அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!
இன்றைய ஊடகங்களில், வஞ்சகக் காதலும் அதன் நீட்சியான வஞ்சனைக் கொலைகள் பற்றிய செய்திகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடம் பிடித்து வருகின்றன.
பெரும்பாலானோர் வருத்தத்தோடு சொல்வது, போதிய கல்வி அறிவின்மை, காதலுக்குத் தரும் முன்னுரிமையை அதை ஒட்டி வரும் காமத்திற்குத் தர முன்வராதது, காமம் பற்றிய அறிவின்மை, நமது பண்பாட்டில் போதிய மாற்றமின்மை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இங்கேதான் நாம் அவற்றில் இருந்து சற்று மாறுபடுகிறோம். ஏன்? அன்பையும், அறத்தையும் ஏட்டிலிருந்தோ, சட்டத்தின் மூலமாகவோ, அல்லது பண்பாட்டை மாற்றி அமைப்பதன் மூலமாகவோ ஒருகாலும் நிலைநாட்ட முடியாது.
Love stands far away from Lust! காதல் என்பதற்கும் காமம் என்பதற்குமான இடைவெளி வெகு அதிகம். அப்படியானால், காதலின் நீட்சியானது என்னவாக இருக்க முடியும்? இங்கேதான் தமிழின் சிதைவானது நம் கண்களுக்குப் புலப்படாமலேயே போகிறது.
காமம் வேறு; மோகம் வேறு! காமத்தைச் சிந்துபவன் காமுகன்; மோகத்தைச் சிந்துபவன் மோகன்! காதலின் நீட்சி மோகிப்பது; காமத்தின் நீட்சி மாச்சரியம்!! அன்பால் உருக்கிப் புணர்வது மோகம். உணர்ச்சியால் மட்டும் உருக்கிப் புணர்வது காமம். மோகத்தின் ஒருபாதி உள்ளடக்கம் காமம்.
சரி, அப்படியானால் எந்தவொரு சாமான்யனும் காமவயப்படுவது இல்லையா? காமவயப்படுவது யதார்த்தம். அவ்வயப்பட்டு இடறிப்போவது அனர்த்தம்! இது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மனக்கட்டுப்பாடு தேவைப்படுகிறது.
காமுகனை மிருகம் என்றார்கள். மோகத்தை வெளிப்படுத்துகையில் கொஞ்சு புறாவே என்றார்கள். ஏன்? பறவை இனத்துள், கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுக்கு மேலானவை ஒருமிகள். விலங்குகள் அப்படியானவை அல்ல! ஒருமிகள் என்றால்? ஒருத்திக்கு ஒருவனாய் / ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பவை பறவைகள். பகுத்தறிவற்ற பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தியாய் இருக்கின்றன. இதுதான் அறிவியல்ப்பூர்வமான உண்மை.
அதே வேளையில், பகுத்தறிவுள்ளவனுக்குப் பாலியல் கற்றுத் தருவதும் அவசியமே! பழங்காலத்துக் கோவில்களிலும், கல்வெட்டுகளிலும் முன்னோர் அதைத்தான் செய்தார்கள். அதே வேளையில், கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டார்கள்.
சரி, பாலியல் குறித்தான் அறிவின்மைதான் இக்கொலைகளுக்குக் காரணமா? அப்படியானால், காமத்தை அறியாதவர்கள்தான் இக்கொலைகளைச் செய்கிறார்களா?? அப்படி அல்ல என்பதுதானே உண்மை. இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே மணமானவர்கள்.
கள்ளக்காதல்? ஏதோ ஒன்றை மறைவாகச் செய்வது கள்ளத்தனம்! ஒரு மாணவனும், மாணவியும் பிறர் அறியா வண்ணம் புரிவது கள்ளக் காதல். மணமானவர்கள் புரிவது கள்ளக் காதலா?? அது வஞ்சகக் காதல். தன்னை நம்பி வாழ்க்கைக்குள் வந்தவரை வஞ்சித்துச் செய்யும் காதலது!!
இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிகழும் அனர்த்தம் அல்ல; உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னுஞ் சொல்லப் போனால், அமெரிக்காவில்தான் கிட்டத்தட்ட 40% பேர், வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இத்தவறைச் செய்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சென்ற தலைமுறையினரோடு ஒப்பிடும் போது, பெருமளவில் குறைந்து கொண்டு வருவதாகச் சொல்கிறது ஆய்வுகள்.
குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?? சமூகத்திலே, அப்படியானவர்களை இனங்கண்டு அடையாளப்படுத்தத் துணிந்தார்கள். பதவி இழந்த அரசியல்வாதிகள், வாய்ப்பிழந்தவர் வரிசையில் விளையாட்டு வீரர்கள், திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள்.... என எண்ணற்றோர்.
கலை, இலக்கியம், ஆன்மிகம், விளையாட்டு முதலானவற்றில் மணவாழ்க்கையின் போதான விசுவாசத்தைச் சிலாகித்துப் படைப்புகள் படைத்தார்கள். அறம் என்பது சொல்லித் தெரிவதில்லை; நடைமுறையில் மட்டுமே வரும்! Practicing is better than preaching!!
சென்ற வாரம் கூட, Blue Cross Blue Shield எனும் நிறுவனத்தில் யாருக்கோ பிறந்த நாள். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டு வருகிறார்கள். ஒருவர் எழுந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். எப்படி??
”I am Tom Verego, married to Darlene Verego for 36 years!”, எனச் சொல்லி அமர்கிறார். கரவொலி விண்ணை முட்டுகிறது. அதற்காக, மணமுறிவு கொண்டோரைத் தரம் தாழ்த்துகிறார்கள் என்பது அல்ல. ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பதைப் பெருமையாய் நினைப்பதைத்தானே இது சொல்கிறது?!
இத்தனைக்கும் மேலாக, பெரும்பாலான நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சட்டம்தான். மணமான ஒரு பெண்ணை, அப்பெண்ணின் இசைவோடு காமத்திற்கு உட்படுத்தியிருந்தாலும் அது சட்டப்படிக் குற்றம்.
Adultery (முறையற்ற உறவு)க்கு மிச்சிகனில் ஆயுள் தண்டனை என்றால், இந்தியாவில் பிரிவு 497ன் கீழ் ஐந்து ஆண்டுகள் தண்டனை. தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு எவ்விதத் தண்டனையும் இராது. ஆணுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். (கண்ணுகளா, நாம பார்த்து இருந்துக்கலாமப்பூ...)
மேலும், இது வஞ்சகக்காதல் ஆகாதென வாதிடுவோர் பலர் இருக்கக்கூடும். கட்டிய மனைவி அல்லது கணவனின் கவனத்திற்கு உட்பட்டுச் செய்தால் அது வஞ்சகக் காதல் அல்லதான்! கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுச் செய்யும் பட்சத்தில், அது வஞ்சகக் காதலே; எவரும் அங்கீகரிக்கப் போவதில்லை! அங்கீகரிக்கவும் கூடாது!!
வஞ்சகக் காதலின் நீட்சியாய் நிகழும் வஞ்சனைக் கொலைகள் தவிர்க்கப்பட வேண்டுமாயின், மணமுறிவுகள் எளிதாக்கப்பட வேண்டும். ஊடகங்கள், கட்டற்ற சுதந்திரத்தை வரைமுறையோடு பாவித்து, வக்கிரம் மற்றும் வன்முறைப் படைப்புகளைத் தவிர்த்து, அற்ம்(ethics) என்பதைக் கையில் எடுத்தாலொழிய இதற்கு விமோசனமில்லை!!!