12/02/2017

காக்காப்பொன்

நடுநிசி வரைக்கும் வேலை பார்த்துக் களைத்துப்போன காக்காப்பொன்னான் மடப்பள்ளியிலேயே தூங்கிவிட்டார். ஊரிலிருக்கும் குஞ்சுகுளுவானிலிருந்து இந்தத்தலைமுறை ஆட்கள் வரை எல்லாரும், பெரியகாக்காப் பொன்னான் என்கிற முத்துவேல்ப் பூசாரியின் மகனான வடிவேலுவை ”காக்காப்பொன்னான்” என்றே விளிக்கிறார்கள். ஊர்க்கவுண்டரின் அப்பாரய்யன் பெரியநாச்சிமுத்துக் கவுண்டர் இருந்த காலத்தில் கட்டப்பட்ட மடப்பள்ளியானது, புழக்கத்திற்கு வருமுன்னமே செத்துப் போன, பெரியகாக்காப் பொன்னானை நினைவில் வைத்திருக்கும் ஊர்ப்பெரியவர்கள் சிலர், சின்ன காக்காப்பொன்னானென்றும், சின்னமுத்தனென்றும் விளிக்கிறார்கள். ஊர்க்காரர்களுக்கு காக்காப்பொன்னானை ரொம்பவும் பிடிக்கும். சின்னஞ்சிறு பொடிசுகளைக் கூட மிகவும் அன்பாகவும் மரியாதையோடும் விளித்துப் பேசுவதும் அவரது பணிவும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பாப்பாங்காட்டு சின்னவக்கீல்க் கவுண்டருடைய மகள் பெரியம்மணி மகளுக்கும் மகனுக்கும். மாகாளியாத்தா கோவிலில் வைத்துத்தான் மொட்டையடித்துக் காதுகுத்து வைக்க வேண்டுமென்பது பெரியவக்கீல் பாட்டைய கவுண்டரின் விருப்பம். அவர் இருக்கும் போதே நடந்திருக்க வேண்டிய முறைச்சீர் இது. எதிர்பாராவிதமாகப் பெரியவர் தவறிவிட்டதினால், இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அதற்கு காலம் வாய்த்திருக்கிறது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு காலபூசை செய்து கும்பிட்டுவிட்டு மொட்டையடித்துச் சாமிகும்பிடுதல். பதினொரு மணிக்குப்பிறகு பாப்பாங்காட்டிலுள்ள கருப்பராயனுக்கு கெடாவெட்டிப் பூசை செய்தலென போன மாதமே முடிவு செய்யப்பட்டு ஊரெல்லாம் காக்காப்பொன்னான் அவர்களையே அழைக்கவும் சொல்லி, அழைப்பு வேலைகளும் முடிந்து விட்டது.

கோவில்த்தரையை எல்லாம் கழுவிவிட்டு, சுற்றுமுற்றும் சாணம்போட்டு மெழுகிவிட நடுநிசி ஒருமணி ஆகிவிட்டது. இனி மடப்பள்ளியில் இருக்கும் அந்த ஒற்றையடுப்பிலேயே விறகைக்கூட்டி பாலில்லாத வரக்காப்பியைப் போட்டுக் குடித்துவிட்டு, மடப்பள்ளியெல்லாம் தட்டிக்கூட்டி பூசி சாணி வளித்துவிட வேண்டும்.

காக்காப்பொன்னான் அவர்களின் மூதாதையர் காலத்திலிருந்தே, வடக்கே சுல்தான்பேட்டை, தெற்கே புக்குளம் குறுஞ்சேரி, மேற்கே சூலக்கல் கோயில்பாளையம், கிழக்கே பெரியபட்டி குண்டடம் வரையிலுமாக எங்கு கூத்து நடந்தாலும் வெள்ளிப்பட்டியிலிருக்கும் இவர்களிடமிருந்துதான் காக்காப்பொன் வாங்கிப் போவார்கள். நயம் காக்காப்பொன், இடைவெட்டு காக்காப்பொன், நசுவல் காக்காப்பொன் எனத் தரத்தின் அடிப்படையில் இரகம் இரகமாக இவர்களிடத்தில் காக்காப்பொன் கிடைக்கும்.

ஊர் மாரியம்மன் கோவிலில் பூசை செய்வது இவர்களுடைய தலைக்கட்டுமுறையென்றால், காக்காப்பொன் சேகரம் செய்து ஊர்களில் நடக்கும் கூத்துகளுக்கும், கோவில்சாமிகள், சப்பரச்சாமிகள், சக்திசாமிகள், உருவாரப்பொம்மைகள், பிள்ளைப்பொம்மைகளென எல்லாவற்றுக்கும் தேவையான காக்காப்பொன் கொடுத்து, இந்த உலகம் அதன் அச்சில் இயங்குவதற்கான அத்தனைக்கும் தாமே பொறுப்பு எனக்கருதும்படியாகத் தொண்டு புரிந்து வருகின்றனர் காக்காப்பொன்னானும் அவருடைய அங்காளிபங்காளிகளும்.

திண்ணையின் இடப்பக்க மூலையில் கூத்தாட்டக் கலைஞர்களுக்கான இடைவெட்டுக் காக்காய்ப்பொன்ப் பை, மழைச்சாரலுக்கு நனையாத வண்ணம் வீட்டு எறவாரத்தில் கொக்கிப் போடப்பட்டு அதில் தொங்கிக் கொண்டிருக்கும். யாரும், எந்நேரமும் வந்து வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு வாங்கிப் போகலாம். தேங்காய்ச் சிரட்டையில் அளந்து கொடுப்பார்கள். ஒரு சிரட்டை எட்டணா, இப்போதைய காசுக்கு ஐம்பது காசுகள். ஐம்பது காசென்றால் பெரிய பணம். ஐம்பது காசுக்கு நான்கு புட்டும் ஒரு லோட்டா பனங்கருப்பட்டிக் காப்பியும் கிடைக்கும் வள்ளியம்மா கடையில். மற்ற சோலிகளுக்கென்றால், காக்காப்பொன்னான் அவர்களிடமோ அல்லது அவருடைய தம்பி ஃபிட்டர் நடராசு அவர்களிடமிருந்தோதான் வாங்கிப் போக வேண்டும்.

சாமிகாரியத்துக்கு என்பதால், நயம் காக்காப்பொன்ப் பொதிகளை வீட்டுக்குத்தூரமாகாத ஆட்கள் புழங்கும் கோயில் மடப்பள்ளியிலும் புத்துக்கண் சாளையிலும்தான் பத்திரப்படுத்தி வைப்பது குடும்ப வழக்கம். ஊரிலிருக்கும் நாயக்கமார்கள் எல்லாம் ஊரோரத்தில் இருக்கும் புற்றுக்கு பெளர்ணமிதோறும் பூசை செய்து குலதெய்வமான எல்லம்மாவை வழிபடுவார்கள். அந்த புற்றுக்கு அருகே ஒரு ஓலைவேய்ந்த குடிசையுமுண்டு. இந்த சாளையிலும் காக்காப்பொன் பொதிகள் இருக்கும். ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் ஒரு மங்கலப்பெண்ணுக்கு பட்டு உடுத்தி, செந்தூரம், காக்காப்பொன் கொண்டு அலங்காரம் செய்து சக்தியழைத்து வாக்குக் கேட்பார்கள். அதனால் காக்காப்பொன் பொதிகள் இந்தச்சாளையிலும் இருக்கும்.

உள்ளூர்க் கோவில்களில் இடமபெறும் அலங்காரத்துக்கான காக்காப்பொன், சாமி உருவுகளுக்குப் பூசப்படும் காக்காப்பொன், கண்ணடக்கமாக வைக்கப்படும் காக்காப்பொன் போன்றவற்றுக்கு யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது. வருடா வருடம் குடியானவர்கள் படியளக்கும் தானியங்களும், நார்முத்து நாயக்கர் தோட்டத்திலிருந்து அவ்வப்போது கொடுக்கப்படும் தேங்காய்களும் காய்கறிகளுமே குடும்பத் தேவைக்குப் போதுமானதாக இருந்தது.

அசலூர்க் கோயில்களுக்குத் தரப்படும் காக்கப்பொன்னுக்கு பொதிகளுக்கேற்றபடி அவர்களாகவே பணம் கொடுப்பார்கள். இவ்வளவு என்று சொல்லிக் கேட்டுவாங்கும் பழக்கம் காக்காப்பொன் குடும்பத்தாரிடம் இருந்ததேயில்லை.

மாலகோயில் எனப்படுகிற ஆலாமரத்தூர் ஆலகொண்டமால் திருக்கோயில் சாமிக்குப் படைக்கப்படும் உருபொம்மைகள், சிறுவயதுக் குழந்தைகள் விளையாடக் கொடுக்கும் பிள்ளைப்பொம்மைகள் போன்றவற்றுக்குத் தேவையான இடைவெட்டு அல்லது நசுவல் இரகக் காக்காப்பொன்னை, அத்தகைய பொம்மைகள் செய்பவர்களுக்கு மொத்தமாகக் கொடுத்துவிடுவார்கள். பொம்மைகள் செய்யும் பையான், சிக்கான் முதலான கைவினைப் பொருட்கள் செய்யும் உள்ளூர்வாசிகள், பொம்மைகள் விற்றதைப் பொறுத்து அவ்வப்போது பணம் கொடுப்பார்கள். இப்படிக் கிடைக்கிற பணத்தில் குடும்பத்துக்கு வேண்டிய துணிமணிகள், நகைநட்டு போன்றவற்றை வாங்கிக் கொள்வார்கள்.

காக்காப்பொன்னான் அவர்களுடைய வீடிருக்கும் வளவுக்கு அடிக்கடி அசலூர்க்காரர்களும் வந்து போவார்கள். வந்து போகிறவர்கள், காக்காப்பொன்னுக்காக மட்டுமே வந்து போவதில்லை. காக்காப்பொன் எங்கெல்லாம் விளைகிறதோ, கிடைக்கிறதோ அந்தபூமியெல்லாம் நல்ல சுவையான தண்ணீர் ஊறுகிற பூமியென்பதால், அத்தகைய பகுதிகளில் ஏதாவது பூமி விலைக்கு வருகிறதாயெனக் கேட்டறிந்து கொள்ள வருபவர்களும் உண்டு. மேலும் காக்காப்பொன் நல்ல கருங்கற்களில் மட்டுமே கிடைக்கிற கனிமப்பொருளாகும். வீடு கட்ட, பெரிய பெரிய கட்டிடங்கள் கட்ட விழைவோர், கோயில் கட்ட விழைவோரெல்லாம் கருங்கற்கள் கிடைக்குமிடத்தை அறிந்து கொள்ளவும், கிணற்று வேலைகள் நடக்குமிடமறிந்து தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள விரும்பும் கொத்துக்காரர்கள், தச்சர்கள், வணிகர்கள் போன்றோரும் காக்காப்பொன்னான் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருப்பார்கள்.

”டே கனகூ, டே கனகூ… இதென்ன இவனை இங்க காணமாட்ட இருக்குதூ?”, கனகு எனப்படுகிற கனகராசுவைத் தேடிக் கொண்டே வீட்டைச் சுற்றி வந்தாள் காக்காப்பொன்னனின் மனைவி பழனா.

எங்கும் அவனைக் காணோம். தெருமுனையில் சைக்கிள் கடை வைத்திருக்கும் அணிக்கடவு மாரியின் கடைக்குப் போனாள் பழனா.

“ஏனுங் தம்பீ? எங்க கனகு இங்கெங்னாச்சீமு வந்தானுங்ளா? அவங்கப்பன் கோயல்லயே இருந்துட்டாரு இராத்திரி. வெடிஞ்சு எந்திரிச்சுமு வர்ல. இவங்கிட்ட புட்டும் சட்னியுமு குடுத்தனுப்போணும். எங்க போனானுன்னு தெரீலிங் தம்பீ!”

“அக்கா, நீங் ஊட்டுக்குப் போங்க. எங்க சின்னவனை உட்டுத் தொழாவச்சொல்றன்”

விசயம் வேறொன்றுமில்லை. நேற்று வாளவாடி நாயக்கர் தோட்டத்து கிணற்று மேட்டுக்கு அவனுடைய அம்மா பழனாவோடு காக்காப்பொன் அரிக்கப் போனவனுக்கு என்றுமில்லாதபடிக்கு இரண்டு செம்பொன்நிற காக்காப்பொன் சில்லுகள் கிடைத்திருந்தன. செம்பொன் கிடைப்பது அரிதினும் அரிது.. பொதுவாக வெள்ளிப்பொன்தான் கிடைக்கும். அதில் ஏககுசியாகியிருக்கிறான் கனகு.

கனகுவின் சித்தப்பா ஃபிட்டர் நடராசன் சொன்னதன்படி பார்த்தால், வெள்ளைக்காரன் காலத்தில் தோண்டப்பட்ட ஊர்க்கிணற்றின் கல்லில்தான் கடைசியாகச் செம்பொன்ச் சில்லுகள் கிடைத்ததாம். அதற்கு அடுத்ததாக, காமராசர் காலத்தில் வடக்கே அரசூர் மேட்டில் தோண்டப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்கால் மேட்டில் கருநீலப்பொன் வெகுவாகக் கிடைத்ததாம். இவற்றுக்குப் பிறகு, இப்போதுதான் இந்த இரண்டு செம்பொன் கிடைத்திருப்பதாகவும், இவற்றை குடும்பத்தின் அடுத்த காக்காப்பொன்னான் ஆகப் போகும் நீயே வைத்துக் கொள்ளலாமெனவும் அவனுடைய சித்தப்பா சொன்னதை நினைத்துப் பரவசமானவன் இராவெல்லாம் தூங்கவேயில்லை. அம்மாவுக்குத் தெரியவந்தால், அப்பாவிடம் சொல்வாள்; இவையிரண்டும் தனக்கில்லாமற் போய்விடுமென்கிற பதற்றம் வேறு.

எப்போதும் காப்பி கேட்டு நச்சரிப்பவன், இன்று, எழுந்ததும் கிளம்பிப் போய்விட்டான். போகிற வழியெங்கும், சட்டைப்பையில் இருந்து எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டான்.

துரைசாமி வாத்தியார் வீட்டுக்குப் போனான். இரகுபதி வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தான்.

“இரகு, போலாமாடா?”

“என்ன இன்னிக்கு இங்க வந்திருக்கே? ஒஞ்சோட்டாலி சுந்தரம் இல்லியா??”

“இல்ல, உங்கிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லோணும்”

“இரு வர்றன்”

இரகு உள்ளே போனான். காப்பி டம்ளரை வீசியெறிந்து கொண்டே இரைந்தான், “அம்மா, எனக்கு அவசரமா வெளிக்கு வருது. நான் போகோணும்”.

வெளியே வந்தான். “டே கனகு, வாடா போலாம்”.

காப்பி குடித்ததற்கு மெய்யாலுமே குடலெல்லாம் இளக்கம் கண்டு அவனுக்கு வயிற்றுக் குடல்களெல்லாம் வெளித்தள்ளிக் கொண்டிருந்தன.

“கனகு, நீ மொல்ல வா, நான் போறன்”, ஓடினான் இரகு.

குட்டைக்குப் போகுமுட்டும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. செட்டுக்கார நாராயணன் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் குட்டிச்சுவருக்குள் இலாகி, அங்கிருந்த கற்றாழைக்குப் பின்னால் பம்மிவிட்டான்.

வீதியிலேயே நின்று கொண்டு பேசினான் கனகு, “இரகு, நீ இங்கியாடா இருக்கே?”

“ஆமாடா, என்னால பொறுக்க முடீல. அவசரமா வந்துருச்சுறா”

“செரி, நீ ஆர்கிட்டவும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாச் சொல்றன்”

“இர்றா வர்றான், வந்து பேசிக்கலாம்”

புதர் மண்டியிருந்தது. அதற்குள் இருந்த கற்றாழைத்தண்டு நெடுநெடுவென ஓங்கியிருந்தது. கதிரவனின் இளவெயிலுக்கு புதுமலர் போல வெண்மலரொன்று கற்றாழைத் தண்டின் நுனியில் பூத்துக் கொண்டிருந்தது. இவன் அதை உயரே பார்த்தான். நீலவானம். இளம்பச்சைநிறத் தண்டு, அதன் நுனியில் பால்வண்ண மலர். இரசித்தான்.

வெடுக்கென கண்களை மலர்க்காட்சியினின்று பறித்துக் கொண்டவன், பரபரத்துக் கொண்டே சட்டைப்பையில் கையை விட்டான். இரண்டு செதில்களும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்குமிடையே ஒட்டிக்கொண்டு வந்தன. ஒன்றோடு ஒட்டி, ஒருசெதில் போலக் காட்சியளித்தது. “அப்ப, உன்னொன்னு தொலைஞ்சி போயிருச்சா?”, பதற்றம் கொண்டான். அதையப்படியே எடுத்து விரித்த உள்ளங்கையில் வைத்தான். இரண்டாகப் பிரிந்து தவழ்ந்தன இரு செதில்களும். உள்ளம் உவகையால் பொங்கி வந்தது.

“அதென்றா கனகு? அப்பிடிப் பாக்குற??” கால்சட்டைப் பட்டைகளைப் பூட்டாமல், அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டே கிட்ட வந்தான் இரகு.

கிட்ட வருவானென எதிர்பார்க்கவில்லை. காற்றிலிருந்து கையைப் பிடுங்கிக் கொண்டே இறுக மூடிக்கொண்டான்.

“ஆருகிட்டவும் சொல்லமாட்டேன்னு சத்தியம்பண்ணு. நான் சொல்றன்”

”மாரியாத்தா மேல சத்தியமாடா. நான் ஆருகிட்டயும் சொல்ல மாட்டன். சொல்றா, அதென்றா?”

“செம்பொன்றா, நேத்துதா எனக்குக் கிடைச்சது!”

“அப்பிடின்னா?”

கையை விரித்து, வெளிச்சம் படும்படியாக கிழக்குப் பார்த்து நீட்டினான். காலைக்கதிரவனின் மஞ்சளொளிக்கு இன்னும் இன்னும் அது ஒருபடி மேலே போய் பொன்னாய் ஒளிர்ந்தன இரண்டும்.

“கனகு, இதென்றா மழக்காய்தமாட்ட மின்னுது?”

“செரியான மண்ணுடா நீயி. மழக்காய்தம் அல்றா, இது செம்பொன்றா”

“டே எனக்கொன்னு குட்றா”

“ஒன்னும் கவலப்படாத. நான் இத ரெண்டயும் தமிழ்புக்குக்குள்ளார வெச்சிருவன். குட்டி போட்டதும் குடுக்குறஞ் செரியா? ஆனா, நீ ஆருகிட்டவும் மூச்சுடக் கூடாதுறா. எங்கப்பனுக்குத் தெரிஞ்சுச்சூ.. அவ்ளோதான்”

கால்களின் நடுவே ஒரு குச்சியை வைத்து நிலத்தை உழுதபடிக்கு, ‘டுர்ர்ர்ர்ர்ர்”ரென்று ஓசையெழுப்பிக் கொண்டே பைக் ஓட்டிவாறு வந்தான் சைக்கிள்க்கடை மாரியின் மகன் தங்கவேலு.

“ங்கொக்காலோலி., உன்னிய எங்கெல்லாந் தேடுறது? உங்கம்மா உன்னியத் தேடிகிட்டு இருக்குதாம். எங்கப்பன் உன்னியக் கையோட கூட்டியாறச் சொல்லுச்சு”

மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான். சட்டைப்பைக்குள்தான் அவை இருந்தன.

அம்மா கொடுத்த தூக்குப் போசியைக் கொண்டு போய் கோயில் மடப்பள்ளியில் வைத்துவிட்டு, தன் அப்பனைப் பார்க்காமலே வீட்டுக்கு வந்துவிட்டான். வந்தவன் துரிதகதியில் குளித்துவிட்டு, இட்லி ரெண்டை உள்ளேதள்ளியும் தள்ளாமலும் தின்று கைகழுவி, பைக்கட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினான்.

இறைவழிபாட்டுக் கூட்டம் முடிந்து எல்லாரும் அவரவர் வகுப்புக்கு வரிசையாகச் சென்றமர்ந்தனர். தமிழ்ப்புத்தகத்தில் கைமாற்றி வைத்தான் கனகு. இடப்பக்கம் அமர்ந்திருந்த இரகு, அவற்றைப் பற்றி அடியோடு மறந்து போயிருந்தான். இவன் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். தோராயமாகப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான். கண்களுக்கு அவை தென்படவில்லை. வாத்தியார் பாடம் நடத்துவதைக் கவனிக்காமல், புத்தகத்தில் கண்வைத்தபடி கிடைகொள்ளாமல் தவித்தான். அவைதான் கண்களுக்குத் தென்படமாட்டேன் என்கிறதே? தரையில் வைத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டு போனான். எழுபதாம் பக்கத்திலிருந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடலோடு பாடலாய் ஒட்டிக் கொண்டிருந்தன.

மத்தியான சப்பாட்டு பெல் அடித்தது. எல்லாரும் எழுந்து வெளியே போனார்கள். அடுத்த வகுப்புப் பையன்கள் வந்து கடனாக சில காக்காப்பொன் தரமுடியுமாவெனக் கேட்டார்கள். பொதுவான நாட்களில், சாதா காக்காப்பொன் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்வார்கள். சீனிப்புளியங்காய், இலந்தவடை, பொன்வண்டு, பனையோலைக் காற்றாடி போன்றவற்றுக்கு ஈடாகச் சிலபல காக்காப்பொன்கள் பரிமாறிக் கொள்வார்கள். இன்றைக்கு அதைப்பற்றியெல்லாம் கனகுவுக்கு நாட்டமில்லை. ஞாபகம் வரவே, தன் வகுப்பை நோக்கி ஓடினான்.

துரையான் வகுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தான்.

“கனகு, இரகு எங்கடா?”

“அவன் ஊட்டுக்குப் போய்ட்டு இருக்குறான்”, சொல்லிக் கொண்டே வகுப்புக்குள் ஓடினான்.

பையைத் திறந்து எழுபதாம் பக்கத்துக்குப் போனான். அங்கு அவை இல்லை. மீண்டும் பக்கம் பக்கமாகப் புரட்டினான். கிடைக்கவேயில்லை. புத்தகத்தின் அடிப்பக்கத்தைப் பிடித்தப்படி, எல்லாப்பக்கங்களும் பிரிந்தாடும்படி உதறினான். மயிலிறகின் ஒரே ஒரு பிசிறுமட்டும்தான் காற்றில் அசைந்தாடிக் கீழே விழுந்தது. பைக்கட்டை எடுத்துக் கொண்டு ஓடினான்.

“கனகு, ஏன்டா அழற? என்னாச்சி?? சாப்புடுறதுக்கு வரலையா??”, எதிர்ப்பட்ட சத்துணவு ஆயா மேரியக்கா கேட்டாள்.

பதிலேதும் சொல்லாமல், தன் சித்தப்பாவின் இருப்பிடம் நோக்கி ஓடினான். வீட்டுக்குப் பின்புறம்தான் காயில் கட்டிக் கொண்டிருப்பார் சித்தப்பா. ஆனால் அங்கு அவர் இல்லை. புற்றுச்சாளைக்கு ஓடினான்.

“ஏன்டா தங்கம்? அம்மா எதனாச்சும் அடிச்சுப் போட்டாளா?”, அழுதுகொண்டு வருபவனைப் பார்த்துக் கேட்டார் ஃபிட்டர் நடராசன்.

“சித்தப்பா, செம்பொன் ரெண்டையும் துரையான் திருடீட்டான்”, தேம்பித் தேம்பி அழுதான்.

உரக்கடையை நோக்கிப் போனார்கள் இரண்டு பேரும். மத்தியான நேரமென்பதால் கடையில் யாருமில்லை. ஆறுச்சாமி மட்டும்தான் இருந்தார்.

“ஏனுங், கனகானோட காக்காப்பொன்னுக நம்ம தம்பிகட்ட இருக்குதுங்ளாமா. பையன் சாப்டாமக் கொள்ளாம அழுதிட்டு இருக்கான். சின்னப் பசங்க. கோளாறாப் பேசிக் கொஞ்சம் வாங்கிக் குடுத்தீங்னாப் பரவாயில்ல”

“என்ன காக்காப்பொன்னு? கடையில வந்து பேசற நாயமா இதெல்லாம்? இரு, கூப்புடுறன்”

அப்பாவின் குரல் கேட்டுத் தயங்கி தயங்கி வந்தான் துரை. வந்தவன் அவனாகவே சொன்னான், “அப்பா, அவனோட காக்காப்பொன் எங்கிட்ட இல்லப்பா”.

”சித்தப்பா, இவந்தான் திருடீட்டான். வகுப்புக்குள்ள இருந்து இவந்தான் வந்துட்டு இருந்தான்”

உரக்கடை தங்கவேலுக்கு கோபம் வந்துவிட்டது. மகனை விரட்டினார், ”நீ உள்ள போடா”

“ஏனுங்? தம்பி வேணுமின்னா ஒன்னை வெச்சிகிடட்டு. ஒன்னுமுட்டுமாவது வாங்கிக் குடுங். புள்ள அழுது பாருங்”

“என்னத்தறா வாங்கித் தர்றது? எங்ககிட்டவே படியளப்பு வாங்கித் தின்னுகிட்டு கல்லுகளைப் பொறுக்குற நாயிக. திருட்டுப்பட்டமாடா கட்டுறீங்க? அதும் கடை முன்னாடி வந்து நின்னுட்டு??”

அமைதியாக இருந்த நடசாரன் சொன்னார், “ஏனுங், நீங்க பேசுறது சரியில்லீங். அதுங்கொழந்தைதா. இதுங்கொழந்தைதா. ஆளுக்கொன்னு வெச்சிகிடட்டும்னுதான நான் சொன்னன்?”

“என்ன மயிருக்கு நீ கடைமுன்னாடி வந்து நின்ன? எதுன்னாலும் வீட்டுக்குப் பின்னாடிதான வந்திருக்கோணும்? எல்லாம் அந்த துரைசாமி வாத்தியார் குடுக்குற எடம்டா. இந்த அளவுக்கு வந்து நிக்குது. அண்ணன், தம்பி ரெண்டு பேரும் வீட்ல இருந்திட்டு, வாத்தியாருக்கு உட்டுப் பொழைக்கிற உங்களுக்கு இவ்ளோதூரம் வந்துருச்சுறா”

நடராசன் உறுமினார், “யோவ், இனி ஒரு பேச்சுப் பேசுன. பல்லைத்தட்டிக் கையில குடுத்துருவன். என்னய்யா பேச்சுப் பேசுற?”

ஊர் கூடிவிட்டது. எங்கிருந்தோ காக்காப்பொன்னான் வந்து சேர்ந்தார். அண்ணன் கூட்டத்துக்குள் வந்து சேர்வதைப் பார்த்த நடராசன், அழுதுகொண்டு நிற்கும் கனகுவைத் தூக்கிக் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

நடராசன் வெளியேறுவதைப் பார்த்த உரக்கடை தங்கவேலு மேலும் ஆக்ரோசமாய்ப் பேசினார். தன்னுடைய பங்காளியான துரைசாமி வாத்தியார் சொல்லித்தான் இவர்கள் கடையேறி வந்திருப்பதாய்க் கூச்சலிட்டார். பழனாவை துரைசாமி வாத்தியாருக்குக் கூட்டிக் கொடுத்துக் காசு பார்ப்பதாயும் முழங்கினார்.

காக்காப்பொன்னான் அழுதார். துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஊர்க்கவுண்டர் வீட்டுக்குப் போனார்.

காக்காப்பொன் விற்றுக் கிடைக்கும் சில்லறை வருமானங்கள், கோவில்த்தட்டில் போடக்கிடைக்கும் காசுகள் எல்லாவற்றையும் பழனாள்தான் கையாண்டு வருகிறாள். அவ்வப்போது துரைசாமி வாத்தியாரிடமோ, அவருடைய மனைவியிடமோ கொடுத்து விடுவாள். அவர்கள் அதைத் தொகையானபின், தபாலாபீசில் போடுவார்கள். அல்லது பழனாளிடமே கொடுத்துவிடுவார்கள். அந்தப் பணத்துக்கு எவர்சில்வர் அண்டா, குண்டா போன்றவற்றை நெகமம் சந்தைக்குப் போகும் போது வாங்கிக் கொள்வாள்:. துரைசாமி வாத்தியாரின் அம்மா கிடைமனுசி. தனக்கு சாவகாசமான நேரத்தில், அந்த அம்மாவுக்கு குளிப்பாட்டவும் அன்றாடம் சென்று வருவாள். அவர்கள் அதற்கு ஈடாக அவ்வப்போது பணம் அஞ்சு பத்து கொடுப்பார்கள்.

பாப்பாங்காட்டு சின்னவக்கீல்க் கவுண்டரும் ஊர்க்கவுண்டரும் காதுகுத்து நிகழ்வைப் பற்றியும் வரப்போகும் ஒறம்பரைகளைப் பற்றியும் அளவளாவிக் கொண்டிருந்தனர். காக்காப்பொன்னர் வாசலிலேயே சற்றுநேரம் நின்று கொண்டிருந்தார்.

பேச்சை நிறுத்திவிட்டுச் செருமினார் ஊர்க்கவுண்டர், “என்ன எல்லாம் செரி பண்ணிப் போட்டியா? கோயலைச் சுத்தீலும் செதுக்கியுட்ருக்குதான??”

“அதெல்லாம் செரி பண்ணியாச்சுங்… இந்த ஒரக்கடைக்கார்ரு எம்பொண்டாட்டியப் பத்தி தப்பும்தவறுதுலுமா பேசிக் கூட்டத்தை கூட்டுறாருங். எனக்கு மனசு பொறுக்க மாட்டீங்திங். கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்டாப் பரவால்லீங்”

”அட காக்காப்பொன்னா, எந்த நேரத்துல என்ன பழம பேசுற? போ, நாளைக்கு விசேசத்தை வெச்சிகிட்டு? உம்பொண்டாட்டிகிட்டப் பேசுனயா நீயி?”, ஆற்றுப்படுத்தினார் ஊர்க்கவுண்டர்.

“இல்லீங், நான் கோயல்ல இருந்து நேரா வர்றனுங்”

“அப்பப் போயி மொதல்ல உம் பொண்டாட்டிகிட்டப் பேசு போ”, அனுப்பி வைத்தார் ஊர்க்கவுண்டர்.

பழனாவுக்குக் கோபம். முந்தின நாள் மதியம் சென்ற காக்காப்பொன்னான் மறுநாள் பிற்பகலில்தான் வீட்டுக்கு வருகிறார்.

“ஏ பழனா? நீ, அன்னாடும் தொரசாமி வாத்தியார் ஊட்டுக்குப் போறயாமா? அவர்கோடயேதா இருக்கியாமா?? என்ன சங்கதீன்னேன்??”, இரைந்தார் காக்காப்பொன்னான்.

“இதென்ன இன்னிக்குப் புதுசா கேட்டுகிட்டு? ஆமா, இன்னிக்குக் காலையிலகோடத்தான் போயிப் பாத்துப் போட்டு வந்தன். இப்ப அதுக்கென்ன??”

“அப்ப, ஊருக்குள்ள, ஒரக்கடைக்காரரு சொல்றதெல்லாம் நெசந்தானா?”

“என்ன நெசந்தானா? ஊட்டுல அண்ணன் தம்பி ரெண்டு பேரு இருக்கீங்க? என்ன பிரயோசனம்?? அதான் நான் அவுக ஊட்டுக்குப் போறன், வர்றன்”

காக்காப்பொன் சிராய்க்கும் உளி முன்னாலேயே கிடந்தது. எடுத்தார் காக்காப்பொன்னான்.

சரிந்து விழுந்தவளின் வலதுகை தன் மகனைத் துழாவியது. கனகு, கனகு எனும் முனகல் காற்றோடு கரைந்து போனது.

சராங்கமாய்க் கோவிலுக்குப் போனார். கோயிலுக்குப் பின்னாலேயே கிடைக்கிற அரளிவிதைகளோடும், உச்சிபூசைக்குப் புழங்கியதில் மிச்சமிருந்த பாலோடும் கலந்து போனார் காக்காப்பொன்னான்.

கோயிலடிக்கோ, காக்காப்பொன்னான் வீட்டடிக்கோ யாருமே வரவில்லை. ஊர்க்கவுண்டர் மட்டும் தன் பண்ணையத்து ஆட்கள் நான்கு பேரை அனுப்பியிருந்தார். சாய்ங்காலம் நேரம் இருட்டி வந்தது. யாரும் வாசற்தெளிக்கவில்லை. கலகலப்பாய் இருக்கும் பெரியகருப்பன் டீக்கடை பேசாமலிருந்தது. அரக்கன் இட்டேரியிலிருந்த சாயமரத்திசையிலிருந்து ஆந்தையொன்று அலறும் சத்தத்தில், இந்நேரமும் மசங்கியிருந்த கம்மிய மேகமொன்று நகரத்துவங்கியது. இருந்தாலும் இருட்டுத்தான்.

கோவில், வீடு, புற்றுச்சாளை என எல்லா இடங்களிலுமிருந்த காக்காப்பொன் பொதிகளைக் கொண்டுவந்து மேலே பிரித்துக் கொட்டினார் சித்தப்பா. தீநாக்குகள் ஆளுயரத்துக்கும் மேலாக எழும்பின.

கனகுவைத் தூக்கிக் கட்டியணைத்துச் சொல்லியபடியே வெளியேறினார், “ஊரு, உலகம், சாமி, சனம் எல்லாரும் நம்ம காக்காப்பொன்னுல அலங்காரம் பண்ணிகிட்டாங்க. இப்பப் பாரு, எல்லாம் பத்தியெரியுது!!”

நன்றி: இலக்கியவேல்

11/16/2017

பெருமாள் முருகன் பார்வையில் ’செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு.

எழுத்தாளர் பெருமாள் முருகன் பார்வையில் ’செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு.

10/29/2017

இட்லிகளும் பின்ன நானும்

மடத்தில் சித்தர் இல்லை. ஆகவே இட்லி நான்கினை நிலக்கடலைத் தொகையலுடன் ’மாட் மாட்’டென மாட்டிவிட்டு இங்குமங்கும் பரபரத்தேன். ஏதோவொன்றை இழந்து தவிப்பது போன்ற உணர்வு. அப்பாவின் நினைவுதான் வந்தது. ஆமாம். மேலடவு, பின்னடைவு, அது எதுவானாலும் அப்பாவையே ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன். அவருடைய சறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். உறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். அலைபேசியில் எப்போதும் திரைநிரை(screensaver)யாக உடன் இருக்கிறார். (இஃகி, எந்த மவராசனோ screensaverக்கு திரைக்காப்புன்னு விக்சனரியில போட்டு வெச்சிருக்கார். ஏம்ப்பா ஏன்?? கோயில்ல அம்மன் காட்சியளிப்பில்லா நேரத்தில் சாத்துவது திரைநிரைதானே?) அதை விடுங்கள்.

இட்லி நான்கினை வீசியவுடன் என்னவோ போலிருந்தது. அப்பாவை நினைத்தேன். இட்லிகளை வீசியவுடன் அவர் என்ன செய்வார்? ‘கொஞ்சம் சுடுதண்ணி’ என்று ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் கொண்டு கோப்பையைச் சுருக்கி காற்றில் காண்பிப்பார். ஆகாவென நினைத்துக் கொண்டு நானே காப்பியைப் போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறேன். நாவில் எஞ்சி இருக்கும் நிலக்கடலைத் தொகையலின் கார்ப்பும் காப்பியின் சுவையும் கலந்து எல்லையில்லா இடத்திற்கு என்னை, என் மனத்தை கவ்விக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. செம, சூப்பர் அப்பா!!
-பழமைபேசி.

10/27/2017

அலப்பறை



"அதான, கெடக்கறது கெடக்குது கெழவனத்தூக்கி மணைல வையுங்கற கணக்கா நம்ம பொழப்ப பாத்தாத்தானே வாழ்க்க ஒழுங்கா வோடும்..!! சரிதானுங்கோ?! "

"பின்ன? ஒதிய மரந்தான் தூணாகுமா? இல்ல, ஓட்டாங் கிழிசலுத்தான் காசாகுமா??"

"அதச்சொல்லுங்க, கூள குடியைக் கெடுக்குமாம், குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்குமாம்..!! அப்படியில்ல இருக்கு இங்க பொழப்பு."

"சங்குல வார்த்தா தீர்த்தம், சட்டியில வார்த்தா தண்ணீங்றதெல்லாம் செரி வராதல்லொ? புள்ளீக பள்ளிக்கோடத்துல இருந்து வண்ட்டாங்கொ... போயி அவுகளுக்குத் திங்றதுக்கு எதுனா பொரி கல்ல குடுத்துப்போட்டு வாறன்... குஞ்சுகுளுவானுக அம்மணி, பொக்குன்னு போயிருமல்லொ??"

"அய்ய ஆமாங்கோ, பொடுசுவுளுக்கு திங்கறதுக்கு குடுத்துப்புட்டு, பொறவு சாவுகாசமா வந்து நம்ம பாட்டபூட்டங்காலத்து பழமொழிய நருவுசா எழுதிப்போடுங்கோ..!! காலத்துக்கு அழியாம காத்துப்புடலாமுங்க."

இடையில மூனாவது ஆளு வந்து:, "சபாஷ், சரியான போட்டி. ரெண்டு பேரும் இதோட விட்றாதீங்க. பழ மொழி பேசறதுல யாரு நம்பர் ஒண்ணுன்னு எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகனும். சும்மா பார்த்துக்குனு இருக்கறத விட, நாலு கத்துக்கின மாதிரியும் ஆச்சு. வயல்ல வேல பாக்க பொம்பள ஆளுங்கள கூப்பிட்டா, "கம்புக்கு களை வெட்டினமாதிரியும் ஆச்சு! அப்பிடியே தம்பிக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு!”

”அடுத்தூட்டுக்காரங்கிட்ட வாங்குன கடனும் அடிப்பக்கத்துச் சிரங்கும் அடிக்கடி அரிக்கும்ங்ற கதையா, இந்த ஊர் நெனப்பு அப்பப்ப சொறிஞ்சுட்ருக்குதுங்க... என்னவன்னச் சொல்றீங்க?”

”க்கும், கண்டா ஒரு பேச்சு, காணாட்டி ஒரு பேச்சு”

“கள்ளிக்கு வேலியும் களவுக்குக் கூலியுமெதுக்குன்னு கேட்டா இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவீக அப்புனு”

”இரும்பும் கரும்பாகும், இட்டாலியும் பாழகுங்கற கணக்கா..... இது இனி எங்க போயி முட்டிக்கிட்டு முடியுமோ தெரியலையே...!! ”

“பொன்னே பொன்னேன்னு தாங்கி பொடக்காலீல விட்டு வெளுக்காம இருந்தாச் செரி.”

“கெரக, நம்ம பாட்டுக்கு கண்ட பழமொழிய எழுதிப்புட்டா - “சங்கிலிபுங்லிங் காட்டுக்குள்ள சனிய புடுச்சுக்கிட்டு ஆடுதா, ஏன்னு கேட்க போன என்னையும் புடிச்சுக்கிட்டு ஆட்டுத்தான்னு ஆகிப்போயிடாத எம்பொழப்பு?! இந்த ரெண்டாஜாமா ரவைல என்ன புள்ள வெட்டிப்பேச்சுன்னு எம்மச்சா பேசுவாருங்கோ...அக்காங்..!! போயி சித்த தூங்கிப்போட்டு வாரானுங்க.”

“நமக்கெல்லா வாயிமட்டு இல்லைனா, நாயி கால என்னைக்கோ கவ்விக்கிட்டு போயிருக்குமுங்க...”

“அப்படி என்னாத்த சொன்னாங்க, பட்டும் பவுசும் பொட்டில இருந்துச்சாமா, காக்காசு சந்தையில துள்ளுச்சாமா!”

“கந்தன்னா காவடியாடத்தான செய்வான்?”

“சொல்றவனுக்கு வாய், செய்யறவனுக்குத்தான் சொமை”

“கடலுன்னா உப்பு கரிக்கும்... காடுன்னா தட்டான் ரீரீன்னு ரீங்கத்தான் செய்யும்.... சும்மா புதுப்பொண்ணாட்டம் சிணுங்கல் எதுக்குன்னேன்??”

”எச்ச எலைய எடுன்னு சொன்னதுக்கு எலைய எண்ணிகிட்டு இருந்தானாம்! ஆரப்பா அது? இங்க வந்து எத்தினி லைக்கு, எத்தினி பின்னூட்டமுன்னு எண்ணிகிட்டு இருக்கறதூ??”

உடன் களமாடியவர்கள்: Mythili Thyag Krishna Raj Thirumurthi Ranganathan

10/26/2017

வேய்க்கானம்



 தொறந்திருக்குற ஊட்டுக்குத் தொறப்புக்குச்சி தேடுறவனோடெல்லாம் சகவாசம் எதுக்குங்றேன்? ஓடியாடிப் பாடுபட்டுச் சேக்குற வழியப் பாத்தா உருப்புடுலாம். வேய்க்கானம்ங்றது நெம்ப முக்கியமல்லோ? ஏன்னா, ஒறவும் பகையும் கையில காசிருந்தாத்தான் வந்து சேரும். இருக்குற ஒறவு அந்து போறதும் அந்தக் காசாலத்தான் போகும். அதுனால வேய்க்கானம் நெம்ப முக்கியம்.

 என்றா இவன் நெம்பத்தான் பாடம் போடுறானேன்னு யோசிக்கிறீங்ளாட்ட இருக்கூ? சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும் பரிஞ்சு போடாத சோறும் இருந்தாயென்ன? இல்லாட்டியென்ன?? அதாஞ்சொல்றன். பின்ன. உங்களுக்குன்னு நான் இருக்குறது எதுக்கு? திருவுண்டானா திறமையும் வந்து சேரும்.

தெகிரியமா இருங்க!! ஒழுக ஒழுகப் பேசுனாக் காசாயிருமா? போயி, நீங்களும் உங்க பொழப்பு தழப்பைப் பாருங்க. நானும் என்ற பொழப்பைப் பாக்குறன்!! 

-பழமைபேசி.

10/25/2017

குப்பமேனிப்பூவுல...

அவனுக்கென்னங்க, விட்டா, குப்பமேனிப்பூவுல விட்டஞ்செஞ்சு பூட்டுவேன்னு சொல்வான்! வெக்கமா மானமா சொல்லுங் பாக்குலாம். பின்ன? குத்துக்கல்லுக்கு என்ன கெடக்குது மழயா வெயிலா?? அவம் பொழப்பும் ஓடீட்டுதான இருக்குதூ? என்ன நாஞ்சொல்றது?

ஆமாங், நீங்க சொல்றது வாசுதுவந்தேன். ஏத்துவார ஏத்தி நாளொரு எலியும் புடிப்பான்; ஏய்ப்பாரை ஏச்சி நாளுக்கு நாலு குண்டா ராகிக்களியும் திம்பான் அவன்!! ஏது, நானு என்ன பேசறனா? இம், எலீ லவுக்க போட்டுச்சாஞ் சபையில! போங் போங், போயிப் பாடுபழமயப் பாருங் போங்!!

 -பழமைபேசி.

10/24/2017

காட்டைப் பார்


வெளியே போ
காட்டைப் பார்
குருவி 
கொத்தித்தின்னும் 
அழகைப் பார்
கோரைப் புல்லின்
மலரைப் பார்
தடத்தின் குறுக்கேவோடும்
அணிலைப் பார்
தலைக்கு மேலே போகும்
பட்டாம்பூச்சியைப் பார்
வெடித்து 
விதைகளைத் துப்பும் 
காயைப் பார்
காற்றில் தவழும்
கொடியைப் பார்
போகிறபோக்கில்
புணர்ந்து போகும்
தட்டான் பார்
வேலியில் பூத்திருக்கும் 
கள்ளிப்பூவைப் பார்
வெளியின் ஊடாய்
விதையைச் சுமக்கும்
பஞ்சைப் பார்
ஊர்ந்து செல்லும்
கரையான் பார்
கொம்பின் கீழே
தொங்கும் அந்த
கூட்டைப் பார்
தாவிப் போகும்
முயலைப் பார்
கண்டங்கத்திரி
முள்ளைப் பார்
தும்பைச்செடியின்
இலையைப் பார்
மரத்தைக் கொத்தும்
கொண்டைலாத்தி பார்
இன்று இருக்கும்
நாளை இருக்காது
வெளியே போ
காட்டைப் பார்
காட்டைப் பார்

-பழமைபேசி

10/20/2017

உச்சா




கூடு திரும்பலென்பது எப்போதுமே இன்பமும் குதூகலமும் வாய்க்கப் பெற்றவொன்றாகும். வேலையிலிருந்து திரும்புவது, வெளியூரிலிருந்து திரும்புவது, விடுதியிலிருந்து திரும்புவது, வனாந்திரம் தேசாந்திரம் போய்த் திரும்புவது என எல்லாமுமே உளப்பொங்கலுடைத்தவை; இணையரின் காராட்டுக் காலம் தவிர. அதென்ன இணையரின் காராட்டு காலமென்பது? அதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் நேரமிதுவல்ல. தேவையென்றால், வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

நான் இருக்கும் ஊர், ஒரு பெரிய வானூர்தி நிறுவனத்தின் நடுவவானூர்தி முனைய(hub) நகராகும்.. எல்லா ஊர்களுக்கும் செல்லும் வானூர்திகள் இங்கு வந்து போகும். அதாவது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் பயணிகளை ஒரு வானூர்தியிலிருந்து இன்னோர் வானூர்திக்கு மடைமாற்றக்கூடிய ஊர். ஆதலால், நாம் எங்கு சென்றாலும் நேரடி வானூர்தியில் இரண்டு மணி நேரத்தில் செல்லக் கூடிய பயணமாகத்தான் இருக்கும். வியாழக்கிழமை பிற்பகல் ஒருமணிக்கெல்லாம் ஒரு பொட்டியை மூடி இன்னொரு பொட்டியை கட்டிக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து விடுவோம். வந்தபின், சோதனைச்சடங்குகளை முடித்துக் கொண்டு நேராக இசுடார்பக்சு கடைக்குச் சென்று பெருங்கோப்பை மிகைச்சூட்டு வெண்மோக்கா (extra hot grandee white mocha) வாங்கி விடுவோம். வானூர்தி உட்புகலுக்குச் சற்றுமுன்னர் தேங்குபை சுருங்குபை ஆகுமளவுக்கு அடித்துச் சுகிப்போம். ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாதெனச் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றனர் பெரியோர்.

அன்றைய பொழுது நமக்கான பொழுதாக இருந்து, எவ்வித அக்கப்போர்களும் இழவுகூட்டலுமின்றியிருப்பின், சரியான நேரத்துக்குப் புறப்பட்டுச் சரியான நேரத்துக்கு வானூர்தி வந்து சேரும். பெரும்பாலும் வீடு திரும்பும் போதுதான் மிகச்சரியாக இழவைக் கூட்டுவார்கள். எது, எப்படியிருப்பினும் வானூர்தி வந்து சேர்ந்ததும் பொட்டியை இழுத்துக் கொண்டு செல்லுமிடம் மூத்திரச்சந்தாகத்தான் இருக்கும். சில நேரங்களில், வானூர்திக்குள்ளாகவே பையிலிருந்து நீரிறக்கம் செய்ய வேண்டியிருக்கும். எல்லாம், உள்ளே தள்ளிய தீர்த்தவாரியைப் பொறுத்து என்பதறிக.

கண்ணிமைக்கும் நேரத்தில் கொசுவர்த்தி சுழல்கிறது. உங்களை அப்படியே குண்டுக்கட்டாக கோயமுத்தூர் அவிநாசி சாலையிலிருக்கும் கொள்ளுப்பாளையத்துக்கும் கணியூருக்கும் இடைப்பட்ட பாம்புகள் பல்லிகள் ஓணான்கள் குடிகொண்டு வாழும் பாழும் காட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறேன்.

பகல்வாரம் முடிந்து கொள்ளிரவுவாரக் கிரமத்துக்கு மாறும் சனிக்கிழமைதோறும் வீடு திரும்புவது வழமையாகும். அதாவது, பகல்வாரமெனில் காலை எட்டுமணி முதல் மாலை நான்கரைமணி வரை வேலைநேரம். கொள்ளிரவு வாரமெனில் இரவு ஒரு மணியிலிருந்து காலை எட்டுமணி வரை வேலை நேரம். ஆகவே, சனிமாலை நான்கரையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒருமணிவரையிலுமாக நெடுநேரம் நமக்கு விடுப்பாக இருக்கும். எனவேதான் இந்தகாலகட்டத்தில் ஊர் திரும்புவதென்பது உகந்ததாகக் கருதப்படுகிறது. அதைவிடுங்கள், இப்போது சனிக்கிழமை மாலை நான்கு மணி.

நெஞ்சமல்லாம் கிறுகிறுக்கும். மனசெல்லாம் இறக்கைகட்டி அலேக்காகப் பறக்கும். ங்கொய்யால எப்படா இந்த மணியடிச்சுத் தொலையுமென கிடந்துதவிக்கும் உள்ளம். கழிப்பறைக்குச் சென்று முகம் கழுவி ஒப்பனை செய்து சட்டைக்காலரைத் தூக்கிவிட்டு, வேலைநிமித்தம் அடுத்த வேளைக்கானவனிடம் பணிகளை மாற்றிக் கொடுத்தானபின், எந்த மணித்துளியிலும் மணியடிக்கு்மென எண்ணி ஓட்டமெடுக்கப் பரபரத்துக் கொண்டிருக்கும் கால்கள். அந்தா… அடிக்கிறது மணி, கிர்ர்ர்ர்ர்…

நேரச்சீட்டில் வெளியேறுபதிவிட, outpunch, கூட்டம் நெருக்கி முண்டியடிக்கிறது. டபக். என்னுடைய அட்டையில் விழுந்துவிட்டது முத்திரை. நிறுவனச்சாலைக்குள் ஓடக் கூடாது. கால்கள் வேகவேகமாக எட்டி நடையைப் போடுகின்றன. ஆனால் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து மணிக்குள்ளாக, டவுன் ஆல் சோமனூர் வண்டியொன்று, காந்திபுரத்துக்கு நாற்பத்தொன்று ஏ, அவிநாசியிலிருந்து பூண்டி செல்லும் நேர்வழிப் பேருந்து, இம்மூன்றையும் தவறவிட்டு விட்டால் இழவுதான். அடுத்த வண்டி, ஆறுமணிக்குப் பிறகுதான். அப்படியே வந்தாலும் இந்தப் பாங்காட்டில் நிற்பானா என்பது தெரியாது. வேகுவேகென்று, மேலாகச் சங்கூதிபாளையம் பிரிவுக்கு நடந்து போகவேண்டும். அப்படி நேர்ந்துவிட்டால், யாரைப்பார்த்தாலும் கொன்று தின்ன வேண்டும் போல இருக்கும். இன்றைய நாள் நல்ல நாள், காந்திபுரம் பேருந்தில் இடம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

உலுக்கி உலுக்கி எப்படியோ பீளமேடு வந்து சேர்ந்தாயிற்று. பாதிபேர் இறங்கிவிட்டனர். ஒரு இருக்கையில் இடம் பிடித்துக் கொண்டோம். பெருவேகமெடுக்கிறது வண்டி. இந்நேரமும் உலுக்கிக் கொண்டிருந்த உலுக்குநர்ப் பேர்வழி, இப்போது உலுக்குநர் சட்டையைக் கழற்றியெறிந்து விட்டு புரட்டுநர் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டாரென வைத்துக் கொள்ளுங்கள். புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொண்டே போய்ச் சேர்ந்து விடுகிறது வண்டி. அந்த லட்சுமிமில் வளைவில் நெளிந்தபோது கூட அவ்வளவாகத் தெரியவில்லை. போலீசு குவார்ட்டர்சில் ’சர்ரக்’கெனச் சாகசமாய் வளைந்து திரும்பியதில்தான் கம்பியில் விலாவெலும்புபட்டு நோகிறது. ”அதனாலென்ன, ரொம்ப நல்ல டிரைவர். அஞ்சரைக்கெல்லாம் கொண்டாந்து உட்டானப்பா”, தொண்டாமுத்தூரிலிருந்து வரும் நாதாரியொன்று மெய்சிலிர்க்கிறது.

காந்திபுரம் பேருந்து நிலையமல்ல அது. பெருமைதானம். இந்தக் கோட்டுக்கும் அந்தக்கோட்டுக்குமாக பரந்து விரிந்திருக்கும். சிறைச்சாலை மண்சுவரும் பொருட்காட்சி மைதானப்படலும் ஒன்றுக்கொன்று சந்திக்கிற இடம் வந்தான காட்சியைக் கண்டதும் ஒரே தாவு. உடனிருந்த தொண்டாமுத்தூர்க்காரனாவது சோதிபுரத்துக்காரனாவது, போங்கடாத் தெல்லவாரிகளா, ஒழிங்கடா சனியனுகளா… ஊர்டா, அந்தியூர்டா… வண்டி நிலையடைந்து நின்றதா இல்லையா என்பதையெல்லாம் யார் கண்டார்? ஒரே குதி! எதிரில் குறுக்காக வருபவனுக்கெல்லாம் மனதார நாமாவளிதான். அந்தநாய், இந்தநாய். இதற்கு மேல் நீங்களே உங்கள் விருப்பத்துக்கொப்ப இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

”அண்ணா, இந்த வண்டி பொள்ளாச்சிக்கு நேர்வண்டியா? இல்ல, நின்னு நின்னு போயி எழவெடுப்பீங்ளா??”

“நேர்வண்டிதான் தம்பி, கரெக்டா அஞ்சு அம்பது சில்லறை வெச்சிக்கணும்”

“இருக்கு இருக்கு”

வண்டி நேருவிளையாட்டரங்க வளைவிலிருக்கிற அந்த திடீர்குபீர் மேட்டில்,, அந்த எழவு அன்றைக்கும் இருந்தது என்பதுதான் பேரெரிச்சல். ஏறியிறங்கியதுதும் கனவுலகவாசம் வண்ணவண்ணமயமாக உருவெடுக்கும். கோவைத்தம்பியின் படப்பாடல்கள் வாயிலாக இளையராசா நம்மை உலாவில் ஆழ்த்துவார். அந்தந்த காலகட்டத்துக்கொப்ப, கனவுலக வாழ்வு அமையும். உதயகீதம், இதயகோயில் வரிகளெல்லாம் கைபற்றி அழைத்துப் போகும். புளியமரங்களெல்லாம் வேகவேகமாய் எதிரே ஏன் இந்த வேகத்தில் ஓடுகின்றன என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை. பாழாய்ப்போன குறிச்சி ரெயில்வே கேட்டில் மாட்டாமல் இலாகவாம என்னமாய் ஓட்டுறார் இந்த டிரைவர்? அருமைடா பரஞ்சோதி. யார் அந்த பரஞ்சோதி. யாரோ ஒருத்தன்.

வண்டி மகாலிங்கபுரம் பக்கமாவே வந்து விட்டது. அய்யோ, ஸ்ரீதேவி இருப்பாளா? ஸ்ரீதேவி இருப்பாளா? மனம் ஏங்கும். ஏனென்றால், அவள் மட்டுமே நம்மையும் மதித்துத் தாங்குபவள். இருப்பாளா? இருப்பாளா??

”அய்யோ, புறப்பட்டுப் போறாளே? மணி என்ன? அய்யோ, அஞ்சு மணித்துளி காலத்தாழ்ச்சிதான்! கொள்ளையில போனவன், குறிஞ்சிப்பாடி கேட்லயும் புரவிபாளையம் பிரிவுலயும் நிக்கும் போதே நினைச்சேன். திருட்டுத் தாயோளி, நேர் வண்டின்னு சொல்லிப் போட்டு கழுத்தறுத்துட்டான்”, இறங்கி ஓட்டமோ ஓட்டம்.

கம்பியைப் பிடித்து ஒரு காலை வைத்தாயிற்று. வலக்கையின் கட்டைவிரல், ஒரே ஒருவிரல்தான் ஒட்டுமொத்த உடலையும் அந்தக் கம்பியோடு பிணைத்திருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும், பாடையில்தான் விழ வேண்டும்.

“படியில தொங்கறவங்கல்லாம் மரப்பேட்டையில இறங்கிக்க. இல்லன்னா, உள்ள வா”

அப்பாட, கொஞ்சமாக இடம் கிடைக்கவே, இருகால்களாலும் நிற்க வாய்க்கிறது. ஸ்ரீதேவியா, கொக்கா?! இவள் அல்லாவிடில், நொம்பலம்தான். அந்தியூரில் நிறுத்தமாட்டான்கள். ”கோமங்கலத்துல இறங்கிடு, இல்லன்னா நேரா முக்கோணந்தான்”, மிரட்டுவான்கள். அருமை ஸ்ரீதேவி அன்பானவள். எங்கும் நிற்பாள்.

நரகவாழ்க்கைத் தடங்களிலிருந்து விடுபட்டு, இந்தா வருதுடா ஊர்வாசம். ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி கடந்து வந்துவிட்டதடா கெடிமேடு. கெடி என்றால், படை பரிவாரம் கொத்தளம் நிலைள்ளும் தாவளம். திப்புசுல்தான் படைகளை எதிர்க்க, நாயக்க மன்னரின் கெடிகள் இந்த மேட்டில் நிலைகொண்டதால், இது கெடிமேடு. கெடிமேடு தாண்டி, கோமங்கலம்பூதூர் வந்தாயிற்று. ஆகா, ஆகா. கொத்துமல்லி மணம் கமகமவென மூக்கு நாசிகளில் புகுந்து குருதியில் கலக்கிறது. மின்வெளிச்சத்திலும் கரிசல்மண் கண்களைக் கொள்ளை கொள்கிறது.

“அந்தியூர்ல வண்டி நிக்காது. வல(ளை)வுல வண்டி திரும்பும்போதே எறங்கிக்கணும்”

”ங்கோத்தா, நீ மூடு… இப்ப என்ன நடக்குதுன்னு மட்டும் நீ பாரு”, மனம் பேசுகிறது

அந்நேரமும் சாலையோரத்தில் காத்துக்கிடந்த தண்ணீர் பீப்பா (பீப்பாய்) வண்டி, ”லக், லக், ப்போ…”, ஒரே சுண்டு சுண்டிவிட்டாற் போதும், அந்த ஒற்றைமாட்டு வண்டி நடுரோட்டில் வந்து நிற்கும். பங்காளிகள் பலரும் வந்து நிற்பர். ”ங்கொய்யா ஊருக்கே தெரியும்டா, வலவாம், திரும்புமாம், எறங்கிக்கிடணுமாம்”.

அந்தியூர்… தாய்மண்ணே வணக்கம்!! 

இரவு மணி, எட்டு நாற்பது. நாகராசண்ணன் கடையில் சில நேரம். சத்திரத்தடியில் சில நேரம். வீடு செல்ல மணி ஒன்பது. ஆக மொத்தம் நான்கரை மணி நேரம்.

கட். அந்தியூரிலிருந்து, தற்போது நாமிருக்கும் இடத்துக்கு, தற்போதைய நேரத்துக்குத் திரும்புகிறோம்.

நான்குமணிக்கு மூத்திரச் சந்துக்குப் போனோம். ஒன்பது மணிக்கு வீடு திரும்பியும் மூத்திரசாலம் செய்ய வேண்டுமென்கிற நினைப்பிருந்திருக்கவில்லை. அமெரிக்காவில் புறப்படுமுன் ஒரு பாட்டம் பெய்தல். வந்து சேர்ந்தபின் ஒரு பாட்டம் பெய்தல். ஏனிந்த வேறுபாடு? சிந்திக்கிறோம். அங்கு தட்பவெப்பம் வேறு. வியர்வைச் சுரப்பிகள் அயராது பணியில். இங்கு அதற்கு இடமில்லை. அது மட்டும்தானா காரணம்?

“போடாப் பன்னாட, ஒழுக்கமா அப்பப்ப நீராகாரம், தண்ணி குடிக்கணும்டா. அல்லாங்காட்டி மூட்டு வலி, தலைவலி வரும். ஆயுளுங் குறையும்டாத் தறுதல”, நான் சொல்லவில்லை. அந்த உள்மனக்குரங்கு கொக்கரிக்கிறது.



10/19/2017

நாய்க்கரச்சை

நாய்க்கரச்சை

இந்தகதையப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் சீனிவெடி, இலட்சுமிவெடிகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மருந்துப் பொருட்களை சரியான விகிதத்தில் கலக்கி, அதற்கு நடுவே ஒரு திரியையும் வைத்து தாள்களால் நன்கு இறுகச்சுற்றப்பட வேண்டும். தென்னாட்டு மக்கள் நிரம்பிய இணையத்தில், இது குறித்து சகலதையும் அறிந்தவர்கள் இருப்பர். சுருக்கமாகச் சொல்லின், கன்பவுடரெனும் பொட்டாசியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் திரியின் மூலம் பற்ற வைக்கப்படும் நெருப்பு, காற்றோடு சேர்ந்து வினையாற்றி நைட்ரசன் வாயுவை உண்டு செய்ய, அதன் மூலக்கூறுகள் பெருக்க, உயர் அழுத்தம் ஏற்பட்டு இறுகச்சுற்றப்பட்டிருக்கும் காகிதச்சுற்றினைப் பிளந்தடிக்க காதைக்கிழிக்கும் வண்ணம் பேரோசை உருவெடுக்கும்.

நிற்க. மேலே குறிப்பிட்டபடி சரியான விகிதத்தில் நைட்ரேட் கலக்கப்படாவிட்டாலோ அல்லது இதர வேதிப்பொருட்களின் சமன்பாடு மாறிவிட்டாலோ, பற்றவைக்கப்படும் நெருப்புத் தீண்டும் போது இடம்பெறும் வினையின் செயல் மாறுபடும். வெடிக்காமால், புசுபுசுவென்று குற்றோசையை எழுப்பிக் கொண்டே சற்றுதொலைவு போய் கடைசியில் ஓய்ந்து படுத்துவிடும். இதை நாங்கள், பட்டாசு குசுவுட்ருச்சுடாவென்போம். வெடிக்காது.. மேலும், நாய் தன்வாலை வவ்வவ்வெனக் கடித்துக் கொண்டே நாலு சுற்றுச்சுற்றிவிட்டு ‘ங்க்கவ்’வெனச் சொல்லிப் படுத்துக் கொள்வதைப் போல, சிலவேளைகளில் ஓரிரு வெடிகள் கரகரவெனச் சுற்றிச்சுற்றி வந்து பின்னர் ‘பொடுக்’கென்று சன்னமான சத்தத்தோடு படுத்துவிடும் இதை நாய்க்கரச்சு நமுத்துபோச்சுறாவென்போம்.

இப்படியான வெடிகளை, சரமாக அல்லாமல் தனிவெடியாக விடுவது உண்டு. இலட்சுமிவெடி, சரசுவதி வெடியெல்லாம் கனமாக நிறைய இறுக்கத்துடன் கெட்டியான தாள்களால் சுற்றப்பட்டு பார்ப்பதற்கே திகிலூட்டக்கூடியதாக இருக்கும். இவற்றை நுவாக்ரான், டெமாக்ரான் தகரடப்பாவில் நுழைத்து திரிமட்டும் வெளியே தெரியும்படி பற்ற வைக்க வேண்டும். அப்படிப் பற்றவைக்கும் போது பெருஞ்சத்தத்தோடு டப்பாவையும் வானத்தில் தூக்கியடித்து கூடுதலான ஓசையை உண்டு செய்யும். சீனிவெடி எனப்படுகிற வெடிகள்,, லேசான சிவப்புவண்ணத்தாளில் சுற்றப்பட்டிருக்கும் இவற்றை நுவாக்ரான் தகரத்தில் வைத்தால் தூக்கியடிக்காது. கனத்தின் காரணம், வெடிச்சத்தமும் குறைந்து போகும். ஆகவே, இவற்றை கொட்டாங்குச்சியின் கண்களில் ஒன்றை நோண்டிவிட்டு, அதன் துளையில் திரியை வெளியே தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

மழை ஈரம் இருக்குமென்பதால், கற்கள், ஆட்டாங்கல், அம்மி, உரல் போன்றவற்றின் மீது பட்டாசுநுழைக்கப்பட்ட கொட்டாங்குச்சியை வைத்துப் பற்ற வைக்க வேண்டும்.

இப்படித்தான், காலை ஏழுமணி இருக்கும். வாணா கோபால்சாமி நாய்க்கர் தூக்குப் போசியில் பால் வாங்கிக் கொண்டு அந்த வீதி வழியாகப் போய்க்கொண்டிருந்தார். நாய்க்கர், பெரும் கோபக்காரர். பையன்களுக்கு அவரென்றால் பெரும்பயம். அவர் வருவாரென்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் எல்லாரும், பசனை கோயிலுக்கும் குருநாத வாத்தியார் வீட்டு மதிற்சுவருக்கும் நடுவே கும்பலாக நின்று கொண்டிருந்தோம். பாண்டியனின் தம்பி செளந்தரன்தான், சீனிவெடியைப் பற்ற வைக்கப் போனான். ’ஆராவது வர்றாங்களா பாருங்டா’ என்றான்.

சாமிநாதன் சாப்பாட்டுக்கடை தங்கவேலன் சுற்றிலும் முற்றிலும் பார்த்துவிட்டுச் சொன்னான், ‘ஆரும் வர்ல. நீ பத்த வெக்கிலாம்’.

செளந்தரனும் கையில் வைத்திருந்த ஊதுபத்தியால், கொட்டாங்குச்சியை குருநாத வாத்தியார் வீட்டு மதிலுக்கு வெளியே இருக்கும், மதிற்சுவர் மீது மாட்டுவண்டிகள் இடிக்கா வண்ணம் நடப்பட்டிருக்கும் அந்த முட்டாங்கல் மீது வைத்து திரியில் நெருப்பினை வைத்தான்.

வழக்கத்துக்கு மாறாக அது உடனே வெடிக்கவில்லை. ஒரு சில விநாடிகள் சற்றுக்கூடுதலான நேரத்தை, எடுத்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு அதன் பக்கத்தில் போகவும் அச்சம். அந்த இடைப்பட்ட வேளையில், பசனைகோயிலுக்கு மறுபக்க வீதியிலிருந்து வெளிப்பட்டு, பால்ப்போசியோடு வந்து கொண்டிருக்கிறார் வாணாகோபால்சாமி நாய்க்கர். எங்களுக்கா குலை நடுக்கம். எப்பவுமே ஊர்ப்பையன்களைப் பார்த்து மிரட்டலாக எதையாவது சொல்லிவிட்டுப் போவார். அன்று தீவாளி அல்லவா? நாய்க்கருக்கு வேறென்னவோ யோசனை. விறுவிறுவென வேட்டியை மடித்துக்கொண்ட நிலையில் பால்ப்போசியை தூக்கிக் கொண்டு பாண்டியனின் மளிகைக்கடை முன்பாக எட்டி நடையைப் போட்டார். முட்டாங்கல் மேலிருந்த கொட்டாங்குச்சிக்குள்ளிருந்த சீனிவெடி நாய்க்கரச்சை இடத் துவங்கியது.  கண்ணிமைக்கும் நேரத்தில், அவரின் கால்களுக்கிடையே ஆட்டம் போட்ட கொட்டாங்குச்சி உசுபுசுவென மேலெழுந்த வாக்கில் சரசரவென்றது.

அங்கிருப்பவர்களிலேயே நான்தான்  மிகவும் இளையவன். முதலில் இராசகோபால்தான் கத்தினான். ”தேங்காத்தொட்டி நாய்க்கர் வேட்டிக்குள்ள  பூந்த்துருச்சாட் இருக்கூ? டேய் ஓடுங்டா”.

இவன் போட்ட சத்தமும் கொட்டாங்குச்சியின் உரசலும் நாய்க்கருக்கு பதட்டத்தை உண்டுபண்ண, தூக்குப்போசியைப் போட்டு விட்டு வேட்டியை உதறத் தலைப்பட்டார் நாய்க்கர்.

வீதிமணலில் பால்ப்போசி கவிழ்ந்து மணல் ஈரத்தில் கலந்து கொண்டிருக்கிறது வாங்கி வந்த பால் முழுதும். அரக்கப்பரக்க வேட்டியை அவிழ்த்தவருக்கோ, தான் உள்ளாடை எதுவும் அணியாததைப் பற்றின கவலை இருக்கவில்லை. உதறலோடு உதறலாக உதறிக் கொண்டிருந்தார். கனம் கண்ட பையன்கள்,எல்லாரும் வெலவெலத்துப் பயந்து போய், சந்தைப்பேட்டைக்குள் நுழைந்து உப்பிலிமாரப்பன் பட்டிக்குள் ஓடிப் போய் கற்களின் மறைவில் ஒடுங்கிக் கொண்டனர்..

‘கண்டாரோலி பசங்க, எங்கிட்டியே வேலையக் காமிச்சிட்டாங்டா பாண்டியா!”, பசனை கோயல் தாண்டி கரியூடு, டீச்சரம்மா வீடு, ஆலாமரத்தூர் இராசகோபல் வீட்டு வரையிலும் ஓங்கி ஒலித்தது நாய்க்கரின் பேரலறல்.



10/18/2017

அப்பாடா... தீவாளிடா!!

அப்பாடா... தீவாளிடா!!

இலட்சுமிநாய்க்கன் பாளையம் விடுதியில் தங்கியிருந்து படிக்கிறேன். தீபாவளிக்கு முந்தினநாளே விடுதி மூடப்படுகிறது. பக்கத்து கிராமத்து நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு அழைக்கிறார்கள். நானும் போய்த் தங்கிவிட்டு, கடைசியாக வேலப்பநாய்க்கன் பாளையம் உறவினர் இரங்கநாதன் அவர்களது தோட்டத்துக்குப் போய்ச் சேருகிறேன். மழை பெய்யத் துவங்குகிறது. மழைக்கு இதமாக இராகிவடை, ஆமைவடை, மெதுவடை என மூன்றுவிதமான வடைகளும் சூடாக சுட்டுக் கொடுக்கப்படுகின்றன. குதூகலமாகத் தின்று கொண்டே மாலை முழுதும் கரைந்து போகிறது. எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றம். எவ்விதமான போன் வசதியுமிராத காலகட்டமது. அழவில்லை. அவ்வளவுதான். மனம்முழுமைக்கும் அழுகை அணைகட்டி நிற்கிறது. இராத்திரி எட்டுமணி சியாம் வண்டிக்குப் போயிர்லாம்டா என்கின்றனர் அண்ணன் இரங்கநாதனும் புருசோத்தமனும். அதேபோல மழையோடு மழையாகக் கொங்காடிகள் போட்டுக் கொண்டு அக்கநாய்க்கன் பாளையம் பிரிவில் இரவு எட்டுமணிக்கு நிற்கிறோம். நிற்கிறோம். கோயமுத்தூரிலிருந்து கிராமத்து சாலைகளில் தவழ்ந்து வருகிறது சியாம். மழையோடு மழையாகக் கரைந்து போகிறது நான் அழுத கண்ணீரெல்லாம்.

வண்டிக்குள் ஏறி, நான் போட்டிருந்த உடுப்புகளை எல்லாம் அவிழ்த்து பெட்டியிலிருந்த அழுக்கு உடைகளுக்குள் புகுந்து கொள்கிறேன். இருந்தும் குளிர் கொல்கிறது. வண்டி ஓட்டுநர் செய்யக்கூடாத சாகசமெல்லாம் செய்து ஒருவழியாக திருப்பூர் - பொள்ளாச்சி சாலையை வந்தடைகிறது வண்டி. ஓரமாக நிறுத்திவிட்டு பீடி ஒன்றைப் புகைக்க விடுகிறார். மழையும் ஓரளவுக்கு நின்று விட்டிருந்தது. 

“அண்ணா, மணி என்னாசுங்ணா?” 

“ஒம்பதே முக்கால் தம்பி”. 

மீண்டும் அழத் துவங்குகிறேன். வண்டிக்குள் எண்ணி ஏழு அல்லது எட்டுப் பயணிகள்தாம். அதில் ஒருவர் வருகிறார். “கண்ணு, நீங்க எந்த ஊருக்குப் போகோணும்?”, 

“சலவநாய்க்கன் பட்டிப் புதூருங்க”. 

“வெசனப்படாதீங்க. மழ நின்றுச்சு பாருங். போய்ச் சேந்துரும் வண்டி”. 

நிமிர்ந்து உட்காருகிறேன். வண்டி செஞ்சேரிமலைச் சாலையில் வேகமெடுக்கிறது. மகிழ்ச்சி கரை புரள்கிறது. சற்றே உறக்கமும் கண்களை அணைக்கிறது.

“நிறுத்துங், நிறுத்துங்... வண்டி தெக்கமின்னாப் போகாது. பச்சாக்கவுண்டம் பாளையத்து தரைப்பாலம் முறிஞ்சி போச்சி”

நான் செத்தே போனேன். என்னையும் கடந்து அழுகை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நாங்க நடந்தே போய்க்கிறமுங்க. எல்லாரும் இறங்கிப் போய்விட்டார்கள். எஞ்சியிருப்பது, ஓட்டுநர், நடத்துநர், நான்.

“செரிங்ணே, நாம நெகமம் போயி, வீதம்பட்டி வழியாப் போயி, பிரசிடெண்ட் நாய்க்கர் தோட்டத்துல வண்டியப் போட்டுர்லா. ஆனா, இந்தப் பையனை என்ன பண்றதுன்னுதா தெரீல”, நடத்துநர் ஓட்டுநரிடம் சொல்கிறார். 

விடிந்தால் தீபாவளி. ஒரு சீட்டில் குறுகிப்படுத்துக் கொண்டேன். அழுகையில் என்னையுமறியாது நான் உறங்கிப் போனேன்.எதொவொரு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறும் போது செரியான குலுக்கல். குலுக்கலில் நோக்காட்டில் எழுந்து உட்காருகிறேன். 

“வண்டிய நிப்பாட்டுங்க. ஆரோ, கைய கைய ஆட்டுறாங்க”

“எங்க தம்பு இந்த வண்டியில ஏறுச்சுங்ளா தம்பீ?”

வேலூர், வீதம்பட்டி, வாகைத்தொழுவு, சலவநாய்க்கன்பட்டி எல்லாமும் அதிர்ந்தெழுகிறது. பொட்டியாவது கிட்டியாவது. ஒரே பாய்ச்சலில் பாய்கிறேன். நாடி நரம்புகள் எல்லாமும் ஒருசேரப் புடைத்தெழுந்து பேரோசை ஆர்ப்பரிக்கிறது.  ”அப்பா!”

மகனைத் தேடி நள்ளிரவில் சைக்கிள் எடுத்துக் கொண்டு மழையோடு மழையாக வந்திருக்கிறார். 

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், போட்டாரே பார்க்கலாம் வெடிகளை. ‘பட பட படார்”.

அப்பாடா... தீவாளிடா!!

10/14/2017

அறம்சார் அமைப்பும் ஓட்டும்

1. சாலையில் பயணிக்கும் போது, போக்குவரத்து மின்விளக்கில் மஞ்சள் வண்ண விளக்கு ஒளிர்கிறது. நாம் என்ன செய்கிறோம்? இயன்றவரையிலும் வேகமாக ஓட்டிக் கடந்து விட முயல்கிறோம். அது தவறு. இயன்றவரை நிற்கப் பார்க்க வேண்டும். இயலாதநிலையில், கடந்து விட வேண்டும். Try to stop, not try to go. அது போல, எந்தவொரு அறம்சார்ந்த மக்களாட்சி அமைப்பிலும் தேர்தல் நடத்த முயலவேண்டும். போட்டியாளர்கள் கிடைக்கவில்லையாயின், தேர்தலின்றி அதன் போக்கில் அது போய்விட்டுப் போகட்டும்.

 2. தேர்தல் இடம்பெற்றால், பிணக்குகள் வரும். பகைமை வளரும். இப்படியெல்லாம் அஞ்சிக் கொண்டிருப்பது அல்லது எண்ணுவது, சமூகம் இன்னமும் மேம்படவில்லை என்பதற்கு ஒப்பானது. பத்தாம்பசலித்தனமானது.

 3. முறைப்படி தேர்தல் இடம்பெற வேண்டும். கண்ணியமாகவும் நேர்மையாகவும் திறந்தமனத்தோடு விமர்சனங்களையும் முன்வைத்தே செயற்பட வேண்டும். அதே நேரத்தில் அநாகரிகம், தனிமனித வசையாடல் தவிர்க்கப்படல் வேண்டும்.

 4. நிர்வாகமுடிவுகளில், சாதி சமயம் இனம் வயது பாலினம் முதனாவற்றின் அடிப்படையில் பாகுபாடு, பேதம் பார்ப்பது அறவே கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்திநரை அழைப்பதில் எப்படி இவற்றை முன்னிறுத்தக் கூடாதோ, அதே பாங்கினை அழைக்காமற்தவிர்ப்பதிலும் கடைபிடிக்க வேண்டும்.

 5. எத்தகைய அமைப்பானாலும், அதனதன் நிர்வாகக்குழுவில் இடம் பெற, கலை, இலக்கியம், விளையாட்டு, நுட்பம், தொழில்சார் நுண்ணறிவு, மக்கள்தொடர்புத் திறம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். வெறுமனே உணர்வாளர்கள், பற்றுக்கொண்டோரென இருந்து அமைப்பின் நோக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது. அமெரிக்காவில், கல்லூரியில் இடம்பெற, நிர்வாகத்தில் இடம் பெற இவற்றைத்தான் எடை போடுகிறார்கள்.

 6. குறியீடுகள், கருத்தியல்களால் ஆனது உலகு. ஆகவே பன்முகத்தன்மை இல்லாவிடில் அமைப்போ, வணிகமோ, அரசியலோ, அது எதுவோ, விளங்கவே விளங்காது அல்லது முழுமைப்பயனை எட்டவே முடியாது. தற்காலிகக் கானல்நீராய் இருக்கலாம். ஆனால் மேம்பாட்டை ஒருபோதும் ஈட்டாது. எடுத்துக்காட்டாக, மோகன்தாசு கரம்சந்த் காந்தி, அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, லெனின், ஆபிரகாம் லிங்கன், கென்னடி, பாரதி, ஈ.வே.ரா, வள்ளலார், பாரதிதாசன் முதலானோர் கருத்தியலின் குறியீடுகளேவொழிய, தனிமனிதர்கள் அல்ல. அந்தந்தக் கருத்தியற் கோட்பாடுகளில் இருக்கும் நல்லனவற்றை ஈர்த்துச் செல்லவே அக்குறியீடுகள். மாறாக, அந்தந்த தனிமனிதர்களின் வாழ்வில் இடம்பெற்ற வேண்டாதனவற்றை அமைப்பின் நிர்வாகத்தில் புகுத்திச் செயற்படுவது பன்முகத்தன்மைக்கு எதிரானது.

 7. நிர்வாகக்குழுவில் இடம் பெறுபவர்கள், நாட்டமுள்ளவர்கள், அவரவராகவே குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் பணிகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவேண்டும். அல்லாவிடில், அவர், அவருடைய தனிமனிதநலன், குடும்பநலனுக்கு எதிரானவராகவே கருதப்பட வேண்டும். அமைப்பின் உறுப்பினர்களும், அத்தகையோரை மட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இது அறம்சார் மக்களாட்சி அமைப்பு அல்லது நிறுவனம். வணிகநிறுவனமோ அல்லது தொழில்நிறுவனமோ அன்று.

 8. அமைப்புகளின் செயற்பாடுகளை திறந்த புத்தகமாக, மக்கள் நிர்வாகச் சபைகளின் ஓட்டெடுப்பு விபரங்களைப் பொதுவில் வைப்பதைப் போல, கூட்ட முடிவுகள், தீர்மான ஓட்டெடுப்பு முடிவுகளை மக்களின் பார்வைக்கு பொதுவில் வைக்கப்பட தேர்தலில் இடம்பெறும் போட்டியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்பு, திரைமறைவு ஊழல்களை வெகுவாக ஒழித்துக் குறைவான உழைப்பில் நிறைவான பயனை ஈட்ட வழிவகுக்கும்.

 9. பல்லினமக்கள், பன்முகத்தன்மையென்பது உலகமயமாக்கல், பொருளாதாரமயமக்கல் உலகத்தின் அச்சாணியாக நிலைபெற்றுவிட்டது. Globalization is irreversible. ஆகவே, தனித்துவம் போற்றிக் கொண்டே, அடுத்த வீட்டு, அடுத்த நாட்டு, அடுத்த அமைப்பு, அடுத்த நிறுவனம் போன்றவற்றோடு இயைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படித்தான் பண்டங்களும் பொருட்களும் தொண்டுப்பணிகளும் நடந்தேறிவருகின்றன. ஒரு கூரைக்குக் கீழேயே எல்லாமும் இடம்பெற வேண்டுமென்பது வழக்கொழிந்து போனவொன்றாகும். எனவே, அடுத்த அமைப்பிலிருந்து வல்லுநர்கள் பேசவேண்டும். ஓர் அமைப்பு இன்னோர் அமைப்புடன் இயந்து செயற்பட வேண்டும். Office bearers should be able to work across the aisle. குண்டுச்சட்டியிலிருந்து கொண்டால், இழப்பு குறுக்கில் இருப்பவருக்கே!

 10. அறம்சார் தொண்டு நிறுவனம், மக்கள்சார் கலை இலக்கிய அமைப்பு, மக்களின் உரிமை மேம்பாட்டு இயக்கம் போன்ற அமைப்புகளின் உயிர்நாடியே, அந்தந்த மண்ணின் மையநீரோட்டத்தில் மேம்படுவதுதான். எனவே, மையநீரோட்டத்துடன் ஒன்றிச் செயற்படும் போட்டியாளர்களே தேவை. தனித்துவமும் மரபும் போற்றப்பட வேண்டியவொன்று. அதே வேளையில், தனித்துவவெறியும் தூய்மைவாதமுமென இருந்துவிட்டால் பின்னடைவுதான். ஆகவே, இவ்விரண்டுக்குமான பொருளுணர்ந்து செயற்படும் நிர்வாகிகள் காலத்தின் தேவை.

 இஃகிஃகி, தேர்தல் களம் காணுகிற, காணப்போகிற எல்லா அமைப்பினருக்கும் பாராட்டுகள்! முடிந்து முடிந்து பூமிக்கடியில் புதைத்து வைத்துக் கொள்கிற அமைப்பினரும் விழிப்புணர்வு கொண்டெழ வாழ்த்துகள்!!

 -பழமைபேசி.

10/13/2017

மாடர்ன் மருத்துவம் vs மரபு மருத்துவம்

மாடர்ன் மருத்துவம்
மரபு மருத்துவம்
போலி மருத்துவம்
தம்பொறுப்பு

இவற்றுக்கிடையே சிண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆகையால் நம் புரிதலையும் உளமாரச் சொல்லிக் கொள்வோம். பின்னூட்டங்களைப் பொறுத்து புரிதலைச் சரி செய்தும் கொள்வோம். இஃகிஃகி!

1. அறிவியல், இன்று ஒன்றைச் சொல்லும். புது அறிதல்களுக்கொப்ப இன்று சொல்வதை நாளையே அது மறுக்கக் கூடும். அதுதான் புத்தாக்க அறிவியல். தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கொப்ப அது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். முறைசார் அறிஞர்களை நம்பித்தான் சமூகம் இயங்கியாக வேண்டும். ஆகவே, புதுமை அறிவியல்தான் முதன்மை. (எடுத்துக்காட்டு: நுண்ணோக்கியில் குருதியின் அணுக்களை ஆய்ந்து நோய்க்கூறுகள் கண்டறிவது)

2. மரபு மருத்துவமும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதாலும், உரிய பதிவுகள், முறையான நிறுவுசான்றுப் பதிவுகள் இல்லாததாலும் சிதைவுக்கு ஆட்படுகிறது. ஆனால், முற்றிலும் ஒதுக்கிவிட, நிராகரிக்கத் தேவையில்லை. துய்ப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, அனுபவத்தின் அடிப்படையில் தன்னாய்ந்து ஏற்றுக் கொள்ளலாம். எடுத்ததற்கெல்லாம் வேதிப்பொருட்களை உண்ணாமல், மரபு மருத்துவத்தை நாடலாம். நுண்ணுயிர், தொற்றுநோய், நச்சுயிர்களைக் களைய வேதிமருத்துவத்தை நாடுவதும், சத்துக்குறைபாடுகளுக்கு மரபுமருத்துவம் நாடுவதும் ஒருவரது தெரிவாக இருக்கும் போது நாம் அதை எள்ளி நகையாடத் தேவையில்லை (எடுத்துக்காட்டு: கொட்டம்சுக்காதி தைலம், காஞ்சித்தழை, சாணிப்பூட்டாந்தழை)

3. போலி மருத்துவம். மிடீல உவர் ஆனர். போகிற போக்கில் தன் விருப்பு வெறுப்புகட்கொப்ப, அறமற்றுத் தன்முனைப்பும் தன்னலமும் கொண்டு, பேச்சு, எழுத்துத் திற்மையால் நீக்கமற நிறைந்திருக்கும் பேரறிஞர்களை, வணிக நிறுவனங்கள் வார்த்தெடுக்கின்றன. தன்னறிவுப் போதாமை கொண்டவர்கள் போற்றி வழிபடுகின்றனர். சட்டங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு இத்தகைய போக்கினை மட்டுப்படுத்தலாம்; ஆனால் முற்றிலும் களையவே முடியாது. மாறாக, சமூகம் அறிவுப்புலத்தில் இயங்கித் தன்னறிவுக்கு வசப்படுதலே பின்னடைவினை இல்லாமற் செய்யும்.

4. தம்பொறுப்பு. அய்யன் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே எல்லாமும் சொல்லிப் போய்விட்டார். அவற்றை உணர்ந்து இருத்தலே பெரும்பயனை ஈட்டும். https://youtu.be/dPDyXlkf3zo

(இதையெல்லாம் பேசி, ஒரு விவாதப் பொருளாக்க வேண்டி இருக்கு. சை... where is the common sense heading?)

10/10/2017

Terrapin Point (ஆமைமுனை)

நயாகரா ஆற்றின் மேல்நுனிக்கு அருகில் நின்று, பெருங்கொள்ளளவு கொண்ட ஆற்றுப்பாய்ச்சல் அருவியாய் வீழ்வதைக் காணலாம். காண வருபவர்களுள் எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக ஆசியர்கள். ஊர்தித் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போதே குதூகலத்துடனும் அலைபேசியுடனுமாக ஆர்ப்பட்டமாய்ப் புறப்பட்டு வருகிறார்கள். எங்கும் பேச்சொலிதான். உள்ளம் பொங்கத் தற்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். புறப்பட்டு அடுத்த இடத்துக்குச் செல்ல விரைகிறார்கள். இருக்கும் எல்லா இடங்களையும் பார்த்துவிட வேண்டுமென்கிற வேட்கை.

 ஏற்கனவே பலமுறை சென்று வந்த இடம். எனினும் அமெரிக்கக் கரையில் இருந்து காண்பது இதுவே முதன்முறை. ஆனால், நம்மவர்களின் ஆர்ப்பாட்டம் என்னில் குறுக்கிட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு வெள்ளைக்காரக் குடும்பம்; இரு பிள்ளைகளோடு. மறுகோடியில், கூட்டத்தினின்று விலகி நின்று கொண்டனர். வானத்தைப் பார்க்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கைக் காட்சிகளில் தொலைந்து போகிறார்கள். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. எப்போதாவது ஒருவரின் கண்கள் மற்றவரின் கண்களைப் பார்க்கின்றன. கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். கணவன் மனைவியும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நெடுநேரம் தியான மனநிலையில் இருந்து காலத்தை நையப்புசிக்கின்றனர். ஒரு பொழுதின் போது, அவர்களுக்கே தெரியாமல், எட்டுக் கண்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருகின்றன. காலத்தின் சாட்சியாய், இடத்தின் சாட்சியாய் ஒரு படம் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர். நிதானத்தை அளவிடும் பொருட்டுத்தான், குறுக்கே செல்கிறேன். நயாகராச்சாரலின் மென்மையைத் தோற்கடிக்கின்றன அவர்களின் புன்முறுச்சிந்தல்! அல்ல, பண்பாட்டுப் புன்னகை!!

8/02/2017

"செவ்வந்தி” நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த ருசிகரம்!!

"செவ்வந்தி” நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த ருசிகரம். முன்னதாக நூலைப் பற்றிப் பேசும் போது, ஒருவர் (அந்த ஒருவர் யார் என்பதைப் பிறகு பார்ப்போம்) இந்த நூலில் பதினாறு கதைகள் இருக்கின்றன. பொதுவாக ஐந்தின் அடுக்குகளாக 10, 15, 20 என்ற எண்ணிக்கைகள் கதைகள் இருக்கும். ஆனால், இதில் 16 இருக்கின்றன. ஏனென்று தெரியவில்லை எனச் சொல்லிவிட்டு, அதற்குரிய விளக்கத்தை நூலாசிரியர் குறிப்பிடுவாரென எதிர்பார்க்கிறேனென்று பேசினார்.

கடைசியாக எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்த போது, அரங்கத்தை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதைக் காட்டிலும், தேனீ, பெங்களூர், ஈரோடு, பவானி போன்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் ஊர் திரும்ப நேரமாகிவிட்டதே, இன்னும் இரவு உணவு உண்ண வேண்டியிருக்கிறதேயெனப் பல சிந்தனைகள் மனத்துக்குள் ஓடிக் கொண்டிருந்தமையால் சுருக்கமாகப் பேசி அமர்ந்து விட்டேன்.

விழாவுக்கு வந்திருந்தவர்களுள் பலர்,, நூலை முழுமையாக வாசித்து விட்டு, “Is there a link between the 16 stories i mean the concept; I tried analyzing but didn't get picture”, மூளையைக் கசக்கோகசக்கென்று கசக்கிக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. இஃகி, அவர்களுக்குரிய விடை இதுதான்!!

 நம்ம ஊர்ல கிலோகிராம் மாதிரி அமெரிக்காவுல பவுண்டு. ஒரு பவுண்டுக்கு பதினாறு அவுன்சு. அது போல இந்த ஒரு புத்தகத்துக்கு 16 கதைகள் இருக்கட்டும்னு போட்டது குத்தமா?

அந்தக் காலத்துல ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள் இருந்தன. அதைப் போல ஒரு தொகுப்புக்கு பதினாறு கதைகள் இருக்கட்டும்னு போட்டது குத்தமா?

மூத்த புள்ள பிறந்த நாள் பதினாறு. செரி, பதினாறு கதைக இருந்துட்டுப் போகட்டும்னு போட்டது குத்தமா??

சுவீட் டென், சுவீட் பிஃப்ட்டீன், சுவீட் டுவெண்ட்டின்னு சொல்லிச் சொல்றது இல்ல. சுவீட் சிக்சுடீன்னுதா சொல்லிச் சொல்றம். அப்படி சுவீட் சிக்சுடீன் இருந்திட்டுப் போகட்டும்னு போட்டது தப்பா??

பதினாறுங்றது முழுமையின் குறியீடாக ஒலகம் முழுமைக்கும் கடைபிடிக்கப்பட்டு வருது. அப்படி முழுமையாக இருக்கட்டுமேன்னு பதினாறு கதைகள் செவ்வந்தியில இடம் பெறுவது குத்தமா??

 இஃகிஃகி, பதினாறினைப் போற்றுவோம்! பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோம்!! கொளுத்திப் போட்ட எழுத்தாளர் மாப்பு ஈரோடு கதிர் அவர்கட்கு நன்றி!! 

நூல்களைப் பெற அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு - 9894717185 

நூலாசிரியரிடம் பெற: pazamaipesi@gmail.com 

இணையத்தில் பெற: https://www.udumalai.com/sevvandhi-pazhamaipesi.htm

7/30/2017

”செவ்வந்தி” சிறுகதை நூல் வெளியீடு - படத்தொகுப்பு



ஜூலை 9, 2017 ஞாயிறு மாலை 3:30 - 6:00
ஓசன் உணவகம், திருச்சி சாலை, சூலூர். கோவை.

"செவ்வந்தி” சிறுகதை நூல் நான்கு நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, குறைவான காலத்தருவாயில் ஏற்பாடு செய்யப்பட்டதும் எளிமையானதும், ஆனால் நிறைவாய் அமைந்ததுமான ஒரு விழா. நிரம்பிய அரங்கம். சுற்றமும் நட்பும் உறவு பாராட்டிய ஒரு விழா. அனைவருக்கும் நன்றி!!

நூல்களைப் பெற அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு - 9894717185

நூலாசிரியரிடம் பெற: pazamaipesi@gmail.com

இணையத்தில் பெற: https://www.udumalai.com/sevvandhi-pazhamaipesi.htm

அரங்கமும் உணவும்: ஓசன் உணவகம், சூலூர்

படங்கள்: SKS காட்சி வினையகம், பாப்பம்பட்டி[ப் பிரிவு

இசை: காப்புரிமை விலக்கப்பெற்ற இணையத் தரவிறக்கம்

வாசித்து வாழ்தல் இனிது! நூல்களைப் போற்றுவோம்!!

7/28/2017

”செவ்வந்தி” சிறுகதை நூல் வெளியீட்டு விழா, உரைகள், படங்கள்


ஜூலை 9, 2017 ஞாயிறு மாலை 3:30 - 6:00
ஓசன் உணவகம், திருச்சி சாலை, சூலூர். கோவை.








"செவ்வந்தி” சிறுகதை நூல் நான்கு நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, குறைவான காலத்தருவாயில் ஏற்பாடு செய்யப்பட்டதும் எளிமையானதும், ஆனால் நிறைவாய் அமைந்ததுமான ஒரு விழா. நிரம்பிய அரங்கம். சுற்றமும் நட்பும் உறவு பாராட்டிய ஒரு விழா. அனைவருக்கும் நன்றி!!

நூல்களைப் பெற அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு - 9894717185

நூலாசிரியரிடம் பெற: pazamaipesi@gmail.com

இணையத்தில் பெற: https://www.udumalai.com/sevvandhi-pazhamaipesi.htm


7/24/2017

உவந்துரைக்கும் தமிழ்மரபு

மாந்தனின் அடிப்படைப் பண்புகளில் இன்றியமையாதவொன்றாக அமையப் பெற்றதுதான், தானும் தான் சார்ந்த மக்களின் பழக்கவழக்கங்களை நினைத்துப் பார்ப்பதும், இயற்கையோடு இயைந்து வெகுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுதுமான நியதிகளை நினைந்து போற்றும் பண்பாகும். அப்படியானவற்றைத்தான் மரபெனப் பேணி அதன்வழி செல்லமுற்படுகிறோம்.

’எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர், அப்படிச் செப்புதல் மரபே’ என்று நன்னூலாரார் உரைக்கிறார். அதன்படி, அறிவுசார்ப் பெரியோர் எதை எந்தவாக்கில் சொல்லிச் செல்கின்றனரோ அவ்விதமே பற்றியொழுகுதல் மரபென்றாகிறது.

தமிழ்மரபின் கூறுகளின் சிலவாக, சடங்குகள், வழிபாட்டு முறைமைகள், திருவிழா வழிமுறைகள், மருத்துவ முறைகள், நிகழ்த்துகலைச் செயல்முறைகள், விளையாட்டு முறைகள், கைவினைக்கலைமுறைகள் முதலானவை இடம்பெறும். இவற்றுள் சடங்குகள் என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் இடம் பிடிப்பதாலும், சுருங்கச் சொல்வதற்கு உகந்ததாக இருப்பதாலும் அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பது உசிதமாயிருக்கும்.

சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறைப் பழக்கங்கள் ஆகும். மனிதச்சமூகம் வாழ்வினை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஓர் ஒழுங்கு என்றுகூட இதனைச் சொல்லலாம். இப்பழக்கங்கள் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் காலத்திற்கொப்ப மறுசீரமைக்கவும் ஆட்பட்டதாயும் இருக்கலாம். தமிழரின் வரலாற்றுப் பார்வையில், அவற்றை இருந்தது இருந்தபடியே திரும்பிப் பார்ப்பது தற்போதைய தேவையாய் இருக்கிறது.
\
வாழ்க்கை வட்டச்சடங்குகளில் பிறப்பின் நிமித்தம், சேனைதொடுதல் (சேய் நெய் தொடுதல், சேயுக்கு இனிப்புக் கலந்த நெய் கொடுத்தல்), தொட்டிலிலிடுதல், காது குத்துதல் முதலானவை இடம் பெறுகின்றன. பிறப்புக்கடுத்து பூப்புச்சடங்கு, திருமணச்சடங்கு ஆகியன பங்காற்றுகிறது. திருமணச்சடங்கின் உட்கூறுகளாக, பரிசம்போடுதல், முகூர்த்தக்கால் நடுதல், தாலிகட்டல், வளைகாப்புச்சடங்கு முதலானவை விளங்குகின்றன. இறப்புச்சடங்கின் உட்கூறுகளாக, குளித்தல், துணிசாத்துதல், வணக்கஞ்செலுத்தல், பாடைவிளங்கல், கொள்ளிவைத்தல் முதலானவை இடம்பெறுகின்றன. வளமைச்சடங்குகளின் உட்கூறுகளாக, மழைச்சடங்கு, முளைப்பாரிச்சடங்கு முதலானவை இடம் பெறுகின்றன.

கலைமரபுகளில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது நாட்டுப்புறக்கலைகளாகும். பொதுவாக நாட்டுப்புறக் கலைகளை, நிகழ்த்து கலைகள் (performing arts), கைவினைக் கலைகள் (material arts) எனப் பிரிக்கலாம்.

நிகழ்த்துகலைகளில் முக்கியமானவையாக, தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப்பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி, கைச்சிலம்பம், சக்கையாட்டம், மரக்கால், தப்பு, புலிக்கலைஞன், வில்லுப்பாட்டு முதலானவை இடம் பெறுகின்றன.

தமிழர் சார்ந்த, தமிழர் உற்பத்தி செய்யும் கைவினைக்கலைப் பொருட்கள் உலகம் முழுமைக்கும் புகழ் பெற்று விளங்கின. அவற்றை முறையே, மண் சார்ந்த கலைகள், மரம் சார்ந்த கலைகள், ஓலை சார்ந்த கலைகள், காகிதம் சார்ந்த கலைகள் எனப் பிரிக்கலாம்.

தமிழர்தம் கைவினைப் பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், இயற்கைச் சூழலுக்கு மாசுநேராவண்ணமிருப்பதாயுமே இருக்கின்றன. ஆற்றோரங்களில் விளையும் மூங்கில், கோரைப்புல், வைக்கோல், வயற்பகுதிகளில் கிடைக்கும் களிமண், செம்மண், ஆற்றுமணல், மலைப்பாங்கான பகுதியில் மரம், செடி, கொடி, தாவரச்சாயங்களே ஆதாரமாக விளங்கின. மண்சார்க் கலைகளுள் சுடுமண்ச் சிற்பங்களும் பொம்மைகளும்,  மரம்சார்க் கலைகளுள் மரப்பாச்சியும் முக்கியமானவையாக விளங்கின. இவைதவிர்த்து, வாழ்க்கைக்குத் தேவையான உறி, பிரிமனை, சால், கூடை, கயிறு என யாவும் கைவினைக் பொருட்களாலேயே கட்டமைக்கப்பட்டன.

கலைகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவையாக இருப்பினும், அவை மேம்படும் முறையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாட்டுப்புற நிகழ்த்து கலைகள், கைவினைக் கலைகள் அனைத்து இனமக்களாலிம் நிகழ்த்திக் காட்டப்படுகின்றனயென்றாலும், குறிப்பிட்ட சில கலைகள் அக்குறிப்பிட்ட இனமக்களாலேயே பேணிப்பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இனச்சார்புக் கலைகள் என வழங்கப்படுகின்றன. அம்முறையில், தமிழர்தம் கலைகளையும் நமக்கேயுரிய மரபினையும் பற்றியொழுகிப் பேணுவது நம் கடமையாகும்.
பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் உயிர்ப்புக்கு அடிகோலுமெனும்பாங்கில், கலைகளைக் கற்று திருவிழாக்களில், வாழ்வின் சடங்குகளில் இடம் பெறச்செய்தல் போன்ற செயற்பாடுகள், அவற்றை அடுத்த தலைமுறையினர்க்கு இட்டுச்செல்ல வழிவகுக்கும்.

எந்த இனத்துக்கும் மெய்யாக அதன்மொழியும், உயிராக அதன் பண்பாடும் விளங்கும். அத்தகு மொழியும் பண்பாடும் தத்தம் தனித்தன்மையைக் காக்கும் பொருட்டு அதனதன் மரபினைப் பேணுவது இன்றியமையாததாகும். பண்பாட்டின் மரபியற்கூறுகளாக அதன் கலைகளும் வாழ்வியற்சடங்குகளும் விளங்குகின்றன. பண்பாட்டின் மரபுவழி நமக்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு கொடைதான் வாய்மொழி இலக்கியம் என்பதாகும்.

வாய்மொழி இலக்கியத்தின் உட்கூறுகளாக இருப்பன, பழமொழி, சொலவடை, விடுபுதிர், கதைசொலல், வெவ்வேறு அமைப்புகளைக் கொண்ட பாடல் வகைகள் போன்றவையாகும். வாய்மொழியாக மட்டுமே மரபுபோற்றி வாழ்வாங்கு வாழ்ந்து வருதலால், இவற்றுக்கான சிறப்பினை கடந்த நூற்றாண்டுகளில் தரத் தவறிவிட்டோமென்கிறார் எழுத்தாளர் தி.ஜானகிராமன். வாய்மொழி இலக்கியத்தைத் தெருவோரப்பூக்களென அவர் வர்ணிக்கிறார். தெருவோரத்தில் மலரும் நெருஞ்சி, ஊமத்தை, சாணிப்பூட்டான், கள்ளி, கற்றாழை, எருக்கு, குப்பைமேனி, தும்பை, ஆவாரை முதலானவை அழகு கொண்டவையாயினும், யாரும் அவற்றைக் கவனித்து அதற்கான விழுமியத்தைப் போற்றுவதில்லை. அதைப் போலவே வாய்மொழி இலக்கியமும் போற்றப்படாமற் போய்விடக்கூடாதென வலியுறுத்துகிறார் அவர். இப்படியான மரபுவழி வாய்மொழி இலக்கியத்தை, அதன் உட்கூறான கதைசொலல் பாங்கிலேயே உற்றுநோக்குவது உகந்ததாக இருக்கும்.

மாசித்திங்கள் மதியப் பொழுதொன்றில் தன் தாயுடன் தானும் இணைந்து கடலைக்காட்டில் களையெடுத்துக் கொண்டிருந்தான் மாரப்பன். வெயிலின் தாக்கம் தகிக்கவே வயற்காட்டிலிருந்த படைக்குருவிகளெல்லாம் சோவென எழும்பி நீர்நிலைவாக்கில் பறந்து போயின. இவனும் கண்களை வீசித் துழாவத் தலைப்பட்டவன் தன் தாயைப் பார்த்துச் சொல்கிறான், “ஓடோடுஞ் சங்கிலி, உருண்டோடுஞ்சங்கிலி, பள்ளத்தக்கண்டா பாஞ்சோடுஞ்சங்கிலி, இங்கன அடச்சி வெச்ச சங்கிலி, எங்கைக்கு அகப்படுதில்லியே! அகப்படுதில்லியே!!”. அதற்கு மாரப்பனின் தாய் காளியம்மாள் மறுமொழிகிறாள், “இருந்ததெல்லாம் தாகங் கொண்டு போச்சி, எட்டிப் போடு நடைய வெரசா ஊட்டப் பாத்து!!”.

தாயின் சொற்கேக்கும் மகனல்லவா மாரப்பன், கூடவே தாகமும் அவனை நெருக்கியது. தன் காட்டிலிருந்து புறப்பட்டு கிழக்கு நோக்கிப் போகும் அரக்கன் இட்டேரியில் நடையைக் கூட்டினான். நான்கு வயற்காடுகள் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, இட்டேரியின் கள்ளிக்கற்றாழை வேலிக்கப்பால் தன் மாமன் மகள் தனலட்சுமி மாடுகள் மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் மொழிந்தான், “கம்மங்கருதக் கண்டா கை சும்மாயிருக்குமா? மாமன் மகளைக் கண்டா வாய்தான் சும்மாயிருக்குமா??”.

தம்மை வம்பிக்கிழுக்கும் தம் அத்தை மகனின் கொக்கிமொழிச் சொலவடைக்கு ஆட்பட்ட தனமொழி தன்பங்குக்குப் பாட்டொன்றை எடுத்து விட்டாள். “ஏலே ஏலே சின்னப்பயலே! ஏழுருண்ட தின்னிப்பயலே!! குண்டுச்சட்டி வயித்துக்காரா, கொண்ட்டு வாடா உம்பாட்ட!! காணாம வண்டியேறி திலுப்பூரு ஓடிநல்லாப் போவமா?? கண்மணியே ஒத்துமையா வாழ்வோமா?? கண்மணியே ஒத்துமையா வாழ்வோமா?? பேச்சு மறக்க வேண்டாம்! பெத்தவளக் கேக்க வேண்டாம்!!”.

தனலட்சுமியின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாட நினைத்தவனின் கண்களில் எதிர்ப்பட்டாள் அதேவூரைச் சார்ந்த மச்சுவீட்டுப் பர்வதம் அம்மாள். பர்வதத்தைக் கண்டவன் ஏதுமறியாதவன் போலப் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவள் அவர்களிருவரையும் விடுவதாயில்லை. இவர்களைப் பார்த்து முணுமுணுத்துச் சொன்னாள், ”இன்னும்  மொளச்சி மூணு எல விடுல… இப்பவே புள்ளயம் பையணும் சோடி போட்டுக்குறாங்க சோடி??!”.

இங்கே பாவிக்கப்பட்டிருக்கும் சொலவடையில் ஆழ்ந்த பொருள் பொதிந்திருப்பதை நாம் காணலாம். விதை விழுந்து, வேர் விட்டுப் பின் இரு இலைகளாகத் துளிர்ப்பதை நாம் பார்த்திருப்போம். அது முளைப்பதன் அறிகுறி. அதற்குப் பிறகு துளிர்க்கும் மூன்றாவது இலை வளர்ச்சியின் குறியீடாகும். அதையொட்டித்தான், இவர்கள் இன்னமும் வளர்ந்து ஆளாகவேயில்லையெனும் அங்கலாய்ப்பாகச் சொல்கிறாள் பர்வதம், “இன்னும் முளைச்சி மூணு இலை விடலை” என்று.

”காடு காத்தவனுக்கும் பொண்ணு மொறைக்கும் எப்பயும் பலனுண்டு.. ஒடஞ்ச சங்கெல்லாம் வந்து ஊத்துப் பரியிலன்னு ஆரு கேட்டாங்க இப்ப??”, என்று சொல்லித் தன்னை வம்புக்கிழுத்த பர்வதத்துக்கு எதிர்வாக்கு விட்டான் மாரப்பன்.

”இழுத்துப் பிடிச்சிக் கருப்பட்டியக் குடுத்து கழுத்தப்பிடிச்சி காரணத்தைக் கேட்டாத்தான் என்ன?” என்று மனத்துக்குள் பேசிக் கொண்டாள் பர்வதம்மா. இருப்பினும், “நமக்கெதுக்கு வம்பு? அண்டப்புளுகன் காட்ல கடுகு மொடாத்தண்டி விளையுதுங்ற பயலுவளோட நமக்கென்ன பேச்சு??” என நினைத்தபடியே சென்றுவிட்டாள் பர்வதம்.

அரக்கன் இட்டேரியிலேயே ஊர்நோக்கி வந்த மாரப்பன் ஊரெல்லையிலிருக்கும் வீதியில் நுழைந்து கொண்டிருக்கும் போது, ஊர்க்கங்கிலிருக்கும் தன் வைப்பாட்டி அன்னக்கொடி வீட்டிலிருந்து பாட்டையன் பாடும் பாட்டுக் கேட்கிறது அவனுக்கு. “ராரிராரி ராரோ ராரிராரி! ராரிராரி ராரோ ராரிராரி!! எங்கண்ணே கனியமுதே கட்டழகே ஏனழுதாயொ? பொன்னே புதுப்பூவே பூமிவந்த தேவதையே! ஏனழுதாயொ?
உன்னுடைய ஏலம்பூ வாய்நோக தேம்பியழுவாதே! என் சிந்தை சிறுக்குமடி தேம்பியழுவாதே,  என் சிந்தை சிறுக்குமடி தேம்பியழுவாதே!!”.

வீதியில் நடந்து கொண்டிருந்த மாரப்பன் சிரித்துக் கொண்டே எதிர்ப்பாட்டு பாடினான், “”வீட்டிலே இருக்குதல்லோ சமத்தூருப் பெருங்கட்டிலு? உள்ளூர்க் குறுங்கட்டிலுங்
கெடுக்குதல்லோ ஏரொழவு?!”. அதாவது சமத்தூரிலிருந்து மணமுடித்து வந்த மனைவி இருக்கையில், தன் உழவு வேலையைப் பாழாக்கிக் கொண்டு உள்ளூர் வைப்பாட்டி வீட்டில் இருக்கலாகுமோயெனப் பாட்டின் வழியாய்ச் சாடுகிறான் மாரப்பன். இவனது குறும்புப் பாட்டைக் கேட்ட பாட்டையன், தன் துண்டினை உதறித்தோளில் போட்டுக் கொண்டு வெருட்டெனக் கிளம்பிப் போனான்.

ஏக்கப்பெருமூச்சோடு சல்லாபத்தைக் கெடுத்த மாரப்பனைக் கண்டு சினந்து கொண்டாள் அன்னக்கொடி, “விளையும் பயிர் முளையிலே! வெதக்காயும் பிஞ்சுலே!!
வெச்சி வறுக்குற நாளும் வராமலாப் போயிரும்?!”. இந்த பழமொழியைக் கேட்ட மாரப்பன் மீண்டும் கேலியாகப் பாடினான், ”மொட்டயும் மொட்டயும் சேந்துச்சாம்! முருங்கமரத்துல ஏறுச்சாம்! கட்டெறும்பு கடிச்சுச்சாம்! காழ்காழ்னு கத்துச்சாம்!! கொப்பொடிஞ்சு விழுந்துச்சாம்! குண்டி தெறிக்க கெழக்கமின்னா ஓடுச்சாம்!!”

பாடிக்கொண்டே ஊருக்குள் நுழைந்து விட்ட மாரப்பனுக்கு, அந்த அரசமரத்தைக் கண்டதும் மரத்தின் பாகங்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தன. அந்த மரபுச் சொற்களை நினைத்து அகமகிழ்ந்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்வன் நினைத்துக் கொண்டது, “அடிமரத்தினின்று பிரிவது கவை. கவையிலிருந்து பிரிவது கொம்பு. கொம்பிலிருந்து பிரிவது கிளை. கிளையிலிருந்து பிரிவது சினை. சினையிலிருந்து பிரிவது போத்து. போத்திலிருந்து பிரிவது குச்சி. குச்சு(சி)னின்று பிரிவது இணுக்கு.

தமிழ் மரபினன் என்போன் மயக்குடைமொழி விடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் எனப் போற்றிப் பாடுகிறது பழம்பாடல். அதற்கொப்ப மொழியின்பாற்பட்டும் பண்பாட்டின்பாற்பட்டும் மரபுபோற்றி, மொழியும் கலைகளும் பேணப்படுதல் அவசியம். அதையொட்டி அவற்றையெலாம் நம் வழித்தோன்றலுக்கு கடத்திச் சொல்வோம்! அதனதன் விழுமியம் போற்றிக்கொண்டே!!

(ஃபெட்னா 2017, ஆண்டுவிழா மலரில் வெளியான கட்டுரை)

உசாத்துணைநாட்டுப்புறக் கலைகள் ச.தமிழ்ச்செல்வன்