2/28/2010

கனியனும் மணியனும்!

திருமூர்த்திக் கானகத்தில் நாளெல்லாம் இருந்து கழித்து, இரையாடிவிட்டுக் கூட்டங் கூட்டமாய் வெண்கொக்குக் கூட்டமும், கூழக்கடாக்களும் நெகமம், காட்டம்பட்டி, சீலக்காம்பட்டி எனப் பரவி, விரவி இருக்கும் தென்னந் தோப்புகளுக்குத் திரும்புகிற வேளையது.

கனியனும் மணியனும், கம்பங்காட்டுப் பொழியின் மீது தென்வடலாக நடந்து கொண்டிருந்தனர். கானாங்கோழிகள், மெலிதான சிலுப்பலில் தாத்தாச்சி ஐயன் கோவில் சமீபம் மேற்கு முகமாய்ச் சென்று கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் அவற்றின் இறகில் பட்டுத் தெறித்ததில் கனியனின் கண்கள் கூசியது.

“மணியா, கதிரவன் இறங்கிக் கொண்டு இருக்கிறான். விரைந்திடு நண்பா, சென்று நாம் புறநானூற்றில் சில பாடல்களைப் படித்தே ஆகவேண்டும்!”

“சரியாய்ச் சொன்னாய் கனியா! பாடல்களைக் கற்கக் கற்க இனிமையாகவும், நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று அறிவதில் கெழுமையோடு இருக்கவும் முடிகிறது அல்லவா?”

“ஆமாம், ஆமாம்! நமது மானமிகு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள் நடத்தும் பல்லூடக நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்கிறாய்தானே?”

“வேறு வழியில்லை நண்பா! இல்லாவிடில் மேன்மைமிகு குழந்தைவேல் இராமசாமி அய்யா நம்மை விட்டு விடுவாரா என்ன?”

“நீ கொடுத்து வைத்தவன் அன்றோ?”

“நல்லதே சொன்னாய்! அவர், தானும் கற்று மற்றவரையும் கற்க வைக்கிறார் கண்டாயா? அதை நாம் மெச்சித்தான் ஆக வேண்டும்!”

“அது சரி! புறநானூற்றில் எத்தனை பாடல்கள் உள்ளன?”

“நானூறு பாடல்கள், பல திணைகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது! ஒவ்வொரு திணையிலும், துறை எனும் உட்பிரிவும் உண்டு கனியா!”

“மணியா, எனக்கு பாடாண் திணை என்றால் மற்றவரைச் சிலாகித்துப் பாடுவது என்று தெரியும். மற்ற திணைகளை எளிதில்ப் புரிந்து கொள்ள முடியவில்லை!”

“அதேதான்! நான் நேற்றுப் பின்னேரத்தில்தான் அவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டேன். எனவே நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!”

“நண்ணுதல் ஆனேன்; நீ தொடரலாம் மணியா!”

“கனியா, இதோ பழைய பாடல் ஒன்றைக் கூறுகிறேன் கேள்!

வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்!”

“ஆகா, அருமை! கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது; திணைகளின் பெயர்கள் பாடலில் வரக் கண்டேன் மணியா!! ஆனால், அவற்றின் பொருள் சரிவர விளங்கவில்லையே?”

“கனியா, அது ஒன்றும் கடினமானது அல்ல; விரைவாகச் சொல்லி முடித்துவிட்டேன் என எண்ணுகிறேன். பணிந்தவன் ஆகிறேன் நான்!”

“இல்லை மணியா, நீ நன்றாகவே சொன்னவன் ஆயினன்! பொருள் விளங்க உரைத்தவனும் ஆகுக!!”

“ஒரு நாட்டை வென்று, மண்ணைக் கவர நினைப்போர் முதற்ச் செய்வது அந்த நாட்டிற்கு வெட்சிப்பூவைச் சூடிச் சென்று, அந்நாட்டிலுள்ள ஆநிரைகளை, அதாவது மாடு, கன்று என இருக்கும் கால்நடைகளைக் கவர்ந்து எடுத்து வருவது பற்றிப் பாடுவது வெட்சித் திணை!”

“ஆகா! ஆகா!!”

“ஆமாம்... இதிலேயும் இருவகை உண்டு கனியா!”

“அரசன் குறிப்பறிந்து செல்வது; அரசன் கட்டளையிடச் செல்வது! சரிதானே மணியா?”

“மிகச்சரியாய்ச் சொன்னாய் கனியனே! அரசன் குறிப்பறிந்து செல்வது தன்னுறு தொழில்; அரசனின் கட்டளையேற்றுச் செல்வது மன்னுறு தொழில்!!”

“வெட்சி சுவையாகவே உள்ளது. அடுத்து கரந்தைதானே?”

“ஆமாம், கரந்தைப்பூச் சூடிச் சென்று வெட்சியினர் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டெடுத்தல் கரந்தைத் திணை!”

“எனக்கு அடுத்தவற்றை நீ கூறிய பாடலில் இருந்து யூகிக்க முடிகிறது. மண்ணாசை கொண்டு போரிட வருதல் வஞ்சித் திணை; அவர்களை உள்ளே வர விடாமல் காஞ்சி மலர் அணிந்து எதிர்கொளல் காஞ்சித் திணை!”

“நான் கூறியதே திண்ணம் ஆயிற்று. பாடலைப் புரிந்து கொண்டவனே நீ. அது போலவே, அரண்மனை, கோட்டை, கொத்தளங்கள் எனும் நிலைகளின் மதில் வளைத்து நொச்சி சூட்டிப் போரிடுவது நொச்சித் திணை என்க; மதில் காக்க முடக்கத்தான், அதாவது உழிஞைக் கொடி தரித்துப் போரிடுவது உழிஞைத் திணை என்க!”

”மதில் கடந்துவரின், நேருக்கு நேரான யுத்தம்தானே? சரி, அதையும் அறியச் செய்க நண்பா!”

“யூகம் சரியே! வீரத்துடன், ஆர்ப்பரித்துப் போரிடுவது தும்பைத் திணை; கலைஞர் அஜீத்தைச் சொன்னாரே, வந்து விழுந்த தும்பை மலர் என்று, அதுவும் இந்தத் திணைதான் கனியா! தும்பைப் பூவை அகற்றிப் பின், வாகை மலரணிந்து பெற்ற வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை!”

”அருமை, அருமை! இதைக் கேட்ட மாத்திரத்திலேயே என்னால் சங்ககாலத்தில் இருப்பது போன்ற உணர்வு மேலிடுகிறது மணியா!”

“நுகர நுகரப் பேரின்பம் அளிக்க வல்லதுதான் சங்ககாலப் பாடல்கள். இத்தோடு திணைகள் முடிந்து விடவில்லையடா கனி; இன்னும் இருக்கிறது!”

“ஆமாம், தெரியும்! நீ தொடர்ந்து சொல்லடா மணியா!!”

“அடுத்து நீ ஏற்கனவே சொன்ன பாடாண் திணை; அதாவது அடுத்தவரது மேன்மை, கொடை, புகழ் எனச் சிறப்பித்துப் பாடுவதுதான் இது!”

“ஆமாம்!”

“ஒருதலைக் காதல் பற்றிப் பாடுவது கைக்கிளைத் திணை; பொருந்தாக் காதல் பற்றிப் பாடுவது பெருந்திணை! எதிலும் சாராத, ஒழிபுகள் பற்றிப் பாடுவது பொதுத்திணை

”புறத்திணைகள் ஏழு, அகத்திணைகள் ஏழு எனப் படித்ததாக அல்லவா என் நினைவு?”

”ஆமாம்; தொல்காப்பியத்தில் அப்படித்தான் இருக்கிறது; ஆனால், ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பா மாலையில் இப்பனிரெண்டும் இடம் பெற்று உள்ளது!”

“இது எனக்குத் தெரிந்திராத ஒன்று! தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி!!”

“டேய் கனியா, அதோ அங்கே பார்! ஊரோரத்துப் பிள்ளையார் கோவிலில் யாரோ சிதறு தேங்காய் அடித்துவிட்டுச் செல்கிறார்கள்... வா போகலாம்!”

“ஆமாம்... ஓடு, ஓடு... முடிந்தால், நம்ம இராமசாமி அய்யாவுக்கும் ரெண்டு சில்லுகளைப் பொறுக்கிடுவோம்... ஓடுக!”

2/27/2010

வெள்ளை மனசு!

நளினமாய்ப் பேசி
நல்லது பல சொல்லி
இசைவும் துலங்குகிற
தருணமது!
ஓடியாடுவதினின்றும்
மிகுதியான குதூகலத்துடன்,
அய்... ஜாலி...
ரோட்டுல, ரோட்டுல நின்னு போற
எங்க காரை
இந்த மாமா வாங்கறாங்க!

==============================

தானே பரிமாறுவதும்
துடைக்கத் துணிதருவதுமாய்
மாய்ந்து மாய்ந்து
விருந்தோம்பல்!

ரேவதிக்கு உடம்பு சரியில்ல;
இல்லன்னா
இதைவிட இன்னும்
நல்லாக் கவனிச்சிருப்பா!!

ஆமாங்க அங்க்கிள்...
நீங்கெல்லாம் ஏன் வர்றீங்கன்னு
சணடை போட்டு
அழுதுட்டே இருந்ததால
தலை வலிக்குதுன்னு
உள்ள படுத்திட்டு இருக்காங்க
அம்மா!!!

2/26/2010

கீறல்

விரைவாய்ச் செல்லுகையில்
அன்பாய்
பெயர் சொல்லி
விளித்து
நகையோடு

கை குலுக்கினார்
எதிரில் வந்தவர்!!

பாராட்டுகளைப் பெற்று
உச்சிமுகர்ந்த அளவளாவலும்,
பார்த்ததுல

ரொம்ப மகிழ்ச்சியெனச்
சொல்லிப் பரிவாய்
விடைபெறுதலும்!!

யாரவர்?
பெயரைக் கேட்டு
அவரிடமே
அவர் யாரெனத்
தெரியாதென்று
காண்பித்து

அவர்
மனக்கண்ணாடியில்
மெல்லிய கீறல்
விழுவானேன்?!

2/25/2010

கிழக்குக்கரை அமெரிக்காவாழ்த் தமிழர் கவனத்திற்கு!

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில், தமிழ் இலக்கிய ஆய்வுக் குழுமமும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் சிறப்புக் கூட்டம் பற்றிய இடுகை இது.

இரண்டாம் ஜாமத்துக் கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்
உண்மைதான்

என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமைகொள்ளலாம்

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபதமுமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா
கவிஞர் சல்மா அவர்கள், தாயகத்தில் இருந்து அமெரிக்கா வந்துள்ளார்கள். கவிஞர் அவர்களது கவிநயம் மிகுந்த சொற்பொழிவைக் கேட்கவும், அவருடன் கலந்துரையாடவும் ஒரு இனிய வாய்ப்பு!

நாள்: பிப்ரவரி 28, 2010, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 5 மணி முதல் 7.30 வரையிலும்
இடம்: Potomac Community Centre, 13315 Falls Road, Potomac, MD 20854


நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து
தலைவர் உரை: ஜான் பெனடிக்ட்,
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்
வரவேற்பு: முனைவர் பாலாஜி சீனிவாசன்

சிறப்புரை: கவிஞர் சல்மா,
தலைவர், சமூகநல வாரியம், தமிழ்நாடு அரசு

கலந்துரையாடல்: முனைவர் சொர்ணம் சங்கர் (நெறியாளுகை)

நன்றி நவிலல்: திருமதி கல்பனா மெய்யப்பன், செயலாளர்,
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்.

தகவல் தொடர்பு:

நாஞ்சில் பீற்றர் (301)873 8574, பாலாஜி (443) 995 2657

2/24/2010

பழமைங்றது ரொம்ப முக்கியம் இராசா!

ஒருத்தர் சொன்னாரு, இறந்த காலம்ங்றது இறந்து போன ஒன்னு; எதிர்காலம்ங்றது இன்னும் கைக்கே வந்து சேராத ஒன்னு! ஆக, ஒருத்தங் கையில இருக்கிறது நிகழ்காலம் மட்டுமே. அந்த நிகழ்காலத்தை இனிமையாக்கி வாழறதுதான் மிக முக்கியம் அப்படின்னு!

ஆமாங்க, இதை ஏற்ற இறக்கத்தோட நயம்பட எழுதினா, படிக்க நல்லாதான் இருக்கும். ஆனா, வாழ்க்கைக்கு எது ஆதாரம்? எது மூலம்?? எது அடிப்படை???

பழமைதான் மூலம்; பழமைதான் ஆதாரம்; பழமைதான் அடிப்படை! ஒவ்வொருத்தரும், அவங்கவங்க வாழ்க்கையச் சக்கரம் கண்டுபிடிக்கிறதுல இருந்து ஆரம்பிக்க முடியுமா? முடியாது!

எழுதி வெச்சதைக் கத்துகிட்டு, லெளகீகங்றது எந்த நிலையில இருக்கோ, அதுல இருந்து மேம்பட முயற்சிக்கணும். சரிதானே? அப்ப, எழுதி வெச்சதை, பதிஞ்சி வெச்சதைப் படிச்சு ஆகணும். அப்பத்தான் புதுமைகள் மலரும்! இல்லாட்டி, பழசுலயேதான் திரும்பத் திரும்ப உழண்டுகிட்டு இருக்கணும்!

சரி, பழசைக் கத்துகிறதால என்ன அனுகூலம்?


  1. பழமையைக் கற்பதால், அடையாளத்தைத் தெரிவு செய்து, முகாந்திரம் வெளிப்படுகிறது.

  2. பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள் செம்மைப்படுகிறது.

  3. பழமையைக் கற்பதால், சமூகக் கோட்பாடுகளின் நிறை குறைகளை அறிய முடிகிறது.

  4. பழமையைக் கற்பதால், கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க முடிகிறது.

  5. பழமையைக் கற்பதால், தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுச் செம்மைப்படுத்த ஏதுவாகிறது.
சரி, இனி ஆரம்பிச்ச இடத்துக்கே வரலாம். ஒருத்தருக்கு எப்பவும் நிகழ்காலம் இனிமையாவே இருந்தா, அது நல்லதுதான். அந்த இனிமைக்கு எது முதலீடு? பழமைதான் முதலீடு! கடந்து வந்த பாதை முக்கியந்தானே?

பழமையான நினைவுகளை அசைப்போட்டுக் கூட, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும். பழைய தவறுகளை நினைச்சு, அதுல இருக்கிற வழுக்களைக் களைந்து, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும்.

அதேபோல, எதிர்காலத்தைப் பற்றிய அவதானமும், முன்னெச்சரிக்கையும் மிக அவசியம். வருமுன் காப்பது சாலச் சிறந்தது அப்படின்னு சொல்லிப் படிக்கிறமே?

இப்படி, எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம் பழமை. இந்த முன்னெச்சரிக்கைக்காக, பழமைங்ற மூலதனத்தைப் போட்டு விளைச்சல் மேற்கொள்றது நிகழ்காலம். ஆக, எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது இந்தப் பழமை!

முத்தாய்ப்பா நாம சொல்றது என்னன்னா, பழமைய மேம்படுதலோட கூட்டிப் புதுமை காணுறதுதாங்க வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்! பழமை, பழமைன்னு ஒதுக்கி வைக்கிறதாலப் புதுமை வந்திடாதுங்க இராசா!!



பழமை அறியாதவன் பாழ்!


2/23/2010

சகுந்தலா!

”மனோ, கையில சில்லறை பத்து சென்ட்தாங்க இருக்கு. அதிகமாப் பேச முடியாது, சீக்கிரம் கீழ எறங்கி வாங்க; நான் கீழதான் நிக்கிறேன்!”, அடுக்ககத்தின் ஏழாவது மாடத்தில் இருக்கும் நண்பனுக்கு, கீழிருந்தாவாறே பொதுத் தொலைபேசியினூடாக அழைப்பு விடுத்தான் மணி.

சிங்கப்பூரின் பிரதான இடத்தில், அவர்களுக்காக அவர்கள் பணி புரியும் நிறுவனத்தினரால் ஒதுக்கப்பட்ட மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு. இடதுபுறமாகக் கூப்பிடு தூரத்திலேயே, முஸ்தபா, வி.கே.கல்யாணசுந்தரம் பல்பொருள் அங்காடிகள்;

அதனருகிலேயே ஜலன்பெசார் வீதி. பெருமளவிலான தாயகத்து மக்கள், முதல்முதலாய்க் கண்ட சிவப்பு விளக்கு அந்த இடத்திலாகத்தான் இருக்கும். அதையும் கடந்து சென்றால், சனி, ஞாயிறுகளில் மாதவிகள் வருகைக்காகக் கோவலர்கள் கூடும் செராங்கூன் கடைத்தெருவும், திறந்தவெளிப் புல்தரையும்.

இவர்கள் வழமையாகச் செல்வது, முஸ்தபாவுக்கு கீழே இருக்கும் சுதா உணவகத்திற்குத்தான். அங்கேதான், ஆற அமர இருந்து, புலிப்பால் எனும் புலிச்சின்ன பானம் மாந்துவது இவர்களது வாடிக்கை.

”என்ன மனோ, நீங்க மட்டும் வர்றீங்க?”

“ஆமாம் மணி, குணான் இப்பதான் லேவண்டர் எம்.ஆர்.டில வந்தெறங்கி இருக்கானாம். நேரா சுதாஸ்க்கு வர்றேன்னு சொல்லிட்டான்!”

”ஏன் லேவண்டர்ல இறங்கினான்? அடுத்தது புகீஸ்! அங்க எறங்கி இருந்தா இன்னும் பக்கமாச்சே?”

“என்னங்க மணி?! இறங்கினவிட்டுத்தானே அவனுக்குத் தெரியும் நாம சுதாஸ் போறம்ணு?!”

“ஓ, ஆமாயில்ல?!”

“ஆமாம் மட்டுந்தான்!”, கடித்துக் கொண்டே நியூபார்க் நட்சத்திர விடுதியையும் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.

“ச்சே, மூக்குல பஞ்சு வெச்சுட்டுத்தான் வரணும் போல இருக்கு? மூக்குல பூந்து, தலைய ஆட்டு ஆட்டுன்னு ஆட்டுதுங்க இந்த துரியன் பழம்!”

“ஆமாங்கக் கர்மம்! இரயில்ல எல்லாம் கொண்டாரக் கூடாதாம். இப்படிச் சனங்க போய் வர்ற எடத்துல மட்டும் கடையப் போடலாமாம்?!”

“அங்க பாருங்க! குஷ்புவும் பிரபுவும் போறாங்க பாருங்க!!”

“ஆமாங்க! அப்ப பேப்பர்ல வர்றது எல்லாம் நெசந்தானா?”

“க்கும், அதான் நேத்து டிவிலயே வந்துச்சே? முஸ்தபாவுக்கு வந்துட்டு போறாங்க போலிருக்கு?!”

சுதா உணவகத்தில் நுழைந்ததுமே, அங்கு பணிபுரியும் பணியாளர்களான செந்தமிழரசும், குமாரும், இவர்களிடம் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். அவர்கள் இருவருமே, இவர்களுக்கும், இவர்களுடைய நண்பர்களுக்கும் நெருக்கமான நண்பர்கள்.


அவர்களோடு அளவளாவிக் கொண்டு இருக்கையில், ராய் மற்றும் குணா என்கிற குணசேகரனும் வந்து சேர்ந்து கொண்டனர். ராய், சிங்கப்பூரில் ஓரிரு ஆண்டுகளாய் இருப்பவர். அமோக்கியோ பகுதியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. குணசேகரன், சிங்கப்பூருக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

”என்ன குணா, எப்படி இருக்கு சிங்கப்பூர்? ச்சும்மா, வாங்கிக் குடி இராஜா!”

“இல்லங்க ராய்! வந்து ஒரு வாரந்தான் ஆகுது. ஒன்னாந்தேதி சம்பளம் வந்தாத்தான்....”, இழுத்தான் குணா!.

“கவலைப்படாத இராஜா! நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்.... சம்பளம் வந்த பின்னாடிக் குடு இராஜா!!”, இராய் ஆசுவாசப்படுத்தினார்.

“ஆமாமா, இன்னைக்கு இராத்திரியாவது நாங்க நிம்மதியாத் தூங்கணும்!”, உள்குத்தை அவிழ்த்து விட்டான் மணி.

தொடர்ந்து, கடையில் இருந்த பட்சிகளான மின்மினி மற்றும் பச்சைக்கிளி ஆகியோரைச் சீண்டியபடியும், அவர்களுடைய தினசரி வரும்படி குறித்தான கேள்விகளைக் கேட்டபடியும் இருந்த இவர்கள், பேராயக் கட்சியில் இருந்து மூப்பனார் பிரிந்து சென்றது சரியா, தவறா எனும் விவாதத்திற்குத் தாவினர்.

”இராஜா... மனோ!! பாத்து காசைக் குடுத்துட்டு, சரியாக் கணக்கு எழுதி வெச்சிரு!!”, இராய் புறப்பட ஆயத்தமானார்.


“மணி, போதும்! அவளுக இருக்குற இடத்துப் பக்கம் பாத்துறாத! கூட வர்றேன்னு சொல்வாளுக!!”

“என்ன விளையாட்டா? இந்நேரம் பொங்க வெச்சதெல்லாம் நீங்க! போகும் போது எனக்கு புத்திமதியா? சரி, வாங்க போலாம்!”

செட்டிநாட்டு உணவும், புலிப்பாலும், இவர்களை நித்திரையின் உச்சத்திற்கே இழுத்துச் சென்றது.

வீட்டிற்குச் சென்றதுமே, அவரவர் அறையில், அவசர கதியில், ஆடைகளைக் களைந்து மாற்றாடைக்குள் தஞ்சம் புகுந்து சயனித்துப் போயினர் அனைவரும்.

“என்னங்க மணி, கொஞ்சம் இங்க வாங்க!”, எங்கோ தொலைவில், கேளாங் தாண்டிக் கெம்பாங்கன் பகுதியில் இருந்து யாரோ கூப்பிடுவது போல இருந்தது. அருகில் வந்து, உலுப்பினார் மனோ!

“மணி, இன்னைக்கும் நமக்கு நேரஞ் சரியில்ல. குணா, உக்காந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்!”

“அடக் கடவுளே! இவனுக்கு என்ன பிரச்சினை இப்ப??”

“வேறென்ன? ஹோம் சிக்தான்! ஏழாவது மாடியில வேற இருக்கோம். ஏதாவது செஞ்சிட்டா என்னங்க செய்யுறது??”, குணாவின் அறைக்குள் நுழைந்தனர்.

“என்னங்க குணா, இப்படிச் செய்யுறீங்க?”

“மணி, முடியலை! எனக்கு எங்கம்மா ஞாபகமாவே இருக்கு!! இராத்திரி வீட்டுக்குப் போனா, சொந்தக்காரங்க கதையெல்லாஞ் சொல்லி, சாப்பாடு போட்டு, நான் படுத்ததுக்கு அப்புறம் எனக்குத் தலைமாட்டுல ஒரு சொம்பு நிறையத் தண்ணி வெச்சிட்டுத்தான், அவங்க படுப்பாங்க தெரியுமா??”, குலுங்கிக் குலுங்கி அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.

“அய்யோ... அதெல்லாம் தெரிஞ்சுதான வந்தோம்?! நல்லா யோசிச்சுப் பாருங்க. சும்மா ஒன்னும் வரலை நாம. பாண்டியனுக்கு எழுபதாயிரம் அழுதுட்டு, டிக்கெட்டுக்கு இருபத்தோராயிரம்... ஒரு இலட்சம் ரூபா கடனோட இருக்கோம்... அது போக, உங்களுக்கு இருக்க வீடுகூடக் கிடையாதுன்னு சொன்னீங்க. எல்லாம் யோசிச்சுப் பாருங்க!”

“தெரியுது... ஆனா, முடியலை! அவங்க மட்டும், அங்க என்ன, நல்லா இருப்பாங்களா?”

“அதான், உங்க அக்கா, மச்சான் எல்லாம் இருக்காங்களே பக்கத்துல! நீங்க படுங்க குணா!!”

“இல்ல மணி!”, சடாரெனக் காலில் விழுந்தான்.

“என்னை, எப்படியாவது, இப்பவே ஊருக்கு அனுப்பிடுங்க! எனக்கு என்னோட அம்மா வேணும்...”, அன்றைய இரவு அழுகையிலும், அனத்தலிலும் கழிந்தது. அவனுக்கு மட்டுமல்ல, மற்றவருக்கும் சேர்த்தே!

மணியனும், குணாவும் ஒரே நாளில், ஒரே விமானத்தில் சிங்கப்பூர் வந்தவர்கள். மணியனிடமும் போதிய பணபலம் இருந்திருக்கவில்லை. இராய் மற்றும் மனோவின் தயவில், மறுநாளே ஒரு இலட்ச ரூபாய்க் கடனோடு திரும்பினான் குணசேகரன்.

காலங்கள் கழிந்தது. இராய் மற்றும் மனோ இருவரும் அவுசுதிரேலியாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். மணியன், மேற்படிப்புக்கென கனடாவுக்கு இடம் பெயர்ந்தான்.

தாயகமெங்கும் அலைபேசிப் புரட்சி. கணனி யுகத்தின் ஆர்ப்பரிப்பு. தீவிரவாதம் எழுந்து தோற்றது. தமிழினம் வஞ்சிக்கப்பட்டது. இப்படியாகக் காலச்சக்கரம், அதன் நியமத்தில், கிரமம் தவறாது சுழன்று கொண்டே இருக்கிறது.

இதனிடையேதான், வாழ்க்கைப் பயணத்தில், என்றோ, எங்கேயோ பார்த்துக் கொண்ட இரு ஜீவன்கள் சந்தித்துக் கொண்டன.

”வாங்க, வாங்க மணி! நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கேன்! என்ன குணா இது? பயங்கரமாக் குண்டாயிட்டீங்க?”

”ஆமாம் மணி, நீங்கென்ன வெள்ளைக்காரனாட்டமே இருக்கீங்க?”

“அய்ய... “

“பாத்து எத்தினி வருசமாச்சு?”

“ஆமாம்... உனக்கு குழந்தைக?”

“பையன் ஆறாவது படிக்கிறான்; பொண்ணு ரெண்டாவது, கலைமகள்ல படிக்கிறா!”

”அடேங்கப்பா... என்னோட பொண்ணு இப்பதான் ஒன்னாவது!”

“ஆமாங்க... எல்லாம் எங்கம்மா புண்ணியத்துல....”, மடாரென அதே நிகழ்ச்சி. கலவரமுற்றுப் போனான் மணி. நல்ல வேளை, இம்முறை காலிலெல்லாம் விழவில்லை; மாறாகக் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டான் குணா.

“என்ன குணா இது? எல்லாரும் பாக்குறாய்ங்க!!”

“அதானாலென்ன? அன்னைக்கு மட்டும் நீங்க ஊருக்கு திருப்பி அனுப்பாம இருந்திருந்தா, இன்னைக்கு நான் இந்த நெலமைக்கு வந்தே இருக்க மாட்டன்!”

பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்து, அறிமுகம் செய்து வைத்தலும், விருந்தோம்பலும் நல்லபடியாக நடந்தேறியது.

“ஆமாம் மணி. நான் வந்த கொஞ்ச நாள்லயே செருப்புக் கடை ஒன்னு போட்டேன். ஓரளவுக்குப் போச்சு. அப்புறம் அம்மாவோட தயவுல கல்யாணமும் நடந்தது! கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசத்துலயே அம்மா தவறிட்டாங்க!”, மீண்டும் நினைவுகளில் மூழ்கியவனாய்க் கண் கலங்கினான் குணா.

அவனே மெளனத்தைக் கலைத்து விட்டுத் தொடர்ந்தான்,

“சிங்கப்பூர்லயே இருந்திருந்தா, அம்மாவைக் கண்ணுல பாக்காமயே கூடப் போயிருக்கும். வந்ததுதான் நல்லதாப் போச்சு!”

“விடுறா குணா, இப்ப என்ன செய்யுறே?”

“இப்ப ரெண்டு செருப்புக் கடை இருக்கு. அப்பொறம், இந்த செப்டிக் டேங்க் சுத்தம் பண்ற லாரிக நாலு ஓடுது!”

“பரவாயில்லையே... நான் வெளிநாட்டுல இருக்கேன்னுதாம் பேரு...ம்ம்.. மத்தபடி வசதிகெல்லாம் எப்படி?”

“அம்மாவோட புண்ணியத்துல, ஒரு இருபது முப்பது தேறும்னு நினைக்குறேன்!”

“என்ன குணா இது? இது சொந்த வீடுதானே?”

”ஆமாம்... ரெண்டாயிரத்து நானூறு சதுர அடி, மொத்தம் அஞ்சரை சென்ட்!”

“அப்பறமென்ன, இருபது முப்பதுன்னு?”

”ஆமாம் மணி, இருபது கோடியெல்லாம் சுலுவுல தேறும்....”

இலட்சத்திற்கும் கோடிக்குமான குழப்பத்தைக் கடுமையாகப் பிரயத்தனப்பட்டுச் சமாளித்தான் மணி. பின், அரசியல், நாட்டு நடப்பு எனப் பலதும் பேசிக்கொண்டு இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமாகச் சென்று கொண்டிருந்தது. குணாவுக்கு அலைபேசியில் அழைப்புகள் வந்தபடியே இருந்தன. அதை அவதானித்த மணியன் விடைபெறலானான்.

“சரி குணா, நான் வரட்டுமா?”

“சரி மணி, இன்னொரு நாளைக்கு குடும்பத்தோட வரணும் சரியா?”

“சரி குணா!”

முற்றத்தில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த குணாவின் மகளைக் கண்டு,

“பாப்பா, உம்பேரு என்னம்மா?”

பாப்பா, ஊஞ்சலை விட்டு இறங்கித் தகப்பனின் பின்னால் வந்து நின்று கொண்டாள். அது கண்ட குணா, தானே தொடர்ந்தான்!

“அம்மோவோட பேர்தான் இவளுக்கும்..... சகுந்தலா!”

2/22/2010

சிகாரி

கார்கூந்தல்
பொன்மேனி
பிடியிடை
அன்ன நடை
கிளிமொழி
கமலக் கண்கள்
துடிப்பு இதழ்கள்
பளபளப்பு அதரங்கள்
முத்துப் பற்கள்
மணம்மிகு மலர்
சுவைமிகு கனி
சுந்தரமது
கீதக்குரல்
தங்கச்சிலை

சாகசக்காரி
சிங்காரி
சரசுக்காரி
சொகுசுக்காரி
கூட்டத்துக்கே சிகாரி!
யார்றா அது?
சும்மா இருடா மாப்ளை,
படிச்சு முடிக்கலை
இன்னும்!!

2/20/2010

யாழினி

”அண்ணை வாங்கோ! புட்டுஞ் சம்பலுங் கொண்டு வந்த நான்! நீங்களும் வந்து சாப்புடுங்கோவன்!! சாந்தன் இன்னும் வரக் காணலை, நீ வாங்கண்ணை!”, சகோதர ஆளுமையும் பாச வலையுமாய் யாழினி!

“இருக்கட்டும் யாழினி! சாந்தன் ஃபின்ச் இரயிலடியில வந்திட்டு இருக்கானாம், இப்பத்தான் நான் நூலகத்துல நம்ம மோகனைக் கண்டு கதைக்கையில சொன்னவன். சாந்தனும் வரட்டும்!”

“அப்பிடியே? ஆகட்டுமப்ப!”

டொரோண்டோ யார்க் பல்கலைக் கழக வளாகம். எங்கும் மரங்களடர்ந்து, அண்டவெளியுள் பச்சை ஊடுருவிப் பரவிக் கிடக்கும். வளாகத்துள் மைய மண்டபமாய் ராஸ் நூலகம். அதன் இடது புறத்தில் டிம்ஹார்ட்டன்சு குளம்பியகமும், அதையொட்டிய கூடத்தில் மாணவர்கள் இருந்து கதைக்கும்படியாகப் பரப்பு நாற்காலிகளும், இருக்கைகளும் இட்ட பெருங்கூடம்.

அப்பெருங்கூடத்தின் வலதுகோடி மூலையை, வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி நேரமும், அண்டத்தில் அரவம் தவழ்கிறதோ இல்லையோ, இப்பெருக்கூடத்து மூலையை தமிழ்ப் பேச்சு ஆக்கிரமித்து இருக்கும். அங்கேதான், காலை வேளையில் யாழினியும் அவளது மணியண்ணையும், சகதமிழன் சாந்தனுக்காகக் காத்திருப்பு.

”அண்ணை, நம்ம கெளரி வாறாப் போலக்கிடக்கு! அது அவள்தானென்ன?”

“ஆமா, அட நம்ம கெளரியேதான்!”

“கெளரி! எங்க? அங்கனைக்குள்ளக் கண்டுங் காணாதபடி போற நீங்கள்?! வாங்கோ, கதை கதைச்சிட்டுப் போலாமென்ன?”, யாழினி உரத்த குரலில்.

பெருங்கூடத்தை நோக்கி வருகிறாள் கெளரி,

“மணியண்ணை, என்ன உங்களக் கண்டு கனகாலமாயிட்டுது? வேலையே? நான் டி.சி வகுப்புக்கு வரைக்கே, உங்களை காணக் கிடைக்கல என்ன?!”

“ஆமாங்க கெளரி, போன வாரம் எல்லாம், சனி ஞாயிறுன்னு எல்லா நாளும் வேலை. சம்மருக்கும் பாடங்கள் எடுக்க வேணும். கடனெடுக்காமப் படிக்க வேணுமெண்டுதான் இதெல்லாஞ் செய்ய வேண்டிக் கெடக்கு?”

“அது சரி. ஊர்ல உங்க பெட்டையோட சேம செளக்கியமெல்லாம் சுகந்தானென்ன?”

“அய்யோ கெளரி, சொன்னாக் கேளுங்க! அப்படியெல்லாம் ஒரு பெட்டையும் எனக்கு இல்லை! ஆமா, உங்காள் எப்பிடி இருக்காரு?”

“ஒன்டும் கேக்காதீங்கோ! எப்பப் பாத்தாலும் அந்தக் கடையடியில, யோகன் ஆட்களோட சேந்துட்டு தண்ணியடியும் குழப்படியும் செய்து கொண்டு?”

“இதெல்லாம் ஒரு பிரச்சினையா?”

“போங்கண்ணை, நான் ஒரு வாரமாப் பேசக் கூட இல்லையென்ன?”

“ஒ.. ஓ! கொழுவலாக்கும்? இப்படித்தான், போனதடவையும் சொல்லிட்டு இருந்தீங்க? அப்புறம் பார்த்தா, ஸ்கார்புரோ சென்ட்டர்ல ஒன்னுமொன்னுமா? ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்... எதுக்கும் முரளியை நாங்கேட்டதாச் சொல்லுங்க என்ன?”

வெட்கத்தில் கட்டுண்டு தலைகவிழ்ந்தாள் கெளரி. முரளியும் கெளரியும் இணைபிரியாத தோழர்கள், காதலர்கள், இருவருமே ஒரே ஊரைச் சார்ந்தவகள், நெல்லியடியில் பிறந்து வளர்ந்து, பின் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள்.

“கெளரி, நான் நேற்றைக்குப் பின்னேரத்துல உனக்கு கால் எடுத்தனென்ன? கால்ப் பன்னைக்க எங்க நின்ட நீங்கள்?”, இடை மறித்தாள் யாழினி.

“நேத்தைக்கே? ஓம், அது பெரிய சங்கதியென்ன? எங்க பெரியம்மா வீட்டுக்குப் போன நான். அப்படியே தர்சினி கூட இருந்து கதைச்சிட்டு நடுசாமம் ஆயிட்டது. அங்கயே நித்திரையுங் கொண்டுட்டு காலையிலதான் எக்லிண்ட்டன் வந்தன். பெரிய விசர்க் கதையென்ன அது?”

“ஏன், என்ன ஆச்சு? போன வாரம் ரிச்மண்ட் முருகங்கோயிலுக்குப் போயிருக்கக் கூட தர்சினியக் கண்டு கனநேரங் கதைச்சிட்டு இருந்தனென்ன? அவ, வாட்டர்லூ யுனிவர்சிட்டிக்குப் போறன் இந்த சம்மருக்கென்டு சொன்னவா!”

“க்கும்... அவ எந்த யுனிவர்சிட்டிக்கும் போகலை; அடுத்த மாதம் கொழும்புக்கு போறாளென்ன!”

“ஏன், எதும் பிரச்சினையே?”

“ஓம், அவளுக்கு கல்யாணஞ் செய்து வெக்க வேணுமன்டு, பெரியம்மாவும் அண்ணனும் போகச் சொல்றாங்களென்ன?”

“கெளரி, பகிடிக் கதை கதைக்காதீங்கோ!”, பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த சாந்தன் இடை மறித்தான்.

“சாந்தன், சொன்னாக் கேளுங்கோ!”

அனைவரும் சலனமற்றுப் பேசாமல் ஓரிரு நிமிடங்கள் இருந்தனர். மெளனத்தைக் கெளரியே முறித்தவளானாள்,

“ஆமாம். அங்க, அவங்க தமையன்ட கூட்டாளிக்கு இங்க வரணுமாம். மாங்குளத்துல இருந்தவன், இப்ப கொழும்பு வந்து நிக்கானாம். இவ போனதும், ரெஜிஸ்டர் செய்து, பேந்து ஸ்பொன்சருஞ்ச் செய்து இங்க கொண்டார வேணுமன்டு எல்லாரும் முடிவு செய்து இருக்காங்களென்ன?”

“சரிங்க கெளரி, இது நம்ம சுதனுக்குத் தெரியுமா? யாழினி, அவன் ஃபுட் கோர்ட்லதான் இருக்கான். வரச் சொல்லுங்க!”

“இதோ கோல் எடுக்குறன் மணியண்ணை!”

யார்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவன் சுதன். மிகவும் பொறுப்பான மாணவன். தமிழ்ச் சமுதாயத்தின் மீது தீராப்பற்றுக் கொண்டவன். கோயம்பத்தூரில் சில காலம் வாழ்ந்தவன் என்ற முறையில், தமிழ்நாட்டின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவன்.

உணவக வளாகத்தில் இருக்கும் அவனது வருகைக்காக காத்திருக்கும் வேளையில், யாழினி, சாந்தன் மற்றுமுள்ள மாணவர்களோடு விபரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த இடம், இயல்பான சூழலில் இருந்து விலகிக் கொந்தளிப்புக்குள்ளாகிறது.

“இது என்ன விசர்க்கதை? நாங்கள் இதுக்கு ஒத்துக்கொள்ள மாட்டம்! சாந்தன், மோகனுக்குக் கோல் எடுங்கோவன். இந்த வாரமே, எதோ ஒரு கோயில்ல வெச்சித் தர்சினிக்கும் நம்ம சுதனுக்கும் கல்யாணம்! என்ன சொல்றீங்க மணி அண்ணை?”, யாழினியும் நந்தினியும் உணர்ச்சிப் பிழம்போடு கூச்சலுங் கோபமுமாய். தர்சினியின் தோழிகள் ஆயிற்றே?

”நந்தினி, கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? என்ன விசியம், ஏதுன்னு ஒன்டுந் தெரியாம??”

சுதன் யாருடனோ தன் அலைபேசியினூடாகப் பேசியபடி ராஸ் மண்டபத்துக்குள் நுழைவதைப் பார்த்ததுமே, சக நண்பர்கள் அவனை நோக்கி விரைகிறார்கள். அவனும் அவர்களும் ஏதோ கையை நீட்டிப் பேசியபடி டிம்ஹார்ட்டன்ஸ் குளம்பியகத்துனுள் வந்தமர்ந்ததும்,

“என்ன சுதன்? உங்களுக்கு விசியந்தெரியுமா?”

“தெரியும் மணி சார்!”

“தர்சினி கூடப் பேசினீங்களா?”

“அவதாஞ் சொன்னதே!”

“சரி, என்னதான் முடிவு?”

“மொகேந்திரன் அண்ணை, அவ தமையன்கிட்டக் கதைக்கிறனெண்டு சொல்லிச் சொன்னவர்! அதான், அவர் என்ன சொல்றாருண்டு பார்த்துட்டு மிச்சத்தைப் பேந்து பாப்பமிண்டு!”

“அவ்வளவுதான்! இதுக்குப் போயி ஏன் கொந்தளிக்கிறீங்க நீங்கள்?”

சிறிது நேரம் ஒரே இரைச்சல். கெளரி விடை பெற்றுச் செல்கிறாள். யாரும் தத்தம் வகுப்புகளுக்குச் செல்வதாக இல்லை. மதியத்திற்குப் பிறகு, இருந்தவர்கள் கலையவும், மாலை நேரத்து வகுப்புக்கான தமிழ் மாணவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.

டொரோண்டா மாநகர். அடடா, என்ன அழகு? வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகரம். சாலைகள் கிழக்கு மேற்குமாகவும், வடக்கு தெற்காகவும் வளைவுகளற்ற நேர்கோடுகளாய்ச் செல்லும். நேர்கோடுகளும் குறுக்குக் கோடுகளும் சந்திக்கும் இடம் எல்லாம் பேருந்து நிறுத்துமிடங்கள்.

சாலையின் இருமருங்கிலும் மேப்பில்இலை மரங்கள், பச்சைப் பசேலென இருக்கும் கோடை காலத்திலும் வசந்தகாலத்திலும்! இரயிலடிகள் ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் ஒன்றாய். உலகின் மிகச் சிறந்தநகரம் எனப் பல தடவை விருது வாங்கிய நகரமது.

நகரின் கீழ்க்கோடியில் இருக்கும் ப்ரிச்மவுண்ட் இரயிலடியில் ஏறி, கிழமேற்காகச் செல்லும் தொடர் வண்டியில்ச் சென்று, நகரின் மையப்பகுதியான துண்டாஸ்-யங் சந்திப்பில் இறங்கி, தென்வடலாகச் செல்லும் வண்டிக்கு மாறிப் பயணித்து, யார்க் பல்கலைக்கழகம் வந்தாயிற்று. நேற்றைய தினம் போலவே, இன்றும் டிம்ஹார்ட்டன்சு பகுதிக்குச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

”என்னங்க, இன்னைக்கு ஆர்ட்டிபிசியல் இன்ட்டெலிஜென்ஸ் வகுப்பு இருக்குதானே? என்ன, யாழினியக் காணோம்?”

“என்ன மணி சார் நீங்க? ஒன்னும் விசியந் தெரியாதபடிக் கதைக்குறீங்க?”

“இல்லங்க மோகன், எனக்கு எதுவுந்தெரியாது. எனக்கு நேத்து இராவு வேலை, முடிஞ்சு போகயில மணி ரெண்டு ஆயிட்டதென்ன?”

“அப்பிடிங்களா மணி சார். சாந்தன் ஆட்கள் எல்லாம் தர்சினியத் தூக்கிட்டாங்க என்ன? சுதனும் காணக் கிடைக்கல; எல்லாரும் மோன்ட்ரியால் போயிட்டாங்கன்னு சொல்வினம்!”

புரிந்து விட்டது. நட்புக்காக உயிரைத் துச்சமென நினைக்கும் கூட்டமல்லவா இது? யாழினியும் சாந்தனும் காதலர்கள். பல்கலைக்கழகமே அவர்களைப் பார்த்து, Made for each other! எனச் சிலாகிக்கும். அப்படி இருக்கையில், அடுத்தவர் காதலுக்கு ஒரு இடர் என்றால் வாளாது இருப்பரோ இவர்?

இவர்கள் எங்கு சென்று இருப்பார்கள் என எளிதில் தெரிந்து விட்டது. மோன்ட்ரியால் சென்று இருக்க மாட்டார்கள்.

ஏக்ராஜ் அண்ணாச்சி என்கிற தணிகையரசு, குட்டி இந்தியா எனப்படுகிற ஜெரார்டு வீதியில் வசிப்பவர்; சென்னையில் வழக்கறிஞராகப் பணி புரிந்தவர். டொரோன்ட்டோவில் தமிழர்களின் வழிகாட்டி; அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரை அழைத்துக் கொண்டு, தமிழ் மாணவர்கள் செறிவாக வாழ்கிற யாடவாப் பல்கலைக் கழகத்திற்குத்தான் சென்றிருக்க வேண்டும் என எளிதில் புரிந்தது.

யாடவாப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் மயூரனுக்கு, அவனது அலைபேசியில அழைக்க,

“மணி சார், என்ன நீங்க வரலை?”

“டே, என்னடா இப்படி செஞ்சிட்டீங்க? மொகேந்திரன்கிட்டப் பேசுறேன்னு சொன்னீங்களேடா?”

“எனக்கு எதும் தெரியாது அண்ணை!”

“சரி, யாழினி இருக்கே?”

“அண்ணை, சொல்லுங்கோ! எல்லாம் முடிஞ்சது அண்ணை!!”

“என்ன யாழினி இது?”

”சாரி மணியண்ணை! சொன்னா, நீங்க ஒத்துக்க மாண்டீங்கள், அதான்!!”

அதற்குப் பின், இரு வீட்டுக்கும் பரிச்சியமான கங்காதரன் என்பவர் இரு வீட்டாரோடும் பேசி, ஒரு இணக்கத்திற்கு வந்து, அந்த வாரக் கடைசியிலேயே திருமண வரவேற்பும் இனிதாய் நடந்தது.

காலச் சக்கரம் சுழலாமல் இருக்குமா, என்ன? குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் பிறந்தது. கூடவே குதூகலமும்! யாழினி, சாந்தன் உள்பட நிறைய மாணவர்கள், குதூகலத்தை நுகரும் பொருட்டு கோடைகால வகுப்புகளுக்குப் பதியவே இல்லை. வெகு சிலரே, அதுவும் மாலை வகுப்புகளுக்கு மட்டுமே வந்தனர்.

அந்த கோடைகாலத்தின் மாலை வேளையில், கலைந்திருந்த சந்தைப் பேட்டை போலக் காட்சியளித்தது பல்கலைக்கழக வளாகம். எங்கும் வெறிச்சோடி, ஆள் அரவமற்று இருந்தது டிம்ஹார்ட்டன்சுப் பகுதியும். பட்டப்படிப்பை விரைவாக முடிக்கும் பொருட்டு, சில மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர்; அவர்களும் ஆங்காங்கே தனித்தனியாய் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

கூரை எதுவுமின்றி, வெளியாய், சில மரங்களும் புல்படர்ந்த தரையுமாக இருந்தது வளாகத்தின் மையப்பகுதி. அந்த மரங்களின் பூவொன்றில், ஹம்மிங்பேர்டு எனப்படுகிற தேன் நுகரும் சிட்டு ஒன்று அழகாய்ப் பருகிக் கொண்டிருந்தது! கண்ணிமைக்கும் நேரத்தில் தொன்னூறு முறை சிறகடிக்கவல்லது அது.

அதன் சிறகடிப்பில் லயித்து இருந்த நேரத்தில், “மணி சார், உங்களை எங்கெல்லாந் தேடுறது? இந்தாங்க, சுதன் பேசுறான்!”

“சொல்லுங்க சுதன்! நல்லா இருக்கீங்களா?”

“இருக்கம் மணி சார்; நீங்க உடனே இந்த அஜின் கோர்ட் லைப்ரரியடிக்கு வர முடியுமே?”

“வர்றங்க சுதன்! ஏன், என்னாச்சு??”

“நீங்க நேர்ல வாங்கோ, கதைப்போம்!”

“சரி வாங்க போலாம்!”

“இல்லங்க மணி சார்! பஸ் எடுத்துப் போனா, கனநேரம் புடிக்குமென்ன? நம்ம, அர்ணாப், இந்தியப் பொடியன் இருக்கான் பாருங்க, அவன்ட கார்ல போலாம் வாங்கோ!”

யார்க் பல்கலைக் கழகத்தில் இருந்து, கிழக்குப் பகுதியில் இருக்கும் அஜின்கோர்ட் செல்ல எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும். என்ன நடந்திருக்கும்? சுதன் ஏதாவது வம்பு வழக்கில் சிக்கிக் கொண்டானா? ஏக்ராஜ் அண்ணாச்சிக்கு அழைத்தால் என்ன? ஏக்ராஜ் அண்ணாச்சியும் அழைத்த அழைப்புக்கு, தொடர்பில் வரவில்லை.


”அவர் ஒன்று தண்ணியில் மிதந்து கொண்டு இருப்பார். அல்லது யாருக்காவது உதவி செய்து கொண்டு இருப்பார்”, என நினைத்துவிட்டுப் பின் நிதானத்துக்கு வந்ததும், வெளியே பார்த்தால் வாகனமானது பெருஞ்சாலை-401ல் பாம்பைப் போல, உள்தெருவுக்கும் வெளித்தெருவுக்கும், வளைந்து நெளிந்து கிழக்கு நோக்கி சீறிப் பாய்ந்து கொண்டு இருந்தது.

வண்டி நூலக வாயிலுக்கே நேராகச் சென்றது. வண்டியைப் பார்த்ததும் யாழினிதான் ஓடோடி வந்தாள். கலைந்த தலை; விரிந்து, பிரிந்து, நாலாப்புறமும் சிதறிய கேசம்; சோகமும், அழுகையும் முகத்தில்; ஆனால், உக்கிரமான கோபக் கனல் கண்களில்!

“மணியண்ணை!”, ஓ வென்றுப் பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள்.

அஜின்கோர்ட் நூலகத்தின் வெளியில் இருக்கும், அமர்விடத்தில் பத்துப் பதினைந்து பேர் குழுமி இருந்தார்கள். சாந்தன் ந்டுநாயகமாய் இருந்தான். இவர்களுக்குள் காதல் முறிவா? அல்லது, ஒழுக்கக் கேடான காரியத்தைச் சாந்தன் செய்து விட்டானா? யாழினியின் கூச்சலில், ஒன்றுமே புரியவில்லை.

“என்ன ஆச்சு? என்னை எதுக்கு வரச் சொன்னீங்க?? என்ன விசயம்???”

இடைமறித்தாள் யாழினி, “இவனெல்லாம் ஒரு மனுசனா? என்னோட ஒன்னுவிட்ட தங்கை, பூமாதிரி இருப்பாளண்ணே! ஊர்ல ஆமிக்காரங்கிட்டக் கசங்கிப் போயி, இப்ப கொழும்பு வந்து நிக்குறா! இனி யாரு அவளைக் காப்பாத்துவாங்க?!”

“யாழினி, புரியுது, கொஞ்சம் மெதுவாப் பேசுங்க! சனங்க நம்மளையே பாக்குறாங்க!”

“பாக்கட்டும்ணே! அந்த விசரனுக்கு நீங்க சொல்லுங்க!! இவன விட்டா, நான் யார்கிட்டப் போயிக் கேப்பன்? இவம் போயி, அவளக் கல்யாணங்கட்டிக் கூட்டியாறலாமண்ணே! நீதான் வேணுமின்னு நிக்கிறான். இங்க இருக்குற எனக்கு எதுக்கண்ணே, கல்யாணம்?”, யாழினியின் அழுகையால், தர்சினி, சாமா, கணையாழி என உடனிருந்த அவளது தோழியர் அனைவரும் விசும்ப ஆரம்பித்தனர்.

பாதிக்கப்பட்டு, செய்வதறியாது இருக்கும் சகோதரியின்பால் பாசங்கொண்டு, கொண்ட காதலை அர்ப்பணித்து, ஆர்ப்பரித்துத் தெறிக்கும் அந்த சகோதரவெறி கொண்ட மனிதநேயத் திவலைகள், அங்கு குழுமியிருந்தோர் அனைவரது மேலும் விழுந்து சுட்டது; சாந்தனின் இறுகிய மனமும், அந்த சூட்டில் இளகி, உருக ஆரம்பித்தது.

”டே சுதன்! நான் இனி யார்க் வரப் போறது இல்ல; மூர்த்தியண்ணங்கிட்டச் சொல்லிக் கொழும்புக்கு டிக்கெட் போடணும்டா!!”

2/17/2010

புது மானிடன் நீ!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
நேற்றைய முடத்தை
இன்று நீக்கவல்ல
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
வாய்த்த மொழியை
கட்டிய பண்பாட்டை
மெருகேற்றப் பிறந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
தவிப்புக்கு நீராய்
இழப்புக்கு மாற்றாய்
மலர வந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
அறம் காக்கவும்
மனிதம் போற்றவும்
ஒளியூட்ட வந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!
முன்னைப் பழம்
காத்துச் செழித்து
புதுமை ஆக்கவந்த
புது மானிடன் நீ!!

ஒவ்வொரு நாளும்
புது மானிடன் நீ!

நேற்றைய முடத்தை
இன்று நீக்கவல்ல
புது மானிடன் நீ!!


என்னங்கடா ஆயத்தக்கூறுக(build-up) எல்லாம் வலுவா இருக்கேன்னுதான மண்டையச் சொறியுறீங்க? காரணம் இருக்குது இராசா, அதுல ஒரு காரணம் இருக்கு! ஒவ்வொரு நாளும், நாம எல்லாருமே, 'புதுசு கண்ணா புதுசு'தாங்க!

நேற்றைய தவறுகள் இன்றைய பாடம்; நேற்றைய வழுக்கள் இன்றைய மேம்பாடுகள்! இன்றைய ஆக்கங்கள், நாளைய சாதனைகள்!! ஆகவே, ஒவ்வொரு நாளும் புது மனிதனாய் மேன்மையத் தேடிப் போய்கிட்டே இருப்போம் வாங்க. சரிதானுங்களே நாஞ்சொல்றது??

ஆமாங்க! ஊர்ல இருந்து வரும்போது நிறைய அனுபவங்கள், சிந்தனைகள், நினைவுகள்னு பலதும் மனசுல ஏத்திட்டு வந்திருக்கேன். அதுகளைப் பத்தி எழுதினா, தினமும், இடுகை ஒன்னு போட்டுட்டே இருக்கலாம். ஆனாலும், புது மனுசனா நெனச்சுச் செய்ய வேண்டிய பணிகள், தினமாக ஆக சேர்ந்துட்டே இருக்குங்க. அதனால, இடுகைகள் போடுறதுல ஒரு வெட்டாப்பு! இஃகிஃகி!!

மணிவாசகம்ன்னு பேர வெச்சிகிட்டு, இன்னமும் திருவாசகம் முழுமையாப் படிக்காம இருக்கியேடா? உனக்கெல்லாம் தினம் ஒரு இடுகையா??” அப்படின்னு கெழுதகை நண்பர் ஆரூரன் விசுவநாதன் நினைச்சாரா, இல்லையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அவர் ஒலி, ஒளிக் கோப்புகளோட ஒரு புத்தகங் கொடுத்தாரு. அதுல அறுபது பக்கம் மட்டுமே படிச்சி முடிச்சிருக்கேன். மீதம் இருக்கிற முந்நூற்றைம்பது பக்கமும் படிச்சு முடிக்கணுமுங்க!

எதிர்வரும் மார்ச் பதினான்காம் திகதி, அமெரிக்கத் தலைநகர்ல தன்மானத் தமிழ் மறவர், செந்தமிழ்க் காவலர் இலக்குவனார் நூற்றாண்டு விழா நடக்க இருக்கு. அதனால, செந்தமிழ்க் காவலரைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க வேண்டி இருக்குங்க. கூடவே, புறநானூற்று ஆய்வுச் சொற்பொழிவும் நடக்க இருக்கு, அதே விழாவுல! அதுக்காகவும் ஆயத்தப்படுத்திக்க வேண்டி இருக்குங்க மக்கா! நீங்க, முடிஞ்சா மார்ச் பதினாலாந் தேதி அவசியம் விழாவுக்கு வாங்க. மேலதிக விபரங்களை, அடுத்த வாரத்துல இடுகையாப் போடலாம்னு இருக்கேன்.

கடைசியா, இது, உங்களுக்கு எல்லாந் தெரிஞ்ச ஒன்னுதான்! ஆமாங்க, துண்டு போட்டதுல, காரியங் கைகூடி வருதல்ல? மார்ச் ஐந்தாம் நாள், அண்ணன் சீமாச்சு கூட ஃப்ளோரிடா போறம்ல?? இஃகிஃகி!!

”மவனே, அலைபேசில சொல்லாமக் கொள்ளாமப் படம் புடிக்கிற வேலையெல்லாம் வெச்சிக்கப்படாது!” அப்படின்னு நிபந்தனை எல்லாம் போட்டிருக்காரு. அவர் என்னைக்கு சிநேகா படம் போடுறதை நிறுத்துறாரோ, அன்னைக்கு பாத்துகலாம்னு இருக்கேன் நானு. இங்க இருந்து ஃப்ளோரிடா போவமா? ஒவ்வொரு தடவை படம் புடிக்கும் போதும் இவர்கிட்ட சொல்லிட்டு இருக்கணுமாம்? அது முடியுமாங்க??

இது ச்சும்மா, கொசுறு:

”ஏன் பாட்டி, உனக்கு எம்மேல இவ்வளவு பாசம்?”
”நீதான்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!”
”போ பாட்டி! எனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுடவா?”

2/16/2010

அகமும் புறமும்!

மின்னாடல், மடலாடல்,
வலைப்பூ, மறுமொழிதலென
எட்ட இருந்தமட்டிலும்
அகமும் அகமும் அணுக்கமாய்!
பிறிதொரு நாளில்
புறமும் புறமும் சந்தித்த வேளையில்
நீயா நானா போட்டி மனதளவில்!!

அது அந்த அகத்தின்
புறமெனத் தெரியவந்ததும்
இந்த அகம் வெட்கத்தில்
நாணி, கூனிக் குறுகியது!
அகமும் அகமும் கொள்ளை கொண்டு
மனித நேயம் மட்டும் வெல்கவே!!

================================

அய்யோ பாவம்
எனக் கவலைப்பட்டு
வெகுண்டவன்
மெளனித்துப் போனான்;
துயரத்தில் இருப்பவன்
உள்ளூர்க்காரன் எனத்
தெரியவந்ததும்!

================================

தான் பார்த்த மட்டிலும்,
தன்னவனுக்குத் துயர் எனில்
துடிக்கும் இனம் இரண்டு!
யூதனும் குஜராத்தியும் முந்திக்கொள்ள
தமிழனுக்கு அந்த கட்டமைப்பு இல்லை என்றேன்!!
கரவோசையில் அதிர்ந்தது அரங்கம்!!!

(சிந்தனைக்காக மட்டுமே, ஆராய்ச்சிக்கன்று!!)

2/15/2010

பள்ளயம் 02/15/2010


வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

=======================

ஃபாண்டு (Fondue)

நம்ம மூத்த பதிவர் சீமாச்சு, “எங்கூட வாங்க ஐயா, ஒரு விருந்துக்குப் போய்ட்டு வரலாம். ச்சும்மா தயங்காதீங்க, அவங்களும் உங்க வாசகர்தான்!!” அப்படின்னாரு.

சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குறவனுக்கு, இதுக்கு மேலான அழைப்பு வேற என்னவா இருக்க முடியும்ங்க? உடனே, “அய்ய, நம்ம வாசகர்னு வேற சொல்லிட்டீங்க, அப்ப வந்திட வேண்டியதுதான்!”, அப்படின்னு ஒரு டுமீல்ப் பேச்சோட ஒத்துகிட்டோம் நாமளும்!

போன இடத்துல, என்னா வரவேற்பு? என்னா கவனிப்பு?? சீமாச்சு அண்ணே, நீங்க மயிலாடுதுறைல மட்டும் அல்ல, அகில உலகத்துலயும் பிரபலம்தாங்க! (அப்பாட, ஒருவழியா அடுத்த விருந்துக்கு இப்பவே துண்டைப் போட்டாச்சு!)

போயிருந்த இடத்துல நாம அப்படியே சுத்தியும் முத்தியும் பராக் பார்த்துட்டு இருந்தம்பாருங்க, திடீல்னு ஃபாண்டு, ஃபாண்டுன்னு பேசிகிட்டு இருந்தாங்க.

அக்கா...ங்”ன்னு சொல்ற நம்ம பாண்டுதான் நமக்கு தெரியும்! அதென்னங்க இது புதுசா ஃபாண்டு அப்படின்னு நமக்கு தெரியாததைப் போட்டு உடைச்சோம் (இல்லேன்னா மட்டும், நமக்குத் தெரியாதுங்ற விசயம் அவங்களுக்குத் தெரியாதாக்கும்?)

ஃபாண்டு அப்படின்னா, திராட்சை இரசம், அதாங்க, இந்த வைனோட Cheeseங்ற ஒருவிதமான கொழுப்புக் கட்டியைக் கலந்து, சூடான திரவமாக்கி, அதுல ரொட்டித் துண்டைத் தொட்டுச் சாப்புடுறதுங்க.

அதேபோல, நாம போன இடத்துல நமக்குக் கண்ல காண்பிச்சது, சாக்லேட் ஃபாண்டுங்க. அதாவது சாக்லெட் நிறைய எடுத்து எண்ணெயில கலந்து சூடாக்கி, அதை ஒரு மின்னூற்றுல ஊற்றாக்கி, ஊற்றுல பொங்கப் பொங்க, அதுல நறுக்கி வெச்ச பழங்களைத் தொட்டு சாப்புடுறதுங்க.

(இது வலையில சுட்டதுங்க!)


(இதுலதான் நாங்க தொட்டு, சுட்டுத் தின்னதுங்க)


மேல பார்த்த படங்க எல்லாம், நான் என்னோட அலைபேசில பதிஞ்சுகிட்டதுங்க. நல்ல சாப்பாடு மட்டுமல்லங்க; அண்ணன் சீமாச்சு பல சுவாரசியத் தகவல்களையும் கொடுத்தாரு. அதையெல்லாம் வெளியில சொல்லி, நான் சொந்த செலவுல சூன்யம் வெச்சுகுவனா என்ன? ஆம்மா, மறுபடியும் மறுபடியும், பல விருந்துகளுக்கு போக வேண்டி இருக்கல்ல?! இஃகிஃகி!!

=======================


இதைக் கொஞ்சம் பாருங்க மக்களே!

நன்றி: ராம் குமார்

=======================

நம்ம நண்பர் ஒருத்தர், அவர் தம்பிக்கு பெண் பார்க்குறாரு, பார்க்குறாரு... பார்த்துட்டே இருக்காருங்க. “என்னடா அப்புனு, உந்தம்பிக்கு இன்னும் ஒன்னும் அமைஞ்சபாடு இல்லையா?”ன்னு கேட்டேன்.

அவர் சொல்றாரு, “அடப் போடா, கல்யாணத் தரகர்கிட்டப் போனா, அங்க 170 பையனுகளோட குறிப்புக்கு, வெறும் 60 பொண்ணுகளோட குறிப்புகதான் இருக்குது. இதுக்கும், அவர்தான் இருக்குற தரகர்லயெல்லாம் வெச்சிப் பெரிய தரகரு!” அப்படின்னு சொல்றாருங்க.

பெண்களோட எண்ணிக்கை குறைவுங்றது தெரியும். அதுக்காக, இவ்வளவு குறைவாவாங்க இருக்குது நம்ம ஊர்ல?!

=======================

வந்தாள்
பெருக்கினாள்
கழுவினாள்
துடைத்தாள்
துவைத்தாள்
எல்லாமும் தூய்மையாச்சு!
அவன் மனம் மட்டும்?
குப்பையாச்சு!

2/14/2010

மகா!

"இன்னமும் என்ன செஞ்சிட்டு இருக்கே? எப்ப பார்த்தாலும் போன்ல யார் கூடவாவது பேசிப் புலம்புறதே உனக்கு வேலையாப் போச்சு?! நேரம் ஆகுது பாரு, பள்ளிக்கூடம் போன குழந்தை வர்ற நேரம் ஆகுறது தெரியலை??”, சதா சட்டாம்புள்ளையாய்க் கோலோச்சும் பாட்டி.

பத்து மணிக்கு ரேவதியுடன் பேச ஆரம்பித்து, மணி பனிரெண்டையும் கடந்து போயிருந்தது. ஒரு மணிக்குள் பசியோடு வரும் ஐந்து வயது மகள் பூஜாவுக்கு எதையாவது தயார் செய்து வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் பிள்ளை பசிக்கு அழுவாள்.

பாட்டியின் அதட்டலில், மருண்டு தெளிந்து, அலைபேசிப் பேச்சைத் துண்டித்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள் மகா எனும் மகாலட்சுமி.

“ச்சே, இன்னும் குளிக்கக் கூட இல்லை. என்ன வாழ்க்கை இது? இப்ப பாப்பாவுக்கு எதனா செய்யணும்?? அந்தக் கழுதை குடுத்ததைச் சாப்பிட மாட்டா. சரி, இருக்கவே இருக்கு, அவளுக்கு பிடிச்ச நூடுல்ஸ்!” வெந்நீருக்காக அடுப்பில் பாத்திரத்தை வைக்கவும், வாயிற்கதவு திறக்கும் ஓசை கேட்டது.

“மம்மீ, கிருபா என்ன செஞ்சா தெரியுமா? ஸ்கூல் கேட்டை விட்டு வெளில போயிட்டாம்மா, அவங்க அம்மா அவளை அடிச்சிட்டாங்க!” பள்ளிப் புராணத்துடன் கீழும் மேழும் குதித்தபடியே பூஜா.

“செல்லம், நீ அப்படியெல்லாம் வெளிய போக மாட்டடா தங்கம். இங்கவாடி செல்லமே” வாரி அணைக்க முற்பட்ட கொள்ளுப்பாட்டியையும் மீறி வீட்டிற்குள் நுழைந்தாள்.

”மம்மீ பசிக்குது மம்மீ! எனக்கு ஊட்டி விடுங்க!”

“வந்த உடனே ஆரம்பிச்சிட்டியாடி நீ? இங்க வா, எங்க ஹேண்ட் புக், எடு; என்ன எழுதிக் குடுத்து இருக்காங்கன்னு பாக்கலாம்!” என்று கேட்டபடியே பூஜாவை நெருங்கினாள் மகா.

”ஏண்டீ மகா, வந்த உடனே குழந்தை கூட அக்கப்போரா? இங்க தண்ணி கொதிக்குது, சித்த வந்து பாரு!” பாட்டி கொட்டித் தீர்த்தாள்.

சமையலறைக்கு சென்று திரும்பிய மகா, தானே குழந்தையின் பைக்குள் கையை விட்டு குறிப்பேட்டைத் துழாவி வெளியே எடுத்தாள். எடுத்தவள் முகத்தில் சிறு சலனம், “இது என்னடி புதுப் புத்தகமா இருக்கு? யாரு குடுத்தா??”

மலர்ந்த தாமரை, குவிந்த தாமரையானது போல அவளது முகம் உருமாறியது. மிரண்டு போய்ச் சொன்னாள், “எனக்குத் தெரியாது மம்மி! யாரோ தெரியாம என்னோட பேக்ல வெச்சிட்டாங்க போல இருக்கு!”.

“அதெப்படிறீ வெப்பாங்க? சொல்டீ யார்கிட்ட இருந்து திருடினே?” கண்ணிமைக்கும் நேரத்தில் பிஞ்சுக் கன்னம் பழுத்தது. வெறி கொண்டவளாய் அறைந்தாள் மகா.

“ஏண்டீ பசியோட வந்த குழந்தைய அடிக்கிறே?” குறுக்கிட்ட பாட்டியை, “நீ சும்மா கெடக்குறியா பாட்டி!” ஒரே அதட்டலில் பாட்டியின் சட்டாம்பிள்ளைத்தனம் மரவட்டைப் பூச்சியாய்ச் சுருண்டு போனது.

அம்மாவின் வழக்கமான வன்முறை தொடர்ந்தது. பின்பு, பாட்டியின் தயவால் ஏதோ ஊட்டப்பட, வலியின் துயரத்தில் தூங்கிப் போனாள் குழந்தை.

“ச்சே, யாரு புத்தகத்தை எடுத்துட்டு வந்திருக்கா இவ? கேட்டுத் தொலைச்சிருந்தா, நாமளே கண்ணன்ல வாங்கிக் குடுத்திருப்பம்ல?? பிப்சுல இடம் வாங்குறதுக்கு என்ன பாடுபட்டோம்? இனி வகுப்புல பேர் கெட்டுருமே?? சனியன் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிடுச்சே? நாளைக்கு நாமளே நேர்ல போயி மன்னிப்பு கேட்ற வேண்டியதுதான்!” தீர்மானத்துக்கு வந்தாள் மகா.

பொழுது விடிந்தது. வழக்கம் போல பூஜா பள்ளிக்குச் சென்றாள். மகா, வெட்டிப் பேச்சுக்கு விடுமுறை அளித்துவிட்டு, நேரங்காலமாய்க் குளிக்கப் போனாள். சன் தொலைக் காட்சியில், வேட்டைக்காரன் விளம்பரம் இடம் பெறாமல் இருப்பதைக் கூட நம்ப முடிந்தது பாட்டியால்; ஆனால் மகாவின் செயல்பாட்டை நம்ப முடியாமல், வியந்து போனாள்.

“அம்மாடி மகா, என்ன இன்னைக்கு உம்போக்கு வேற மாதிரி இருக்கே?” அடக்க முடியாது கேட்டே விட்டாள் பாட்டி.

“ஆமா பாட்டி, பூஜா ஸ்கூலுக்குப் போயி ஒரு எட்டு டீச்சர்கிட்ட சொல்ட்டு வந்திடுறேன்!”

“ஆமாடி, குழந்தை பாவம். போயி பாத்து சொல்லிட்டு வந்துடு!”

வண்டி பாப்பநாயக்கன் பாளையத்தில் இருந்து விடுபட்டு, இலட்சுமி மில் அருகே அவினாசி சாலைக்குள் நுழைந்து கிழக்குத் திசையில் வேகமெடுத்தது.


“தங்கவேலு அண்ணே, பாத்துப் போங்க! இவங்க செம்மொழி மாநாடு நடத்துறாங்கன்னு பேரு; எப்பப்பார்த்தாலும் அவர் வர்றாரு, இவர் வர்றாருன்னு ரோட்டை அடைச்சி வெச்சி, ஒரே தலைவலி!”

“சரிங் கண்ணூ!”

மீண்டும் குழந்தையின் நினைவு வயப்பட்டாள். ”ச்சே, எந்த மூஞ்சிய வெச்சிட்டுப் போயி சாரி சொல்றது? சனியன், யாரோட புக்கையையோ எடுத்துட்டு வந்திருக்கு!” கோபமும், கவலையும் சேர்ந்து அவளுக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

பூளைமேடு, ஹோப்காலேஜ், மருத்துவக் கல்லூரி, சி.ஐ.டி, பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி கல்லூரி, சித்ரா என அனைத்தையும் தாண்டிச் சென்று பள்ளி வளாகத்தை அடைந்தது வாகனம்.

“தங்கவேல் அண்ணா, இருங்க பத்து நிமுசத்துல வந்திடுறேன். அப்பறம் கோவை மெடிக்கல்சுல பெரியம்மா படுத்துட்டு இருக்காங்க, போயிப் பாத்துட்டு ஊட்டுக்குப் போலாம்!”

“சரீங் கண்ணூ, போயிட்டு வாங்!”

நிர்வாக அலுவலகக் கட்டிடத்தின் இடது புறம் திரும்பி, முதல் வகுப்புக்கு முந்தைய, பாலர் வகுப்பின் இரண்டாவது பிரிவுக்குச் சென்றாள்.


தலைகுனியப் போவதை எண்ணியபடியே அறை வாசலின் ஓரத்தில் போய் நின்று, கருமுகிலினின்று சிறிதாய் வெளிக்காட்டும் நிலாமகள் போலப் பாதி முகத்தை மட்டும் வகுப்பறைக்குள் காண்பித்தாள்.

ஆசிரியை சசிகலா இவளைப் பார்த்ததும், தான் எடுக்கும் பாடத்தைப் பாதியில் நிறுத்தியபடி வேகமாக வெளியே வந்தார். சசிகலா மிகவும் கடுமையானவர் என்பது பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர் அனைவரும் தெரிந்த விசயம்.

மகாவுக்கு மனம் ’திக்திக்’கென்றது, இயல்பாகவே முகம் சுருங்கிக் குற்ற உணர்வில் தவித்தாள். பெற்ற பிள்ளை செய்த தவறுக்கு, மன்னிப்புக்கோரி கூனிக் குறுகுவதன் அவலத்தை எதிர்கொள்ள ஆயத்தமானாள்.

“குட்மார்னிங் மேடம்!”

“குட்மார்னிங் மகா! இப்பத்தான் பூஜாவோட பேரன்ட்சுக்கு போன் பண்ணுங்கன்னு ப்யூன்கிட்ட சொல்லி அனுப்பினேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க!!”

“யெஸ் மேடம், வெரி சாரிங்க மேடம்!”

“என்ன சாரி? இப்படியா, பெத்த குழந்தையப் போட்டு அடிக்கிறது? பாருங்க, முகத்துல அடிச்ச சாயல் அப்படியே இருக்குது! நீங்க வெல் எஜுகேடட் வேற??”

“இல்ல மேடம், வந்து யாரோவோட புக்கை எடுத்துட்டு....”

“ச்சும்மா, நிறுத்துங்க! என்ன யாரோ புத்தகம்? நேற்றைக்கு அவங்க அப்பா இங்க வந்திருந்தாரு...அவர் குடுத்தது போல இருக்கு! சீ மகா, உங்க பேமிலி ப்ராப்ளத்தை எல்லாம் குழந்தை மேல திணிக்காதீங்க, சரியா?”, மகாவின் மேல் இடியை இறக்கிவிட்டு வெடுக்கென உள்ளே சென்று விட்டார் அந்த ஆசிரியை.

அப்போதுதான் புரிந்தது மகாவிற்கு! தான் யாரிடமிருந்து விவாகரத்துக் கேட்டு இருக்கிறோமோ, அந்த மனிதர் வந்து தன் பிள்ளையப் பார்த்துச் சென்றதும், குழந்தை அவர் வாங்கிக் கொடுத்ததைப் பற்றி பயத்தில் மறைத்து விட்டதும்!

குற்ற உணர்வில், எதிர்பட்ட கட்டிடத்தூணில் முட்டி மோதி அழவேண்டும் போல இருந்தது. நேராகக் காரை நோக்கி விரைந்தாள்.

“அண்ணா, நேரா ஊட்டுக்கு வுடுங்க!”

தங்கவேல் அண்ணனுக்கு இது ஒன்றும் புதிதானது அல்ல; குடும்ப விபரங்கள் அனைத்தும் அறிந்தவர். எதோ சின்னப்பாப்பாத்திக்கு மனசு சரியில்ல போல இருக்கு என்று நினைத்தவர் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.

வீட்டிற்குச் சென்றவள் யாரிடமும் பேசாமல் கொள்ளாமல், தனது அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு, படுக்கையில் படுத்தபடி விசும்பலானாள்.

பிரிந்து வாழும் கடந்த இரண்டாண்டுகளும், பூதாகரமாய் அவளது நினைவில் வந்து போயின. தாமாகப் பிரச்சினையைக் கிளப்பி, விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் எனும் நிலைப்பாடு எடுத்ததை உணர ஆரம்பித்தாள். என்றாலும், நிலைமை எல்லாம் கைமீறிப் போய் எந்தக் கணமும், கேட்டது கிடைத்துவிடும் என்கிற நிலை. சோகமும் துக்கமும் அவளை உலுக்கியது.

அழுது அழுது கண்ணீர் வற்றி, அந்த வறட்சியினூடாக நினைவிழந்து உறக்கத்தின் ஆளுகைக்கு ஆட்பட்டாள். பஞ்சணை நனைந்து, அதன் ஈரத்தில் அவளது பிடிவாதமும் கரைந்து கொண்டிருந்தது.

திடீரெனப் 'படபட'வெனக் கதவு தட்டும் ஓசை!

“மம்மீ, மம்மீ, டோர் தெறங்க மம்மீ! ஸ்கூல்ல இருந்து டாடியும் என்கூட வந்திருக்காங்க! மம்மீ, மம்மீ....”

சொல்லவொன்னா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தாள் பூஜா! கூடவே, வீதியில் பாப்பநாயக்கன் பாளையத்து இலட்சுமிமில்ப் பெருமாள் கோவிலின் குட்டி யான‍ை உலா வரும் மணியோசை சப்தமும்!!

2/13/2010

கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன்!


என்னவளே,

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ என் வாழ்வில் அமையப் பெற்ற ஒன்றும், நிதர்சனமும் என உணரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, எனக்கு இனிமை கூட்டும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என் அறியாமையையும் முட்டாள்ப் போக்கையும் அலட்சியம் செய்யும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் வீட்டைப் பற்றிய கவலைகளைக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என் இளவல்களை உன் கருவிழிகளாய்ப் பார்க்கிறாய் என உணரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உன்முகத்தில் என்னைப் பற்றிய பெருமிதம் மிளிரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் அறத்தைப் பற்றிக் கற்கும் போது அருகில் வரும் நீ, அறமாய்த் தோற்றம் அளிக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உன் வெகுளித்தனத்தின் விளைவாய் ஏற்பட்ட உன்னழுகை என்னுள் சிரிப்பை உண்டாக்கி, அது உன்னுள் மேலதிக அழுகையை உண்டாக்கி, அதுகண்டு நான் மேலும் வலுவாகச் சிரிக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உள்ளபடியே எனது காதல் அனுபவங்களைச் சொல்ல, நீ அதைக் காதல் பார்வையோடு காண்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ எனது தவறுகளைச் சரி செய்து அவற்றைக் கடந்து செல்லும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, சண்டை மூளும் போதெல்லாம் கோபமாய்ச் சென்ற நீ, மீண்டும் வாஞ்சையோடு திரும்பி வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் உயிரைப் பாதுகாப்பாய் உன்னுள் வைத்திருக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மற்ற பெண்களைப் பற்றிய விரும்பத்தகாத செய்திகள் காதில் விழும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மிகச்சரியாய் நீ என்னைப் புரிந்து கொள்ளும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் ஏகடியம் செய்ய வாய்ப்பளிக்கும் பொருட்டு சமைத்த உணவில் உப்பைப் போட மறக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ ஏமாந்து போய் என்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதை நினைக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என்னை நீ உத்தமனாய் எண்ணிக் கொண்டு இருப்பதை எண்ணும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, குறிப்பறிந்து உகந்த நேரத்தில் ”இந்தாங்க மாமாய் காப்பி!” என்று வளைய வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மற்றவர் இடத்துப் பேசும்போதெல்லாம் என்னை நீ உயர்வாகப் பேசுவதை அறிய வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் இன்னும் உன்னைக் காதலிக்கிறேனோ என எண்ணிப்பார்க்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நின்னை நினைந்து நினைந்து என்னுள் நினைவுகளை விரித்து, அதை எழுத்தாக மாற்றும் இந்த மணித்துளியைப் போன்ற நேரத்தில் மட்டும்!


மேலே சொன்ன ‘கொஞ்சங்களை’ எல்லாம் ஒன்று கூட்டிப் பார்த்து, ”ஒவ்வொரு மணித்துளியும் நான் உன்னைக் காதலிக்கிறேன்; நாளும் நாளும் மேலதிகமாய்க் காதலிக்கிறேன்” என உள்ளதை உணரும் இப்பொழுதிலும் காதலிக்கிறேன் உன்னை!

பணிவுடன்,
பழமைபேசி.


காதலே குருதியாய் ஓடும் நம்முள், அது மேலும் மேலும் மகத்தானதாய் உருவெடுத்துக் குதூகலம் பொங்கட்டும் என, என் காதலியுடன் இணைந்து, இந்தக் காதலர் தினநாளில் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்!

2/12/2010

சமிக்கைகள்!

கதிரவன் கிழக்கில் ஒளிர
முன்கூட்டிய தகவலாக
வெளுப்பை அனுப்பியிருந்த
நேரமது!

நாலாபுறங்களில் இருந்தும்
ஒன்றாய் ஒருநேரத்தே
மகுடியோசைக்கு ஓடிவரும்
அரவங்கள் போலப்
பல ஒலிச்சமிக்கைகள்!!

மின்னாடலுக்காக ஒன்று!
அலைபேசியில் அழைப்புக்காக ஒன்று!
மின்னஞ்சலில் புதுவரவுக்காக ஒன்று!
அலைபேசியில் குறுந்தகவலுக்காக ஒன்று!
சிட்டாடல் தகவலுக்காக ஒன்று!
வலைப்பூவில் பின்னூட்டத்திற்காக ஒன்று!
குழும மடலாடலில் தகவலாக ஒன்று!

மனவானில் பறந்தன
வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து!

வந்த சமிக்கைகள் நல்லவிதமாய்
ஒன்றே கூறின! நன்றே கூறின!!
அனுதினமும் உம்வலைப்பூவுக்கு
வருகிறோமடா எனப்பாங்காய்!
தம் எழுத்துக்கான அங்கீகாரமென

செருக்கு சுர்ர்...ரெனத்
தலைக்குள் ஏறியது!
மனவானில் பறந்தன
வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து!!


பெருவேகம் எடுத்துப் பறந்த

வண்ணச்சிட்டுகள்
நிராதரவாய் நிலைகுலைந்து
சிறகொடிந்து போயின;
சமிக்கைகள் சொல்லியதின்
தொடர்ச்சியைக் கேட்டு!!

பெருவேகம் எடுத்துப் பறந்த
வண்ணச்சிட்டுகள்
நிராதரவாய் நிலைகுலைந்து
சிறகொடிந்து போயின;
சமிக்கைகள் சொல்லியதின்
தொடர்ச்சியைக் கேட்டு!!

இடுகையப் படிக்கிறமோ
இல்லையோ,
விழுற சுவையான
பின்னூட்டங்களைப் பார்க்கத்
தவறமாட்டோம்; அதுக்குதான்
வந்து போய்ட்டு இருக்கோம்
அனுதினமும்!!

2/11/2010

பதின்மத்தின் ஒரு சேதி!

நான் மன்னிப்பு கேட்கலை, வருத்தம்தான் தெரிவிச்சேன்; மன்னிப்பு கேட்காவிட்டாப் பரவாயில்லை, வருந்துகிறேன்னு சொல்லிடு போதும்! இப்படியெல்லாம் சொல்லி, ஒரு போலித்தனமான உயர்வை வெளிப்படுத்துறதை நீங்க பார்த்து இருக்கலாம். பார்க்கலைன்னாலும், சமூகத்துல நிச்சய்மா பார்ப்பீங்க.

அதாவது, மன்னிப்பு கேட்கிற இடத்துல வருத்தம் தெரிவிச்சுட்டா, தெரிவிக்கிறவரோட கெளரவத்துக்குக் குறைச்சல் இல்லையாம். ஏன்? ஏன் இந்த வெட்டி வேலை??

மன்னிப்பு அப்படீங்கற சொல், மன்னுதலோட தொடர்ச்சி. மன்னுதலை நிலைநாட்டுறவன் மன்னன். அப்ப, இந்த மன்னுதல்னா என்ன?? கோபம், தாபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், உவகை இப்படியான எதுவாக இருந்தாலும், அதிலிருந்து விடுபட்டு ஒரு தனிப்பட்ட நிலையில மனதை நிறுத்துறதுதாங்க இந்த மன்னுதல்.

ஆக, அந்தவிதமான தனிப்பட்ட நிலையில் மனதைக் கொண்டு மக்களை நீதி தவறாது ஆள்பவன் மன்னன். ஒரு நல்லதோ, கெட்டதோ அது எதுவாயிருந்தாலும் அதன் தாக்கத்தில் வீழாது பொறுத்துக் கொள்வது மன்னித்தல், அதனோட பெயர்ச்சொல் மன்னிப்பு.

வருந்துதல் அப்படின்னா? செய்த தவறை, அல்லது நடந்துவிட்ட கெடுதியை அல்லது விரும்பத்தகாத ஒன்னை நினைத்து தன் மனதைத் தானே வருத்திக் கொள்வது. இச்செயலோட பெயர்ச் சொல் வருத்தம். தான் அல்லாது, புறநிலையால் மனம் துன்புறுவது துயரம். துயரத்தைக் கடைபிடிப்பது துக்கம்.

ஆக, மனதை நிலைநிறுத்திக்கோ அப்படின்னு அடுத்தவனைச் சொல்றதுலதான் அவனுக்கு பலன் இருக்கு. ஏன்னா, அவன் தன்னோட தவறை இன்னும் ஒத்துக்கலை.


அதுவே, வருந்துகிறேன் அப்படின்னு சொல்லும்போது, தனது தவறை ஒப்புக் கொண்டு, அதற்கு வருந்துகிறேன் அப்படிங்ற பொருள் உள்தாங்கி வரும். இது தெரியாம, மக்கள் மன்னிப்பு கேட்கறதுக்கு ஒரு தயக்கம்; மாறா, வருத்தம் தெரிவிச்சுக்குறதுன்னு ஒரு வெட்டி வியாக்கியானம்.

சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தா, தாராளமா மன்னிச்சுக்குங்க அப்படின்னு சொல்லுங்க; அதுல வீரியத்தைக் கூட்டிச் சொல்லணுமானா, ரொம்ப வருத்தமா இருக்கு, வருந்துறேன்னும் சொல்லுங்க. வீணா, அர்த்தமில்லாத கண்டு பாவனை நமக்கு எதுக்கு? எதுக்கு??

இப்ப எதுக்கு இந்த பிரசங்கம் அப்படின்னுதானே யோசிக்கிறீங்க?! அதுல ஒரு உள்குத்து இருக்குது இராசா, ஒரு உள்குத்து இருக்குது!


ஆமாங்க, கடந்த காலத்துல தம்பி அக்பர், நண்பர் வேத்தியன், இன்னும் ஒரு சிலர் வேற வேற தலைப்புகள் கொண்ட வலைத்தொடர் இடுகையில எழுத அழைப்பு விடுத்து இருந்தாங்க. நான், அதுகள்ல பங்கெடுத்துக்க முடியலை. அதுக்கு நான் இப்ப மன்னிப்பும் கேட்டுக்குறேன்... பங்கெடுத்துக்க முடியலையேன்னு வருத்தமும் தெரிவிச்சுக்கிறேன். இஃகிஃகி!!

இனி நாம இன்றைய இடுகைக்கு வருவோம். இதுல கலந்துக்க அழைப்பு விடுத்த நண்பர் ஆதிக்கு நன்றி! தொடர் இடுகையின் சாராம்சம் என்ன? பதின்ம காலத்து அனுபவங்கள்ல ஒன்னு ரெண்டைப் பகிர்ந்துக்கணும், அதான்!

நான் பள்ளியில படிக்கிற காலத்துல, எங்க அம்மாவோட அம்மாவோட அப்பா, அதாவது எங்க அமுச்சியோட அப்பா ஊர்லதாங்க வளர்ந்தேன். சலவநாயக்கன் பட்டிப்புதூர்ல இருந்து வாகத்தொழுவு வேலூருக்கு தினமும் நாலு மைல் தூரம் நடந்து போகணும் பள்ளிக்கூடத்துக்கு.

போற வழி ஒரு இட்டேரி, அதாவது மண் சாலை; ரெண்டு பக்கமும் கத்தாழை, சூரி மரங்க, கள்ளிச் செடி, நொச்சி மரம், தொட்டாச்சிணுங்கி, பூவரச மரம், ஆவாரம்பூச் செடிக, கோவைக் கொடிக, துத்திச் செடிகன்னு பலதும் இருக்கும்.


கத்தாழைகள்ல அம்மணிகளோட நாமுளும் இருப்போம். அய்ய... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! பொன்னானுக பேருமு அம்மணிக பேருமு ஒட்டுக்கா ஒட்டுக்காப் போட்டு கீறி வெச்சிருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.

அப்புறம் வெள்ளிக்கிழமையானா, பரீட்சை லீவு விட்டா, தோட்டங்காட்டுக்கு போயிடணும்; வேறெதுக்கு? மாடு மேய்க்கத்தான்! அப்படித்தாங்க, ஒரு நாள் நான் ஊருக்கு மேவறம் இருந்த ஒரு தோட்டத்துல மாடு மேய்ச்சுட்டு இருந்தன். அவங்க அப்பதான் சோளத்தட்டு எல்லாம் வெட்டி, அறுவடை செய்து இருந்தாங்க. நான் அந்தக் காட்டுல மாடு கன்னுகளை மேய்க்க விட்டுட்டு, அவங்க சாளை முன்னாடி இருந்த களத்துல இருந்தேன்.

அந்தத் தாத்தா எதோ புத்தகம் படிச்சுட்டு இருந்தாரு. பள்ளிக்கூட லீவுல டவுன்ல இருந்து வந்திருந்த அவங்க பேத்தியும் அந்த சாளைத் தாவாரத்துல ஊஞ்சல் ஆடிட்டு இருந்துச்சு. அப்ப எனக்கு வயசு 14. எதோ பேசிட்டு இருந்தோம், திடீல்னு அந்த பொண்ணு ஒரு கேள்வி கேட்டாப் பாருங்க, எனக்கு கைகால் எல்லாம் நடுக்கம் எடுத்துகிச்சு.

ஆமாங்க! காதல்னா என்ன? நீங்களும் நானும் காதலிக்கலாமா அப்படின்னுச்சு அது. எனக்கா, என்ன சொல்றதுன்னே தெரியலை. இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி. மாடு பக்கத்து தோட்டத்துல புகுந்துடுச்சுன்னு சொல்லிட்டு, எடுத்தேன் ஓட்டம்! அவ்வளவுதான், அந்தப் பக்கமே தலைவெச்சுப் படுக்கலையே?!

பத்துநாள்க் கழிச்சு, அவங்க அம்மா அப்பாவோட எங்க வீட்டுக்கு வந்திருந்துச்சு. என்னைப் பார்த்துப் பார்த்து மெலிசா சிரிக்குது. எனக்கா, உள்ளூர ஒரே பயம். கிராமத்தானுக்கு அதை எதிர்கொள்ற பக்குவம் அப்ப இருந்திருக்கலை. வேறென்ன சொல்ல?!


நாணம் என்பது பொதுவுடமை!

(குடுகுடுப்பை மற்றும் தளபதி நசரேயன் தொடரவும்)

2/10/2010

அலட்சியம்!

காணொளியில் நாடக நாயகனது
கள்ளக் காதல் கலகலப்பாய்!
அம்மா!
அடச் சே, சும்மா இரு!

காதலியிடம் செல்லமாய்
ஒரு இடிகூட வாங்கியாகவில்லை
நாயகன் இன்னும்!
அம்மா!!
சும்மா கெட, உயிரை வாங்காத!!

காதலி நாடகநாயகனை
நெருங்கி உறவாட எத்தனிக்க,
விளம்பரநந்தி குறுக்கீடு!
உள்ளே படுக்கை நனைந்து
பள்ளியறையே நாறியது,
அலட்சியம்!!!

============================

சனிக்கிழமை இராச்சாப்பாடு
அவசரகதியில் ஏனோதானோவென!
ரெண்டாவது ஆட்டத்துக்கு
நேரமாச்சுறா...வாங்கடா போலாம்!!

ஈருளைச் சில்லுவண்டிகள்
முக்கோணச் சட்டத்திலும்
பின்னிருக்கையிலுமாய்
ஏற்றியபடி மூவருலாப்
போனது கொட்டகை நோக்கி!

டமால்!
டேய், யாரு வண்டியோ
பொங்க வெச்சுடுச்சுடா!!
சுற்றும் முற்றும் மற்றவர்
பயணித்த சைக்கிள்களைப்
பார்த்தபடி இவன்!!

உன்ற வண்டிதாண்டா
வெண்ணெய்,
பாரு கொஞ்சம் கீழ!!!

2/09/2010

மறுமொழிகள் வந்திருக்கா?!

பகலெல்லாம்
கடையடியில் வியாபாரம்!
இராவெல்லாம்
பொட்டியடியில் காலவிரயம்!!
என்ன ஏது என்று
கேட்டிருப்பேனா நானும்?
அந்நாளில் பார்க்காமல்
விட்டபாவி நானே!

கால்கடுக்க நடை நடந்து
கடைத்தெரு வந்திருக்கேன்
சின்னப்பயலே முருகேசா!
பார்த்துச் சொல்லடா
போயிச் சேந்த மவராசனவர்
இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?!
மவராசனவர்
இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?!

அமெரிக்க ஊடகவியலாளர், அமரர் Tim Russert அவர்களின் நினைவாக...

2/08/2010

வரவேற்பறைப் பதுமை ஜெனீபர்!

"அய்யா, நான் அப்படியே உங்களை விட்டுட்டு, புவனிய குமான் வகுப்புக்குக் கூட்டிட்டுப் போறனுங்!” என்று பரிவை வளைய விட்டார் சரவணன்.

“இல்லீங்க அய்யா, நான் வண்டிக்கு எல்லாம் சொல்லியாச்சு; இன்னும் ரெண்டு நிமிசத்துல வந்திரும்!” ஆயத்தத்தின் கதியில், வாரா வாரம் வெளியூருக்குச் சென்று கணினிப் பொட்டி அடிக்கும் மணியன்.

வாடகை வண்டியும் வந்துவிட, வழமையான விடை பெறுதலுடன் விமான நிலையம் நோக்கிப் பயணித்தான். சார்லட் பெருநகரத்தில் ஏழு ஆண்டு வாசம் இவனுக்கு. தமிழ் நண்பர்களின் அரவணைப்பும், நகரத்து மாந்தர்தம் விழுமியங்களும் இவனை மற்ற ஊர்களுக்குப் பெயர்ந்துவிடாது கட்டிப் போட்டது.

1755ம் ஆண்டு, பென்சில்வேனியாவில் இருந்து வேட்டைக்காக தென்புலம் வந்த தாமஸ் ஸ்ப்ராட் என்பார், அவர்தம் குடும்பத்தோடு ஒரு குடிலை ஒரு கானகத்தில் இட, அதன்பின் அதுவே ஒரு பெருநகரமாக ஆர்ப்பரித்து சார்லட் எனும் பெயரில் பெரிய நிதிநிறுவனங்களின் தலைமை இடமாகமும் நிமிர்ந்து நிற்கிறது இப்பெரு நகரம்.

அந்த சார்லட் விமான நிலையத்தில் இருந்துதான், நார்போஃக் எனும் சிறப்பு வாய்ந்த நல்லூருக்குச் சென்று பணிபுரிந்து வருகிறான் இந்த மணியன் என்பவன்.

நார்போஃக் எனும் சிற்றூரானது, விர்ஜீனியா கடற்கரையை ஒட்டிய ஊர். வளைகுடாப் பகுதியின் ஒரு அங்கம். பல சுரங்கப் பாதைகள், நீரடி வழித்தடங்கள், எழில்மிகு பூஞ்சோலைகள், கப்பற்படைத் தளங்கள் என பல சிறப்புகள் கொண்டதுதான் இந்த சிற்றூர்.

நார்போஃக் கப்பற்படைத் தளமானது இரண்டு உலகப் போர்களிலும் பெரும் பங்கு வகித்துள்ளது. அதுமட்டுமின்றி, துறைமுக வணிகத்தில் வெகுவேகமாகவும் வளர்ந்து வரும் ஒரு ஊர். போஸ்டன், நியூயார்க் மற்றும் ச்சால்ஸ்டன் ஆகிய துறைமுகங்களில் செலவீனம் அதிகம் ஆகிறது எனக் கருதுவோர் இங்கு வரத் துவங்கி உள்ளனர்.

அத்தகைய நார்போஃக்கில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு, நுகர்வோருடைய அழைப்புகளை நெறிப்படுத்திச் சேவை புரிவதற்கான மென்பொருள்க் கட்டமைப்பின் முதன்மைப் பொறியாளனாகப் பணிபுரியவே, வாரா வாரம் சென்று வருகிறான் மணியன்.

கடந்த நாற்பது வாரங்களாக, இவன் செல்வதும், அங்கு குறிப்பிட்ட தங்குவிடுதியில் தங்குவதும், நான்கு நாட்களுக்குப் பின்னர் திரும்ப வருவதும், பால்யகாலத்துப் பள்ளியில் காலமும் நேரமும் ஒலியும் மாறாது திரும்பத் திரும்ப நிகழ்ந்த ‘சர்வ லோகாதிப நமஸ்காரம்’ பிரார்த்தனை போலவே நிகழ்ந்து வருகிறது.

மேரியாட் விடுதிக்கும் இவனது முகம் வழமையானது. அங்கே, concierge lounge எனப்படுகிற பிரத்தியேகக் கவனிப்பு அறையில் மணியனுக்கும் ஒரு தனியிடம். வாரா வாரம் வந்திருந்து, விடுதியின் நடப்புக்கு பங்களிப்பவன் அல்லவா இவன்?

அந்த பிரத்தியேக கவனிப்பறையில், பகுதி நேரப் பணியாளராக வேலை பார்ப்பவள், பெக்கி டூடா. திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் மாலை ஐந்து மணி தொடக்கம் இரவு பத்து மணிவரை வேலை செய்வாள்.

பொதுவாக, தான் செய்யும் வேலையில் மட்டுமே கவனமாயிருப்பாள். தான் வேலை பார்க்கும் பிரத்தியேக அறையில், மாற்றாள் எவருமில்லாது, மணியனும் அவனது சக அலுவலர்கள் மட்டுமே இருக்கும்போது மட்டும் வந்து இவர்களோடு பேசுவாள்.

நடுத்தர வயது, அருகில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள். இளம் வயதிலேயே திருமணம் ஆகி, அதுவும் இரு திருமணங்கள், ஆக மொத்தம் நான்கு குழந்தைகள் அவளுக்கு. இரண்டாவது திருமணமும் முறிந்துவிட்ட நிலையில், காலையில் செய்தித்தாள் போடும் வேலை, பின் படிப்பு, மாலையில் விடுதி வேலையென தனது தாயின் துணையோடு வாழ்க்கையை எதிர்கொள்பவள்.

அவ்வப்போது, குழந்தைகள் சாப்பிட்டார்களா, இல்லையா? மூத்தவள், வீட்டுப்பாடம் சரியாகச் செய்தாளா, இல்லையா என்றெல்லாம் கவலைப்படுவாள்; தன் கவலையை மணியனோடோ அல்லது அவனுடைய சக அலுவலர்களோடோ சொல்லிப் பகிர்ந்து கொள்வாள்.

காலச்சக்கரத்தின் சுழலில் நடந்த ஒரு மாற்றம், பூமிமாதாவின் விளையாடலில் ஒன்றுதான், முன்தினம் இடம் பெற்ற பனிப்புயலும் அமெரிக்க நாட்டின் விளையாட்டுகளில் ஒன்றான கண்கவர் super bowlம். விளைவு?! ஒரு நாள் தாமதமாய் நார்போஃக் வந்தான் மணியன்.

கதவைத் திறந்து உள்ளே சென்றவன், திடுக்கிட்டான். பிரத்தியேகக் கவனிப்பு அறையில் கவனிக்க எவரும் இல்லை. அவரவர்க்கு வேண்டியதை அவரவரே எடுத்துப் புசித்தவாறும், மாந்தியவாறும். இடையில், வரவேற்பறைப் பணிப்பெண் ஜெனீபர் புன்னகையும் அவளுமாய் உள்ளே!

“என்ன ஜெனீபர், யாரையுமே காணோம்?”

”யெஸ் மணி! இங்க இப்ப ஆட்குறைப்புச் செய்து இருக்காங்க!! இனிமே லவுஞ்சுல அட்டெண்டர் யாரும் இருக்க மாட்டாங்க!!” என்று அமெரிக்காவின் இன்றைய ஆட்குறைப்புக் கோரத்தை மெலிதாகப் படரவிட்டாள்.

“அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?”

“You Indians, so adorable; fall in love too quickly"

"ஆமா, அடுத்தவங்க மேல பரிவு காட்டுறது எல்லாம் உறுத்துதா உங்களுக்கு? அப்படின்னா, காந்தியும், புத்தனும், வள்ளலாரும், அன்னை தெரசாவும் வாழ்ந்த ஊர்க்காரனுக காதல்ப் பித்தனுகதான்!”, முணுமுணுத்துக் கொண்டே கதவைச் சாத்திவிட்டு தனது வழமையான அறை எண் 723ஐ நோக்கியபடி மணியன்!

2/07/2010

யாதெனினும்!

காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்? விளையாட்டின் மீது காதல்... தான் வளர்க்கும் பூனையின் மீது காதல்... நாட்டின் மீது காதல்.... எழுதும் எழுத்தின் மீது காதல்.... வீட்டுச் சாளரத்தின் வாயிலாகத் தெரியும் மலைமுகட்டின் மீது காதல்... தாழ்வாரத்தின் ஓரத்தில் கூடு கட்டிக் கொண்டு இருக்கும் அந்த சிட்டுக் குருவியின் மீது காதல்... கட்டுத்தறியில் மண் தின்றுவிடாமல் இருக்க வாய்மூடி போட்டிருக்கும் அந்த இளங்கன்றின் மீது காதல்....

ஊரோரம் இருக்கும் தனிவீட்டில் குடியிருக்கும் கோவில் பூசாரி மகள் இரத்தினத்தின் மீது காதல்... தான் படித்த பள்ளியின் மீது காதல்.... பெற்ற பிள்ளையின் மீது காதல்... முதன்முதலாய் அப்பன் வாங்கித் தந்து இன்னமும் ஒன்றோடு ஒன்றாய், ஆயிரத்து சொச்சப் பொருட்களின் ஊடாகக் கிடக்கும் அந்த அறுந்து போன பழுப்பு நாடாவில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற கைக்கடிகாரத்தின் மீது காதல்....


மாரியம்மன் கோவில் வளாகக் கிணற்றின் மீது காதல்... ஊரின் எல்லையில் இருக்கும் அய்யனார் மீது காதல்... ஏரியில் உட்கார்ந்து கணம் உருளுவது தெரியாது மெய் மறக்கும் கண்மாயின் மீது காதல்... தோட்டத்துக் கிணற்றில் இருக்கும் ஒரே ஒரு ஆமையின் மீது காதல்.... தள்ளாத வயதிலும் பச்சிலை வைத்துப் பாங்காய் மருத்துவம் பார்க்கும் கனகவல்லி ஆத்தாவின் மீது காதல்...

எங்கும் காதல்... எதிலும் காதல்.... ஒவ்வொருவனுக்குள்ளும் எதிலோ, எதன் மீதோ, யாரொருவர் மீதோ இன்னும் தணியாத காதல்....

அப்படியாகத்தான் இந்த மேற்கத்தியவனுக்கும் அவள் மீது காதல்... அந்தக் காதல் இனியும் வேண்டும்... இன்னமும் அதிகமாக வேண்டும்... அவளைப் பார்த்து உள்ளார்ந்து ஊக்கத்துடன் சொல்கிறான்.... You have two options my dear....

one you grow more, or
you grow one more!

ஒன்று நீ வளர்க மேலாக, அல்லது

2/06/2010

விடுதலை யாதெனில்...

சதா அதையே
நினைந்து நினைந்து
மனதுள்ப் புழுங்கியவனாய்
சூறாவளி தாக்கியவனாய்
சூழ்ச்சிச்சுழலுள் அகப்பட்டவனாய்
உணர்ந்து உணர்ந்து அவன்!

கண்ணூ வுடு
அந்த நெனப்ப‌ எல்லாத்தையும்
தூக்கிப் போட்டுட்டு
பாடு பழமையப்
பாரு போ என்றது
அருகிருந்த நாட்டுப்புறம்!!

அதையே இலக்கியவான்
இலக்கியப்படுத்துகிறான்
விடுதலை யாதெனில்
தன்னுள் நிகழும்
மறுமலர்ச்சியும்
மையத்துள் எழும்
எழுச்சியுமே!

2/04/2010

யார், என்ன சொன்னார்கள்?

ஒரு விழா, அதுல கலந்துக்க பாவேந்தரும் ஒரு அமைச்சரும் போயிருந்தாங்க. அப்ப, இரண்டு பேருக்குமே வரவேற்பு, மாலை மரியாதை எல்லாம் கிடைச்சது. மேடையில உட்கார்ந்து இருந்தாங்க. அப்ப, பாவேந்தருக்குக் கிடைச்ச ஒரு பொன்னாடைய அமைச்சர் சுட்டு, தான் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு நகர்த்திட்டாரு.

பாவேந்தர் உரையாற்றுற முறையும் வந்துச்சு. ஒலிபெருக்கியில போயி, அவர்களே, இவர்களே எல்லாம் சொல்லி முடிச்சுட்டு சொன்னாராம், “நம்ம அமைச்சர் இருக்கிறாரே? அவர் ஒரு பொறுக்கி!” அப்படின்னு சொல்லவும் மக்கள் பரபரக்க, பாவேந்தரோ பதட்டப்படாம பக்கத்துல இருந்த சோடாத் தண்ணிய ஒரு வாய் குடிச்சுட்டுத் தொடர்ந்தாராம், “எடுத்த வைரம்! மிகவும் நல்லவர்!!.....” அப்படின்னு.


======================================

சேக்சுபியர் ஒரு நாத்திகர் அப்படின்னு ஒரு கருத்து இருக்கு. இறை நம்பிக்கையக் கடுமையாச் சாடினாராம். எதையும், எதற்கும் பயப்படாமச் சொல்லக் கூடியவராவும் இருந்தாராம். அவருக்கு வயசாயி, எண்பது எண்பத்தஞ்சி வயசா இருக்கும் போது நோய் வாய்ப்பட்டுக் கிடந்தாராம்.

அந்த சூழ்நிலையில, திடீர்னு ஒரு நாள் பாதிரியாரையும் வழக்கறிஞர் ஒருத்தரையும் வரச் சொன்னாராம் சேக்சுபியர். எல்லாருக்கும் ஒரே பரபரப்பு, ஆச்சரியம்!


கடைசி நேரத்திலயாவது எப்படியோ அவருக்கு இறை பக்தி மேல ஒரு நம்பிக்கை வந்துதே? பாதிரியாரை வெச்சிட்டு உயில் எழுதணும்னு ஆசைப்படுறார் பாருங்கன்னு எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி.

அவங்களும் வந்தாங்க. பாதிரியார், சட்டத்தரணி ரெண்டு பேரையும் ரெண்டு பக்கத்துல வெச்சிட்டுச் சொன்னாராம், “நானும் இயேசு கிறிஸ்த்து மாதிரி, கொடுமையானவங்களுக்கு மத்தியில இருந்துட்டு சாகப் போகிறேன்!” அப்படின்னு!


======================================

ஃபிலடெல்பியால மதியம் இரண்டு மணி, கடுமையான கோடைகாலம் அது. நகர்ப்புறத்தோட மத்தியில இருக்குற ஒரு சாலையோரம். வாகனம் நிக்குது. வேர்க்க விறுவிறுக்க அவர் அந்த வண்டியில இருந்த மின்கலப்(battery) பொட்டியக் கழட்டிட்டு இருந்தாராம்.

அந்த நேரத்துல அங்க வந்த காவல்காரரு(police), ”ஏம்ப்பா வந்து உதவி ஏதாவது வேணுமா?”. அதைக் கேட்ட அவரு, வேண்டா வெறுப்பா நிமிர்ந்து பார்த்தாராம். அதுக்கு இவர் சொன்னாராம், “ஆமா, உனக்கு சிரமமாத்தான் இருக்கும். நான் ஏன் கேக்குறேன்னா, இது என்னோட வண்டி? நீ உன் வேலைய முடிச்சிட்டியானா, உன்னை உள்ள தள்ளிட்டு நேரங்காலத்துல நான் வீடு போய்ச் சேரணும்!” அப்படின்னு!

2/03/2010

முரண்!

பால் ஊட்டும் மாட்டுக்கு?
புல்!

பணம் கொடுக்கும் வங்கிக்கு?
கடன்!

நிழல் கொடுக்கும் குடைக்கு?
வெயில்!!

புசிக்க வைக்கும் உழவனுக்கு?
பசி!

நடிக்கும் மாந்தருக்கு ஊரெல்லாம்?
பாராட்டு!

கற்பனை ஊர் முழுக்கவும்?
விற்பனை!

சாமியை வாழ வைப்பது?
ஆசாமி!

பணிவு காட்டுபவன் தோற்றம்?
குனிவு!

2/02/2010

குருவி

வெடைக்கோழி

வண்டுகொத்தி

வானம்பாடி

வான்கோழி

கருந்தேன்ச் சிட்டு

தேன்சிட்டு

சேவல்

புறா

பூங்கொடிக் குருவி

பட்டாணிக்குருவி
மீன்கொத்தி

மரங்கொத்தி

கொண்டைலாத்தி

கட்டலாங்குருவி

கருமீன்கொத்தி

அழுக்கு வண்ணாத்தி(மைனா)

ஆந்தை

தையல் குருவி

வாலாட்டி

நீலகாந்தா

தகைவிலான்
தவளை வாயனும், கரண்டி வாயனும்! (இங்கே சொடுக்கவும்)

படங்கள் உதவி: இராஜேஸ் மற்றும் விக்னேசுவரன்

(முற்றும்)