5/20/2020

அறுவடைக்கனவு

களத்துமேட்டில் இருப்பது மிகவும் இன்பகரமான தருணமாக இருக்கும். காட்டில் இருந்து வண்டிவண்டியாகக் காய்ந்த கடலைச்செடிகள் வந்திறங்கும். ஒருவர் பிரித்துக் களமெல்லாம் பரவலாகப் போடுவார். சற்று நேரத்தில் காளைகள் பூட்டப்பட்டு தாம்பு ஓட்டப்படும். நிலைக்கால் மேலேறி நின்று வீசும் காற்றின் திசைக்கொப்ப அந்த திசையை எதிர்த்து நின்று தூற்றுவார்கள். பொடி பொட்டெல்லாம் தொலைவாகவும் காய்ந்த கொண்டக்கடலை நேர்கீழாகவும் விழுந்து கொண்டிருக்கும். அப்படி விழுந்த கடலைமணிகளை அள்ளி அள்ளிச் சல்லடை போடுவார் அம்மா. சலித்தவையெல்லாம் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டு இருக்கும். அப்பாதானே தலைவர்? சாக்குகளைக் கொண்டு வந்து, சின்னன்கள் இருவரையும் பிடிக்கச் சொல்லி மூட்டைகளாக்குவார். வண்டி வரும். களத்து மேட்டில் இருந்து ஒரு வண்டிக்கு பத்து மூட்டைகளென அறுவடை வீடு போய்ச் சேரும்; சேர வேண்டும். மண்ணை நம்பி, மக்களை நம்பி, இயற்கையை நம்பி, தம் உழைப்பினை நம்பி நடத்தப்படும் 120 நாள் நாடகமானது, அந்த அறுவடை நாளை இலக்காகக் கொண்டுதானே நடத்தப்படுகின்றது? நம்  வாழ்க்கையின் அந்த அறுவடைநாள்தாம் நம் சாவு என்பதும்.

அப்படியான அறுவடைத் திருநாளை நாம் ஏன் சிந்திக்க, நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம்? நினைத்துப் பார்த்தால் விரைவில் அது நம்மை நோக்கிவந்து விடும் என்பதாலா?? கடந்த இருபது ஆண்டுகளாக நான் நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். 2009ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில், மரணம் குறித்தும் அதன்நிமித்தம் அமெரிக்காவில் இருப்போரெல்லாம் எப்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டுமென்றும் வலைதளத்தில் கட்டுரை எழுதி வெளியிட்டேன். இதுவரையிலும் இலட்சம் பேருக்கும் சற்றுக் கூடுதலாகப் படித்திருப்பதாக கூகுள்நிரலி கணக்குக் காண்பிக்கின்றது. மேலும், பல்வேறு தளங்களில் அக்கட்டுரை கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் அம்மாவுடன் ஒருவரது மரணத்தைப் பற்றி நானும் அண்ணனும் கூறினோம். எவ்விதப் பதற்றமுமில்லாமல் அவர் அதை எதிர்கொண்டார். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, அம்மாவின் அணுகுமுறையில் பெருமளவிலான முதிர்ச்சியைக் காண்கின்றோம். காரணம், அப்பாவின் மரணமாகத்தான் இருக்க வேண்டும்.

ஒருவர் தம் மரணத்தைப் பற்றி யோசிக்கத் தலைப்படும் போது, முதலில் பயமாகவும், பதற்றமாகவும் இருக்கும். தொடர்ந்து அது குறித்துச் சிந்திக்கத் தலைப்படும் போது, வாழ்வு குறித்த தெளிவு பிறக்கும். நல்ல அறுவடையை மேற்கொள்ள வேண்டுமானால், அந்த களத்து மேட்டிலிருந்து பின்னால் நோக்கி என்னென்ன செய்தாக வேண்டுமென உழவன் சிந்திக்கின்றானோ அதைப் போன்றதொரு பாங்கும் பக்குவமும் தலையெடுக்கும்.

சாவு என்பதை எவனொருவன் தன்னுடைய அறுவடையாக நினைக்கின்றானோ அவனெல்லாம் திட்டமிடலைச் சரியாகக் கையாளுவான். எவனொருவன் அஞ்சி நடுங்குகின்றானோ, அவனெல்லாம் திட்டமிடலின்றித் தன்போக்கில் நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பான் என்பதுதான் சரி. சாவு என்பது வெகுநிச்சயமான ஒன்று. யாராலும் அதைத் தவிர்க்க இயலாது. வேண்டுமானால், வேண்டுமானாலென்ன வெகுநிச்சயமாக முன்கூட்டியே நிகழாமல் இருக்க ஓரளவுக்குச் செயற்பட முடியும். அப்படிச் செயற்பட வேண்டுமானால் அவன் அதைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டும். உடல்நிலை ஒழுக்கம் குறித்து யோசிப்பான். முன்னெடுப்புகளை மேற்கொள்வான். அதன்வழி, சுகாதாரம் மேன்மையுறும். மூப்பெய்துதல் மட்டுப்படும்.

எதிர்பாராமல் நிகழ்வனவற்றைப் பற்றி யோசிப்பான். அப்படி ஏதும் நிகழ்ந்து விட்டால், அதைச் சரிக்கட்ட என்ன செய்ய வேண்டுமென யோசிப்பான். அதன்நிமித்தம், உயில் எழுதி வைப்பான். வேண்டிய தகவல்களை உற்றார் உறவினருக்குத் தெரியப்படுத்தும் பொருட்டு எங்கோ எழுதிவைப்பான்.

நேற்றைய நாள் நமக்குத் திரும்பக் கிடைக்காது. நாளைய நாள் நமக்கு வாய்க்குமா என்பதற்கு முழு உத்திரவாதம் எவராலும் கொடுக்க இயலாது. ஆகவே இருக்கின்ற இந்த நாளை நல்லபடியாக வாழத்தலைப்படுவான். எப்படியானவன் அப்படிச் செய்யத் தலைப்படுவான். மரணம் குறித்த உணர்வுற்று, அதன்வழி வாழ்வின் வழியைக் கட்டமைத்துக் கொண்டவன் தற்காலத்தைப் புசித்துப் பசியாற்ற எண்ணுவான்.

நம்மை நம்பி இருக்கும் குடும்பமோ சமூகமோ நாம் இல்லாமற் போய்விட்டால் என்ன செய்வார்கள் என நினைக்கத்தலைப்படுவான். ஒருவேளை அப்படியாகிவிட்டால் என யோசிப்பான். அவர்கள் நடுத்தெருவுக்கு வந்து விடக் கூடாதேயென்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவான். மாற்று ஏற்பாடுகளைச் செய்வான். யார் செய்வான்? சாவென்கின்ற அறுவடைத் திருநாள் குறித்த பிரஞ்ஞை இருக்கின்றவன் செய்வான்.

ஒரு கடைக்கு லாட்டரி வாங்கப் போகின்றான். அவன் கடைக்குப் போய் வாங்கிய லாட்டரியில் பெரும்பரிசு வாங்குவதற்கான வாய்ப்பைக் காட்டிலும், மின்னலோ விபத்தோ இடியோ நேர்ந்து இறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சாவு என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. அதற்கு, ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் படித்தவன் படிக்காதவன் போன்ற பாகுபடெல்லாம் தெரியாது, தெரியாது, தெரியாது. “நமக்கு எதுவும் நேராது” என்பதுதான் உலகப்பொதுமறையாக இருக்கின்றது. ஆனால் உண்மைநிலை என்ன? எவனுக்கும் எந்த நேரத்திலும் அது நிகழலாம் என்பதுதான் உண்மை. உறங்கப் போகின்றான் ஒருவன். நல்லபடியாகக் களைப்பு நீங்கி எழுவான் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதோ, அதேபோன்ற சாத்தியக்கூறுகள் எழாமற்போவதற்கும் உண்டுதானே?? ஆளுக்காள் அதற்கான அளவீடுகள் மாறுபடலாம். அவ்வளவுதான். வயதிற்குறைந்தவன், உடற்பயிற்சி செய்கின்றவனுக்கு மரித்துப் போவதற்கான தகவு குறைவு. மற்றவனுக்கு அதிகம். அதையும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. ஆகவே, தன் மரணம் என்பதைச் சிந்தித்தால் சிந்திக்கின்றவனுக்குத் தெளிவு பிறக்கும்.

தெளிவு பிறக்குங்கால் ஆசைகளைப் பட்டியலிடத் துவங்குவான். அறுவடையாக, நான் இன்னின்ன இடங்களைப் பார்த்தாக வேண்டும். இன்னின்னவற்றை அனுபவித்தாக வேண்டும். இன்னின்ன செயல்களைச் செய்தாக வேண்டும். இப்படியிப்படியாகத் தன் சுவடுகள் இருக்க வேண்டும். இன்னின்ன பழக்கவழக்கங்களைக் கட்டமைக்க வேண்டும். குடும்பமரபுகள் இப்படியிப்படியாக இடம்பெற வேண்டும். இப்படி இப்படியாகத் தன் வேளாண்மையை அவன் அறுவடைத்திருநாள்க் கனவினூடக் கட்டமைக்கத் தலைப்படுவான். அய்யோ அறுவடை என்பது முன்கூட்டியே வந்து விடுமா? நல்லபடியாக முடியுமா? அலங்கோலமாக ஆகிவிடுமாயென்றெல்லாம் கவலைப்பட்டால், வெள்ளாமை வீடு வந்து சேராது.

மரணம் என்பதன் பேரிலான சிந்தனையை புறக்கணித்துவிட்டு, திட்டமிடல் வேலைகளை நிராகரிப்புச் செய்து விட்டு, திடீரென அது வந்து வாசற்கதவைத் தட்டுங்கால் நிலைகுலைந்து நின்று ஒப்பாரி வைப்பதும், மனம் கலங்கிக் கடைசி தருணங்களில் அல்லலுறுவதும் நல்லதொரு அறுவடைக்கு அழகாக இருக்கவே இருக்காது. நல்வாழ்வு என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது நற்சாவு என்பதும். நற்சாவு என்பதற்கான வரையறை, ஒருவரது முடிவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதில் இல்லை. மாறாக, சாவை நோக்கிய அவரது வாழ்க்கைப்பயணமும் திட்டமிடலும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதில்தான் அடங்கி இருக்கின்றது.

ஆழ்ந்து வாழப்பழகியவனுக்கு மரணம் குறித்த அச்சமில்லை. ஒருவனது மரணம் அடுத்தவனுக்குப் பாடம். மரணம் குறித்தான சிந்தனையென்பது கண்ணாடி போன்றது; அந்தக் கண்ணாடியினூடாக அவன் தான் வாழும் வாழ்க்கையைக் கண்டுகொள்ளலாம். எப்படி வாழ வேண்டுமென்பதை, எப்படியாகச் சாக வேண்டுமென்பதிலிருந்து அவன் தெரிந்து கொள்ளலாம். அறுவடைநாள்க் கனவு இனிமையானது. விளைச்சல் வெகுவாக இருக்க வேண்டுமானால், அந்த நாளை நினைக்க வேண்டும். அந்த நாள் இப்படியிப்படியாக இருக்க வேண்டுமெனக் கனவும் கண்டாக வேண்டும். அதற்கொப்ப செயற்படவும் வேண்டும். Cheers!!

5/17/2020

சிறகசைவு



1972 ஆம் ஆண்டு, அமெரிக்க உயராய்வு அறிவியல் கழகத்தின் 139ஆவது கூட்டத்தின் போது அறிவியலறிஞர் எட்வர்டு லோரன்சு என்பார் அவையோரிடையே ஒரு வினாவினை எழுப்பினார். ”தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலின் ஏதோவொரு காட்டில், ஏதோவொரு செடியினுடைய மலரொன்றில் அமர்ந்திருக்கும் அந்த சிறு வண்ணத்துப்பூச்சியின் அந்த ஒற்றைச் சிறகசைப்பு அமெரிக்காவில் பெரும்புயல் ஒன்றை உருவாக்கும் வல்லமை கொண்டதா?” என்பதுதான் அவரின் வினா. ‘பட்டர்ஃபிளை எபெக்ட்’ எனும் பெயரில், இந்த கருத்தாக்கமானது அறிவியலுலகில் இன்றுவரையிலும் பெரும் விவாதங்களை விதைத்துச் சென்றிருக்கின்றது.

பதினெட்டு வயதுடைய எட்வினா எனும் மாணவி வீட்டின் முன்னறையில் அமர்ந்து நூல் ஏதோவொன்றை வாசித்துக் கொண்டிருக்கின்றாள். அவளுடைய தாய் உள்ளே நுழைகிறார். உள்ளே வந்ததும், பரபரப்போடும் ஆவலோடும் அந்தக் காலணிகளைப் பிரித்தெடுத்து அணிந்து நடந்து பார்க்கின்றார். எட்வினாவுக்கு மனம் ஒப்பவில்லை. ‘அம்மா, இந்த வயதில் இது உனக்குத் தேவையற்றது. இந்த உயரமான குதிகள்(high heels) செருப்பு உனக்கு வேண்டாமம்மா’ எனச் சொல்லி அகங்கலாய்த்துக் கொள்கின்றாள். அம்மாவின் வேட்கை அம்மாவுக்கு.

மறுநாள், அந்த உயர்குதிச் செருப்புகளை அணிந்து கொண்டு சென்ற எட்வினாவின் தாயார் அவர்தம் கால் இடறிக் கீழே விழுந்ததில் காற்பாத எலும்பு பிசகிவிடுகின்றது. அதன்நிமித்தம் கால்கட்டு போடப்பட்டு ஒருமாத கால ஓய்வில் இருக்கப் பணிக்கப்படுகின்றார். கூரையானது மரத்துண்டுகளினால் வேயப்பட்ட வீட்டில், வெளியே எங்கும் செல்லாமல் தொடர்ந்து ஒருமாதகாலம் தங்கியிருந்ததில், மரத்தில் இருந்து வெளிப்பட்ட பூஞ்சைக்காற்றினால் எட்வினா அம்மாவுக்கு சுவாச அழற்சி ஏற்படுகின்றது. அந்த அழற்சிக்கு பென்சிலின் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றார். அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதில், அவர் உட்கொண்டு வந்த கருத்தடை மாத்திரைகள் பயனற்றுப் போயின. விளைவு, எட்வினாவுக்கு 19 வயதுகள் குறைந்த தம்பி பிறக்கின்றான். ஒரு குதிகாற்செருப்பு வாங்கிய அந்த ஒற்றை முடிவுக்குப் பயனாக எட்வினா அம்மாவுக்கு மகன் பிறக்கின்றான்.

ராபர்ட் வேலையில்லாத இளைஞன். அமெரிக்கத் தந்தைக்கும் பிலிப்பைன்சு தாய்க்கும் பிறந்து, அமெரிக்காவில் பள்ளிப்பருவத்தை முடித்து, தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட பிணக்கின்பாற்பட்டு தாயோடு பிலிப்பைன்சு நாட்டுக்கு வந்து, வந்த இடத்தில் வேலை எதுவுமின்றி அல்லாடிக் கொண்டிருப்பவன். பிற்பகல் நேரம். கடுமையான பசி.  வீட்டுக்குச் செல்வதா, உணவகம் செல்வதாயென மனம் தள்ளாடுகின்றது. ஒருவழியாக ஒரு முடிவினை மேற்கொண்டு, இருக்கின்ற காசை வைத்துக் கொண்டு, அந்த சீன உணவகத்துக்குச் சென்று பசியாறுகின்றான். எல்லாம் ஆன பிறகு, பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டுடன் ஃபார்ச்சூன்குக்கீ எனப்படுகின்ற அந்த இனிப்புப் பண்டமும் வைக்கப்படுகின்றது. பிரித்துப் பார்க்கின்றான். அந்தப் பண்டத்தினுள்ளே இருக்கின்ற துண்டுச்சீட்டில், “பிறருக்குக் கற்பிக்க வேண்டுமாயின், நாம் அதனை ஒருமுறைக்கு இருமுறை தீரக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று இருக்கின்றது. அது அவனது சிந்தையைக் கிளறி விடுகின்றது.  உணவகத்தில் இருந்து நேரே அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று, தாம் பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லையென்றாலும், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவன்; அமெரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்தவன் என்கின்ற அடிப்படையில் ஆங்கிலப் பயிற்றுநர் வேலைக்கு விண்ணப்பித்தான். விண்ணப்பித்திருந்ததை மறந்தும் விட்டிருந்தான் ராபர்ட்.

தைவான் நாட்டில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினை முன்னிட்டு, தைவான் நாட்டு ஆசிரியர்கள் பலரும் பிலிப்பைன்சிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். அதன்காரணம், ஆங்கிலப் பயிற்றுநர்களுக்கான தேவை ஏற்பட, எங்கோ இருந்த ஒரு விண்ணப்பத்தின் பொருட்டு ராபர்ட்டுக்கு அழைப்பு வந்து, ஆங்கில வகுப்பு பகுதிநேர ஆசிரியர் வேலை கொடுக்கப்பட்டது. படிப்படியாக, முழுநேர வேலை, வீடு, திருமணம் என வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொண்டான் இராபர்ட். சீன உணவகத்தின் அந்த ஒரு துருப்புச்சீட்டு, அவனைப் பெரும் கல்வியாளனாகக் கட்டமைத்து பெரும் பாடசாலைக்கு உரிமையாளனாகவும் இட்டுச் சென்றது.

புறநகர்ப்பகுதி ஒன்றில் சேவையைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அந்த ஒருவர் மட்டும், வரிசை ஒழுங்கினைப் பின்பற்றாமல் ஓரிருவருக்கு முன்பாகப் போய் நின்றார். அதனை அங்கிருந்த காவலர் ஒருவர் தட்டிக் கேட்டார். வாக்குவாதம் நீண்டது. அந்த நபரைக் கைது செய்தது போலீசு. போலீசுக் கட்டுப்பாட்டில் இருந்த அவர் கடும் சொற்களைப் பாவித்தார்.  அடிகள் வாங்கினார். எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலின் படத்தை சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. நாடெங்கும் மக்கள் மனம் வருந்தினர். நாட்டின் அதிபருக்கு எதிராக அதனைத் திருப்பிவிட்டனர் சிலர். மக்கள் வீதிக்கு வந்தனர். ஒரே வாரத்தில் அரசு கவிழ்ந்தது. அதனைக் கண்ட அண்டை நாட்டவரைச் சார்ந்தவர்களும் அவரவர் அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களின் வாயிலாகக் கொந்தளித்து வீதியில் இறங்கினர். அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன இன்னபிறசக்திகள் பலவும். அந்த ஒற்றை இளைஞர் வரிசையில் முந்திச் சென்றதன் விளைவு, பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து நாடுகள் துண்டாகின. வாழ்வு பாழானது. பின்னர் அதற்கு ‘அராபிய வசந்தம்’ எனப் பெயரும் சூட்டப்பட்டது.

கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள், அமைப்புகள், முறைமைகள், நெறிகள் முதலான எதுவுமற்று, ஏதோவொரு சிறு சிறகசைப்பின்பாற்பட்டும், வெறுப்புணர்வின்பாற்பட்டும் முடிவுகளை மேற்கொள்ளும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றது. சாதி, சமய, இன உணர்வுகளைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தித் துருவப்படுத்தும் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் உலகெங்கும் மேலோங்கி வருகின்றன. எந்தவொரு சிற்சிறு சிறகசைப்பையும் தமதாக்கிக் கொள்ள எல்லாச் சக்திகளும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன. எந்தவொரு சிறகசைப்பும் நல்லதொரு விளைவையும் உண்டு செய்யலாம். நேர்மாறாகப் பாரிய பின்னடைவையும் உண்டு செய்யலாம். பெரும்பாலும் பின்னடைவுகளையே இந்த சிறகசைப்புத் தாக்கங்கள் உண்டு செய்து வந்திருக்கின்றன. அவற்றினின்று விடுபட்டுக் கொள்ளவும், அவற்றை மேன்மைக்குரியதாக உட்படுத்திக் கொள்ளவும் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு, முறைசார் அரசியலையும் தன்னார்வப் பணிகளையும் மேற்கொள்வது மட்டுமே.

-பழமைபேசி.