12/16/2019

கல்லூரிப்படிப்பு குறித்த கருத்தரங்கம்

வடகரொலைனா மாகாணத்தில் இருக்கும் கெரி நகரச் சமூகக்கூடத்தில், இளம் மாணவர்கள் நடத்திய கல்லூரிப்படிப்பு குறித்த கருத்தரங்கமானது டிசம்பர் 15, 2019ஆம் நாள் காலை பத்து மணிக்கு இடம் பெற்றது. முழுக்க முழுக்க கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுடன் பள்ளிக்கூட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்பதாலும், தேர்ச்சியுடன் கூடிய துவக்கப்பணிகளாலும் எதிர்பார்ப்பு வெகுவாக மிகுந்திருந்தது. நிகழ்ச்சியின் விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தபடியே, கருத்தாடற்குழுவில் 1. Samuel Eshun Danquah, Yale Univesity, 2. Aravind Ganesan, Georgia Tech, 3. Vinayak Ravichandran, NC State, 4. Srikar Nanduri, NC State, Park Scholar, 5. Keenan Powers, Duke University, 6. Katie Liu, University of Southern California, 7.TJ Nanugonda, UNC 8.Abhi Manhass, UNC 9.Suraj Rao, NCSSM ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கின், தீயணைப்புத்துறை வரம்பு (firecode occupancy) 172 பேர் என்பதாகும். அதாவது, அந்த அறையில் 172 பேருக்கும் அதிகமாக இருந்தால் அது விதிமுறை மீறல். இதெல்லாம் உணர்ந்து செயலாற்றக் கூடிய தேவை இருக்கின்றதா? அந்த அளவுக்கு sensitivity உணர்வுவயப்பட வேண்டுமா?? வேண்டும். அதுவும் குறிப்பாக அமெரிக்க மண்ணில் வாழும் இளையோருக்கு அது முக்கியமாகக் கருதப்படக் கூடியதுதான். ஆகவே, முன்கூட்டியே கூட்டத்திற்கான வருகைப்பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்படி, 172 இடங்களும் கைப்பற்றப்பட்டுவிட்டதால் பதிவு செய்யாதோர் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். ”எவ்ளோ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் வெளிய நில்லு!” பள்ளி மாணவர்களிடம் இப்படி அப்படி என்பதற்கு இடமில்லை. நான் பார்த்துச் சிரித்தபடியே வெளியே நின்று கொண்டிருந்தேன். சமூகக்கூடத்தில் நிகழ்ச்சி இடம் பெறும் அரங்குக்கான அறிவிப்புப்பலகை இருந்தும், நிகழ்ச்சிக்குக் காலத்தாழ்ச்சியாக வந்து விட்டோமோ, சரியான இடம் கிடைக்காமற் போய்விடுமோ எனும் நினைப்போ அல்லது பாராமுகமோ என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உள்நுழைந்தவுடன், பதற்றத்துடன் இங்குமங்கும் பார்ப்பவர்களை அகச்சிரிப்போடு அணுகி அறை அங்கேயெனச் சொல்லிக் கொண்டிருந்தேன். உமக்கு ஏனிந்த வேலை என்பதாக நீங்கள் நினைப்பதும் சரிதான். இஃகிஃகி, நிகழ்ச்சிக்கு பதிந்தவர்களில் என் பெயர் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இஃகி. அங்கே உள்நுழைய முற்பட்டு மொக்கை வாங்க வேண்டுமாயென்ன? நான் நிகழ்ச்சிக்கு வரும் நண்பர் ஒருவருக்காகக் காத்திருந்தேன். காத்திருக்கும் அந்த நேரத்தில்தான் நம்மாலான ஒரு தொண்டு. அப்படி அனுப்பப்பட்ட சிலர் பதிந்திருக்கவில்லை. மீண்டும் என்னிடமே திரும்பி வந்தனர். பொறுமையாகக் காத்திருங்கள். எப்படியும் பதிந்தவர்களில் சிலர் வராமற்போக வாய்ப்புண்டு என்று ஆறுதல் அளித்தேன். அதன்படியே அவர்களும் காத்திருந்தனர். மிகச்சரியாகப் பத்து மணிக்கு, வராதவர்களின் உள்நுழைவுச்சீட்டு காத்திருந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு இடமளிக்கப்பட்டது. அதுபோக ஓரிரு உபரி இடங்கள் இருந்ததால் என்னையும் உள்ளே வருமாறு அழைத்தனர். வந்திருந்தோர் அனைவருக்கும் குடிக்கத் தண்ணீர் போத்தல் தரப்பட்டு உட்கார வைக்கப்பட்டனர். இஃகி, நீங்கள் நினைத்த இடத்தில் உட்கார முடியாது. உள்ளே வருபவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். மற்ற வரிசைகள் கயிற்றால் மறிக்கப்பட்டு இருந்தன. என்னோவொரு ஒழுங்குடா சாமீ?! நிகழ்ச்சி துவங்கும் போது எல்லா வரிசையும் நிரம்பி விட்டது. ஒருவரை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் சூழல்தான். அந்தச் சூழலைக் கண்டவுடனேயே, உள்ளே நுழைந்தவருக்குள்ளும் ஒரு மகத்தான ஒழுங்கு பிறந்து விடுகின்றது. 172 பேர் இருக்கும் இடத்தில், 2 மணி நேரத்தில் நான்கு முறை அலைபேசி ஒலிப்புச் சத்தம் கேட்க முடிந்தது. சத்தம் கேட்டதுமே அலைபேசிக்கு உரியவர்கள் வெட்கி நாணிப் போயினர். ஒரே ஒருவர்மட்டும், மழை பொழிந்த எருமைமாடு போல அலைபேசியில் அலோ சொல்லிப் பேச முற்பட்டார். அவருக்கு ஐம்பத்தைந்து அறுபது வயதிருக்கலாம். நிகழ்ச்சியின் ஐந்து மணித்துளி அறிமுகவுரைக்குப் பின், கருத்தாடற்குழுவினர் அரங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்டனர். முதல் ஒருமணி நேரம், கல்லூரிப் படிப்புக்கான ஆயத்தப்பணிகள், விண்ணப்பம், கல்லூரியில் இடம் பெறும் கூறுகள், பாடத்திட்டம், தெரிவு செய்வது போன்றவை குறித்து வரிசையாக எடுத்தியம்பினர். குழுவில் இருந்த மாணவர்களின் ஊக்கம், எளிமை, அணுக்கம் முதலானவை வந்திருந்தோரிடம் நெருக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தது இளைய சமுதாயத்தின் மனப்பாங்கினையும் ஆற்றலையும் அமெரிக்கப் பண்பினையும் வெளிப்படுத்தியது. குழுவில் இடம் பெற்றிருந்தவர்களுள் ஒருவர், ஒழுக்கமின்மை நடவடிக்கைக்காகப் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர். மற்றொருவர், honor code violation, முறைகேட்டுப் புள்ளி நடவடிக்கைக்கு ஆளானவர். இத்தகைய நடவடிக்கைகள், அந்தந்த மாணவர்களின் சான்றிதழில் குறிப்பிடுவது அமெரிக்க முறைமையாகும். அப்படியான குறிப்பீடுகள் இருப்பது கல்லூரிச் சேர்க்கையின் போது கவனத்தில் கொள்ளப்படும். அப்படியானவர்கள் கட்டணமில்லாப் படிப்புக்கு தெரிவாகிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். அது எப்படி என்பதை, ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாக விளக்கியது மனிதமாண்புக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. காய்ச்சலும் தலைவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும். கோடைவிடுமுறையில் வீட்டுப்பாடம் கொடுப்பது வழமை. அப்படித்தான், ஏதோவொரு வீட்டுப்பாடம். பாடத்துக்குரிய சூத்திரமொன்று புத்தகத்தில் சரியாக இருந்திருக்கின்றது. ஆனால், விடுமுறைக்காலம் என்பதால் இணையத்தில் தேடி எடுத்து அதைப் பாவித்து வீட்டுப்பாடம் செய்து கையளித்து விட்டாள் மகள். கிட்டத்தட்ட ஒன்னரை மாதம் கழித்து வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பு. முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லி அறிவுறுத்தல். பதற்றம். அழுகை. மன அழுத்தம். சொல்லி மாளாது. அடுத்த நான்கு நாட்கள் கழித்து நள்ளிரவில் மின்னஞ்சல். தங்கள் பிள்ளையின் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதென. அந்த இரவிலும், உறங்கிக் கொண்டிருந்த அனைவரையும் எழுப்பி மகிழ்ந்தோம். வகுப்பில் ஏராளமானோர் அதேபோலச் செய்திருக்க, அத்தனை பேருக்கும் ஆசிரியர் முறைகேட்டுப் புள்ளி வழங்க, கடைசியில் ஆசிரியரே அறிவுறுத்தலுக்கு ஆட்பட்டுப் போனது பெருஞ்சோகம். முறைகேட்டில் ஈடுபடக் கூடாது; அறியாமையால் ஏதாகிலும் நேர்ந்து விட்டால், அதை எதிர்கொள்வதெப்படி என்பதை மாணக்கர்குழு விளக்கிய விதம் மிகவும் நன்று. வணிகம், பொருளாதாரம், மருத்துவம், பொறியியல் போன்ற பிரிவுகளில் எத்தகைய பிரிவினைத் தெரிவு செய்வது?, கல்வி உதவி பெற என்ன செய்ய வேண்டும்? கல்விக்கடன் போன்றவை குறித்தும் பேசினர். வீட்டுப்பிள்ளைகள், அவர்களின் ஒழுக்கம், படிப்பு, எதிர்காலம் முதலானவற்றின் நிமித்தம் நம்மவர்களுக்கு மிகுந்த கவலையும் பதற்றமும் இயல்பிலேயே ஏற்பட்டு விடுவது உண்டு. அவற்றையெல்லாம் தணிப்பதாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் பேசிவிட முடியாது. நாளெல்லாம் பல கட்டங்களாகப் பேசித் தெரிய வேண்டிய பொருள் இது. எனினும் அவர்கள் கொடுத்த தகவலும், அவர்களின் நடத்தையும் வந்திருந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் ஒரு தெளிவையும் அளித்ததென்றே சொல்லலாம்.பிறிதொரு நிகழ்ச்சிக்காக, குறித்த நேரத்தில் அரங்கை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் அனைவரும் அரங்கை விட்டு வெளியே வந்தும், திடலின் ஒருபக்கத்தில் நின்றபடி, வந்திருந்த பெற்றோர் வினவிய வினாக்களுக்கு அந்த மாணவர்கள் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், உளமகிழ்ச்சியோடு பதிலளித்தும், தத்தம் அனுபவங்களை இயல்பாகச் சொல்லியும் அன்பாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்ததை எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆமாம். பிள்ளைகளிடம் கற்றுக் கொள்வோம்.கூட்டத்தில் வந்திருந்தோருக்கு சிறுதீனும் கொடுத்தீங்க பாருங்க. மிடீலடா பசங்களா. -பழமைபேசி.

11/29/2019

மச்சான் வந்தாரு! மச்சான் வந்தாரு!!

மச்சான் வந்தாரு மச்சான் வந்தாரு
பாவக்காய அறுக்கச் சொன்னாரு
மச்சான் வந்தாரு மச்சான் வந்தாரு
பின்னே கொஞ்சம் நெய்ய ஊத்தி
வறுக்கச் சொன்னாரு
கம கம கம கம உம் ... ஹா‌
பின்னே கொஞ்சம் நெய்ய
ஊத்தி வறுக்கச் சொன்னாரு
மச்சான் வந்தாரு மச்சான் வந்தாரு
சுடுசோத்த வட்டல்ல போடச்சொன்னாரு
சுடுசோத்த வட்டல்ல போடச் சொன்னாரு
மச்சான் வந்தாரு மச்சான் வந்தாரு
கையத் துடைக்க துண்டு கேட்டாரு
கையத் துடைக்க துண்டு கேட்டாரு
அடுத்தவாட்டி மூக்குத்தி வாங்கிவாறன் சொன்னாரு
மச்சான் வந்தாரு மச்சான் வந்தாரு
மனசுக்குள்ள கலர்கலராப் பட்டாம்பூச்சிய ஓடவிட்டாரு
கலர்கலராப் பட்டாம்பூச்சிய ஓடவிட்டாரு
ஓடவிட்டாரு ஓடவிட்டாரு ஓடவிட்டாரு

0o0o0o0o0o0o

சொய்ங் சொய்ங்
தோச திங்க ஆசயாகுதே!
சொய்ங் சொய்ங்
தோச திங்க ஆசயாகுதே!!

பச்சமொளகா நறுக்கி வெச்சு
பசுவநெய்யும் உருக்கி வெச்சு
பத்துதோச அடுக்கி வெச்சு
பப்படந்தான் பொரிச்சு வெச்சு
தோச திங்க ஆசயாகுதே!

சொய்ங் சொய்ங்
தோச திங்க ஆசயாகுதே!
சொய்ங் சொய்ங்
தோச திங்க ஆசயாகுதே!!
சொய்ங் சொய்ங்!!

10/13/2019

ஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP


Regional Comprehensive Economic Partnership Agreement (RCEP) ஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை *** *** *** *** *** *** *** சீன அதிபர் இந்தியாவிற்கு வந்து சென்றது இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடத்தான் போன்ற புரளிகளைக் கட்டமைப்பது மிகவும் வருந்தத்தக்கது. கிழக்காசிய நாடுகள் சபையில் தற்போது, புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோசு, மலேசியா, மியான்மார், பிலிப்பைன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளும், புதுவரவாக சீனா, இந்தியா, தென்கொரியா, ஆசுதிரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் சேர்க்கப்பட்டு, இவற்றுக்கிடையே தங்குதடையற்ற பொருளாதாரச் சந்தை என்பதற்கான ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்தும், அவ்வப்போது அமைச்சர்கள் அளவிலான மாநாடுகளும் இடம் பெற்று வருகின்றன. ஒப்பந்தம் இன்னும் இறுதி வடிவமே பெறவில்லை. அப்படியே பெற்றாலும், அதில் பங்கு பெறும் எல்லா நாட்டுத் தலைவர்களும் ஒருங்கே கைச்சாத்திட வேண்டும். கடைசியாக, அக்டோபர் 12ஆம் நாள், அக் 12, 2019, தாய்லாந்தில் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கின்றது. கூட்டத்தில், எண்ணிமக் கோப்புகள்(digital content), எண்ணிம உள்ளீடுகளுக்கான காப்புரிமை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய கோப்புகளை அந்தந்த நாடுகளில் சேகரம் சேர்த்து வைக்க, உரிமையாளருக்குத் தனிவசதி தரப்பட வேண்டுமென்பது இந்தியாவின் கோரிக்கையாக இருந்திருக்கின்றது. அல்லாவிடில், மற்றநாடுகளுக்கு எண்ணிமப் படைப்புகள் சென்று சேரும் போது களவு போக ஏதுவாகி விடும். இக்கோரிக்கைக்கு முடிவு எட்டப்படாமலே கூட்டம் முடிவுற்றிருக்கின்றது. இப்படிப் பல சரத்துகளின் மீதும் ஒருங்கிணைந்த முடிவு எட்டப்பட்டுத்தான் ஒப்பந்தம் இறுதிநிலைக்கு வரும்; வர வேண்டும். இவ்வுடன்படிக்கை மேற்கொள்ளப்படுமேயானால், இப்புதிய சரகத்தில், உலகின் மொத்த உற்பத்திப் பொருட்களில் 40% பொருட்கள் இச்சரகத்திற்கு உரிய காப்பீட்டுப் பொருட்களாக இருக்கும். உலகப் பொருளாதாரத்தில், 50% இச்சரகத்துக்கு உட்பட்டதாக இருக்கும். மதிப்பீட்டில், 2050ஆம் ஆண்டின் போது, உலகப்பொருளாதாரத்தின் மதிப்பில் கிட்டத்தட்ட 75% இந்தியா, சீனாவுக்குரியதாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் இது ஆக்கப்பூர்வமானதா? பின்னடைவைத் தரக் கூடியதா என்பதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் ஒரு சில, உண்மைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். 1. பொறியியல் பொருட்களில் இச்சரக நாடுகளுக்கான நடப்பு ஏற்றுமதி: $17.2 பில்லியன் டாலர்கள். இறக்குமதி: $90.5 பில்லியன் டாலர்கள். இப்படியிருக்க, மேலும் அவர்களுக்குத் தங்குதடையற்ற திறப்பை ஏற்படுத்தித் தரவேண்டுமாயென்பது விமர்சகர்களின் கேள்வி. 2. சீனாவின் உட்கட்டமைப்பு இருண்டதும் கட்டுப்பாடுடையதுமாகும். அப்படியிருக்க அங்கே செல்லும் நமது பொருட்களின் நுட்பம் களவாடப்படாது, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல் என்பது கைகூடக் கூடியதுதானா என்பதும் விமர்சகர்களின் கேள்வியாக இருக்கின்றது. 3. உள்நாட்டுக் கட்டமைப்புகளை மற்ற நாடுகளுக்குத் திறந்து விடும் போது நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் கவலை தெரிவிக்கப்படுகின்றது. 4. சுற்றுச்சூழல், பணியாளர் நலனுக்கான கட்டுப்பாடுகள் பேணப்படுமாயென்பதும் கவலைக்குரியதாக இருக்கின்றது. 5. நாட்டின் கலாச்சார, பண்பாட்டுத் தனித்துவம் சிதைப்புக்கு உள்ளாக நேரிடலாமென்பதும் மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கின்றது. இத்தகைய முன்னெடுப்புக்கு ஆதரவும் பெருகி வருகின்றது. என்ன காரணம்? ஆதரவும் எதிர்ப்பும், அவரவர் துறை, அவரவர் பார்வையைப் பொறுத்து இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, இந்தியாவைச் சார்ந்த மருந்துப்பொருள் ஏற்றுமதியாளருக்கு இது நன்மை பயக்கக் கூடியதாய் இருக்கும். ஏற்றுமதியில் ஓங்கியிருக்கின்ற இவர்களுக்கு கட்டுப்பாடற்ற சந்தையானது இன்னமும் இலாபத்தை ஈட்டித்தரும். இதுவே வேளாண்மை, பொறியியல் துறை சார்ந்தோருக்குப் பெரும் பின்னடைவாக அமையக் கூடும்? தற்போதைக்கு சாமான்யன் செய்ய வேண்டியதெல்லாம், இதன்நிமித்தம் அறிதலின் தேடலை வளப்படுத்திக் கொள்வதும், இடம் பெறும் பணிகளை அவதானித்து குடிமகனுக்குரிய பொறுப்புகளை மேற்கொள்வதும்தான். Be informed and Be responsible. திறந்தவெளிச் சந்தையென்றால், தரமும் நன்றாக இருக்க வேண்டும். விலையும் குறைவாக இருக்க வேண்டும். தரத்துக்கு அடிப்படை கல்வியும் பணியாளர் மேம்பாடும். சகாயவிலைக்கு அடிப்படை, இலஞ்ச ஊழல் இல்லாமையும் திறமையும். https://www.thehindu.com/article28228900.ece https://www.businesstoday.in/bt-buzz/news/bt-buzz-why-india-should-not-ignore-rcep-free-trade-mega-deal/story/373035.html -பழமைபேசி, 10/13/2019. [குறிப்பு: கட்டுரையாளருக்கு இதன்நிமித்தம் எந்த நிலைப்பாடும் இல்லை. தகவலைப் பகிர்வது மட்டுமே நோக்கம்]

10/12/2019

நேபாளத்தில் சீன அதிபர்



கடைசியாக இருந்த ஒரே ஒரு இந்துசமய நாடுதான் நேபாளம். இந்தியாவின் ஓர் அங்கமாகவே இரண்டறக் கலந்திருந்தது. கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வருவது, இந்தியப்பணம் புழங்குவதென எல்லாமுமாக. மேற்கு, தெற்கு, கிழக்கு என மூன்று புறமும் இந்தியப்பகுதிகள். தென்புற எல்லை மட்டும் திபெத் நாட்டுடன் பங்கிட்டுக் கொண்டிருந்தது. திபெத், திபெத்தாக இருந்தவரையிலும் இதுதான் நிலைமை.

படிப்படியாக திபெத் சீனாவின் ஓர் அங்கமாக உள்வாங்கப்பட்டுவிட, தன் வட எல்லை என்பது சீனாவினுடனான எல்லையென்றாகி விட்டது.

நேபாளத்திலோ, இந்துசமயக் கடவுளின் நேரடிப்பிள்ளை மன்னர். அவரின் செங்கோல்தான் நேபாளத்தின் ஆட்சியென்று இருக்க, சீனாவின் ஆதரவுடன் மாவோயிசக் கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கெதிராகவும், குடியாட்சியைக் கொண்டு வரும் முகமாகவும் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். இந்தக் காலகட்டத்தில்தான் அரண்மனையிலிருந்த இளவரசர், மணம்புரிவதில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக குடும்ப உறுப்பினர்களைச் சுட்டுக் கொலை செய்து தாமும் தற்கொலை செய்து கொள்கின்றார். இது சதியா என்பதெல்லாம் புலனாய்வுக்குட்படுத்த வேண்டியவை. அவரது இளவல் ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுத்துக் கொள்ள, மாவோயிசப் புரட்சி வெடிக்கின்றது. மன்னராட்சி முடிவுக்கு வந்து, மக்களாட்சி மலர்கின்றது. சீனாவின் பிடியும் ஓங்குகின்றது.

நேபாளத்துக்கு எல்லாமும் இந்திய மண்ணிலிருந்துதான் போயாக வேண்டும். மலைப்பாங்கான திபெத்/சீன எல்லைப்பகுதியினூடாக சாலைகள் இல்லை. உயரமான பள்ளத்தாக்குகளில் புகுந்து வருவதென்பது இயலாதவொன்று.  இந்தியா தன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகின்றது.

மக்களாட்சி ஏற்பட்ட நிலையில், புதிய அரசியற்சட்டம், மாகாண எல்லைகள் வகுத்தல் போன்றவை வெகுவேகமாக இடம் பெற்றுவர, இந்தியாவின் பங்களிப்பு அவற்றில் முக்கியத்துவம் பெறவில்லை. அந்த சூழலில்தான், 2014-2015 ஆண்டு வாக்கில், இந்திய வம்சாவளியினராகவும் இந்தி பேசுபவர்களாகவும் இருக்கின்ற மாதேசி குடியின மக்களின் போராட்டம் உருவெடுக்கின்றது.

மாதேசியினர் வெகுவாக இருக்கும் நிலப்பகுதிகளை ஒரு மாகாணமாக அறிவிக்காமல், இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து மற்ற மாகாணங்களின் ஒரு பகுதியாகச் சேர்த்துவிட்டதன் பொருட்டு அரசியல் முக்கியத்துவம் அல்லாதவர்களாக ஆக்கப்படுகின்றோமென்பது அவர்களின் குற்றச்சாட்டு. ’இவர்களின் போராட்டத்துக்குப் பின்னால் இருப்பது இந்தியா’ என்பது நேபாள அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. இந்தப் போராட்டத்தின் காரணமாக, இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டது நேபாளம்.  பெட்ரோல், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேபாளத்துக்குக் கிடைக்காமல் போனது. அதே காலகட்டத்தில் நேபாளத்தில் நிலநடுக்கமும் ஏற்பட்டுவிட, நேபாள மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் உள்ளானது இந்தியா. வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது சீனா. ஐநா சபையில், இந்தியாவின் மீதான குற்றச்சாட்டினைப் பதிவு செய்தது நேபாளம்.

சீனாவுடன் தன் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டது நேபாளம். முற்றுமுழுதாக இந்தியாவை மட்டுமே நம்பியிருந்த நேபாளத்தின் இறக்குமதியின் சீனாவின் பங்கு 40 விழுக்காடுகள் வரை உயர்ந்திருக்கின்றது. இன்னமும் சீனாவுடனான தரைவழிப் போக்குவரத்து உகந்ததாக இல்லைதான். சீன இறக்குமதியில் 40% வரை, ஆகாயமார்க்கமாகவும் எஞ்சியது கல்கத்தா அல்லது பங்களாதேசிலிருந்து இந்திய எல்லையினூடாக இடம் பெற்று வருகின்றது. இவையனைத்தும் சீனாவின் திபெத் எல்லை வழியாகவே இருந்திடல் வேண்டுமெனத் திட்டங்கள் போடப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகளும் இடம் பெற்று வருகின்றன.

சீனாவிலிருந்து 18 விமானங்களே வந்து போய்க்கொண்டிருந்த நிலை, கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100 விமானங்கள் என்றாகி விட்டிருக்கின்றது. பெருவாரியாக இந்தியர்களும், இந்தியமார்க்கமாக மட்டுமே சென்று கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளின் நிலை வெகுவாக மாறிவிட்டிருக்கின்றது. ஆண்டுக்கு 2 இலட்சம் இந்தியர்களும் ஒன்னரை இலட்சம் சீனர்களும் செல்வதாகக் கணக்குகள் தெரிவிக்கின்றது. திபெத்தின் லாசா நகருக்கும் நேபாளத் தலைநகரான காட்மண்டுவுக்கும் கூட தரைவழிப் போக்குவரத்தும் கைகூடி வந்திருக்கின்றது. சிறு வாகனங்களில் சென்றால், இருபது மணி நேரத்துக்குள்ளாகச் சென்று சேரக்கூடிய அளவில் இருக்கின்றது.

திபெத் லாசாவுடன் காட்மண்டுவை தொடர்வண்டிப் பயணமார்க்கமாக இணைத்துவிட்டால், சீனாவின் எந்தப் பகுதியிலிருந்தும் சரக்குகள் வந்து செல்லலாம். தொழில்நுட்ப வளர்ச்சியென்பதும் நேபாளத்துக்கு சாதகமாக உருவெடுத்து வருகின்றது. இந்த நிலையில்தான், இந்தியாவிலிருந்து புறப்பட்ட சீன அதிபர், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நேபாளத் தலைநகர் சென்று சேர்ந்திருக்கின்றார். அவரது பயணத்தில் மூன்று விதமான முன்னெடுப்புகள் கைச்சாத்திடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. முதலாவது, சீனாவின் போக்குவரத்து வளையத்தில் நேபாளத்தையும் உட்படுத்திக் கொள்வது. அடுத்ததாக, நேபாளத்தில் இருக்கும் திபெத்திய அகதி முகாம்களைக் கைவிட்டு தங்கியிருக்கும் திபெத்தியர்களைச் சீனாவிடம் கையளிப்பதென்பதாகும். மூன்றவதாக, நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் சீனாவுடன் ஒத்துழைப்பைப் பெறுவது.

சீனாவின் போக்குவரத்து வளையத்தில் இடம் பெறுவதில் பிரச்சினை இல்லை. அதற்கான சாலையமைப்புப் பணிகளுக்கான செலவினை நேபாளத்தின் தலையில் கட்டிவிட்டு, நேபாளத்தின் இறையாண்மைக் கேட்டை உருவாக்கித் தன்னுடைய அனுகூலங்களையே முதன்மையாக்கிக் கொள்ளும் சீனா என்பதாக நேபாளத்தின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம், மியான்மாரின் விரைவுச்சாலைத் திட்டம் முதலானவை அமைகின்றன. இலங்கை அதிபர் இராசபக்சேவைக் கையில் போட்டுக் கொண்டு வருவாய்க்கே வழியில்லாத துறைமுகத்தைக் கட்டியெழுப்பி, அதற்கான செலவினத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் துறைமுகத்தையும் அதனையொட்டிய 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

திபெத்திய அகதி முகாம்களைக் கைவிடுவதன் வாயிலாக, அவர்களெல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்த முனைகின்றதா சீனாயெனும் கேள்வியையும் முன்வைக்கின்றனர் பார்வையாளர்கள்.

பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்கக் கூடாதென நேபாளத்தை நெருக்கி வருகின்றது அமெரிக்கா. மாறாக, அமெரிக்கா முன்னெடுக்கும் திட்டத்தில் நேபாளம் பங்கேற்க வேண்டுமெனக் கோரியும் வருகின்றது. ஆனால், அமெரிக்காவின் திட்டம் சீனாவுக்கு எதிரானது, ஆகவே நாங்கள் பங்கேற்க முடியாதெனச் சொல்லி வருகின்றது நேபாளம். அமைதி காத்து வருகின்றது இந்தியா. திபெத்தைப் போன்று, நேபாளமும் சீனாவாகிப் போகும்வரையிலும் அமைதி காக்கப் போகின்றதா இவ்வையகம்?? சமகாலத்தில் வாழ்ந்து வருகின்ற நம் கவனத்தைப் புவிசார் அரசியலிலும்  சற்றுப் பாய்ச்சுவோமே!!

https://thediplomat.com/2019/10/himalayas-leveled-how-china-nepal-relations-have-defied-geopolitics/
https://www.nytimes.com/2018/06/25/world/asia/china-sri-lanka-port.html?module=inline
https://thediplomat.com/2019/10/amid-china-us-rivalry-india-maintains-low-profile-in-nepal/

-பழமைபேசி. 10/12/2019.

6/23/2019

தண்ணீர்க் காதை



குரும்பபாளையத்தில் ஆழ்துளைக்கிணறு தோண்டி, அதிலிருந்து மின்விசையுந்து கொண்டு நீரிறைத்து 48 வீடுகள் மட்டுமே இருக்கின்ற செங்கோட கவுண்டன் புதூரில் இருக்கும் உயர்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு, அன்றாடம் மாலை ஆறுமணிக்கு ஊருக்குள் ஆங்காங்கே இருக்கின்ற நீர்ப்பிடிப்புக் குழாய்களில் நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. படிப்படியாக நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வர,  300 வீடுகள் இருக்கும் குரும்பபாளையத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை மேலோங்கவும், அவர்களுடைய ஊரில் இருக்கின்ற மேற்கூறப்பட்ட ஆழ்துளைக்கிணற்று நீரைப் பங்கு போட்டக் கொள்ளத் துவங்கினார்கள். எங்களுடைய செங்கோட கவுண்டன் புதூர் அரசூர் ஊராட்சியைச் சார்ந்தது. குரும்பபாளையமோ முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சார்ந்தது. எனவே, தன் ஊராட்சிக்கு முதன்மை எனும் கோட்பாட்டில் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி குரும்பபாளையத்துக்கே ஆதரவு. செ.க.புதூர்வாசிகளான நாங்கள் எல்லாம் மிகுந்த ஒற்றுமையோடு, அடர்த்தியாய்ப் பன்மடங்கு அதிகமாகப் பெய்து கொண்டிருந்த வெயிலிலும் மறியல், ஆழ்துளைக்கிணறு முற்றுகைப் போராட்டமெனப் பலவும் நடத்திப் பார்த்தோம். ஒன்றும் கைகூடவில்லை.

ஒன்றியப் பெருந்தலைவர் செ.ம.வேலுசாமி அவர்களைப் போய்ப் பார்த்தோம். ஒரு ஊராட்சியில் இருப்பதை மற்ற ஊராட்சிக்காரர் உரிமை கொண்டாடுவது அவ்வளவு சரியில்லை. வேண்டுமானால் புது ஆழ்துளைக்கிணறுக்கு வழி செய்யச் சொல்லி அரசூர் ஊராட்சித் தலைவருக்குப் பரிந்துரைக்கிறேனெனச் சொல்லி விட்டார். அன்றைய அரசூர் ஊராட்சித்தலைவருக்கும் செ.க.புதூர் மக்களுக்கும் அவ்வளவு இணக்கப்பாடு இருந்திருக்கவில்லை. ஏனென்றால் செ.க.புதூர் என்பது தனித்துவமான ஓர் ஊர். எப்போதுமே முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஆக, ஊராட்சித் தலைவர், ஊராட்சிப் பெருந்தலைவர் என இருவரின் பேரிலான நாடலும் கைகொடுக்காமற் போகவே, தங்கநாயகி அம்மன் கோவில் பூசாரியாக இருந்த சுந்தரான், உள்ளூர் திமுக ஆதரவாளர்கள் வாயிலாக சூலூர் பேரூராட்சிப் பெருந்தலைவர் சூ.சு.பொன்முடி அவர்களைச் சென்று பார்த்தோம். அவர் சூலூர்ப் பேரூராட்சியில் இருந்து கொண்டு தம்மால் எதையும் செய்துவிட முடியாது. வேண்டுமானால் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசுகின்றேன். நீங்கள் எல்லாம் இன்ன நாளில், கோவை விருந்திநர் மாளிகைக்குச் சென்று உள்ளூர் ச.ம.உவும் அமைச்சருமான மு.கண்ணப்பன் அவர்களைச் சென்று பாருங்களெனப் பணித்தார்.

தங்கநாயகி அம்மன் கோவில் பூசாரி தங்கான், செ.க.புதூர் நண்பர்கள் இராசகோபால், கனகராசு, நல்லசிவம் உள்ளிட்டோருடன் நானும் விருந்திநர் மாளிகைக்குச் சென்றிருந்தேன். ச.ம.உ காட்டம்பட்டி கந்தசாமி வரவேற்று என்ன அலுவல் குறித்து வந்திருக்கின்றீர்களென வினவினார். இப்படி இப்படி, குரும்பபாளையத்துக்காரர்கள் செ.க.புதூர் தண்ணீரை மறித்து எடுத்துக் கொண்டனர். நாங்கள் தண்ணீர் இல்லாமல் அல்லலுறுகின்றோமெனச் சொல்லி அழுதோம். அவர் சொன்னார், உங்களுக்குத் தண்ணீர்ப் பிரச்சினையென்று சொல்லுங்கள். அவர்களுடைய ஊர்த் தண்ணியை உங்களுக்கானதென எப்படி உரிமை கோரமுடியும். மேற்கொண்டு அமைச்சர் வந்ததும் பேசலாமெனச் சொல்லி அமைச்சரின் குளுகுளு அறையிலேயே நல்ல போண்டா, வடைகளுடன் டீ கொடுத்து உட்காரச் சொல்லி விட்டார்.

அமைச்சர் வந்ததும் மீண்டும் முதலில் இருந்து எங்கள் வாய்ப்பாட்டை ஒப்பித்து, சூலூர் பொன்முடி சொல்லி வந்தோமென்றோம். முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சித் தலைவர் முத்துசாமி அவர்கள் அமைச்சருக்கு மிகவும் வேண்டியவர். அவரும் அங்கேயே அவருடன் இருந்தார். இடைக்காலத் தீர்வாக வாரத்துக்கு ஓரிரு நாட்கள் செ.க.புதூருக்கு விடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஊர்க்காரர்களுடன் பேசிப் பார்க்கின்றேனெனச் சொல்லி நழுவினார் மு.க.புதூர் ஊராட்சித் தலைவர். ‘சரி என்ன செய்யலாம்?’ என்று வினவினார் அமைச்சர்.

குரும்பபாளையத்து எல்லைக்கு வெளியே வேறெங்காவது, இப்போதைய கிணற்றைக் காட்டிலும் ஆழமாக வேறொரு கிணற்றுக்கு ஏற்பாடு செய்வதுதான் வழி என்றார். துரிதகதியில் பணிகள் துவங்கின. மு.க.புதூர் ஊராட்சித் தலைவரே, மு.க.புதூர் - செ.க.புதூர் இட்டேரியில் புது ஆழ்துளைக் கிணறு தோண்டலுக்கான பணியினைத் துவங்கினார். ஒரு மாதத்துக்குள்ளாகவே புதுக்கிணற்றின் நீர் ஊருக்குள் விநியோகிக்கத் துவங்கிய சிலநாட்களிலேயே திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டது.  அதே பல்லடம் தொகுதியில் மு.கண்ணப்பன் அவர்களே மீண்டும் போட்டியிட்டார். தமிககமெங்கும் திமுக வரலாறு காணாத தோல்வி அடைந்தது. செங்கோட கவுண்டன் புதூர் வாக்குச்சாவடியில் மட்டும் திமுக 80% வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. அதில் என் ஓட்டும் அடக்கம்.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், பொதுப்பணித்துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சொல்வது, அவரது நிலையில் மெத்தச் சரி.

“எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனை சென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதைவிடுத்து, வாரத்தில் 2 மட்டுமே, எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால்,  வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். -துரைமுருகன்.”

தம் வீடு, தன் வீதி, தன் ஊர், தன் ஊராட்சி, தன் ஒன்றியம், தன் மாவட்டம், தன் மாநிலம், தன் நாடு என்பதுதான் வரிசை.

-அந்தியூரன் பழமைபேசி, 06/23/2019.

6/21/2019

எங்கோ ஒரு பெண்


எங்கோ ஒரு பெண்,
குடத்தை எடுத்து வருகையில்
கால் இடறிக் கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
குழாயடியில் வேசிப்பட்டம் சுமந்தபடி
குடத்தைத் தூக்கித் தலையில்
வைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
பனிக்குடம் உடைந்து நீரொழுக நீரொழுக
குடம் தண்ணீரைச் சுமந்தபடியே
வந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்
முறைவிட்டுக் கொடுக்காததில்
படுத்தெழுந்ததாய்ப் பட்டங்கள் சூட்டப்பட்டு
மகனின் முகம் பார்க்கவியலாமல்
குமைந்து குறுகிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
மணிக்கணக்கில் குடம் தூக்கியபடி இருக்க
ஊட்டமின்றிச் சுருண்டு
கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
மூச்சடக்கி மூச்சடக்கிச் சுமந்ததில்
நெஞ்சுதூர்ந்து செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீரெனக் கடன் ஒத்திப்போட்டத்தில்
நஞ்சேறிப் பிணியேறிச் செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
உறக்கமின்றி எழுந்தெழுந்து எதிர்நோக்கி
குழாயும் கண்ணுமாய்ச் செத்துத் செத்து
பிழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
சிந்திய நீரில் கால்வழுக்கி
குடத்தோடு விழுந்ததில்
விலா எலும்பை முறித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ப் பணியால்
கல்வி சறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ச் சிந்தையினால்
வேலையிடத்தில் கவனமிழந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஊட்டமும் சத்துமின்றி
தண்ணீர் சுமந்து
தண்ணீர் சுமந்து கொண்டிருந்ததில்
பார்வையைத் துறந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர் வருமெனச் சொல்லி
உறவுக்காரர் கடைசிமுகம்
பார்க்காமற் தவித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஒரு வண்டித் தண்ணீரைக்காட்டி
அத்துமீறும் ஆடவனிடத்தில்
தன் மகளையே இழந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
ஊர்வம்பு இழுத்துட்டு வராம இருக்கமாட்டியாவென
யாருக்கு வேண்டுமெனச் சுமந்தாளோ அவனிடமே
அறைபட்டு அழுத கொண்டிருக்கக்கூடும்!

அந்தப் பெண்
உன் வீட்டவளாகவும் இருக்கலாம்!!

-பழமைபேசி, 06.19.2019.

[For women, the water crisis is personal. They are responsible for finding a resource their families need to survive - for drinking, cooking, sanitation and hygiene. வீணாக்கப்படுகின்ற ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும், அம்மா, மனைவி, உடன்பிறந்தவள், மகள் என யாரோ ஒரு பெண்ணின் சுகதுக்கங்களின் மீதான கொலைவெறித் தாக்குதல் என்றே கொள்க. நீரைச் சிக்கனமாய்ப் புழங்கு!]

5/26/2019

பொதுப்புத்தி

சமூகத்தில், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளைச் சார்ந்த சமூகத்தில் பொதுப்புத்தி என்பது எங்கும், இடையறாது விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதற்கு நமது தமிழ்ச்சமூகம், நாம் கடைபிடிக்கின்ற அல்லது அண்டியிருக்கின்ற சமயமும் விலக்கானது அல்ல. இன்னும் சொல்லப் போனால், நாம் சார்ந்து வாழும் சமுகப்பண்பாட்டிலும் சமயத்திலும்தான் பொதுப்புத்தியாலான கட்டமைப்பின் ஆணி வேர்கள் வலுவாக விரவிப் பரவியிருக்கின்றன. இத்தகைய வேர், என்னிலும் இருக்கின்றது; உங்களிலும் இருக்கக்கூடும். அதனைப்பற்றிய சிந்தனைக்கு வெளிச்சம் பாய்ச்சுவதைத்தான் இலக்காகக் கொண்டு இவ்வாக்கத்தைத் தொடர்கின்றேன்.
அண்மையில் எனது ஃபேசுபுக் கணக்கின் நிலைத்தகவல் வரிசையில் மீண்டும் மீண்டும் ஒரு காணொலி முகப்பில் வருவதும் போவதுமாக இருந்து கொண்டே இருந்தது. காணொலியின் தோற்றப்படத்தில் ஒரு பெண்மணியின் முகம் தெரிந்தது. ஏதோ உள்ளோங்கிய ஊர் ஒன்றின் பேருந்துநிலையம், சாராயக்கடை போன்றதொரு இடத்தில் அப்பெண் நின்று கொண்டிருப்பதாகப்பட்டது நமக்கு. ஓரிரு நாட்கள் நான் அதனைப் புறந்தள்ளிவிட்டுக் கடந்து சென்றேன். மூன்றாவது அல்லது நான்காவது நாளிலும் அது மீண்டும் முன்வரிசையில் வந்து நின்றிருந்தது. திரும்பத் திரும்ப இது ஏன் முகப்பு வருகின்றது? அந்தக் காணொலியின் பின்னூட்டத்தில் தொடர்ந்து கருத்துகள் இடப்படுவதால் வருகின்றது. இப்போதும் எனக்கு காணொலியைக் காண மனம் இடம் கொடுக்கவில்லை. என்னதான் கருத்துரைக்கின்றார்கள் எனச் சென்று பார்த்தேன். நண்பர்கள் எல்லாரும் ஓரிரு சொற்களில் வியப்பையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு நானும் சென்று காணொலியைப் பார்க்கத் தலைப்பட்டேன். மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டியது அப்பெண்மணியின் இசைவெள்ளம். அவ்வளவு அருமையான குரலில், பாடுவதற்குக் கூடுதல் திறம் தேவைப்படுகின்ற பாடலைப் பாடுகின்றார் அவர். எதோவொன்று நம்மைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றது. திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கின்ற அந்த அசல் பாடலை நாம் திரும்பத் திரும்பக் கேட்டதில்லை. அப்படியானால் ஏதோவொன்று இக்காணொலியைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றது, அது என்ன என்கின்ற வினாவானது நம்மை அடுத்தடுத்த தருணங்களில் துரத்திக் கொண்டிருந்தது.
காணொலியைப் பார்க்கத் துவங்கிய முதல் விநாடியிலேயே, அப்பெண்மணியிடமிருந்து வெளிப்படும் இசைநயம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இசையின்நிமித்தம் வியப்பு மேலிடுகின்றது எனக் கருதுவோமானால், நாம் அப்பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் எழாத வியப்பு இப்போது ஏன் எழுகின்றது எனும் வினா முளைக்கின்றது. காரணம் வேறொன்றுமில்லை. இப்படியான எளிய தோற்றத்தில், உருவத்தில், உடையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்னின்னதுதான் தெரியும்; ”படிப்பு, இசை, கலை” முதலானவையெல்லாம் எட்டாக்கனிகள் அல்லது அவை அவர்களுக்கானது அல்ல என்கின்ற பொதுப்புத்தி நமக்குள் விதைக்கப்பட்டிருக்கின்றது. அப்படியான பொதுப்புத்தியில் புடம் போடப்பட்டிருக்கின்ற நம்மால் அதைப் பார்த்ததும் ஏற்படுகின்ற அதிர்ச்சியானது வியப்பாய் இடம் பிடிக்கின்றது. இசைநயமும் இருக்கப் பெறவே, அதைத்தொட்டு செவிமடுக்க விழைகின்றோம். நம்மிலும் அப்பெண்மணி வர்க்கரீதியாக, சாதிரீதியாக, படிப்புரீதியாக, பொருளாதாரரீதியாக என எல்லாப் படிநிலைகளிலும் தாழ்ந்தவர் என்கின்ற எண்ணம் நம் ஆழ்மனத்தில் பொதுப்புத்தியாய் குடிகொண்டிருக்கின்றது. எனவே அப்பெண்மீது கழிவிரக்கம், பச்சாதாபம் பிறக்கின்றது. இதெல்லாமும் மாந்தத்தன்மைக்கு உகந்த பண்புநலன்கள் அல்ல. கட்டம் கட்டுதல், புறந்தள்ளுதல், நிராகரித்தல் முதலானவற்றின் தோற்றுவாய் நமக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இத்தகு பொதுப்புத்திதான். ஏன், எளிய, அத்தகைய பெண்களுக்கு இசைஞானம் இருக்கக் கூடாதா? ஊர்களில், வயல்களில், காடுகழனிகளில் இயற்கையின் போக்கில் அன்றாடமும் பாடல்களைப் பாடுபவர்கள்தானே? அப்படியிருக்க, அப்படியான ஒரு பெண்ணின்பாற்பட்டுப் பாராமுகம் கொள்வது சரியா? இப்படியான பொதுமைப்படுத்தல்கள் எங்கும் நிறைந்துள்ளன.
பொதுவாக, பொதுமைப்படுத்தற்பண்பு என்பது இருவகைப்படும். முதலாவது, நாம் அறிந்தே மேற்கொள்வது. எடுத்துக்காட்டாக, ‘கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக்கலப்பை உழவைக் கெடுக்கும்’ என்பது தமிழ்ப்பழமொழி. வழக்காறு. இதன்படி குட்டையாக, குள்ளமாக இருப்பவர்கள், தந்திரசாலிகளாக, தீயநச்செண்ணெம் உள்ளவர்களாக இருப்பார்கள் எனும் நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பது. சமூகமேம்பாட்டின்வழி, அத்தகைய எண்ணமானது பிற்போக்குத்தனமானது, ஆகவே அத்தகைய வழக்காற்றினை விட்டொழிக்க வேண்டுமென்பதும் எளிதில் வசப்படும். ஏனென்றால், பொதுமைப்படுத்தலின் தோற்றுவாயை நாம் வெளிப்படையாக அறிந்தே வைத்திருக்கின்றோம். இரண்டாவது வகையான, உள்ளார்ந்த பொதுமைப்படுத்தல் என்பதுதான் களைவதற்கு மிகவும் கடினமானதாகும். ஏனென்றால் அதன் உட்பொதிவு நமக்கு வெளிப்படையாகத் தெரிந்திராது. இத்தகு பண்புக்கான எடுத்துக்காட்டுத்தான் நாம் மேற்கூறிய காணொலி நிகழ்வாகும். சமூகத்தின் கண்களுக்கு எளிதில் அகப்படாத இத்தகு ஸ்டீரியோடைப்பிங், பொதுமைப்படுத்தல்களை நாம் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்துவதன் வழி மற்றவர்களுக்கும் அகக்கண்கள் திறவுபடும். நாட்டில் எத்தனை எத்தனை கோமதி மாரிமுத்துகளோ? அத்தகைய திறம்மிக்கவர்கள், அலுவலகங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதே அரியதானவொன்றாகவே இருக்கும்.அடுத்து, இப்படியான பொதுமைப்படுத்தல்கள் எப்படி நம்முள் புதைந்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
ஒருவர் வனமொன்றில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றார். நான்கைந்து யானைகள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன. நான்கு கால்களும் தளைகளின்றி விடுதலாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் அவை நான்கும் நிலையான இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன. பம்மிப் பதுங்கிப் பதுங்கி அவற்றின் அருகே செல்லத் தலைப்படுகின்றார். அப்போதுதான் தெரிகின்றது அதன் முன்னங்கால்களில் இடக்காலில் காலைச்சுற்றியும் ஒரு பெரிய கயிறு சுற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் அக்கயிறு வேறு எதொனோடும் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. பல தப்படிகள் நடந்து செல்ல, யானைப்பாகன் ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிகின்றது. அவரிடம் பேச்சுக் கொடுக்கின்றார் இவர். எப்படி, யானைகள் அங்குமிங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே இருக்கின்றன எனக் கேட்கின்றார். அதற்கு பாகன் சொல்கின்றார், முன்னங்கால்களில் இருக்கும் கயிற்றுவளையத்தை நீக்கினால் அவை பலவாக்கிலும் செல்லத் தலைப்படுமென்கின்றார். அது எப்படியெனக் கேட்டமைக்குச் சொல்லத்தலைப்படுகின்றார் பாகன்.குட்டிகளாக இருந்த நேரத்தில் முன்னங்காலினைச் சுற்றி ஒரு கயிற்றுவளையல் இட்டு அவ்வளையலை கல், தூண் போன்றவற்றில் கட்டி வைத்துப் பழக்கியிருக்கின்றனர். அதன்படி, காலில் கயிற்றுவளையம் இருந்தால் நாம் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பது அவற்றின் பொதுப்புத்தியாகி விட்டிருக்கின்றது. வளர்ந்து வலுக்கொண்ட பெரியதாகி விட்டிருந்தாலும், நாம் கட்டப்பட்டிருக்கின்றோமெனும் பொதுப்புத்தியானது அவற்றுக்கே அறியப்படாமல் விதைக்கப்பட்டிருக்கின்றது. அப்படித்தான் நம்முள்ளும் எத்தனை எத்தனையோ பொதுப்புத்திகள், அதிகாரவர்க்கத்தால், ஆதிக்க விழைவுகளால் விதைக்கப்பட்டிருக்கின்றன. அத்தகையவற்றை உணரும் போதெல்லாம், ஒருவருக்கொருவர் அதன்நிமித்தம் தெரியப்படுத்திக் கொள்வதன் வாயிலாகவே நாம் அவற்றினின்று விடுதலை கொள்ள முடியும்.
மயில்களைப் பார்க்கும்போது மட்டுமின்றி போய்ப் பார்க்கும் போதும் சொல்லியாக வேண்டியிருக்கிறது, மயிலே, மயிலே, நீ எந்த மயிரானுக்கும் இறகு போடாதே!! -கவிஞர் ஜெயபாஸ்கரன்
ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து 
கால் வலிக்கிறது!! -கவிஞர் தாமரை

இப்படியான கவிதைகள் எல்லாம் நம்முள் உறைந்திருக்கும் பொதுப்புத்தியினை இடித்துரைக்கின்றன. நேரெதிராக, தமிழ் அமைப்புகளில், ஊடகங்களில் இடம் பெறும் பட்டிமன்றம், பேச்சரங்கம் போன்றவற்றிலெல்லாம் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டி அதனையே பொதுமைப்படுத்தி, கட்டி வைத்த யானைகளாக நாம் ஆக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் நாள்தோறும். பொதுமைப்படுத்தல்கள் உணர்ந்து கொள்ளப்பட வேண்டியது! பொதுமைப்படுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டியது!!
-பழமைபேசி.