாள் தாய்க்காரி. அப்படியாக அவர்களின் பெயர்களெல்லாம், ஒன்னுகாளியாத்தா, ரெண்டுகாளியாத்தா, மூனுகாளியாத்தா, நாலுகாளியாத்தா, அஞ்சுகாளியாத்தா என்பதாக நிலைத்து விட்டது பொன்னாலம்மன்சோலைக் காட்டுக்குள்ளே.

ஆண்மகவு இல்லையே என்கின்ற ஏக்கத்தில் ஆறாவதாய் வந்து பிறந்தவன்தான் ஆறுக்குட்டி. ஆறுக்குட்டியை ஈன்றவள், ஈன்றெடுத்த சகடநதியோரக் கரையோரத்திலேயே குருதிப்பெருக்கின் நிமித்தம் போய்ச் சேர்ந்துவிட்டாள். இப்படித்தான் ஆறுக்குட்டிக்கும் தங்கவேலுவின் அம்மாவே,  அக்காள்க்காரியே அம்மாக்காரியாகவும் ஆகிப்போனது வரலாறு.

பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவன் ஆறுக்குட்டி. 'கண்ணு, வேசகாலம் பொறந்துருச்சு. ஆடுகளை நான் ஓட்டிக்கிறன். போய், ஒருவிசுக்காப் பாத்துப் போட்டு வாடே என் தங்கம்!", இறைஞ்சிக் கொண்டாள் ஒன்னுகாளியாத்தா.

ஆறாம்மேட்டுப் பேய் என்றால் யாருக்குமே 'கருக்' என்றுதான் இருக்கும். பேயின் வேலைதான் இது, காத்திரமாக நம்பினான் தங்கவேலு. விசயம் வேறொன்றுமில்லை. கட்டுச்சோத்து மூட்டைக்குப் பொத்தல் விழுந்து புளிச்சோற்றுப் பருக்கைகள் சில பல, பொலபொலவென உதிரத் தொடங்கின. தன் சட்டையைக் கழற்றி சட்டையின் முதுகுப்பக்கப் பரப்புக்கு மேலே கட்டுச்சோற்றை உட்கிடத்தி, 'லபக்'கெனக் காவி எடுத்துக் கொண்டு போனான்.

சேனக்காரச்சிங்காரிமலை உச்சிக்குக் கொஞ்ச தூரத்தில் நடந்து கொண்டிருந்த போதுதான் கவனித்தான். சட்டையிலும் பொத்தல். "இந்தப் பேயோட இரவுசு பெரிய்ய இரவுசாட்ட இருக்கூ?", வேட்டியைக் கிடத்தி, அதனுள் வைத்துச் சுருட்டிக் கட்டி, கைக்கோலை முடிச்சுக்குள் விட்டுருவி எடுத்துக் கொண்டு போனான். இன்னும் இரு மலைகள் கடந்தாக வேண்டும். அம்மா கொடுத்த கட்டுச்சோற்றுப் பண்டங்களை மாமனுக்குக் கொடுக்கின்றோமோ இல்லையோ, தனலட்சுமிக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்பதில் குறியாய் இருந்தான் தங்கவேலு.

இப்படியாக அடுத்தடுத்து எல்லா உடுப்புகளையும் கட்டுச்சோத்துப் பொத்தலுக்கு நேர்ந்து விட்டிருந்த நிலை; ஆமாம்; கட்டிய கோவணத்தையும் உருவிப் பத்துப் போட்ட பிறகான சூழ்நிலையில்தான் யோசித்தான். 'தக்காளி, இந்தக் கட்டுச் சோத்துக்குள்ளயே பேய் பூந்துருச்சோ? உள்ள இருந்துட்டேவும் நம்மிய இமுசி பண்ணுதோ??'.

பரபரபரவென ஒவ்வொன்றாகப் பிரிக்கலானான். உண்டு கொழுத்த அது, சாவகாசமாய்க் கண்களை உருட்டி உருட்டி அண்ணாந்து ஒசரப் பார்த்தது. அம்மணமாய், வெறிபிடித்து விறுவிறுவென ஓடினான் ஓடினான் மலையுச்சியை நோக்கி ஓடினான் தங்கவேலு. ஏனென்றால் அந்த எலி ஒசரப்பார்த்தது இவன் முகத்தை அல்ல; குஞ்சாமணியை!!

‍-பழமைபேசி.

7/06/2020

மணியான் Vs கணியான்

மணியானுக்கும் கணியானுக்கும் கொழுவல் "டேய் தண்ணிபாட்டுலுன்னா தண்ணி மட்டுந்தான் ஊத்தி வெக்கோணு" "ஏன், இன்னிக்கொரு நாளிக்கு அருகம்புல் சூசு ஊத்தி வெச்சாத்தா என்னோ?" "ஆமா, இதேபாட்டுல பாட்டுலு சும்மாத்தான இருக்குன்னு பெரிய கேன்ல இருந்து வடிச்சி, பெனாயிலுமு ஊத்தி வெப்பே. தண்ணி பாட்டுலதானேன்னு, வாறவனோட‌ கை நீண்டு போய் துழாவி, மூடியக் கழத்தி வாயில ஊத்தும்... செரியா அது?" "நீ வேணுமுன்னே மொடக்கடி பேசற" "அடேய், இதெல்லாம் மனிதவளர்ச்சியின் படிப்பினைடா. இன்னும், எங்காத்தா ஊத்தி வெச்சுச்சு, ஆயா ஊத்தி வெச்சுச்சுன்னு முன்னோர் புராணம் பாடிட்டு இருக்கப்படாது, புரீதா? அப்படித்தா போனவாட்டி பார்ட்டீல..." "என்னத்தக் கண்டுட்ட பார்ட்டீல? அருமியா நடந்து முடிஞ்ச்..." "உம்பொண்டாட்டியக் கேளு, கட்டுன மூட்டயத் தொழாவ உட்டுட்டா" "ஏன், அப்பிடி என்ன நடந்துச்சு?" "மசுரு, நீ ஊசு அண்ட் த்ரோ தட்டுக குடுத்தே அல்லாருக்கும். கூடவே, ஊசு அண்ட் த்ரோ கரண்டிக குடுத்துத் தொலைக்க வேண்டீதுதான? சில்வர் கரண்டிக வெச்சிட்டே... தின்னு போட்டு அல்லாரும் தட்டுகளட் டிரேசுல அடிக்கும் போது கரண்டிகளையும் அடிச்சுட்டாங்க; பொறுக்கியெடுக்க வேண்டீதாப் போச்சு, அது அது, அப்படி அப்படித்தா செய்யோணும்... மனித வளர்ச்சிக்கு அதான்டா அர்த்தம்" "இப்ப எதுக்கு இந்தக் கட வெக்கிறே?" "ஒரு நிகழ்ச்சி நடத்துனா, செரியான நேரத்துக்கு தொவங்கி செரியான நேரத்துக்கு முடிக்கோணு... கொஞ்சநஞ்சம் முன்னப்பின்ன போகுலாம்... அது எதார்த்தம்... சும்மா, தான்தோன்றித்தனமா லொடலொடன்னு பேசி மணிக்கணக்குல முன்னபின்னப் போகப்படாது..." "லீவு நாளு, நேரமிருக்குது... அதுலென்ன தப்பு?" "அடே, இவங்கன்னா இப்படித்தாங்றமாரி ஆயிப்போயிரும்டா, அத நிமுத்திச் செரி பண்றது எவ்ளோ கடுசு தெரீமா?? லெகசின்னு சொல்லிச் சொல்றது இங்லீசுல... ஒனக்கு அதெல்லாம் எத்தாது... காசு பணம்னு சுத்துமாத்துலயே இருக்குற‌ ஒனக்கு, அடுத்தவனோட நேரம், மனசுங்றதெல்லாம் எப்பிடிப் புரியும்.. தலவிதி, செரி, நான் நடயக் கட்டிக்கிறன்..." லா.. லா.. லா.. லாலாலா... லா.. லா.. லா... பழமைபேசி.

6/27/2020

கவியரங்கம்

கவியரங்கம் என்பதே வெட்டிவேலை. இப்படியானதொரு வாதம் உண்டு. அதையும் மீறி எந்தவொரு வாய்ப்பையும் பயனுள்ளதாக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு நமக்கு. ஒரு கூற்று, இடர், கோளாறு, சிக்கல், துயர், உணர்வு முதலானவற்றை உகந்த சொற்கள் கொண்டு எடுத்துரைக்கும் போது, மொழிவளம், நுண்ணுணர்வு, தகவற்பரிமாற்றம் போன்றன எல்லாமும் நிகழும். மறைபொருளாக, அருவமான படிமம், Abstract எண்ணச்சுருக்கத்தைத் தலைப்பாகக் கொடுத்து விட்டால், அதன்நிமித்தம் தத்தம் பார்வையை, எடுத்தியம்புதலை, பல்வேறாக அவரவர் போக்கில் கட்டமைத்துக் கொடுக்கும் போது, பார்ப்போரின், செவியுறுவோரின் எண்ணவிரிவுகளுக்கு வித்திடுவதாக, சுவைத்துணர்வதாக, இடித்துரைப்பதாக, கிளர்ச்சியூட்டுவதாக எனப் பலவாறாக அது அமையும். எடுத்துக்காட்டாக, மனத்துக்குண்டா நிறம்? வானவில் பாரதியின் பூனைகள் நிறவெறிக்கழுகு தணல்மனிதம் நெருப்பிற்தோயும் மாந்தம் அண்மைய வாழ்க்கை மனத்தின் நிறம் கழுத்தில் கால்முட்டி இது தருணம் நெறிபடும் குரல்வளை கண்களுக்குள்ளே விழிகளுக்குப் பின்னே எல்லாமே தோல்தான் ... ... ... ... ... ... துவக்கப்பள்ளியிலேயே கவிதைகள் குழந்தைகளுக்கு ( https://www.slideshare.net/Lebomosimango/introduction-to-32027335) அறிமுகம் செய்யப்படுகின்றன. அவர்களின் மனத்தின் விரிவும் சகல திசைகளிலும் தங்குதடையுமின்றிப் பயணிக்கும். ஆகவே வீட்டுக் குழந்தைகளைக் கேட்டால் போதும், நம்மைக் காட்டிலும் அருமையான தலைப்புகளைக் கொடுப்பார்கள். "நிறவெறி களைவோம்! மனிதநேயம் காப்போம்!!". 😆 ஏன், கவிதையையும் நாமே எழுதிக் கொடுத்துவிடலாமே? இப்படிக் கண்ணட்டி போட்டுவிட்டால் கவிஞன் பாவமில்லையா?? ஒரேதடத்தில் தடதடவண்டி ஒன்றேபோல‌ ஓடுவதாக அது அமைந்து விடாதா?? இது கவியரங்கம் நடத்தும் வேலையன்று. திரும்பவும் அந்த முதற்சொற்றொடரைப் படித்து விடுங்கள். அதற்கு வலுக்கூட்டும் வேலையாகத்தான் அமையக்கூடும். [சாரி உவர் ஆனர், ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ளவும்] ‍-பழமைபேசி.

5/20/2020

அறுவடைக்கனவு

களத்துமேட்டில் இருப்பது மிகவும் இன்பகரமான தருணமாக இருக்கும். காட்டில் இருந்து வண்டிவண்டியாகக் காய்ந்த கடலைச்செடிகள் வந்திறங்கும். ஒருவர் பிரித்துக் களமெல்லாம் பரவலாகப் போடுவார். சற்று நேரத்தில் காளைகள் பூட்டப்பட்டு தாம்பு ஓட்டப்படும். நிலைக்கால் மேலேறி நின்று வீசும் காற்றின் திசைக்கொப்ப அந்த திசையை எதிர்த்து நின்று தூற்றுவார்கள். பொடி பொட்டெல்லாம் தொலைவாகவும் காய்ந்த கொண்டக்கடலை நேர்கீழாகவும் விழுந்து கொண்டிருக்கும். அப்படி விழுந்த கடலைமணிகளை அள்ளி அள்ளிச் சல்லடை போடுவார் அம்மா. சலித்தவையெல்லாம் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டு இருக்கும். அப்பாதானே தலைவர்? சாக்குகளைக் கொண்டு வந்து, சின்னன்கள் இருவரையும் பிடிக்கச் சொல்லி மூட்டைகளாக்குவார். வண்டி வரும். களத்து மேட்டில் இருந்து ஒரு வண்டிக்கு பத்து மூட்டைகளென அறுவடை வீடு போய்ச் சேரும்; சேர வேண்டும். மண்ணை நம்பி, மக்களை நம்பி, இயற்கையை நம்பி, தம் உழைப்பினை நம்பி நடத்தப்படும் 120 நாள் நாடகமானது, அந்த அறுவடை நாளை இலக்காகக் கொண்டுதானே நடத்தப்படுகின்றது? நம்  வாழ்க்கையின் அந்த அறுவடைநாள்தாம் நம் சாவு என்பதும்.

அப்படியான அறுவடைத் திருநாளை நாம் ஏன் சிந்திக்க, நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம்? நினைத்துப் பார்த்தால் விரைவில் அது நம்மை நோக்கிவந்து விடும் என்பதாலா?? கடந்த இருபது ஆண்டுகளாக நான் நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். 2009ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில், மரணம் குறித்தும் அதன்நிமித்தம் அமெரிக்காவில் இருப்போரெல்லாம் எப்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டுமென்றும் வலைதளத்தில் கட்டுரை எழுதி வெளியிட்டேன். இதுவரையிலும் இலட்சம் பேருக்கும் சற்றுக் கூடுதலாகப் படித்திருப்பதாக கூகுள்நிரலி கணக்குக் காண்பிக்கின்றது. மேலும், பல்வேறு தளங்களில் அக்கட்டுரை கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் அம்மாவுடன் ஒருவரது மரணத்தைப் பற்றி நானும் அண்ணனும் கூறினோம். எவ்விதப் பதற்றமுமில்லாமல் அவர் அதை எதிர்கொண்டார். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, அம்மாவின் அணுகுமுறையில் பெருமளவிலான முதிர்ச்சியைக் காண்கின்றோம். காரணம், அப்பாவின் மரணமாகத்தான் இருக்க வேண்டும்.

ஒருவர் தம் மரணத்தைப் பற்றி யோசிக்கத் தலைப்படும் போது, முதலில் பயமாகவும், பதற்றமாகவும் இருக்கும். தொடர்ந்து அது குறித்துச் சிந்திக்கத் தலைப்படும் போது, வாழ்வு குறித்த தெளிவு பிறக்கும். நல்ல அறுவடையை மேற்கொள்ள வேண்டுமானால், அந்த களத்து மேட்டிலிருந்து பின்னால் நோக்கி என்னென்ன செய்தாக வேண்டுமென உழவன் சிந்திக்கின்றானோ அதைப் போன்றதொரு பாங்கும் பக்குவமும் தலையெடுக்கும்.

சாவு என்பதை எவனொருவன் தன்னுடைய அறுவடையாக நினைக்கின்றானோ அவனெல்லாம் திட்டமிடலைச் சரியாகக் கையாளுவான். எவனொருவன் அஞ்சி நடுங்குகின்றானோ, அவனெல்லாம் திட்டமிடலின்றித் தன்போக்கில் நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பான் என்பதுதான் சரி. சாவு என்பது வெகுநிச்சயமான ஒன்று. யாராலும் அதைத் தவிர்க்க இயலாது. வேண்டுமானால், வேண்டுமானாலென்ன வெகுநிச்சயமாக முன்கூட்டியே நிகழாமல் இருக்க ஓரளவுக்குச் செயற்பட முடியும். அப்படிச் செயற்பட வேண்டுமானால் அவன் அதைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டும். உடல்நிலை ஒழுக்கம் குறித்து யோசிப்பான். முன்னெடுப்புகளை மேற்கொள்வான். அதன்வழி, சுகாதாரம் மேன்மையுறும். மூப்பெய்துதல் மட்டுப்படும்.

எதிர்பாராமல் நிகழ்வனவற்றைப் பற்றி யோசிப்பான். அப்படி ஏதும் நிகழ்ந்து விட்டால், அதைச் சரிக்கட்ட என்ன செய்ய வேண்டுமென யோசிப்பான். அதன்நிமித்தம், உயில் எழுதி வைப்பான். வேண்டிய தகவல்களை உற்றார் உறவினருக்குத் தெரியப்படுத்தும் பொருட்டு எங்கோ எழுதிவைப்பான்.

நேற்றைய நாள் நமக்குத் திரும்பக் கிடைக்காது. நாளைய நாள் நமக்கு வாய்க்குமா என்பதற்கு முழு உத்திரவாதம் எவராலும் கொடுக்க இயலாது. ஆகவே இருக்கின்ற இந்த நாளை நல்லபடியாக வாழத்தலைப்படுவான். எப்படியானவன் அப்படிச் செய்யத் தலைப்படுவான். மரணம் குறித்த உணர்வுற்று, அதன்வழி வாழ்வின் வழியைக் கட்டமைத்துக் கொண்டவன் தற்காலத்தைப் புசித்துப் பசியாற்ற எண்ணுவான்.

நம்மை நம்பி இருக்கும் குடும்பமோ சமூகமோ நாம் இல்லாமற் போய்விட்டால் என்ன செய்வார்கள் என நினைக்கத்தலைப்படுவான். ஒருவேளை அப்படியாகிவிட்டால் என யோசிப்பான். அவர்கள் நடுத்தெருவுக்கு வந்து விடக் கூடாதேயென்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவான். மாற்று ஏற்பாடுகளைச் செய்வான். யார் செய்வான்? சாவென்கின்ற அறுவடைத் திருநாள் குறித்த பிரஞ்ஞை இருக்கின்றவன் செய்வான்.

ஒரு கடைக்கு லாட்டரி வாங்கப் போகின்றான். அவன் கடைக்குப் போய் வாங்கிய லாட்டரியில் பெரும்பரிசு வாங்குவதற்கான வாய்ப்பைக் காட்டிலும், மின்னலோ விபத்தோ இடியோ நேர்ந்து இறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சாவு என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. அதற்கு, ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் படித்தவன் படிக்காதவன் போன்ற பாகுபடெல்லாம் தெரியாது, தெரியாது, தெரியாது. “நமக்கு எதுவும் நேராது” என்பதுதான் உலகப்பொதுமறையாக இருக்கின்றது. ஆனால் உண்மைநிலை என்ன? எவனுக்கும் எந்த நேரத்திலும் அது நிகழலாம் என்பதுதான் உண்மை. உறங்கப் போகின்றான் ஒருவன். நல்லபடியாகக் களைப்பு நீங்கி எழுவான் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதோ, அதேபோன்ற சாத்தியக்கூறுகள் எழாமற்போவதற்கும் உண்டுதானே?? ஆளுக்காள் அதற்கான அளவீடுகள் மாறுபடலாம். அவ்வளவுதான். வயதிற்குறைந்தவன், உடற்பயிற்சி செய்கின்றவனுக்கு மரித்துப் போவதற்கான தகவு குறைவு. மற்றவனுக்கு அதிகம். அதையும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. ஆகவே, தன் மரணம் என்பதைச் சிந்தித்தால் சிந்திக்கின்றவனுக்குத் தெளிவு பிறக்கும்.

தெளிவு பிறக்குங்கால் ஆசைகளைப் பட்டியலிடத் துவங்குவான். அறுவடையாக, நான் இன்னின்ன இடங்களைப் பார்த்தாக வேண்டும். இன்னின்னவற்றை அனுபவித்தாக வேண்டும். இன்னின்ன செயல்களைச் செய்தாக வேண்டும். இப்படியிப்படியாகத் தன் சுவடுகள் இருக்க வேண்டும். இன்னின்ன பழக்கவழக்கங்களைக் கட்டமைக்க வேண்டும். குடும்பமரபுகள் இப்படியிப்படியாக இடம்பெற வேண்டும். இப்படி இப்படியாகத் தன் வேளாண்மையை அவன் அறுவடைத்திருநாள்க் கனவினூடக் கட்டமைக்கத் தலைப்படுவான். அய்யோ அறுவடை என்பது முன்கூட்டியே வந்து விடுமா? நல்லபடியாக முடியுமா? அலங்கோலமாக ஆகிவிடுமாயென்றெல்லாம் கவலைப்பட்டால், வெள்ளாமை வீடு வந்து சேராது.

மரணம் என்பதன் பேரிலான சிந்தனையை புறக்கணித்துவிட்டு, திட்டமிடல் வேலைகளை நிராகரிப்புச் செய்து விட்டு, திடீரென அது வந்து வாசற்கதவைத் தட்டுங்கால் நிலைகுலைந்து நின்று ஒப்பாரி வைப்பதும், மனம் கலங்கிக் கடைசி தருணங்களில் அல்லலுறுவதும் நல்லதொரு அறுவடைக்கு அழகாக இருக்கவே இருக்காது. நல்வாழ்வு என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது நற்சாவு என்பதும். நற்சாவு என்பதற்கான வரையறை, ஒருவரது முடிவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதில் இல்லை. மாறாக, சாவை நோக்கிய அவரது வாழ்க்கைப்பயணமும் திட்டமிடலும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதில்தான் அடங்கி இருக்கின்றது.

ஆழ்ந்து வாழப்பழகியவனுக்கு மரணம் குறித்த அச்சமில்லை. ஒருவனது மரணம் அடுத்தவனுக்குப் பாடம். மரணம் குறித்தான சிந்தனையென்பது கண்ணாடி போன்றது; அந்தக் கண்ணாடியினூடாக அவன் தான் வாழும் வாழ்க்கையைக் கண்டுகொள்ளலாம். எப்படி வாழ வேண்டுமென்பதை, எப்படியாகச் சாக வேண்டுமென்பதிலிருந்து அவன் தெரிந்து கொள்ளலாம். அறுவடைநாள்க் கனவு இனிமையானது. விளைச்சல் வெகுவாக இருக்க வேண்டுமானால், அந்த நாளை நினைக்க வேண்டும். அந்த நாள் இப்படியிப்படியாக இருக்க வேண்டுமெனக் கனவும் கண்டாக வேண்டும். அதற்கொப்ப செயற்படவும் வேண்டும். Cheers!!

5/17/2020

சிறகசைவு



1972 ஆம் ஆண்டு, அமெரிக்க உயராய்வு அறிவியல் கழகத்தின் 139ஆவது கூட்டத்தின் போது அறிவியலறிஞர் எட்வர்டு லோரன்சு என்பார் அவையோரிடையே ஒரு வினாவினை எழுப்பினார். ”தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலின் ஏதோவொரு காட்டில், ஏதோவொரு செடியினுடைய மலரொன்றில் அமர்ந்திருக்கும் அந்த சிறு வண்ணத்துப்பூச்சியின் அந்த ஒற்றைச் சிறகசைப்பு அமெரிக்காவில் பெரும்புயல் ஒன்றை உருவாக்கும் வல்லமை கொண்டதா?” என்பதுதான் அவரின் வினா. ‘பட்டர்ஃபிளை எபெக்ட்’ எனும் பெயரில், இந்த கருத்தாக்கமானது அறிவியலுலகில் இன்றுவரையிலும் பெரும் விவாதங்களை விதைத்துச் சென்றிருக்கின்றது.

பதினெட்டு வயதுடைய எட்வினா எனும் மாணவி வீட்டின் முன்னறையில் அமர்ந்து நூல் ஏதோவொன்றை வாசித்துக் கொண்டிருக்கின்றாள். அவளுடைய தாய் உள்ளே நுழைகிறார். உள்ளே வந்ததும், பரபரப்போடும் ஆவலோடும் அந்தக் காலணிகளைப் பிரித்தெடுத்து அணிந்து நடந்து பார்க்கின்றார். எட்வினாவுக்கு மனம் ஒப்பவில்லை. ‘அம்மா, இந்த வயதில் இது உனக்குத் தேவையற்றது. இந்த உயரமான குதிகள்(high heels) செருப்பு உனக்கு வேண்டாமம்மா’ எனச் சொல்லி அகங்கலாய்த்துக் கொள்கின்றாள். அம்மாவின் வேட்கை அம்மாவுக்கு.

மறுநாள், அந்த உயர்குதிச் செருப்புகளை அணிந்து கொண்டு சென்ற எட்வினாவின் தாயார் அவர்தம் கால் இடறிக் கீழே விழுந்ததில் காற்பாத எலும்பு பிசகிவிடுகின்றது. அதன்நிமித்தம் கால்கட்டு போடப்பட்டு ஒருமாத கால ஓய்வில் இருக்கப் பணிக்கப்படுகின்றார். கூரையானது மரத்துண்டுகளினால் வேயப்பட்ட வீட்டில், வெளியே எங்கும் செல்லாமல் தொடர்ந்து ஒருமாதகாலம் தங்கியிருந்ததில், மரத்தில் இருந்து வெளிப்பட்ட பூஞ்சைக்காற்றினால் எட்வினா அம்மாவுக்கு சுவாச அழற்சி ஏற்படுகின்றது. அந்த அழற்சிக்கு பென்சிலின் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றார். அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதில், அவர் உட்கொண்டு வந்த கருத்தடை மாத்திரைகள் பயனற்றுப் போயின. விளைவு, எட்வினாவுக்கு 19 வயதுகள் குறைந்த தம்பி பிறக்கின்றான். ஒரு குதிகாற்செருப்பு வாங்கிய அந்த ஒற்றை முடிவுக்குப் பயனாக எட்வினா அம்மாவுக்கு மகன் பிறக்கின்றான்.

ராபர்ட் வேலையில்லாத இளைஞன். அமெரிக்கத் தந்தைக்கும் பிலிப்பைன்சு தாய்க்கும் பிறந்து, அமெரிக்காவில் பள்ளிப்பருவத்தை முடித்து, தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட பிணக்கின்பாற்பட்டு தாயோடு பிலிப்பைன்சு நாட்டுக்கு வந்து, வந்த இடத்தில் வேலை எதுவுமின்றி அல்லாடிக் கொண்டிருப்பவன். பிற்பகல் நேரம். கடுமையான பசி.  வீட்டுக்குச் செல்வதா, உணவகம் செல்வதாயென மனம் தள்ளாடுகின்றது. ஒருவழியாக ஒரு முடிவினை மேற்கொண்டு, இருக்கின்ற காசை வைத்துக் கொண்டு, அந்த சீன உணவகத்துக்குச் சென்று பசியாறுகின்றான். எல்லாம் ஆன பிறகு, பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டுடன் ஃபார்ச்சூன்குக்கீ எனப்படுகின்ற அந்த இனிப்புப் பண்டமும் வைக்கப்படுகின்றது. பிரித்துப் பார்க்கின்றான். அந்தப் பண்டத்தினுள்ளே இருக்கின்ற துண்டுச்சீட்டில், “பிறருக்குக் கற்பிக்க வேண்டுமாயின், நாம் அதனை ஒருமுறைக்கு இருமுறை தீரக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று இருக்கின்றது. அது அவனது சிந்தையைக் கிளறி விடுகின்றது.  உணவகத்தில் இருந்து நேரே அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று, தாம் பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லையென்றாலும், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவன்; அமெரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்தவன் என்கின்ற அடிப்படையில் ஆங்கிலப் பயிற்றுநர் வேலைக்கு விண்ணப்பித்தான். விண்ணப்பித்திருந்ததை மறந்தும் விட்டிருந்தான் ராபர்ட்.

தைவான் நாட்டில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினை முன்னிட்டு, தைவான் நாட்டு ஆசிரியர்கள் பலரும் பிலிப்பைன்சிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். அதன்காரணம், ஆங்கிலப் பயிற்றுநர்களுக்கான தேவை ஏற்பட, எங்கோ இருந்த ஒரு விண்ணப்பத்தின் பொருட்டு ராபர்ட்டுக்கு அழைப்பு வந்து, ஆங்கில வகுப்பு பகுதிநேர ஆசிரியர் வேலை கொடுக்கப்பட்டது. படிப்படியாக, முழுநேர வேலை, வீடு, திருமணம் என வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொண்டான் இராபர்ட். சீன உணவகத்தின் அந்த ஒரு துருப்புச்சீட்டு, அவனைப் பெரும் கல்வியாளனாகக் கட்டமைத்து பெரும் பாடசாலைக்கு உரிமையாளனாகவும் இட்டுச் சென்றது.

புறநகர்ப்பகுதி ஒன்றில் சேவையைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அந்த ஒருவர் மட்டும், வரிசை ஒழுங்கினைப் பின்பற்றாமல் ஓரிருவருக்கு முன்பாகப் போய் நின்றார். அதனை அங்கிருந்த காவலர் ஒருவர் தட்டிக் கேட்டார். வாக்குவாதம் நீண்டது. அந்த நபரைக் கைது செய்தது போலீசு. போலீசுக் கட்டுப்பாட்டில் இருந்த அவர் கடும் சொற்களைப் பாவித்தார்.  அடிகள் வாங்கினார். எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலின் படத்தை சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. நாடெங்கும் மக்கள் மனம் வருந்தினர். நாட்டின் அதிபருக்கு எதிராக அதனைத் திருப்பிவிட்டனர் சிலர். மக்கள் வீதிக்கு வந்தனர். ஒரே வாரத்தில் அரசு கவிழ்ந்தது. அதனைக் கண்ட அண்டை நாட்டவரைச் சார்ந்தவர்களும் அவரவர் அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களின் வாயிலாகக் கொந்தளித்து வீதியில் இறங்கினர். அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன இன்னபிறசக்திகள் பலவும். அந்த ஒற்றை இளைஞர் வரிசையில் முந்திச் சென்றதன் விளைவு, பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து நாடுகள் துண்டாகின. வாழ்வு பாழானது. பின்னர் அதற்கு ‘அராபிய வசந்தம்’ எனப் பெயரும் சூட்டப்பட்டது.

கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள், அமைப்புகள், முறைமைகள், நெறிகள் முதலான எதுவுமற்று, ஏதோவொரு சிறு சிறகசைப்பின்பாற்பட்டும், வெறுப்புணர்வின்பாற்பட்டும் முடிவுகளை மேற்கொள்ளும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றது. சாதி, சமய, இன உணர்வுகளைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தித் துருவப்படுத்தும் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் உலகெங்கும் மேலோங்கி வருகின்றன. எந்தவொரு சிற்சிறு சிறகசைப்பையும் தமதாக்கிக் கொள்ள எல்லாச் சக்திகளும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன. எந்தவொரு சிறகசைப்பும் நல்லதொரு விளைவையும் உண்டு செய்யலாம். நேர்மாறாகப் பாரிய பின்னடைவையும் உண்டு செய்யலாம். பெரும்பாலும் பின்னடைவுகளையே இந்த சிறகசைப்புத் தாக்கங்கள் உண்டு செய்து வந்திருக்கின்றன. அவற்றினின்று விடுபட்டுக் கொள்ளவும், அவற்றை மேன்மைக்குரியதாக உட்படுத்திக் கொள்ளவும் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு, முறைசார் அரசியலையும் தன்னார்வப் பணிகளையும் மேற்கொள்வது மட்டுமே.

-பழமைபேசி.


4/18/2020

உருகுவேக்காரனின் உருக்கம்



அன்புள்ள அத்தைக்கு,  புயோனா தியாசு. அம்மா சொன்னாள்.  ‘நாங்கள் எல்லாம் அங்கேயே இருந்திருக்கலாம். வரலாற்றுப் பிழை செய்து விட்டோம்’ என்று நீங்கள் சொல்லியதாய்ச் சொல்லி வருத்தம் கொண்டிருக்கிறாள்.

அத்தை, அந்த மாலைப் பொழுது நினைவிருக்கின்றதா? நான் அந்த உருளைக்கிழங்கு ஒன்றைத் தின்று கொண்டிருக்கின்றேன். அம்மா எதோ நறுவிசு செய்து கொண்டிருக்கின்றாள். நீயும் பாட்டியும் அம்மாவிடம் எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். எங்கிருந்தோ என் அப்பா, உங்கள் அண்ணன் வருகின்றார். பணம் கேட்கின்றார். நீங்கள் இருவரும் இல்லையெனக் கைவிரிக்கின்றீர்கள். அம்மாவை நையப் புடைக்கின்றார்.

என்னைக் காவி எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று அடைக்கலம் கேட்கின்றார். எல்லாரும் ஒதுங்கி ஓடுகின்றனர். நடந்தே வந்தோம் பாட்டியிடம். டாக்குரெம்போவில் இருக்கும் மாமனுக்குத் தகவல் போகின்றது. உயிரைப் பணயம் வைத்து மெக்சிக்கோ அனுப்பி விடுகின்றார். அங்கிருந்து ஊர் ஊராய்த் திரிந்து உயிரைக் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து சேர்ந்தோம். கால்களில் குத்திய முட்களின் எண்ணிக்கை தெரியாது. உடம்பில் கடித்த பூச்சிகளின் எண்ணிக்கை தெரியாது. ஆனால் அம்மாவிற்கு விழுந்த அடிகள் அத்தனையையும் நான் அறிவேன் அத்தை. மொத்த நாடும் எங்களை ஒதுக்கித் தள்ளியதுதானே?

வகுப்பில் விட்டார்கள். வயதைக் கருத்திற்கொண்டு மூன்றாம் வகுப்பில் விடப்பட்டேன். அடுத்த குழந்தையிடம் பேச முடியவில்லை. மொழி தெரியாது. டீச்சர் பட்லர் பியர்சு எனக்கு இன்னுமொரு அம்மாவாகிப் போனாள். படங்களைப் பார்த்துப் படிக்கச் சொன்னாள். எனக்கு மட்டும் டிவியில் ரைம்சு போட்டுக் காண்பித்தாள். ஒவ்வொரு சக மாணவரிடமும் பேசி, ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை எழுதித் தரச் சொன்னாள். அதுவும் பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகுதான் பேசிக் கட்டுரை எழுத வேண்டும். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஏன் அத்தனையும் பையன்களிடம் பேசியதாய் இருக்கின்றது? பையன், பொண்ணு என மாற்றி மாற்றி இருக்க வேண்டுமெனக் கடிந்து கொண்டாள். தயங்கித் தயங்கி பெண் பிள்ளைகளிடம் பேசினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது பெண்பிள்ளைகளிடம் கட்டுரை எழுதுவதுதான் மிகவும் எளிதென்று. அப்படியாக ஒவ்வொரு வாரமும் எனக்கு புதிது புதிதாக ஒரு நண்பர் என பல நண்பர்கள் கிடைக்கப் பெற்றேன். அத்தை, நினைவிருக்கின்றதா? என்னைச் சக உறவுக்காரப் பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டியதும், அதை நீங்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, என் அம்மா அக்கற்களைத் தம்மீது வாங்கிக் கொண்டதும்??

நான் இப்போது ஏழாவது வகுப்பு படிக்கின்றேன் அத்தை. அன்றாடம், நாங்கள் எல்லாரும் சூம் வீடியோகாலில் பேசிப் பழகி, பாடங்கள் படித்துக் கொண்டிருக்கின்றேன். அம்மா, ஒரு மூத்தோர் இல்லத்தில் துப்புரவு வேலை பார்க்கின்றாள். மரங்கள் சூழ இருக்கும் ஒரு வீட்டில் குடியிருக்கின்றோம். அம்மாவுக்கு கூடுதல் நேர வேலை. அந்த இல்லத்தில் இருக்கும் 175 மூத்தோருக்கும் அம்மாதான் செல்லப்பிள்ளையாம். கொரொனா வைரசு எங்களையோ, இந்த அமெரிக்காவையோ ஒன்றும் செய்துவிடாது அத்தை. மீண்டுவிடுவோம். சூழ்நிலையை மாற்ற முடியாவிட்டால், சூழலுக்கேற்றபடி எங்களை நாங்கள் மாற்றிக் கொள்வோம். இங்குள்ள மனிதர்கள் எல்லாரும் மண்ணின் பிள்ளைகள். மண்ணின் துகள்கள் சில மண்ணுக்குள்ளே போகலாம்தான். ஆனால் அதே மண்ணிலிருந்து அதே மண்ணின் பிள்ளைகளாய்  மனிதத்தோடு நெடுமரமென முளைத்துக் கொண்டே இருப்போம் அத்தை. எங்கள் இருப்பில் நாங்கள் மகிழ்ந்திருக்கின்றோம். அடியோசு!!     அன்புடன், பெண்ட்டில் பெண்ட்டோசு.

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

3/29/2020

உயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி


வணக்கம். During this tough pandemic period,  Why I choose to be positive? வைரசுகள் பலவிதம். அதில் இதுவொரு விதம். இதன் சுவடு, கண் மூக்கு வாய் வழியாக மூச்சுக்குழாய்க்குள் சென்றால், பல்கிப்பெருகி உடல்நலத்துக்குத் தீங்காகும். நம்மிலிருந்து பலருக்கும் அது பரவ வழிவகுக்கும். தற்காத்துக் கொள்ளவும் பொதுநலத்துக்கு வழிவகுக்கவும் ஒத்துழைப்பது நம் கடமை. ஆகவே, I choose to be positive.

மனநிலை என்பது நாம் உள்வாங்கும் பல செய்திகள், தகவல்கள், காட்சிகள், உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டது. அறிவுறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் மயிரிழையளவுதான் வித்தியாசம். அந்த வித்தியாசத்தைக் கடைபிடிக்க சமநிலை தரித்தல் அவசியம். ஆகவே, I choose to be positive.

24 மணிநேரமும் வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இணையத்தில் தொலைக்கலாம். இதிலிருந்தெல்லாம் விடுபட்டு, அதிகாரப்பூர்வ அரசுப்பூர்வ தகவலை நுகர்ந்து பெருமளவு நேரத்தை என் சிந்தைக்குள்ளாகவே வைத்திருக்க வேண்டுமேயானால் சுயகட்டுப்பாடு அவசியம். ஆகவே, I choose to be positive.

நானும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, பிறந்த நொடியிலிருந்து இந்தநொடி வரைக்குமான பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றேன். அதில் எத்தனை எத்தனையோ அனுபவங்களைப் பெற்றே வந்திருக்கின்றேன். திரும்பிப் பார்த்து, அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சவாலான நேரத்தைக் கடக்க முயலவேண்டுமேயானால், முதலில் நான் என் வசப்பட வேண்டும். ஆகவே, I choose to be positive.

மானுடத்தின் மகோன்னதம் அறிவியல். அறிவியலில் பல கூறுகள், பல பிரிவுகள். கற்பதற்கு கிடைக்கின்றன ஏராளம், ஏராளம். நாம்தான் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டும்.  அதற்குத் தேவை நாட்டம். அப்படியான நாட்டத்துக்கு விழைதல் அவசியம். ஆகவே, I choose to be positive.

பேரிடர் காலத்தில் துயருக்கு நெருக்கமானவர்கள் வயதில் மூத்தோர், உடல்நிலையில் பின்தங்கியோர், சிந்தைவலு குன்றியோர். அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுமேயாயின், நமக்குள் ஊக்கம் வாய்த்திருத்தல் அவசியம். அன்றாடம் சில பலருடன் பேசியும் வருகின்றேன். அப்படியான ஊக்கத்திற்காக,  I choose to be positive.

அடிப்படையில், மக்களுடன் உரையாடும், கலந்திருக்கும், ஊடுபாயும் தன்மை கொண்டவனுக்கு, அப்படியானதன் தேவை அதிகரித்திருக்கின்றது. தேவையை ஈடுகட்டும் பொருட்டு, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

வீட்டில் மருத்துவத்துறை சார்ந்தவர் இருக்கின்றார். ஊக்கமளித்துத் தோளோடு தோள் கொடுத்து நிற்றலும் அவசியம். மருத்துவத்துறை சார்ந்தவர் என்பதாலேயே அறிவுறுத்தலெனும் பெயரால் அச்சுறுத்தல்களும் வந்து சேர்கின்றன. அவற்றை முறியடித்து விழுமியம் பேண வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

வாழ்க்கையைக் காலத்தின் அளவு முடிவு செய்வதில்லை. துவக்கத்திலிருந்து முடிவு வரையிலான பயணத்தில் வாழ்வுக்குடம் நிறைகுடமாக வந்து சேர்ந்ததா என்பதுதான் பொருட்டு. இயன்றவரையிலும் நிறைவானதாய் இருக்க முயல்கின்றோம். அத்தகு முயற்சிக்கு வித்து, துணிபு. ஆகவே, I choose to be positive.

நேற்றைய நாளைச் செப்பனிட முடியாது. ஆனால் நாளைய நாளைக் கட்டமைக்க முடியும். கட்டமைக்க உறுதியும் உள்ளமும் தேவையாய் இருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

சிங்கம் பிடரியைச் சிலிப்பி எழுவது போல,  நாய் தன் பின்னங்கால்களை ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி நிலத்தைக் கீறி, பாய்ந்தோடத் தன்னை முடுக்கி முனைந்து கொள்வதைப் போல, அடுத்தவரையும் தட்டித் திடமாக்கி ஊக்கம் கொள்ளச் செய்திட நமக்குள் வேட்கை இருந்திடல் வேண்டும். ஆகவே, I choose to be positive.

சோம்பலாக இருக்கின்றதா? மங்கலாக இருக்கின்றதா?? சோகமாய் இருக்கின்றதா? சோகையாய் இருக்கின்றதா?? விரியக் கண்களைத் திறந்து பாருங்கள். வாய்விட்டு, அஃகஃகா பெருத்துச் சிரியுங்கள். உங்களுக்குள் ஆழம் பிறக்கும். அவை அனைத்தும் அதற்குள் புதையுண்டு போகும். நீங்கள் மிளிர்ந்து இருப்பீர்கள். அதற்குத் தேவை ஓர் ஆறுதல், ஒரு துணை, ஒரு சொல். ஆகவே, I choose to be positive.

வெயிலில் நனைந்தேன். வானத்தைப் பார்த்தேன். தெருச்செடி கொடிகளைப் பார்த்தேன். வழிந்தோடும் சிற்றோடையைப் பார்த்தேன். எல்லாமும் அதனதன் கதியில் இன்புற்றுக் கிடக்கின்றன. அதற்கான இடர்களையும் தாண்டித்தான். நானும் தாண்டியாக வேண்டும். ஆகவே, I choose to be positive.

வெயிலில் நனைந்தேன். வானத்தைப் பார்த்தேன். தெருச்செடி கொடிகளைப் பார்த்தேன். வழிந்தோடும் சிற்றோடையைப் பார்த்தேன். எல்லாமும் அதனதன் கதியில் இன்புற்றுக் கிடக்கின்றன. அதற்கான இடர்களையும் தாண்டித்தான். நானும் தாண்டியாக வேண்டும். ஆகவே, I choose to be positive.

நம்விரல்களில் நச்சின் சுவடு படிந்து விட்டது. கண்களைக் கசக்கும் போது, மூக்கினைத் தொடும்போது, ஏதாகிலும் தின்னும் போது, காயம் புண்களினூடாகயெனப் பலவாறாக எப்படியோ அது நம்முடலுக்குள் புகுந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்? உடம்பில் இருக்கும் அணுக்களில் புகுந்து தன்வசப்படுத்தி தன் உருவைப் பெருக்கிப் பெருக்கி உடலைத் தின்ன, சிதைக்கத் துவங்கும். உடலெங்கும் இருக்கும் அணுக்கள் வெளியாள் உட்புகுந்து விட்டதைக் குறிக்க புரதச்சுவட்டினை வெளிப்படுத்தும். அப்படியான புரதச்சுவடுகளைப் படித்துத் தெரிந்து கொண்ட உடல், அவற்றை அழித்தொழிக்கும் பொருட்டு நம் எலும்பு மச்சையிலிருந்து இலட்சோப இலட்சம் வீரர்களை இரத்தத்தின் வெள்ளையணுக்கள் வாயிலாக அனுப்பும். வெளியேற்றும்பொருட்டு, தும்மல் இருமல் ஏற்படும்; வெப்பத்தை உயர்த்தி அவற்றை அழிக்கும் பொருட்டு காய்ச்சல் ஏற்படும். புரதத்தைக் கொண்டு தடுப்புக் காவலர்களை அனுப்பும் பொருட்டு புரதச்சத்தினை செலவிடுவதால், தசைநார்கள் வலிக்கும். முதன்முறையாக ஒரு நச்சு உட்புகும்போது, அழித்தொழிப்பு வேலை கடுமையாக இருக்கும். ஒருமுறை அழித்தொழிப்பில் வெற்றி பெற்று விட்டால், உடற்சக்தியானது அதன் வகை, தன்மை முதலானவற்றை நினைவில் வைத்திருக்கும். மறுமுறை எதிர்ப்படும் போது எளிதில் வென்றெடுக்கும். இப்படியான நச்சு எதிர்ப்பு அணுக்களுக்கும் சிந்தையின் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு. https://www.sciencedaily.com/releases/2010/03/100323121757.htm சிந்தை மேலான எண்ணத்தோடும் ஊக்கத்தோடும் இருக்கும் நிலையில், உடலின் கோடானுகோடி அணுக்களும் அவ்வண்ணமே இருக்கின்றன. அவை அப்படி இருக்கும் போது, அவற்றின் பிரதிகளும் ஊக்கம் பெற்று அழித்தொழிப்பில் வெற்றி பெறுகின்றன. ஆகவே, I choose to be positive; We must remain positive. உயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி, Let's be positive! Wish you all the best!!

Signing Off,
பழமைபேசி,
Pazamaipesi@gmail.com.

3/13/2020

சமையலோடு உறவாடு



வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, ஒருவர் தம்மைச் சமையலில் ஈடுபடுத்திக் கொள்வது வாழ்வையே முழுமையாக்கும். எப்படி?

சமைப்பதென்பது நம் மனநலத்தை மேம்படுத்தும். ஏனென்றால், அது பொறுமையைச் சிறுக சிறுக நம்முள்ளே உட்புகுத்தி தேவையற்ற கொந்தளிப்புகளையும் உணர்வுப் பிழம்புகளுக்கான அத்தனை காரணிகளையும் மட்டுப்படுத்தி விடும். மனநிறைவை ஈட்டித்தரும். புத்தாக்கத்துக்கான அத்தனை கதவுளும் திறக்கப்பட்டு எல்லையற்ற தன்னாட்சியை அது நமக்குக் கொடுக்கும். வகை வகையாய், விதவிதமாய் புதுப்புது வழிகளில் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம். தாவரங்களோடும், இதர பண்டங்களோடும் உரையாடலை மேற்கொள்ளும் மனம். ஒவ்வொரு மணம், சுவை, ஓசை, வண்ணம் எனப் பல பரிமானங்களில் அவற்றை மனம் அணுகத் துவங்கும். இதன் வாயிலாக, மனம் விசாலமடைந்து சிந்தை பலவாறாக விரிவடைய தொடங்கும்.  ஒன்றைச் செய்து வடிவாக வரும் பொருட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மனம் தன்னம்பிக்கையில் ஆழ்ந்து புரளும். குடும்பநலமும் குதூகலிக்கத் துவங்கும். பாராட்டுகளும் கொடையுள்ளமும் படிப்படியாக பரவசத்தைக் கொணரும்.

செய்மன உணர்வு

தமக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கென சமைக்கத் துணிந்து, மனத்தின் அத்தனை பார்வையும் நன்றாகச் செய்து அசத்த வேண்டுமென்கின்ற வேட்கையின் பொருட்டு ஒருமுகமாக அந்த இலக்கில் குவியும் மனம். மனம் ஒருமுகப்பட வேண்டுமெனத் தனித்தனிப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தேவையில்லை. சமைத்தாலே போதும். அத்தனை கவலைகளும், மனச்சிதற்ல்களும் ஒழிந்து போகும், பேரின்பத்தில் ஆழ்ந்து போகும் மனம். நாட்பட நாட்பட உள்ளுணர்வு மேம்பட்டு, அளவீடுகளெதுவுமின்றி நிதானத்திலேயே ஒன்றைப் படைக்க முற்படுவீர்கள். அதுதான் கைவாக்கு என்பது. அப்படியான கைவாக்கு மேம்படும்போது மனம் பண்பட்டே போகும்.

புத்தாக்க உணர்வு

பல்வேறு காய்கறிகள், தனிப்பொருட்கள்,  வறுப்பது, தாளிப்பது, சுடுவது, அவிப்பது, கருக்குவது எனப் பல்வேறு சமைக்கும் முறைமைகளென பலதரப்பட்டவோடு பின்னிப்பிணைந்து புதிது புதிதாகச் செய்து பார்க்கத் தூண்டும் மனம். தேடலை விதைக்கும். நாடலை விதைக்கும்.  மற்றவர் அறிந்திராத ஒன்றைப் படைக்க விழையும் மனம். அந்த இடத்தில்தாம் ஒருவரின் மனத்தடைகள் எல்லாம் சுக்கு நூறாக உடையத் துவங்கும். அது அவரவரின் தொழில், வாழ்க்கையிலும் துலங்கத் துவங்கும். மனத்தடை அகன்றால், out of box thinking எனப்படுகின்ற மனவிரிவு நேர்ந்தே தீரும்.

பொறுமை

சமைக்க சமைக்க உள்ளுணர்வு வலுப்படும். Blending இரண்டறக் கலந்து நயம் வெளிப்படுகின்ற தருணத்துக்காக மனம் ஏங்கும். அந்தத் தருணத்தை மட்டுமே இலக்காகக் கொள்ள மனம் விழைகின்ற போது, பொறுமை என்பது தானாக வந்து விடும் ஒருவருக்கு.

மனமறிதல்

பாராட்டும் போது மனம் இலயித்துப் போகும். நாட்பட நாட்பட அடுத்தவரின் நாடிபிடிக்கப் பழகிப் போகும் மனம். சுவையில், காட்சியில் மேம்பாடு காணத் துடிக்கும். அடுத்தவரின் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவல் கொள்ளும். இத்தகைய பண்பு என்பது சந்தைப்படுத்தலுக்கான ஆதார வேர். அத்தகைய பண்பு சமையலின் வாயிலாகவும் நமக்கு நேரிடும்.

நெகிழ்மனங்கொள்தல்

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. அந்தப் பொருளும் அதனதன் இடம், வகையைப் பொறுத்து அதன் தன்மையைக் கொண்டிருக்கும். அப்படியான நிலையில் நினைத்தபடி வாய்க்கப் பெறாவிட்டால் உடனே அதனை ஈடுகட்டும் பொருட்டு வேறெவோன்றைச் செய்து சரிக்கட்டப் பழகும் மனம். உப்புக் கூடிவிட்டால், ஒரு உருளைக்கிழங்கினைத் துண்டுகளாக்கிப் போட்டு விடுவதைப் போல. எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிவதைக் காட்டிலும், மனம் நெகிழ்ந்து சரிக்கட்டிக் கொள்ளப் பார்க்கும்.

முறைமைகொள்தல்

சமையலில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது, ஒழுக்கம், பேணல் என்பதும் தானாகவே அமைந்து விடுகின்றது. கிடங்கில் என்னென்ன பொருட்கள் எல்லாம் இருக்கின்றது? என்னவெல்லாம் வாங்கி வர வேண்டும்? எப்படியெல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்? கெடுதல், வீணாதல், பேணுதல், வாங்கி வருதல் எனப் பலவாறாக மனம் பண்பட்டுப் போய் விடும்.

மெய்நலம்பேணல்

சமைத்தலில் ஈடுபடும் போது, நாடலும் தேடலும் விழைவும் நேர்ந்து விடுகின்றனயென்பதைப் பார்த்தோம். அவற்றின் பொருட்டு, தரம், நயம், நலம் என்பதும் தானாகவே அமைந்து வந்து சேர்ந்து கொள்கின்றது.  தாவரங்களின் இன்றியமை்யாமை, சத்துகளின் வகை, இன்ன நிலைக்கு இன்ன உணவு என்பதெல்லாமும் வாய்க்கப் பெற்று விடுகின்றது. அதன்நிமித்தம் மெய்நலமும் மேம்படுகின்றது.

சமைப்பதென்பது மனிதனை முழுமைப்படுத்தியே தீரும். சமத்துவமும் நிறைகொளலும் நேர்ந்தே தீரும். சமைக்கத் தெரியாதவன் அரை மனிதன்.  மெய்நலமும் மனநலமும் மேம்பட சமையலைப் பழகு.  Cooking is one of the mozt zen things; you have to be there!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

1/13/2020

பொங்குக பொக்கம்


வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு பொங்கு!!

பொக்கம் pokkam , n. < பொங்கு-. 1. Abundance; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 2. Eminence, height; உயரம். Loc. 3. Bloom, splendour; பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திரு வுலா.).

பொலிவையும் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் குறியீடாக, பொங்கல். வாழ்வில், வேளாண்மையில், தொழிலில் பொங்கிவர வாழ்த்தி, விழுமுதலைக் கொண்டு ஆடுதல், பொங்கல் விழாக் கொண்டாட்டம்.

வேளாண்மை, தொழில், வாழ்வு யாவற்றுக்குமான‌ இயற்கையின் சிறப்பாகக் கதிரவன். கதிரவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்வு. வழக்காறாக, மனிதன் மரத்தை வணங்கினான். ஆற்றை வணங்கினான். மலையை வணங்கினான். கடலை வணங்கினான். கதிரவனையும் வணங்குகின்றான். பொங்கும் கதிரோன் நாள்!!

கூட்டமாக வாழத்தலைப்பட்டவன். மனம் தனிமையையும் நாடும். அதேபோல இன்னபிறரின் அணுக்கத்தையும் நாடும். கூட்டுக்களிப்பும் உண்டாட்டும் எந்த உயிரினத்துக்கும் உரித்தானது. அதன்நிமித்தம் பொங்கல் விழாக் கொண்டாட்டத்திலும் கலை இசை பங்கு கொள்கின்றது. நட்புபாராட்டிக் கெழுமை கொள்கின்றான் மனிதன்.

உறைவிடத்தைத் தூய்மைப்படுத்துகிறான். தொழுவம் பேணுகின்றான்.அழகூட்டுகிறான். உடனுறை விலங்குகளைச் சிறப்பிக்கிறான். புதுவிளைச்சலை வரவேற்க, 'புதுயீட்டுப் பொங்கல்' வைக்கிறான். உடன்படு உயிரினங்களுக்கும் படைக்கிறான். சமயமில்லை. பேதமில்லை. பொங்கலோ பொங்கலெனக் கூவிக் குதூகலம் கொள்கின்றான்.

பின்னாளில் தனித்துவம் கொள்ள விழைந்தான். அரசியல் பழகினான். செப்புமொழி முன்வைத்து நடைபோட்டான். வள்ளுவரை முன்னிறுத்தினான். திருவள்ளுவரை முன்னிறுத்தினான். தற்காப்புக்கலை பழக்குவித்தான். இணக்கம் முகிழ பாரிவேட்டை நடத்தினான். உளம் மகிழ கரிநாளில் கள்ளு உண்டாட்டு சேவற்கோச்சை!!

கூட்டுக்களி(இசை, நடனம், ஆடல், பாடல், கதை, கலை, விளையாட்டு), உண்டாட்டு, இதனூடாக அரவணைப்பு. உறுதிகொள்ள ஊக்கம்கொள்ள மேம்பட இவைதாம் அடிப்படை. நிறுவனம் செய்து கொடுத்தால் உழைப்புக்கு ஊட்டம். சாமியார் செய்து கொடுத்தால் பணத்துக்கு ஊட்டம். மனிதனுக்கு மனிதனே செய்து கொண்டால் அது பொங்கல்.

உவகை ஈகை நாடல் பேணல் பொங்க நண்பர்களைச் சந்திக்கலாம்,மூத்தோரைச் சந்திக்கலாம்;ஏக்கம் தாக்கம் அளவளாவிக் கொள்ளலாம்.பிணக்குகள் தீரும்.பகைமை ஒழியும். ஒழிக்க உறுதியும் இறுகும். மொத்தத்தில் தைப்பொங்கல் நம்மனத்துக்கும் புதுயீடுதான். பொங்கல்நல்வாழ்த்தும் வணக்கமும்! Cheers!!

பழமைபேசி.

1/07/2020

போராட்டம் வெட்டிவேலை சார்! அப்படியா?!

There may be times when we are powerless to prevent injustice, but there must never be a time when we fail to protest 
- Elie Wiesel.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே பேச்சுரிமையும் அதன்வழி மேற்கொள்ளப்படும் போராட்டவுரிமையும்தான். எங்கெல்லாம் போராட்டம் மறுக்கப்படுகின்றதோ, கீழ்மைப்படுத்தப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்களாட்சிக் கோட்பாடு தோற்றுக் கொண்டிருக்கின்றதென்றே பொருள். அப்படியானால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து குறைகூறவே கூடாதா? கூறக்கூடாதுதான். ஏனென்றால், ஒருவனுக்கு எது குறித்தும் போராடுவதற்கு முழு உரிமையுண்டு என்பதுதான் அரசியல் சாசனம். 1966 பன்னாட்டுக் குடிமை, அரசியலுரிமைக் கோட்பாட்டு(ICCPR) உடன்படிக்கையில் ஏராளமான நாடுகள் பங்கு கொண்டுள்ளன. தத்தம் நாட்டு அரசியல் சாசனத்திலும் இதற்கான உரிமைகளைக் கொடுத்தேயிருக்கின்றன. வேண்டுமானால், போராட்டத்துக்கான காரணத்தை கேள்விக்குள்ளாக்கலாம். அது எதிர்த்தரப்பின் உரிமையாகக் கருதப்பட வேண்டும். இருந்தும், சில போராட்டங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதும் உண்டு. எனவே, அதற்கான உளவியற் பின்னணி குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

அடையாளப்போலிகள்: உரிய கொள்கை, கோட்பாடு, அவற்றின்பாலான பற்றுதல் இருப்பவர்கள் அதனதன் இயக்கங்களில், அமைப்புகளில், கட்சிகளில் பங்கேற்று தொடர்ந்த பங்களிப்பினைத் தத்தம் அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் கொடுத்து வருவர். அப்படியல்லாதோருக்கு, அவ்வப்போது தம்மீதான மதிப்பீட்டின் மீது ஐயமேற்படும். தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தம் இருப்பினை வெளிக்காட்டிக் கொள்ளவும் ஏதொவொன்று தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் போராட்டம் ஒரு கருவியாக எடுத்தாளப்படுகின்றது. நாட்டைக் காக்கின்றேன், மொழியைக் காக்கின்றேன், பண்பாட்டைக் காக்கின்றேனெனப் போராட்டங்கள் நடத்துவதும் பணம் திரட்டுவதுமெனக் கிளம்பிவிடுவர். போராட்டம் எனும் கூற்றினைச் சிதைக்க வேண்டுமென்பதற்காயும் செயற்படுவோர் உண்டு.

பிறநலம்நாடிப்போலிகள்: எந்தவொரு விழிப்புணர்வுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாமல் ஆட்டுமந்தையினுள் மற்றுமொரு ஆடெனச் சாமான்யனினும் பிறிதாய் இருந்து கொண்டிருப்போருக்குத் தம்மீதான நம்பிக்கைகூட இருந்திராது. ’அவர் சொல்கின்றார், செய்யாவிடில் அவரது நட்புப் பறிபோகும்; அறிவார்ந்த அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்; இதைச் செய்தால் அது கிடைக்கும்’ போன்ற காரணங்களுக்காகப் போராட்டத்தின் காரணத்தினையே அறியாமற் செயற்படுவது.

ஒட்டுண்ணிப்போலிகள்: தத்தம் வலுவைக் காண்பிக்கவும் தலைவராக உருவெடுக்கவும் நிலைநாட்டிக் கொள்ளவும் வேண்டும். அதிகாரசக்திக்கும் வணிகசக்திக்கும் ஊன்றாய் இருந்திடல் வேண்டும். மடைமாற்றுப் போராட்டங்களின் வழி, ஒரே கல்லில் இரு கனிகள் கிடைக்குமுகமாய்ப் போராட்டங்கள் வழியாகத் தன் படைகளைக் கொள்தல்.

போக்கிடப்போலிகள்: வெறுமையாய் உணரும் போது ஏதோவொடு கொழுகொம்பு தேவையாய் இருக்கின்றது. கூட்டமாக வாழ இயைந்தவன் மாந்தன். அந்நிலையில், களிப்புக்காகவேணும் பங்கு கொள்வது. எதிர்விளைவுகளென ஏதேனும் தென்பட்டால் மட்டுப்படுத்திக் கொள்வது அல்லது பின்வாங்கி விடுவது.

ஏதுபெறுப்போலிகள்: வெற்றியெனும் தருவாயில் தம்மையும் இணைத்துக் கொள்வது. அல்லது, வெற்றியெனும் பிம்பத்திற்காகவே அதிகாரமயத்தோடு இணைந்து நடத்தப்படும் போராட்டங்களில் பங்கு பெறுவது. சட்டத்தை திரும்பப் பெறச் செய்யும் போராட்டத்தில், சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமாயென விவாதிக்க அதிகாரமயம் கூடுகின்றதென்பதைத் தெரிந்து கொண்டு வெகு ஆர்ப்பாட்டத்துடன் களமிறங்கிச் செயற்படுவது.

இப்படியான உளவியலோடு போராட்டத்தைக் கையிலெடுப்பவர்கள்தாம் போராட்டவுரிமைக்கே வேட்டு வைப்பவர்கள். இந்த எதிர்த்தரப்பினர், இத்தகைய உளவியலோடுதாம் அவர்கள் செயற்படுகின்றனரெனும் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; ஏனென்றால் அவர்களின் ஆழ்மனத்தில் என்னமாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை அறியாததாக இருப்பர். அல்லது, திட்டமிட்டே உள்நோக்கத்தோடு செயற்படுத்தும் கூர்நோக்கர்களாய் இருப்பர்.

சமுதாய, குடிமைநலம் போற்றிடப் போராடும் முதற்தரப்பினர், இவர்களை எதிர்த்தும் போராட வேண்டிய நிலைக்கு ஆட்பட்டிருக்கின்றனர். ஏனென்றால், கொள்கைவழிப் போராட்டங்கள் இத்தகு போலிப்போராட்டங்களால் நீர்த்துப் போகவும், சிதைந்து போகவும், கண்டனத்துக்காட்படவும் நேரிடுகின்றது. ஆகவே, போலிகளைச் சுட்டுவது காலத்தின் கட்டாயம்.

போலித்தனத்தின் கருவறுப்புக்கிடையே தத்தம் கொள்கைவழிப் போராட்டங்களையும் முனைப்போடு ஒரு மாந்தன் ஏன் முன்னெடுக்க வேண்டும்? அதன் தேவை என்ன??

விழிப்புணர்வு: எல்லாக் குடிமக்களுக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்கின்ற அவசியமில்லை. அத்தகு சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வுக்காகவேணும், கவன ஈர்ப்புக்காகவேணும் போராட்டங்களை, இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

மக்கள்சக்தி: ஒவ்வாத சட்டங்களோ, பழக்கவழக்கங்களோ தலையெடுக்கும் போது, அதற்கான எதிர்வினையென்ன என்பதை ஒருமுகப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை எந்தவொரு சமூக ஆர்வலனுக்கும் உண்டு. அதற்காகவேணும், ஓர் ஊர்வலத்தையோ, கூட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.

ஒற்றுமைப்படுத்தல்: மாந்தனையப் பெருவெள்ளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்புநலம், கூறுகள், விருப்பு வெறுப்புகள், கலைநயம் போன்றவை இருக்கும். எடுத்துக்காட்டாக, மூன்றாம் பாலினம் என வைத்துக் கொள்வோம். பெருவெளியில் எங்கெங்கோ ஒருவர் இருக்கக் கூடும். அப்படியான ஒருமித்தவரின் ஒற்றுமைக்குப் போராட்டங்கள், இயக்கங்கள் தேவையாக அமைகின்றன.

ஒருங்கிணைவு: செயலூக்கம் பெறவும், மேன்மை கருத்திச் செயற்படவும் ஆங்காங்கே இருப்போர் ஓரிடத்தில் சங்கமித்து கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளப் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

தீர்வுபெறல்: எல்லாப் போராட்டங்களும் எல்லாக் காலங்களிலும் வெற்றியை ஈட்டிக் கொடுக்குமெனச் சொல்ல முடியாது. ஆகவே, மாற்றுத்தீர்வு குறித்து ஆயவும் அதற்கான படிப்பினையைப் பெறவும் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

இத்தகு தேவைகளுக்கும் அப்பாற்பட்டு, ஒருவர் ஏன் போராட்டவுரிமையை வலியுறுத்தியும், போராட்டவுரிமைக் கொச்சைப்படுத்துதலை எதிர்த்தும் செயற்பட வேண்டும்??

போராட்டவுரிமை என்பது ஒவ்வொரு மாந்தனின் அடிப்படை அரசியலுரிமை, குடியுரிமையாகும். மக்களாட்சித் தத்துவம் தழைத்தோங்க எதிர்க்குரலும் எதிர்வினையும் இருந்தேயாகவேண்டும். மனிதனுக்குத் தன் ஆற்றாமையை இறக்கி வைக்க ஏதோவொரு வடிவில் ஓர் இடம் இருந்தே தீர வேண்டும்; அல்லாவிடில் அடிமைத்தனத்துக்கே அது வழிவகுக்கும். சமூகத்தில் வெகுவாகத் தெரிந்திராத சில பல பிரச்சினைகளை வெளிப்படுத்த போராட்டங்கள் ஏதுவாகும். எந்தவொரு மேன்மையும் மாற்றத்தினைக் கொண்டே இடம் பெறுகின்றது. அத்தகைய மாற்றங்களுக்குப் போராட்டங்கள் வித்திடுகின்றன. எதிர்மறையான மாற்றங்களை மட்டுப்படுத்துகின்றன. பாரதூர விளைவுகளைச் சார்ந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு இடையேயான ஒற்றுமைக்கு வித்திடுகின்றது போராட்டம். அதிகாரவரம்புமீறல், கொடுங்கோன்மை, முறைகேடு போன்றவற்றை அம்பலப்படுத்துகின்றன போராட்டங்கள். அரசு, அமைப்பு, நிறுவனங்கள் போன்ற குடிமை மையங்களுக்கிடையேயான சீரின்மையைக் களைந்து நல்வழிக்கு வித்திடுகின்றன போராட்டங்கள். எதிர்முகாம், மாற்றுமுகாம், பிறர்மனது என மற்ற சமூகச் சிந்தனைகளையும் இணக்கத்தையும் இனம் காணச் செய்கின்றன போராட்டங்கள். எதையுமே செய்யாமல் குறைசொல்லிக் கொண்டிருப்பதற்கு மாற்றாக, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இட்டுச் செல்கின்றது போராட்டவடிவம்.

உலகின் எந்தநாட்டு மூலையிலிருந்தாலும், அவரவருக்கான சவால்களும் பிரச்சினைகளும் அல்லல்களும் இருந்தேதானிருக்கும். சோர்ந்திருந்து, குறைசொல்லிப் புலம்புவதாலும் நம்பிக்கையிழந்து போய் இருப்பதாலும் மேன்மை கிட்டிவிடாது. தரக்குறைவான அரசியல், முறைகேடு, ஊழல், தடித்தனம், காமுகத்தனம், வெறுப்பியக்கம், பிரித்தாளும் போக்குயென எல்லாமும் இருக்கும்தான். இவையெல்லாம் இயல்பானதே. எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்; ஒவ்வொரு குடிமகனும் இவற்றை இனம் கண்டு தத்தம் கடமையைச் செய்ய முற்படும்போது. தீர்வு கிட்டியே தீரும். தலைவர்கள், கொள்கை கோட்பாடு கருதிச் சித்தாந்தங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். அவற்றின்வழிப் பயணிக்க முற்படும் தருவாயில் நமக்கான தீர்வு அமைந்தே தீரும். உணர்வுகளுக்கு முந்தையதாக சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடல் வேண்டும்.

ஒரு மனிதனின் மதிப்பீடு, அளவீடு என்பது அவன் வசதியாகவும் இன்பத்தோடும் இருக்கும் போது பெற்றிருப்பது அல்ல. மாறாக, சவால்களை எதிர்கொள்ளும் போதும் போராட்டங்களுக்கு ஆட்படும் போது எத்தகையவனாய் இருந்தான் என்பதேயாகும். குரல்கொடுக்க வேண்டிய இடத்துக் குரல் கொடுத்தானா? செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலாற்றினானா?? சீராகப் பணி செய்கின்றானா?? இவைதாம் மனிதனின் மாண்புகள்.

போராடுவதென்பது நம் கலாச்சாரம் பண்பாடு இனத்தின் கூறா, அல்லவாயென்பதல்ல; மாறாக, போராடுவதென்பது எந்தவொரு உயிருக்குமானதான அடிப்படைத் தேவை. அதற்கு செவிமடுப்பதும் மதிப்பளிப்பதும் நல்லதொரு மனிதனுக்கு அழகு. குரல் கேட்கப்பட வேண்டும்! கொள்கை தரிப்போம்! உரிமை கொள்வோம்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.

காடடையும் படைக்குருவிகள்

தென்னிந்தியாவின் மான்செச்டர் என அழைக்கப்பட்டது கோயமுத்தூர் மாநகரம். ஒன்றிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில்தாம் ஏராளமான நூற்பாலைகள் இருந்தன. அந்த நூற்பாலைகளின் உற்பத்தியின் தேவைக்கேற்ற பருத்தி சாகுபடியும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இடம்பெற்று வந்தது. இந்த சூழ்நிலையில்தாம் 1980ஆம் ஆண்டு வாக்கில் என்றுமில்லாதபடிக்கு பருத்தியின் பூக்களும் காய்களும் புதுவிதமான புழுக்களால் சூறையாடப்பட்டன. மாலையில் பருத்திக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய விவசாயி, காலையில் காடெங்கும் உதிர்ந்தும் சிதைந்துப் போனதைக் கண்டு மனம் வெதும்பினான். இரவோடு இரவாக ஒரு பூ, காயைக்கூட விடாமல் தின்றுவிட்டுக் கொழுத்துக் கிடந்தன ‘புரோட்டினியா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் புழுக்கள். கடன் வாங்கிப் பயிரிட்டு, பேணிவளர்த்து, அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் பல தூக்கிட்டுக் கொண்டனர்.

பறக்கும் பூச்சிகளில் இருந்துதாம் புழுக்கள் உருவாகின்றனயென்பதைக் கண்டு கொண்ட வேளாண் அறிஞர்கள் இனக்கவர்ச்சிப் பொறியைக் கண்டுபிடித்து ஏக்கருக்கு இத்தனை பொறிகள் என அமைத்தனர். இரவு நேரத்தில் பொறியில் எரியும் விளக்கின் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்பட்டு அதிலிருக்கும் புனலில் வீழ்ந்து மடிந்தன அத்தகைய பூச்சிகள். இருந்தாலும் நிலைமை கட்டுக்கடுங்கவில்லை. பருத்திக் காடுகள் சுடுகாடுகள் ஆகிக் கொண்டிருந்தன. விபரமறிந்த விவசாயிகள் பருத்திக் காடுகளுக்குள் ஆழமாக வாய்க்கால்கள் வெட்டினர். புழுக்கள் அத்தகைய வாய்க்கால்களுக்குள் விழுந்து மறுபக்கம் செல்ல ஊர்ந்து போகத்தலைப்படுகையில் செறிவாக குழிகளுக்குள் காணப்பட்டன. அவற்றையெல்லாம் சாக்குப்பைகளில் சேகரம் செய்து காட்டுக்கு வெளியே கொண்டு போய்க் கொட்டித் தீவைத்துக் கொழுத்தினர். என்றாலும் அவற்றின் சூறையாடல் நின்றபாடில்லை. அந்த நேரத்தில்தாம் எங்கிருந்தோ வந்தன படைக்குருவிகள். கண்ணிமைக்கும் நேரத்தில் காடெங்குமிருந்த புழுக்களை கொத்திக் கொண்டு போயின அவை. விவசாயி பெருமூச்சு விட்டான். பின்னாளில், இத்தகைய காய்ப்புழுக்களை அழித்தொழிப்பதற்கென்றே சிறப்புக் கொல்லிமருந்துகள் சந்தைக்கு வந்து சேர்ந்தன. எனினும், இன்றும் இந்த படைக்குருவிகளின் பங்கு தனியொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

புளோரிடா மாகாணத்தில் ஓர்லேண்டோ நகரில் பணியும் சிண்டி எனும் பெண்மணிக்குக் கடந்த இருநாட்களாக இதே சிந்தனை அவ்வப்போது வந்து போகின்றது. ”தன் வீட்டுக்கு அருகேயிருக்கும் பிறிதொரு வீட்டில் இருக்கும் அந்தக் குழந்தையைக் கடைசியாக நான் எப்போது பார்த்தேன்? அவள் ஏன் முன்னைப் போல வெளியே விளையாடவே வருவதில்லை??’, இப்படியான வினாக்கள் வந்து போய்க்கொண்டே இருந்தன. வீட்டில் தனியாக வசிக்கும் சிண்டி, அவ்வப்போது வீட்டு முன்றலில் இருக்கையைப் போட்டமர்ந்து அண்டை வீட்டுச் சின்னன்களின் விளையாட்டுகளைப் பார்த்து இன்புறுவது வாடிக்கை. அதன்நிமித்தம்தான் இந்தச் சிக்கல். ஒருகட்டத்தில், தயக்கத்தையும் தம் மனத்தடையையும் விட்டொழித்து ஊக்கத்துடன் சென்று அந்த வீட்டிலிருப்பவர்களிடம், அந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்கின்றார் சிண்டி. கிடைத்த மறுமொழிகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. ஐயமுற்றவர், அவர்களுடைய கார்களையும் வீட்டையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக உணர்ந்தார். உடனே, 9-1-1, அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்து, கடந்த ஒரு மாதமாகவே அக்குழந்தையைத் தாம் கண்ணுறவில்லையென்றும், வீட்டாரைக் கேட்டால் மழுப்புகின்றார்களென்றும் கூறி அழுதார். குழந்தையின் அழகையும் அறிவையும் தாம் மிகமிக மதித்துப் பார்த்துக் கொண்டிருந்த நாட்களைச் சொல்லிப் புலம்பினார் சிண்டி.

சட்டம் ஒழுங்கு அலுவலர்களும், துப்பறியும் அலுவலர்களும் தத்தம் விசாரணையை மேற்கொண்டனர். அவர்களுக்குக் கிடைத்த பதில்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. 2008ஆம் ஆண்டு ஜூலை பதினைந்தாம் நாள் பதியப்பட்ட முறையீட்டின் நிமித்தம், 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தச் சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணைகளும், நீதிமன்ற நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்தன. 2008ஆம் ஆண்டு ஜூன்மாத வாக்கில் குழந்தையை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டனர் என்பதாக முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக, நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்து போனதாகவும், அதன்பின்னர் குடும்பத்தினர் அவர்களின் வீட்டுப் பிறவடையில் வைத்துத் தகனம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இரு மாதங்களுக்குப் பின்னர், குழந்தையின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2011ஆம் ஆண்டு வரையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளும் விசாரணைகளும் இடம் பெற்றன. விசாரணை அலுவலர்கள், உரிய சான்றுகளைக் கட்டமைப்பதில் வெகுவாகத் திணறினர். கடைசியாக, 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து கொண்டிருக்கின்ற படைக்குருவிகள் கொந்தளித்துப் போயின. இந்த படைக்குருவிகள், மனிதகுலத்துக்கு இன்னல் நேரும் போதெல்லாம் குரல் கொடுப்பர். அவர்கள் இந்த ஊரில், இந்த மாநிலத்தில், பொதுவாக ஒரு இயக்கத்தின்பாற்பட்டோ, கட்சியின்பாற்பட்டோ, அமைப்பின்பாற்பட்டோ இயங்குபவர்கள் அல்லர். அவர்கள் எல்லாருமே சாமான்யத் தனிமனிதர்கள், எளியனும் எளியர்கள். தன் பசியாற்ற, தன் குடும்பத்தின் பசியாற்ற, ஐந்துக்கும் பத்துக்குமாக உழைக்கும் பொதுமனிதர்கள்தாம் அவர்கள்.

குழந்தையின் சாவுக்கு இவர்கள்தாம் காரணமென அலுவலர் தரப்பினால் நிறுவமுடியவில்லை. விசாரணையின் போது, முன்னுக்குப்பின் முரணாகப் பொய் சொன்னது மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. அதன்நிமித்தம், கொலைக் குற்றச்சாட்டிலிருந்து முற்றுமுழுதுமாக விடுதலை செய்யப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். படைக்குருவிகளால் தாங்கமுடியவில்லை. ஒரு குழந்தை யாதொரு காரணமுமின்றி நம்மிலிருந்து விடுபட்டுப் போயிருக்கின்றார். இன்னொரு குழந்தை இதுபோன்ற நிலைக்கு ஆட்படாமலிருக்கச் செய்வது நம் வேலையென வெகுண்டெழுந்தனர்.

தனிமனிதர்கள்தாம். ஒத்த மனநிலை கொண்டோரிடம் செய்தியைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். தத்தம் மனக்கொந்தளிப்பினை வெளிப்படுத்தினர். ஒன்றுகூடி குரலை வெளிப்படுத்தினர். ஆக்ககரமான உரையாடலை மேற்கொண்டனர். உரிய சட்டங்கள் வரவேண்டுமென ஆர்ப்பரித்தனர். விளைவு, கேய்லிச்சட்டம் (caylee's law) அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தை இறந்து போனால், ஒருமணி நேரத்துக்குள்ளாக உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், குழந்தையின் பெற்றோர், வளர்ப்புப் பொறுப்பாளர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆவர். குழந்தை காணாமற்போனால், 24 மணி நேரத்துக்குள் உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், பெற்றோர்/பொறுப்பாளர் தண்டனைக்குரியவர் ஆவார்.

அமெரிக்காவில் எத்தனையோ சட்டங்கள், பாதிக்கப்பட்டவரின் பெயராலேயே இடம் பெற்று வருகின்றன. அல்லாவிடில், படைக்குருவிகள் சும்மாயிருப்பதில்லை. அதுதான் அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.

படைக்குருவியில் ஒரு குருவியாக இருக்க நமக்குத் தடையாக இருப்பதுதான் என்னவோ?!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.