6/23/2019

தண்ணீர்க் காதைகுரும்பபாளையத்தில் ஆழ்துளைக்கிணறு தோண்டி, அதிலிருந்து மின்விசையுந்து கொண்டு நீரிறைத்து 48 வீடுகள் மட்டுமே இருக்கின்ற செங்கோட கவுண்டன் புதூரில் இருக்கும் உயர்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு, அன்றாடம் மாலை ஆறுமணிக்கு ஊருக்குள் ஆங்காங்கே இருக்கின்ற நீர்ப்பிடிப்புக் குழாய்களில் நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. படிப்படியாக நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வர,  300 வீடுகள் இருக்கும் குரும்பபாளையத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை மேலோங்கவும், அவர்களுடைய ஊரில் இருக்கின்ற மேற்கூறப்பட்ட ஆழ்துளைக்கிணற்று நீரைப் பங்கு போட்டக் கொள்ளத் துவங்கினார்கள். எங்களுடைய செங்கோட கவுண்டன் புதூர் அரசூர் ஊராட்சியைச் சார்ந்தது. குரும்பபாளையமோ முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சார்ந்தது. எனவே, தன் ஊராட்சிக்கு முதன்மை எனும் கோட்பாட்டில் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி குரும்பபாளையத்துக்கே ஆதரவு. செ.க.புதூர்வாசிகளான நாங்கள் எல்லாம் மிகுந்த ஒற்றுமையோடு, அடர்த்தியாய்ப் பன்மடங்கு அதிகமாகப் பெய்து கொண்டிருந்த வெயிலிலும் மறியல், ஆழ்துளைக்கிணறு முற்றுகைப் போராட்டமெனப் பலவும் நடத்திப் பார்த்தோம். ஒன்றும் கைகூடவில்லை.

ஒன்றியப் பெருந்தலைவர் செ.ம.வேலுசாமி அவர்களைப் போய்ப் பார்த்தோம். ஒரு ஊராட்சியில் இருப்பதை மற்ற ஊராட்சிக்காரர் உரிமை கொண்டாடுவது அவ்வளவு சரியில்லை. வேண்டுமானால் புது ஆழ்துளைக்கிணறுக்கு வழி செய்யச் சொல்லி அரசூர் ஊராட்சித் தலைவருக்குப் பரிந்துரைக்கிறேனெனச் சொல்லி விட்டார். அன்றைய அரசூர் ஊராட்சித்தலைவருக்கும் செ.க.புதூர் மக்களுக்கும் அவ்வளவு இணக்கப்பாடு இருந்திருக்கவில்லை. ஏனென்றால் செ.க.புதூர் என்பது தனித்துவமான ஓர் ஊர். எப்போதுமே முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஆக, ஊராட்சித் தலைவர், ஊராட்சிப் பெருந்தலைவர் என இருவரின் பேரிலான நாடலும் கைகொடுக்காமற் போகவே, தங்கநாயகி அம்மன் கோவில் பூசாரியாக இருந்த சுந்தரான், உள்ளூர் திமுக ஆதரவாளர்கள் வாயிலாக சூலூர் பேரூராட்சிப் பெருந்தலைவர் சூ.சு.பொன்முடி அவர்களைச் சென்று பார்த்தோம். அவர் சூலூர்ப் பேரூராட்சியில் இருந்து கொண்டு தம்மால் எதையும் செய்துவிட முடியாது. வேண்டுமானால் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசுகின்றேன். நீங்கள் எல்லாம் இன்ன நாளில், கோவை விருந்திநர் மாளிகைக்குச் சென்று உள்ளூர் ச.ம.உவும் அமைச்சருமான மு.கண்ணப்பன் அவர்களைச் சென்று பாருங்களெனப் பணித்தார்.

தங்கநாயகி அம்மன் கோவில் பூசாரி தங்கான், செ.க.புதூர் நண்பர்கள் இராசகோபால், கனகராசு, நல்லசிவம் உள்ளிட்டோருடன் நானும் விருந்திநர் மாளிகைக்குச் சென்றிருந்தேன். ச.ம.உ காட்டம்பட்டி கந்தசாமி வரவேற்று என்ன அலுவல் குறித்து வந்திருக்கின்றீர்களென வினவினார். இப்படி இப்படி, குரும்பபாளையத்துக்காரர்கள் செ.க.புதூர் தண்ணீரை மறித்து எடுத்துக் கொண்டனர். நாங்கள் தண்ணீர் இல்லாமல் அல்லலுறுகின்றோமெனச் சொல்லி அழுதோம். அவர் சொன்னார், உங்களுக்குத் தண்ணீர்ப் பிரச்சினையென்று சொல்லுங்கள். அவர்களுடைய ஊர்த் தண்ணியை உங்களுக்கானதென எப்படி உரிமை கோரமுடியும். மேற்கொண்டு அமைச்சர் வந்ததும் பேசலாமெனச் சொல்லி அமைச்சரின் குளுகுளு அறையிலேயே நல்ல போண்டா, வடைகளுடன் டீ கொடுத்து உட்காரச் சொல்லி விட்டார்.

அமைச்சர் வந்ததும் மீண்டும் முதலில் இருந்து எங்கள் வாய்ப்பாட்டை ஒப்பித்து, சூலூர் பொன்முடி சொல்லி வந்தோமென்றோம். முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சித் தலைவர் முத்துசாமி அவர்கள் அமைச்சருக்கு மிகவும் வேண்டியவர். அவரும் அங்கேயே அவருடன் இருந்தார். இடைக்காலத் தீர்வாக வாரத்துக்கு ஓரிரு நாட்கள் செ.க.புதூருக்கு விடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஊர்க்காரர்களுடன் பேசிப் பார்க்கின்றேனெனச் சொல்லி நழுவினார் மு.க.புதூர் ஊராட்சித் தலைவர். ‘சரி என்ன செய்யலாம்?’ என்று வினவினார் அமைச்சர்.

குரும்பபாளையத்து எல்லைக்கு வெளியே வேறெங்காவது, இப்போதைய கிணற்றைக் காட்டிலும் ஆழமாக வேறொரு கிணற்றுக்கு ஏற்பாடு செய்வதுதான் வழி என்றார். துரிதகதியில் பணிகள் துவங்கின. மு.க.புதூர் ஊராட்சித் தலைவரே, மு.க.புதூர் - செ.க.புதூர் இட்டேரியில் புது ஆழ்துளைக் கிணறு தோண்டலுக்கான பணியினைத் துவங்கினார். ஒரு மாதத்துக்குள்ளாகவே புதுக்கிணற்றின் நீர் ஊருக்குள் விநியோகிக்கத் துவங்கிய சிலநாட்களிலேயே திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டது.  அதே பல்லடம் தொகுதியில் மு.கண்ணப்பன் அவர்களே மீண்டும் போட்டியிட்டார். தமிககமெங்கும் திமுக வரலாறு காணாத தோல்வி அடைந்தது. செங்கோட கவுண்டன் புதூர் வாக்குச்சாவடியில் மட்டும் திமுக 80% வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. அதில் என் ஓட்டும் அடக்கம்.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், பொதுப்பணித்துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சொல்வது, அவரது நிலையில் மெத்தச் சரி.

“எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனை சென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதைவிடுத்து, வாரத்தில் 2 மட்டுமே, எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால்,  வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். -துரைமுருகன்.”

தம் வீடு, தன் வீதி, தன் ஊர், தன் ஊராட்சி, தன் ஒன்றியம், தன் மாவட்டம், தன் மாநிலம், தன் நாடு என்பதுதான் வரிசை.

-அந்தியூரன் பழமைபேசி, 06/23/2019.

6/21/2019

எங்கோ ஒரு பெண்


எங்கோ ஒரு பெண்,
குடத்தை எடுத்து வருகையில்
கால் இடறிக் கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
குழாயடியில் வேசிப்பட்டம் சுமந்தபடி
குடத்தைத் தூக்கித் தலையில்
வைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
பனிக்குடம் உடைந்து நீரொழுக நீரொழுக
குடம் தண்ணீரைச் சுமந்தபடியே
வந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்
முறைவிட்டுக் கொடுக்காததில்
படுத்தெழுந்ததாய்ப் பட்டங்கள் சூட்டப்பட்டு
மகனின் முகம் பார்க்கவியலாமல்
குமைந்து குறுகிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
மணிக்கணக்கில் குடம் தூக்கியபடி இருக்க
ஊட்டமின்றிச் சுருண்டு
கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
மூச்சடக்கி மூச்சடக்கிச் சுமந்ததில்
நெஞ்சுதூர்ந்து செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீரெனக் கடன் ஒத்திப்போட்டத்தில்
நஞ்சேறிப் பிணியேறிச் செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
உறக்கமின்றி எழுந்தெழுந்து எதிர்நோக்கி
குழாயும் கண்ணுமாய்ச் செத்துத் செத்து
பிழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
சிந்திய நீரில் கால்வழுக்கி
குடத்தோடு விழுந்ததில்
விலா எலும்பை முறித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ப் பணியால்
கல்வி சறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ச் சிந்தையினால்
வேலையிடத்தில் கவனமிழந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஊட்டமும் சத்துமின்றி
தண்ணீர் சுமந்து
தண்ணீர் சுமந்து கொண்டிருந்ததில்
பார்வையைத் துறந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர் வருமெனச் சொல்லி
உறவுக்காரர் கடைசிமுகம்
பார்க்காமற் தவித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஒரு வண்டித் தண்ணீரைக்காட்டி
அத்துமீறும் ஆடவனிடத்தில்
தன் மகளையே இழந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஊர்வம்பு இழுத்துட்டு வராம இருக்கமாட்டியாவென
யாருக்கு வேண்டுமெனச் சுமந்தாளோ அவனிடமே
அறைபட்டு அழுத கொண்டிருக்கக்கூடும்!

அந்தப் பெண்
உன் வீட்டவளாகவும் இருக்கலாம்!!

-பழமைபேசி, 06.19.2019.

[For women, the water crisis is personal. They are responsible for finding a resource their families need to survive - for drinking, cooking, sanitation and hygiene. வீணாக்கப்படுகின்ற ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும், அம்மா, மனைவி, உடன்பிறந்தவள், மகள் என யாரோ ஒரு பெண்ணின் சுகதுக்கங்களின் மீதான கொலைவெறித் தாக்குதல் என்றே கொள்க. நீரைச் சிக்கனமாய்ப் புழங்கு!]

5/26/2019

பொதுப்புத்தி

சமூகத்தில், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளைச் சார்ந்த சமூகத்தில் பொதுப்புத்தி என்பது எங்கும், இடையறாது விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதற்கு நமது தமிழ்ச்சமூகம், நாம் கடைபிடிக்கின்ற அல்லது அண்டியிருக்கின்ற சமயமும் விலக்கானது அல்ல. இன்னும் சொல்லப் போனால், நாம் சார்ந்து வாழும் சமுகப்பண்பாட்டிலும் சமயத்திலும்தான் பொதுப்புத்தியாலான கட்டமைப்பின் ஆணி வேர்கள் வலுவாக விரவிப் பரவியிருக்கின்றன. இத்தகைய வேர், என்னிலும் இருக்கின்றது; உங்களிலும் இருக்கக்கூடும். அதனைப்பற்றிய சிந்தனைக்கு வெளிச்சம் பாய்ச்சுவதைத்தான் இலக்காகக் கொண்டு இவ்வாக்கத்தைத் தொடர்கின்றேன்.
அண்மையில் எனது ஃபேசுபுக் கணக்கின் நிலைத்தகவல் வரிசையில் மீண்டும் மீண்டும் ஒரு காணொலி முகப்பில் வருவதும் போவதுமாக இருந்து கொண்டே இருந்தது. காணொலியின் தோற்றப்படத்தில் ஒரு பெண்மணியின் முகம் தெரிந்தது. ஏதோ உள்ளோங்கிய ஊர் ஒன்றின் பேருந்துநிலையம், சாராயக்கடை போன்றதொரு இடத்தில் அப்பெண் நின்று கொண்டிருப்பதாகப்பட்டது நமக்கு. ஓரிரு நாட்கள் நான் அதனைப் புறந்தள்ளிவிட்டுக் கடந்து சென்றேன். மூன்றாவது அல்லது நான்காவது நாளிலும் அது மீண்டும் முன்வரிசையில் வந்து நின்றிருந்தது. திரும்பத் திரும்ப இது ஏன் முகப்பு வருகின்றது? அந்தக் காணொலியின் பின்னூட்டத்தில் தொடர்ந்து கருத்துகள் இடப்படுவதால் வருகின்றது. இப்போதும் எனக்கு காணொலியைக் காண மனம் இடம் கொடுக்கவில்லை. என்னதான் கருத்துரைக்கின்றார்கள் எனச் சென்று பார்த்தேன். நண்பர்கள் எல்லாரும் ஓரிரு சொற்களில் வியப்பையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு நானும் சென்று காணொலியைப் பார்க்கத் தலைப்பட்டேன். மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டியது அப்பெண்மணியின் இசைவெள்ளம். அவ்வளவு அருமையான குரலில், பாடுவதற்குக் கூடுதல் திறம் தேவைப்படுகின்ற பாடலைப் பாடுகின்றார் அவர். எதோவொன்று நம்மைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றது. திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கின்ற அந்த அசல் பாடலை நாம் திரும்பத் திரும்பக் கேட்டதில்லை. அப்படியானால் ஏதோவொன்று இக்காணொலியைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றது, அது என்ன என்கின்ற வினாவானது நம்மை அடுத்தடுத்த தருணங்களில் துரத்திக் கொண்டிருந்தது.
காணொலியைப் பார்க்கத் துவங்கிய முதல் விநாடியிலேயே, அப்பெண்மணியிடமிருந்து வெளிப்படும் இசைநயம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இசையின்நிமித்தம் வியப்பு மேலிடுகின்றது எனக் கருதுவோமானால், நாம் அப்பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் எழாத வியப்பு இப்போது ஏன் எழுகின்றது எனும் வினா முளைக்கின்றது. காரணம் வேறொன்றுமில்லை. இப்படியான எளிய தோற்றத்தில், உருவத்தில், உடையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்னின்னதுதான் தெரியும்; ”படிப்பு, இசை, கலை” முதலானவையெல்லாம் எட்டாக்கனிகள் அல்லது அவை அவர்களுக்கானது அல்ல என்கின்ற பொதுப்புத்தி நமக்குள் விதைக்கப்பட்டிருக்கின்றது. அப்படியான பொதுப்புத்தியில் புடம் போடப்பட்டிருக்கின்ற நம்மால் அதைப் பார்த்ததும் ஏற்படுகின்ற அதிர்ச்சியானது வியப்பாய் இடம் பிடிக்கின்றது. இசைநயமும் இருக்கப் பெறவே, அதைத்தொட்டு செவிமடுக்க விழைகின்றோம். நம்மிலும் அப்பெண்மணி வர்க்கரீதியாக, சாதிரீதியாக, படிப்புரீதியாக, பொருளாதாரரீதியாக என எல்லாப் படிநிலைகளிலும் தாழ்ந்தவர் என்கின்ற எண்ணம் நம் ஆழ்மனத்தில் பொதுப்புத்தியாய் குடிகொண்டிருக்கின்றது. எனவே அப்பெண்மீது கழிவிரக்கம், பச்சாதாபம் பிறக்கின்றது. இதெல்லாமும் மாந்தத்தன்மைக்கு உகந்த பண்புநலன்கள் அல்ல. கட்டம் கட்டுதல், புறந்தள்ளுதல், நிராகரித்தல் முதலானவற்றின் தோற்றுவாய் நமக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இத்தகு பொதுப்புத்திதான். ஏன், எளிய, அத்தகைய பெண்களுக்கு இசைஞானம் இருக்கக் கூடாதா? ஊர்களில், வயல்களில், காடுகழனிகளில் இயற்கையின் போக்கில் அன்றாடமும் பாடல்களைப் பாடுபவர்கள்தானே? அப்படியிருக்க, அப்படியான ஒரு பெண்ணின்பாற்பட்டுப் பாராமுகம் கொள்வது சரியா? இப்படியான பொதுமைப்படுத்தல்கள் எங்கும் நிறைந்துள்ளன.
பொதுவாக, பொதுமைப்படுத்தற்பண்பு என்பது இருவகைப்படும். முதலாவது, நாம் அறிந்தே மேற்கொள்வது. எடுத்துக்காட்டாக, ‘கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக்கலப்பை உழவைக் கெடுக்கும்’ என்பது தமிழ்ப்பழமொழி. வழக்காறு. இதன்படி குட்டையாக, குள்ளமாக இருப்பவர்கள், தந்திரசாலிகளாக, தீயநச்செண்ணெம் உள்ளவர்களாக இருப்பார்கள் எனும் நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பது. சமூகமேம்பாட்டின்வழி, அத்தகைய எண்ணமானது பிற்போக்குத்தனமானது, ஆகவே அத்தகைய வழக்காற்றினை விட்டொழிக்க வேண்டுமென்பதும் எளிதில் வசப்படும். ஏனென்றால், பொதுமைப்படுத்தலின் தோற்றுவாயை நாம் வெளிப்படையாக அறிந்தே வைத்திருக்கின்றோம். இரண்டாவது வகையான, உள்ளார்ந்த பொதுமைப்படுத்தல் என்பதுதான் களைவதற்கு மிகவும் கடினமானதாகும். ஏனென்றால் அதன் உட்பொதிவு நமக்கு வெளிப்படையாகத் தெரிந்திராது. இத்தகு பண்புக்கான எடுத்துக்காட்டுத்தான் நாம் மேற்கூறிய காணொலி நிகழ்வாகும். சமூகத்தின் கண்களுக்கு எளிதில் அகப்படாத இத்தகு ஸ்டீரியோடைப்பிங், பொதுமைப்படுத்தல்களை நாம் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்துவதன் வழி மற்றவர்களுக்கும் அகக்கண்கள் திறவுபடும். நாட்டில் எத்தனை எத்தனை கோமதி மாரிமுத்துகளோ? அத்தகைய திறம்மிக்கவர்கள், அலுவலகங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதே அரியதானவொன்றாகவே இருக்கும்.அடுத்து, இப்படியான பொதுமைப்படுத்தல்கள் எப்படி நம்முள் புதைந்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
ஒருவர் வனமொன்றில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றார். நான்கைந்து யானைகள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன. நான்கு கால்களும் தளைகளின்றி விடுதலாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் அவை நான்கும் நிலையான இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன. பம்மிப் பதுங்கிப் பதுங்கி அவற்றின் அருகே செல்லத் தலைப்படுகின்றார். அப்போதுதான் தெரிகின்றது அதன் முன்னங்கால்களில் இடக்காலில் காலைச்சுற்றியும் ஒரு பெரிய கயிறு சுற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் அக்கயிறு வேறு எதொனோடும் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. பல தப்படிகள் நடந்து செல்ல, யானைப்பாகன் ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிகின்றது. அவரிடம் பேச்சுக் கொடுக்கின்றார் இவர். எப்படி, யானைகள் அங்குமிங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே இருக்கின்றன எனக் கேட்கின்றார். அதற்கு பாகன் சொல்கின்றார், முன்னங்கால்களில் இருக்கும் கயிற்றுவளையத்தை நீக்கினால் அவை பலவாக்கிலும் செல்லத் தலைப்படுமென்கின்றார். அது எப்படியெனக் கேட்டமைக்குச் சொல்லத்தலைப்படுகின்றார் பாகன்.குட்டிகளாக இருந்த நேரத்தில் முன்னங்காலினைச் சுற்றி ஒரு கயிற்றுவளையல் இட்டு அவ்வளையலை கல், தூண் போன்றவற்றில் கட்டி வைத்துப் பழக்கியிருக்கின்றனர். அதன்படி, காலில் கயிற்றுவளையம் இருந்தால் நாம் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பது அவற்றின் பொதுப்புத்தியாகி விட்டிருக்கின்றது. வளர்ந்து வலுக்கொண்ட பெரியதாகி விட்டிருந்தாலும், நாம் கட்டப்பட்டிருக்கின்றோமெனும் பொதுப்புத்தியானது அவற்றுக்கே அறியப்படாமல் விதைக்கப்பட்டிருக்கின்றது. அப்படித்தான் நம்முள்ளும் எத்தனை எத்தனையோ பொதுப்புத்திகள், அதிகாரவர்க்கத்தால், ஆதிக்க விழைவுகளால் விதைக்கப்பட்டிருக்கின்றன. அத்தகையவற்றை உணரும் போதெல்லாம், ஒருவருக்கொருவர் அதன்நிமித்தம் தெரியப்படுத்திக் கொள்வதன் வாயிலாகவே நாம் அவற்றினின்று விடுதலை கொள்ள முடியும்.
மயில்களைப் பார்க்கும்போது மட்டுமின்றி போய்ப் பார்க்கும் போதும் சொல்லியாக வேண்டியிருக்கிறது, மயிலே, மயிலே, நீ எந்த மயிரானுக்கும் இறகு போடாதே!! -கவிஞர் ஜெயபாஸ்கரன்
ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து 
கால் வலிக்கிறது!! -கவிஞர் தாமரை

இப்படியான கவிதைகள் எல்லாம் நம்முள் உறைந்திருக்கும் பொதுப்புத்தியினை இடித்துரைக்கின்றன. நேரெதிராக, தமிழ் அமைப்புகளில், ஊடகங்களில் இடம் பெறும் பட்டிமன்றம், பேச்சரங்கம் போன்றவற்றிலெல்லாம் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டி அதனையே பொதுமைப்படுத்தி, கட்டி வைத்த யானைகளாக நாம் ஆக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் நாள்தோறும். பொதுமைப்படுத்தல்கள் உணர்ந்து கொள்ளப்பட வேண்டியது! பொதுமைப்படுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டியது!!
-பழமைபேசி.