6/19/2008

ஊர்ல மழையா கண்ணு?

நாம பத்தாம் வகுப்பு சுல்தான்பேட்டை பக்கத்துல இருக்குற லட்சுமி நாயக்கன் பாளையத்துல படிச்சோம். விடுதியில தான் தங்கி படிச்சோம்.அது ஒரு நல்ல அனுபவம். ம்ம்... இனி அந்த நாளுக திரும்ப வரவா போகுது?! அதுக்கப்புறம் அரசூர் பக்கத்துல இருக்கிற ஊர்ல இருந்துட்டு மேற்படிப்பு. சின்ன, சுத்தமான ஒரு கிராமீயச் சூழல் அது.அந்த நாட்கள்ல கிடைச்ச உபசரிப்பு, கவனிப்பு எல்லாம் அபாரம். கொங்குநாட்டு பண்பாடு என்னை அப்படியே உள்வாங்கின காலமது. எந்தவொரு வித்தியாசமும் இல்லாம, மாமா, அத்தை, பெரியம்மா, அமுச்சி, அய்யன்னு உறவு முறை சொல்லித்தான் எல்லாரையும் கூப்பிடுவோம். நாங்க சகோதரங்க மூணு பேரும், சொந்தமா நாங்களே சமைச்சி சாப்பிட்டுட்டு படிச்சோம், வேலைக்கு போனோம். அம்மா, அப்பா எல்லாம் பூர்வீகத்துல விவசாயம். அதனால ஊருக்குள்ள எங்களுக்கு எப்பவும் நல்ல கவனிப்பு தான். மாசம் ஒருவாட்டி உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல இருக்குற அந்தியூர்க்கு போய்ட்டு வருவேன். அப்படி போய்ட்டு, வந்த உடனே நடக்குற வழமையான நிகழ்வு தான் இது:

கண்ணு, எங்க தெக்க ஊர்க்கு போய்ட்டு வர்றியா கண்ணு?

ஆமாங்க அமுச்சி.

ஊர்ல மழையா கண்ணு?

முந்தாநேத்து கொஞ்சம் மழைதானுங்க அமுச்சி.

என்ன, ஒரு ஒழவு மழை இருக்குமா கண்ணு?

இல்லீங்க அமுச்சி அந்த அளவுக்கு காணாதுங்க.

இங்கதான், அதும் இல்ல போ. அப்பனாத்தா எல்லாரும் சௌக்கியந்தான?

ஆமாங்க அமுச்சி. கந்தசாமியண்ணன காணம்?

அவன் மேக்க ஒரு கண்ணாலம்னு போயிருக்கறான். பொழுதோட வந்துட்டு நாளைக்கி தட்டு அறுக்க போகோனும். ஆமா, பேசிட்டே இருக்காட்டி என்னோ? கையக் கழுவீட்டு வா, சாப்டலாம்.

இல்லீங்க அமுச்சி, அண்ணன் எதனாச்சும் செஞ்சு வெச்சிருக்கும்.

அடப்போ! ஆம்பள பசங்க நீங்க என்னத்த ஆக்கி திங்கப்போறீங்க? யாரங்க? மணியான் வந்து இருக்கறான். வட்டலு எடுத்து வெச்சு சோத்தப் போடு. வயித்துப் பசியோட வந்து இருப்பான். கண்ணு, சோறு உண்டுட்டு
இரு, நான் போயி மாடு கன்னுகளுக்கு தண்ணி காமிச்சி, தீவனம் போட்டுட்டு வாரேன்.


ம்ம்..... இப்படி எந்த சாதி சம்பிரதாயமும் பாக்காம கொள்ளாம, தாய் புள்ளயா, பந்த பாசத்தோட, ஊர்க்குள்ள எப்படியெல்லாம் ஓடி ஆடி இருந்திருப்போம். மாரியாத்தா கோயில் நோம்பி, மாகாளியாத்தா கோயில் நோம்பி, தங்க நாயகி அம்மன் கோயில் ஆண்டு விழா, அரசூர் பரசிவன் கோயில்ல படப்புனு நாளொரு கூத்து, தினமொரு கொண்டாட்டம்னு போய்க்கிட்டு இருந்த பொன்னான பூமி அது. சனங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் வெள்ளை மனசு, பந்தம், பற்று இதான். ஆனா இன்னைக்கு?? ஒரு ஏக்கரா ஒரு கோடி, ரெண்டு கோடியாம். ஊர் முச்சூடும் சீமைக்காரன் ஆலைகளும் வெளிமாநில சனங்களுமாம். ஊர் சனங்க எல்லாம் வித்துட்டு, அங்கங்க போய்ட்டாங்களாம். காலத்தின் கட்டாயமா?? இல்லை, கொங்குத்தமிழுக்கு வந்த சோதனையா? காலந்தான், இதுக்கு பதிலு சொல்லோனும்.......

4 comments:

பழமைபேசி said...

வணக்கம்! நேற்றையில இருந்து இந்தப் பதிவுக்கு வருகை கூடி இருக்கு...... நீங்க எல்லாம் ஏதோ குழுமத்தை சார்ந்தவங்கன்னு தெரியுது.
வருகைக்கு நன்றி! உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க!!

ஆறாம்பூதம் said...

சுல்தான் பேட்டைனாலே.. பக்கத்துல இருக்க சந்திராபுரத்துல பெருசு பெருசா இருக்குமே காத்தாடிக அதுக்கு அடில ஒக்காந்து.. சேக்காலிங்க சேந்த்துகிட்டு நாயமும் நாட்டுக் கோழி வறுவலுமா இருந்த ஒரு நாள் தான் நென்ப்புக்கு வருது ... நாட்டுக்கோழி வறுவலுக்கு சைட் டிஷ் என்னனு கேக்கக் கூடாது.. .

பழமைபேசி said...

//ஆறாம்பூதம் said...

நாட்டுக்கோழி வறுவலுக்கு சைட் டிஷ் என்னனு கேக்கக் கூடாது.. .//

இஃகி!ஃகி!!

ஆறாம்பூதம் said...

நகர்மயமாக்கலில் தமிழகத்தி உள்ள அனைத்து ஊர்களையும் பின் தள்ளி வேகமாக கொங்குச்சீமை நடை போடுகிரது என்பது ஒரு வேதனையான உண்மை... இதில் நாம் இழந்தது கணக்கில் இல்லாதது.. நொய்யல் செத்து விட்டது.. நமது பகுதிக்குண்டான பல சொற்கள் அளிவின் விளிம்பில்... கிராமம் என்று சொல்லில் உள்ளதே தவிர அனைத்தும் சிறு நகரங்கள் தான்.. காசுக்கு ஆசைப்பட்டு தோட்டங்களை விற்றுவிட்டு மாற்று இடங்களைத் தேடி அதன் சூழ்னிலைக்கு பொருந்தாமல் தவிக்கும் பலர்.. ஆம்... எங்கள் கொங்கு சீமை தொழில் வளம் கொழிக்கும் இடம் தான்.. ஆனால் நம்புங்கள் நண்பர்களே அதனால் நாங்கள் இழந்தது .. இழந்து கொண்டிருப்பது... நாங்கள் மட்டுமே அறிவோம்...