6/08/2008

சர்வதாரி - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு அன்னைக்கு எழுதி குழுமத்தாரோட பகிர்ந்துகிட்ட வாழ்த்து இது. ஒருங்கீட்டுக் குறியீட்டு(unicode)ல தட்டச்சு மூலமா, பதிய இப்பத்தான் வாய்ப்பு கிடச்சிருக்கு.

பெய்த மழையில்

முற்பகலிலே கட்டியம் கூறிய,
தும்பிக்கூட்டம்!
பெய்த மழையில் பெருத்துப்போனது
வெடிக்காத பருத்திக்காய்கள் !!

சுற்றி வளைத்தடித்த சாரலில்
சுத்தமாகிப் போன கோபுரக்கலசங்கள்!
பொங்கிய கண்மாயைச்சுற்றி வேடிக்கை
பார்த்த ஊர்க்கூட்டம்!!

திடீர் எனப்பிறந்த சிறுகுளங்கள் ஊர்த்தெருவில்;
நீர் கிழிய, அதில் ஏர்க்குச்சி ஒட்டிய சிறுவர்கள்!
ஊர்க்கண்மாயில் சில்லடித்துப் போட்டி
நடத்திய உற்சாக விடலைகள்!!

ஏர்க்கலப்பை தேடி அங்குமிங்குமாய்
அலையும் நேற்று வரை சோம்பிய உழவன்!
கைக் களை எடுக்க நெட்டி முறித்து,
ஆயத்தமாகிக் காடு நோக்கும் காரிகைகள்!!

மட்டம் உயரக்கண்டு கேணியில் சாலோட்ட
காளைகளை நோக்கும் உழைப்பாளி!
அடித்த மழையில் புடைத்த காளான்களைப்
பறிக்கப்போன முதியவர் கூட்டம்!!

அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!

ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
அலைகின்றேன் நினைவுகளின் எச்சமாய்!
ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இத்தனை!!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முடிந்தவரை தமிழ் பேசுவோம் வீட்டில்!!

No comments: