Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

12/02/2017

காக்காப்பொன்

நடுநிசி வரைக்கும் வேலை பார்த்துக் களைத்துப்போன காக்காப்பொன்னான் மடப்பள்ளியிலேயே தூங்கிவிட்டார். ஊரிலிருக்கும் குஞ்சுகுளுவானிலிருந்து இந்தத்தலைமுறை ஆட்கள் வரை எல்லாரும், பெரியகாக்காப் பொன்னான் என்கிற முத்துவேல்ப் பூசாரியின் மகனான வடிவேலுவை ”காக்காப்பொன்னான்” என்றே விளிக்கிறார்கள். ஊர்க்கவுண்டரின் அப்பாரய்யன் பெரியநாச்சிமுத்துக் கவுண்டர் இருந்த காலத்தில் கட்டப்பட்ட மடப்பள்ளியானது, புழக்கத்திற்கு வருமுன்னமே செத்துப் போன, பெரியகாக்காப் பொன்னானை நினைவில் வைத்திருக்கும் ஊர்ப்பெரியவர்கள் சிலர், சின்ன காக்காப்பொன்னானென்றும், சின்னமுத்தனென்றும் விளிக்கிறார்கள். ஊர்க்காரர்களுக்கு காக்காப்பொன்னானை ரொம்பவும் பிடிக்கும். சின்னஞ்சிறு பொடிசுகளைக் கூட மிகவும் அன்பாகவும் மரியாதையோடும் விளித்துப் பேசுவதும் அவரது பணிவும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பாப்பாங்காட்டு சின்னவக்கீல்க் கவுண்டருடைய மகள் பெரியம்மணி மகளுக்கும் மகனுக்கும். மாகாளியாத்தா கோவிலில் வைத்துத்தான் மொட்டையடித்துக் காதுகுத்து வைக்க வேண்டுமென்பது பெரியவக்கீல் பாட்டைய கவுண்டரின் விருப்பம். அவர் இருக்கும் போதே நடந்திருக்க வேண்டிய முறைச்சீர் இது. எதிர்பாராவிதமாகப் பெரியவர் தவறிவிட்டதினால், இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அதற்கு காலம் வாய்த்திருக்கிறது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு காலபூசை செய்து கும்பிட்டுவிட்டு மொட்டையடித்துச் சாமிகும்பிடுதல். பதினொரு மணிக்குப்பிறகு பாப்பாங்காட்டிலுள்ள கருப்பராயனுக்கு கெடாவெட்டிப் பூசை செய்தலென போன மாதமே முடிவு செய்யப்பட்டு ஊரெல்லாம் காக்காப்பொன்னான் அவர்களையே அழைக்கவும் சொல்லி, அழைப்பு வேலைகளும் முடிந்து விட்டது.

கோவில்த்தரையை எல்லாம் கழுவிவிட்டு, சுற்றுமுற்றும் சாணம்போட்டு மெழுகிவிட நடுநிசி ஒருமணி ஆகிவிட்டது. இனி மடப்பள்ளியில் இருக்கும் அந்த ஒற்றையடுப்பிலேயே விறகைக்கூட்டி பாலில்லாத வரக்காப்பியைப் போட்டுக் குடித்துவிட்டு, மடப்பள்ளியெல்லாம் தட்டிக்கூட்டி பூசி சாணி வளித்துவிட வேண்டும்.

காக்காப்பொன்னான் அவர்களின் மூதாதையர் காலத்திலிருந்தே, வடக்கே சுல்தான்பேட்டை, தெற்கே புக்குளம் குறுஞ்சேரி, மேற்கே சூலக்கல் கோயில்பாளையம், கிழக்கே பெரியபட்டி குண்டடம் வரையிலுமாக எங்கு கூத்து நடந்தாலும் வெள்ளிப்பட்டியிலிருக்கும் இவர்களிடமிருந்துதான் காக்காப்பொன் வாங்கிப் போவார்கள். நயம் காக்காப்பொன், இடைவெட்டு காக்காப்பொன், நசுவல் காக்காப்பொன் எனத் தரத்தின் அடிப்படையில் இரகம் இரகமாக இவர்களிடத்தில் காக்காப்பொன் கிடைக்கும்.

ஊர் மாரியம்மன் கோவிலில் பூசை செய்வது இவர்களுடைய தலைக்கட்டுமுறையென்றால், காக்காப்பொன் சேகரம் செய்து ஊர்களில் நடக்கும் கூத்துகளுக்கும், கோவில்சாமிகள், சப்பரச்சாமிகள், சக்திசாமிகள், உருவாரப்பொம்மைகள், பிள்ளைப்பொம்மைகளென எல்லாவற்றுக்கும் தேவையான காக்காப்பொன் கொடுத்து, இந்த உலகம் அதன் அச்சில் இயங்குவதற்கான அத்தனைக்கும் தாமே பொறுப்பு எனக்கருதும்படியாகத் தொண்டு புரிந்து வருகின்றனர் காக்காப்பொன்னானும் அவருடைய அங்காளிபங்காளிகளும்.

திண்ணையின் இடப்பக்க மூலையில் கூத்தாட்டக் கலைஞர்களுக்கான இடைவெட்டுக் காக்காய்ப்பொன்ப் பை, மழைச்சாரலுக்கு நனையாத வண்ணம் வீட்டு எறவாரத்தில் கொக்கிப் போடப்பட்டு அதில் தொங்கிக் கொண்டிருக்கும். யாரும், எந்நேரமும் வந்து வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு வாங்கிப் போகலாம். தேங்காய்ச் சிரட்டையில் அளந்து கொடுப்பார்கள். ஒரு சிரட்டை எட்டணா, இப்போதைய காசுக்கு ஐம்பது காசுகள். ஐம்பது காசென்றால் பெரிய பணம். ஐம்பது காசுக்கு நான்கு புட்டும் ஒரு லோட்டா பனங்கருப்பட்டிக் காப்பியும் கிடைக்கும் வள்ளியம்மா கடையில். மற்ற சோலிகளுக்கென்றால், காக்காப்பொன்னான் அவர்களிடமோ அல்லது அவருடைய தம்பி ஃபிட்டர் நடராசு அவர்களிடமிருந்தோதான் வாங்கிப் போக வேண்டும்.

சாமிகாரியத்துக்கு என்பதால், நயம் காக்காப்பொன்ப் பொதிகளை வீட்டுக்குத்தூரமாகாத ஆட்கள் புழங்கும் கோயில் மடப்பள்ளியிலும் புத்துக்கண் சாளையிலும்தான் பத்திரப்படுத்தி வைப்பது குடும்ப வழக்கம். ஊரிலிருக்கும் நாயக்கமார்கள் எல்லாம் ஊரோரத்தில் இருக்கும் புற்றுக்கு பெளர்ணமிதோறும் பூசை செய்து குலதெய்வமான எல்லம்மாவை வழிபடுவார்கள். அந்த புற்றுக்கு அருகே ஒரு ஓலைவேய்ந்த குடிசையுமுண்டு. இந்த சாளையிலும் காக்காப்பொன் பொதிகள் இருக்கும். ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் ஒரு மங்கலப்பெண்ணுக்கு பட்டு உடுத்தி, செந்தூரம், காக்காப்பொன் கொண்டு அலங்காரம் செய்து சக்தியழைத்து வாக்குக் கேட்பார்கள். அதனால் காக்காப்பொன் பொதிகள் இந்தச்சாளையிலும் இருக்கும்.

உள்ளூர்க் கோவில்களில் இடமபெறும் அலங்காரத்துக்கான காக்காப்பொன், சாமி உருவுகளுக்குப் பூசப்படும் காக்காப்பொன், கண்ணடக்கமாக வைக்கப்படும் காக்காப்பொன் போன்றவற்றுக்கு யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது. வருடா வருடம் குடியானவர்கள் படியளக்கும் தானியங்களும், நார்முத்து நாயக்கர் தோட்டத்திலிருந்து அவ்வப்போது கொடுக்கப்படும் தேங்காய்களும் காய்கறிகளுமே குடும்பத் தேவைக்குப் போதுமானதாக இருந்தது.

அசலூர்க் கோயில்களுக்குத் தரப்படும் காக்கப்பொன்னுக்கு பொதிகளுக்கேற்றபடி அவர்களாகவே பணம் கொடுப்பார்கள். இவ்வளவு என்று சொல்லிக் கேட்டுவாங்கும் பழக்கம் காக்காப்பொன் குடும்பத்தாரிடம் இருந்ததேயில்லை.

மாலகோயில் எனப்படுகிற ஆலாமரத்தூர் ஆலகொண்டமால் திருக்கோயில் சாமிக்குப் படைக்கப்படும் உருபொம்மைகள், சிறுவயதுக் குழந்தைகள் விளையாடக் கொடுக்கும் பிள்ளைப்பொம்மைகள் போன்றவற்றுக்குத் தேவையான இடைவெட்டு அல்லது நசுவல் இரகக் காக்காப்பொன்னை, அத்தகைய பொம்மைகள் செய்பவர்களுக்கு மொத்தமாகக் கொடுத்துவிடுவார்கள். பொம்மைகள் செய்யும் பையான், சிக்கான் முதலான கைவினைப் பொருட்கள் செய்யும் உள்ளூர்வாசிகள், பொம்மைகள் விற்றதைப் பொறுத்து அவ்வப்போது பணம் கொடுப்பார்கள். இப்படிக் கிடைக்கிற பணத்தில் குடும்பத்துக்கு வேண்டிய துணிமணிகள், நகைநட்டு போன்றவற்றை வாங்கிக் கொள்வார்கள்.

காக்காப்பொன்னான் அவர்களுடைய வீடிருக்கும் வளவுக்கு அடிக்கடி அசலூர்க்காரர்களும் வந்து போவார்கள். வந்து போகிறவர்கள், காக்காப்பொன்னுக்காக மட்டுமே வந்து போவதில்லை. காக்காப்பொன் எங்கெல்லாம் விளைகிறதோ, கிடைக்கிறதோ அந்தபூமியெல்லாம் நல்ல சுவையான தண்ணீர் ஊறுகிற பூமியென்பதால், அத்தகைய பகுதிகளில் ஏதாவது பூமி விலைக்கு வருகிறதாயெனக் கேட்டறிந்து கொள்ள வருபவர்களும் உண்டு. மேலும் காக்காப்பொன் நல்ல கருங்கற்களில் மட்டுமே கிடைக்கிற கனிமப்பொருளாகும். வீடு கட்ட, பெரிய பெரிய கட்டிடங்கள் கட்ட விழைவோர், கோயில் கட்ட விழைவோரெல்லாம் கருங்கற்கள் கிடைக்குமிடத்தை அறிந்து கொள்ளவும், கிணற்று வேலைகள் நடக்குமிடமறிந்து தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள விரும்பும் கொத்துக்காரர்கள், தச்சர்கள், வணிகர்கள் போன்றோரும் காக்காப்பொன்னான் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருப்பார்கள்.

”டே கனகூ, டே கனகூ… இதென்ன இவனை இங்க காணமாட்ட இருக்குதூ?”, கனகு எனப்படுகிற கனகராசுவைத் தேடிக் கொண்டே வீட்டைச் சுற்றி வந்தாள் காக்காப்பொன்னனின் மனைவி பழனா.

எங்கும் அவனைக் காணோம். தெருமுனையில் சைக்கிள் கடை வைத்திருக்கும் அணிக்கடவு மாரியின் கடைக்குப் போனாள் பழனா.

“ஏனுங் தம்பீ? எங்க கனகு இங்கெங்னாச்சீமு வந்தானுங்ளா? அவங்கப்பன் கோயல்லயே இருந்துட்டாரு இராத்திரி. வெடிஞ்சு எந்திரிச்சுமு வர்ல. இவங்கிட்ட புட்டும் சட்னியுமு குடுத்தனுப்போணும். எங்க போனானுன்னு தெரீலிங் தம்பீ!”

“அக்கா, நீங் ஊட்டுக்குப் போங்க. எங்க சின்னவனை உட்டுத் தொழாவச்சொல்றன்”

விசயம் வேறொன்றுமில்லை. நேற்று வாளவாடி நாயக்கர் தோட்டத்து கிணற்று மேட்டுக்கு அவனுடைய அம்மா பழனாவோடு காக்காப்பொன் அரிக்கப் போனவனுக்கு என்றுமில்லாதபடிக்கு இரண்டு செம்பொன்நிற காக்காப்பொன் சில்லுகள் கிடைத்திருந்தன. செம்பொன் கிடைப்பது அரிதினும் அரிது.. பொதுவாக வெள்ளிப்பொன்தான் கிடைக்கும். அதில் ஏககுசியாகியிருக்கிறான் கனகு.

கனகுவின் சித்தப்பா ஃபிட்டர் நடராசன் சொன்னதன்படி பார்த்தால், வெள்ளைக்காரன் காலத்தில் தோண்டப்பட்ட ஊர்க்கிணற்றின் கல்லில்தான் கடைசியாகச் செம்பொன்ச் சில்லுகள் கிடைத்ததாம். அதற்கு அடுத்ததாக, காமராசர் காலத்தில் வடக்கே அரசூர் மேட்டில் தோண்டப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்கால் மேட்டில் கருநீலப்பொன் வெகுவாகக் கிடைத்ததாம். இவற்றுக்குப் பிறகு, இப்போதுதான் இந்த இரண்டு செம்பொன் கிடைத்திருப்பதாகவும், இவற்றை குடும்பத்தின் அடுத்த காக்காப்பொன்னான் ஆகப் போகும் நீயே வைத்துக் கொள்ளலாமெனவும் அவனுடைய சித்தப்பா சொன்னதை நினைத்துப் பரவசமானவன் இராவெல்லாம் தூங்கவேயில்லை. அம்மாவுக்குத் தெரியவந்தால், அப்பாவிடம் சொல்வாள்; இவையிரண்டும் தனக்கில்லாமற் போய்விடுமென்கிற பதற்றம் வேறு.

எப்போதும் காப்பி கேட்டு நச்சரிப்பவன், இன்று, எழுந்ததும் கிளம்பிப் போய்விட்டான். போகிற வழியெங்கும், சட்டைப்பையில் இருந்து எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டான்.

துரைசாமி வாத்தியார் வீட்டுக்குப் போனான். இரகுபதி வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தான்.

“இரகு, போலாமாடா?”

“என்ன இன்னிக்கு இங்க வந்திருக்கே? ஒஞ்சோட்டாலி சுந்தரம் இல்லியா??”

“இல்ல, உங்கிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லோணும்”

“இரு வர்றன்”

இரகு உள்ளே போனான். காப்பி டம்ளரை வீசியெறிந்து கொண்டே இரைந்தான், “அம்மா, எனக்கு அவசரமா வெளிக்கு வருது. நான் போகோணும்”.

வெளியே வந்தான். “டே கனகு, வாடா போலாம்”.

காப்பி குடித்ததற்கு மெய்யாலுமே குடலெல்லாம் இளக்கம் கண்டு அவனுக்கு வயிற்றுக் குடல்களெல்லாம் வெளித்தள்ளிக் கொண்டிருந்தன.

“கனகு, நீ மொல்ல வா, நான் போறன்”, ஓடினான் இரகு.

குட்டைக்குப் போகுமுட்டும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. செட்டுக்கார நாராயணன் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் குட்டிச்சுவருக்குள் இலாகி, அங்கிருந்த கற்றாழைக்குப் பின்னால் பம்மிவிட்டான்.

வீதியிலேயே நின்று கொண்டு பேசினான் கனகு, “இரகு, நீ இங்கியாடா இருக்கே?”

“ஆமாடா, என்னால பொறுக்க முடீல. அவசரமா வந்துருச்சுறா”

“செரி, நீ ஆர்கிட்டவும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாச் சொல்றன்”

“இர்றா வர்றான், வந்து பேசிக்கலாம்”

புதர் மண்டியிருந்தது. அதற்குள் இருந்த கற்றாழைத்தண்டு நெடுநெடுவென ஓங்கியிருந்தது. கதிரவனின் இளவெயிலுக்கு புதுமலர் போல வெண்மலரொன்று கற்றாழைத் தண்டின் நுனியில் பூத்துக் கொண்டிருந்தது. இவன் அதை உயரே பார்த்தான். நீலவானம். இளம்பச்சைநிறத் தண்டு, அதன் நுனியில் பால்வண்ண மலர். இரசித்தான்.

வெடுக்கென கண்களை மலர்க்காட்சியினின்று பறித்துக் கொண்டவன், பரபரத்துக் கொண்டே சட்டைப்பையில் கையை விட்டான். இரண்டு செதில்களும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்குமிடையே ஒட்டிக்கொண்டு வந்தன. ஒன்றோடு ஒட்டி, ஒருசெதில் போலக் காட்சியளித்தது. “அப்ப, உன்னொன்னு தொலைஞ்சி போயிருச்சா?”, பதற்றம் கொண்டான். அதையப்படியே எடுத்து விரித்த உள்ளங்கையில் வைத்தான். இரண்டாகப் பிரிந்து தவழ்ந்தன இரு செதில்களும். உள்ளம் உவகையால் பொங்கி வந்தது.

“அதென்றா கனகு? அப்பிடிப் பாக்குற??” கால்சட்டைப் பட்டைகளைப் பூட்டாமல், அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டே கிட்ட வந்தான் இரகு.

கிட்ட வருவானென எதிர்பார்க்கவில்லை. காற்றிலிருந்து கையைப் பிடுங்கிக் கொண்டே இறுக மூடிக்கொண்டான்.

“ஆருகிட்டவும் சொல்லமாட்டேன்னு சத்தியம்பண்ணு. நான் சொல்றன்”

”மாரியாத்தா மேல சத்தியமாடா. நான் ஆருகிட்டயும் சொல்ல மாட்டன். சொல்றா, அதென்றா?”

“செம்பொன்றா, நேத்துதா எனக்குக் கிடைச்சது!”

“அப்பிடின்னா?”

கையை விரித்து, வெளிச்சம் படும்படியாக கிழக்குப் பார்த்து நீட்டினான். காலைக்கதிரவனின் மஞ்சளொளிக்கு இன்னும் இன்னும் அது ஒருபடி மேலே போய் பொன்னாய் ஒளிர்ந்தன இரண்டும்.

“கனகு, இதென்றா மழக்காய்தமாட்ட மின்னுது?”

“செரியான மண்ணுடா நீயி. மழக்காய்தம் அல்றா, இது செம்பொன்றா”

“டே எனக்கொன்னு குட்றா”

“ஒன்னும் கவலப்படாத. நான் இத ரெண்டயும் தமிழ்புக்குக்குள்ளார வெச்சிருவன். குட்டி போட்டதும் குடுக்குறஞ் செரியா? ஆனா, நீ ஆருகிட்டவும் மூச்சுடக் கூடாதுறா. எங்கப்பனுக்குத் தெரிஞ்சுச்சூ.. அவ்ளோதான்”

கால்களின் நடுவே ஒரு குச்சியை வைத்து நிலத்தை உழுதபடிக்கு, ‘டுர்ர்ர்ர்ர்ர்”ரென்று ஓசையெழுப்பிக் கொண்டே பைக் ஓட்டிவாறு வந்தான் சைக்கிள்க்கடை மாரியின் மகன் தங்கவேலு.

“ங்கொக்காலோலி., உன்னிய எங்கெல்லாந் தேடுறது? உங்கம்மா உன்னியத் தேடிகிட்டு இருக்குதாம். எங்கப்பன் உன்னியக் கையோட கூட்டியாறச் சொல்லுச்சு”

மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான். சட்டைப்பைக்குள்தான் அவை இருந்தன.

அம்மா கொடுத்த தூக்குப் போசியைக் கொண்டு போய் கோயில் மடப்பள்ளியில் வைத்துவிட்டு, தன் அப்பனைப் பார்க்காமலே வீட்டுக்கு வந்துவிட்டான். வந்தவன் துரிதகதியில் குளித்துவிட்டு, இட்லி ரெண்டை உள்ளேதள்ளியும் தள்ளாமலும் தின்று கைகழுவி, பைக்கட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினான்.

இறைவழிபாட்டுக் கூட்டம் முடிந்து எல்லாரும் அவரவர் வகுப்புக்கு வரிசையாகச் சென்றமர்ந்தனர். தமிழ்ப்புத்தகத்தில் கைமாற்றி வைத்தான் கனகு. இடப்பக்கம் அமர்ந்திருந்த இரகு, அவற்றைப் பற்றி அடியோடு மறந்து போயிருந்தான். இவன் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். தோராயமாகப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான். கண்களுக்கு அவை தென்படவில்லை. வாத்தியார் பாடம் நடத்துவதைக் கவனிக்காமல், புத்தகத்தில் கண்வைத்தபடி கிடைகொள்ளாமல் தவித்தான். அவைதான் கண்களுக்குத் தென்படமாட்டேன் என்கிறதே? தரையில் வைத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டு போனான். எழுபதாம் பக்கத்திலிருந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடலோடு பாடலாய் ஒட்டிக் கொண்டிருந்தன.

மத்தியான சப்பாட்டு பெல் அடித்தது. எல்லாரும் எழுந்து வெளியே போனார்கள். அடுத்த வகுப்புப் பையன்கள் வந்து கடனாக சில காக்காப்பொன் தரமுடியுமாவெனக் கேட்டார்கள். பொதுவான நாட்களில், சாதா காக்காப்பொன் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்வார்கள். சீனிப்புளியங்காய், இலந்தவடை, பொன்வண்டு, பனையோலைக் காற்றாடி போன்றவற்றுக்கு ஈடாகச் சிலபல காக்காப்பொன்கள் பரிமாறிக் கொள்வார்கள். இன்றைக்கு அதைப்பற்றியெல்லாம் கனகுவுக்கு நாட்டமில்லை. ஞாபகம் வரவே, தன் வகுப்பை நோக்கி ஓடினான்.

துரையான் வகுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தான்.

“கனகு, இரகு எங்கடா?”

“அவன் ஊட்டுக்குப் போய்ட்டு இருக்குறான்”, சொல்லிக் கொண்டே வகுப்புக்குள் ஓடினான்.

பையைத் திறந்து எழுபதாம் பக்கத்துக்குப் போனான். அங்கு அவை இல்லை. மீண்டும் பக்கம் பக்கமாகப் புரட்டினான். கிடைக்கவேயில்லை. புத்தகத்தின் அடிப்பக்கத்தைப் பிடித்தப்படி, எல்லாப்பக்கங்களும் பிரிந்தாடும்படி உதறினான். மயிலிறகின் ஒரே ஒரு பிசிறுமட்டும்தான் காற்றில் அசைந்தாடிக் கீழே விழுந்தது. பைக்கட்டை எடுத்துக் கொண்டு ஓடினான்.

“கனகு, ஏன்டா அழற? என்னாச்சி?? சாப்புடுறதுக்கு வரலையா??”, எதிர்ப்பட்ட சத்துணவு ஆயா மேரியக்கா கேட்டாள்.

பதிலேதும் சொல்லாமல், தன் சித்தப்பாவின் இருப்பிடம் நோக்கி ஓடினான். வீட்டுக்குப் பின்புறம்தான் காயில் கட்டிக் கொண்டிருப்பார் சித்தப்பா. ஆனால் அங்கு அவர் இல்லை. புற்றுச்சாளைக்கு ஓடினான்.

“ஏன்டா தங்கம்? அம்மா எதனாச்சும் அடிச்சுப் போட்டாளா?”, அழுதுகொண்டு வருபவனைப் பார்த்துக் கேட்டார் ஃபிட்டர் நடராசன்.

“சித்தப்பா, செம்பொன் ரெண்டையும் துரையான் திருடீட்டான்”, தேம்பித் தேம்பி அழுதான்.

உரக்கடையை நோக்கிப் போனார்கள் இரண்டு பேரும். மத்தியான நேரமென்பதால் கடையில் யாருமில்லை. ஆறுச்சாமி மட்டும்தான் இருந்தார்.

“ஏனுங், கனகானோட காக்காப்பொன்னுக நம்ம தம்பிகட்ட இருக்குதுங்ளாமா. பையன் சாப்டாமக் கொள்ளாம அழுதிட்டு இருக்கான். சின்னப் பசங்க. கோளாறாப் பேசிக் கொஞ்சம் வாங்கிக் குடுத்தீங்னாப் பரவாயில்ல”

“என்ன காக்காப்பொன்னு? கடையில வந்து பேசற நாயமா இதெல்லாம்? இரு, கூப்புடுறன்”

அப்பாவின் குரல் கேட்டுத் தயங்கி தயங்கி வந்தான் துரை. வந்தவன் அவனாகவே சொன்னான், “அப்பா, அவனோட காக்காப்பொன் எங்கிட்ட இல்லப்பா”.

”சித்தப்பா, இவந்தான் திருடீட்டான். வகுப்புக்குள்ள இருந்து இவந்தான் வந்துட்டு இருந்தான்”

உரக்கடை தங்கவேலுக்கு கோபம் வந்துவிட்டது. மகனை விரட்டினார், ”நீ உள்ள போடா”

“ஏனுங்? தம்பி வேணுமின்னா ஒன்னை வெச்சிகிடட்டு. ஒன்னுமுட்டுமாவது வாங்கிக் குடுங். புள்ள அழுது பாருங்”

“என்னத்தறா வாங்கித் தர்றது? எங்ககிட்டவே படியளப்பு வாங்கித் தின்னுகிட்டு கல்லுகளைப் பொறுக்குற நாயிக. திருட்டுப்பட்டமாடா கட்டுறீங்க? அதும் கடை முன்னாடி வந்து நின்னுட்டு??”

அமைதியாக இருந்த நடசாரன் சொன்னார், “ஏனுங், நீங்க பேசுறது சரியில்லீங். அதுங்கொழந்தைதா. இதுங்கொழந்தைதா. ஆளுக்கொன்னு வெச்சிகிடட்டும்னுதான நான் சொன்னன்?”

“என்ன மயிருக்கு நீ கடைமுன்னாடி வந்து நின்ன? எதுன்னாலும் வீட்டுக்குப் பின்னாடிதான வந்திருக்கோணும்? எல்லாம் அந்த துரைசாமி வாத்தியார் குடுக்குற எடம்டா. இந்த அளவுக்கு வந்து நிக்குது. அண்ணன், தம்பி ரெண்டு பேரும் வீட்ல இருந்திட்டு, வாத்தியாருக்கு உட்டுப் பொழைக்கிற உங்களுக்கு இவ்ளோதூரம் வந்துருச்சுறா”

நடராசன் உறுமினார், “யோவ், இனி ஒரு பேச்சுப் பேசுன. பல்லைத்தட்டிக் கையில குடுத்துருவன். என்னய்யா பேச்சுப் பேசுற?”

ஊர் கூடிவிட்டது. எங்கிருந்தோ காக்காப்பொன்னான் வந்து சேர்ந்தார். அண்ணன் கூட்டத்துக்குள் வந்து சேர்வதைப் பார்த்த நடராசன், அழுதுகொண்டு நிற்கும் கனகுவைத் தூக்கிக் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

நடராசன் வெளியேறுவதைப் பார்த்த உரக்கடை தங்கவேலு மேலும் ஆக்ரோசமாய்ப் பேசினார். தன்னுடைய பங்காளியான துரைசாமி வாத்தியார் சொல்லித்தான் இவர்கள் கடையேறி வந்திருப்பதாய்க் கூச்சலிட்டார். பழனாவை துரைசாமி வாத்தியாருக்குக் கூட்டிக் கொடுத்துக் காசு பார்ப்பதாயும் முழங்கினார்.

காக்காப்பொன்னான் அழுதார். துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஊர்க்கவுண்டர் வீட்டுக்குப் போனார்.

காக்காப்பொன் விற்றுக் கிடைக்கும் சில்லறை வருமானங்கள், கோவில்த்தட்டில் போடக்கிடைக்கும் காசுகள் எல்லாவற்றையும் பழனாள்தான் கையாண்டு வருகிறாள். அவ்வப்போது துரைசாமி வாத்தியாரிடமோ, அவருடைய மனைவியிடமோ கொடுத்து விடுவாள். அவர்கள் அதைத் தொகையானபின், தபாலாபீசில் போடுவார்கள். அல்லது பழனாளிடமே கொடுத்துவிடுவார்கள். அந்தப் பணத்துக்கு எவர்சில்வர் அண்டா, குண்டா போன்றவற்றை நெகமம் சந்தைக்குப் போகும் போது வாங்கிக் கொள்வாள்:. துரைசாமி வாத்தியாரின் அம்மா கிடைமனுசி. தனக்கு சாவகாசமான நேரத்தில், அந்த அம்மாவுக்கு குளிப்பாட்டவும் அன்றாடம் சென்று வருவாள். அவர்கள் அதற்கு ஈடாக அவ்வப்போது பணம் அஞ்சு பத்து கொடுப்பார்கள்.

பாப்பாங்காட்டு சின்னவக்கீல்க் கவுண்டரும் ஊர்க்கவுண்டரும் காதுகுத்து நிகழ்வைப் பற்றியும் வரப்போகும் ஒறம்பரைகளைப் பற்றியும் அளவளாவிக் கொண்டிருந்தனர். காக்காப்பொன்னர் வாசலிலேயே சற்றுநேரம் நின்று கொண்டிருந்தார்.

பேச்சை நிறுத்திவிட்டுச் செருமினார் ஊர்க்கவுண்டர், “என்ன எல்லாம் செரி பண்ணிப் போட்டியா? கோயலைச் சுத்தீலும் செதுக்கியுட்ருக்குதான??”

“அதெல்லாம் செரி பண்ணியாச்சுங்… இந்த ஒரக்கடைக்கார்ரு எம்பொண்டாட்டியப் பத்தி தப்பும்தவறுதுலுமா பேசிக் கூட்டத்தை கூட்டுறாருங். எனக்கு மனசு பொறுக்க மாட்டீங்திங். கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்டாப் பரவால்லீங்”

”அட காக்காப்பொன்னா, எந்த நேரத்துல என்ன பழம பேசுற? போ, நாளைக்கு விசேசத்தை வெச்சிகிட்டு? உம்பொண்டாட்டிகிட்டப் பேசுனயா நீயி?”, ஆற்றுப்படுத்தினார் ஊர்க்கவுண்டர்.

“இல்லீங், நான் கோயல்ல இருந்து நேரா வர்றனுங்”

“அப்பப் போயி மொதல்ல உம் பொண்டாட்டிகிட்டப் பேசு போ”, அனுப்பி வைத்தார் ஊர்க்கவுண்டர்.

பழனாவுக்குக் கோபம். முந்தின நாள் மதியம் சென்ற காக்காப்பொன்னான் மறுநாள் பிற்பகலில்தான் வீட்டுக்கு வருகிறார்.

“ஏ பழனா? நீ, அன்னாடும் தொரசாமி வாத்தியார் ஊட்டுக்குப் போறயாமா? அவர்கோடயேதா இருக்கியாமா?? என்ன சங்கதீன்னேன்??”, இரைந்தார் காக்காப்பொன்னான்.

“இதென்ன இன்னிக்குப் புதுசா கேட்டுகிட்டு? ஆமா, இன்னிக்குக் காலையிலகோடத்தான் போயிப் பாத்துப் போட்டு வந்தன். இப்ப அதுக்கென்ன??”

“அப்ப, ஊருக்குள்ள, ஒரக்கடைக்காரரு சொல்றதெல்லாம் நெசந்தானா?”

“என்ன நெசந்தானா? ஊட்டுல அண்ணன் தம்பி ரெண்டு பேரு இருக்கீங்க? என்ன பிரயோசனம்?? அதான் நான் அவுக ஊட்டுக்குப் போறன், வர்றன்”

காக்காப்பொன் சிராய்க்கும் உளி முன்னாலேயே கிடந்தது. எடுத்தார் காக்காப்பொன்னான்.

சரிந்து விழுந்தவளின் வலதுகை தன் மகனைத் துழாவியது. கனகு, கனகு எனும் முனகல் காற்றோடு கரைந்து போனது.

சராங்கமாய்க் கோவிலுக்குப் போனார். கோயிலுக்குப் பின்னாலேயே கிடைக்கிற அரளிவிதைகளோடும், உச்சிபூசைக்குப் புழங்கியதில் மிச்சமிருந்த பாலோடும் கலந்து போனார் காக்காப்பொன்னான்.

கோயிலடிக்கோ, காக்காப்பொன்னான் வீட்டடிக்கோ யாருமே வரவில்லை. ஊர்க்கவுண்டர் மட்டும் தன் பண்ணையத்து ஆட்கள் நான்கு பேரை அனுப்பியிருந்தார். சாய்ங்காலம் நேரம் இருட்டி வந்தது. யாரும் வாசற்தெளிக்கவில்லை. கலகலப்பாய் இருக்கும் பெரியகருப்பன் டீக்கடை பேசாமலிருந்தது. அரக்கன் இட்டேரியிலிருந்த சாயமரத்திசையிலிருந்து ஆந்தையொன்று அலறும் சத்தத்தில், இந்நேரமும் மசங்கியிருந்த கம்மிய மேகமொன்று நகரத்துவங்கியது. இருந்தாலும் இருட்டுத்தான்.

கோவில், வீடு, புற்றுச்சாளை என எல்லா இடங்களிலுமிருந்த காக்காப்பொன் பொதிகளைக் கொண்டுவந்து மேலே பிரித்துக் கொட்டினார் சித்தப்பா. தீநாக்குகள் ஆளுயரத்துக்கும் மேலாக எழும்பின.

கனகுவைத் தூக்கிக் கட்டியணைத்துச் சொல்லியபடியே வெளியேறினார், “ஊரு, உலகம், சாமி, சனம் எல்லாரும் நம்ம காக்காப்பொன்னுல அலங்காரம் பண்ணிகிட்டாங்க. இப்பப் பாரு, எல்லாம் பத்தியெரியுது!!”

நன்றி: இலக்கியவேல்

11/16/2017

பெருமாள் முருகன் பார்வையில் ’செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு.

எழுத்தாளர் பெருமாள் முருகன் பார்வையில் ’செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு.

10/20/2017

உச்சா




கூடு திரும்பலென்பது எப்போதுமே இன்பமும் குதூகலமும் வாய்க்கப் பெற்றவொன்றாகும். வேலையிலிருந்து திரும்புவது, வெளியூரிலிருந்து திரும்புவது, விடுதியிலிருந்து திரும்புவது, வனாந்திரம் தேசாந்திரம் போய்த் திரும்புவது என எல்லாமுமே உளப்பொங்கலுடைத்தவை; இணையரின் காராட்டுக் காலம் தவிர. அதென்ன இணையரின் காராட்டு காலமென்பது? அதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் நேரமிதுவல்ல. தேவையென்றால், வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

நான் இருக்கும் ஊர், ஒரு பெரிய வானூர்தி நிறுவனத்தின் நடுவவானூர்தி முனைய(hub) நகராகும்.. எல்லா ஊர்களுக்கும் செல்லும் வானூர்திகள் இங்கு வந்து போகும். அதாவது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் பயணிகளை ஒரு வானூர்தியிலிருந்து இன்னோர் வானூர்திக்கு மடைமாற்றக்கூடிய ஊர். ஆதலால், நாம் எங்கு சென்றாலும் நேரடி வானூர்தியில் இரண்டு மணி நேரத்தில் செல்லக் கூடிய பயணமாகத்தான் இருக்கும். வியாழக்கிழமை பிற்பகல் ஒருமணிக்கெல்லாம் ஒரு பொட்டியை மூடி இன்னொரு பொட்டியை கட்டிக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து விடுவோம். வந்தபின், சோதனைச்சடங்குகளை முடித்துக் கொண்டு நேராக இசுடார்பக்சு கடைக்குச் சென்று பெருங்கோப்பை மிகைச்சூட்டு வெண்மோக்கா (extra hot grandee white mocha) வாங்கி விடுவோம். வானூர்தி உட்புகலுக்குச் சற்றுமுன்னர் தேங்குபை சுருங்குபை ஆகுமளவுக்கு அடித்துச் சுகிப்போம். ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாதெனச் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றனர் பெரியோர்.

அன்றைய பொழுது நமக்கான பொழுதாக இருந்து, எவ்வித அக்கப்போர்களும் இழவுகூட்டலுமின்றியிருப்பின், சரியான நேரத்துக்குப் புறப்பட்டுச் சரியான நேரத்துக்கு வானூர்தி வந்து சேரும். பெரும்பாலும் வீடு திரும்பும் போதுதான் மிகச்சரியாக இழவைக் கூட்டுவார்கள். எது, எப்படியிருப்பினும் வானூர்தி வந்து சேர்ந்ததும் பொட்டியை இழுத்துக் கொண்டு செல்லுமிடம் மூத்திரச்சந்தாகத்தான் இருக்கும். சில நேரங்களில், வானூர்திக்குள்ளாகவே பையிலிருந்து நீரிறக்கம் செய்ய வேண்டியிருக்கும். எல்லாம், உள்ளே தள்ளிய தீர்த்தவாரியைப் பொறுத்து என்பதறிக.

கண்ணிமைக்கும் நேரத்தில் கொசுவர்த்தி சுழல்கிறது. உங்களை அப்படியே குண்டுக்கட்டாக கோயமுத்தூர் அவிநாசி சாலையிலிருக்கும் கொள்ளுப்பாளையத்துக்கும் கணியூருக்கும் இடைப்பட்ட பாம்புகள் பல்லிகள் ஓணான்கள் குடிகொண்டு வாழும் பாழும் காட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறேன்.

பகல்வாரம் முடிந்து கொள்ளிரவுவாரக் கிரமத்துக்கு மாறும் சனிக்கிழமைதோறும் வீடு திரும்புவது வழமையாகும். அதாவது, பகல்வாரமெனில் காலை எட்டுமணி முதல் மாலை நான்கரைமணி வரை வேலைநேரம். கொள்ளிரவு வாரமெனில் இரவு ஒரு மணியிலிருந்து காலை எட்டுமணி வரை வேலை நேரம். ஆகவே, சனிமாலை நான்கரையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒருமணிவரையிலுமாக நெடுநேரம் நமக்கு விடுப்பாக இருக்கும். எனவேதான் இந்தகாலகட்டத்தில் ஊர் திரும்புவதென்பது உகந்ததாகக் கருதப்படுகிறது. அதைவிடுங்கள், இப்போது சனிக்கிழமை மாலை நான்கு மணி.

நெஞ்சமல்லாம் கிறுகிறுக்கும். மனசெல்லாம் இறக்கைகட்டி அலேக்காகப் பறக்கும். ங்கொய்யால எப்படா இந்த மணியடிச்சுத் தொலையுமென கிடந்துதவிக்கும் உள்ளம். கழிப்பறைக்குச் சென்று முகம் கழுவி ஒப்பனை செய்து சட்டைக்காலரைத் தூக்கிவிட்டு, வேலைநிமித்தம் அடுத்த வேளைக்கானவனிடம் பணிகளை மாற்றிக் கொடுத்தானபின், எந்த மணித்துளியிலும் மணியடிக்கு்மென எண்ணி ஓட்டமெடுக்கப் பரபரத்துக் கொண்டிருக்கும் கால்கள். அந்தா… அடிக்கிறது மணி, கிர்ர்ர்ர்ர்…

நேரச்சீட்டில் வெளியேறுபதிவிட, outpunch, கூட்டம் நெருக்கி முண்டியடிக்கிறது. டபக். என்னுடைய அட்டையில் விழுந்துவிட்டது முத்திரை. நிறுவனச்சாலைக்குள் ஓடக் கூடாது. கால்கள் வேகவேகமாக எட்டி நடையைப் போடுகின்றன. ஆனால் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து மணிக்குள்ளாக, டவுன் ஆல் சோமனூர் வண்டியொன்று, காந்திபுரத்துக்கு நாற்பத்தொன்று ஏ, அவிநாசியிலிருந்து பூண்டி செல்லும் நேர்வழிப் பேருந்து, இம்மூன்றையும் தவறவிட்டு விட்டால் இழவுதான். அடுத்த வண்டி, ஆறுமணிக்குப் பிறகுதான். அப்படியே வந்தாலும் இந்தப் பாங்காட்டில் நிற்பானா என்பது தெரியாது. வேகுவேகென்று, மேலாகச் சங்கூதிபாளையம் பிரிவுக்கு நடந்து போகவேண்டும். அப்படி நேர்ந்துவிட்டால், யாரைப்பார்த்தாலும் கொன்று தின்ன வேண்டும் போல இருக்கும். இன்றைய நாள் நல்ல நாள், காந்திபுரம் பேருந்தில் இடம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

உலுக்கி உலுக்கி எப்படியோ பீளமேடு வந்து சேர்ந்தாயிற்று. பாதிபேர் இறங்கிவிட்டனர். ஒரு இருக்கையில் இடம் பிடித்துக் கொண்டோம். பெருவேகமெடுக்கிறது வண்டி. இந்நேரமும் உலுக்கிக் கொண்டிருந்த உலுக்குநர்ப் பேர்வழி, இப்போது உலுக்குநர் சட்டையைக் கழற்றியெறிந்து விட்டு புரட்டுநர் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டாரென வைத்துக் கொள்ளுங்கள். புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொண்டே போய்ச் சேர்ந்து விடுகிறது வண்டி. அந்த லட்சுமிமில் வளைவில் நெளிந்தபோது கூட அவ்வளவாகத் தெரியவில்லை. போலீசு குவார்ட்டர்சில் ’சர்ரக்’கெனச் சாகசமாய் வளைந்து திரும்பியதில்தான் கம்பியில் விலாவெலும்புபட்டு நோகிறது. ”அதனாலென்ன, ரொம்ப நல்ல டிரைவர். அஞ்சரைக்கெல்லாம் கொண்டாந்து உட்டானப்பா”, தொண்டாமுத்தூரிலிருந்து வரும் நாதாரியொன்று மெய்சிலிர்க்கிறது.

காந்திபுரம் பேருந்து நிலையமல்ல அது. பெருமைதானம். இந்தக் கோட்டுக்கும் அந்தக்கோட்டுக்குமாக பரந்து விரிந்திருக்கும். சிறைச்சாலை மண்சுவரும் பொருட்காட்சி மைதானப்படலும் ஒன்றுக்கொன்று சந்திக்கிற இடம் வந்தான காட்சியைக் கண்டதும் ஒரே தாவு. உடனிருந்த தொண்டாமுத்தூர்க்காரனாவது சோதிபுரத்துக்காரனாவது, போங்கடாத் தெல்லவாரிகளா, ஒழிங்கடா சனியனுகளா… ஊர்டா, அந்தியூர்டா… வண்டி நிலையடைந்து நின்றதா இல்லையா என்பதையெல்லாம் யார் கண்டார்? ஒரே குதி! எதிரில் குறுக்காக வருபவனுக்கெல்லாம் மனதார நாமாவளிதான். அந்தநாய், இந்தநாய். இதற்கு மேல் நீங்களே உங்கள் விருப்பத்துக்கொப்ப இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

”அண்ணா, இந்த வண்டி பொள்ளாச்சிக்கு நேர்வண்டியா? இல்ல, நின்னு நின்னு போயி எழவெடுப்பீங்ளா??”

“நேர்வண்டிதான் தம்பி, கரெக்டா அஞ்சு அம்பது சில்லறை வெச்சிக்கணும்”

“இருக்கு இருக்கு”

வண்டி நேருவிளையாட்டரங்க வளைவிலிருக்கிற அந்த திடீர்குபீர் மேட்டில்,, அந்த எழவு அன்றைக்கும் இருந்தது என்பதுதான் பேரெரிச்சல். ஏறியிறங்கியதுதும் கனவுலகவாசம் வண்ணவண்ணமயமாக உருவெடுக்கும். கோவைத்தம்பியின் படப்பாடல்கள் வாயிலாக இளையராசா நம்மை உலாவில் ஆழ்த்துவார். அந்தந்த காலகட்டத்துக்கொப்ப, கனவுலக வாழ்வு அமையும். உதயகீதம், இதயகோயில் வரிகளெல்லாம் கைபற்றி அழைத்துப் போகும். புளியமரங்களெல்லாம் வேகவேகமாய் எதிரே ஏன் இந்த வேகத்தில் ஓடுகின்றன என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை. பாழாய்ப்போன குறிச்சி ரெயில்வே கேட்டில் மாட்டாமல் இலாகவாம என்னமாய் ஓட்டுறார் இந்த டிரைவர்? அருமைடா பரஞ்சோதி. யார் அந்த பரஞ்சோதி. யாரோ ஒருத்தன்.

வண்டி மகாலிங்கபுரம் பக்கமாவே வந்து விட்டது. அய்யோ, ஸ்ரீதேவி இருப்பாளா? ஸ்ரீதேவி இருப்பாளா? மனம் ஏங்கும். ஏனென்றால், அவள் மட்டுமே நம்மையும் மதித்துத் தாங்குபவள். இருப்பாளா? இருப்பாளா??

”அய்யோ, புறப்பட்டுப் போறாளே? மணி என்ன? அய்யோ, அஞ்சு மணித்துளி காலத்தாழ்ச்சிதான்! கொள்ளையில போனவன், குறிஞ்சிப்பாடி கேட்லயும் புரவிபாளையம் பிரிவுலயும் நிக்கும் போதே நினைச்சேன். திருட்டுத் தாயோளி, நேர் வண்டின்னு சொல்லிப் போட்டு கழுத்தறுத்துட்டான்”, இறங்கி ஓட்டமோ ஓட்டம்.

கம்பியைப் பிடித்து ஒரு காலை வைத்தாயிற்று. வலக்கையின் கட்டைவிரல், ஒரே ஒருவிரல்தான் ஒட்டுமொத்த உடலையும் அந்தக் கம்பியோடு பிணைத்திருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும், பாடையில்தான் விழ வேண்டும்.

“படியில தொங்கறவங்கல்லாம் மரப்பேட்டையில இறங்கிக்க. இல்லன்னா, உள்ள வா”

அப்பாட, கொஞ்சமாக இடம் கிடைக்கவே, இருகால்களாலும் நிற்க வாய்க்கிறது. ஸ்ரீதேவியா, கொக்கா?! இவள் அல்லாவிடில், நொம்பலம்தான். அந்தியூரில் நிறுத்தமாட்டான்கள். ”கோமங்கலத்துல இறங்கிடு, இல்லன்னா நேரா முக்கோணந்தான்”, மிரட்டுவான்கள். அருமை ஸ்ரீதேவி அன்பானவள். எங்கும் நிற்பாள்.

நரகவாழ்க்கைத் தடங்களிலிருந்து விடுபட்டு, இந்தா வருதுடா ஊர்வாசம். ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி கடந்து வந்துவிட்டதடா கெடிமேடு. கெடி என்றால், படை பரிவாரம் கொத்தளம் நிலைள்ளும் தாவளம். திப்புசுல்தான் படைகளை எதிர்க்க, நாயக்க மன்னரின் கெடிகள் இந்த மேட்டில் நிலைகொண்டதால், இது கெடிமேடு. கெடிமேடு தாண்டி, கோமங்கலம்பூதூர் வந்தாயிற்று. ஆகா, ஆகா. கொத்துமல்லி மணம் கமகமவென மூக்கு நாசிகளில் புகுந்து குருதியில் கலக்கிறது. மின்வெளிச்சத்திலும் கரிசல்மண் கண்களைக் கொள்ளை கொள்கிறது.

“அந்தியூர்ல வண்டி நிக்காது. வல(ளை)வுல வண்டி திரும்பும்போதே எறங்கிக்கணும்”

”ங்கோத்தா, நீ மூடு… இப்ப என்ன நடக்குதுன்னு மட்டும் நீ பாரு”, மனம் பேசுகிறது

அந்நேரமும் சாலையோரத்தில் காத்துக்கிடந்த தண்ணீர் பீப்பா (பீப்பாய்) வண்டி, ”லக், லக், ப்போ…”, ஒரே சுண்டு சுண்டிவிட்டாற் போதும், அந்த ஒற்றைமாட்டு வண்டி நடுரோட்டில் வந்து நிற்கும். பங்காளிகள் பலரும் வந்து நிற்பர். ”ங்கொய்யா ஊருக்கே தெரியும்டா, வலவாம், திரும்புமாம், எறங்கிக்கிடணுமாம்”.

அந்தியூர்… தாய்மண்ணே வணக்கம்!! 

இரவு மணி, எட்டு நாற்பது. நாகராசண்ணன் கடையில் சில நேரம். சத்திரத்தடியில் சில நேரம். வீடு செல்ல மணி ஒன்பது. ஆக மொத்தம் நான்கரை மணி நேரம்.

கட். அந்தியூரிலிருந்து, தற்போது நாமிருக்கும் இடத்துக்கு, தற்போதைய நேரத்துக்குத் திரும்புகிறோம்.

நான்குமணிக்கு மூத்திரச் சந்துக்குப் போனோம். ஒன்பது மணிக்கு வீடு திரும்பியும் மூத்திரசாலம் செய்ய வேண்டுமென்கிற நினைப்பிருந்திருக்கவில்லை. அமெரிக்காவில் புறப்படுமுன் ஒரு பாட்டம் பெய்தல். வந்து சேர்ந்தபின் ஒரு பாட்டம் பெய்தல். ஏனிந்த வேறுபாடு? சிந்திக்கிறோம். அங்கு தட்பவெப்பம் வேறு. வியர்வைச் சுரப்பிகள் அயராது பணியில். இங்கு அதற்கு இடமில்லை. அது மட்டும்தானா காரணம்?

“போடாப் பன்னாட, ஒழுக்கமா அப்பப்ப நீராகாரம், தண்ணி குடிக்கணும்டா. அல்லாங்காட்டி மூட்டு வலி, தலைவலி வரும். ஆயுளுங் குறையும்டாத் தறுதல”, நான் சொல்லவில்லை. அந்த உள்மனக்குரங்கு கொக்கரிக்கிறது.



10/18/2017

அப்பாடா... தீவாளிடா!!

அப்பாடா... தீவாளிடா!!

இலட்சுமிநாய்க்கன் பாளையம் விடுதியில் தங்கியிருந்து படிக்கிறேன். தீபாவளிக்கு முந்தினநாளே விடுதி மூடப்படுகிறது. பக்கத்து கிராமத்து நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு அழைக்கிறார்கள். நானும் போய்த் தங்கிவிட்டு, கடைசியாக வேலப்பநாய்க்கன் பாளையம் உறவினர் இரங்கநாதன் அவர்களது தோட்டத்துக்குப் போய்ச் சேருகிறேன். மழை பெய்யத் துவங்குகிறது. மழைக்கு இதமாக இராகிவடை, ஆமைவடை, மெதுவடை என மூன்றுவிதமான வடைகளும் சூடாக சுட்டுக் கொடுக்கப்படுகின்றன. குதூகலமாகத் தின்று கொண்டே மாலை முழுதும் கரைந்து போகிறது. எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றம். எவ்விதமான போன் வசதியுமிராத காலகட்டமது. அழவில்லை. அவ்வளவுதான். மனம்முழுமைக்கும் அழுகை அணைகட்டி நிற்கிறது. இராத்திரி எட்டுமணி சியாம் வண்டிக்குப் போயிர்லாம்டா என்கின்றனர் அண்ணன் இரங்கநாதனும் புருசோத்தமனும். அதேபோல மழையோடு மழையாகக் கொங்காடிகள் போட்டுக் கொண்டு அக்கநாய்க்கன் பாளையம் பிரிவில் இரவு எட்டுமணிக்கு நிற்கிறோம். நிற்கிறோம். கோயமுத்தூரிலிருந்து கிராமத்து சாலைகளில் தவழ்ந்து வருகிறது சியாம். மழையோடு மழையாகக் கரைந்து போகிறது நான் அழுத கண்ணீரெல்லாம்.

வண்டிக்குள் ஏறி, நான் போட்டிருந்த உடுப்புகளை எல்லாம் அவிழ்த்து பெட்டியிலிருந்த அழுக்கு உடைகளுக்குள் புகுந்து கொள்கிறேன். இருந்தும் குளிர் கொல்கிறது. வண்டி ஓட்டுநர் செய்யக்கூடாத சாகசமெல்லாம் செய்து ஒருவழியாக திருப்பூர் - பொள்ளாச்சி சாலையை வந்தடைகிறது வண்டி. ஓரமாக நிறுத்திவிட்டு பீடி ஒன்றைப் புகைக்க விடுகிறார். மழையும் ஓரளவுக்கு நின்று விட்டிருந்தது. 

“அண்ணா, மணி என்னாசுங்ணா?” 

“ஒம்பதே முக்கால் தம்பி”. 

மீண்டும் அழத் துவங்குகிறேன். வண்டிக்குள் எண்ணி ஏழு அல்லது எட்டுப் பயணிகள்தாம். அதில் ஒருவர் வருகிறார். “கண்ணு, நீங்க எந்த ஊருக்குப் போகோணும்?”, 

“சலவநாய்க்கன் பட்டிப் புதூருங்க”. 

“வெசனப்படாதீங்க. மழ நின்றுச்சு பாருங். போய்ச் சேந்துரும் வண்டி”. 

நிமிர்ந்து உட்காருகிறேன். வண்டி செஞ்சேரிமலைச் சாலையில் வேகமெடுக்கிறது. மகிழ்ச்சி கரை புரள்கிறது. சற்றே உறக்கமும் கண்களை அணைக்கிறது.

“நிறுத்துங், நிறுத்துங்... வண்டி தெக்கமின்னாப் போகாது. பச்சாக்கவுண்டம் பாளையத்து தரைப்பாலம் முறிஞ்சி போச்சி”

நான் செத்தே போனேன். என்னையும் கடந்து அழுகை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நாங்க நடந்தே போய்க்கிறமுங்க. எல்லாரும் இறங்கிப் போய்விட்டார்கள். எஞ்சியிருப்பது, ஓட்டுநர், நடத்துநர், நான்.

“செரிங்ணே, நாம நெகமம் போயி, வீதம்பட்டி வழியாப் போயி, பிரசிடெண்ட் நாய்க்கர் தோட்டத்துல வண்டியப் போட்டுர்லா. ஆனா, இந்தப் பையனை என்ன பண்றதுன்னுதா தெரீல”, நடத்துநர் ஓட்டுநரிடம் சொல்கிறார். 

விடிந்தால் தீபாவளி. ஒரு சீட்டில் குறுகிப்படுத்துக் கொண்டேன். அழுகையில் என்னையுமறியாது நான் உறங்கிப் போனேன்.எதொவொரு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறும் போது செரியான குலுக்கல். குலுக்கலில் நோக்காட்டில் எழுந்து உட்காருகிறேன். 

“வண்டிய நிப்பாட்டுங்க. ஆரோ, கைய கைய ஆட்டுறாங்க”

“எங்க தம்பு இந்த வண்டியில ஏறுச்சுங்ளா தம்பீ?”

வேலூர், வீதம்பட்டி, வாகைத்தொழுவு, சலவநாய்க்கன்பட்டி எல்லாமும் அதிர்ந்தெழுகிறது. பொட்டியாவது கிட்டியாவது. ஒரே பாய்ச்சலில் பாய்கிறேன். நாடி நரம்புகள் எல்லாமும் ஒருசேரப் புடைத்தெழுந்து பேரோசை ஆர்ப்பரிக்கிறது.  ”அப்பா!”

மகனைத் தேடி நள்ளிரவில் சைக்கிள் எடுத்துக் கொண்டு மழையோடு மழையாக வந்திருக்கிறார். 

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், போட்டாரே பார்க்கலாம் வெடிகளை. ‘பட பட படார்”.

அப்பாடா... தீவாளிடா!!

1/03/2017

வளைகாப்பு

வெளிச்சத்தையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு அப்போதுதான் கதிரவன் காணாமற் போயிருந்திருந்த நேரம். “ஏங்க, வெளீல போகும் போது இப்பிடிச் சோகமா முகத்தை வெச்சிகிட்டு?”, அங்கலாய்த்தாள் பாப்பு.

“அதான்… சைலண்ட் மெஜாரிட்டி புத்தியக் காமிச்சிட்டாங்களே? நாம என்ன இருந்தாலும் பஞ்சம் பொழைக்க வந்த சிறுபான்மைப் பரதேசிகதானே??”, அமெரிக்கத் தேர்தல் பாதிப்பின் பீடிகையில் நான்.

“கொஞ்சம் இருங்க, இப்ப வந்திடுறேன்”, சொல்லிக் கொண்டே மேல்தளத்தில் இருக்கும் மாஸ்டர் பெட்ரூம் நோக்கி விரைந்தாள் பாப்பு.

மூத்தவள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முந்தைய ஒரு நாள்! என் இருக்கையில் இருந்து கொண்டு அடுத்த நாள் புரடக்சனுக்குப் போகும் அப்ளிகேசனுக்கான அப்ரூவல் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதுதான், அடுத்த க்யூபில் இருந்து கேள்வியை வீசியெறிந்தான் கோயமுத்தூர் கோயிந்து, “டேய் மனோ! பொட்டிதட்டுறதுல நெம்ப முசுவாட்ட இருக்கூ??”

“கத்தாதறா… இன்னும் மத்த மத்த ஆளுகெல்லாம் லஞ்ச்சுக்குப் போகலையாட்ருக்கு!!” சொல்லி முடிக்கும் போது பின்னால் நின்று கொண்டிருந்தான் கோயிந்து.

“இப்பத்தான் வீட்ல பேசிட்டு இருக்கும் போது சொன்னாங்க. பாப்புவுக்கு இன்னிக்கு சர்ப்ரைஸ் பேபி சவர் பங்ஃசனை சாய்ங்காலம் ஏழுமணிக்கு எங்க வீட்டுல நடத்த எல்லா ஏற்பாடும் செய்திருக்காங்ளாம். நீயும் பாப்புகிட்ட வாய விட்றாத. ஆப்பீசுல ஆரையெல்லாம் கூப்பிட்லாம்னு சொல்லு!!” என்று அவன் மனைவி சுதா சொன்னதைச் சொன்னான்.

கோயிந்து, விசாகப்பட்டினம் விஜய், குண்டூர் பிரதீப், நான் என நால்வரும் பக்கத்து மீட்டிங் ரூமுக்குப் போனோம். நான், எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் தென்னிந்தியர்களை மட்டும் அழைக்கலாமென்றேன். குண்டூர் பிரதீப், அலுவலகத்தில் வேலை செய்யும் எல்லா இந்தியர்களையும் அழைக்க வேண்டுமென்றான். பேச்சுக்குப் பேச்சு கலந்துரையாடல் நீண்டு கொண்டே இருந்தது.

பலதரப்பட்ட விவாதத்துக்குப் பிறகு தீர்மானமாகச் சொன்னான் கோயிந்து, “பாப்பு ஹெல்த்கேர்ல வேலை செய்றாங்க. அவங்களுக்கு இப்படி ஒரு சாராரை மட்டும் அழைச்சா நிச்சயம் பிடிக்காது. அவங்க சந்தோசத்துக்குத்தானே இந்த ஏற்பாடே!! கம்பெனி பூராவும் அழைச்சி நடத்த, எங்க வீட்லயும் இடம் காணாது. அதனால உங்க டிப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லாரும், அடிஷ்னலா விஜய் பேமிலியும் பிரதீப் பேமிலியும் போதும். டிப்பார்ட்மெண்ட்டுக்கு வெளியில இருக்கிற இந்தியர்களையும் அழைக்கத் தேவையில்லை!!”

கோயிந்தனின் யோசனை எங்கள் எல்லாருக்குமே பிடித்திருந்தது. சரியெனச் சொல்லவே, எல்லாரையும் கோயிந்துதான் அழைக்கப் போனான். நான், மீண்டும் என் வேலையை மேற்கொண்டு செய்யப் போனேன்.

நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மூடப் போகிற நேரம். அன்றைய பங்கு நிலவரப்படி நம் கணக்கில் ஓட்டை விழுந்ததா, அல்லது போனாப்போகிறதென்று நாலு பணம் கூடிக் காண்பிக்கிறதாயெனப் பார்ப்பதற்காக இ-ட்ரேடு சைட்டுக்குப் போகலாமென நினைத்த பொழுதில்தான், பேண்ட் பாக்கெட்டிலிருந்த செவ்வகச்சட்டகம் சிணுங்கியது.

”சொல்றா பாப்பும்மா? ஒடம்புக்கு எப்டியிருக்கு? இன்னும் வீட்டுக்குப் புறப்படல??”

“இதா.. எல்லாத்தையும் எடுத்து வெச்சிகிட்டு இருக்கேன். புறப்பட வேண்டியதுதான். சுதா கூப்பிட்டிருந்தாங்க. எதொ பட்டுசேல ஆரோகிட்டகிட்டச் சொல்லி ஊர்லிருந்து வாங்கியிருக்காங்ளாம்; எங்கிட்டக் காண்பிக்கணுமாம். வாங்க, பாத்துட்டு அப்படியே டின்னரும் இங்கயே முடிச்சிக்கலாம்னு கூப்பிட்டாங்க. இன்னிக்கு ஆறு மணிக்குள்ள வந்திருங் மாமாய்! ப்ளீஸ்!!”

நல்லாப் போடுறாங்கய்யா பிளேனு! நினைத்துக் கொண்டே, “செர்றா பாப்பு. பாத்து வீட்டுக்குப் போய் சேரு!”

”செரிங்க… நீங்க அந்த பட்டுசேல விசியத்த கோய்ந்துகிட்டெல்லாம் சொல்லீட்டு இருக்காதீங்க. எதுவும் தெரிஞ்சமாரி காமிச்சிக்க வேண்டாம். செரியா?!”

“அய்யொ… அதெல்லாம் கூழை கோய்ந்தன்கிட்ட நான் ஏன் சொல்லிக்கிறன்? நீ பத்திரமாப் பாத்துக்க. நான் டான்னு ஆறுக்கெல்லாம் வந்திடுறன்!!”, பவ்யமாகப் பேசி மிகவும் மென்மையாகப் போனை ஆஃப் செய்தேன்.

பொண்டாட்டி பேச்சும் புள்ளத்தாச்சி அணுசரணையும் நெம்ப முக்கியமில்லையா பின்ன?! ஆனால், அசரீரி போலத் திடுமெனப் பின்மண்டை வழியா காதுகளைப் பதம்பார்த்தது கோய்ந்தனின் குரல்.

“என்றா அது, கோய்ந்துகிட்டெல்லாம் ஏன் சொல்லிகிறன்னு சொன்ன??”

”இல்லடா, சுதா பட்டுசேலை பார்க்க வரச்சொல்லி இன்வைட் செய்து இருக்காங்னு சொல்லிட்டு, அதைக் கோய்ந்துகிட்டச் சொல்லிடாதீங்கன்னு பாப்பு சொல்லுச்சு” என்றேன். அவன் நம்பிக்கையில்லாமல் பார்க்கவே, “டேய்… வேணுமின்னா நீ உம்பொண்டாட்டியக் கூப்பிட்டுக் கேள்றா”யெனச் சொல்லவுமே ஆள் நிதானத்துக்கு வந்தான்.

என்பிஆர் ரேடியோ, அதாங்க, ஒரு விசியம்னா எல்லாருக்கும் தெரியப்படுத்துகிற எங்க டிப்பார்ட்மெண்ட் ப்ராஜக்ட் மேனேஜர் வேணி முத்துக்குமார் இருக்காள் பாருங்க, கிட்டத்தட்ட எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றைம்பது பேருக்கும் போய்ச் சேரும்படியான ஒரு பெர்ஃபார்மன்சைச் செய்து முடித்திருந்தாள். கோயிந்து, பிரதீப், விஜய், நான் என நான்கு பேரும் துரிதகதியில் டேமேஜ் கண்ட்ரோல் செய்ய வேண்டியிருந்தது.

“அய்யா, சாமிகளா, இது ஒரு சர்ப்ரைஸ் பேபிஷவர் ஃபங்சன். எங்க ஊர்ல வளைகாப்புன்னு சொல்றது. இது நடத்துற விசியம் ஏழுமாத கர்ப்பிணியான அந்த அம்மணிக்குத் தெரியவே தெரியாது. எல்லாரையும் அழைச்சுக் கொண்டாடுற அளவுக்கு கோய்ந்து வீட்ல இடமும் காணாது. கோவிச்சுக்காதீங்க; முக்கியமா அந்த புள்ளத்தாச்சி அம்மணிக்குத் தெரியப்படுத்தீறாதீங்க!!” என்று எல்லாரிடமும் சென்று யாசித்தோம்; குறிப்பாக சக இந்தியர்களிடம்.

மாலை ஐந்தரைக்கெல்லாம், மனைவி சொல்லுக்குக் கட்டுப்படும் சிறந்ததொரு கணவனாக வீட்டுக்குள் போய் நின்றேன்.

“என்னுங்க இது? என்னால நம்பவே முடியலை. சித்திரைக்கனிக்கு வரச் சொன்னா, ஆடிப் பதினெட்டாம் பெருக்குக்கு வர்ற ஆளாச்சே நீங்க?! இன்னிக்கு எப்படி?! திஸ் இஸ் அன்பிலீவபிள்!! இருங்க, காப்பி போடுறன். அப்புறமாப் போய் ரெடியாகுங்க மாமாய், செரியா?!!!”

என்னாவொரு குலாவல்! என்னாவொரு கவனிப்பு!! நான் சிறுவனாக இருக்கும் போது, அப்பா சம்பளக் கவர் மொத்தத்தையும் அம்மாவிடம் கொடுக்கும் போது இடம்பெறும் அம்மாவின் பரிவுக்கவனிப்பு இன்று பாப்புவிடம் தோற்றுப் போனது.

காப்பியை ஆத்திக்கொண்டே மெதுவாக நடந்து வந்தாள் பாப்பு.

”பாப்பும்மா, நீ அங்கயே இரு. நானே வந்து எடுத்துக்கிறேனே?!”

நான் சொன்னதைப் பெரிதாகச் சட்டை செய்துகொள்ளாமல் நெருங்கி வரும் போது, “ஏங்க, கோயிந்து பாவமில்ல? ஏன் இப்பிடி சுதா புருசனுக்குத் தெரியாம பட்டுசேலை எல்லாம் வாங்கணும்??”

“பொண்டாட்டி புருசன்னா எல்லாம் இருக்கிறதுதான்!!”

“என்னதூ..? அப்படின்னா நீங்களும் எங்கிட்டச் சொல்லாமக் கொள்ளாம நெறைய செய்திட்டு இருக்கீங்ளா?? நானெல்லாம்….” புலம்பல் புராணம் ஆரம்பிக்கும் போல இருந்தது. உடனே மடைமாற்றித் திருப்பி விட்டேன்.

”அய்யய்யொ… பாப்பு? நானல்லவா உன்னைக் கேட்கணும்?! நீயும் இது போலப் பட்டுசேலை வாங்கி இருக்கியான்னு??”

“என்னுங்க இதூ? உங்ககிட்டச் சொல்லாம நான் அப்பிடிச் செய்வனா??”

“சாரி பாப்பு, ஐ டோண்ட் மீன் டு ஹர்ட் யூ!!”, அடித்த சிக்சரில் நிலைமறந்து நின்றிருந்தாள்.

எங்கள் வளவிலிருந்து நான்கு வளவுகள் கடந்து இருக்கும் ஆர்ட்ரி சேசுக்குள் போய் கோய்ந்தன் வீட்டு முன்றலில் காரை நிறுத்தினேன். பாப்புவைப் பக்குவமாக இறங்கச் சொல்லி கார்க்கதவினைத் திறந்ததுதான் மாயம்.

கோய்ந்தன் மனைவி சுதா, விஜய் மனைவி மல்லிகா, பிரதீப் மனைவி சுந்தரி உள்ளிட்ட ஏழு பட்டுடைச் சுமங்கலிகளும் வீட்டு வாசலுக்கு ஓடோடி வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பாப்புவின் முகம் பொன்னாய் மலர்ந்தது. புடைசூழ்ந்து கொண்ட அலுவலக நண்பர்கள் நடப்பதையெல்லாம் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பதினாறு தட்டில் சீர்வரிசை, வண்ணவண்ண கண்ணாடி வளையல்களென கோய்ந்தன்-சுதா வீட்டு அக்கம்பக்கத்துத் தெலுகுப் பெண்மணிகள் விழாக்கால இராஜ்ஜியம் நடத்தினர். தேங்காய்ச்சோறு, புளிச்சோறு, எலுமிச்சைச்சோறு, மாங்காய்ச்சோறு என விதவிதமாய்ப் புள்ளத்தாச்சி சாப்பாடு. கூடவே பூரி, பொங்கல் என நம்ம ஊர் விருந்தும் பின்னிப் படலெடுத்தது. அன்றைய நாளை கோலாகலக் குதூகலமாய்க் கொண்டாடினோம்.

அடுத்தநாள் இரவு எட்டரை மணிக்கு, நாங்கள் இருக்கும் கம்யூனிட்டிக்குள்ளேயே பாப்புவை வாக்கிங் அழைத்துப் போகலாமெனப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான் வீட்டு அழைப்பு மணி அடித்தது. திறந்து பார்த்தால், ஓரிரு அலுவலக நண்பர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். வியப்பாய் இருந்தது.

“நாங்க, இந்தமாரி நிகழ்ச்சியை இதற்கு முன்னாடி பார்த்ததில்லை. அதான் ஏமாந்திட்டோம்!” என்று பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றனர்.

இதோ மேற்தளத்துக்குப் போயிருந்தவள் வந்துவிட்டாள். பெட்ரூமிலிருந்து வந்திருக்கும் பாப்புவைப் பார்த்து எனக்கு மிகவும் சங்கடமாய் இருக்கிறது. நான் அப்படி நினைத்ததும் பேசியதும் தவறுதான்!!

“ஐ ஏம் வெரி சாரி பாப்பும்மா!!”

வளைகாப்பில் கலந்து கொண்ட வெள்ளைக்காரர்கள் மாக்தாவும் பிரையன் வோஸ்னியும் கொடுத்து விட்டுச் சென்ற அத்தங்கவளையல்கள் பாப்புவின் கைகளில் பொன்னாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.



11/26/2016

சிலுவையேற்றம்

இன்றைய விடியலுக்குப் பின், வானம் மட்டுமல்ல, சாராவும் ஒரேயடியாக மாறிப் போய்விட்டிருக்கிறாள். இராத்திரி முழுவதும் வளைத்து வளைத்து வீசிய புளூரிட்ஜ்மலைக் காற்று அவளது பழுப்பு இலைகளை பறித்துக் கொண்டு போயிருந்தது.
வீட்டினின்று வெளிப்பட்டதும் நாலாபுறமும் பிரிந்து படபடத்த மயிர்க்கற்றைகளைத் தன் இருகைகளாலும் ஒன்று கூப்பி முடிந்து கொண்டே சாராவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்தாள் டானா.
சாராவும் டானாவுக்கும் பதினெட்டு ஆண்டுகால நட்பும் உறவும்!! சாரா டானாவைக் காட்டிலும் மூன்று வயது மூத்தவள். இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியவர் ஒருவரே. சாராவுக்கு வளர்ப்புத்தாயும் டானாவுக்கு பெற்ற தாயுமான பெத்சிதான்.
அல்பேமாலில் இருக்கும் நூற்பாலையொன்றில் வேலைபார்த்து வந்த பெத்சியும் எட்வர்டும், இந்த வீட்டுக்குக் குடியேறிய ஓரிரு மாதங்களில் நடப்பட்ட ஒயிட் டாக்வுட்களில் சாராவும் ஒருவள். சாராவுக்குத் தனது மூன்றாவது கூதிர்காலம் கடந்திருந்த போதுதான் டானா பிறந்தாள்.
அடுத்து வந்த கோடையின் மாலைநேரப் பொழுதொன்றில், தன் நிழலை அள்ளிப் பூசிக் கொள்ள வந்த டானாவின் மழலையில் சொக்கிப் போய்த் தன்னையே ஈந்து அவளோடு கலந்து கொண்டாள் சாரா.
காலம் காலண்டரில் சில பல மாதங்களை உதிர்த்திருந்த போது, டானா மெல்ல எழுந்து நடக்கத் துவங்கியிருந்தாள். அந்த காலகட்டத்தில்தான் ‘வா, என்னைத் தழுவிக்கோ’ என்பது போல தன்னிரு கைகளையும் இருபக்கக் கிளைகளாக விரித்துக் கொண்டாள் சாராவும். இலையுதிர்கால நிர்வாண கோலத்தில் பார்ப்பதற்கு சிலுவையைப் போன்றதொரு வடிவைச் சாரா கொள்வதற்கு வழிவகுத்தது அது.
குறும்புகள் கூடும் வேளையில், டானாவைச் சாராவின் இருகைகளுக்கும் தலைக்குமிடையே உயரத்தில் இருத்தி டைம் அவுட் கொடுக்கத் தலைப்பட்டான் எட்வர்டு. சாராவின்மீது இருப்புக் கொள்வதற்கென்றே போலியாய்க் குறும்புகள் செய்யவும் தலைப்பட்டாள் டானா. இதனைச் சாராவும் வெகுவாய் இரசித்தாள்.
துவக்கப்பள்ளி முடித்து, கிரேட் கிளிப்சு சிகைச்சிரைப்புக் கடையில் மயிர்  கூட்டிப்பெருக்கி வருவாய் ஈட்டி அம்மாவுக்கும்கூடக் குடிக்கக் கொடுத்து, அதேவூரில் இருக்கும் மூத்தோர் இல்லத்தில் தாதி வேலை பார்க்கும் நாட்களையும் கடந்து, முதன்முறையாக ஓட்டுப் போடும் நாள் கூட வந்து விட்டிருக்கிறது டானாவுக்கு.
சாராவுக்கு அருகில் வந்த டானா, சாராவின் அடியின் மீது சாய்ந்து உட்காரப் போன வேளையில்தான், உவ்வேக்… வந்து தொலைத்தால் நன்றாக இருக்கும்… வந்தபாடில்லை… கண்கள் இருட்டிக் கொண்டிருந்தது. பழக்க நிதானத்துடன் எழுந்து போய் அங்கிருந்த குழாயைத் திறக்க, வந்த தண்ணீரில் ஒரு மிடக்கு குடித்தாள். சாராவிடமிருந்த இரு அணிற்பிள்ளைகள் குதித்தோடி வந்து டானாவின் அருகில் வாஞ்சையாய் நின்றன. ”டானாப் புள்ளைக்கு என்ன ஆச்சுதோ? போய்ப் பாருங்கடே” எனும் வாக்கில் சாரா சிலிர்க்க, அவளிடமிருந்து பிரிந்த இலைகள் நான்கும் இணுக்குகள் மூன்றும் டானாவிடம் வந்து ஊக்கம் கூட்டி நின்றன. ஊக்கம் பெற்றவள் திரும்பி வந்து ஆரத்தழுவிச் சாய்ந்தபடி சாராவுக்குத் தன்னையே கொடுத்து நின்று கொண்டிருந்தாள்.
“ஏய், வெடிஞ்சதும் இங்க வந்திட்டியா? நானும் எட்வர்டும் ஓட்டுப் போடப் போறம். போய்ட்டு வர்றதுக்குள்ள நீயும் புறப்பட்டு தயாரா இரு. அவசியம் நீயும் ஓட்டுப் போடணும். அதான் உனக்கு இந்தவாட்டி ஓட்டிருக்கே?! இல்லன்னா, இறைவனோட பழிபாவங்களுக்கு ஆட்பட்டு நிர்மூலமாகிடுவே பாத்துக்க!!”, கறாராகச் சொல்லிக் காருக்குள் போய் ஏறிக் கொண்டாள் பெத்சி.
”யூ… ஃபக்கின் இடியட்… தற்குறி நாயே…” இரைந்து கத்திக் கொண்டே காரின் பின்னால் போனாள் டயானா. அருகே போனதும் ஓடி, பின் பறந்து போகும் தூக்குவால்க் குருவியைப் போலக் காணாமற் போயிருந்தது எட்வர்டின் கார்.
மீண்டும் போய் சாராவின் வேரடிக்குச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். இளங்குளிரைத் துரத்தியபடி சூரியப்பயல் வெளிச்சத்தை அள்ளி, இவள் மேல் பூசிக் கொண்டிருந்தான்.
சாராவின் அணுக்கமும் சூரியப்பயலின் வெளிச்சத் தகிப்பும்  சுகித்துக் கொடுக்க, மனமறுத்து வெறுமையாய்க் கிடந்தவளின் காதுகளில் பேச்சொலியை இட்டு நிரப்பி இம்சை செய்தாள் பார்பரா.
“ஏய்… வா போலாம்… அப்படியே நடந்து பேசிட்டே போய், நாமும் நம் ஓட்டைப் போட்டுட்டு வரலாம்”
”என்னடா? யார்க்கு ஓட்டுப் போடச் சொல்ற? நம்மையெல்லாம் அராவயசில…??”
கண்கள் மீண்டும் இருண்டு, தன்னையும் மீறி அடிவயிறு இறுகுவது போல இருந்தது. “உவ்வேக்…”
“ஆர் யு ஓகே? ஆர் யு ஓகே??”
தன் தலை கழன்று விழுவது போல உணர்ந்தாள். ஓய்வற்ற கடலலை போல மனம் பலவாறாகப் படபடத்தது. மனத்தின் பேரிரைச்சலை அடக்க பெரும்பாடுபட்டுப் போனாள் டானா. அதற்குள் பார்பராவும் ஓடோடி வந்து தாங்கிக் கொண்டாள்.
“ஒன்னுமில்ல… எதொ சரியில்ல”
“வா, உள்ள போயிடலாம்… நான் வெந்நீர் வெச்சித் தரட்டுமா?”, பரபரத்தாள் பார்பரா. பரபரத்த கையோடு டானாவை அவள் அறையில் கிடத்தியபின், மைக்ரோ ஓவனில் வெந்நீர் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அதற்குள் தன்னிலைக்கு மீண்டிருந்தாள் டானா.
“சரி, இப்ப வேண்டாம். நாம, மத்தியானத்துக்கு அப்புறம் ஓட்டுப் போடப் போகலாம். நீ கொஞ்சம் ஓய்வெடு” சொல்லிச் சென்றாள் பார்பரா.
கொள்கையில், இலட்சியத்தில், கோட்ப்பாட்டில், தொலைநோக்குப் பார்வையில், மாந்தநேயப் பார்வையில் நின்று மக்கள் எங்கே சிந்திக்கிறார்கள்? அரசியல் சக்திகளுக்கும் சமயசக்திகளுக்கும் அதிகாரசக்திகளுக்கும் வீண் போகும் இந்த மக்களுக்கு ஓட்டு ஒரு கேடா?? சிந்தனையினூடே மல்லாந்து படுத்தவாக்கில் சாளரத்தை நோக்கினாள் சாரா. சிலந்தியொன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. தன்னால் முடிந்த மட்டும் காறி அதன் மீது உமிழ்ந்தாள். அது பலவாறாக நாலாபுறமும் பிரிந்து சிறு சிறு பிசிறுகளாய் வலுவற்றுச் சிதறிப் போனது.
பாவம்! எல்லாமும் பாவம்!! மனிதப்பிறவியே பாவத்தால் விளைந்ததுதானே? பாவத்தின் பயன்தானே நாமெல்லாம்? விலக்கப்பட்ட பழத்தைத் தின்னாமல் இருந்திருந்தால், ஆதாம் ஏவாள் சந்ததியினர் ஏது?? அப்படியானால், பாபங்களை ஒழிக்கும் பிறப்பையல்லவா நாம் கொண்டிருக்க வேண்டும்?? இவர்கள் இப்படியானவற்றால்தானே எல்லாரையும் நெறியாண்டு கொண்டிருக்கிறார்கள்?? வேகமாக எண்ண அலைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தவளது மனம், திடுமென உறைந்து கற்சிலை போல நின்று விட்டிருந்தது.
பார்பரா சரியாக சமையலறைக் குழாயை மூடாமல் விட்டிருக்கக் கூடும். சரியான இடைவெளியில் ‘டக், டக், டக்’ ஓசை இடைவிடாது வந்து கொண்டிருந்தது. அணுவைப் பிளக்கும் போது வெளிப்படும் ஓசையையொத்த வெடிச்சத்தம் அது. டக், அதிர்வுகள்.. அறையெங்கும் பரவி தன் காதுகளுக்கும் பாய்கிறது. செவிப்பறையின் சவ்வு உட்பக்கமாக் குழிந்து ‘டக்’கென்று தன்னுள் அதை இறக்குகிறது. அது தன்மேனியெங்கும் தாக்குதலை நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி பூரணசம நிலைக்குத் திரும்பிவிட்டது என்பதை உணர்கிறாள் டானா. அவ்வளவுதான், மீண்டும் ‘டக்’!! என்னவொரு பெருஞ்சத்தம்!! அதற்கு மேலும் அவளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
எழுந்து போய் சொட்டும் அந்த குழாயை அடைத்து விட்டு தன் அறைக்குள் வருகிறாள். அந்த மூலையில் தூசிபடந்து கிடக்கும் ‘ஆல்வேஸ் அல்ட்ரா தின் ஜம்போ பேடுகள்” பொட்டலத்தைப் பார்த்ததும் எட்டி ஒரு உதை விடுகிறாள். விசுக்… கட்டிலுக்கடியில் போய் ஒளிந்து கொண்டது அது.
வெளியில் தணிந்திருந்த காற்றின் வேகம் கூடியிருந்தது. கிரமத்தின் நியதிதான் உருமாற்றமும் கொண்டகோலமறுத்தலும்! நிர்வாணம் தூய்மானம்!! இலைகளுக்கு பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். மரங்களுக்கும் செடிகொடிகளுக்கும் வாக்குரிமை இருக்கிறதாயென்ன கவலைப்பட?? கவலையின்றித் தன்பாட்டில் நிர்வாணம் தரித்துக் கொண்டிருக்கிறாள் சாரா.
அமெரிக்காவின் தென்பகுதி முழுமைக்கும் கரியநிற மண்காணிகள். முப்போகமும் பருத்தி விளையும் சமச்சீர் நிலங்கள். பட்டிதொட்டியெங்கும் நூற்பாலைகள். நூற்பாலைகளுக்குப் போட்டியாய் சமயமண்டபங்கள்.
மேம்பட்டவர் மேலாண் வேலை பார்க்கின்றனர். கீழ்ப்பட்டவர் உழைக்கின்றனர். மாந்தர்கள், விலங்குகளுக்குள் இருந்த இந்தப் போக்கு, எல்லைக்கோடுகள் வகுப்பட தனக்கும் இருக்கிறது பார் வடிவு எனச்சொல்லிக் கொள்ளும் நாடுகளையும் பீடித்துக் கொண்டது. இயற்கை வளம் சூழற்பொலிவினைக் குலைக்கும் வேலைகள் கீழான நாடுகளுக்குச் செல்ல, அல்பேமால் நூற்பாலைகளுக்குள் மனிதசஞ்சாரமற்ற இருட்டுப்பள்ளங்களும், கொலைவெறி பிடித்த பிட்புல்லுகளும் ரேட்டில்சிநேக்குகளும் வாசம்கொண்டு வாழ்ந்துகெட்ட குடும்பங்கள் சாட்சியாக சிதிலங்களும் புகுந்து கொண்டன. சிந்தனைக்காட்பட்டவர் நகரங்களை நோக்கிப் போய்விட்டிருக்கின்றனர். எஞ்சியவர்கள் சமயக்கூடங்களின் அருளாசியைப் புசித்துக் கொண்டே கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.
படிப்பது நல்லதுதான். முடிந்தால் படிக்கலாம். வேலை கிடைத்தால் வேலைக்குப் போகலாம். இது நமது பூமி. நாம் வாழ, கிடைத்ததைச் செய்து கொள்ளலாம். நமக்கு நமது நம்பிக்கை முக்கியம். பெரியவர்கள் நமக்கு நல்லதே சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறினால், பாவத்தால் விளைந்த நமக்குப் பாவங்களே வந்து சேரும்.
ஊரகப்பகுதியில் இருபத்து மூனுசதம் பேருக்கு எந்தவொரு வரிவடிவத்தாலான எழுத்தையும் இனங்காணத் தெரியாது. நாற்பத்து ஐந்துசதம் பேருக்கு துவக்கப்பள்ளிக்கான கல்வியறிவுதான். அதனாலென்ன? சமய நம்பிக்கையின்பாற்பட்டு நேர்மையாக வாழ்பவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு பிரியமாக இருந்து வருகிறார்கள். தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு எதற்கும் வளைந்து கொடுக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அதற்குத்தானே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்!!
”யேய்… பார்பரா, எப்ப வந்த நீ? நான் கவனிக்கவேயில்ல!!”
“நான் இப்பதான் வந்தேன். எங்க, உன்னோட பேரண்ட்சு?”
“ஓ, ஓட்டுப் போடப் போன அதுக அங்கெங்காவது குடிச்சிட்டுக் கிடக்கும்ங்க?”
“உனக்கு இப்ப எப்டியிருக்கு? காலையில அவ்ளோ சுகமில்லாம இருந்தியே??”
மின்னல்க்கீற்றுப் போல வந்துபோனது வாட்டம். சரிக்கட்டிக் கொண்டே சொல்கிறாள், “காலையில எதோ செரியில்ல… இப்ப சாப்ட்டதும் செரியாப் போச்சுடா பார்பரா!!”
“சரி, கிளம்பு… வுட்புரூக்கு போயி ஓட்டு போட்டுட்டு அப்படியே பர்கர்கிங்ல சாப்டுட்டு வர்லாம்… நாலு மைல் நடந்து வருவியல்ல??”
“நடந்து வர்லாம்… ஆனா என்கிட்ட காசில்லியே?”, குமைந்தாள் டானா.
“இட்ஸ் ஓகே… காசு கிடைச்சதும் திருப்பிக் கொடுத்திடப் போறே? என்கிட்ட இருக்கு, வா போகலாம்”, துரிதப்படுத்தினாள் பார்பரா.
“நான் வரணுமா? வந்தா நான் அம்மையாருக்குத்தான் ஓட்டுப் போடுவன். இருக்கிற பாவக்கணக்குல இன்னும் ஒன்னும் கூடுமே?”
“கமான்.. போடாட்டிதான் சபிக்கப்படுவோம்… நிர்மூலத்திலிருந்து விடுதலை கிடைக்காது… அதுதான் ஃபேக்ட்”
பணிந்து போகும் டானா மிரட்சியுடன் பார்பராவைப் பார்க்கிறாள். ‘நீயுமா அப்டி நினைக்கிறே? ஞாயித்துக்கெழம அவங்க பேசினதைக் கேட்டாய்தானே?? இலட்சக்கணக்கான கொலைகள் செய்தவள்ங்றாங்க. பாவத்தைச் சுமக்கும் வேசிங்றாங்க.. இந்த முப்பது ஆண்டு காலமும் கருவில் வைத்து அழித்தொழிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்ப்பறிப்புக்கு அவங்களும் காரணம்ங்றாங்க… இதையெல்லாம் மீறி நான் அவங்களுக்கு ஓட்டுப் போட்டது தெரிஞ்சா நிம்மதியாவே இருக்க முடியாதுடா பார்பரா… ப்ளீஸ், புரிஞ்சுக்கோயேன்”
“ஏய்… என்னாதிது? நீ ரொம்ப சீரியசாவெல்லாம் யோசிக்கிற?? மண்ணின் தவப்புதல்வர்கள்தான்… இல்லைன்னு சொல்லலை. அதெப்படி? நாம மட்டும்தான் பாவத்துக்கு நேர்ந்து விடப்பட்டவங்களா?? நாற்ப்பத்தி ஐந்து வயதுக்குட்பட்ட நம்மைச் சார்ந்த பெண்களோட சாவுரேட் மட்டும் நாற்பது நாற்பத்தஞ்சு பெர்சன்ட்டுக்கும் மேல ஏறியிருக்குங்றாங்க. அதே நேரத்துல கறுப்பு ஆட்களோட, இசுபானீஸ் ஆட்களோட சாவு பாதிக்குப் பாதியா குறைஞ்சிருக்காமே?? உங்க வீட்டுக்கு வந்த ஜென்சிதானே சொன்னாள். நாம அப்படியென்ன பாவத்தைச் சுமக்கிறோம்??”
முன்வாசலைப் பாவிக்கும் பழக்கத்தை என்றோ கைவிட்டாயிற்று. எப்போதும் பின்வாசலைத்தான் பாவிக்கிறாள். வெளியே வந்ததும் நோக்கினாள். முற்றும் துறந்து அம்மணமாய் நின்று கொண்டிருக்கிறாள் சாரா. ஆனால் அவளின் மொட்டைத்தலையில் சில செம்பங்கிப் பூக்கள், கார்டினல் குருவிகளின் ரூபத்தில் பூத்திருந்தன. அப்பூக்கள் சாராவின் தலையில் இடம் மாறி இடம் மாறி அமர்கின்றன. அம்மணாண்டி தலையில கலர் கலராப் பூக்களாவென உள்ளூரச் சாராவைப் பார்த்துச் சிரிக்கிறாள் டானா.
“யே… லுக் அட் தி கார்டினல்சு… அதுகளுக்கெல்லாம் பாவக்கணக்குகள் இல்லையோ என்னவோ? தெ ஆர் எஞ்சாயிங் யு சீ!!” பார்பரா முறுவல் பூண்டாள்.
வாஞ்சையுடன் கைகோத்து நடப்பது அல்பேமாலில் இவர்கள் மட்டுமாகத்தானிருக்கும். கணவன் மனைவியரிடையேகூட அப்படி நடக்கும் பழக்கம் அங்கு எவரிடமும் இருந்திருக்கவில்லை. நடைபாதையின் இருமருங்கிலுமிருந்த மரங்கள் நகரும் மரங்களாயிருந்தன இந்த நான்கு கண்களுக்குள். அந்த மொட்டை வெயிலிலும் ஆங்காங்கே அடைக்கோழியைப் போல அடைந்து கிடந்தது இருட்டு. என்ன ஆச்சர்யம்?! அந்த இருட்டும் கூட பின்னோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருந்தது அக்கண்களில்.
”ஊரகத்திலிருக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி பெருகும் போது அவர்களது நடமாட்டம் பெருகும். ஆனால், பாவத்தின் நடுகற்களாக விதைக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள். ஏனென்றால், ஒரு ஆண் தவறிழைக்க நேரிடும் போது அதற்கான காரணியாக ஒரு பெண்ணே இருக்கிறாள். அவனின் முன்னால் அந்த நேரத்தில் ஏன் அவள் தென்பட வேண்டும்? ஒரு பெண்ணுக்கு அதிகாரம் கிடைக்கிற போது அது எல்லாப் பாபங்களுக்குமான விதைகளைத் தூவிக் கொண்டே போகிறது”, பிரசங்கம் கேட்டுத் திடமாகிப் போனவனொருவன் அவர்களைக் கடந்து போகும் போது கொடுத்த ஒலிப்பான் சத்தம், இவர்களின் காதுகளைத் தீண்டவேயில்லை. மாறாக, அந்த நான்கு கண்களில் நகர்ந்து கொண்டிருக்கும் மரங்களிலிருந்த டிப்பர்க்குருவிகளும் கிங்பேர்டுகளும் உயரே எழும்பிப் பின்னர் தாழப்பறந்து மரங்களுக்குள் மீண்டும் புதைந்து கொண்டன.
தனக்கான பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்வதில்தான் ஏற்றத்தாழ்வேவொழிய, மற்றபடிக்கு எல்லாவற்றிலும் தாராளம்தான். இவர்களும் சுருட்டுப் பிடிக்கலாம். இவர்களும் தண்ணியடிக்கலாம். எல்லாரும் தழையை நசுக்கி உறிஞ்சலாம். அடித்துப் பிடித்துச் சமைத்துப் பரிமாறியதில் மிஞ்சியதைத் தாராளமாய் உண்ணலாம். அன்றாடம் உறங்கப் போகுமுன் அவ்வப்போதைய பாவங்களை இறைவனிடம் ஒப்புவிக்கப்படுகிறது. அவரும் அவற்றை நீக்கி தூய்மைப்படுத்தி விடுகிறார். தூய்மைப்படுத்தவியலா நேரங்களில், வாஞ்சையோடு முகம் நோக்கிக் கொடுக்கப்படுகிறது. இன்முகத்தோடு அவையாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
பொதுப்புத்தி விதைக்கப்பட்டிருக்கிறது பருத்திக் காணிகளில்!! அவை காற்றில் கலந்து நாசிகளில் உட்புகுந்து நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கான உயிர்ஜீவிதம் அவ்வப்போது ஞாயிற்றுக் கிழமைகளில் நாலுகால பூசை நடத்தி திருவமுதாய் அனைவருக்கும் வந்து சேரும்.
“நமக்காக நம் தந்தை இறைவனிடம் வேண்டுகிறார். இறைவனின் கட்டளைக்கொப்ப செயற்படுகிறார். நமக்காகவே வாழ்கிறார்! நமக்கு நல்லதே செய்கிறார்!!”, அந்தக் கணத்தில் அக்கானகத்துக் கிழவியொருத்தி தன் மகளைப் பார்த்துச் சொல்லிக் கண்களால் சொரிகிறாள். மகளோ, தன் தாயின் கண்களைத் துடைத்து விடுகிறாள்.
இதெல்லாம் ஒரு சடங்கு. எல்லாம் இந்த பார்பரா செய்த வேலை. பொழுதெல்லாம் சுமந்து முதுகெல்லாம் ஒடிந்து கால்கள் பின்னிக் கொண்டன. திரும்பி வந்தவள், தன் உயிர், உடைமை, ஊன், காமம், காதல் எல்லாவற்றையும் கண்களிலே தேக்கி வைத்துக் கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த எதிர் வீட்டுப் பையனையும் பார்க்கவில்லை; சாராவையும் பார்க்கவில்லை.  தன் அறைக்குள் வந்து விழுந்தாள்.
எரிச்சலாக இருந்தது. தனக்கான அறை என்றால் எப்படி இருக்க வேண்டும்? அந்தரங்கம் பேணுவதாய், தனிமை போற்றுவதாய், நலம் காப்பதாய், குதூகலம் கொடுப்பதாய், மகிழ்வில் திளைப்பதாய், பட்டுக்கூடு போலல்லவா இருக்க வேண்டும்?? மாறாக இந்த அறை தன்னைக் காவுகொண்டு விட்டதாய் நினைத்து துக்கித்துப் போகிறாள் டானா. அடி வயிறு என்னவோ செய்தது. சோர்ந்து மயங்கிப் போனாள்.
இருள் வீட்டுக்குள்ளே, தன் அறைக்குள்ளே எந்தவொரு அனுமதியுமின்றி வந்து ஆக்கிரமித்திருந்தது. குளத்தில் கூடியிருக்கும் கனடியகீசுகளும் நாரைகளும் ஒரேநேரத்தில், அப்படியானதொரு கரைபிடித்த கடுங்குரலில் கத்துவது போன்ற இரைச்சல், டிவியும் வீட்டு ஆட்களுமாக!! இவளால் எழ முடியவில்லை. எக்காளம் எனும் இசைக்கருவியை ஊதும் போது உப்பளத்து நரிகள் கூட அடங்கிப் போகுமாம். அந்த அளவுக்கு அதன் வீச்சு இருக்கும். இந்தக் காட்டுக் கூச்சலில் அந்த எக்காளம் கூடத் தோற்றுவிடும் போல இருந்தது.
“பிட்ச் இஸ் கான்… பிட்ச் இஸ் கான்!!”, கத்தினான் எட்வர்டு. பியர்பாட்டிலை எட்வர்டு கையிற்திணித்துச் சியர்சு சொன்னபடியே சொல்லிக் கொண்டாள் பெத்சி, ““கோடானு கோடிக் குழந்தைகளைக் கொன்ற வேசிமகள் ஒழிந்தாள் இன்றோடு! கடவுள் எழுத்தருளி விட்டார், கடவுள் எழுந்தருளி விட்டார்!!”
இடப்பக்கமாய் ஒருக்களித்திருந்தவளின் வலக்கை படுத்திருந்தவாக்கிலேயே துழாவியது. கிடைத்த செல்போனைக் கண்கள் பார்த்திருக்கவில்லை. ஆனால் எண்களைக் கட்டைவிரல் தட்டி எழுப்பியது.
“என்ன பார்பரா, என்ன நடக்குது?!”
பதிலைச் சரிவரக் கூடக் கேட்கவில்லை. செல்ஃபோனை படுக்கையின் எதொவொரு மூலையில் விட்டெறிந்தாள். அது மீண்டும் சிணுங்கியது. எதன் மீதும் நாட்டமற்றுப் போய் வெறுமையாய்க் கிடந்தாள். ஓரிரு நிமிடங்கள்தான். வெளியே வந்தாள்.
சாரா மூலியாய் நின்று கொண்டிருந்தாள். அருகே சென்று கட்டிப்பிடித்துக் கொண்டாள். எதிர்த்து வீட்டு நாய் ஜேசனின் கைக்கயிறு அங்கே கிடந்தது. அதையெடுத்து சாராவின் அந்த விரிந்த கைகளுக்கும் மேலாக உயரே செல்லும் கழுத்துத் தண்டுவடத்தின் மீது வீசினாள். ஸ்ஸ்க்… இலாகவமாய் கழுத்தின் வலப்பக்கம் சென்று இடப்பக்கமாய் கயிறின் முனை கைக்கு வந்து சேர்ந்தது. சாராவைப் பார்த்தாள் டானா. ?மூலி, மூலி… அம்மணமா நிக்கிற மூலி… உனக்கு ஒரு டாலர் வெச்ச செயின் போடுறன் பாரு!!” சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்தாள். அந்த ஒரு கோடி நட்சத்திரங்களும் ஓடி ஒளிந்து கொண்டன. வெறுமையாய் இருந்தது.
சரி, தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் டானா.
சாராவின் கால்முட்டிகளையொத்த திமில் போன்ற திட்டுகளின் மீது காலை வைத்து, கழுத்துமாலையாகத் தான் அணிவித்த கயிற்றைப் பிடித்தபடிக்கு மேலே போனாள். சாராவை கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டாள். அம்மாவையும் தாயாக்கி, தன்னையும் தாயாக்கியவன் குரல் ஓங்கி ஒலித்தது, “லாக் தி பிட்ச்! லாக் ஹெர் அப்!! லாக் ஹெர் அப்!!”. அப்பெருவோசையில் இச்சிறுவோசையான “கிறுக்” கரைந்து போனது.
சற்றுநேரத்திற்கெல்லாம் பெருமிதத்தோடு வெற்றியாளர் டிவியில் தோன்றிப் பேசியதுதான்மாயம், தெருக்கோடியிலிருந்து கிளம்பிய வானவெடியொன்று ககனமேறிக் கனவெடியாய் வெடித்ததில் எதிர்வீட்டுநாய் ஜேசன் குரைத்தலறினான். எட்வர்டு குதூகலக் கூப்பாடு போட்டான், “சாத்தான் ஒழிந்தது. லாக் தி குருகேட் பிட்ச்!! லாக் ஹெர் அப்!!!” பெருமரத்து ஆந்தைகளும் அலறின. அந்த நேரத்தில்தான், ஓருடல் ஈருயிரைத் தாங்கமாட்டாது தொத்தெனப் பிண்டங்களைப் பூமியில் கிடத்திக் கொண்டிருந்தது சாராவின் முறிந்த சிலுவைக்கழுத்து!!

3/08/2016

மhaன்

உறவுகள் தான்தோன்றித்தனமானவை. ஒருவருக்கு இன்னதுமீதுதான் உறவு பூக்க வேண்டுமன்பதில்லை. அது எதன்பாற்பட்டும் அமையலாம். ஒருவருக்கு அவர் கால்வழி நடந்து செல்லும் வழியே தென்பட்ட ஒரு பொழிக்கல்லின் மீது உறவு பூக்கலாம். அவருக்காகவே அது அங்கு நின்று, அவரை ஆற்றுப்படுத்தலே அதன் வினைப்பயன் என்பது போலவும் அமையலாம். சாளரக்கதவினைத் திறந்ததும் கண்ணிற்படும் அந்த மலைமுகட்டுக்கும் இவருக்குமான உறவு மிகவும் ஆழமானதாகக் கூட இருக்கலாம். ஆமாம். உறவுகள் தான்தோன்றித்தனமானவை. அப்படியான உறவுகளினாலேயே இந்த பிரபஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது. மிகவும் வலுவாகக் கட்டப்பட்டிருக்கிறது.

அந்தியூர் பிரபாகரனுக்கு அது ஓர் உயிரோட்டம். எவ்வகையிலாவது மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களோடு உறவாட வேண்டும். அதற்கான எத்தனையோ வாயில்களில் இதுவுமொன்று. 1990களுக்குப் பிறகு சூலூர் திருச்சி சாலையின் விதி அடியோடி மாறிப்போனது. போக்குவரத்து வண்டிகளின் இரைச்சலில் அதன் காதுகளில் செவிடாகிப் போனதில் எல்லாமும் ஒலியற்றுப் போனது. ஆனாலும் இந்த அதிகாலை நான்குமணிக்கு அதன் காதுகளுக்கு புத்துயிர் வந்தது போல இருந்தது. ஆமாம். முத்துக்கவுண்டன் புதூர் இருப்புப்பாதையில் செல்லும் ஏதோவொரு தொடர்வண்டியின் ‘கட்..கட்.. கட்…’ சப்தம் நிதானமாகக் கேட்டது. அந்தப் பொழுதில்தான் அந்தியூர் பிரபாகரனின் கார் அதன்மீது பூப்போல வருடியபடி தன் இணையான அவிநாசி சாலையில் இருக்கும் கொள்ளுப்பாளையம் நோக்கிச் சென்றது.

பேருருவமான இருட்டின் கருமைநிறத் தோலை யார் நெய்தது? அதற்கு மட்டுமெப்படி இப்படியொரு மென்மை?? அதன்மீது பாய்ச்சப்படும் ஒலிக்கொப்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அந்த வழிபாட்டுக்கூட முன்றலில் இருந்தது சிறு விளக்கின் சொடுக்கியைச் சொடுக்கியதும் இருட்டுப்பேருவத்தின் மேனி வெளுத்துப் போனது. எல்லாரும் இருட்டு அகன்றது என்கிறார்கள். இருட்டு அங்கேயேதான் இருக்கிறது. அதன் மேனிதான் வெளுத்துப் போனது. பிரபாகரனுக்குள் ஒரு சிலிர்ப்பு. யாரோ தன் முதுகில் மேலிருந்து கீழாக வருடுவது போன்ற பிரமை. திரும்பிப்பார்த்தால் செந்நிறமுகத்தில் கருஞ்செவல்ப் புலியொன்று தன்னை நோக்கி முகர்ந்து வருகிறது.

“சீ, நாயே அந்தப் பக்கம் போ”

ஒரு முறை பார்த்து விட்டு இருட்டுப் பேருருவத்தின் அந்தப் பக்கத்தில் கரைந்து போனது அது.

வாழும்கலைப் பயிற்சி வகுப்புத் துவங்கியது. அந்த காலை நேரத்தில் வாழும் கலைபயில வருகின்றனர் கொள்ளுப்பாளையம் மாந்தர். வாழப்பிறந்தவர்களுக்கு வாழ்வதற்கு பயிற்சியா? பூக்கும் உறவுகளோடு உறவாடிக் கொண்டால் பயிற்சிகள் எதற்கு??

பயிற்சிகள் முடிந்து சிற்றுண்டிக்காக அருகிலிருந்த கூடத்துக்குக் கிளம்பினர் வாழும்கலைப் பயிலுநர்கள். பிரபாகரனும் அறையை விட்டு வெளியே வந்தார். ஓங்கிப் பாய்ந்தது அது.

“இதென்னுங் இதூ? என்னிய உட்டுப் போகமாட்டீங்கீதூ?? ஆரூட்டு நாயிங்க??”

உள்ளூர்க்காரர்கள் எவருக்கும் அதற்கென்று உடைமையாளர், உரிமை கோருபவர் இருப்பதாகத் தெரிந்திருக்கவில்லை.

சிற்றுண்டு முடித்துக் கொண்டு காலை எட்டுமணிக்கு கணியூர் இலட்சுமி மெசின் வொர்க்சு நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய துரிதகதியிலிருந்தார் பிரபாகரன். என்.எச் பெருந்தெருவில் வண்டிகளெல்லாம் புலிப்பாய்ச்சலில் சென்று கொண்டிருந்தன. அவற்றோடு பிரபாகரனது வண்டியும் சேர்ந்து கொண்டது. வண்டி உள்ளே நுழைய வாயிற்காவலர் பெருங்கதவுகளைத் திறக்க முற்படுகையில்தான் அவருக்குத் தெரிந்தது, அவரது காருக்கும் முன்பாக அது நுழைந்து கொண்டது. காவலர் துரத்திக் கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு, எட்டுமணிக்கு முன்பாக பணியிடத்துக்குள் சென்றுவிட வேண்டுமென்கிற முனைப்பு பிரபாகரனுக்கு.

மாலை நான்கரை மணிக்கு அலுவல் முடிந்து வண்டியைக் கிளப்ப வந்தவர் அதிர்ந்து நின்றார். தன் வண்டியின் அடியில் படுத்திருந்த அது, தாவிக் கொண்டு தன் மீது ஏறவந்தது அது. உடன் வந்தவர்களைத் துணைக்கழைத்தார்.

“என்னங் இதூ? எனக்கு நெம்பப் பயமா இருக்குது. காலீல நாலு மணீலிருந்து இது என்னிய வுடாம தொரத்திகினே இருக்குதுங்க… கொஞ்சம், அக்கட்டால தொரத்தியுடுங்க. நான் காரெடுத்துட்டுக் கிளம்பிக்கிறன்!”

வண்டியை உசுப்பிவிட்டுப் பெருந்தெருவுக்கு வந்தவர் இன்னுமந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை. கம்பெனியிலிருந்து புறப்பட்டு ஐந்து மைல் தொலைவு கடந்து அரசூர்ப் பிரிவில் ஒரு வண்டி அவரது வண்டியை வேகமாகக் கடந்து ஏதோ சமிக்கையைக் காண்பித்தார் அந்த வண்டியின் ஓட்டுநர். அதைப் பார்க்க நேரிட்டதும்தான் கவனித்தார், தன் காருக்கிணையாக அதுவும் ஓடி வந்து கொண்டிருந்தது.

சூலூர்ப்பிரிவில் வண்டியை தெற்குப்புறமாக சூலூரை நோக்கி முடக்கினார் வண்டியை. திடுமென வண்டி பக்கச்சாலையில் பிரிந்தோடுமென அதற்குத் தெரிந்திருக்கவில்லை. மாலையில் வேறு அலுவல்நிமித்தம் கோயமுத்தூர் செல்லவேண்டியவர், இது செய்தபாட்டில் நேராக வீட்டுக்கு வந்துவிட்டார் பிரபாகரன்.

”டவுனுக்குப் போறன்னு சொன்னீங்க, போகலையா?”

காலை நான்குமணி முதல் நடந்தவற்றையெல்லாம் மூச்சுத்தீருவதற்குள் சொல்லி முடித்தார். யாரும் அவ்வளவாக ஈடுபாட்டுடன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை மகளைத் தவிர. “அப்பா, அப்படின்னா அதையும் நம்மூட்டுக்கே கூட்டீட்டு வந்திருக்கலாமப்பா?!” எனச் சொன்னாள்.

மறுநாள் காலை, அதே நான்குமணி. தயாராகக் காத்திருந்தது அது. நேற்றைப் போலவே இன்றும். அலுவலகப் பணியிடத்துக்குப் போனார் பிரபாகரன். உறவுகள் தான்தோன்றித்தனமானவை. சிரித்தார். அதுவும் வாலை ஆட்டிக் குழைந்து நின்று கொண்டிருந்தது. உடன் பணிபுரியும் நண்பர்களெல்லோரும் வியப்புக்கொண்டு நின்றிருந்தனர். அதிலொருவர் சொன்னார், ”பிரபாகரரு. வேலைக்கு லீவு நாஞ்சொல்லீர்றன். நீங்க, அதைய உங்கூட்டுக்கே கூட்டீட்டுப் போயிருங்களே?”

என்.எச். பெருந்தெருவில் வண்டியை தொன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் விரட்டினார். விட்டேனேபாரென்று அதுவும் உடனோடி வந்தது. பெருந்தெருவிலிருந்து இறங்கி உள்ளூர்ச்சாலைக்குத் திருப்பினார் வண்டியை. இன்று அதுவும் சுதாரித்துக் கொண்டு, உள்ளூர்ச்சாலையிலும் பின்தொடர்ந்து வந்தது.

மனம் பதறி இறங்கினார் பிரபாகரன். சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு அல்லாடுவதைப் பார்த்த நண்பன் திருமூர்த்தியும் தன் வண்டியை நிறுத்திவிட்டு அருகே வந்தார். “ஏனுங்ணா, வண்டீலெதுவும் பிரச்சினைங்ளா?”, என்றார் திருமூர்த்தி.

”இல்லெ திருமூர்த்தி. நாயொன்னு ரெண்டு நாளா எங்கோடவே சுத்தீட்டு இருக்குது. எம்பொறகால கார்கூடவே ஓடி வன்ட்டிருந்துச்சு… அங்க பாரு, உள்ளூர்நாய்க எல்லாஞ்சேந்து வளைச்சிருச்சுக, பாரு!!”

இருவருமாகச் சேர்ந்து உள்ளூர்நாய்களை விரட்டி விட்டனர். அது பிரபாகரனை நாவால் துழாவிக் கொண்டிருந்தது. கார்கதவுகளைத் திறந்து விட்டு, காருக்குள் வரவைக்க முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அது காருக்குள் வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

“அண்ணா, இருங். நாம்போயி பிசுகோத்து ஒரு பாய்க்கட் வாங்கியாறன்”, கிளம்பிப் போய் பொட்டலத்தோடு திரும்பி வந்தார் திருமூர்த்தி.

பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் போட்டு கார்க்கதவுக்கருகில் வரவைத்து விட்டனர். காருக்குள் ஒரு துண்டினை வீசினார் திருமூர்த்தி. அது வெகு திறமையுடன் தன் முன்னங்காலை விட்டு பிஸ்கட் துண்டினை வெளிநகர்த்தித் தன் நாவால் பற்றி உள்ளிழுத்துக் கொண்டது. அப்படியே செய்து கொண்டிருக்கவும், ஒரு கட்டத்தில் தன்னை வலுப்படுத்திக் கொண்டு அதன் உடம்பைப் பற்றி காருக்குள் தள்ளி விட்டார் திருமூர்த்தி. அவ்வளவுதான் கதவைமூடி விட்டார் பிரபாகரன். அதுவும், காரின் பின்னிருக்கையில் தன் வண்டியில் தான் பயணம் மேற்கொள்ளும் தோரணையைத் தனதாக்கிக் கொண்டிருந்தது.

”ஏங்கண்ணூ வேலைக்குப் போகுலியா இன்னிக்கி? ஏன் எதுனா ஒடம்புக்கு செரியில்லியா?? ஏன், என்னாச்சி??”, பதற்றத்தோடு கதவுகளைத் திறந்து விட்டார் அம்மா.

“அம்மா, ஒரு வட்டல்ல சோறு போட்டாக் கொண்டா!”

அப்போதுதான் அது காரிலிருந்து தன் வீட்டுக்குள் புகுந்து கொண்டிருந்தது. தெருவே பார்த்து அஞ்சியது. கூரிய கண்கள். புலியின் முகத்தை ஒத்த முகம். தன் வீட்டை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது அது. எதிர் வீட்டில் இராஜஸ்தான் குடும்பமொன்று வசிக்கிறது. அந்த வீட்டுச் சிறுமி, இந்த வீட்டுச் சிறுமியிடம் கேட்கிறாள்.

”உங்கவீட்டு டாமி பேரென்ன?”

“அது பேரு, மகன்!”

“மகனா?”

“ஆமா, எங்கப்பா அதைய அப்படித்தான் கூப்புடுவாரு!!”

கவுன்சிலர் அம்சம்மாவிடம் சேட்டம்மா பாயல் சொல்லிக் கொண்டிருக்கிறார், “பிரபாகரண்ணன் வூட்டுக்கு மகன் வந்ததிலிருந்து எங்களுக்கு ஒரு பயமுமில்ல. அவன் தெரு ஆட்களைத் தவிர, மத்தவிங்களை உள்ள வுட மாட்டான்! எங்க பய்யாவும் அத்தே சொல்லிச்சி!”.

உறவுகள் தான்தோன்றித்தனமானவை. அதற்கு இன்ன சாயமென்று ஒன்று கிடையாது. தேசதேச எல்லைகள் கிடையாது. பூக்கும் உறவுகளோடு உறவாடிக் கொண்டால் வாழப் பயிற்சி எதற்கு?

“மகன், வாடா இங்க! மக…ன்!!’, கோடி எலக்ட்ரிக் வேணு எதற்கோ மகனை அழைத்துக் கொண்டிருக்கிறார். உறவாடிப் பொழுதைப் புசிப்பதற்காகவும் இருக்கலாம்!!