12/31/2015

come on 2016! let's face off!!

இதே நாள்; ஆனால் முந்தைய ஆண்டு. மனப்போராட்டம். கிளம்பி வருகிறேனென்பேன். குழந்தைகள் தனியாக இருக்க, நீ வர வேண்டாமென்பார். இல்லை, நான் கிளம்பி வருகிறேனென்பேன். வேண்டாமென்பார். இப்போராட்டம் ஐந்து நாட்களுக்குத்தான் நீடித்தது. அதற்கும் மேல் என்னால் முடியவில்லை. கிளம்பியே விட்டேன்.
இன்று இல்லை. ஆனால் இருக்கின்றன. எங்கு காணினும் நிங்கள் நிழல்கள். நிழல்கள் புடை சூழ வாழ்தலும் இனிதே.
நிழல் மேல் நடக்கவில்லை... நிழலோடு நடக்கிறேன்... come on 2016! let's face off!!

12/29/2015

முதற்பார்வையில்...

முதற்பார்வை கண்டதும்
விரல்களைக் காட்டுவேன்!
ஐந்து விரல்களெனில்
நான்குதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
நான்கு விரல்களெனில்
மூன்றுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
மூன்று விரல்களெனில்
இரண்டுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
குறைத்துச் சொல்லி
பிகு செய்வதில்
ஒரு கிரக்கம் ஒரு இது!
இன்று,
நானறியாமலே
ஏதோ நினைப்பில்
ஆட்காட்டி மட்டும்
காண்பித்து விட்டேன்
மீன்குளங்களிரண்டும்
நிரம்பி வழிய
மென்பூமியின்
விசும்பலொலி!!
மென்பூமியின்
விசும்பலொலி!!

12/15/2015

ஒரே ஒரு xxxதான்!!

வணிக வளாகத்தில் நிறைய வருவோர் போவோர். அதில் நானுமொரு வருவோர் போவோர். எனக்கே கூட, அவர்களெல்லாரும் அவரவர் திசைகளிலிருந்து ஒருங்கே என்னைத் திரும்பிப் பார்த்தபோதுதான் தெரிய வந்தது நான் இருமியிருக்கிறேனென்று. இருமுவது குற்றமா? இயல்பாகத் தன்னையும் மீறி மெய் இயங்குகிறது. அதற்கு ஏன் இவர்கள் இப்படிப் பார்க்க வேண்டும். ஒருவிநாடியைச் சுக்குநூறாக்கினதில் கிடைக்கும் ஒரு தூள் அளவுகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவொரு அனிச்சையாய்ப் பார்த்து விட்டு நான் யாரோ, நீ யாரோவென மீண்டும் வருவோர் போவோர் ஆகிவிட்டிருந்தனர். அப்படித் திரும்பிப் பார்த்தது அவர்களுக்கு நினைவிலிருக்குமா என்பதும் தெரியவில்லை. இயல்பாய் எழுந்த ஒரு இருமல். அந்த இருமலைச் சுற்றிலும் இப்படியானதொரு கூட்டுச்செயல். எதற்காக இது நிகழ்கிறது? இருமியவன் நிலை குலைந்திருந்தால் எதோவொரு மானுடமாவது அதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் என்பது திண்ணம். எல்லாரையும் நம்பக்கம் பார்க்கும்படி வைத்துவிட்டேனே என்பதற்காக எம்முள்ளிருந்த ஏதெவொன்று ‘சாரி’ எனச் சொல்லிக் கொள்கிறது என் அனுமதியோ ஒப்புதலோ ஏதுமற்று. இப்படியான சூழலை ஆக்கிவைத்திருப்பவர் யார்? அரசியல்வாதியா? கல்வியாளனா?? ஆன்மீகவாதியா?? இதே நான், நான் உயிர்த்த மண்ணிலிருந்தாலும் இதே சூழலை எதிர்கொண்டிருப்பேனா?? இன்னொரு இருமல், இன்னொரு பொழுது, இன்னொரு இடம், கவனிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் இருமுமவனாக, இருமலைப் பார்க்கக் கூடியவனாக!!


12/11/2015

சென்னை, உதவிக்கு உரமூட்டு பாடல்

மனுசிக்கி மனிசே சகாயம்
மனுசிக்கி மனிசே தைர்யம்
மனுசுளந்த்த ஒகட்டி அய்த்தே
திகி ராடா ஆ தெய்வம்??
நேனுகாது மேமன்ட்டு
மேமந்துரு ஒகடண்ட்டு
தோடு நேனேன்ட்ண்டு
செப்பேவாடே தெய்வம்!!



தமிழில்....


சென்னைக்கு உதவுவோம்!! 0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o இதுயாவும் தண்ணீரா? இல்லை கண்ணீர் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வதோ?? நீர் மேலிருந்து கீழ்வரை முழுங்கிவிடுவேனெனச் சொல்கையில் அதை எப்படித்தான் எதிர்கொள்வதோ? உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது மெளனத்துடன் (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கபோகிறோமா? இறந்தவர்களுக்கான தீமூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா? அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்களிடமிருக்கும் இந்த கோபாவேசம் மட்டும் இருக்குமிந்த நிலையை மாற்றிவிடுமா? 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்கள், இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்க்கின்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையிலே, நீங்கள் உங்கள் கை சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o ஒவ்வொரு கனத்தையும் ஒரு யுகமாக கழிக்கும் உதவிக்காக காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா? (Kshanamo yugamai bratike aa aarthanadalu vinave vinava ikanaina) 0o0o0o0o0o இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்கு கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்களே.. (reyi pagalu okate cheekatlu, ikkatlu; tolaginchenduku velugai raa) அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்!  அவர்களுக்கு சுவாசம் தாருங்கள்; கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையிலே அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோமே!!. (munchette varadani, anichestu nadavani, aanandam panchivvu ika premaga) 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்கள், இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்க்கின்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையிலே, நீங்கள் உங்கள் கை சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாக கழிக்கும் உதவிக்காக காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா? (Kshanamo yugamai bratike aa aarthanadalu vinave vinava ikanaina) 0o0o0o0o0o கண்களில் கடல்போன்ற நீருடன் நகரத் தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உமக்குக் கேட்கவில்லையா? (kanule kadalai ponge aa nagara veedhullo aakali kekalu vinaleva) 0o0o0o0o0o நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவிகோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா? (Aasalanu sidhilam chesina aa varada neellalo aakrandanalu kanaleva?) 0o0o0o0o0o குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்கவே!! (Pasivaada bhavitanu vasivaada neeyaka nee vantu bhadyatanu gamaninchara) இருளே கவிழ்ந்தாலும் திசைகள்மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசை நோக்கி எழுகவே!! (Nisi rajukundani disha mayamavaduga, oodarupai aa disaga udayinchara 0o0o0o0o0o அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் இந்த ஆவேசம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா? 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்கள், இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையிலே, நீங்கள் உங்கள் கை சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o மனிதன் மனிதனுக்கு உதவி மனிதன் மனிதனுக்கு தைரியம் மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா? நான் அல்ல, நாமென்று நாமனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றினைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்ல! அவன் தெய்வம்!! திரைக்கலைஞர்களும் நம்மைப்போலவே மனது வைத்து, அவர்களும் துயர் உணர்ந்திருக்கிறார்களே!! அவர்களும் நீயும் நானும் ஒன்றே! நாமென்றே சொல்லி ஆதரவுக்கு சேர்ந்து நிற்கின்றனரே!!. ஒவ்வொரு ஊர் ஊராய் தொழில் செய்வோரும், கற்றோரும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனரே!! உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் ஆற்றும்தானே?! 0o0o0o0o0o அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்களின் இந்த ஆவேசம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா? 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்களே..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்களே, இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் இந்நிலையிலே, நீங்கள் உங்கள் கரம் சிறிது தரமாட்டீரா? நீங்கள் உங்கள் கரம் சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o ( தமிழாக்கம்: Mendu Srinivasulu, Jeyakumar Srinivasan. Bit editing: PazamaiPesi )

12/09/2015

மாந்தநிலை அறிக்கை

 

கடந்த சில நாட்களாக சென்னை, அதையொட்டி இணையம் முதலான இடங்களில் குடி கொண்டிருந்த மனிதநிலை சிறிது சிறிதாக வலுவிழந்து படிப்படியாக இயல்புவெறிநிலைக்கு முற்றிலுமாகத் திரும்பி, அடுத்த 48 நேரத்திற்கு ஆங்காங்கே உக்கிரமான காழ்ப்பும் அநேக இடங்களில் அரசியல் வாடையும் ஒருசில இடங்களில் மிதமான மனிதமும் ஓரிரு இடங்களில் பலத்த மனிதமும் தமிழகம் முழுதுமுள்ள தொலைக்காட்சிகளில் சீரான பினாத்தலும் இருக்குமென்று மாந்தநிலை இயக்குநர் வாமனன் தெரிவித்தார்.

11/29/2015

அவரைக் காணவில்லை!!

அவரைக் காணவில்லை!!
நம்மில் ஒருவராக அவர்
இருக்க வாய்ப்பேயில்லை!
நம்மிலும் மேலானவராக
நம்போல் மனிதரல்லவராக
இருப்பதினாலேயே அவர் கடவுள்!
ஏரணம் பகர்கிறாள் மூத்தவள்!!
இம்ஃகூம்.... நாம் பார்க்கிறோமே?
சமையலறையில் அம்மா
வைத்திருக்கும் சாமி படத்தில்
அம்மா போல ஒரு பொம்பள சாமி
அப்பா போல ஒரு ஆம்பள சாமி
ஆதலின் அம்மா அப்பா போல
நம்மைப் போன்றவர்தான் கடவுள்!!
கிடையாது கிடையாது மூன்றாமவள்!
ஏதாகினும் தேவை ஏற்படும்போது
கோயிலில் இருக்கும் சாமி
வர வேண்டிய நேரத்துக்கு வந்து
செய்ய வேண்டியதைச் செய்பவர்
நம்மைப் போன்றவர், ஆனால்
அவ்வப்போது வந்து போகிறவர்!!
குழப்பம் முகமேகுகிறது!!
அப்பா நீங்க சொல்லுங்ப்பா!
கடவுள்ங்றவர் யாரு?!
ப்ச்... பேசாமல் இருங்களேன்?!
ஒன்பது நாள் விடுப்பும்
ஓடிப் போன வருத்தம்
பேசும் மனநிலையிலில்லை நான்!!
அவரவர் அவரவர்பாட்டில்
திசை கலைந்து போக
உற்று நோக்குகிறேன்!
அந்நேரம் அங்கிருந்த
அவரைக் காணவில்லை!!
மூத்தவள் மட்டும் இன்னும்
முறைத்துக் கொண்டே இருக்கிறாள்!!

10/04/2015

தகுதி

தகுதி

நினைவு தெரிந்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
அதற்கு அடுத்த நாள்
* * *
* * *
நேற்றைக்கு முந்நாள்
நேற்றைய அந்நாள்
இன்றைய விடியல்
இன்றைய புலர்பொழுது
ஒரு மணிநேரத்துக்கு முன்
இவ்வண்ணம் யாவற்றுக்கும்
நீ வைத்தாயா விமர்சனம்?
அப்படியானால்
இதையும்
நீ விமர்சிக்கலாம்!!

# சும்மா வரித்துண்டுகள்... நோ உள்குத்து

10/01/2015

வரிக்கதைகள்

கறந்த பாலை சுமதிடீச்சர் வீட்டிலூற்றி விட்டு வந்த சின்னத்தாயம்மாவுக்குத் தலையில கல்! ஆதர்ச நடிகனின் கட் அவுட்டுக்குப் பாலூற்றும் போது தவறி விழுந்த மகன் பலி!!

$@#********$@#

பக்கத்துல டீனா படுத்திருக்கா. சும்மா போனைப் போட்டு தொந்திரவு செய்யாதே என்றதற்கு எகிறுகிறாள் மேத்யூசின் ஒரே மனைவி மேரி, என்னை விட அந்த நாய்தான் உங்களுக்கு எச்சாப் போச்சா??

$@#********$@#

தாசி வீட்டில் காணாமற்போயிருந்த செருப்புகள் தம் வீட்டு வாசலிலிருப்பதைக் கண்ட மாதவன் ஆயத்தமானான்! மண்டகப்படிக்கு!!

$@#********$@#

நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்த போலீசார்! ஊர்க்காசு நமக்கெதுக்கு? காற்றில் பறந்தன கரன்சிகள்!!

$@#********$@#

வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்திருந்த இருபக்கக் கடிதம், அன்புள்ள அப்பாவுக்கு எனத்துவங்கி தங்கள் அன்புள்ள மனைவி மல்லிகா என முடிந்திருந்தது! மனைவிக்கும் அப்பாவாகலாம்!!

$@#********$@#

தமிழ்ச்சங்கத் தலைவர் பதவி நீக்கம்! கூட்டத்தில் அடிக்கடி தமிழில் பேசுவதாகக் குற்றச்சாட்டு!!

$@#********$@#

மாவட்ட ஆட்சித் தலைவர், கரகாட்ட வனஜா முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கரகாட்ட வனஜா, பொறுப்பேற்ற அவரது மகள் இருவருக்கும் ஊரார் வாழ்த்து!!

$@#********$@#

தாம் அடித்துவந்திருந்த பர்சுகளை பார்த்துக் கொண்டிருந்த பிக்பாக்கெட்காரனுக்கு அந்த பர்சைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சி அழுகை! அந்தப் பர்சில் அவனது மனைவி போட்டோ!!

$@#********$@#

அமோகவெற்றி பெற்ற நாட்டாமை மனைவி வனிதாமணிக்கு இன்று பதவியேற்பு நாள். ஊராட்சிமன்றக் கதவுகள் திறக்கப்படுவதற்குச் சற்று முன்பாகத்தான் நாட்டாமையின் பரமவைரி நடேசனும் வனிதாமணியும் ஓடிப்போனதாகத் தகவல்!!

$@#********$@#

A loveங்றதை எழவு எழவுன்னு சொல்லி எழவெடுக்கிறவனை வெச்செல்லாம் என்னால பாடம் நடத்த முடியாது; பேசாம நீங்க டி.சி வாங்கிட்டுப் போயிடுங்க!!

$@#********$@#

காசு, பணம், சொத்தெல்லாம் போயிடிச்சேன்னு ஒரே அழுகை. அவங்க அம்மாவுக்கும் அப்பாகிட்ட செம திட்டு. கடைசியில அவரும் மனசொடிஞ்சி மோனோபோலியத் தூக்கிக் குப்பைல போட்டுட்டாரு.

$@#********$@#

கூட மனைவியும் வரவில்லை. திருமணவீடுதானே, ஒரு இலட்டு தின்னலாமென்று இலையிலிருந்த இலட்டைத் தொடவும் எதிர்வரிசையிலிருந்து செருமல். அது வேறு யாருமல்ல, அவனுடைய பேலியோகுருதான்!!

$@#********$@#

”மச்சான் நெறைய கிரிடிட்கார்டு அப்ளிகேசனா வந்து தள்ளுதுதடா” என்றான் மெயில் பாக்சடியிலிருந்த கேசவன். “அவன் குடுத்துருக்கிற ரிட்டர்ன் என்வ்லப்புலயே போட்டனுப்பு. தபால்காரனாவது பொழைக்கட்டு. ரூமுக்கு எடுத்துகினு வந்து தொலைக்காதராப் பண்ணாட!” என்றான் முரளி!!

$@#********$@#

பூவா தலையா போடுவதில் எப்போதும் இறுதிப்பயன் அவனுக்கே! அவன் வென்றிருந்தால் அவன் விருப்பம். அவள் வென்றிருந்தால், அவனது விருப்பமன்னவெனக் கேட்டு, அதற்கெதிரானதைக் கையிலெடுப்பாள்!.

$@#********$@#

எங்கப்பா பீடி குடிச்சுக் குடிச்சு செத்துப் போய்ட்டாரு. பீடி குடிக்காத நீங்க சாகவே மாட்டீங்கல்லண்ணா? கேட்கிற பையனுக்கு என்ன பதில்?? அவனே சொல்லிக் கொண்டான்; நாமெல்லாம் ரெம்ப நாளைக்காச்சிம் இருப்பம்ணா!!

$@#********$@#

விவசாயம் செய்து வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சார்ந்த மாடசாமி மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருக்கிறார், “இரவது கூடை தக்காளி விளைஞ்சிருக்கு. விக்கக் காசு வேணும்! கைமாத்தா அம்பது ரூபாய் கிடைக்குமா?”

$@#********$@#

செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்காம்டாவெனச் சொன்ன குமாரிடம் சொல்கிறான், ‘அடப் போடா... வீட்டுக்காரிகளுக்குத் தண்ணி காட்டிட்டுத் தண்ணியில நாம இருக்குறதுதான்டா பெரிய விசியம்!’

$@#********$@#

கோயமுத்தூருக்குள் வந்து கோயமுத்தூருக்கு வழி கேட்ட மடையன்கூடப் பேசினதில் என் கண்ணாடி எங்கு போனதென்று தெரியவில்லையென்றவனிடம் சொல்கிறான், ‘கண்ணாடியப் போட்டுட்டே கண்ணாடியத் தேடுறவன் மாமடையன்!!’

$@#********$@#

”தமிழர் ஒற்றுமை ஓங்குக” இந்த வாசகத்தை விழா மொழியாக வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதில் கைகலப்பு!

$@#********$@#

முன்னெச்சரிக்கை நினைப்பில், கடன் வாங்கணும்னுதானுங்க அலைஞ்சிட்டு இருக்கேனென்றவனிடம் சொன்னான், நானும் அதுக்குதானுங்க வந்தேன். உங்களுக்கு எவ்ளோ வேணும்? மாசமானா வட்டி கரெக்டா வந்திடணும்!! எடுங்க ஆர்.சி.புத்தகத்தை!!

$@#********$@#

நிலா குரூப் ஒருபக்கமும் வேணி குரூப் ஒருபக்கமும் அமர்ந்து விழாவை இரசிக்க, இரண்டு குரூப்பும் கலந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் ரோசாமணி. செயலர் தட்டச்சிக் கொண்டிருந்தார், விழா வெற்றி! விழாத வெற்றி!!

$@#********$@#

இரவியின் வாதத்துக்குக் கடைசியில் ரேணுகா ஒப்புக்கொண்டு விட்டாள். ஆமாம். இரவி அவளை வழிக்குக் கொண்டு வந்தது இதைச் சொல்லித்தான், ‘உன்னுடைய வாதத்துக்கு உடன்பட்டால் அது தவறில்தான் போய் முடியுமென்பதற்கு நம் திருமணத்தைக் காட்டிலும் வேறென்ன சான்று இருந்து விட முடியும்?’

$@#********$@#

மூனாம் நம்பர் டேபிள்ல பில் கொடுக்காமப் போனவன் தின்ன மூனு ஆம்லட், ரெண்டு அவிச்ச முட்டை, ஒரு எக் பொரியல் எந்தக் கணக்குல.... சொல்லி முடிப்பதற்குள் கல்லாமேன் கணக்கெழுதி விட்டார் பேலியோநாதன் கணக்கில்.

$@#********$@#

காயத்ரி, ரேவதி, மனோரஞ்சிதம், இவற்றுள் ஏதோவொன்றென்றான். கேட்டுவிட்டு, அனைத்தும் தள்ளுபடியென்றாளவள். ஏனென்ற கோபாவேசம் அவனுக்கு. பார்த்து விட்டு மிகவும் அமைதியாகச் சொன்னாள், ’’அதுல எதாவது ஓடியடைஞ்சிருந்தா நான் ஏன் இங்க இருக்கேன்? பாப்பாவுக்கு நானே பேர் செலக்ட் செய்றேன்’’.

$@#********$@#

ஃபேசுபுக்கில் அன்ஃபிரண்ட் செய்த முத்துமாரியைப் பழிவாங்கக் காத்திருந்த கதிரேசனுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். முத்துமாரியின் காதலி, கதிரேசனின் ஃபிரண்ட் ரிக்வொசுட்டை ஏற்றுக் கொண்டு விட்டாள்; அன்ஃபிரண்ட் செய்யப்பட்ட முத்துமாரிக்கு அன்ஃபிரண்டின் வலி இப்போது புரியத் துவங்கியது.

$@#********$@#

”அம்மாவோட பர்சு இங்கிருக்குப்பா. வேணுமின்னேதான் விட்டுட்டுப் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன். தொட்றாதீங்க”, அறிவுறுத்திவிட்டு பள்ளிக்குப் புறப்படுகிறாள் மகள்.

$@#********$@#

அவன் செத்து மடிந்தான். இவள் உயிர்த்தெழுந்தாள். கூடவே, ஊற்றிக் குடிக்கும் பாவனையிலிருந்த வடிவான கண்ணாடிதம்ளருக்கும் சோகேசில் நல்லதொரு இடம் கிடைத்திருக்கிறது.

$@#********$@#

ஊர்லிருக்கிற வீட்டை வித்திட்டு ஆர்ச்சர்ட் தெருவுல வீடு வாங்கலாம்னு இருக்கேனென்றான் சார்லட் சரவணன். செரி, ஊரிலிருந்து தெருவுக்கு வரணும்னு ஆசைப்படுற. உன் விருப்பமென்றான் கிரீன்சுபரோ கனகவேல்.

$@#********$@#

கலைமாமணி கவிக்குயில் கார்மேகம் அழைத்து, புதுசாக் கவிதைகள் கொஞ்சம் போட்டிருக்கிறேன்; பார்த்து விட்டீர்களா தம்பீ என்றார். ’இதா, இப்பவே எல்லாத்துக்கும் லைக் போட்டுட்டு, வானதிகிட்டவும் கூப்பிட்டுச் சொல்லிடுறனுங் அண்ணே’யென்றான் யுனிக்சு அட்மின் வினோத்.

$@#********$@#

பேருந்துப் பயணத்தின் போதான பேச்சினிடையே, உங்களை நம்பலாம்தானேயென்று கேட்டான். அப்படியெல்லாம் உள்ளதச் சொல்லி உங்க மனசைக் காயப்படுத்துவனா நானு என்று நம்பிக்கை குலையாமல் இவன் பதிலுரைக்கவும், மகிழ்ச்சியுடன் நம்பிக்கையோடு இறங்கிப் போனார்கள் இருவரும்.

$@#********$@#

மனைவிகிட்டக் கேட்டுச் சொல்றேன் என்றதற்கு, ’இப்பவே கேட்டுச் சொல்லுங்க பிரதர்’ என்று சொல்லி முடிக்கவும் பதில் வந்தது, "எப்பக் கேட்டாலும் அவ இல்லன்னுதான் சொல்லப் போறா. அதுக்கு ஏன் இந்த அவசரப்படுறீங்க?!"

$@#********$@#

வந்த அழைப்புக்கு, அலோ, அலோவென்று கத்திப் படக்கென வைக்கப்பட்டுவிட, “அதென்ன ராங்காலாப்பா?” என்றாளவள். ‘இல்ல, ரைட்கால், ராங்பெர்சன்” என்றார் அப்பா.

-பழமைபேசி.

9/08/2015

அனாதிகாரணம்

அனாதிகாரணம்

சத்தமின்றி வெடித்த 
பலூனைப் பார்த்து அழுது வெடிக்கிறாள்!
அக்கா, உள்ளிருந்த சத்தத்தை உடைச்சிட்டாப்பா!
அக்கா, உள்ளிருந்த சத்தத்தை உடைச்சிட்டாப்பா!!

கனவின் கனவு

நான் கனவு கண்டு கொண்டிருப்பதாக
நேற்று இரவு எனக்கு ஒரு கனவு!
அங்கென்ன செய்றீங்கயெனும்
குரலில் தகர்ந்து போகிறது
கனவும் கனவின் கனவும்!!

இன்று வருமா?

இன்னொரு நாளைக்கு
வாங்கித்தர்றதாச் சொன்ன நாளு
எப்ப வரும்?
இன்னிக்கு வருமாப்பா?
நாளுக்குள் நாள் வருவதும் சாத்தியமானது!
முப்பது வெள்ளி கொடுத்து வாங்கியவுடன்!!

-பழமைபேசி

6/28/2015

தர்பூசணி சூப் (libido booster)








மக்கழே,

தர்பூசணி சூப் குடித்துப் பயன் பெறுவது எப்படி? இப்பிடீ.... இஃகிஃகி!!

செய்முறை:

முதலில் அடுப்பில் கொள்கலனை வைக்கவும். அடுப்பில் வைக்காமல் தலையிலா வைப்பார்கள் எனக் கேட்பவர்கள் சற்று ஒதுங்கிப் போகவும்.

சூடானதும் இரு தேக்கரண்டி எண்ணெய், அதற்காக கடுகு எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றை ஊற்றாமல் சமையலுக்கான எண்ணெய் இரு தேக்கரண்டி ஊற்றவும்.

எண்ணெய் மிதமாய்ச் சூடானது ஓமம் இட வேண்டும். வீட்டில் ஓமம் இருக்கிறதா? எங்கிருக்கிறது என்பன தெரியவில்லை. இராமாயி வீட்டில் இல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் அவளது தங்கை இலட்சுமாயி கையைப் பிடித்திழுப்பது நம் பண்பாடு. எனவே எதிரில் இருந்த சீரகத்தில் ஒரு சிட்டிகை எடுத்துப் போட்டேன். அவள் சடசடவெனப் பொரிந்தாள். கோபம் போலிருக்கிறது. உடனே ஒரு பெருங்கிண்ணத்தில் நிரம்பியிருந்த நீரைக் கொள்கலனுக்குள் ஊற்றி கொதிக்குமளவுக்கு விட்டேன்.

முதலில் செம்பங்கி(கேரட்) இடுவதாய் நினைத்திருந்தேன். கடைக்குச் சென்று வர சோம்பலேறிவிட்டது. வெளியூரில் இருக்கும் சரசுவை விட உள்ளூரில் இருக்கும் மீனாள் மேல் என்பது பழமொழி. அதைப் போலவே, வீட்டிலிருக்கும் லிமா பீன்சு எனப்படுகிற பெரியவரைக்கும் தயமின், புரதம் போன்ற பண்புகள் இருப்பதால் அதைப் பாவிப்பதென முடிவு செய்து, அதில் ஒரு கைப்பிடி அளவு சுடுநீரில் இடப்பட்டது.

பெரியவரையின் பச்சைவாசம் சுடுநீரிலிருந்து நீங்கிய பின், தயாரக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி ஓட்டு நறுக்குகள் கொதிநீரில் இடப்பட்டது. பொதுவாக தர்பூசணியோட்டின் பச்சையத்தடிமனை நீக்கிய பின் நீரில் இடுவது வழக்கம். இன்பயியல்பூக்கிக் கனிமங்கள் பெருமளவு அப்பச்சையத்திலிருக்கிறபடியால் நாம் அதை நீக்கவில்லையென்பதறிக. கருக்முருக் இல்லாமல் சுவைக்க விரும்புவோர், தோல் நீக்கிவிடுவது உசிதம்.

நன்றாக வெந்து விட்டதென்பதறிந்த பின், வீட்டில் மசிக்கப்பட்ட கொத்துமல்லித் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள் அல்லது குறுமிளகுத் தூள் இரு சிறு தேக்கரண்டி, தேவையான அளவு உப்பிட்டுக் கிண்டிவிட வேண்டும். தேவையான அளவு சீசு எனப்படுகிற கொழுப்பினை இட்டுக் கலக்கவும்.

நல்ல ஐங்காயமணம் நாசிகளை வந்தடையும் தருணத்தில், அடுப்பை அணைத்து விடுக. இருக்கும் சூட்டில் சிறிது நேரம் இருக்கட்டும். இப்போது, சிட்ருலின் கனிமம் பொதிந்த சூப் தயார். கிண்ணத்தில் வடித்து, மேலாக சில புதினா இலைகளை இட்டு உங்கள் விருந்தினருக்குப் பரிமாறுக. சிட்ருலின் கனிமம் செம்மையான தோல், இரத்தநாள மேம்பாடு, தசைநார்களின் நல்லியல்புத்தன்மை மேம்படுதல் போன்றவற்றுக்கு பெரிதும் உதவி புரியக்கூடியது.

மீண்டும், மற்றுமொரு தர்பூசணிப் படையலுடன் சந்திப்போம்!!

தர்பூசுத் திளைப்பில்,
பழமைபேசி.

வயாகராப் பொரியல்









எடுத்துக் கொண்ட நேரம்: 25 மணித் துளிகள்

செயல்முறை:

தர்பூசணி வெளியோட்டினைத் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.

குடமிளகாய் ஒன்று நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். நான் பல்லாரி வெங்காயம் நறுக்கினேன். நான் ஒரு சோம்பேறி. சோம்பேறி என்பதை விட எங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லையென்பதே உண்மை.

பூண்டு, இஞ்சி நறுக்கி வைத்துக் கொள்ளவும். எல்லாமே தேவையான அளவுதான். ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

சீசு என்ப்படுகிற சுண்டக்காச்சி வடித்தெடுத்த கொழுப்பு கொஞ்சம். தயிர் ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளிச்சீவல், ஒரு பழம் நான் எடுத்துக் கொண்டது.

கொள்கலனை அடுப்பில் வைத்துச் சூடேற்றுக. பின்னர் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் போட்டு எண்ணெய் காய்ந்து விட்டதென உறுதிப்படுத்திக் கொள்க. சடச்சடவென்றால் காய்ந்து விட்டதெனப் பொருள். என்னைப் போன்ற மங்குனிப்பாண்டியர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியும்.

பிற்பாடு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், தக்காளி, தர்பூசணியோட்டுச் சீவல் ஆகியவற்றை வரிசையாகச் சற்று இடைவெளி விட்டு, கொள்கலனில் இட்டு, இட்டு, வதக்கவும்.

தற்போது சீசு/கொழுப்புச் சீவல் அல்லது முட்டையை உடைத்து இடவும். பின்னர் அந்த கிண்ணத்திலிருக்கும் தயிர் ஊற்றிக் கிண்டுக.

கிண்டியபின், கடையில் வாங்கின தூள் எல்லாம் தூ எனத் தூக்கி வீசிவிடவும். வீட்டில் செய்தது என்றால் மட்டும் பாவிக்கலாம். தேவையான அளவு மிளகாய்த்தூள் இடவும். மிளகாய்த் தூள் இல்லாவிடில் குறுமிளகுத்தூளாவது சிறிது இடுக. பின்னர், கொஞ்சமே கொஞ்சம் உப்பு இட்டு மிக மிதமான சூட்டில் ஐந்து மணித்துளிகள் மூடப்பட்ட கொள்கலனில் வேகவிடவும்.

தற்போது தர்பூசணிப் பொரியல் தயார். இது ஆண்மைப் பொரியல் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம், libido boost, இன்பயியல்பூக்கி எனப்படுகிற கனிமங்கள் பூசணியோட்டில் மிகுந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். Prostate, முன்னிற்சுரப்பி செய்ற்படுவதற்கான கனிமங்கள் மிகுந்திருப்பதாகவும், வைட்டமின் ஏ, சி என்பன இருப்பதாலும், கூடச் சேர்த்திருக்கிற இதர உள்ளீடான வெங்காயம், பூண்டு, மிளகாய் போன்றனவற்றிலும் இவை கணிசமான அளவு இருப்பதாலும் இப்பொரியலானது ஆண்மைப் பொரியலென மேற்குலகில் வர்ணிக்கப்படுகிறது.

http://www.healthline.com/health/food-nutrition/watermelon-rind-benefits

(ங்கொய்யால, சமைக்க ஆன நேரத்தை விட, இதை எழுதிப் பதிவற்கான நேரம் அதிகமாட்ட இருக்கூ?!)

6/20/2015

கரிக்குருவி


நான் அப்போது ஐந்தாம் வகுப்பு. பக்கத்து வீட்டு குமார் நான்காம் வகுப்பு. Selvakumar Kuppusamy குமாரின் அப்பா அம்மாவும்  விவசாயம். அதனால் தோட்டத்துக்குச் சென்று விடுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அம்மா எப்போதும் வீட்டில்தான் இருப்பார்கள். எனவே பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக உள்ள உபரி நேரத்தில் நாங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு முன்பு இருக்கும் பெரு மைதானத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்போம். ஆமாம். நாங்களிருந்த வீட்டிற்கு முன்புறம் பரந்த இடம் இருக்கும். அது போக, விடுப்பு நாட்களில் மாடு மேய்க்கப் போவேன். நான் உதயசூரியன். குமார் இரட்டை இலை. ஆனாலும் எங்களுக்குள் சண்டையெல்லாம் கிடையாது.

தனக்கா அவர்களுக்கு சர்க்கார்பாளையத்தில் தோட்டமும் உறவினர்களும் உண்டு. அவ்வப்போது அவர்களது வீட்டார் ஜக்கார்பாளையம் போய் வருவது வழமை. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தோட்டங்காடுகளுக்குச் சென்றவர்கள் ஊருக்குள் திரும்ப வேண்டிய தருணம் கூடி வருகிற வேளை. நானும் குமாரும் எங்கள் வீட்டுத் திண்ணைக்கு முன்பாக நின்று, எங்கள் வீட்டுக் கல்கட்டில் கூடு வைத்திருக்கிற வாலை வாலை ஆட்டிக் குதித்துக் கொண்டிருக்கும் அந்த கரிக்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குமாரின் வீட்டுக்கு இடப்பக்கமாக இருக்கும் அந்த கல்கட்டு ஓரமாகத்தான் போயாக வேண்டும். அப்போதெல்லாம் அது அவன் தலையைக் கொத்தப் போகும். எனவே குமாருக்கு அதன் மீது கோபம். எனக்கு அது உட்கார்ந்து உட்கார்ந்து துள்ளிக்குதிக்கும் ஒயில் மிகவும் பிடிக்கும்.

“அதே... அப்பிடியே கசக்கி வீசணும்”, இது குமார்.

“ஏங்கொமாரு? அதென்ன பண்ணுச்சு உன்னிய?” இது நான்.

இந்த நேரத்தில்தான் எங்கள் வீட்டின் வலப்பக்க மூலையில் டமாலென ஏதோ ஓசை கேட்டது. ஏறெடுத்துப் பார்த்தால் சவாரி வண்டி(கூட்டு வண்டி)யொன்று பக்கவாட்டில் சாய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நாங்கள் இருவரும், “ஏய் வண்டி உழுந்திருச்சேய்... வண்டி உழுந்திருச்சேய்”யென்று கைகொட்டிக் குதூகலமாய்ச் சிரித்துக் குதித்தோம். அந்த நேரம் பார்த்து எங்கோ போய்விட்டுச் சைக்கிளில் வந்த அப்பா, சைக்கிளைக் கீழே போட்டு விட்டு வண்டியை நோக்கி ஓடினார். அம்மாவை நோக்கி எதோ உரத்த குரலில் கத்தினார். கடையையும், கடை வியாபாரத்தையும் அப்படியப்படியே போட்டு விட்டு, கைச்சொம்பில் தண்ணீரோடு அம்மாவும் போனார்கள்.

குமாரும் அதை வேடிக்கை பார்க்கப் போய் விட்டான். கடை திறந்திருக்கிறபடியால் நான் திண்ணையில் ஏறி உட்கார்ந்து கொண்டே அங்கே என்ன நடக்கிறதெனப் பார்த்துக் கொண்டிருந்தேன். சவாரி வண்டிக்குள் இருந்த தனக்காவையும், தனக்காவின் மாமியாரையும் கைத்தாங்கலாக அப்பா வெளிக்கொண்டு வந்தார். அம்மா தண்ணீர் கொடுத்து உட்காரச் சொன்னார். அதற்குள் பக்கத்திலிருந்தவர்களும் வந்து சேர, வண்டியையும் எருதுகளையும் ஓர்சலாக்கினார்கள். தன்க்காவைவும் அந்த பாட்டியையும் நடக்கச் சொன்னார்கள். உடலுக்கு ஒன்றும் பழுதில்லை என்றானவுடன் அவர்களை வீட்டில் விட்டுவர அம்மா போய்விட்டார். நான் மீண்டும் குமாரைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில், பருத்திமார் விளார் என் கால்களிரண்டையும் பதம் பார்த்தது. அய்யோ அய்யோவெனக் கத்தினேன். எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருந்த லைன்மேனக்கா வந்து தடுக்க முயன்றார்கள். இருந்தாலும் விளார் இறங்குவது நின்றபாடில்லை. அதற்குள் அம்மாவும் வந்து விட்டார். “ஏன், என்னாச்சு?” என்றார். அப்போதுதான் அங்கே இருந்தவர்களுக்கும் புரிந்தது. எனக்கும் புரிந்தது. “அங்க, வண்டி கொட சாஞ்சி கீழ உழுகுது. இவன் இங்க கைதட்டீட்டு குசியாச் சிரிக்கிறான்”னென்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னை நோக்கியோடி வந்தவரை தடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் என் தலையில் ஒரு கொட்டு இறங்கியது. திரும்பிப் பார்த்தால், கடுங்கோபத்துடன் அம்மா.

நான் அழுதவன்... அழுதபடியே திண்ணையிலேயே தூங்கிவிட்டேன். திடுமெனக் கண்விழித்துப் பார்த்தேன். என் கால்களை அப்பா பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். “எதனா சப்புடுறா” என்றார். “முலுவா.. ஒனகென்னடா வேணும்... எது கேட்டாலும் வாங்கித்தர்றேன்” என்றார். நான் பிடியேதும் கொடுக்கவில்லை. கெஞ்சிக் கொண்டேயிருந்தார். என்னையும் மீறி என் மனம் இளகி விட்டிருந்தது. “எனக்கு நீச்சல் பழக கத்தாழமுட்டி வேணும்” என்றேன். “செரி. குப்புசாமியண்ணங்கிட்டச் சொல்லி அரக்கனிட்டேரியில இருந்து நாளைக்கே கொண்டு வந்து குடுக்கிறேன்” என்றார். அது போலவே கத்தாழ முட்டியும் வந்து சேர்ந்தது. மேலும், அன்று முதல் எனக்குத்தான் அவர் பயந்து கொண்டிருந்தார். 

கடைசியாக, நான் போய்ருவேனென்றார். ’இல்லை, எங்களுடன்தான் இருக்கப் போகிறீர்கள்’ என்றேன். மெலிதாகச் சிரித்துக் கொண்டார். 

Happy Father's Day! It's ours to show the same faith!!
-பழமைபேசி