11/01/2023

அமெரிக்காவின் அச்சாணி

அமெரிக்காவின் வலு என்பது அதன் இராணுவபலமோ பொருளாதாரமோ அல்ல. அதன் அரசியலமைப்புதான் அதன் அச்சாணி, வலு. பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டிருப்பது அது.

அதில் ஏதாவது திருத்தம் கொண்டு வர வேண்டுமானால், ஒன்றியத்தில் இரு அவைகளிலோ அல்லது மாகாணத்தின் இரு அவைகளிலுமோ மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் பெற்று முன்மொழியப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட திருத்தமானது, ஒவ்வொரு மாகாணத்தின் அவைகளிலும் நான்கில் மூன்று பங்கு(75%) ஓட்டுகள் பெற்று வழிமொழியப்பட வேண்டும். ஏன் அப்படி? போகின்ற போக்கில் எளிதான செயன்முறை கொண்டு, அமைப்பின் அடிப்படை சிதைந்து விடக் கூடாது என்பதற்காக. தனிமனிதர்களின்பால் அல்லாது, நாட்டின் இறையாண்மையின்பாற்பட்டதாக இருக்க வேண்டுமென்பதற்காக!

கூட்டாட்சி, பரவலாட்சி ஆகிய இரண்டையும் ஒவ்வொரு நிலையிலும் கடைபிடிக்கும்படியாக விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன. எப்படி? எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம்.

ஒன்றிய மாகாண அவையில், மாகாணத்துக்கு இருவரென மொத்தம் 100 பேர். ஏதோவொரு மீச்சிறு மாகாணம். அதன் உறுப்பினர்களுள் ஒருவர், ஒரு தரப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார். தனியாள் அவர். மொத்தமே 30 ஆயிரம் பேர் கொண்ட மக்கள்தாம் அவர்கள். பரந்துபட்ட நாட்டில் அவர்களுக்கான கவனிப்பு கிடைக்கவில்லை. மீச்சிறு தொகை என்பதால் கவனிப்புக் கிட்டாமல் போக வாய்ப்புகளுண்டு. என்ன செய்யலாம்?

அந்த உறுப்பினர் அவையில் முட்டுக்கட்டளை(filibuster)யைக் கையிலெடுக்கலாம். முக்கியமான சட்டவரைவு நிறைவேற்றும் வேளையில், பேச வாய்ப்புக் கோருகின்றார். அல்லது அந்த முன்னெடுப்புக்கு ஆதரவுப் பேச்சு அல்லது எதிர்ப்புப் பேச்சு என்கின்ற வகையில் பேசத் துவங்குகின்றார். பேசிக் கொண்டே இருக்கின்றார். தலைவர் பேச்சை முடிக்கக் கோருகின்றார். தாம் முட்டுக்கட்டளையைக் கையிலெடுத்திருப்பதாய்ச் சொல்கின்றார். அதாவது, நெட்டுரைஞராக 30 மணி நேரம் வரையிலும் பேசிக் கொண்டிருப்பார். தலைவர் அனுமதித்தாக வேண்டும். வேறு வழியில்லை, அவருடன் பேசி, தீர்வு கண்டுதான் முட்டுக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அல்லது 60% உறுப்பினர்களுக்கும் மேல் கூடி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இது அரசியல் சாசனத்தின் ஒரு கூறு. ஏன் அப்படி? நாட்டில் இருக்கிற ஒவ்வொரு தரப்பும் கவனிக்கப்பட்டாக வேண்டுமென்பதுதான் அடிப்படை.

இப்படியாகப்பட்ட விழுமியம் பொருந்திய நாட்டில் இருந்து கொண்டு, 25 பொதுக்குழு உறுப்பினர்கள், 80+ உறுப்பினர்கள் எனச் சேர்ந்து முன்னெடுக்கும் முன்னெடுப்புகள் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன. எதேச்சதிகாரமன்றி வேறென்ன? அயர்ச்சியாக இருக்கின்றது. நல்ல கல்வியுடன் புலம் பெயர்ந்திருக்கின்றோம். நம்மைச் சாவு எப்போது தழுவுமெனத் தெரியாது. வந்திருக்கும் இடத்திலும் அம்மண்ணின் விழுமியத்தைப் பாழாக்கத்தான் வேண்டுமா? நாம் மரிப்பினும் நம் சுவடுகள் இருந்து கொண்டே இருக்கும்; எப்படி வாழ்ந்தோம் என்பதைச் சொல்லிக் கொண்டு!


10/13/2023

செயன்முறை(process)

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறைய நிறுவன நிர்வாகிகள் மன அழுத்தத்திலும் கவலையிலும் இருப்பது தெரிய வந்தது. தொழில், நிறுவனம், அமைப்பு, பள்ளி என எதுவாகினும் அதனை நிர்வகிக்கும் போது அது தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் நினைவில் வந்து வந்து போகும்தானே? உளவியல் அறிஞர்களை நாடினர்.

ஓர் ஒழுங்கினைக் கட்டமைத்தார்கள். அன்றாடமும் மாலையில் வீட்டுக்குச் செல்லும் முன்பாக சக அலுவலர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தக் கூட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் எழுதச் சொன்னார்கள். அவற்றை வரிசைப்படுத்தச் சொன்னார்கள். வரிசையின் அடிப்படையில் அதற்கான தீர்வுகள் இன்னின்னதென அடையாளம் காணப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெறச் செய்தனர்.

மனிதனின் மனம் என்பது விநோதமானது. எதை நினைவில் கொள்ள வேண்டுமென நினைக்கின்றோமோ அது மறந்து போகும். மறக்க வேண்டுமென நினைப்பது நினைவில் வந்து வந்து எண்ண அலைகளைக் கிளப்பி விட்டுச் செல்லும். இப்படி எழுதி வைப்பதால் மனம் அமைதி கொண்டு விடுகின்றது.

கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்ததினால், அதுவே ஒரு தொடர் இயக்கமாக, ஒழுங்காகச் செயன்முறை வடிவம் பெற்று விட்டது. மனம் அந்த செயன்முறையின் மீது நம்பிக்கை கொள்ள விழைந்தது. நிறுவனத்தின்பாற்பட்ட நல்லது, கெட்டது எல்லாமுமே அந்தச் செயன்முறை பார்த்துக் கொள்கின்றது என்பதான நிலைப்பாடு மனத்தில் குடிகொண்டு விட்டதினாலே, வீட்டுக்குச் செல்லும் நிர்வாகிகளின் மனப்பதற்றம், கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, புத்துணர்வுடன் மேலும் செயலூக்கம் கொண்டவர்களாக மாறினர்.

நம் தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் நம் மனத்தை நிர்வகிக்க(மேனேஜ்)த் தலைப்பட்டவர்களே. இருக்கும் கவலைகள், பிரச்சினைகள், சவால்கள், திட்டங்கள், பணிகள் முதலானவற்றை வாரத்துக்கு ஒருமுறையாவது எழுதப் பழக வேண்டும். எழுதினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும். பிற்பாடு அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டடையலாம். ஒழுங்கின் மீது நம்பிக்கை பிறக்கும். கவனமின்மை, கவலைகள், பலவாக்கில் யோசித்துக் கிடப்பதெல்லாம் படிப்படியாக மங்கும். மனதில் உறுதி பிறக்கும். காலத்தை முழுமையாக அனுபவிக்கத் தலைப்படுவோம்!

A problem well stated is a problem half-solved.-Charles Kettering

-பழமைபேசி.

9/16/2023

வானமே எல்லை, இல்லை, வானத்துக்கு அப்பாலும்


சிதிலமுற்ற கூட்டில் ஒரே ஒரு முட்டை இருப்பதைக் கண்டார் உழவர். சுற்றுமுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய மட்டிலும் பறவைகளைக் காணோம். குஞ்சுகுளுவான்களைக் காணோம். முட்டையைத் தொட்டுப் பார்த்தார். வெதுவெதுப்பாய் இருந்தது. ஆக நாட்பட்ட முட்டையும் அன்று. கையிலெடுத்துக் கொண்டு போய், பண்ணையில் இருக்கும் அடைக்கோழியின் முட்டைகளுள் முட்டையாய் வைத்து விட்டார்.

அடைக்கோழியும் அடை காத்துவர, குஞ்சுகள் பொரிந்தன. இந்தக் குஞ்சுவும் அவற்றுள் ஒன்றாய் தாய்க்கோழியின் பின்னால் திரிந்து, கொத்தித் தின்னப்பழகியது. நடைபோடப் பழகியது. ஓடிச்செல்லப் பழகியது. ஒருபோதும் வானத்தைப் பார்க்கவில்லை. நினைத்தால் வானத்தை அதனால் தொட்டவிடக் கூடிய கழுகுக்குஞ்சுதான் அது. ஆனால் சக கோழிகளைப் போன்றே வாழ்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள், வானத்தைப் பார்த்தது. கழுகொன்று சாய்ந்து சாய்ந்து சாகசம் செய்து கொண்டிருந்தது. இது நினைத்துக் கொண்டது, “நானும் கழுகாகப் பிறந்திருந்தால்”.

நாம் எல்லாருமே அப்படித்தான். நாமும் ஒரு கழுகாய், புலியாய், சிங்கமாய்த்தான் பிறந்திருக்கின்றோம். ஆனால் நாம் யார் என்பதே அறிந்திராமல் மனத்தடையுடன் வாழ்கின்றோம். அடுத்தவரைப் பார்த்துப் பார்த்து வாழ்கின்றோம். நாம் யார்? நாம் நாமாக வாழ்வதில்லை. 

வானத்துக் கழுகைப் பார்த்துக் கொண்டேவும் இது மெல்ல தன் இறக்கைகளை அடித்துப் பார்த்தது. என்ன அதிசயம்? தம்மாலும் மேல்நோக்கிச் செல்ல முடிந்தது. ஆனால் களைப்பு மேலிடவே தாழவந்து தரையிறங்கிக் கொண்டது. வயோதிகம் காரணம். காலங்கடந்த அறிதல். இளமையிலேயே இது தெரிய வந்திருந்தால்? ஆகவே, இளமையிலேயே உங்கள் ஆற்றலை உணர்ந்து செயற்படுங்கள் என்பதாக மாணவர்களுக்கான எழுச்சி உரைகள் மேற்கொள்ளப்படுவதை எங்கும் காணலாம்.

சரிதான். ஆனால் வானமென்ன, வானத்துக்கு அப்பால் செல்லவும் வயது ஒரு தடை அல்லவே அல்ல. 90 வயது முதியவர் ஒருவர், தன்னந்தனியாக ஓர் அறையில் வாழ்ந்து வருபவர். தட்டுத்தடுமாறி, ஓரிரு சொற்றொடர்களாகத் தம் வாழ்க்கையில் கொண்ட பட்டறிவுகளைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வர பெருங்கூட்டமே அவரைப் பின்தொடரத் துவங்குகின்றது. பின்னாளில், பல்கலைக்கழகங்களுக்குப் பகுதிநேர ஆசிரியராக அழைக்கப்படலானார். தம் 90ஆவது வயதில், Joyce DeFauw என்பார், வடபகுதி இல்லினாய் பல்கலைக்கழகத்தில் படித்து தம் பட்டத்தைப் பெறுகின்றார். தம் 96ஆவது வயதில், Nola Ochs (née Hill) என்பார் கன்சாசு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, கின்னசு சாதனையையும் தமக்கானதாக ஆக்கி,  105 வயது வரை வாழ்ந்து  2016ஆம் ஆண்டில் தம் பயணத்திலிருந்து விடைபெற்றுக் கொள்கின்றார். இவர்களெல்லாம் பட்டம் பெற்றதனால் என்ன பயனென வினவலாம். ’வானமேகிட வயது தடையேயல்ல’ என்பதனை நிறுவி இருக்கின்றார்கள்தானே?

“I don't dwell on my age. It might limit what I can do. As long as I have my mind and health, it's just a number.” -Nola Ochs

9/05/2023

மாணவர்களுக்கான ஓட்டுநர் உரிமம்

ஒரு நாட்டிய அரங்கேற்றத்தில் பங்கு கொள்ளச் சென்றிருந்தோம். வழமைபோலவே நம்மவர்களுக்குள் ஒரு கலந்துரையாடல். தம் பிள்ளையின் ஓட்டுநர் காப்பீட்டுக்கு நான்காயிரம் வெள்ளிகள் வரையிலும் செலவு ஆவதாக ஒருவர். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். இஃகிஃகி, பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நாம் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டியது என்றேன். நம்மை நன்கறிந்த நண்பர் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்.

அமெரிக்க வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் தளமாகத் தமிழ் அமைப்புகள் விளங்க வேண்டுமென்பதைத்தான் நாம் இடையறாது சொல்லி வருகின்றோம். மாறாக, ஊர்ப்பழக்கங்களைப் பேசிப் பெருமை கொள்வதிலேயே ஊறித்திளைப்பது பின்னடைவேயென்பது நம் தனிப்பட்ட கருத்து. இதற்காக வாங்காத அடிகள் இல்லை, வசவுகள் இல்லை. நிற்க, பேசுபொருளுக்குள் சென்று விடுவோம்.

வட கரொலைனா மாகாணத்தைப் பொறுத்தமட்டிலும், ஓட்டுநர் உரிமத்துக்கான பயணமென்பது பிள்ளையின் பதினான்கு+ வயதிலிருந்தே துவங்குகின்றது. ஆமாம், பிள்ளையின் ஒன்பதாவது வகுப்பின் போது, பள்ளியிலேயே அரசு உதவியுடன் மலிவுக்கட்டணத்தில் ”ஓட்டுநர் பயிற்றுத்தேர்ச்சி வகுப்பு” நடத்தப்படுகின்றது. இதற்கான கட்டணம் $65. இதையே ஒருவர் பள்ளிக்கு வெளியே எடுக்கத் தலைப்பட்டால் கட்டணம் $450 - $700.

இப்படியான தேர்ச்சிச் சான்றிதழுடன் தம் 16ஆவது வயதில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ”தற்காலிக உரிமம்” பெற்றுக் கொள்ளலாம். சில இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு ஓட்டிச் செல்லும் போது, உரிமம் இருக்கக் கூடிய பெரியோர் உடனிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன். இப்படியான ஒன்பது மாத அனுபவத்திற்குப் பிறகு, கட்டுப்பாடுகளற்ற உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவர்கள் 18ஆவது வயதுத் துவக்கத்தின் போது முழு உரிமம் பெற்றுக் கொள்வர்.

15 - 18ஆவது வயது வரையிலும் இவர்கள் பெற்றோரின் ஓட்டுநர் காப்பீட்டில் பங்கு வகிப்பர். காப்பீட்டுடன் கூடிய தற்காலிக உரிமம்(provisional license) துவங்கிய நாளிலிருந்தேவும் இவர்களது அனுபவக் கணக்கும் துவங்கி விடுகின்றது. இவர்கள் பலகலைக்கழகம் செல்லும் போது, தனி வண்டித் தேவைக்காக காப்பீடு வாங்கும் போது, இவர்களின் காப்பீட்டுத் தொகை மற்றவரை விடக் குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், 3 ஆண்டு அனுபவத்தின் பொருட்டு சலுகை, அனுபவமற்றோருக்கான மேல்வரியின்மை(No Inexperienced Driver Surcharge) என்பனவெல்லாம் காரணம்.

இந்த வழிமுறையில் பங்கு பெறாமல், 17/18ஆவது வயதில் ஓட்டுநர் உரிமம் பெறத் தலைப்படும் போது, பெற்றோரின் காப்பீட்டில் பங்கு பெறாமல், தனிக்காப்பீடு(Inexperienced Driver Surcharge, increased premium, no discount) பெற்றுத்தான் வண்டி ஓட்டியாக வேண்டும். அதன்பொருட்டுக் கூடுதல் பணமும் செலவளிக்கத்தான் வேண்டும். https://www.ncdot.gov/dmv/license-id/driver-licenses/new-drivers/Pages/graduated-licensing.aspx

-பழமைபேசி. 09/05/2023.

9/02/2023

நீ என்னை நினைவுகொள்வது

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
உன்னில் நான் என்னவாக
உனக்கு நான் யார்
என்பதையெல்லாம்
ஏந்திச் செல்கின்றாயென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
உன்னில் என்னால் ஏற்பட்ட சுவடு
யாராக நீ இருக்கின்றாயோ அந்த உன்னில் 
நான் வந்துபோன தருணம்
என்பதையெல்லாம்
சுமந்து கொண்டிருக்கின்றாயென்பதுதான்

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
மாமாங்கம் பல
ஆண்டுகள் பல
மைல்கள் பலப்பல
நமக்குள்ளே இடைவெளி ஏற்பட்டிருப்பினும்
உன்னால் என்னைத் திரும்பவும்
அழைத்துக் கொள்ள முடிகின்றதென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நீயும் நானும் மீண்டும்
எதிர்கொள்வோமேயானால்
அடையாளம் கண்டுகொள்ளப்பட
உன்னில் நானாகவே
புகுவேனென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் மரணமே அடைந்திருந்தாலும்
என் முகம்
என் பேச்சு
என் குரல்
என் எழுத்து
உன்னில் மேலிட
என்னுடன் நீ
பேசிக்கொண்டிருக்கின்றாயென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் என்னை
எப்படியாகவோ
எதற்காகவேனும்
முற்றுமுழுதுமாய்
இழந்திருக்கவில்லையென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் சோர்ந்துசோர்ந்து
என்னில் நானே
தொலைந்து கொண்டிருக்கையில்
உன்னில் நானென்பது
என்னை மீட்டெடுத்துவிடுகின்றதென்பதுதான்!

ஒருவேளை நீ
என்னை மறந்துவிடுவாயெனில்,
நான் என்பதில் கொஞ்சம்
நான் என்பதில் கொஞ்சம்
என் இருப்பில் கொஞ்சம்
என் இருப்பில் கொஞ்சம்
மரித்தே போகின்றது!
எல்லாரும் மறந்துவிடுகின்ற நாளில்
செத்தே போகின்றேன் நான்!!

-பழமைபேசி

(தாக்கம்: Whistling in the Dark, Frederick Buechner)


8/28/2023

சங்கம்

இந்த வார ஈறு ஓர் அக்கப்போரில் கழிந்தது. என்னவெனில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் நிகழ்ந்தது. பிள்ளைகளுக்கு வயலின் வகுப்பு இருந்ததால், நண்பரின் அழைப்புக்குப் பணிய முடியவில்லை. அதன் பதிவு பிறகு கிட்டியது. கேட்டதுமே எனக்குக் கடும் சினம்தான் மேலெழுந்தது. அப்படி என்ன இடம் பெற்றது?

முன்னாள்தலைவர், உறுப்பினர் சேர்க்கையைப் பற்றி வினா விடுக்கின்றார். அதற்குரிய குழுத்தலைவர் அவர் தரப்புக் கருத்துகளைச் சொல்கின்றார். இடையில், அக்குழுவின் துணைத்தலைவர் (அமைப்பின் துணைத்தலைவரும் கூட) குறுக்கிட்டு, அவர் கருத்தைச் சொல்கின்றார்.
“எனக்கு குழுவுல என்ன நடக்குதுன்னே தெரியலை. எந்த இன்பர்மேசனும் ஷேர் செய்யுறதில்லை. டிரான்ஸ்பேரன்சியே இல்லை”
கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற செயலாளர் குறுக்கிட்டு, ”எனக்குச் சில கேள்விகள் இருக்கின்றது. கேட்கலாமா?”
“ம்.. கேளுங்க”
“உங்களுக்கு நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி பிரிச்சிக் குடுத்தாங்ளா?”
“ஆமா. நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி, எனக்குப் பிரிச்சுக் கொடுத்தது உண்மைதான்”
சொல்லிக் கொண்டிருக்கும் போதேவும், “கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க, கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க”
பதற்றம் பற்றிக் கொள்கின்றது. அதற்குப் பின் ஒரே சீர்கேடான சூழல்தான்.
0o0o0o0o0o
செயலரின் செயல் அநாகரிகமானது. குழுத்தலைவரின் செயல் அதைக்காட்டிலும் தரம் தாழ்ந்தது. ஏனென்றால் இது காணொலிக் கூட்டம். வீட்டில் பெரிய பெரிய திரைகளில் குடும்பத்தினர் பார்க்க நிகழ்ச்சியைப் பார்ப்போர் உண்டு. பொறுப்பில் இருப்பவர்களே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்வது ஒப்புக் கொள்ள முடியாதவொன்று. கழிசடைத்தனத்தைக் கழிசடைத்தனம் என்றாவது ஒப்புக் கொள்ள வேண்டுமென ஒரு குழுவில் பதிவிட்டேன். அவ்வளவுதான். நிர்வாகக் குழுவைச் சார்ந்த 5 அல்லது 6 பேர், EST - PST, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருப்பவர்கள், ஒரே நேரத்தில், ஆளுக்காள் ஒரு திசையில் இழுத்துக் கொண்டிருந்தனர். நான் நிதானமாகவே இருந்தேன். குழுவிலும் அவர்கள் செயற்பட்டவிதம் காடைத்தனமாகவே இருந்தது. அதற்கிடையே எழுதியதுதான் இது. இருந்தும் பயனளிக்காமல் போகவே கடைசியில் நாமும் இறங்கி அடிக்க வேண்டி ஆயிற்று என்பது தனிக்கதை.
0o0o0o0o0o
எதுவொன்றையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். குழுவில் அண்மையில் நடந்த ஒரு அலை(flare-up) பார்த்தோம். இந்நிகழ்வையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். எப்படி?
கதையில் நல்லகதை கெட்டகதை என்பதே இல்லை. ஒருகதையில் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதென்பதைக் கற்றுக் கொள்கின்றோம். இன்னொரு கதையில் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமெனக் கற்றுக் கொள்கின்றோம். இதுவும் அப்படித்தான். ஒரு பாடம் பயில்வதற்கான ஒன்று, case study.
ஏதோவொரு நிறுவனம். ஒரு பொருளை விற்கின்றது. சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை அல்லது கருத்து. அது நிறுவனத்தின் வணிகத்திற்கு உகந்ததாக இல்லை. என்ன செய்வர்? social media situation management’க்கு தன்னியக்கமாக இருக்கின்ற ஒரு செயலியில் இருந்து அறிவுறுத்தல் செல்லும். உடனே மக்கள் தொடர்புத் துறை களத்தில் இறங்கும்.
அங்கீகரிக்கப்பட்டவர் உடனே அந்தக் கருத்தாளர், பயனரைத் தொடர்பு கொண்டு நயமாகப் பேசி, கருத்துக்கு நன்றி சொல்வார். நேரம் ஒதுக்கிக் கருத்துச் சொன்னமைக்காக கூப்பன், அல்லது பரிசுப் பொருள், இலவசசேவை என ஏதாகிலும் ஒன்றைக் கொடுப்பர். மேலும் அந்தக் கருத்து ஏன் எழுந்தது, அதில் மேம்பாட்டுக்கான பற்றியம் ஏதாகிலும் உள்ளதா முதலானவற்றை உள்வாங்கிக் கொள்வர். சந்தடி சாக்கில், நல்ல கருத்து, ஆனால் அந்தச் சொல், அந்தவரியை நீங்கள் சீரமைத்தால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் அந்த வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வர். இது நிறுவனத்தின் பார்வையில்.
பயனரின் பார்வையில், அவர் அந்தக் கருத்தை நீக்கி விட வாய்ப்புகள் அதிகம். கூடவே அவர் அந்தப் பொருளைப் பற்றி நல்லவிதமாகப் பேசவும் விழைவார்.
2008/2009 வாக்கில் பேரவைப் பக்கமே எவரும் வர மாட்டார்கள். பயங்கரவாத அமைப்பு என்றெல்லாம் பேச்சாகி, வர அச்சம். இணையத்தில் நாங்களெல்லாம் அப்படிச் சொல்பவர்களைச் சாடுவதில்லை. மாறாகத் தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவோம்.
அப்போதெல்லாம் இப்போது போலத் தொலைக்காட்சிகள் இல்லை. யுடியூப்கள் இல்லை. சன், ஜெயா, ராஜ், மக்கள் தொலைக்காட்சி மட்டுமே. மக்கள் தொலைக்காட்சியில் மட்டும், விழாவுக்கு வந்து சென்றோர் பலர் பேரவை குறித்துப் பேசியதை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் அதற்குப் பயனர்கள் குறைவு. எனக்குத் தெரிந்து, ஜெயா தொலைக்காட்சியில் பேரவை குறித்துத் தனிநிகழ்ச்சியாக அமைந்தது நான் கொடுத்த நிகழ்ச்சிதான். அதற்குப் பிறகு தமிழ்மணம் வாயிலாகப் பலர் பேரவையின்பால் நாட்டம் கொண்டனர்.
என்னைக் காட்டிலும் பலர் பேரவைக்காக இந்த சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் கற்றுக் கொண்டவை நிறைய. ஒருநாளும் இப்படிக் குழுவாகப் போய் கருத்தாளர்களைக் கையாண்டதில்லை.
-பழமைபேசி.

8/26/2023

What is mob mentality?

Once entering a group, deindividualization and the loss of self awareness can occur. This ultimately results in people thinking as a group rather than as individual and is known as mob mentality. Though mob mentality can be helpful, it is often detrimental.

பரவலாகத் தமிழ் அமைப்புகளில் இப்படியான கலாச்சாரம் ஏற்பட்டு விடுவதைக் காணலாம்.  பேச்சில் கவர்ச்சி, சாதி, பணம் என ஏதாகிலும் ஒன்றில் மிடுக்காக இருப்பார். அவருக்குச் சிலபல நண்பர்கள். அதே சங்கத்தில் வேறொரு குழு. சன்னமாக எதிர் புதிர். ஒரு இன்னொரு குழுவைக் கலாய்க்கும். அதிலொரு இன்பம். கொஞ்சம் கொஞ்சமாக அது உள்ளிழுத்துக் கொள்ளும். சுயசிந்தனை அற்றுப் போகும்.  

இப்படியான சூழல் இளைஞர்கள், குடும்பங்களின் நலனைப் பதம் பார்த்து விடுகின்றது. அண்மையில்தாம் நண்பர் தம் மனைவியை இழந்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளாகவும் தமிழ்ப்பள்ளி, சங்கம் என இருந்திருக்கின்றனர் இணையர் இருவருமே. குழந்தைகள் அவர்கள்பாட்டில். இன்று அம்மையார் தவறிவிட்டார். அவர் சொன்னதிலிருந்து, “தப்புப்பண்ணிட்டேன் பழமை, வேலை, சங்கம், ஸ்கூல், அக்கப்போர்”னே இருந்துட்டேன்.

Your digital footprints speak volumes than your cv. இஃகிஃகி, நான் தமிழ்ச்சங்கச் சூழல்களில் கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளாக இருந்து வருகின்றேன். சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும். சுவடுகள் எங்கோ படியெடுக்கப்பட்டுக் கொண்டேவும் இருக்கும். அவை நமக்கே எதிராகவும் திரும்பக் கூடும். காட்டமாக எழுதுகின்றோம்தான்.  அதைச் சிந்தைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். உள்வாங்கிக் கொள்ளாமலே புறம் பேசுவது என்பது அவரவர் விருப்பம்.

இயன்றமட்டிலும் மனதறிந்து நேர்மையாக இருந்து விடுவது.  கூட்டுக்குழுச் சுழலுக்குள் அகப்பட்டுக் கொள்வதில்லை. வாழ்க்கை என்பதே பயணம்தானே? எப்படியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது முக்கியம். எவ்வளவு வேகம், உயரம் என்பதல்லவே!!

-பழமைபேசி. 08/26/2023.

8/23/2023

தகவல் இயங்குநிலை (dynamic data)

அலுவலகக் கூட்டங்களின் போது கவனிக்கலாம். ஏதோவொரு பேசுபொருளின்பாற்பட்டு முன்வைக்கப்படும் கருத்துகளில் இழுபறி ஏற்படும். கூட்டத்தை நடத்துபவர், இது குறித்த தகவல்களை ஆய்வு செய்து விட்டு அடுத்த கூட்டத்தில் மேற்கொண்டு பேசிக் கொள்ளலாமெனக் கூட்டத்தைக் கடத்திச் செல்வார் அல்லது அதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளின் பொருட்டு இன்னார் வேலை செய்யப் பணிக்கின்றேனெனக் கடத்திக் கொண்டு போவார். பேச்சுகளை வளர்ப்பதில்லை. இழுபறிப் பேச்சு என்பது நேரத்தை வீணாக்கவே செய்யும் பெரும்பாலான நேரங்களில்.  ஆகவே தகவலின் அப்போதைய நிலையறிந்து செயற்பட வேண்டியதாயிருக்கின்றது.

மகள்கள் மருத்துவமனை ஒன்றுக்குத் தன்னார்வப் பணிக்குச் செல்வது வழக்கம். அப்படியாக அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகையில் அவர்களின் அலைபேசியில் வழித்தடத்துக்கான செயலியை முடுக்கிவிடக் கோரினேன். “அப்பா, எத்தினிநாளாகப் போய்வருகின்றோம். இன்னமும் டைரக்சன் போடணுமா?”. ஆமாம், போட்டுத்தான் ஆக வேண்டுமென்றேன். காரணம், இம்மாதிரியான செயலிகள் அந்த நேரத்துக்கான தகவலின் அடிப்படையில் செயற்படுபவை. செல்ல வேண்டிய தடம் மாறியும் வரலாம். ஏதோவொரு பாதையில் சாலைப்பராமரிப்பு இடம் பெற்றிருக்கலாம். விபத்து நேர்ந்திருக்கலாம். நிகழ்வு காரணம் முற்றிலுமாக அடைபட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. செயலிகள் அவ்வப்போதைய தகவலின் அடிப்படையில் தடத்தைச் சொல்லக் கூடியவை. ஏனவே பாவித்துத்தான் ஆக வேண்டி இருக்கின்றதென்றேன். “that makes sense" என்பது மறுமொழியாக அமைந்தது.

அம்மாவின் உடன்பிறந்தோர் மொத்தம் 20 பேர் (மூன்று குடும்பத்துப் பிள்ளைகள்). அவர்களுள் மாமா ஒருவரை மட்டும் பார்த்திருக்கவில்லை. எப்படியாவது பார்த்தாக வேண்டுமென முயன்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் அப்படியே குலதெய்வக் கோயிலுக்கும் செல்ல வேண்டுமெனச் சொன்னார். அவரது விருப்பத்தைத் தட்டிக்கழிப்பானேன்? காலையில் வண்டி கிளம்பியானதும், சரிம்மா, கோயிலுக்கு எந்த வழியில் செல்ல வேண்டுமெனக் கேட்டேன். ஏன், உனக்கு நம் குலதெய்வக் கோயில் எங்கிருக்கின்றதெனத் தெரியாதா என விட்டேற்றியாகக் கேட்டார்.

அதற்கல்லம்மா, போகின்ற வழியில் அண்ணியாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமா? வேறு எவரையாவது பார்க்க வேண்டுமா? அதற்கேற்ப செல்கின்ற வழியும் மாறும்தானே, அதற்காகக் கேட்டேனெனச் சொன்னேன். இல்லை, அண்ணியார் கலக்டர் அலுவலகம் செல்கின்றார், தோட்டம் சென்று துணிமணிகளை எடுத்துக் கொண்டு நேராகக் கோயிலுக்குத்தான் என்றார். சரி, தோட்டத்திற்கு வருகின்றோமெனச் சொல்லுங்கள் என்றேன். தோட்டத்தில் இருக்கும் அண்ணனை அழைத்தால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அலைபேசியில் அண்ணியாரை அழைத்தார். ”கலக்டர் அலுவலகம் செல்லத் தேவையில்லை, தோட்டத்திலும் யாருமில்லை, ஆகவே நான் இருக்குமிடத்துக்கு வாருங்கள், நானும் வருகின்றேன்”. ”இதற்குத்தானம்மா நான் கேட்டது, இப்போது பார்த்தாய்தானே?”. அம்மா சிரித்துக் கொண்டார்.

தகவல் என்பது நொடிக்கு நொடி இயங்குநிலையின்பாற்பட்டு இருக்கின்றது. அலைபேசி, இணையம் உள்ளிட்ட தகவற்தொழில்நுட்ப வளர்ச்சியின் நிமித்தம் அதன் இயங்குவேகம் பன்மடங்கு பெருகி இருக்கின்றது. ஆகவே பேச்சுகளில் அக்கப்போர் இடம்பெறுவதென்பதும் பலமடங்கு பெருகியிருக்கின்றது.

வயது மூப்பு, அடுத்தடுத்த மரணங்கள் காரணம், மனம் பணிந்து போய்க் கிடக்கின்றது. தற்போதெல்லாம் எவர் என்ன சொன்னாலும் எதிர்வினைவேகம் கொள்வதில்லை. மாறாக, முன்வைக்கப்படும் தகவலின் தன்மையைத் தெரிந்து கொள்ளவே இயன்றவரை முற்படுகின்றேன். நமக்கு நன்கு அறிந்த தகவல், தற்போது அதன் தன்மையை மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். ஆகவே காலாவதியான தகவலை அடிப்படையாகக் கொண்டு முட்டி மோதிக் கொள்வதில் பயனில்லை.


7/18/2023

இனியநாள்

 காலையில் நினைவுக்கு ஆட்படுவதிலிருந்து மீண்டும் நினைவிலிருந்து விடுபட்டு உறங்கிப் போவது வரையிலும் என்னவெல்லாமோ நடக்கின்றன. எதிர்பாராத ஒன்று, வெற்றி, வருமானம், இப்படி ஏதாகிலுமொன்று இடம் பெறுமேயானால் அந்தநாள் இனியநாள் என்பது பொதுப்புத்தி, வாடிக்கை. ஆனால் அது அப்படியன்று.

தலைவலி, நெஞ்செரிச்சல், கால்நோவு, பல்குடைச்சல், ஈறு வீக்கம், விரற்கண் குடைச்சல் , மனவுளைச்சல், தோல் அரிப்பு, தும்மல், இருமல்,  இப்படி ஏதோவொன்று இருந்து அந்த நாளின் தரத்தைக் குறைக்கும். அதன் வீச்சு அவ்வப்போது, சிற்சிறு பிசிறுகளாக சன்னமாக இருந்து இருந்து மனவெழுச்சியை மட்டுப்படுத்தக் கூடும். பெரும்பாலும் நாம் அதற்கொரு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம். ஆனால் அதனால் மட்டுப்படும் நாளின் தரம் பெரிதாகவே இருக்கும். இப்படியான எதுவுமற்ற ஒவ்வொருநாளும் இனியநாளே.

இப்படியான தொல்லைகள் ஏற்படும் போதெல்லாம் வலிமாத்திரைகளைப் போட்டு அந்தக் கணத்திலிருந்து முன்னேறிச் செல்கின்றோம். அதன் தோற்றுவாய் என்னவென அறிந்து கொள்வதற்கு முனைப்புக் கொள்வதில் நாட்டமிருப்பதில்லை.

சிற்சிறு தும்மல், மூக்கில் நீர்வடிதல், நெஞ்செரிச்சல் தொடர்ந்து இருப்பது போன்ற ஒரு கவனிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தது. மருத்துவர், நண்பர்கள், அம்மா எனப் பலருடனும் பேசி இருக்கின்றேன். விடுபடவேயில்லை. பெரும்பாலும் நானே சமைத்து உண்பதுதான் வாடிக்கை. ஆகவே தொடர்ந்து மாற்றங்களைச் செய்து செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியானதில் அறிந்து கொண்டதுதான் இது.

காஃபி என்பது மட்டும் வீட்டில் அம்மையார் கைவண்ணத்தில்தான். அருமையாக இருக்கும். நெஞ்செரிச்சலின் நிமித்தம் எரிச்சலாக இருந்தேன். பால் இல்லாமல் வரக்காப்பி கொடு, போதுமென எரிச்சலாகச் சொன்னேன். இஃகிஃகி, அவரும் வரக்காப்பி கொடுத்தார். ஒரு நாள், ரெண்டுநாள், மூன்றுநாள், வாரேவா... பொதுவாக மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். ஆனால் அன்றுமுதல் இரவில் எவ்வித அல்லலுமின்றி உறங்கிப் போனேன். நீர்வடியக் காணோம். நெஞ்செரிச்சலையும் எதிர்கொள்ளவில்லை. நிற்க.

ஊரில் எத்தனையோ காஃபிகள். யாவித அழற்சிக்கும் ஆளாகவில்லை. சுகமாய் இருந்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து வந்திருக்கின்றேன். வான் அயர்ச்சி(jet lag) காரணம், ஒருமாதிரியான மனநிலை. உடல்நிலை. கொடுத்த காஃபியை கவனத்துக்கிடங்கொடாத மனநிலையில் குடித்து வந்தேன். 

நேற்றெல்லாம் அவ்வப்போது நெஞ்செரிச்சல். இன்று காலையில், ”காஃபி எப்படிப் போட்டாய்?” “பாதி பாலு, பாதி தண்ணி”. "சாரி, நாலே சொட்டுப் பாலோட வேற காப்பி போட்டுக் கொடுக்கலாமே?”

இன்றுமுதல் இனியநாள் is back again.❤️😍

-பழமைபேசி, 07/18/2023.


7/14/2023

உறவாடல்



அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். தனித்தனியாக உங்கள் ஒவ்வொருவருடனும் உரையாட ஆசைதான். ஒரேநாளில் இயலாதுதானே?

இரண்டு மாதங்கள் தாயகத்தில் இருந்தேன். பேரின்பம். உற்றார் உறவினர் நண்பர்களெனக் கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேலானவர்களை நேரில் சென்று சந்தித்து உரையாடினேன். திருமணங்கள், உறவினர் மறைவு முதலானவற்றிலும் பங்கு கொண்டேன்.

அணுக்கமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி எனும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இழப்புகளை உணர முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, அப்பா, சித்தப்பா, மாமனார் என்பதான இழப்புகள் என்றிருந்த நிலையில், தற்போது சம வயதுடையோரும் விடைபெறுவது இடம் பெற்று வருகின்றது. திரண்டிருந்த ஊரகத்திண்ணைகளும் சத்திரத்து மாடங்களும் பயிர்ப்பற்ற தரிசுகளாய்க் கிடக்கின்றன. வீடுகளுக்குள் இருந்தாலும் கூட்டத்துள் கூட்டமாய் இருக்கின்ற மனோபாவத்தில் நேரப்போதாமையுடன் முசுவாய்த்தான் இருக்கின்றனர் மக்கள்.

வாசிங்டன் வானூர்தி முனையத்தில் இறங்கிய அரை மணி நேரத்திலெல்லாம் குடிவரவு முறைமைகள் முடிக்கப் பெற்று, சரக்குப் பெட்டிகளைப் பெற்ற கையோடு அடுத்த வானூர்திக்காக திரும்பக் கொடுத்தும் ஆயிற்று. சார்லட் வந்தடைந்து காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரைந்தன. கடைசியில் பெட்டி வரவேயில்லை என்பதால், முறையிட்டு, அதற்கான பதிவுத்தாள் பெற்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. நல்ல உறக்கம்.

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் குறுஞ்செய்தி. சார்லட் வரும் விமானத்தில் பெட்டி ஏற்றப்பட்டு ஆகிவிட்டது. மகிழ்ச்சி. மீண்டும் உறங்கிப் போனேன். மீண்டும் குறுஞ்செய்தி. சார்லட்டில் பெட்டி இறக்கப்பட்டு ஆகிற்று. எழுந்து பல்துலக்கி கொடுக்கப்பெற்ற காஃபியைக் குடித்துக் கொண்டு இருக்கையில் மீண்டும் குறுஞ்செய்தி.

மாலை நான்கு மணிக்குள் பெட்டி வீட்டுக்கே வந்து சேருமென்பது தகவல். மறந்து விட்டிருந்தேன். நண்பகல் வாக்கில் அம்மாவுக்கு அழைத்துப் பேசினேன். கொடுத்தனுப்பிய பொருட்கள் குறித்து வினவினார். கொடுக்கப்பட்ட பதிவெண்ணைக் கொண்டு இணையத்தில் போய்ப் பார்த்தேன். காலை 9.42மணிக்கெல்லாம் பெட்டியைப் பெற்றுக் கொண்ட வண்டி புறப்பட்டாகி விட்டது என்பது நிலைத்தகவல்.

வீட்டுக்கு வண்டி வரவேயில்லை. மாலை ஏழு மணிவாக்கில் மீண்டும் இணையத்தில் சென்று பார்த்தேன். புதுத்தகவல் ஒன்றும் இல்லை. சரி, அழைத்துப் பேசலாமெனக் கருதி, தொடர்பு எண்ணைத் துழாவினேன். wheresmysuitcase எனும் நிறுவனத்துக்குத் தொடர்பு எண்ணே இல்லை. மாறாக மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுக்கப்பட்டு இருந்தது. விபரம் கேட்டு மடல் அனுப்பினேன். ஒரு பதிலும் இல்லை. நள்ளிரவில் விழிப்புக் கண்டு விட்டேன். சென்று பார்த்தேன். மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. நிலைத்தகவற்தொடரிலும் புதுத்தகவல் எதுவுமில்லை.

ஐந்து நாட்களுக்குப் பின்னர்தாம் பெட்டி தொலைந்து விட்டதற்கான இழப்பீட்டு விண்ணப்பம் பதிய முடியும். $1700 வரையிலும் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். பெட்டியில் இருக்கும் பொருட்களின் சந்தைமதிப்பு எப்படிப் பார்த்தாலும் $250 கூடத் தாங்காது. ஆனாலும் அதற்கான விழுமிய மதிப்பு என்பது இருக்கின்றதுதானே? பேத்திகளுக்காய், ஆசையாசையாய் செய்து கொடுக்கப்பட்ட நிலக்கடலையுருண்டை, எள்ளுருண்டை, ஓலை முறுக்கு, மாவடு முதலானவற்றுக்கு ஈடு இணை ஏது? மனம் சோர்வு கண்டது. ஊருக்கு அழைக்க மனம் வரவில்லை. அழைத்தால் கேட்பார்களே??

காலை பத்து மணி இருக்கும், மின்னஞ்சலொன்று வந்தது, “ஓட்டுநர் லசோனியா என்பார்வசம் பெட்டி ஒப்படைக்கப் பெற்று இருக்கின்றது. எந்நேரத்திலும் பெட்டி வீடு வந்து சேரலாம்”. நேற்று காலை 9.42க்கு ஏற்றப்பட்ட பெட்டி, 20 மைல் தொலைவில் இருக்கும் வீட்டுக்கு இன்னுமா வந்து கொண்டிருக்கின்றது? அவ்வப்போது வாசலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். 24 மணி நேரத்தில் வந்து சேருமென்றார்கள். 48 மணி நேரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. மீண்டும் ஒரு குறுஞ்செய்தி. ”நேற்று மாலை நான்கு மணிக்கு கொடுக்கப்பட வேண்டிய பெட்டி, கொடுக்கப்படுவதற்காக வண்டி வந்து கொண்டிருக்கின்றது”.

மனம் அலுத்துப் போய் விட்டது உடம்போடு சேர்த்து. உறங்கிப் போனேன். எங்கோ ஏதோ நடப்பது போன்ற உணர்வு. விறுக்கென எழுந்து சாளரத்துவழி வெளியே பார்த்தேன். வண்டியொன்று நின்று கொண்டிருந்தது. ஓடிப் போனேன். இதுதாம் என் பெட்டியென அடையாளம் காட்டினேன்.

அலைபேசி என்பது கையிலிருப்பதால் எப்படியெல்லாம் அது நம்மைப் படுத்துகின்றது? இப்படித்தான் ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்குள்ளும். நிமிடத்துக்கு நிமிடம் மாந்தனின் எண்ண அலைகள் மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. எல்லாரும் பரபரத்துக் கொண்டே இருக்கின்றனர். நாம் சென்று சந்தித்தால், பேசுகின்றனர். பேசிக் கொண்டே இருக்கின்றனர். மீண்டும் வருமாறு அழைக்கின்றனர். அவ்வளவு நல்லவனா நான்? பரபரப்பில் இருந்து விடுதலையான உணர்வு, அவர்களை அப்படியான குதூகலத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. நேர்கொண்டு பேசித் திளைத்திருப்போம்.

5/15/2023

தெரிவுகள்

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

வாழ்க்கை என்பது தெரிவு. எப்படி? அன்றாடமும் வாழ்வு என்பது ஒவ்வொன்றுக்குமென எண்ணற்ற தெரிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் எந்தத் தெரிவை மேற்கொள்கின்றீர்களோ அதைப் பொறுத்து உங்கள் வாழ்வின் அடுத்த கணம், அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்பன எல்லாமும் அமையும். இப்படியாக வாழ்வின் முடிவுப் புள்ளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது, உங்களின் பயணம் உங்கள் தெரிவுகளால் ஆனதான பயணமாக இருக்கும்.

இனிய நண்பர் அவர். உடனே தொடர்பு கொண்டார். சந்திக்கும் ஆவல். "என்ன திருப்பி...." என்பதற்குள்ளாகவே நான் சிரித்துக் கொண்டே இடைமறித்தேன், "ஏங்க, இது நம்ப கோயமுத்தூருங்க. எத்தினிவாட்டி வேணுமின்னாலும் வரலாம் போகலாம்", கலாய்த்தேன். 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்.

புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் ஒவ்வொருமுறை தாயகம் வரும் போதும் இக்குறிப்பிட்ட வினாவை எதிர்கொண்டு பழகிப் போய் விட்டது. ஆம், அவர் கேட்க வந்தது, "இப்போதுதானே வந்து போனாய், மீண்டும் இவ்வளவு சீக்கிரமே வந்திருக்கின்றாயே? எல்லாம் சுபம்தானே?" 

இவ்வினாவின் தோற்றுவாய் என்பது இருவிதமான அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது மேற்கூறிய காரணம். இரண்டாவது, வெளிநாடு என்றாலே அடிக்கடி வந்து போக இயலாது. நான்கு, ஐந்து ஆண்டுகட்கு ஒருமுறைதான் என்பதான பொதுப்பழக்கமும் பொதுப்புத்தியும்.

இரண்டாவது அடிப்படை நிமித்தம்தான் நாம் "தெரிவுகள்(சாய்ஸஸ்)" என்பது பற்றிப் பேச வேண்டியதாகின்றது. ஆண்டுதோறும் வருவாயுடன் கூடிய விடுப்பு என்பது பெரும்பாலான நாடுகளில் உண்டு. தாயகம் வந்து செல்ல, சராசரியாக தனிநபருக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

பிறகு ஏன் அப்படியான பொதுப்பழக்கம் உண்டாகிற்று? விடுப்பு எடுப்பதால் பொறுப்பு உயர்வுகள், வணிக விரிவாக்கம், கல்வி மேம்பாடு, சேமிப்பு முதலானவை மந்தமாகும். ஆகவே ஆண்டுதோறும் வந்து செல்ல இயலாது. இயலாது என்பதன்று. ஏற்புடையதாக இருக்காது. ஆனால் இது அவர் அவருடைய தெரிவு என்பதுதான் அடிப்படை.

பயணங்களைக் கட்டுப்படுத்தி அதன் வழியாக வளர்ச்சிகளைக் கொண்டோரும் இருக்கின்றனர். அது அவர்களுடைய தெரிவு. இயன்றமட்டிலும் பயணங்களை மேற்கொண்டு, பெற்றோர், உற்றார் உறவினரோடு பொழுதுகளைப் பகிர்ந்தவரும் இருக்கலாம். அந்த அனுபவத் தேவை என்பது அவர்களின் தெரிவு.

இடைப்பட்ட இந்த 11 மாதங்களில் விடைபெற்றதில் நெருக்கமானோர் 10 பேருக்கும் மேல். கடந்தமுறை வந்திருந்த போது நாரகிரி எனும் ஊரில் 2 நாட்கள் தாங்கி இருந்தோம். ஆருயிர் நண்பன் இன்று விடைபெற்றவனாகிப் போனான். நண்பர் அலெக்ஸ் அவர்களைக் கண்டு உறவாடினோம். மரணப் படுக்கையிலும் எமக்காக அகல விரிந்த அந்தக் கண்கள், பார்வை இம்முறை எம‌க்கில்லை. ஒருவேளை நான் சென்றமுறை வராமல் இருந்திருந்தால்? எல்லாம் அவரவர் சாய்ஸ். உங்கள் வாழ்க்கை உங்கள் மனத்தில், உங்கள் மனத்தில் மட்டுமே!

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

‍பழமைபேசி, கோவை.

5/07/2023

சித்ரா பெளர்ணமி

தாய்த்தமிழ்நாட்டில் மாலைநேரம். பெளர்ணமி வழிபட மக்கள் ஆங்காங்கே கோயில்களில் குழுமி இருக்கின்றனர். அமெரிக்காவில் காலை மணி ஒன்பது. அடுத்தடுத்து அலுவலகக் கூட்டங்கள். ஊரிலிருந்து வாட்சாப் வழி ஓர் அழைப்பு. கூட்டத்தின் நடுவே அதற்குப் பணிய முடியவில்லை.

கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான இடைவெளியில் அந்த வகுப்புத் தோழருக்கு அழைப்பு விடுத்தேன். வீடியோ காலில் வந்தார்.

நான் வாழ்ந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு வேறொரு ஊரின் கோயிலடியில் நின்று கொண்டு அழைத்திருக்கிறார். “உங்க ஊர்லதான் இருக்கன். இந்தா, இந்தக் கோயில் என்னனு சொல்லு பார்க்கலாம்”. எனக்குப் பிடிபடவே இல்லை. முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பர் அருகிலிருந்தவர்களை அழைத்து என் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கச் சொன்னார். அப்போதுதான் அறிய நேரிட்டது, அது நான் வாழ்ந்த ஊரல்ல. வேறொரு ஊர். ஆனால் அந்த ஊரையும் நான் நன்கறிவேன். அவருக்கு அருகில் இருந்தவர்களும் பரிச்சியமானவர்களே.

அருகில் இருந்த எல்லாருக்குமே மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. திடீரென அங்கே கோயிற்திடலில் இருந்த ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் வயதையொத்த சிறுவனிடம் என்னைக் காண்பித்து, இது யார் தெரியுமாவெனக் கேட்டனர். “இது, பழமைபேசிதானே?” என்றார் அந்த இளம்பிள்ளை.

அடுத்த கூட்டத்துக்கு நேரமாகிவிடுமேயென எண்ணி அழைப்பை முடித்துக் கொண்டேன். ஆனால் என்னால் அடுத்த அழைப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. மனம் சமநிலையில் இருந்திருக்கவில்லை. கூட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைக்க வேண்டினேன்.

நான் பார்த்திராத ஒரு சிறுவன். என் பேச்சுகள், எழுத்துகள்வழி அறிமுகமாகி இருந்திருக்க வேண்டும். எவ்விதத்திலும் என் பேச்சும் எழுத்தும் நடவடிக்கைகளும் அப்படியானவர்களைப் பாதித்து விடக் கூடாதுதானே? யோசிக்கலானேன். அறிஞர் ஆல்பர் ஐன்ஸ்டினின் கூற்று நினைவுக்கு வந்தது. வெற்றி கொள்வதில் இல்லை வாழ்வு, மதிப்புக் கொள்வதில் இருக்கின்றது.  “Try not to become a man of success, but rather try to become a man of value” ― Albert Einstein


5/04/2023

தனிமையெனும் கொள்ளைநோய்

சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”.

மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general

நிகழ்ந்த இருவேறு பற்றியங்களைக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு வாட்சாப் குரூப். கிட்டத்தட்ட 110 பேர் வரையிலும் அதில் இருந்தனர். எல்லா வாட்சாப் குரூப்களைப் போலவே, இதிலேயும் ஃபார்வர்டுகளாகப் பகிர்வர். குட்மார்னிங் செய்திகள். பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கான வாழ்த்துகள். பொது உரையாடலாக எது குறித்தும் பேச மாட்டார்கள். அப்படியே பேசுவது என்றாலும், பகிர்கின்ற பதிவுகளுக்கு, சூப்பர், அருமை போன்றன இடுவார்கள். ஒருகட்டத்தில், இரு குரூப்களாக ஆகிவிட்டது. முதலாவதில், இன்னமும் அதே போக்குத்தான். அடுத்ததில், நண்பர்களுக்குள் பேசிக்கொள்வது, கிண்டல் கேலி, பகிரும் செய்திகளைக் கேள்விக்குள்ளாக்குவதென உயிர்ப்புடன். இதேநிலைதான் சமூகத்திலும்.

உறவினர்களுக்கென ஒரு வாட்சாப் குரூப். நாற்பது, ஐம்பது பேர் இருக்கின்றனர். உரையாடல் என்பது எதுவும் இராது. வாழ்த்துச் செய்திகள் மட்டும் இடம் பெறும். இதேநிலைதாம் குடும்பங்களிலும். சாப்பிட்டாயா, சாப்பிட்டேன். கடைக்குப் போனாயா, போய்வந்தேன். பில் கட்டியாச்சா, கட்டியாச்சு. அவ்வளவுதான். சின்னஞ்சிறு கதைகள் பேசி, தூக்கிவிடக் கரம் நீட்டிக் களிப்புக் கொள்வதெல்லாம் பகற்கனாவாகி விட்டது.

வாழ்வென்பது ஒரு பயணம். பயணத்தில், காணும் காட்சிகளும் பேச்சுகளுமென ஐம்புலன்களினூடாகப் பெறுகின்ற அனைத்தும் நமக்கு வாழ்வின் பயனை, அனுபவத்தை ஈட்டித் தருகின்றன. இந்த ஐம்புலன்களின் பாவனையென்பது ஒன்றுக்கொன்று மிகாமலும் குறையாமலும் சீரோடு இருந்துவிட்டால் நலம். மேம்பட்டதாக இருக்கும். 

மருத்துவத்துறைத் தலைவர் சொல்கின்றார், “People now use social media as a replacement for in-person relationships, and this often meant lower-quality connections". இதில் இருவிதமான பின்னடைவுகளைக் காணமுடிகின்றது. முதலாவது, மனிதனோடு மனிதன் பேசுகின்றது(பலுக்கல்) இல்லாமற்போய் விடுகின்றது அல்லது குறைந்து போய் விடுகின்றது. அடுத்தது, சார்புத்தன்மை கொண்ட முன்பின் தெரிந்திராத அனாமதேயர்களுடனான நேரவிரயம் கோலோச்சுகின்றது. இப்படியாகக் கூட்டமாக இருந்தாலும், கூட்டத்தில் தனித்தனி ஆட்களாக இருக்க நேரிடுகின்றது. ஆறுதலும் ஊக்கமும் தேவையாக இருக்கின்ற நேரத்திலே ஈடு செய்ய ஆளில்லை.

நேரடியாகப் பாதிக்கப்படுவது ஐம்பது வயதுக்கும் மேற்பட்டோர். மருத்துவத்துறை அறிக்கை சொல்கின்றது, ”physical consequences of poor connection can be devastating, including a 29% increased risk of heart disease; a 32% increased risk of stroke; and a 50% increased risk of developing dementia for older adults”. எப்படி? தனிமையின் காரணம் ஊக்கமிராது. ஊக்கமில்லாவிடில் உடற்பயிற்சி உள்ளிட்ட உடலுக்கான நகர்வுகள் இராது. போதிய உணவுப்பழக்கம் இராது.

In response, the advisory outlines the framework for a new national strategy. It is based on six foundational pillars, which are:

1. Strengthening social infrastructure, which includes things like parks and libraries as well as public programs.

2. Enacting pro-connection public policies at every level of government, including things like accessible public transportation or paid family leave.

3. Mobilizing the health sector to address the medical needs that stem from loneliness.

4. Reforming digital environments to "critically evaluate our relationship with technology."

5. Deepening our knowledge through more robust research into the issue.

6. Cultivating a culture of connection.

முதல் ஐந்தும் அரசுக்கானவை, அமைப்புகளுக்கானவை. தனிமனிதனாக நாம் என்ன செய்ய வேண்டும்? நேரிலும் சரி, தொழில்நுட்பக் கருவிகளூடாகவும் சரி, மனிதன் சகமனிதனிடம் பேச வேண்டும். அலுவல் அல்லாத வாட்சாப் குரூப்களை, நண்பர்கள் உறவினர்களுக்கான வாட்சாப் குரூப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். எந்திரத்தனமாக அவற்றுள் கிடந்து தனிமையெனும் கொள்ளைநோய்க்கு நெய் வார்க்கக் கூடாது. சமூகவலைதளங்களின் பயன்பாட்டைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்.

https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general


4/28/2023

எப்படிணே?



இளவல் ஒருவர் அழைத்திருந்தார். “அண்ணா”. “சொல்லுங் தம்பி”. “எப்படினா எப்பயுமே மகிழ்வா, துள்ளலா இருக்கீங்க?”

“அப்படியெல்லா ஒன்னுமில்லீங் தம்பி. எனக்கும் கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், சினம்னு வருவதும் போவதுமாத்தான் இருக்கும்”

பேச்சு அதனைக் கடந்து சென்று விட்டது. ஆனால் சிந்தித்துப் பார்க்குங்கால், மகிழ்ச்சி, உவப்பு, இன்பம், களிப்பு முதலானவை எல்லாம் வேறு வேறானவை. ஒவ்வொரு மனிதனும் முக்காலே மூணுவீச நேரமும் இன்புற்றிருக்கவே ஆட்பட்டவர்கள். எப்படி?

மகிழ்ச்சி: மகிழ்தல் என்றால் பொங்கி வருதல். மனம், இருக்கும் நிலையில் இருந்து குதூகலநிலைக்கு மாறிய ஓர் உணர்வு. அது தற்காலிகமானது.

உவப்பு: ஏதோவொரு செயலின் ஈடு(result) மனநிறைவைக் கொடுத்தல். உவப்பும் கசப்பும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை.

களிப்பு: கேளிக்கை நிமித்தம் மனம் மற்றெதனின்றும் ஒன்றியிராமல் ஏதோவொன்றின்பால் மட்டும் பற்றியிருக்கும் போது ஏற்படும் விடு உணர்வு.

இன்பம்: வலியற்று இருக்கும் நிலை.

நடப்பில் நாம் இவை அத்தனையையும் மகிழ்ச்சி என்றே கருதிக் கொள்கின்றோம். நுண்ணிய வேறுபாடுகளுக்கு இடம் கொடுப்பதில்லை. இங்கே இளவல் அவர்களின் வினாயென்பது இன்பம் குறித்தானதே. ஆகவே நாம் இன்பம் என்பதை எப்படிக் கட்டமைத்துக் கொள்வது, தக்கவைத்துக் கொள்வது என்பதைப் பார்த்தாக வேண்டும்.

இன்பம் என்பது எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டது அன்று. காக்கை குருவிகளும் குழந்தைகளும் வலியுடனேவா இருக்கின்றன? எண்ணிப்பாருங்கள். இளவயதில் மனம் கொப்பளிக்கக் கொப்பளிக்க இருந்திருப்பீர்கள். நாட்கள் செல்லச் செல்ல அந்த நிலை அருகி வந்திருக்கக் கூடும். ஏன்? நாம் நம்மை நிபந்தனைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டதுதான். இது கிடைத்தால் வெற்றி, அல்லாவிடில் தோல்வி. தோற்று விட்டோமோயென்கின்ற வலி. அது அடைய உழைக்க வேண்டும். தோற்றுவிடுமோயென்கின்ற அச்சம், வலி. புது கார், அந்தா அவர் வைத்திருப்பதை நாமும் பெற்றுவிட்டால் இன்பம், அல்லாவிடில் அதனை அடையும் வரை வலி. ஆக, அப்படியான நிபந்தனைகளுக்கு மசியாமல் இருந்தால் வலியும் இல்லை. அதற்காக அதனை அடைய வேண்டுமெனும் குறிக்கோள் கொண்டிருக்கக் கூடாதென்பதுமில்லை. Consciously break free from such conditions.

இன்பம் என்பது அவரவர் தெரிவு. ஏமாற்றங்களும், தோல்விகளும், இழப்புகளும் வரும்தான். அழலாம். அடுத்தவருடன் பேசலாம். தனிமையில் இருக்கலாம். ஆனால் அவை எல்லாமே நம் கவனத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு சிந்தனையும் இல்லாமல் மனத்தை வெறுமைக்குப் பறிகொடுக்கும் போதுதான் அதிலிருந்து மீள முடியாமற்போய் விடுகின்றோம். சமூகத்தில் கேள்வி கேட்கும் பழக்கம் இருக்க வேண்டும். அது இல்லாத இடத்தில், தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் பழக்கமும் அருகிப் போய் விடும். அதனாலே இன்பத்தைப் பறிகொடுப்பதும் நேர்ந்து விடுகின்றது.

தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அறிதலும் பழகுதலுமாக. நம்முள் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களே தொடர்ந்து மனத்தைப் புத்துணர்வுடன் இருக்க வழிவகுக்கும். நடப்பில் நிகழ்வனவற்றுக்கொப்ப தகவமைத்துக் கொள்வதும் மாற்றம்தானே? நம்முள் மாற்றங்களே நிகழ்ந்திராத போது, உயிர்த்திருத்தலுக்கு ஒரு பொருளுமில்லை. வலிதான் மிஞ்சும். ஆகவே நிபந்தனைகளுக்கு ஆட்படாமல் இருப்பதும், தெரிந்து செயற்படுவதும் இன்புற்றிருத்தலுக்கே இட்டுச் செல்லும்.

Happiness depends upon ourselves. -Aristotle



4/25/2023

எப்படியாக உயிர் வாழணும்?

எதுக்காக உயிர் வாழணும்?’ என்பது குறித்து இருவேறு குழுக்களில் பேசத் தலைப்பட்டேன்.  பெரிதாக ஆதரவு கிட்டவில்லை. எனினும் நாம் நினைத்தவற்றைப் பதிவாக எழுதி வெளியிட்டோம். அன்பு காசி அண்ணன் அவர்கள் தம் காலவரிசையில் பகிர்ந்திருப்பதாய்த் தெரிவித்தார். மகிழ்வாக இருந்தது. 

அதற்குக் கிட்டிய மறுமொழியையும் தெரியப்படுத்தி இருந்தார். இனி அது குறித்துப் பார்ப்போம்.

1.”அந்த பயோ தான் கொஞ்சம் நெருடல்.”

வலைப்பதிவு துவங்கிய காலத்தில், முகப்பு மொழியாக, “எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!” எனும் சொலவடையைப் பகிர்ந்து, அது இன்னமும் அப்படியே இருக்கின்றது. இதே சொலவடையை இப்படியும் சொல்வார்கள், “இனம் இனத்தோட, வெள்ளாடு தன்னோட”.

இனம் என்பதைச் சாதி, ரேசிசம் எனப்படுகின்ற இனவாதம், மொழிவாதம் முதலானவற்றின்பேரில் வியந்தோதப்படுவதாகக் கருதும் போது நெருடல் கொடுக்கக் கூடியதுதான். ஆகவே அப்படியான மறுமொழிக்கு முகாந்திரம் உண்டு. அதே வேளையில், முகப்புமொழி இடம்பெற்ற வரலாறு, இடம், பொருள், ஏவலைக் கொண்டும் கொஞ்சம் மொழிப்புலமை கொண்டும் பார்க்கின் அந்நெருடலுக்கு வாய்ப்பிராது. எப்படி?

இணையம், வலைப்பதிவுகள் தோன்றிய காலம். திறன்பேசிகளோ(smart phone), மேம்பட்ட அலைக்கற்றைகளோ இல்லாததொரு காலம். 2006ஆம் ஆண்டு. தாய்த்தமிழ் நாட்டிலிருந்து பத்தாண்டுகளாகப் பெயர்ந்து  பூமிப்பந்தின் மறுகோடியில் வாழும் ஊரகத்தான் ஒருவன், சகதமிழரோடு புழங்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். சக தமிழர் என்பதையுங்கடந்து, மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஒவ்வாமை கொள்ளாமல் இயைந்து உரையாடக் கூடிய அளவில் ஒரு கூட்டத்தோடு சேருகின்றாமெனும் நினைப்பில் முகப்பு மொழி சிறப்புச் சேர்க்கின்றது. அமெரிக்காவில் இருந்தாலும், தனக்கான ஒரு கூட்டம் என்பது தேவையாக இருக்கின்றது. திருக்குறளும் அதையேதான் சொல்கின்றது.


இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

சுற்றம், கூட்டம், சமூகம், குழுமம், திரள் ஆகிய பொருட்களில்தாம் ‘இனம்’ எனும் சொல் திருக்குறளில் எடுத்தாளப்பட்டு இருக்கின்றது.  இனம் எனும் சொல்லின் வேர், ‘இன்’ என்பது. அதாவது ”இந்த” காலம், இடம், பொருள் என்பதுதான் வேர். இந்தக் காலத்தில், அதாவது நடப்பில் அண்டி இருக்கும் மக்கட்கூட்டம் இனம். சொலவடையின் பிறப்பிடமும் அதுவே. அண்ணன் அவர்கள் மிக அருமையாகச் சொல்லி இருக்கின்றார். “ஆடு மாடுகள் பல நிலப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்று வந்தாலும் இரவில் அவை தனக்கான கொட்டிலில் தன் தோழமைகளோடு அடைந்து கொள்வது என்பதைக் கண்ட ஊர்ப்புறத்தார் சொல்லாடல் இது. இனம் என்பதற்கு இறுக்கமான பொருள் கொள்ளத் தேவையில்லை. ”

2.IMO, 4th point is is very weak. First three are good enough. YMMV.

இந்த மறுமொழியும் பொருளார்ந்த மறுமொழிதான்.  ஏன் வாழ வேண்டும் என்பது தலைப்பாக இருந்தாலும், சுருங்கச் சொல்லும் போது, ஏன், எதற்கு, எப்படி என்பனவற்றையும் உட்கொண்டாக வேண்டுமென்பதே அது இடம் பெற்றதற்கான காரணம்.  தம் மறைவுகாலத்துக்குப் பிறகு வருபவருக்கும் தீங்காய் இல்லாதபடிக்குச் சுவடுகள் இருக்கும்படியாக வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு வாழ்தல் இனிது.

https://maniyinpakkam.blogspot.com/2023/04/blog-post_25.html


எதுக்காக உயிர் வாழணும்?

1. உலகம் ஒவ்வொரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கின்றது. ஆக, புதுப் புது அனுபவங்களைக் கற்று இன்புற்றிருக்க வாழ்தல் இனிது. (Learning)

2. அண்டி இருப்போருக்கு நம் உழைப்பும் அக்கறையும் தேவையாக இருக்கின்றது. அதற்காக வாழ்தல் இனிது. (Supporting)

3. விரும்பிய வண்ணம் தன் செயல்களை வடிவமைத்துக் கொள்தலும் கட்டமைத்துக் கொள்தலுமாகப் பலவற்றையும் செய்து பார்க்க வாழ்தல் இனிது (experiencing)

4.மறைவுக்குப் பின்னரும் வாழ்ந்தமையின் பயனாக விட்டுச் செல்வதற்காகச் சுவடுகளைக் கட்டமைக்க வாழ்தல் இனிது(legacying)

It is not length of life, but depth of life.


4/13/2023

வெயில்


 ஒருநாள் அந்தவழியாக நடந்து கொண்டிருந்தேன். சரசரவெனும் ஓசை. திரும்பிப் பார்த்தேன். அல்லையில் இருக்கும் காட்டில் முளைத்திருக்கும் சோளப்பயிர்களின் தோகைகள் எல்லாம் வளைந்து நெளிந்து இளம்பச்சையில் அலையலையாய் அலையடித்துக் கொண்டிருக்க அந்த பசுங்கடலின்மீதாகப் பொழிந்தபடிக்கு மழை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நான் ஓடிச்செல்ல முற்பட்டேன். எதிர்த்திசையின் ஓரத்தில் கொங்காடையுடன் முத்துலட்சுமி தன்னுடைய ஆடுகளின் மீதான பார்வையைத் தொலைத்து விட்டு என்னைப் பார்த்தாள். என்னைப் பார்த்ததும் எனக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வரும் மழையையும் பார்த்திருக்க வேண்டும். ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ என்றபடிக்குப் பாட்டுப் பாடலானாள். சங்கிப் போயிருந்த நான் அந்தப் பாட்டில் திடுக்கிட்டு நின்றுவிட்டேன். ஆமாம். கிழக்கில் இருந்து வந்த மழை என்னை நனைத்து விட்டிருந்தது. அதே சக வேளையில் மேற்கில் இருந்து வரும் வெயில் என்னை உலர்த்திக் கொண்டிருந்தது. சிறுகுருவிகள் அங்கும் இங்குமாகப் பறந்து நுரைநாட்டியம் ஆடின. 

முத்துலட்சுமி மீண்டும் பாடினாள், ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ அன்றைக்குப் பிறகு நிறைய முறை பலரும் இந்தமாரியான காட்சியில் இந்தப் பாட்டைப் பாடக் கேட்டிருக்கின்றேன். நானும் பாடியிருக்கின்றேன். நரிக்கும் கழுதைக்கும் கல்யாணம் நடந்ததா? அவர்களுக்கு குழந்தைகள் ஏதேனும் பிறந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு எனக்குத் தெரிந்து, பலருக்குக் கல்யாணம் ஆகி, அதாவது குரங்குகளோடு கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்து, பெயரன் பெயர்த்திகளைக் கூட கண்டிருக்கின்றனர். இப்படித்தான் எனக்கும் வெயிலுக்குமான அறிமுகம் உண்டாகிற்று.

வாகைத்தொழுவு வேலூரில் வக்கீல்நாயக்கர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். காலையில் எழுந்ததும் அம்மாவென அடுக்களைக்குச் செல்வது வழக்கம். ஓட்டுக்கூரையில் இருந்து சிறுகீற்றுப் பிறந்து கண்ணாடிக்குழல்கள் போல ஆங்காங்கே வெயில்க்குழாய்கள் ஊடுருவித் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நீள்வட்டங்களாக. அம்மாவை மறந்து அந்த வெயில்க்குழாய்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அந்தக் குழாய்களின் நடுவே துகள்கள், கோடானுகோடித் துகள் அங்கும் இங்குமாகப் பறந்து பறந்து ஆகாசவித்தைகள் காண்பித்துக் கொண்டிருக்கும். கொஞ்சநேரத்தில் அந்தத் துகள்கள் எல்லாம் காணாமற்போய் வெறும் வெயில்க்குழாய்கள் மட்டும் தன்நீட்டத்தைக் குறைத்து விட்டிருக்கும். பள்ளிக்கூடம் புறப்படும் போது வந்து பார்த்தால் அவை காணாமற்போயிருக்கும். இதன் அந்தரங்கம் பிடிபடுவதற்குப் பலகாலம் ஆகிற்று.

பத்தாம்வகுப்புத் தேர்வு எழுதி விடுமுறையில் இருக்கும் போது பள்ளியில் இருந்து ஓர் அழைப்பு. பள்ளியின் அறங்காவலர் எல்.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியார், ஜிடி நாயுடுவின் மகளார் சரோஜினி அம்மாள் அவர்கள் அளித்த கொடையின் பேரில் ஒவ்வோர் வகுப்பிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு 12 நாட்கள் கல்விச்சுற்றுலா, நீயும் தெரிவாகி இருக்கின்றாயென்றார்கள். டி.கல்லுப்பட்டி எனும் ஊரில் இருக்கும் காந்திநிகேதன் ஆசிரமத்தில்  தங்கிக் கொண்டு, அவ்வளாகத்தில் இருக்கும் எல்லா கைவினை ஆலைகள், அருகில் இருக்கும் சில பல இடங்களெனப் போய்வருவதாக ஏற்பாடுகள். விடுதியில் ஒருநாள் மாலையில் ஏதோ பொருள்வாங்கி வரச் சொல்லி, “வெயிலூட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கடையில வாங்கிக்க” என்றார் உள்ளூர் ஆசிரியர்.

வா.வேலூரில் எங்கள் பக்கத்து வீட்டின் பெயர் கரியூடு. வீட்டுச் சுவர் முழுதும் சுண்ணாம்புக்கு மாற்றாய் கரிபூசப்பட்டு இருந்திருக்க வேண்டும். கரியூட்டு வேணுநாயக்கர் என்றார்கள். அப்படியானால் வேறென்ன வேணுநாயக்கர்கள் இருக்கின்றனர் என எதிர்க்கேள்வி கேட்டேன். சிந்தாமணி வேணுநாயக்கர், கொட்டாரத்துவீட்டு வேணுநாயக்கர் என்று அடுக்கினார்கள். நான் திகைத்துப் போனேன். சில ஆண்டுகளில் பக்கத்து ஊரான சலவநாயக்கன்பட்டிப் புதூருக்குக் குடிமாறிச் சென்றோம். அங்கே சென்றால் மச்சுவீட்டுக் கிருஷ்ணசாமி என்றார்கள். அப்படியென்றால் வேறென்ன கிருஷ்ணசாமி இருக்கின்றனர் எனக் கேட்டேன். பெரியவீட்டுக் கிருஷ்ணசாமி, செந்தோட்டத்துக் கிருஷ்ணசாமி என்று அடுக்கினர். இந்தப் பின்புலத்தில், கரியூடு, மச்சுவீடு, பெரியவீடு பார்த்துவிட்டோம். இதென்னடா வெயிலூடு என்ற வினா என் மண்டையைக் குடைந்தது. 

‘சார், நானும் கூடப் போய்ட்டு வர்றன்’ என்றேன். ‘நீ எங்கடா போற? பேசாம உக்கார்றா’ என்றார் இராமசாமி வாத்தி. உள்ளூர் ஆசிரியர் குறுக்கிட்டு, ‘வுடுங்க சார். பய்யன் ஆசப்படுதான்’. நெல்லை மொழியில்  நம் மனத்தில் பாலைவார்த்தார். இராமசாமி வாத்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும். உடன்போய், சக்கரை, பொட்டுக்கடலை எல்லாம் வாங்கி ஆகிற்று. ‘அண்ணா, கடை இங்க இருக்கு. அந்த வெயிலூடு எங்கங்ணா?’ என்று நான் என் கடையை விரித்தேன். ‘அங்கனா பார்றா. அதுதானாக்கும் வெயிலூடு’ என்று நாஞ்சில் மொழியில் ஓர் இழுவையைப் போட்டார் அந்த சமையற்கார அண்ணன். இஃகிஃகி. கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஓடுகளும் வெள்ளை வெளேரென இருந்தன. இளமஞ்சள் மின்னொளியில் அந்த வீடு தகத்தகவென பாலொளியில் பப்பரப்பேவேன இருந்தது. ஓ, இதுதான் அந்த வெயிலு? வெயிலூடாவென வந்து சேர்ந்தேன்.

காலைவெயில் கழுதைக்கு நல்லது. மாலைவெயில் மனிதனுக்கு நல்லது. இப்படியாக எவரோ என்றோ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. பிற்பகலுக்கும் மாலைப்பொழுதுக்கும் இடையிலான நான்குமணி. சரியெனச் சொல்லி வீட்டின் முன்பாகப் போய் வெயிலில் உட்கார்ந்து கொண்டென். சுகமாக இருந்தது. நினைவுகள் பெருக்கெடுத்து ஓடின.

வெயிலில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் நம் உடற்தோலில் பட்டு ஊடுருவும் போது, தோலில் இருக்கும் கொழுப்புப்பசையை வைட்டமின்-டி ஆக மாற்றுகின்றது. அந்த வைட்டமின் டி, உடற்கொழுப்பில் சேமிப்புக்கிடமாகி எத்தனை காலத்துக்கும் நம்முள் இருந்து, தேவைக்கேற்ப பயன்பாட்டுக்குள்ளாகும். பற்றாக்குறை ஏற்படும் போது, நாம் உண்ணும் உணவில் கிடைக்கப்பெறும் உயிர்ச்சத்து-டி பயன்படுத்தப்படும். ஆனால் இத்தகைய கொள்மானம் மிகக்குறைவுதான். எனவேதான், வெயிற்புசிப்பு இல்லாத இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருக்க நேரிடுகின்றது. அதற்காக வைட்டமின் டி சத்துமாத்திரைகள் உட்கொண்டால், அவற்றின் பக்கவிளைவுகள் தோன்றலாம். ஆனால் வெயிலால் கிடைக்கப் பெறும் உயிர்ச்சத்துக்குப் பக்க விளைவுகள் இல்லையாம். ஆகவே வெயில் தரிசனம் நன்று. வெயிலில் குளித்த இவனுக்கு, மழையில் குளித்த வெயிலின் நினைவுகள்!



4/12/2023

your weakness is my strength


பொருளியல் உலகில் இந்தக் கூறு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. அதாவது, உன் வலுவீனமே என் வலு. எப்படி?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பிள்ளையை ’புவனா கோச்சிங் செண்ட்டர்’ அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை. அவர்கள் அனுப்புகின்றார்கள், இவர்கள் அனுப்புகின்றார்கள், அப்படி, இப்படி எனப் பீடிகை. நம் கேள்வி, ’தெரியாததைத் தெரியப்படுத்தும் வகுப்பா? அல்லது, வினாக்களை எப்படி எதிர்கொள்வதெனும் பயிற்சியா?’. உடனடி விடை, ‘இரண்டும்தான்’. ’அப்படியானால் அனுப்பத் தேவை இல்லை’, நம் பதில்.

வீடு இரண்டாகி அல்லோகலப்பட்டு விட்டது. அவர்கள் பிள்ளை விடிய விடியப் படிக்கிறாள். அது ரொம்ப முக்கியம். அல்லாவிடில் நல்ல பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. நான் வேண்டுமானால் என் அம்மாவிடம் பணம் வாங்கிச் செலவு செய்கின்றேன். அதறா புதறா. கண்ணீரும் கம்பலையுமாய்!

தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு இன்னமும் 10ஆம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. நம் பிள்ளை முதற்பத்து பதினைந்து இடங்களுக்குள் வருபவர். அது போக, பயிற்சிக்கான வளங்கள் ஏராளமானவை இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி இருக்க, வாராவாரம் போக ஒருமணி நேரம், வர ஒருமணி நேரம், வகுப்பு ஒன்னரை மணி நேரம், ஆக மொத்தம் மூன்றரை மணி நேரம், பிளஸ் ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் டாலர்கள் வரை பணச்செலவும். எதற்கு? பணத்தைக் காட்டிலும், பிள்ளையின் நேரவிரயம், அழைத்துச் சென்றுவர நம் நேரவிரயம். இத்தனையையும் கடந்து, கொள்கை அளவில் முரண்பாடான செயலைச் செய்கின்றோமேயெனும் குற்றவுணர்வுடன் வதைபட்டாக வேண்டும். ஆகவே, நோ!!

பதினோராம் வகுப்பில் பள்ளியிலேயே கட்டணமின்றி தேர்வு நடத்தப்படுகின்றது. அதில் கிடைத்த மதிப்பெண்களே போதுமானது. என்றாலும், கூடுதலாக்கிக் கொள்ளும் நப்பாசையில், குறைவாக மதிப்பெண் பெற்ற பாடங்களில் மேம்படுத்திக் கொள்ள, ஒரு மணிக்கு எண்பது டாலர்கள் வீதம் ஐந்து வகுப்புகளைப் பிறிதொரு பயிற்சி நிலையத்தில் கொள்வனவு செய்தாகிற்று. அதன்பின்னர் ஒருநாளில் தேர்வு. 36க்கு 35 மதிப்பெண்கள். மகிழ்ச்சி. அடுத்தடுத்த மாதங்களில் அறிவிப்பு. பல்கலைக்கழகங்களின் சேர்க்கைக்கு ACT, SAT தேர்வு மதிப்பெண்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இஃகிஃகி, போச்சா?

scarcity marketing

The fear of missing out can have a powerful effect on us. அதாவது அண்டி இருப்போரைக் கண்டு, அதை அடைவதற்கான வாய்ப்பு நமக்கு இல்லாமலே போய்விடுமோயென்கின்ற பதற்றம், அச்சம், பொச்சாவாமை என்பன நம்மைக் காவுகொண்டு விடும். இந்த வலுவீனம்தான் விற்பனையாளர்களின் வலு. ஐபோனிலிருந்து, கார்களிலிருந்து, எல்லாவற்றிலும் நாமே நம்மைத் தொலைத்துக்கொள்ளும் இடம் இதுதான். எருமைக்குப் புல் பிடுங்கலாம்; பெருமைக்குப் புல் பிடுங்கலாகுமா?

ஏக்கப்பாட்டினைக் கட்டமைத்து விட்டால் போதும். மக்கள் அந்தந்தப் பொருட்களைத் தேடிப் படையெடுப்பர். அதற்கான வழிகளாகச் சிலவற்றை, மார்க்கெட்டிங் உத்திகளாகப் பல்கலைக்கழகங்களிலேயே கற்பிக்கப்படுகின்றன.

1. இது இல்லாவிட்டால் உங்கள் எண்ணம் ஈடேறுவது கடினம் எனக் கட்டமைத்தல் எடுத்துக்காட்டு: கோச்சிங் இல்லாவிடில் மற்றவர்கள் உங்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவர்.
2. இருப்பு விரைவில் தீர்ந்து விடுவதாகக் கட்டமைத்தல், எடுத்துக்காட்டு: இன்னும் 3 பொருட்களே இருப்பில் உள்ளன
3. நுகர்வாளர்களுக்கிடையே போட்டியைக் கட்டமைத்தல். எடுத்துக்காட்டு: இன்னும் 12.5 நிமிடங்களுக்கு மட்டுமே இந்த விலை
4.உடனடிக் கொள்வனவு செய்வோர் முதலில் பயனை அடைந்தவர்களெனும் பெருமையை அடைவர். எடுத்துக்காட்டு: முதல் 100 பேருக்கு 10% விலைக்கழிவு
5. உடனடிக் கொள்வனவு செய்வோருக்கு கூடுதல் பொருள்/சேவை விலையில்லாமல். எடுத்துக்காட்டு: ஃபோன் வாங்கினால் உறை விலையின்றி முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே

இப்படிப் பட்டியல் நீளுகின்றன. இவற்றுக்கு அடிப்படை, எப்படியாகினும் நுகர்வாளரிடத்திலே ஏக்கப்பாட்டினைக் கட்டமைத்துத் துரிதப்படுத்தி விட வேண்டும் என்பதுதான். அப்படியானால் நாம் எதையுமே வாங்கத் தேவை இல்லையா? அப்படியும் இல்லை. தேவைக்கு ஏற்றாற்போல உகந்தவற்றை அதிக விலை கொடுத்தேனும் வாங்கத்தான் வேண்டும். “தேவைக்கு ஏற்றாற்போல” என்பது முக்கியம். இஃகிஃகி. நான் இன்னமும் ஐபோன்-6தான் வைத்திருக்கின்றேன். அதுவே தேவைக்கும் அதிகமானதாக இருக்கின்றது.



4/08/2023

perceptions

காரணமே இல்லாமல்
ஒருவரை பிடிக்கல;
காரணமே இல்லாமல் ஒருவரை பிடிச்சி போச்சு,
இதற்கு பின்னால்
ஒரு காரண காரிய இருக்கும்.
அது ஏதேனும் ஒன்றை காரணமாக அமைந்து இருக்கும்.
இது பெரும்பாலும் 
உணர்வு சார்ந்த காரணமாக இருக்கலாம்.



ஒருவரைப் பார்க்கின்றோம். நம்முள் சட்டென ஒரு நிலைப்பாடு உருவெடுக்கும். அந்நபரின் தோற்றம்,  ஆடை அணிகலன்கள், பேச்சுநடை, அங்க அசைவுகள் இவற்றின் பேரிலான நம் கடந்தகால நினைவுகளின்  அடிப்படையிலான யூகங்கள் அந்த நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கும். பின் அது சேமிப்பிலும் பதிவாகும். இப்படிப் பதிவாகும் நினைவுப்பதிவுகள்தாம் நாள்தோறும் எண்ணற்ற நிலைப்பாடுகளை நம்முள் விதைக்கின்றன. அவற்றைக் கேள்விக்குள்ளாக்காத வரையிலும், அது தொடரும். இப்படித்தான் ஒருவர் அவுட் டேட்டட்(தேய்வழக்கு) ஆவது.

மேற்கண்ட காணொலியைப் பார்க்கின்றோம். ஒருவருக்குப் பாலுணர்வு அடிப்படையிலான பார்வை அமையக் கூடும். ஒருவருக்கு, உடற்கட்டமைப்பு, அதன்பின்னால் ஆன உணவுப்பழக்கம், உடற்பயிற்சி என எண்ணங்கள் விரியலாம். மற்றவருக்கு மயிர்ப்பராமரிப்பு, ஒப்பனை, அதுசார்ந்த கூறுகள் குறித்தான கவனக்குவியல் ஏற்படலாம். மற்றவருக்கு நடன அசைவுகளின் கோர்வை குறித்தான அறிதல் ஏற்படலாம். இன்னொருவருக்கு அரங்க அமைப்பின் பின்னணி, அறைகலன் குறித்த நாட்டம் பிறக்கலாம். இப்படி எல்லையே இல்லை. அது, அவரவரின் கடந்த கால அனுபவத்தையும் கொடுக்கப்படும் முன்னுரிமையையும் பொறுத்து அமையும்.

இருவர் உள்ளம் என்கின்ற படத்தில் வரும் பாடல் இப்படிச் சொல்கின்றது. பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்,  பாடல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், கொடிகள் எல்லாம் பலவிதம், கொடிக்குக் கொடி ஒருவிதம், கொண்டாட்டம் பலவிதம், நானதிலே ஒரு விதம், இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று, உறவில் இன்பம் கண்டு உருகிடிவோம் என்றும்!

People see what they want to see! Often, what people want to see never has anything to do with the truth.


 

4/07/2023

We The People

 

அமெரிக்கா

உலகின் முதன்மை நாடாகக் கருதப்படுவது அமெரிக்கா. நாட்டின் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து தொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த நாட்டின் விழுமியங்களை, அரசியல் சாசனத்தை, தொடர்ந்து முதன்மை நாடாக இருந்து வருவதன் அடிப்படையைப் பெரும்பாலும் எவரும் கருத்தில் கொள்வதே இல்லை.

மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை என்பதுதான் அச்சாணி. அரசின் நெஞ்சுத்துடிப்பென எழுதப்பட்டிருப்பது, “We The People".

1787ஆம் ஆண்டு எழுதப்பட்டது அரசியல் சாசனம். வரையறுப்பதன் முதற்கட்டங்களில் இடம் பெற்றவர்கள் மாணவர்கள். அடுத்த கட்டமாக இடம் பெற்றவர்கள் தோராயமாக 40 வயதுக்குட்பட்டவர்கள். விர்ஜீனியா திட்டம் முன்வைக்கப்பட்டது. மாற்றாக நியுஜெர்சி திட்டம் முன்வைக்கப்பட்டது. விர்ஜீனியா திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. விர்ஜீனியா திட்டத்தின் முதன்மையாளரான ஜேம்ஸ் மேடிசனின் வயது அப்போது 30+. கடைசி கட்டப் பணிகளில் பங்காற்றியவர்களின் சராசரி வயது 42. ஜோநாதன் டேட்டன் என்பார் 26 வயதுடையவர்.  பெஞ்சமின் பிராங்ளினின் வயது 81.

மார்ச் 26, 2023 அன்று டென்னசி மாகாணத்தின் பள்ளியொன்றில் துப்பாக்கிச்சூடு இடம் பெற்று, ஆறு பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். அதன் நிமித்தம், துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமெனச் சொல்லி மக்கள் போராடுகின்றனர். மாகாண அவைக்குள்ளும் கொந்தளிப்புகள் இடம் பெறுகின்றன. அவையின் மாண்புக்குப் பெருமளவில் குந்தகம் விளைவித்ததாகச் சொல்லி மூன்று டெமாக்ரட் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய அவை முற்படுகின்றது. ஏப்ரல் 6, 2023 அன்று இரண்டு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த பொதுத்தேர்தலுக்கான இடைவெளி ஓராண்டுக்கும் மேலாக இருந்தால், சிறப்புத் தேர்தல் இடம் பெற்றாக வேண்டும். அந்த சிறப்புத் தேர்தல் இடம் பெறும் வரையிலும் அந்தந்தப் பகுதிகளுக்கான மாகாண அவை உறுப்பினராகப் பணிபுரிய, அந்தந்தப் பகுதி உள்ளூராட்சி மன்றங்களால் தற்காலிக உறுப்பின்ர் நியமிக்கப்படுவார். இந்த இரண்டு பகுதிகளுக்கும், தகுதி இழப்புச் செய்தவர்களையே மீண்டும் நியமிக்கப் போவதாக உள்ளூராட்சிகள் அறிவித்து இருக்கின்றன. ஆக, இவர்கள் மீண்டும் அவைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

தகுதி இழப்புச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் நியமனம் செய்யப்பட்டாலோ, தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்தாலோ, அவர்களை மீண்டும் ஒருமுறை, அதே காரணத்துக்காய் வாழ்நாள் முழுமைக்கும் தகுதி இழப்புச் செய்ய முடியாதென்பது அரசியல் சாசனம். Constitution says members can be expelled for disorderly behavior with a two-thirds majority vote, they cannot be expelled “a second time for the same offense.”

இவையெல்லாம் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? ஒருவரின் போராட்ட உணர்வு மதிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை என்பதாலேயே எதையும் முடக்கிவிடக் கூடாது. அப்படியான நிலை ஓங்குமானால் மக்களாட்சி, “We The People" என்பது அடிபட்டுப் போகும் என்பதுதான்.

தமிழ் அமைப்புகளில் இருப்போர் இத்தகைய அமெரிக்க விழுமியங்களைக் கற்றுணர முன்வர வேண்டும். குழுவாத வெறிகொண்டு அலையக் கூடாது. அல்லாவிடில், படிப்படியாக அது பெரும் தீங்காய் முடியும். எப்படி? இனவாதிகளும் தீவிரவாதம் தழுவியவர்களும் சொல்லி வருவது இதைத்தான், “குடிவரவாளர்களால் நாட்டின் இறையாண்மை, பண்பாடு சீர்குலைந்து வருகின்றது. ஆகவே இன்னாருக்கு வாக்களிக்க வேண்டும்” போன்றவையெல்லாம் அவர்களின் வாதங்கள். அதற்கு வலுச்சேர்க்கும்படியாக குடிவரவாளர்களும் செயற்படும்போது அது அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கவே செய்யும்.



3/31/2023

முட்டாள்கள் நாள்

 

அள்ளக்கை, முட்டாள் என்பன அறிவுத்திறமும் உழைப்புமற்று சொன்னதைச் செய்யும் நபர்களுக்கான சினையாகு பெயர். தானிய வணிகம் செய்யச் செல்லும் போது, தரத்தைக் கண்டறிவதற்காக, சொன்னதும் கொஞ்சமாக  பதக்கூறு(sample) அள்ளி எடுப்பதற்காகக் கூடவே வரும் ஆள் அள்ளக்கை. அது போன்றே இழுத்துவரும் தேரின் சக்கரங்களுக்கு முட்டுப் போடுவதற்காகவே வரும் ஆள் முட்டாள். இதில் முட்டாள் என்பது ஏமாறுபவர்களைக் குறிக்கும் குறிச்சொல்லாகவும் புழங்கப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் வாக்கில் ஆற்றில் பெருவாரியாக மீன்பிடிப்பது வழக்காறு. பிடிபடும் மீன்கள் ஏமாற்றத்துக்கு ஆளானது என்பதான குறியீடாகப் போனது ஐரோப்பிய நாடுகளில். அதைத்தொட்டு ஏப்ரல் முதல்நாள் மீன்கள் நாளென்றும், ஏமாறுபவர்களின் நாளென்றும் கடைபிடிக்கப்படுகின்றது. அதன்நிமித்தம் அறியாதவாறு முதுகுப்புறத்தில் காகிதமீன்களை ஒட்டிவிட்டுச் சிரிப்பதும் வாடிக்கையானது; நம் ஊரில் முதுகுப்புறத்தில் பேனா மை அடித்துச் சிரிப்பதைப் போலே!

குதூகலத்திற்குச் செய்யும் சிறுசிறு விளையாட்டுகள் அந்தந்தத் தருணத்தை இலகுவாக்கக் கூடியவை; மச்சினியின் மீது ஊற்றப்படும் மஞ்சநீரைப் போலே! சடையின் பின்னால் ஒட்டப்படும் ஒட்டுப்புல்லைப் போலே!!

எட்றா வண்டிய... எங்கடா அந்த ஒட்டுப்புல்லு?!



3/29/2023

அறியாமை

தம்பி ஒருவர் நடைப்பயிற்சியில் இணைந்து கொள்வது வழக்கம். அண்மைக்காலமாக நிலைமை அப்படி இல்லை. எப்போதாவது இணைந்து கொள்கின்றார். நான்கரை மைல்கள் நடந்து வந்தோம். நடையின் துவக்கத்திலே சொல்லிக் கொண்டேன், ’அறியாமையில் இருந்தால் நல்லது; அறிந்து கொள்தல் கூடக்கூட, வருத்தங்களும் ஏமாற்றங்களும்தான் மிகுகின்றது’ என்றேன். தொடர்ந்து அவர், ‘நீடித்த உண்ணாநிலையால் கவனச்சிதறலின்றி கூர்மையுடன் இருக்க முடியும்’ என்றார்.

வினை இப்படித்தான் துவங்குகின்றது. உடல்நலப்பித்து, இணையப்பித்து முதலானவற்றால் ஏதோவொன்றைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதில் அவர்கள் முன்னேற்றத்தை அடைய அடைய பித்துநிலையின் எழுச்சியும் மேலோங்கி விடுகின்றது. யுஃபோரியா(yoo-FOR-ee-uh) என ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. EUPHORIA is a feeling of well-being or elation. புளகாங்கிதம்!  இது தற்காலிகமானது. இவர் என்ன காலாகாலத்துக்கும் உண்ணாநிலையில் இருக்கப் போகின்றாரா? உண்ணாநிலையில் இருக்கும் போதும், அடுத்த சிலநாட்களும் அப்படியான உணர்வில் இருப்பார், இருக்கும் போது உள்ளெழுச்சியுடன் போற்றிக் கொண்டிருப்பார். அதைப் பலர் கேட்க, அவர்களும் மேற்கொண்டிருக்கப் போகின்றனர். இப்படியாக ஆங்காங்கே குற்றலைகள் எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டேதான் இருக்கும். அவை தற்காலிகமானது, மங்கிவிடப் போகின்றவை.

சீரான உணவு, உடற்பயிற்சி, அவ்வப்போதைய குறுகியகால உண்ணாநிலை என்பன, நல்ல கவனக்கூர்மை, ஊக்கம் முதலானவற்றை எல்லாருக்கும் எப்போதும் கொடுக்கவல்லன. நீடித்த விளைவை அவைதான் தோற்றுவிக்கும்.

அடுத்து, எடைக்குறைப்பு, அதன்நிமித்தம் ஏற்படுகின்ற யுஃபோரியா குறித்துப் பேச்சு திரும்பியது. பத்து கிலோ குறைத்து விட்டேன், பதினைந்து கிலோ குறைத்து விட்டேன், நல்ல தோற்றம், பொலிவு என்றெல்லாம் புளகாங்கிதம் கொள்வதை எங்கும் காணலாம். ஆனால், என்னால் இப்போது நிற்காமல் மூன்று மைல்கள் ஓடமுடிகின்றது, ஒருமணி நேரம் ஓய்வின்றி நீச்சல் அடிக்க முடிகின்றது, சென்ற ஆண்டைக்காட்டிலும் நாற்பது பவுண்டு எடை கூடுதலாகத் தூக்க முடிகின்றது என்றெல்லாம் சொல்வதை அரிதாகவே காணமுடியும். இஃகிஃகி, இந்த வேறுபாட்டில் இருக்கின்றது வினயம்.

உடலில் 60% நீர். மனிதனின் உடம்பில் இருக்கும் கொழுப்பின் சராசரி அளவு 30 - 40%. தசைநார்களின் அளவு 25%. எடுத்துக்காட்டாக, ஒருவர் 20 கிலோ எடைக்குறைப்பு எனப் புளகாங்கிதம் கொள்கின்றாரென வைத்துக் கொள்வோம். 12கிலோ எடை நீரின் அளவு என்றாகின்றது. எஞ்சிய 8 கிலோவில் கொழுப்பின் அளவு 3.5  கிலோ.  தசைநார்களின் அளவு 2.5 கிலோ. கட்டமைப்புத்தசை உள்ளிட்ட உறுப்புச்சிறுத்தல்கள் 2 கிலோ எனத் தோராயமாக இருக்கலாம்.

30 வயதுக்குப் பின்னர், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஐந்திலிருந்து பத்து விழுக்காடுகள் வரையிலும் தசைநார்ச் சிதைவு ஏற்படுமென்பதும் அறிவியற்கூற்று. தசைநார்களின் சிதைவு என்பது ஆண்டுக்காண்டு கூடிக் கொண்டே போகும். வளர்த்தெடுப்பது மிகவும் கடினம். தக்கவைத்துக் கொள்வதற்கேவும் முறையான உணவு, உடற்பயிற்சி என இருந்தாக வேண்டும். அப்படி இருக்கும் போது, கண்டதையும் மேற்கொண்டு ஒருவர் எதற்காக தசைநார்ச்சிதைவுக்கு ஆட்பட வேண்டும்? தசைநாரில்தான் உடலின் நகர்வுக் கட்டுமானமே இருக்கின்றது.

ஆக எடைக்குறைப்பில் புளகாங்கிதம் என்பதில் அவ்வளவு பொருண்மியம் இல்லை. மாறாகக் கொழுப்பைக் குறைத்து உடல் வலுவைக் கூட்டி இருக்கின்றேனென ஒருவர் சொன்னால் அது புளகாங்கிதப்பட்டுக் கொள்ள வேண்டியதே. கவனித்துப் பாருங்கள், அளவில் சிறிய தோற்றத்தை எட்டி இருப்பார்கள். முகம் சிறுத்திருக்கும். கைகால்கள் சூம்பிப் போயிருக்கும். தொப்பையின் அளவு சற்றுக் குறைந்திருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று விகிதாச்சாரம் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கும். பெரிய பயனில்லை. மாறாக உருவின் தோற்றம் சிறுத்து, அதே வேளையில் எடை குறையாமலோ, கூட்டியோ இருப்பாரெனில், வலுவும் ஆற்றலும் கூடி இருக்கின்றதெனப் பொருள்.

வலுப்பெருக்குடன் ஒரு பவுண்டு எடை கூட்டுவதென்பது அவ்வளவு கடினமான வேலை. முறையான உணவும், உடற்பயிற்சியும் உடலின் இன்னபிற இயக்குநீர் சுரப்பு ஒத்துழைப்பும் இருந்தால்தான் அது செயலாக்கம் பெறும். அப்படியான நிலையில், இருக்கும் தசைநார்களை இழப்பதென்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வேலை. சரி, கொழுப்பை மட்டுமே குறைக்க முடியுமா? முடியும். மருத்துவக் கண்காணிப்பு, புரதம், கொழுப்பு, நார்ச்சத்துகளுடன் கூடிய உணவுடன் போதுமான உடற்பயிற்சியும் நிதானத்துடன் கடைபிடித்துவருங்கால் படிப்படியாக உடற்கட்டின் தன்மை மாறிவரும். 

The only difference between being uninformed and misinformed is that one is your choice and the other is theirs.



3/28/2023

தன்னெரிமம்

ஆங்கிலமொழியில் Autophagy;இது ஆங்கிலமேதானா என்றால், இல்லை. ஜப்பானிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சொல். Phagy என்றால் எரிமமெனப் பொருள். தனக்காகத் தாமாக எரித்துக் கொள்வதால் Autophagy என்றாளப்படுகின்றது. (aw-TAH-fuh-jee) A process by which a cell breaks down and destroys old, damaged, or abnormal proteins and other substances. The breakdown products are then recycled for important cell functions, especially during periods of stress or starvation.

நம் உடல் என்பது ஆகப்பெரிய வேதிச்சாலை. இப்பேரண்டத்தில்(universe) நிகழ்கின்ற எல்லாமும் ஒரு மனித உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆக நம் உடலும் ஓர் அண்டம்தான். நம் உடலுக்குள் இல்லாத தொழில்நுட்பம் இல்லை, வேதிநுட்பம் இல்லை.

ஐம்பொன் போன்ற சத்துக்கற்களால், கோடானு கோடிக் கற்களால் (அணுக்களால்) கட்டப்பட்டிருக்கின்றது நம் உடல். இயக்கத்திற்குப் போதுமான தனிச்சத்துகள், உணவாக உட்கொள்ளப்படாத போது, இப்படியான கற்களில் சிலவற்றைச் சிதைத்து அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைக் கொண்டேவும் இயங்கத் தலைப்படும். 

ஒருவர் உண்ணாநிலை மேற்கொள்கின்றார். இயக்கத்திற்காக குருதியிலும் உடலிலும் இருக்கும் எரிபொருள் எரிக்கப்படும். ஏறக்குறைய எட்டுமணி நேரத்துக்குப் பின் கல்லீரலின் தற்காலிகச் சேமிப்பில் இருப்பதை எரிபொருளாகப் பயன்படுத்தும். அடுத்த எட்டுமணி நேரத்தில், அது தீர்ந்து போனதும், உடலின் கட்டுமானத்தில் இருக்கும் அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் எல்லாவற்றையும் சிதைத்து அதன்வழி கிடைக்கும் சத்துகளை அதனதன் வேலைகளுக்காகப் பயன்படுத்தும். இதுதான் தன்னெரிமம் எனப்படுகின்றது. இப்படியான தன்னெரிப்புப் பணி முடிந்ததும், உடலில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு, எரிபொருளாக மாற்றப்பட்டு இயக்க ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படும். நிற்க!

தன்னெரிமத்தால், அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் சிதைக்கப்பட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவதால் உடல் பொலிவுறுகின்றது. புற்று, வீக்கம், வீண் அணுக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன.  ஆக, ஆயுள் நீடிக்க வழிவகுக்கும் தன்னெரிமச் செயற்பாட்டுக்கு, 48 மணி நேரம் வரையிலான உண்ணாநிலை சிறந்தது; 16 மணி நேர உண்ணாநிலைக்குப் பிற்பாடு தன்னெரிமம் துவங்கும். 

இத்தகவலை விழுமுதலாகக் கொண்டு, தேடலையும் நாடலையும் மேற்கொள்கின்றோம். தன்னெரிமம் குறித்தான கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. மெய்யெனும் வேதிச்சாலையில் பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைச் செய்கின்றன. அவற்றுக்கு உள்ளீடு பல்வேறு சத்துகள். சில சத்துகள் சேமிப்புக்குள்ளாகின்றன. சில சத்துகள் அன்றாடமும் நாம் உட்கொண்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக, சில உயிர்ச்சத்துகள்(vitamins) நீரில் கரையக் கூடியன. பயன்பாட்டுக்கு உரியது போக எஞ்சியது கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். இப்படியான தனிச்சத்துகளில் எதற்குப் போதாமை ஏற்படும் போதும், மெய்யெனும் வேதிசாலையானது எங்காவது எதையாவது மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியுமாயெனப் பார்த்து, அதனைச் சிதைத்து, அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளும். இப்படியும் தன்னெரிமம் நிகழ்கின்றது. ஆக, தன்னெரிமத்துக்குப் பதினாறு மணி நேரம் உண்ணாநிலை மேற்கொண்டேயாக வேண்டுமென்பதில்லை என்றுமாகின்றது.

மேற்கூறிய கூற்றுகளில் எது சரி? இரண்டுமே சரிதான். எப்படி? தொடர்ந்து மூன்று வேளை உணவு, கூடுதலாக அவ்வப்போது சிறுதீன்கள், பழங்கள், காய்கள், குடிநீர்களென எதையாவது உட்செலுத்திக் கொண்டே இருப்பவருக்குச் சத்துப் போதாமை என்பதே கிடையாது. மாறாக செரிமானப்பளுவும் சேமிப்புச்சுமையுமென ஆகிவிடுகின்றது. அப்படியான ஒருவர் நீடித்த உண்ணாநிலை மேற்கொள்ளும் போது தன்னெரிமம் வாய்க்கின்றது.

உடற்பயிற்சியோ அல்லது உடலுழைப்போ கொண்டு உணவுக்கட்டுப்பாடும் தரித்திருக்கும் ஒருவர், உண்ணுவதில் சற்றுக் காலம் தாழ்த்தும் போதேவும் அவருக்குத் தன்னெரிமம் வாய்த்து விடுகின்றது. இப்படியானவர், நீண்ட ஆயுளுக்கும் பொலிவுக்குமென நீடித்த உண்ணாநிலைக்கு ஆட்படத் தேவையில்லை.

தேடலும் நாடலுமற்ற உடலுழைப்புக் கொண்ட ஒருவர், ஏதோவொரு காணொலியோ கட்டுரையையோ அடிப்படையாகக் கொண்டு நீடித்த உண்ணாநிலை மேற்கொண்டால் என்னவாகும்?  மறுசுழற்சிக்கான  ஒவ்வா, அரைகுறை, புற்று, உபரி அணுக்கள் இல்லாத போது, தன்னெரிமச் செயற்பாடென்பது திடமாய் இருக்கும் தசைநார்கள், இன்னபிற கட்டுமானத்தையும் எரிக்கத் துவங்கும். இது தேவைதானா? சொந்த செலவில் சூனியமல்லவா?? உடல்நலம் எனக்கருதிக் கொண்டு பித்துப்பிடித்து அலைபவர்கள், சொல்வதைத் தின்று கேட்பதைச் செய்து மனநோய்க்கு ஆட்பட்டு விடுகின்றனர். 

தேடலும் நாடலும் உடையவர் ஆழ்நிலைக் கற்றலுக்கு ஆட்படுவார். மற்றவர் மேல்நிலைப் பரப்புரைகளுக்குச் சோரம் போவார்!!



3/23/2023

அமெரிக்கத் தமிழ்ச்சூழல்

ஊடகத்தில் பணியாற்றக் கூடியவர்கள், அதே துறையில் பணியாற்றக் கூடியவர்களுடன் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுகின்றனர். அப்படியான கலந்துரையாடல்களில் இடம் பெறுகின்ற தகவல்கள், காட்சிகள் எல்லாமும் அவர்களின் கவனத்துக்குட்படாமல் திரட்டப்பட்டிருக்க, பின்னொருநாளில் அவை வெளியாகின்றன. அந்தரங்கமான தகவல்கள் பொதுவெளியில் பகிரங்கமாகும் போது, தொடர்புடையவர்களுக்கு நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அவர்களின் பேரிலான நன்மதிப்பும் குறையத்தான் செய்யும்.

இப்படியானவற்றில் சிக்குண்ட ஒருவர் மன்னிப்புக் கோரி ஒரு காணொலியை வெளியிடுகின்றார். பார்ப்போர் மனம் கலங்குகின்றனர். இதெல்லாம் நாடகம் என்பதாக விமர்சிப்பவர்களும் விமர்சிக்கின்றனர். இந்த நேரத்தில்தாம், அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகளில் இடம் பெறுகின்ற போக்கும் நினைவுக்கு வருகின்றது.

தமிழ்மொழி, தமிழ்ச்சமூகம், தமிழ்க்கல்வி முதலானவற்றின் பேரில்தான் முக்காலே மூன்று வீசம் பேரும் தன்னார்வத் தொண்டு புரிய வருகின்றனர். குடும்பத்துக்கான, குழந்தைகளுக்கான, தனக்கான நேரத்தைத் தமிழுக்காக ஒதுக்கித்தான் வருகின்றனர். ஏதோ சிலர் வேண்டுமானால், வணிகநோக்குடன் வருபவர்களாக இருக்கலாம். இப்படி வந்தவர்களுள், சாதி, சமயம், அரசியல், விருப்புவெறுப்பு ரீதியாக அணி சேர்ந்து கொண்டு அக்கப்போர் செய்வது ஒரு பாதி. வணிகநோக்கர்களின் சூட்சுமத்துக்கு இரையாவது தெரியாமலே சோரம் போய்க் கொண்டிருப்பது மறுபாதி. இவற்றுக்கிடையேதான் நற்செயல்களும் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.

மேற்கூறிய மன்னிப்புக் கோரல் காணொலிக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சூழலுக்கும் என்ன தொடர்பு? இருக்கின்றது. அணி என்பதற்காகவே சார்புடன் செயற்படுவதும், குழுவாதத்துடன் செயற்படுவதுமாகப் பெரும்பாலான தன்னார்வலர்கள் இருக்கின்றனர். தன்னாட்சி, தன்பொறுப்பு, தன்னுமை என்பன அடிபட்டுப் போகின்றன. எடுத்துக் கொண்ட தமிழ்ப்பணியைக் காட்டிலும், எதிர்-உளவியலில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர். கூட்டுக் குறுங்குழுவாதத்தின் பொருட்டு ஒருவருக்கொருவர் மற்றவர்களின் பேரிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவையெல்லாம் ஆங்காங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறித்த நினைவில்லாமலேவும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அணிகள் மாறலாம். இணைந்து இருப்போருக்குள்ளும் முரண்பாடுகள் எழலாம். அப்போது இப்படியான தனிப்பட்ட உரையாடல்களின் பதிவுகள் வெளியாகக் கூடும்; வெளியாவதும் வழமை. இப்படித்தான் தமிழ்ச்சூழல் என்பது, நச்சுச்சூழலாக(toxic) மாறிப் போகின்றது. அவர்களுக்குத் தாம் அகப்பட்டுக் கொண்டிருப்பது புலப்படாது. புலப்பட்டிருக்குமாயின், ’அப்படியான எதிர் மனோநிலையே முதன்மை’ என இருக்கமாட்டார்கள்தானே? என்னதான் தீர்வு?

அறம்சார் அமைப்பில், அறமும் சகமனிதனின் பேரிலான அக்கறையுமே முன்னுரிமை கொண்டதாக இருத்தல் வேண்டும். குழுவில் பெரும்பான்மையெனும் தோற்றத்தில் கூட்டுணர்வு ஊக்கம் கொண்டு செயற்படும் போது, தவறானவற்றில் அது நம்மை ஆழ்த்திவிடும். பின்னாளில் பூசல்கள் மேலிடுகின்ற போது, உடனிருந்தவர்களே மோதுகின்ற சூழலும் ஏற்படும். அப்போது அவர்கள் முந்தைய அந்தரங்கத் தகவல்களை பகிரங்கப்படுத்தக் கூடும். சார்புத்தன்மை தவிர்த்து, தம் கொள்கை, கோட்பாடு, அமைப்பின்நலமென இருந்து விட்டால் என்றும் நலம். தலைநிமிர்ந்து காலகாலத்துக்கும் பீடுநடை இடலாம். Volunteerism isn't beautiful and easy, or a bunch of people getting together and working; it's a lot more than that. Why do I say this? "Writing is also a form of activism". -Angie Thomas

நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை [தேவாரம்]

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை!!

o0o0o0o0o

//படிக்கச் கூட கசக்கும்.//

மிகவும் நேரிடையானதும் உண்மையானதுமான கருத்து. மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

எதிர்மறையானவற்றைப் பேசுவது ஆகாதவொன்று. புறம்பானவொன்று. பின்னடைவைத் தரக்கூடிய ஒன்று என்கின்ற அருவருப்பு(stigma) தமிழ்ப்பண்பாட்டில் உண்டு. குறிப்பாக அமெரிக்கத் தமிழ் அமைப்புகளில்.

பேசினால், அது பாராட்டாக, புகழக்கூடியதாக, வாழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும்.  அல்லாவிடில், பேசாமாலே இருந்து விட வேண்டும். ஆனால், மூத்தகுடி, தொன்மை, தொடர்ச்சி என்றெல்லாம் சொல்லி நெஞ்சை நக்கிக் கொள்கின்றோம்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். (ஒளவை)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு (குறள்)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (குறள்)

ஒளவையாரும் திருவள்ளுவரும் சொல்வதென்ன? எண்ணுவதும் எழுத்தைப் (வாசிப்பது, எழுதுவது) போற்றுவதும் கண்களெனச் சொல்கின்றனர். இந்தக் குழுமத்திலேயே கூட முன்பொருமுறை சொல்லப்பட்டது. நேர்மறையான கருத்துகளையே பகிர்வோமென. கசப்பு என்பதற்காக, மருந்தினை உட்கொள்ளாமல் இருக்க முடியுமா?  எழுத்தில் உண்மையும் அறமும் இருக்கின்றதா என்பதுதான் பார்க்கப்பட வேண்டியது.

தத்துவஞானி சாக்ரடீஸ், உரையாடல் என்பது மட்டுமே மனிதனை முழுமையாக்கும் என்றார். ஆனால், உரையாடத் தயக்கம், தடை, அச்சம் என்பதான போக்குடையவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். என்ன காரணம்? நம்முடைய கருத்தினால், மற்றவரின் ஒவ்வாமைக்கு நாம் ஆளாக நேரிடுமோ என்கின்ற அச்சம் அல்லது தன் புகழ், பொறுப்பு போன்ற தன்னலம். இப்படியானவர்களின் தன்னார்வத் தொண்டினால் ஒரு பயனுமில்லை. கூடிக் கலைவதற்கும் களிப்புக் கொள்வதற்கும்தான் பயன்படுமேவொழிய, மேன்மையை ஈட்டித் தராது.

3/12/2023

எண்ணங்கள்

“தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல். மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள். ‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.” இதை எழுதியவர், சுகா என்னும் சுரேஷ் கண்ணன், திரைப்பட இணை இயக்குநரும் எழுத்தாளரும் நெல்லை கண்ணன் அவர்களின் மூத்த மகனும் ஆவார். 

தற்போது இதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? நண்பர் அழைத்திருந்தார். ”கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கின்றாய். என்ன பயன்? எதிர்மனோநிலைக்காரன் எனும் அருவருப்பு(stigma)தானே ஏற்படும்?”. “இருக்கலாம். அதற்காகத் தன் தரப்புக் கருத்துகளை மாற்றிச் சொல்வதும், சொல்லாமலே இருப்பதும் ஏமாற்றிக் கொள்தல்(தன்னைத்தானே) அல்லவா?” என்றேன். மறுமுனையில் ஆழ்ந்த அமைதி. எண்ணிக்கையில் இல்லை வெற்றி. தரத்தில் இருக்கின்றது வெற்றி. It's quality that matters over quantity. நூறு பேராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துலகில் கோலோச்சிய ஜெயகாந்தன் என்பது அல்லாமற்போய் விடுமாயென்ன?

இது அமெரிக்கா. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். முழுமையான தன்னுமைக்கு(லிபர்ட்டி) உரித்தானவர்கள். அழகானதும் அருமையானதுமான வாழ்வுக்கு ஆட்பட்டவர்கள். பொய், புரட்டு, திரிபு, முலாம்பூசப்பட்ட பேச்சுகள் போன்றவற்றுக்குச் சோரம் போகத் தேவையில்லை. சமூகத்தில் பொதுமைப்படுத்தல்களின்வழி உழைப்புச் சுரண்டல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ”ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்”, “ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்”, ”one bad apple ruining the entire bunch” என்பனவெல்லாம் அமெரிக்காவுக்கு, அமெரிக்கப் பண்பாட்டுக்கு எதிரான தேய்வழக்குகள். ஏனென்றால், இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையான தனித்துவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடு. குழந்தைகள் எதிர்க்கேள்வி கேட்பார்கள். அல்லது, குடிவரவாக வந்திறங்கிய பெற்றோரின் ஆதிக்கத்துக்குப் பணிந்து அகநகைப்போடு கடந்து செல்பவர்களாக இருப்பர்.

அந்த ஒரு துளிதான், அந்த ஒரு பானைதான், அந்த ஒரு கூடைதான்! அதனை வைத்து எல்லாமுமே அப்படித்தானென்பதான போக்கில், நல்லது, தீயது எனப் பேசுவதை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிறைய மகளிர்நாள் கூட்டங்களை, தமிழ்ச்சூழலில் கேட்க முடிந்தது. விழிப்புணர்வுமிக்க நல்ல பல தகவல்கள். மகிழ்ச்சி. ஆனால் அவற்றினூடே, போகின்ற போக்கில், பொதுமைப்படுத்தல்களையும் பார்க்க முடிந்தது. ’அமாவாசையில் பிறந்தவன் திருடன்’ என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏதோவொரு திருடன் அமாவாசையில் பிறந்திருக்கலாம். அதற்காக? 


3/10/2023

டைரி - அருள்மொழி

இலக்கியப் படைப்பின் அடிப்படை என்ன? பேசாப் பொருளைப் பேசுவதும், பொதுப்பார்வைக்குப் புலப்படாதவற்றை பொதுவுக்குக் கொண்டு செல்வதும்தான் அடிப்படை. அதுதான் விழுமியமார்ந்த ஓர் எழுத்தாளரின் செயலாக இருக்க முடியும்.

பொதுவாக, வணிகமய உலகில், வெற்றிக்கான வழிகளென அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டு, அதற்காக ஓட்டத்தில் ஈடுபட்டுப் பொருள் தேடிக் கொள்வது வாடிக்கை. அதில் இலக்கியம் விதிவிலக்கன்று. நிறைய வாசகர்களைச் சென்று சேர வேண்டும், புகழெய்த வேண்டும், பாராட்டுகள் பெற வேண்டும், ஒளிவட்டத்தில் நிற்க வேண்டும், இப்படியான பல ஆசைகளின்பாற்பட்டு, நாங்களும் எழுதுகின்றோமென வரிசை கட்டி நிற்போர் ஏராளம். அதில் சிறுகதை எழுத்தாளர்களும் அடக்கம்.

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக, படிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்வதற்காக, சொல்லிக் கொண்டே போய் திருப்பமென்கின்ற வகையில் களிப்பூட்டுவதற்காகயெனக் கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுக்கு இலக்கிய மதிப்பீடு என்பது எதுவுமில்லை.

’டைரி’ எனும் நூலின் ஆசிரியர் இவற்றினின்று முற்றிலும் மாறுபட்டவராகத் தெரிகின்றார். அவரது கதைகள் வழமையான பாதையில் பயணித்திருக்கவில்லை. புனைவுக்கதைகளெனக் கருதினாலும்கூட, உண்மைக்கு மிக நெருக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாகக் காட்சிகளை அடுக்கிக் கொண்டே போய் விசுக்கென எதிர்பாராத ஒன்றைச் சொல்லிப் பரவசம் ஊட்டுவதற்காக உற்பத்தி செய்யப்பட்ட கதைகள் போல இல்லை இவை. சமூகத்தில், சொல்லப்படாத திசையிலிருந்து சொல்லப்படுகின்ற கோணங்களும் உணர்வுகளுமாகப் பயணிக்கின்றன இந்தப் பதினான்கு கதைகளும்.

கடைசியில் முடிச்சவிழ்த்துத் திகில் ஊட்டுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கவில்லை இந்தக் கதைகள். நம்மில், நம் வீட்டில் நிகழ்கின்றவற்றை, ஆரவாரமும் கொந்தளிப்பும் கூச்சலுமுமில்லாமல், கடைமடையில் பயணிக்கின்ற ஆற்றைப் போல, தணிந்த குரலில் படர்ந்து கடலினூடே கலப்பதைப் போல மனத்துள் கலந்து போகின்றன கதைகள்; எண்ணற்ற சிந்தனைப் புடைப்புகளோடு. 

புடைத்திருப்பது காளானாகவும் அமையலாம். பெருமரமாகவும் ஓங்கி வளரலாம். அது அவரவர் மனப்போக்கைப் பொறுத்தது. காளான்களாக, புடைத்த மறுகணமே இருக்குமிடமில்லாமற்போகுமேயானால், வாசகருக்காக உழைக்க வேண்டியது இன்னமும் இருக்கின்றதெனப் பொருள். மாறாகச் சிந்தனைத் தாக்கம் எழுந்திருக்கின்றதென்றால், படைப்பின் நோக்கம் கைகூடி இருக்கின்றதெனக் கொள்ளலாம். அப்படியான கதைகள்தாம் இவை.

“எதையும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. அவள் கை, தானாக இரசத்துக்குப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது”.

இப்படித்தான் நூலின் கடைசி வரி அமைந்திருக்கின்றது. பிரச்சார நெடியற்ற கதைகள். மெல்லிய கதைகள். விளம்பரத்துக்காய் அலைமோதும் பரபரப்பான உலகில், பரபரப்பற்றதும் சக மனிதரின்பாற்பட்ட மனிதமார்ந்த பொழுதுகளாகவும் இருக்க வேண்டிய பண்பாட்டுக்காகப் பூத்திருக்கும் கதைகள்!


3/08/2023

பெண்கள் நாள்

1909ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள், நியூயார்க் நகரில் பெண்களின் உரிமைகளுக்கான முன்னெடுப்பாக ஒரு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதனின்று கிளைத்ததுதான் இன்றைய மார்ச் 8, பன்னாட்டுப் பெண்கள் நாள் என்பது. அதற்குப் பிறகு, ஓட்டுரிமை, கல்வி, தொழில் எனப் பல தளங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டு எண்ணிமத்தளத்தில், அதாவது மின்னணுவியலை அடிப்படையாகக் கொண்ட கணினி, தொழில்நுட்பத்தளத்தில் சமத்துவத்துக்கான வழிமுறைகளைக் கட்டமைக்க அறைகூவல் விடுத்திருக்கின்றது ஐக்கியநாடுகள் சபை.

பொதுவாக, இப்படியான நாட்கள் கொண்டாட்டமாக இடம் பிடிக்கின்றன. கொண்டாட்டத்தின் பொருட்டு வணிகக்கடைகளும் விரிக்கப்படுகின்றன. அது சரியா, தவறா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய பற்றியம்.

நம்மைப் பொறுத்த மட்டிலும், 1909ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட அந்த நாளை அடிப்படையாகக் கொண்டு சிறு மாற்றத்தையாவது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதுதான். பொதுவாழ்வில், தொழிலில் பெரும்வெற்றி பெற்ற ஒரு பெண். கொண்டாடடப்படுவது சரியே. இணையர் தன் காலுறையைக் கொணரச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். மேற்தளத்தில் இருக்கும் அவர் வந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்கின்றார். இப்படியான ஒரு காட்சியை எண்ணிப் பாருங்கள். இருவருமே தோற்றிருக்கின்றனர். அவரைக் கொண்டாடுவதால் என்ன பயன்?

பண்பாட்டில், வீட்டு அடுக்களையில் இருந்து துவக்கப்பட வேண்டிய பயணம் இது. காய்கறி நறுக்குவது என்பதாகக்கூட வைத்துக் கொள்ளலாம். அப்படி நிகழும் போது, இவருக்கும் தாம் ஏவலாள், குற்றாள் எனும் எண்ணம் அடிபட்டுப் போகின்றது. அவருக்கும் அப்படியான அனுபவம் கிடைக்கப் பெறுவதோடு உடல்நலமும் மேம்படும். அண்மையில் கூட, சக ஆண்களைப் பொதுநிகழ்வில் அண்ணா, அண்ணாயெனக் குழைந்து குழைந்து விளிப்பதைச் சாடி எழுதினோம். காரணம், இது, தொடர்புடைய தனிமனிதர்களின் நட்பு குறித்தானது அன்று. பொதுநிகழ்வு என்பதாலே, இது ஒட்டுமொத்த பெண் இனத்தின் மாண்பு குறித்தானது. ஆகவே, பெண்கள் நாளில், டிஜிட்டல் உலகில் இடம் பெறும் இப்படியான சறுக்கல்கள் குறித்து உரையாடுவோம்.

No one can make you feel inferior without your consent. –Eleanor Roosevelt


2/26/2023

வரிகளுக்கிடையே

read between the lines: look for or discover a meaning that is hidden or implied rather than explicitly stated.

வாசிக்கும் போது, காட்சிகளைக் காணும் போது, செவியுறும் போதென, எல்லாச்சூழலுக்கும் இது பொருந்தும். குழுவில் இடம் பெற்ற இரு உள்ளீடுகள் குறித்துக் கருத்துகளைப் பகிர விழைகின்றேன்.

முதலாவது, உலகத் தாய்மொழி நாள் காணொலியைக் கண்டு இன்புற்றேன். நல்லதொரு முயற்சி. வட்டாரத் தமிழில் பேசி அவற்றை அறிமுகப்படுத்தியமை நன்று. சீர்நிலை போற்றுதலும் அவசியம். தமிழ் மொழி பரவலாக ஆட்சி புரிந்து வருகின்றது. எல்லாப் பகுதிகளுக்கும் சீராக நேரம் இருந்து விட்டால் நலம். அல்லாவிடில் கூடுதலாக இடம் பெறுகின்ற உள்ளீடு இன்னபிற தகவலுக்கு வித்திட்டு விடும். When everything comes together, life is in balance.

அடுத்தது, மருத்துவர் ஷாலினி அவர்களிடம் விடுக்கப்பட்ட வினா: நம்மவர்கள் முன் பிள்ளைகள் அப்படி இப்படி நடந்து கொள்கின்றனர். ஆனால் பொதுயிடத்தில் நன்றாக நடந்து கொள்கின்றனர். இது நம்முடைய தாக்கத்தினாலா? சிரிப்புக்கிடையே, ஆமாம் என்கின்ற விடை அமைகின்றது.

நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பற்றியம் இது. தமிழ் அமைப்புகள் அமெரிக்க விழுமியத்தை இயன்றமட்டிலும் ஒழுக முற்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர், ‘வார்னிங்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றார். உடனே தலைவர் பொறுப்பில் இருப்பவர் தனிநபர்த் தாக்குதலில் ஈடுபடுகின்றார். என்ன காரணம்? சொல்லைக் காதில் வாங்கியதுமே, மனத்தில் படிநிலை மனப்பான்மை சட்டெனத் தோன்றுகின்றது. மேல், கீழ் என்றெல்லாம் எண்ணம் விரிவடைந்து கொந்தளிப்புக் கொள்கின்றது. இப்படியான செயற்பாடுகள்தாம் கசடான பண்பாட்டுச் சீர்கேட்டுக்குக் காரணம். பிள்ளைகளின் மீதும் இதன் தாக்கம் படிய நேர்கின்றது. Because, American Kids read in between lines as they are trained that way since childhood.

2/19/2023

மயிலே மயிலே

இந்திரன் எழுதிய பதிவைப் படிக்கையில் பொன் விஜயன் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிகிறது. இந்நாட்டில் பணமில்லாமல் அரூபமான லட்சியங்களுக்காக வாழவே கூடாது. லௌகீகமே நிஜம். அதற்காகவே வாழ வேண்டும். அதற்கும் அப்பால் நேரமிருந்தால் எழுதலாம், படிக்கலாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ள கணிசமானவர்கள் பண்பில்லாதவர்கள், அறிவை விட சாப்பாடும் பொழுதுபோக்குமே பிரதானம் என நம்புகிறவர்கள். இந்தியர்கள் அடிப்படையில் நாகரிகமடையாத பாதி-மிருகங்கள். படித்தவர்கள்தான் அதிக மிருமாக வாழ்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் 1% மக்களே புத்தகம் படிப்பவர்கள். பளபளப்பாக ஆடையணிந்த, காரிலும் பைக்கிலும் பயணிக்கிற காட்டுமிராண்டிகள் இந்திய மக்கள். இவர்கள் மத்தியிலே நாம் வாழ்கிறோம்.

அவர்கள் பணமில்லாதவர்களை கரப்பான்பூச்சியைப் போன்றே பார்ப்பார்கள். சாரு சொல்வதைப் போல இது ஒரு சீரழிந்த சமூகம். இங்கு சுயநலமாக வாழ்ந்தால் உங்களை பெரிய ஆளாக நினைத்து அன்பு பாராட்டுவார்கள். பணமும் இருந்து தியாகமும் செய்தால் உங்களைக் கடவுளாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றுக்கும் - அன்பு, கருணை, சமூக மரியாதை - அடிப்படை இங்கு பணம் தான். இவர்கள் நடுவில் நாமும் நம்மை காளகேயர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும். பொன் விஜயனைப் போல் எல்லாம் வாழவே கூடாது. வேலூர் இப்ராஹிமே சரணம்!

- ஆர். அபிலாஷ்

இதழியலாளர் பொன் விஜயன் அவர்கள் சமூக மேம்பாட்டுக்காக உழைத்து தன்னையே அதற்காக இழந்தவர். அது குறித்து எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் அவர்கள் எழுதியதுதான் மேற்கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு. இக்குழுமத்தில் பல நிகழ்வுகளின் விளம்பரப் பதாகைகள் இடம் பெறுகின்றன. அப்படியானதில், ஒன்றில் கலந்து கொள்ள விரும்பி அலைபேசியில் அறிவுறுத்துக்குறிப்பு பதியப்பட்டு குறித்த நேரத்துக்கு உள்நுழைய முற்பட்டேன். கிட்டத்தட்ட 40 மணித்துளிகள் இருந்தும் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

1. சக கலைஞரின் மறைவினால் விருந்திநர் வருகையும் நிகழ்வும் தள்ளிப்போடப்பட்டிருக்கலாம். அல்லது

2. எனக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம், கடந்த கூட்டமொன்றுக்கு மறுக்கப்பட்டதைப் போலவே!

முதலாவது காரணமாக இருப்பின், தள்ளிவைப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது காரணமாயின், அதுவும் பொது அமைப்பில் இடம் பெறக்கூடாத புறம்பானவொன்று. இப்படியான ஒழுங்கீனமான செயல்களுக்குக் காரணமானவர்கள்தாம், “ஒழுங்கு” என்பதற்கான இலக்கண வகுப்பெடுக்கின்றனர். மீண்டும் எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் பதிவைப் படிக்க வேண்டுகின்றேன்.

2/18/2023

warning

"unfortunately அதுதான்  சென்றமுறை பைலா ரிவியூ செய்தப்ப, அவசர அவசரமா பைலா பாஸ் செய்தமாரிதான் எல்லாருடைய அனுபவமும்கூட. சென்றமுறை போர்டு இருந்தப்பவந்து, ஒரு வருசம் போர்டு இநேக்டிவா இருந்திட்டு, கடைசில தேர்தலுக்காக அவசர அவசரமா  240 பேருல் ரொம்ப ரொம்ப கொறஞ்சு பேரு ஓட்டுப் போட்டு தீர்மானங்களும் பைலா சேஞ்சஸ்மு நிறைவேற்றப்பட்டு இருக்கு. கான்ஸ்டியூசன் ஆக இருக்கட்டு, பைலா சேஞ்சஸாக இருக்கட்டும், they make it very difficult to change it. இருங்க, let me finish it... I have the floor.. anyway, coming back to point... ... கூட்டம் போட்டுப் பேசி பலரோடு கருத்துகளும் கேட்கப்பட்டுத்தான் பைலா சேஞ்ச் ஆகணும். சும்மா மெயில்ல yes or no கேட்டுப் பாஸ் ஆகக் கூடாது. அதுதான் டெமாக்ரடிக் வே. I may kind of a warning. state of Illinios law supersedes our bylaw. so what is happening, earlier bylaws is unethical, it was not the correct way to do, so that was a warning; நடந்தது நடந்து போகட்டும். இனிமேலும் நடக்கப் போற changes வந்து, அது முறைப்படி நடக்கலைனு சொன்னா, am challenging, and warning, and this should be challenged in court of law, and we don't want to face another court of law, and I am serious about this. And, I talked to sevral experts on this, they agreed with me on this. Thank you for the time."  -முன்னாள்தலைவரின் பேச்சு.

பதிலளித்துப் பேசிய இந்நாள் தலைவரும் நாகரிகமாக, முறையான பதில்தான் கொடுத்துக் கொண்டிருந்தார். அதாவது, மாற்றங்களைக் கொண்டு வந்து செயற்குழுவின் முன்னாள் வைத்தால், இருக்கும் பைலாவை மாற்ற பொதுக்குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, மாற்றலாமெனச் சொல்லிக் கொண்டிருந்தவர், திடுமென அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டு, “மாற்றத்துக்கு பைலால ஆர்டிகிள் 12ல இடம் இருக்கு. அதெல்லாம் நீங்க படிச்சீங்ளா என்னானு தெரியலை. அதனாலத்தான் தடித்த வார்த்தைகளை பேசிட்டு இருக்கீங்க. This is not a place to do warning. அப்படிப் பண்றதுன்னா உங்களுக்குத் தெரிஞ்ச வழியில நீங்க பண்ணுங்க. இந்தமாரியெல்லாம் பேசிட்டு இருக்காதீங்க. உங்க வயதுக்கு இதெல்லாம் நல்லது கிடையாது. நீங்க நாலு பேரு சேர்ந்து மிரட்டலாம்னு நினைச்சா அது நடக்காது.” செயலர் இடைமறித்து பேச்சின் போக்கினை மாற்றுகின்றார்.

என்னுடைய நயாப்பைசா: நான் பலமுறை என்னுடைய இந்த குறிப்பினை மீண்டும் மீண்டும் வாசித்து, யோசித்தும் விட்டேன். அமைப்பின்பால் நாட்டம் கொண்ட எவனொருவனும் முன்னாள்தலைவரைப் போலத்தான் பேசியாக வேண்டும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் பேசி இருப்பேன். ”அறிவுறுத்துகின்றேன் அல்லது எச்சரிக்கிறேன்” என்பது அப்படியானதொரு தடித்த சொல்லா? அக்கறையின்பாற்பட்ட சொல்லாக ஏன் இருக்கக் கூடாது? சரி, அது முறையற்ற சொல் என்றே வைத்துக் கொள்வோம். பொறுப்பில் இருக்கும் தலைவரது பேச்சு சரியானதா? தனிநபர்த் தாக்குதலுக்கு மடைமாற்றிச் செல்வது ஏன்? காரணம், prejudice. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தின் போது பிரசிடெண்ட் பேசுவார். எதிர்க்கட்சி உறுப்பினர் உரத்த குரலில், “பொய்யர்” எனக் குரல் எழுப்புவார். அதற்குப் பிரசிடெண்ட்டும் எதிர்த்துக் குரலெழுப்பி அக்கப்போரில் இறங்கினால் அவரது மாண்பு எப்படி இருக்கும்? A fiduciary duty is the legal responsibility to act solely in the best interest of another party. “Fiduciary” means trust, and a person with a fiduciary duty has a legal obligation to maintain that trust. இதற்குக் கட்டுப்பட்டவர்தாம் பொறுப்பில் இருப்பவர்.

விழாக்கள் நடத்துவதும் பணம் பண்ணுவதும் புகழ்மாலை பாடுவதும் அல்ல தமிழ்ப்பணி. பண்பாட்டில், வாழ்வின் விழுமியத்தில் மேம்பாடு கொள்வதுதான் தமிழ்ப்பணி.