1/17/2024

யாரிந்த ஓலையக்காள்?

 

பொங்கற்திருவிழா என்பது ஏராளமான விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தவொன்றுதான் ‘பூ நோன்பு’ என்பதாகும். மார்கழி மாதம் முழுதும் பாவையைத் தொழுவதும், அதன் நிமித்தம் ஆண்டாளின் திருப்பாவை படிப்பதும் இடம் பெறுகின்றது.

விடியற்காலையில் கதிரவன் எழுச்சிக்கும் முன்பாகவே துயில் கலைந்து குளித்து வாசல் தெளித்து வளித்துக் கோலமிட்டு அக்கோலத்தின் நடுவே சாணப்புள்ளையார் அல்லது மஞ்சள்ப்பிள்ளையாரை நிறுவி, அதன் உச்சியில் பூசணிப்பூ சூடி திருப்பாவையின் அன்றைய பாடலைப் பாடி இறைவணக்கம் செலுத்துவது இளம்பெண்டிரின் மரபு.

நாள்தோறும் வீட்டு வாசலில் நிறுவப்படுகின்ற சாணம்/மண்/மஞ்சள்ப் பாவைகளை (பிள்ளையார்களை) பூமியின் குறியீடாகக் கருதுகின்றார் நாட்டார்வழக்காற்று ஆய்வாளர் வானமாமலை அவர்கள்.  அன்றாடமும் புதுப் பாவையை வாசலில் நிறுவுகின்ற போது முந்தைய பாவைகளை எல்லாம் சேகரம் செய்து வைத்துக் கொள்வர்.

பொங்கல் விழா முடிந்த மறுநாள், சேகரம் செய்யப்பட்ட பாவைகளுக்கு வழியனுப்புச் செய்யும் பொருட்டு, பூக்கள் கொய்து அவற்றைப் பாவைக்குப் படைத்த பின்னர், சேகரம் செய்து வைத்துக் கொண்ட முப்பது பாவைகளையும் சாடுகளில் ஏகிக்கொண்டு ஊரில் இருக்கும் பெண்களெல்லாம் ஊர்க்கிணறு, குளக்கரை, கண்மாய்க்கரை நோக்கிச் சென்று அங்கே அவற்றை நீரிலிட்டு வழியனுப்பி வைப்பர். இப்படியான நாளை, பூப்பொங்கல், பூநோன்பு, பூப்பறிக்கிற நோம்பி எனப் பலவாகக் குறிப்பிடுவது வழக்கம்.

பிற்பகலில் வீட்டில் இருந்து கிளம்பி கூட்டம் சேர்ந்து சேர்ந்து ஊர்ப்பெரியவர் வீட்டு வாசலுக்குச் செல்வர். செல்லும் போதேவும் பாடலும் கும்மிகளுமாகவே செல்வர். அங்கே ஊர்ப்பெரியவர் வீட்டுச் சீர்வரிசை(பொங்கல், தின்னப்பலகாரங்கள், மோர், நீர் இப்படியாகப் பலவும்) பெற்றுக் கொண்டு,  தெருத்தெருவாகச் சென்று ஊர்வழிகளிலே தோட்டங்காடுகளிலே இட்டேரிகளிலே இருக்கின்ற ஆவாரம்பூ, பொன்னரளி, ஊணான்கொடி மலர்களென பூக்கள் பறித்துச் சேர்ப்பர். இடைக்கிடையே பாட்டும் கும்மியடியும் நடக்கும். இப்படியான வைபோகத்தில் இடம் பெறும் பிரபலமான பாடல்தான் “ஓலையக்கா கொண்டையிலே ஒருசாடு தாழம்பூ..”.

2010ஆம் ஆண்டு வாக்கில் இணையதளத்தின், கொங்குநாட்டின் ஓலையக்கா பாடலை எவராவது தந்தால் நான் பணம் கூடத் தயாராக இருக்கின்றேனெனச் சொன்னார் எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்கள். எனக்கு அந்தப் பாடல் பரிச்சியமானவொன்று. அதே நேரத்தில் இடதுசாரித் தோழர்களும் அதே பாடலை இசைக்கோப்பாக வைத்திருந்தனர். அதன் வடிவத்தை எழுத்தாக்கிப் பகிர்ந்தேன். அதே காலகட்டத்தில், நண்பர் வேளராசி அவர்கள் கோவைக்கிழாரின் ‘எங்கள் நாட்டுப்புறம்’ எனும் நூலின் படியை பேரூர் கலைக்கல்லூரியில் இருந்து பெற்றுத் தந்தார். அந்நூலில் பாடலின் வேறொரு வடிவம் கிடைக்கப்பெற்றேன். ஊருக்குச் சென்றிருந்த போது சேவல்களின் இரகங்களைப் பற்றி ஆய்வதற்காக வெள்ளக்கிணறுப் பகுதிகளுக்குச் சென்றிருந்த போது அதன் பிறிதொரு வடிவம் கிடைக்கப் பெற்றேன். ஆய்வாளர் வானமாமலை, கவிஞர் சிற்பி, எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் இப்பாடல் குறித்து எழுதி இருக்கின்றனர் சிற்சிறு மாற்றங்களுடன். அவற்றையும் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. 

2011ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பொங்கலன்றும் நாம் இந்தப் பாடலைத் தொடர்ந்து பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. https://maniyinpakkam.blogspot.com/2011/12/blog-post_22.htmlஇந்த ஆண்டும் அவ்வண்ணமே பாடலைப் பாடிப் பகிர்ந்திருந்தோம். மருத்துவர் ஜெரால்டு அவர்கள், யார் இந்த ஓலையக்கா என வினவினார். அதன் பொருட்டே இக்கட்டுரை அமைகின்றது.

மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய ஊர்களின் வரிசைக்கும், சத்தியமங்கலம், கொடிவேரி, நம்பியூர், அவிநாசி ஆகிய ஊர்களின் வரிசைக்கும் இடையில் அமைந்திருக்கின்ற நிலப்பகுதியில் ஓலையக்கா, மாலையக்கா ஆகிய இரு உடன்பிறப்புகளையும் தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு இன்றளவும் உண்டு. ஆற்றைக்கடந்து வர முற்படுகையில், திடீர் மேல்வெள்ளம் ஏற்பட்டுச் சகோதரிகள் மறுகரையிலேயே இருந்து விடுகின்றனர். உற்றார் உறவினரெல்லாம் இக்கரையில். தத்தளிக்கின்றனர். கடைசியில், எதிரிகளிடம் அகப்பட்டு விடக் கூடாதென்பதற்காக தீமூட்டித் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர் இருவரும். அவர்கள் அக்கூட்டத்தினரைக் காத்துவருவதான வழக்காறு நிலவுகின்றது. ஆண்டுக்கொருமுறை பனையோலைகளால் ஓலையக்கா, மாலையக்கா கட்டமைக்கப்பட்டு அவர்களுக்கான நினைவேந்தல் நோன்பு கடைபிடிக்கப்படுகின்றதென, ‘ஓலையக்காள் வெறும் பாடலல்ல, வரலாறு” எனும் நூலில் பதிவு செய்கின்றார் கி.பத்மநாபன். அதன்நிமித்தம் செய்திக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. https://m.dinamalar.com/detail.php?id=3387894 பாடலின் தழுவல்கள் / மருவல்கள், அவரவர் இடம் பொருள் ஏவலுக்கொப்பப் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது நம் புரிதல்.

பூப்பறிப்பு நோன்பில் கலந்து கொள்ளவிருக்கும் ஓலையக்கா எனும் பாங்கில் இடம் பெற்றிருக்கும் பாடல்.  “ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்றவர்களெல்லாம் "ஓலே......'"என்று கூறுவார்கள்.


ஓலேயக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலைகு றைச்சலென்று
மயங்குறானாம் ஓலையக்கா(ஓலேய்)

சேலை.அ ரைப்பணமாம்
சித்தாடை கால்பணமாம்
சேலைகுறைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா(ஒ.லே)

தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போறா ஓலையக்கா (ஓலேய்)

மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனுட்டு ஒலையக்கா
மேற்கே குடிபோருள்(ஒ.லே)

நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போறாளாம் ஒலையக்கா(ஓலேய்)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போருள் ஒலையக்கா(ஓலேய்)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
போறாளாம் ஓலையக்கா(ஓலேய்)

ஒலையக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)


விளிம்புநிலைப் பெண் தன் வறுமையை வெளிப்படுத்துமுகமாக அமைந்த பாடலின் வடிவம்:

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்

சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா

கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை


-பழமைபேசி, pazamaipesi@gmail.com